Pages

நோன்பும், வெயிலும்




ளைகுடா நாடுகளில், இந்த வருடமும் ரமதான் மாதம், கோடைகாலத்தில் வந்ததால், நோன்பு நேரம் 15 மணி நேரம் ஆக இருக்கும். இது பலரையும் நோன்பு மிக சிரமமாக இருக்குமோ என்று கவலை கொள்ள வைத்துள்ளது.  ஃபேஸ்புக்கிலும், வாட்ஸப்பிலும் இது குறித்த கவலையான பதிவுகள் காணக் கிடைக்கின்றன.  ஒரு பதிவில், நடு ரோட்டில் முட்டையை உடைத்து அது ஆம்லெட் ஆகும் வீடியோவைப் போட்டு, இத்தகைய காலநிலையில்தான் நாங்கள் இருக்கின்றோம் என்று சொல்கிறார் ஒருவர்.

நான் உங்களுக்கு லேசானதையே விரும்புகின்றேன், சிரமத்தை அல்ல” என்றும்
எந்த ஒரு ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் நிர்பந்திக்கப் படுவதில்லை

என்றும் இறைவன் வாக்கு தந்திருக்கும்போது, அவனுக்காகவே நாம் வைக்கும்  நோன்பு  எப்படி நம்மை துன்பப்படுத்துவதாக இருக்கக் கூடும்?

சோதனைகள் வரும்போதுதான் ஒரு மனிதனின் முழு சக்தியும் வெளிப்படும். எப்பேர்ப்பட்ட காலநிலையிலும் இறைவன் ஒருவனுக்காகவே பசித்து, தாகித்திருப்பதன் மூலம் நமக்கு கிடைக்கும் பலன்களாக இறைவன் கூறுகிறான்: ”(அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.”; “(நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்).”

ப்படியென்ன பலன்கள் நோன்பினால்? நோன்பு என்பது வயிற்றிற்குக் கட்டுப்பாடு என்பதைவிட மனதிற்குக் கட்டுப்பாடு. யாரும் பார்க்காத நேரம் எதையாவது அள்ளி வாயில் போட்டுக் கொண்டால் யாருக்குத் தெரியப் போகிறது? இருந்தாலும், அதைச் செய்வதில்லை. ஏன்? இறைவன் நம்மைப் பார்க்கிறான் என்கிற உணர்வு.

”பசி வந்தால் பத்தும் பறந்து போகும்” என்று சொல்லக் கூடிய பசியையே அடக்கக் கூடிய கலையில் ஒருவன் தேர்ந்து விட்டால், அவன் ஒழுக்கம் மிகுந்தவனாகின்றான். உணவு மற்றும் உடல் பசி இரண்டையுமே அடக்கி விட்டால், அவனை யாரும் தூண்டுதலுக்கு உள்ளாக்க முடியாத நிலையை அடைய முடியும். இதனால்தான், திருமணம் செய்ய பணவசதி இல்லாத ஆண்களை, வசதி வரும்வரை நோன்பு  நோற்கச் சொல்லி நபிகளார் அறிவுறுத்தினார்கள். நோன்பு ஒரு கேடயம்.

ருவர் சொன்னார், “என்னத்த நோன்பு? நோன்பு தொறந்தவுடனே ஆலாப் பறந்து திங்கிறாங்க. இதுக்கு நேரத்துக்கு அளவோட தின்னுட்டு இருந்துடலாமே?” என்று. அவரிடம் சொன்னேன், “அப்படி  திங்குற அதே ஆட்கள்தான், நோன்பு திறப்பதற்கான அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு நொடி முன்னாடி வரைக்கும்கூட தன் முன் சுவையான  உணவுகள் இருந்தாலும் அதைத் தொட்டும் பார்ப்பதில்லை - மற்றவர்கள் பார்க்காமல் இருந்தாலும் கூட!!”

அதுதான் “இறையச்சம் தரும் உணர்வு”!! இதே அச்சம் - எச்சரிக்கை உணர்வு - Self control - எல்லா செயல்களின்போதும் எல்லா நேரங்களின்போதும் இருக்க வேண்டும் என்பதற்கான பயிற்சிதான் நோன்புக் காலம்.

லுவலகங்களில், பள்ளிகளில் FIRE DRILL நடத்திப் பார்த்திருப்போம். அதாவது, ஒரு ஆபத்து  நேர்ந்தால் எப்படி நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான பயிற்சி. இந்த ஒத்திகைகள் ஒரு Controlled atmosphere-ல் தான் நடைபெறும். பயிற்சி ஒத்திகை என்றாலும் நிலைமை கைமீறாதிருக்க, அதற்குரிய பாதுகாப்பு சாதனங்கள், ஆம்புலன்ஸ் போன்றவைகளை தயாரிப்பு நிலையில் வைத்துவிட்டுத்தான் பயிற்சி நடைபெறும்.

நோன்பு காலமும் அதுபோலவே, பாதுகாப்பான சூழலில் நடைபெறும் பயிற்சியாகும். ஷைத்தான்களைக் கட்டிப் போட்டுவிட்டு, நரக வாயில்கள் மூடப்பட்டு, சொர்க்க வாயில்கள் திறக்கப்பட்டு, பன்மடங்குகளில் பரிசுகள் அறிவிக்கப்பட்டு பிறகுதான் நம்மை நோன்பு பிடிக்கச் சொல்கிறான் இறைவன். ஆக, நோன்பு சிரமமானதா? சிரமத்திற்குக் கிடைக்கும் பலன் பெரிதெனும்போது, அதன் சிரமங்கள் அங்கு மறைந்துவிடுகின்றன.

பிகளார் வாழ்வில் நடந்த முதல் போர், பத்ருப் போர். இந்தப் போர் எப்போது நடந்தது தெரியுமா? ரமதான் மாதத்தில்தான்!! அதிகாலையிலோ, இரவிலோ நடக்கவில்லை போர். பட்டப்பகலில் நடந்தது. போர் புரிகிறோம் என்பதற்காக முஸ்லிம்களுக்கு நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை - அவர்கள் கேட்கவுமில்லை!! இந்தக் காலத்தைப் போல, எதைச் சாப்பிட்டால்  அதிக நேரம் பசி தாங்கும் என்று food nutritionist ஆராய்ந்து சொன்ன slow-energy-releasing உணவை உண்டு நோன்பு வைக்கவில்லை அவர்கள். உணவே கிட்டாத ஏழ்மை நிலையில் இருந்தனர்!! எனினும் நோன்பு நோற்காமலில்லை!

எதிரியோ வலிமையானவர்கள். தளவாடங்களும், வாகனங்களும் கொண்ட செழிப்பானவர்கள். அவர்களை வெல்ல, “உயிரைக் கொடுத்துப்” போரிட்டால்தான் முடியும் என்ற நிலை. இறைவன் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து போர் புரிந்தார்கள். வெற்றி அருளினான். இந்த நம்பிக்கைதான் நமக்குத் தேவை.

கோடை காலத்தில் நோன்பின் மாதம் வந்துள்ளதே என்று நினைக்கும் நாம், முன்பு கடும் குளிர் காலத்தில் நோன்பு மாதம் வந்ததையும், அப்போது நோன்பிருப்பது எவ்வளவு இலகுவாக இருந்தது என்பதையும் மறந்து விடுகின்றோம்.

சூரிய மாதங்களைப் பின்பற்றாமல், சந்திர மாதங்களைப் பின்பற்றுவதன் ஒரு அனுகூலம் இதுவே. உதாரணமாக, புத்தாண்டு கொண்டாடப்படும் ஜனவரி மாதத்தில்,  ஒருவருக்கு எல்லா வருடமும் ஒரே மாதிரியான பருவநிலையே நிலவும். ஆனால், ரமதான் நோன்பு சுழற்சி முறையில் பல பருவநிலைகளில் வரும். இதனால் ஒரு பகுதியினர் மட்டும் எல்லா வருடங்களும் கோடையில் நோன்பு பிடிக்கும் நிலை இருப்பதில்லை.

ற்ற நேரங்களில் நமக்கு எந்தத் தடையுமின்றி அனுமதிக்கப்பட்ட உணவையும், உடலுறவையும் இந்த ஒரு மாதம் பகல் நேரங்களில் மட்டும் தவிர்க்கச் சொல்வதன் மூலம், ஒருபோதும் அனுமதிக்கப்படாத ஹராமான விஷயங்களை எல்லா சூழ்நிலையிலும் தவிர்ப்பது நமக்கு எளிதான விஷயமாகிவிடுகிறது. எப்போதுமே தடையின்றி தாராளமாகக் கிடைக்கும் ஒன்று, திடீரென நமக்கு கிடைக்காமற் போகும்போது அதன் அருமை உணர்த்தப் படவும் வாய்ப்பாகிறது.

நோன்பு என்பது ஒருவன் தனது இச்சைகளை எதிர்த்து நடத்தும் போர் எனச் சொல்லலாம். பகலில்  உணவின் மீதான இச்சையையும், இரவில் கூடுதல் பிரார்த்தனைகள் செய்வதற்காக தூக்கத்தின் மீதான ஆசையையும் எதிர்த்து நாம் நடத்தும் போர்கள் நிறைந்ததே ரமதான் மாதம். நோன்பிருப்பதால், நம் உடலும் உணர்வுகளும்தான் வலுப்பெறுகின்றனவே தவிர, அதனால் இறைவனுக்கு எந்த பலனும் இல்லை.

யல்பாகவே மனம் அலைபாயும் தன்மை கொண்டது. அதனை அவ்வப்போது இது போன்ற பயிற்சிகளின் மூலம் பண்படுத்தினால்தான், மனதைக் கட்டுக்குள் வைக்க முடியும். நோன்பைப் போலவே, ஐவேளை தொழுகையும் இதற்கான ஒரு பயிற்சிதான். ஒரு தொழுகை முடிந்து சில மணித்துளிகளில் அலைபாயத் தொடங்கும் மனதை, அடுத்த வேளை தொழுகை கொண்டு அடக்குகிறோம். 

பிகளாரின் காலத்தில் வாழ்ந்த இருவர், ஒரே சமயத்தில் முஸ்லிம்களாக ஆகினர். ஆன்மீக ரீதியாக, இருவரும் ஒரே மாதிரியான வாழ்க்கையே வாழ்ந்தனர். ஒருவர் போரில் மரணிக்க, இன்னொருவர் கூடுதலாக ஒரு வருடம் வாழ்ந்து மரணித்தார். போரில் மரணித்தவர்களுக்கு இறைவனிடத்தில் முன்னுரிமை உண்டு. ஆனால், இவ்விருவர் விஷயத்தில் இரண்டாவதாக இயல்பான மரணத்தைத் தழுவியவருக்கே சொர்க்கத்தில் நுழைய முன்னுரிமை வழங்கப்பட்டது. இதைக் குறித்து நபிகளாரிடம் கேட்டபோது, “இரண்டாமவர் முதலாமவரைவிட ஒரு ரமதானை அதிகமாகப் பெற்றுள்ளாரே!!” என்று கூறினார்கள்.

ஒரே ஒரு ரமதான் மாதத்தில் நோற்கும் நோன்பும், செய்யும் கூடுதல் பிரார்த்தனைகளுக்கும் கிடைக்கும் பலன்கள், ஒரு ஷஹீதானவரையே முந்த வைக்கும் என்றால், பல ரமதான்களை கடந்த நாம் அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டோமா?

(வாசித்தவை, கேட்டவைகளிலிருந்து)

Post Comment