Pages

விமர்சனம்: “ஒரு சர்வீஸ் இன்ஜினியரின் வாக்குமூலம்”

புத்தகத்தின் பெயரைப் பார்த்ததுமே வாங்கி வாசிக்க வேண்டும் என்ற ஆவல் வந்தது. நானும் ஒரு இன்ஜினியர் என்பதும் (ம்க்கும்..), டெக்னிக்கல் விஷயங்கள் வாசிப்பதில் (மட்டும்) ஆர்வம் உண்டு என்ற காரணங்களைத் தாண்டி, எங்கூட்டுக்காரரும் ஒரு சர்வீஸ்/மெயிண்டெனன்ஸ் இஞ்சினியராக இருந்தவர் என்பதுதான் முக்கியக் காரணம்!!

ஆசிரியரால் ஃபேஸ்புக்கில் அவ்வப்போது வெளியிடப்பட்ட இதன் சிறு பகுதிகள் என் ஆவலை மேலும் தூண்டின. இந்த விமர்சனத்தில் நான் புத்தகத்தைப் பற்றி எழுதுவதைவிட, எனக்கும், இப்புத்தகத்தின் நிகழ்வுகளுக்குமான தொடர்புகள் குறித்துத்தான் நிறைய எழுதுவேன் என நினைக்கிறேன்.

வியாபாரம் அல்லது 9-5 அலுவலகப் பணி செய்யும் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் வளர்ந்தவள் நான். ஆகையால், என் கணவரின் “மெயிண்டெனன்ஸ் இஞ்சினியர்” வேலை, நான் அறிந்திராத உலகின் வேறு ஒரு பகுதியை அறியத் தந்தது. அது எனக்குள் பிரமிப்பை ஏற்படுத்திய அதே அளவில் பயத்தையும் தந்தது. அந்த வகையில் இக்கதை நாயகனின் மனைவி மீராவின் உணர்வுகளை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
 
இதே போன்றதொரு, ஊர் ஊராகச் சுற்றும் இன்ஸ்டலேஷன் இஞ்சினியர் வேலையை திருமணத்திற்கு முன்பே விட்டு விட்டாலும், அதன் விபரங்களை என்னிடம் அவ்வப்போது விவரிக்கும் சமயங்களில் பரவசமாக  ஒளிரும் கண்களில் தெரியும்,  அத்துறையின் மீதான அவரது  ஆர்வம்.

திருமணத்திற்குப் பிறகு, Desalination Plant வேலையில் சேரும்போதும், தனக்கு Operation பணியா, Maintenance பணி வேண்டுமா என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டதாகவும், மெயிண்டெனன்ஸையே தேர்வு செய்ததாகவும் சொன்னார். எனக்கு ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் அப்போது பெரிசாத் தெரியலை.

ஆனால், பிறகான நாட்களில், சேறு சகதி படிந்த cover-all உடையில் வந்து நின்ற போதும், நேரங்கெட்ட நேரத்தில் வீடு திரும்புவதும் அல்லது நள்ளிரவில்  திடீரென காணாமல் போவதுமாக ஆனபின்புதான்  இவ்ளோ கஷ்டமான வேலையா எனப் புரிய ஆரம்பித்தது. இதுக்கு நீங்க ஆபரேஷன்லயே சேந்திருக்கலாமே என்றால், “அது போரடிக்கும். மெயிண்டெனஸ்லதான் நிறைய பிரச்னைகள் வரும். இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்.  புதுசா கத்துக்கவும் முடியும்” எனச்  சொல்லி என்னை தலையிலடித்துக் கொள்ள வைத்தார்.

எனக்கோ, பாஷை தெரியா நாட்டில், சின்ன கிராமத்தில், சிறு குழந்தைகளுடன் சற்று சிரமமாகத்தான் இருந்தது. கணவரோ, “எல்லா வசதிகளும் இருக்க இந்த ஊர்ல இருக்கிறதுக்கே இப்படி அலுத்துக்குறியே... உன்னையெல்லாம் நான் முன்னாடி வேலை பார்த்த வட  இந்திய கிராமப் பகுதில கொண்டு வச்சிருந்தா ஓடியே போயிருப்ப” என்பார். இன்று வட இந்தியாவின் நிலையைப் பார்க்கும்போது, தப்பிச்சோம்டா என்றுதான் ஆசுவாசமாகிறது. இப்போது இறையருளால் பணி உயர்வுடன் நகரத்தில் வசித்து வருகிறோம்  என்றாலும், இப்பவும் எப்போது அழைப்பு வரும் என்று தெரியாத திக்திக் நிலைதான். பல முறை பயணங்கள் கிளம்பி பாதி வழியில் திரும்பியிருக்கிறோம்.

சரி, போதும் என் புராணம். இனி புத்தகத்திற்கு வர்றேன்.

டெக்னிக்கல் வேலையையே ஒரு கதையாகச் சொல்லியிருப்பது, தமிழ்க் கதையுலகிற்குப் புதிது என்று நினைக்கிறேன். அறிவியல் கலந்த கதைகள் நிறைய எழுதப் பட்டிருந்தாலும், முழுக்க முழுக்க தொழிற்சாலை பின்ணனியில் எழுதப்பட்ட கதை என்ற விதத்தில் புதுமையானது. அதே சமயம், சுவாரசியம் சிறிதும் குறையவில்லை; பரபரப்பு, செண்டிமெண்ட், காமெடி, திகில் என்று எதற்கும் பஞ்சமில்லை.

கதை நாயகனது பணியில் சந்திந்த பல சவாலான ப்ராஜெக்டுகளில், ஒன்றை மட்டும் எடுத்து கதைக்களனாக்கியிருக்கிறார். இதில் வரும் பல தொழில்நுட்ப வார்த்தைகளும், சம்பவங்களும் ஓரளவுக்கு எனக்குப் பரிச்சயமானவை என்ற விதத்தில் கதையுடன் நன்கு ஒன்றிப் போக முடிந்தது. 

எந்த வேலையானாலும், அமையும் சக பணியாளர்கள் பொருத்தமாக அமைய வேண்டியது மிக அவசியம் என்பதும் கதை சொல்லும் செய்தி. அதிலும், மணமக்களுக்கிடையே இருக்க வேண்டிய பத்து பொருத்தத்தைவிட, இம்மாதிரி Manual வேலைகளில் குழுவினரிடையே பொருத்தம் இருக்க வேண்டியது மிக மிக முக்கியம். சரியான டீம் அமைந்து விட்டாலே, எப்பேர்ப்பட்ட கடினமான ப்ராஜக்டையும் ஒரு கை பார்த்து விடலாம் என்ற தைரியம் வந்துவிடும் என்பதையும் கதையின் போக்கில் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

நல்லதொரு டீம் அமைந்தாலும், அதன் தலைவர் பொறுப்பில் உள்ளவருக்கு  Decision-making-ல் உள்ள சவால்கள் - க்ரிடிக்கலான தருணங்களில்  தனது எதிர்காலம், சக பணியாளர்களின் எதிர்காலம், மற்றும் தன்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்திருக்கும் நிர்வாகத்தின் எதிர்காலம் உட்பட எதுவும் பாதிக்காத வகையில் முடிவெடுக்க வேண்டிய நிர்பந்தங்கள் - இவற்றையும் சம்பவங்களினூடாகவே புரிய வைத்திருக்கிறார் ஆசிரியர்.

தொழிற்சாலைகளில், அலுவலகங்களில் ட்ரெயினிங் என்ற பெயரில், பணி நடைமுறைகள், தலைமைக்குத் தேவையான பண்புகள், டீம் வொர்க், குறித்தெல்லாம் வகுப்பெடுத்து, பக்கம் பக்கமாக நோட்ஸும் தருவார்கள் படிப்பதற்கு. அவை எல்லாவற்றையுமே, கதைக்களத்தின் வழியே - அதுவும் சுவாரசியமாக - கற்றுத் தருகிறது இந்தப் புத்தகம். அந்த ட்ரெயினிங்குகளிலும், மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் ஒரு ப்ராக்டிகல் கைடன்ஸாகவே இதைத் தரலாம்.

பொதுவாகவே இம்மாதிரி டெக்னிக்கல் பணியில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, சுவாரசியமாக எழுத வராது. கலையார்வம் இருக்காது. ஆனால், கதாசிரியர், இரண்டிலும் திறமையானவராக இருப்பது ஆச்சரியம். இரண்டு துறையில் ஒன்றை அவர் நிராகரித்தாலும், அது அவரது தனிப்பட்ட இழப்பு மட்டுமல்ல,  அத்துறைக்கான பேரிழப்பும்கூட.

ந்தப் புத்தகத்தை, வாசிப்பில் ஆர்வம் இல்லாத ஒரு மெக்கானிக்கல் இஞ்சினியரான என் கணவரிடம், அவரது துறைக்கானது என்பதால் வாசிக்கச் சொல்லிக் கொண்டிருந்தேன். பின்னர் விட்டு விட்டேன். காரணம், வாசிக்க ஆரம்பித்தால், ஒவ்வொரு பகுதியிலும், “இதுக்கு என்ன பண்ணிருக்கணும் தெரியுமா....” என்றோ, “இதே மாதிரிதான் நான் ராஜஸ்தான்ல பாய்லர் மாட்டிகிட்டு இருந்தப்போ... என்றோ ஆரம்பித்து விடுவார் என்ற பயம்தான்!!

Post Comment