Pages

சர்தார்ஜிகளின் தலைப்பாகை






போன பதிவில் சர்தார்ஜி பற்றி எழுதும்போதுதான் யோசித்துப் பார்த்தேன், சர்தார்ஜிகள் ஏன் டர்பன் அணிகிறார்கள்? தெரியவில்லை! அவர்களின் சில பழக்கவழக்கங்கள் அறிந்திருந்த போதிலும், அவர்களின் டர்பன் பற்றி எனக்கு எந்த விபரங்களும், தெரியவில்லை.

முந்தைய ஆஃபிஸில் என்னோடு வேலைபார்த்த சர்தாரிடம் கூட அதுகுறித்து எனக்குக் கேட்கத் தோன்றவில்லை. சிங் என்றால் டர்பன் அணிவார்கள்; அல்லது டர்பன் அணிபவர்கள் எல்லாம் சிங் என்றே மனதில் பதிந்திருந்ததால் இதுவரை காரணம் குறித்து யோசிக்கவில்லை. அறியாததை அறிந்துகொள்வதுதானே அறிவுள்ளவர்களுக்கு அழகு!! அறிந்து கொண்டதை உங்களோடும் பகிர்ந்துகொள்கிறேன். தவறான தகவல்கள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.


சீக்கிய மதம் தோற்றுவிக்கப்பட்ட 15ம் நூற்றாண்டு சமயத்தில் தலைப்பாகை என்பது அரசக்குடும்பத்தினரும், பணக்காரர்களும், உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களும் மட்டுமே அணியக்கூடிய ஒன்றாக இருந்தது. (பழைய படங்கள் சிலவற்றை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்). அவ்வகைப்  பேதங்களைத் தவிர்த்து, எல்லோரும் சமமே என்ற உணர்வினைத் தோற்றுவிக்கும் முகமாக, சீக்கிய குருவால்  தலைப்பாகை சீக்கியர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டது. 


ஒரு சீக்கியரின் அடையாளம் எனப்படுவன: தலைப்பாகை, இயற்கையான உருவம், ”கன்கா” என்ற மரச்சீப்பு, மணிக்கட்டில் அணியப்படும் ”கரா” என்ற இரும்பு வளையம், மற்றும் “கிர்பான்” எனப்படும் குறுவாள்.  இவை அனைத்தும் அணிந்திருப்பவரே ஒரு முழுமையான சீக்கியராவார்.

கிர்பான் (Kirpan)  தம்மைத் தற்காத்துக் கொள்ளவும், தான் இறைவனுக்கு அடிமை என்றுணர்த்த கராவும் (Kara), தலைப்பாகை மற்றும் கன்கா (Kanka)  இவ்விரண்டும் தலைமுடியை ஒழுங்குபடுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு சீக்கியர் தமக்கு இறைவன் தந்த இயற்கையான உருவத்தோடு ஒன்றி வாழவேண்டும் என்று வலியுறுத்தவே, தலைமுடி, தாடியை வெட்டுவதும்,  சீர்படுத்துவதும் தடுக்கப்பட்டுள்ளது. இது ஒழுக்கத்தைப் பேணவும் உதவும் என்பதாக வலியுறுத்தப்படுகிறது.

தலைமுடியை உச்சியில் சேர்த்து கொண்டையாகப் போட்டு, அதன்மீது தலைப்பாகை அணிவர். இது “ரிஷி முடி” என்று அழைக்கப்படும். முனிவர்களின் கொண்டை  மனக்கண்ணில் வருகிறதா? இதற்கு ஒரு விஞ்ஞான விளக்கமும் உண்டு.  உச்சியில் போடும் கொண்டையும், அதன் மேல் இறுக்கமாகக் கட்டப்படும் தலைப்பாகையும் தலையில் உள்ள சக்திப் புள்ளிகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம், மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை நெறிப்படுத்தி, தெளிவான மனநிலையையும் கொடுத்து,  மற்றவர்களின் கெட்ட எண்ணங்களிலிருந்தும் (negative thoughts)  அணிபவரைக் காத்து, மனதை ஒருமுகப்படுத்துவதாகக்  கூறப்படுகிறது.


இத்தலைப்பாகையானது ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும்  அணிவது கட்டாயம். பெண்கள் முடியை, தலையின் பின்பக்கம் கொண்டையிட்டு தலைப்பாகை அணிந்து அதன்மேல் தமது துப்பட்டாவை முக்காடாக இடுவர். 


தலைப்பாகைத் துணிக்கு வெண்மை, கருநீலம், குங்கும நிறம் ஆகியவை அதிகம் விரும்பப்படும் நிறங்கள். தலைப்பாகை அணியும் இவர்களால் ஹெல்மெட் அணிய முடியாது என்பதால், அதிலிருந்தும் சிறப்பு விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இராணுவம் உட்பட மற்றுள்ள எல்லாப் பணியிடங்களிலும், உள்நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் டர்பன் அணிய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலவிதங்களில் அணியப்பட்டாலும், டர்பன் அணிவதைத் தம் இனத்தின் அடையாளமாகவும், பெருமையாகவும் கருதுகின்றனர் இவர்கள்.  இறைவன் ஒருவனே என்ற கொள்கை கொண்ட இவர்கள், மறுபிறப்பில் நம்பிக்கையுள்ளவர்கள். ஆணும், பெண்ணும் சமம் என்பதை வலியுறுத்தும் இவர்கள், பெரும்பாலும் இருபாலருக்கும் பெயர்களில்கூட வித்தியாசம் காட்டுவதில்லை. துணைப் பெயர்களான “சிங்” (சிங்கம்), “கௌர்” (இளவரசி) கொண்டே அறியமுடியும்.



Source: www.sikhnet.com; www.sikhiwiki.org; www.sikhchic.com; www.sikhwomen.com

Post Comment

எனக்கென்ன? எனக்கென்ன?






இப்ப சிலகாலமா பெண்களின் சுதந்திரம் குறித்து பல ஆண்பதிவர்கள் புரட்சிகரமாக எழுதிட்டு வர்றாங்க. அவங்களோட அக்கறையை நினைச்சு அப்படியே நெகிழ்ந்துபோயிட்டேன்.


இந்த பெண் ஈயம் பேசுறவங்க கூட பெண்களுக்காக இந்தளவு வாதாடுனதுமில்லை; போராடுனதுமில்லை.  ஆண்கள் பெண்களுக்காகப் பேசினாத்தான் எடுபடுமோ?


அப்படின்னா, பெண்கள் ஆண்களுக்காகப் போராடணுமோ? எது எப்படியோ, நமக்கு ஒண்ணுன்னா உடனே ஓடி வர்ற ஆண்களுக்கு நானும் கைம்மாறு செய்யலாம்னு முடிவு பண்ணிட்டேன். என்ன செய்யலாம்னுதான் ஒரே யோசனையா இருக்கு.


சரி, நம்ம சமூக ஆண்களுக்கு ஆதரவா குரல் எழுப்புவோமா? இல்ல, இல்ல, நாம சார்ந்த சமூகத்துக்கே குரல் கொடுத்தா நமக்கு “குறுகிய மனப்பான்மை கொண்டவர்” இல்லன்னா “சாதி/மதப் பற்றுடையவர்” இப்படி ஏதாவது பட்டம் கொடுத்துடுவாங்க. அதுவுமில்லாம நம்ம சமூகத்து ஆண்கள்தானே நம்மளை அடக்கி வைக்கிறாங்கன்னு நல்லவங்கள்லாம் எடுத்துச் சொல்றாங்க, அப்புறம் அவங்களுக்காக நாம ஏன் வாதாடணும்? எப்படியும் தொலயட்டும் அதுங்க.


வேற யாருக்காக குரல் கொடுக்கலாம்? (என்னவோ டப்பிங் பேசப்போறன்னு நினைக்காதீங்க,  இது உரிமைக்குரல்!!) பொதுவா எல்லா தமிழ் ஆண்களுக்கும்னு குரல் கொடுக்கலாமா? சரி, அவங்களுக்கு என்ன குறைன்னு கண்டுபிடிப்போம்.


டிரஸ் - அதெல்லாம் அவரவர் இஷ்டப்படிதானே போட்டுட்டு அலையுறாங்க. அதுவும் நல்ல வசதியானவுங்க, பணக்காரவுங்கதான் அங்கங்கே கிழிஞ்சு தொங்கற டவுசர், அதுவும் முக்காவா அரையான்னு தெரியாத அளவுக்கு ஒண்ணைப் போட்டுக்குறாங்க. படத்துலயெல்லாம் கூடப் பாத்தோம்னா, ஆறு பை, எட்டு பை வச்சு அதக் காமிக்கிறதுக்காகவே டாப்லெஸ்லயெல்லாம் வர்ற அளவுக்கு அவங்களுக்கு சொதந்தரம் இருக்கத்தானே செய்யுது.


அதுலயும் ஹேர் இஷ்டைலப் பாத்தீங்கன்னா - பாக்காதீங்க, சகிக்காது. கரண்ட் ஷாக் அடிச்சு நட்டுகிட்ட மாதிரி, முள்ளுமுள்ளா நிக்க வக்கிறதுதான் இப்ப ஃபேஷனாம். இருங்க, இருங்க, ஹேர் ஸ்டைல் பத்திப் பேசுனவுடனேதான் ஞாபகம் வருது... சர்தார்ஜி!! யெஸ், யாருக்காகப் போராடணும்னு தெளிவு வந்துடுச்சு!!


இந்த சர்தார்ஜிங்கல்லாம் ஏன் தலையில டர்பன் போட்டுருக்காங்க? அது கட்டாயமாமே? அதெப்படி கட்டாயமாக்கலாம்? யாரைக் கேட்டு கட்டாயமாக்குனாங்க? அவிங்க (யாரந்த அவிங்க?) கட்டாயமாக்குனாங்கன்னா, இவங்களாவது ஏன், எதுக்குன்னு கேள்வி கேட்க மாட்டாங்களா?  காலத்துக்கேத்தபடி மாறவேண்டாமா? இப்படியா அடங்கி இருப்பது?


எவ்வளவு புதுப்புது ஹேர்ஸ்டைல் வந்துருக்கு? பிறந்ததுலருந்து முடியே வெட்டக்கூடாதாமே? அட, பொம்பளைங்க நாங்களே இப்ப முடி வளக்குறதில்லை, இவங்க ஏன் இன்னும் இப்படி...


வெயிட், வெயிட்,  நான் இவ்வளவு கஷ்டப்பட்டு அவங்களுக்காகக் குரல் (மறுபடி மறுபடி டப்பிங்தான் நினைவுக்கு வருது) எழுப்புறேனே, அவங்க எல்லாரும் வந்து என் பதிவப் படிச்சு, ஹிட்ஸ் எகிற வச்சு, பின்னூட்டக் கும்மியும்  அடிப்பாங்கதானே? என்னாது, அவங்களுக்கு தமிழ் தெரியாதா? இந்த வெட்டி வேலைக்கெல்லாம் வரமாட்டாங்களா? அடப் போங்கய்யா, அவங்க முடி வெட்டினா எனக்கென்ன, வெட்டாட்டி எனக்கென்ன? டர்பன் வெச்சா எனக்கென்ன, வெக்காட்டி எனக்கென்ன?




Post Comment

காதலில் விழுந்தேன்







நானும் காதலில் விழுந்தேனோ
தகவல் அனுப்பிவிட்டு
பதிலுக்காக
நகம் கடித்துக் காத்திருக்கிறேன்
குறுஞ்செய்திகள் கண்டு 
எனக்குள் நகைக்கிறேன்
கூட்டத்தில் இருந்தாலும்
தனியே இருக்கிறேன்

அவர் சொன்னதை நினைத்து
எழுதியதை யோசித்து
வரும் புன்னகை மறைக்கிறேன்
இப்படி எழுதியிருக்கலாமோ
அப்படிச் சொல்லியிருக்கலாமோ
குழம்புகின்றேன்

கவிதை கிலோவென்ன விலைகேட்ட
நானும் கவிதை வடிக்கின்றேன்
சந்திக்கலாமா எனக் கேட்டதும்
பரவசப்படுகிறேன்
நாளை எண்ணி எண்ணியிருந்து
சந்திப்பில் பேச முடியாமல்
தவிக்கிறேன்

நான் ஏன் இப்படி?
எப்போது மாறினேன்?
நினைத்துப் பார்த்தேன்
பிளாக் எழுத ஆரம்பித்ததிலிருந்துதான்!!




Post Comment

பாதுகாப்புக்கு ஒரு வாரம் மட்டுமா?






சந்தனமுல்லை சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி எழுதிய இடுகையில் தொடர அழைத்திருந்தார். காதல் வாரம், அதிரடி வாரம் போல பாதுகாப்பு அந்த வாரத்தோடு முடிவதில்லையே, அதனால் எழுதுகிறேன்.


பத்து, பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்... என்னவர் தினமும் அபுதாபியிலிருந்து கிட்டத்தட்ட 180 கி.மீ. தூரத்தில் உள்ள இடத்தில் பணிபுரிந்து வந்தார். அநேகமாகத் தினமும் சென்று வருவார். கல்யாணமான முதலிரண்டு வருடங்கள் ஒரு புரிதலை எட்டுவதற்கான வழிமுறைகளாகக் கருத்து வேறுபாடுகள் நிறையவே வரும். அதுபோன்ற ஒருநாளில் வீடு திரும்பியவர், அதற்கான அறிகுறியே இல்லாமல் சகஜமாக இருந்தாலும் முகவாட்டமாக இருந்தார். என்ன என்றபோது, அன்று வரும்வழியில் வேகம் காரணமாக நடந்த ஒரு விபத்தை நேரில் பார்த்ததாகவும், அவ்விபத்தில் பாதிக்கப்பட்ட நபரை அப்போதுதான் காரில் இருந்து வெளியே எடுத்து ஸ்ட்ரெச்சரில் கிடத்தியிருந்ததைக் கண்டதாகவும் சொன்னார். வெள்ளைநிற அரேபிய நீள் அங்கி முழுதும் இரத்தத்தில் நனைந்திருக்க, உடல் துள்ளித் துள்ளி அடங்கியதைப் பார்த்ததையும் விவரித்தார். அவரின் மனநிலை எனக்கும் பற்றியது. சாலை விபத்துக்கள் இன்றளவு அதிகம் இல்லாத காலம் அது. அதனால் இருவருக்குமே அவ்விபத்து ஏற்படுத்திய தாக்கம்  அதிக நாள் நீடித்தது.


அதிகரித்துவிட்ட சாலைவிபத்துக்கள் உயிரின் மதிப்பை நன்றாகவே உணர்த்தியுள்ளதால்,  என்ன வருத்தமிருந்தாலும், காலை புறப்படும்  குடும்பத்தினரிடம் பத்திரமாப் போயிட்டு வாங்க என்று தவறாமல் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. ”தவக்கல்து அலல்லாஹ்” (இறைவனின் காவலுடன்)  என்று சொல்லாமல் வெளியே கிளம்பக்கூடாது என்று ஆணையே போட்டிருக்கிறேன் பிள்ளைகளிடமும்.  கணவரும், பிள்ளைகளும் கிளம்பி, சென்றடைய வேண்டிய இடத்தைச் சேர ஆகும் உத்தேச நேரம்வரை, அவசரமென்றால் அழைக்கக்கூடுமே என்று கைத்தொலைபேசியை எங்கேஜ்ட் ஆக்காமல் வைத்திருப்பதெல்லாம் கொஞ்சம் அதிகப்படி செண்டிமெண்டோ என்று தோன்றினாலும் செய்யாமல் இருக்க முடியவில்லை.
திடீர்திடீரென்று இருந்தாற்போல் ஞாபகம் வந்து, ஊரிலிருக்கும் வாப்பா, உம்மாவை அழைத்து ஒண்ணுமில்ல சும்மாதான் ஃபோன் பண்ணேன் என்று அவர்களின் நலத்தை உறுதி செய்வதும் இந்த பயத்தால்.


இப்படி அன்பை அதிகரித்து, உறவுகளைப் பலப்படுத்தி வைப்பதில் சாலைவிபத்துகளுக்கும் ஒரு முக்கிய பங்குண்டு.


நம்மில் அநேகர் செய்யும் தவறுகள் குறித்த என் ஆதங்கங்கள் ஒன்றிரண்டையும் உங்கள்முன் வைக்கிறேன்:


இங்கு (வெளிநாடுகளில்) சாலையின் இருபுறமும் “Hard Shoulder" எனப்படும் அவசர தேவைக்காக உபயோகிக்கும் ஒரு லேன் உள்ளது. அதாவது விபத்து சமயங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி போன்றவை செல்ல உபயோகிக்கும் லேன் (lane) அது. அதில் சென்றால் அபராதங்கள் உண்டு என்றாலும் அதையும்மீறி, சாலைகளில் டிராஃபிக் ஜாம் சமயங்களில் பலரும் எவ்விதக் குற்றவுணர்ச்சியுமின்றி அந்த லேன்களை பயன்படுத்துகிறார்கள். டிராஃபிக் ஜாம் ஏற்படுத்திய விபத்தில் உயிருக்குப் போராடுபவர்களைக் காக்க ஆம்புலன்ஸ் திக்கித்திணறி நிற்பதைப் பார்க்கும்போது நமக்குத்தான் பதறும். அதில் போகிறவர்கள் மனசாட்சியே இல்லாதவர்கள் போல!!


தயவுசெய்து எங்கேயும் எப்பொழுதும் ஆம்புலன்ஸுக்கு வழிவிடுங்கள். வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்.


அடுத்தது அதைவிடக் கொடுமையானது:  சிறுவர்களை பெல்ட் போடாமல் நாய்க்குட்டி போல கண்ணாடிகளின் அருகில் அல்லது சீட்களின் நடுவில்  விட்டிருப்பதும். (பெரியவர்களே போடுவதில்லை என்கிறீர்களா?)


ஆனை வாங்குனவன் அங்குசம் வாங்க யோசிப்பதுபோல, பெரிய பெரிய கார் வைத்திருப்பார்கள், ஆனால் குழந்தைகளுக்கு கார்சீட் வாங்க மாட்டார்கள். கேட்டால் குழந்தை அதில் வைத்தால் இருக்க மாட்டான்/ள், அழுவான்/ள்  என்பார்கள். அதெல்லாம் நாம் சொல்லிக்கொள்வதுதான். பழக்குவது நம் கடமை.  கைக்குழந்தைகளை மடியில் வைத்துக் கொள்வது, விபத்தில் “Live Air bag" பயன்படுத்துவதுபோல என்றும் அறிவுறுத்துகிறார்கள்.


முன்சீட்களுக்கு நடுவில் நிற்கும் குழந்தையும் சும்மாவா நிற்கும்? கியர், ரேடியோ அல்லது நம்மை என்று எதையாவது நோண்டும். அதில் ஓட்டுபவரின் கவனம் சிதறினால்? ஒருவேளை பிரேக் அடிக்க நேரிட்டால், விண்ட்ஷீல்டை உடைத்துக் கொண்டு பாய்வது உறுதி.


சில வருடங்களுக்கு முன், இதுபோல சீட்களுக்கு நடுவில் நின்ற இரண்டரை  வயது சிறுவன், ஹைவேயில் 140 கி.மீ. வேகத்தில் சென்றுகொண்டிருந்த காரில், (ஆட்டோமேடிக்) கியரை ரிவர்ஸ் போட, அது எங்கெங்கெல்லாமோ இடித்து, நண்பர் குடும்பம் பிழைத்தது பெரிய விஷயம்!!


குழந்தைகளுக்கும் உங்களைப் போலவே சீட் பெல்ட் போட்டுப் பழக்குங்கள். இவ்விஷயத்தில் தயவு தாட்சண்யம் பார்க்கக்கூடாது.


Happy & Safe Driving!!




Post Comment

இரண்டாம் குழந்தைப் பருவம்




”ம்மா, வாப்பாவோட வாப்பா எங்கம்மா?”


ஆரம்பிச்சிட்டானா இன்றைய கேள்வி-பதில் பகுதியை? எரிச்சல் மண்டினாலும், பதில் சொன்னேன்.


“அவங்க அல்லாட்ட போயிட்டாங்க”


“ஏன் போனாங்க?”


“அவங்களுக்கு ரொம்ப வயசாயிடுச்சி, அதான் போயிட்டாங்க.”


“வயசானா அல்லாட்ட போயிடணுமா?”


”ம்ம்.. ஆமா”


“அப்ப உங்க வாப்பா ஏன் இன்னும் அல்லாட்ட போகலை?”


சுர்ரென்று கோபம் மண்டையில் ஏறியது. நங் நங்கென்று அவன் தலையில் நாலு குட்டு வைக்கவேண்டும் என்று கை பரபரத்தது. ஆனால் அது உண்டாக்கக்கூடிய எதிர்மறை விளைவுகளும் உடனே நினைவில் வர,  சற்றுப் பொறுமையானேன்.


“என் வாப்பாக்கு இன்னும் வயசாகலை.” உண்மை கலந்த பொய்!!


”எவ்ளோ வயசானா அல்லாட்டப் போகணும்?”


“80, 85 வயசாவது ஆகணும்.” வாப்பாவின் வயசை நினைத்து கணக்குப் போட்டுக் கொண்டே சொன்னேன். அடுத்து அதுகுறித்தும் கேள்விவருமோ?


“அப்ப வாப்பாவோட வாப்பாவுக்கும் 80 வயசு ஆனதுனாலத்தான் அல்லாட்ட போனாங்களா?”


“அது... வந்து...80 வயசு ஆகல... ஆனா ரொம்ப உடம்பு சரியில்லாம ஆயிடுச்சி; அதான் அல்லா கூப்பிட்டுகிட்டான்.”



இன்னும் வரக்கூடிய கேள்விகளை அனுமானித்துப் பயந்து அவனைத் திசைதிருப்பினேன். “டைரில கையெழுத்து வாங்கினியா? மேத்ஸ் டெஸ்ட் நோட் எடுத்து வச்சாச்சா?”.


சில மாதங்கள் கழித்து, என் பெற்றோர் என் வீட்டுக்கு வந்திருந்தபோது:


“பெரியாப்பா, நீங்க ஏன் இந்த மாத்திரைலாம் சாப்பிடுறீங்க?”


“அது எனக்கு வயசாயிடுச்சில்ல, அதான்.”


“வயசானா மாத்திரை சாப்பிடணுமா?”


“வயசாகும்போது உடம்பெல்லாம் அடிக்கடி சரியில்லாமப் போகும்.அதுக்குத்தான் மாத்திரை.”


“அப்ப உங்களுக்கும் இப்ப உடம்பு சரியில்லையா?”


“ஆமா, கொஞ்சம் சரியில்லை.”


“அப்ப எப்ப ரொம்ப உடம்பு சரியில்லாம ஆகும்?”


அவன் அடுத்து எங்கே வருவான் என்று புரிந்தது.  “டேய், போய் உன் வேலையைப் பாரு. தொந்தரவு பண்ணாத.” என்று விரட்ட முனைய, வாப்பா, விடும்மா, சின்ன புள்ளதான, கேக்கட்டும் என்று என்னை அமைதிப்படுத்தி,“நீ சொல்லுப்பா”


“உம்மாதான் சொன்னா, 80 இயர்ஸ் ஆச்சுன்னா அல்லாட்ட போலாமாம். இல்லன்னா ரொம்ப உடம்பு சரியில்லாம ஆச்சுன்னாலும் போலாமாம்.”


“எல்லாருக்குமே ரொம்ப வயசானப்புறம் உடம்பு சரியில்லாமப் போகும். அப்போ அவங்களும் சின்ன பேபிமாதிரிதான். உக்கார, நடக்க ரொம்ப கஷ்டமாயிருக்கும். அதனாலத்தான் ஆண்டவன் அவங்களுக்கு கஷ்டம் வேணாம்னு, கூப்பிட்டு அவன்கிட்ட வச்சு பாத்துக்கிடுவான். புரியுதா?”


அவனுக்கு என்ன புரிந்ததென்று தெரியவில்லை. ஆனால் தொட்டுத் தொட்டு கேள்வியாய் கேட்டுத் துளைக்கும் அவன் ஒன்றும் பேசாமல் அமைதியாய் இருந்தான். ஆனால் எனக்குப் புரிந்தது.





Post Comment

வீட்டிலும், ஆஃபிஸிலும்




மூணு வருஷம் முன்னாடி யாஸ் தீவுல, அதாங்க இந்த ஃபார்முலா 1 ரேஸ் நடந்துதே, அங்க ஒரு கன்சல்டண்ட்ல வேலை பாத்துக்கிட்டிருந்தேன். அங்க போக வர சரியான போக்குவரத்து வசதி கிடையாதுங்கிறதுனால, என்னை அங்க வேலை பாத்துகிட்டிருந்த, எங்க வீட்டு ஏரியாவில இருந்த ஒருத்தர்கூட அவர் காரிலயே வரச் சொன்னாங்க. அதுவரைக்கும் தனியா வந்திட்டிருந்த அவருக்கு, இதில ரொம்ப கோவம். ஆனா, மேனேஜ்மெண்ட் சொன்னதுனால அவரால மறுக்கவும் முடியல.


ஒரே ஆஃபிஸ்னுதான் பேரு, வரும்போது, போகும்போதும் எனகிட்ட பேச மாட்டாரு, ஆஃபிஸ்ல பாத்தாலும் பேச மாட்டாரு. உர்ருன்னு இருப்பார். எனக்கு ஒரே ஆச்சரியம். இவரென்ன எனக்குன்னா தனியா வண்டி ஓட்டி வர்றாரு, இவர் வரும்போது நானும் கூட வர்றேன், அதுக்கேன் இவருக்கு இவ்வளவு எரிச்சல்னு.


எங்க ரங்ஸ்கிட்டயும் சொல்லிட்டிருந்தேன் அவரைப்பத்தி. அப்பத்தான் அந்த ரகசியம் தெரியவந்துச்சு. ”நீ சைட் (site)  ஆஃபிஸ்ல வேலை பாக்கிறே. கரெக்ட டைமுக்குப் போய், கரெக்ட் டைமுக்கு வரணும். அவருக்கு சைட்ல  வேலை. ஆஃபிஸ்லருந்து யாராவது ஃபோன் பண்ணா சைட்ல இருக்கேன்னு சொல்லலாம்; சைட்லருந்து கூப்பிட்டா ஆஃபிஸ்லன்னு சொல்லிக்கலாம். அப்படி இருந்தவருக்கு உன்னைக் கூடச் சேத்துவிட்டா கோவம் வராதா?”. அப்பத்தான் புரிஞ்சுது, இந்த சைட் இஞ்சினியர்களின் மகிமை!! இதுவும் ஒருவிதத்துல “Work from home" தான் போல!!


இப்படியே ரெண்டு மாசம் போச்சு; அதோட எங்க ரங்ஸும் அதே ஆஃபிஸ்ல வேலைக்குச் சேந்துட்டார். எனக்கு ஒரே சந்தோஷம், அப்பாடா, இனி அந்த சிடுமூஞ்சி கூட வரவேண்டாம்னு!! (ரெண்டு பேரும் ஒரே நேரத்துலதான் இண்டர்வியூ போனோம். விஸா காரணங்களால அவர் சேர லேட்டாயிடுச்சு.)


முதநாள் அவரக் கையப்பிடிச்சு கூட்டிக் கொண்டுப்போய் (புதுசுல்ல) அவரோட R.E. (Resident engineer) கிட்ட விட்டு, என் வூட்டுக்கா(ர)ர் அப்படின்னு அறிமுகப்படுத்தி, நல்லா பாத்துக்கோங்கன்னு ஒரு வேண்டுகோளும் வச்சிட்டு வந்து என் சீட்டுல உக்காந்து வேலையப் பாத்துட்டிருந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சு டாகுமெண்ட்ஸ் ரூமுக்குப் போயிட்டு வந்துப் பாத்தா, எனக்கு எதிர இருந்த கேபின் சீட்ல என்னவர்!! அவர்ட்ட கேட்டதுக்கு, இந்த சீட் மட்டுந்தான் காலியா இருந்ததால, ஆர்.இ. இங்க இருக்கச் சொன்னதாச் சொன்னார். அதாவது எனக்கு நேரெதிரேதான் அவரோட சீட் இனிமே!! எனக்கு ரொம்ப சந்தோஷமாருந்துச்சு, எத்தனை பேருக்கு இப்படி வாய்க்கும் அப்படின்னு நினைச்சுகிட்டே, என் வேலையப் பாத்துகிட்டிருந்தேன்.


கொஞ்ச நேரம் கழிச்சு, அந்தப் பக்கமா வந்த அவரோட ஆர்.இ. எதிரெதிரே இருந்த எங்களைப் பாத்தார். அவரோட முகமே மாறிப்போச்சு!! உடனே என்னவர்ட்ட போய், “I am sorry Hussain. Had I known that this is your wife's seat, I would not have seated you here. I am really sorry. Soon I'll arrange another place for you" அப்படின்னு வருத்தத்தோட ஆயிரம் ஸாரி சொல்லிட்டுப் போனார்!! சொன்னமாதிரியே அடுத்த நாளே என் கண்ணுக்கெட்டாத தூரத்தில ஒரு இடத்தில அவர உக்காத்தி வச்சுட்டு, ”Now you are safe!!" அப்படின்னும் சொல்லிட்டுப் போனாராம்!!


எனக்கோ வருத்தம். ஆர்.இ.ட்டப் போய், ஏன் இப்படிப் பண்ணீங்கன்னு கேட்டா, “பின்ன ஆஃபிஸ்லத்தான் நாங்க ஆம்பிளைங்க நிம்மதியா இருக்கமுடியும். இங்கயும் உன் கண் முன்னாடியே உக்காந்தா உம்புருஷனுக்கு ஸ்ட்ரெஸ் கூடிராதா?”ன்னு சொன்னார் பாவி மனுஷன்!!


அதுக்கப்புறம் ஒவ்வொருத்தரா விஷயம் தெரிஞ்சு,ஆண்களா இருந்தா, பரிதாபமாப் பாத்து “அடப்பாவமே!!"ன்னு அவர்ட்ட சொல்வாங்க. அதுவே பெண்கள்னா, என்கிட்ட “நீ கொடுத்து வச்சவ”ன்னு பொறாமையோட சொல்வாங்க. அதுலருந்து புதுசா யார்கிட்டயும் நான் அவர்தான் என் ரங்க்ஸ்னு சொல்லவே மாட்டேன்.


ஒருநாள் அவரோட டீம்ல உள்ளவர் என்கிட்டச் சொன்னார், ஹுஸைனுக்கு இப்பல்லாம் உன்மேல உள்ள பயம் குறைஞ்சிடுச்சின்னார். அது எப்படி இவருக்குத் தெரியும்னு யோசிச்சுட்டு, அவர்ட்டயே கேட்டேன். “முன்னெல்லாம் 3131க்கு ஃபோன் பண்ணுவேன்னு சொன்னா உடனே நம்ம வேலையையும் சேத்து செஞ்சு தந்துருவாப்ல. இப்பல்லாம் கண்டுக்கிறதில்ல”ன்னாப்ல. அது என்ன 3131ன்னு முழிச்சேன். “உன்னோட ஃபோன் எக்ஸ்டென்ஷன் நம்பர்தான் அது. அதுதான் எங்களுக்கு 100 மாதிரி”ன்னாரு!!


ஒருமுறை ஒரு காண்ட்ராக்டரின் இஞ்சினியர் என்னிடம் வந்து, “மேடம், சார்ட்ட எங்க கம்பெனியோட மெட்டீரியல் சப்மிஷன் ஒண்ணு அப்ரூவலுக்கு கொடுத்தா, சார் மறுபடி மறுபடி ரீ-சப்மிட் பண்ணவைக்கிறார். நீங்க கொஞ்சம் சார்ட்ட அப்ரூவ் பண்ணச் சொல்லுங்க”ன்னார். நான் அவர்ட்ட சொன்னேன், “நீங்க மறுபடி மறுபடி சப்மிட் பண்றதைப் பாத்து அவரே ஒருவேளை அப்ரூவ் பண்ணிடலாம்னு நெனச்சிருப்பாரு. நான் போய்ச் சொன்னேன்னா ஒரேயடியா ரிஜெக்ட் பண்ணிடுவார், பரவாயில்லியா”ன்னு கேட்டேன். ச்சே, குடும்ப ரகசியத்தைக் காக்கணுன்னு நெனச்சாலும் முடியமாட்டேங்குது!!


அதுக்கப்புறம், ஆஃபிஸ் ரொம்ப தூரம்கிறதாலயும், மற்றும் சில காரணங்களினாலும் (அவரில்லை) வேற வேலை தேட ஆரம்பிச்சு, எனக்கு இந்த வேலை கிடைச்சு வந்தாச்சு. அவருக்கு அவ்ளோ சந்தோஷம்!!

Post Comment

கல் வைத்த அட்டிகை







கல் வைத்த அட்டிகை
கல்யாணத்தில் போட ஆசை
கல்லுக்கும் தங்கத்தின் விலையாமே
கணக்குப்போட்ட தந்தையின்
கவலையான முகத்தைக் கண்டு
கைவிட்டாள் ஆசையை
கன்னியவள்


கண்ணே பொன்னே மணியே
கொஞ்சி என்ன வேண்டும் கேளெனக்
கேட்டவனிடம் சொன்னாள்
கல்லென்ன வைரமே வாங்கலாமெனக்
கண்ணானவன் சொல்ல கண்மயங்கினாள்
கடைக்குப்போய் விசாரித்த
கொண்டவனின் மெலிதான தயக்கம்
கண்டு சினந்து ஆசையைக்
கலைத்தாள் மீண்டும்

காலங்கள் கழிய
கையிருப்பாய் சுயசேமிப்பு இருக்க
கனவு மீண்டும் தலையெடுக்க
கண்கவர் கல்நகை பார்த்தெடுத்து
கல்லாவுக்கு வந்து காசுகொடுக்கையில்
கைவிடப்பட்டோருக்கு உதவுங்கள்
கருணைப் பெட்டி கண்டு
கைகழுவினாள் ஆசையை
காலத்திற்கும்!!



Flash picture: http://www.beitalkhair.com/

Post Comment

யானை வருடம்




இச்சம்பவத்தின் முதல் பகுதியான கஃபாவை அழிப்பதற்காக அப்ரஹா யானைப்படையுடன் வந்ததை இங்கே   பார்த்தோம்.

அப்ரஹா, அப்துல் முத்தலிப் தன்னிடம் கஃபாவை இடிக்க வேண்டாமென்று கெஞ்சுவார், மன்றாடுவார் அல்லது சவால் விடுவார் என்று எதிர்பார்த்திருக்க, அவரோ நிதானமாக, கஃபாவை இறைவன்  பார்த்துக்கொள்வான் என்று சொல்லக்கேட்டு அதிர்ந்து விட்டான். இவ்வளவு உறுதியாக அவர் பதிலளித்தது அப்ரஹாவை மட்டுமல்ல, அவன் படையினரின் தைரியத்தையும் ஆட்டிப் பார்த்தது என்பதே உண்மை. கெஞ்சவுமில்லாமல், மிஞ்சவுமில்லாமல், நீ செய்வதை செய்துகொள் என்று சொல்பவரிடம் என்ன பேசுவதென்று அறியாமல் அவரின் ஒட்டகங்களைத் திருப்பிக் கொடுத்தனுப்பினான்.

அப்துல் முத்தலிப் சொன்னதிலும் காரணமுண்டு. பாலைவனத்தில் யானைகள் கிடையாது. அரேபியர்கள் அதற்குமுன் யானையைப் பார்த்ததுமில்லை. அப்ரஹா யானைப்படையுடன் வருகிறான் என்று அவர்கள் அறிந்திருந்தனர்.  வழக்கமான ஆயுதங்களான வாள், கேடயம், வில், அம்பு போன்றவைகளைக் கொண்ட போர்முறையையே அவர்கள் அதுவரை பின்பற்றி வந்திருந்தனர்.  மிகப்பெரிய மிருகமான யானையை எவ்வாறு எதிர்கொள்வது என்று அறிந்திராததாலும், அதற்கு ஈடான படைகள்  தம்மிடம் இல்லாததாலும், அவர் ஏற்கனவே தம்மின தலைவர்களுடன் ஆலோசனை செய்திருந்தார்.

அந்த கலந்தாலோசனையில் எடுக்கப்பட்ட முடிவே அவர் அப்ரஹாவிடம் கூறியது.  அனுபவ அறிவினால் விளைந்த விவேகத்தினால் எடுக்கப்பட்ட முடிவு.

மறுநாள் , தன்னை எதிர்க்க யாரும் வருவதாக இல்லை என்ற இறுமாப்புடன் அப்ரஹா தனது பெரும்படையுடன் இறையில்லமான கஃபா நோக்கிக்  கிளம்பினான். மக்கமா நகரத்து மக்கள் செய்வதறியாமல் மலைகளின் பின் நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அப்ரஹாவும், வீரர்களும் யானைகளை  கஃபாவை நோக்கிச் செலுத்த, அவை நகர மறுத்தன!! பல்வேறு வகைகளிலும் முயன்றும் அவை மக்கா நோக்கி நடக்க மறுத்தன; ஆனால் எதிர் திசையில்,  ஏமனை நோக்கி நடத்தினால் நடந்தன!! அதனால், அவற்றை எதிர்திசையில் கொண்டுபோய், மக்காவை நோக்கி நடக்க வைத்தனர்.

அதுவரை தெளிவாய் இருந்த வானம், திடீரென்று கருமேகம் சூழ்ந்ததுபோல் இருட்டியது.  ஆனால் உண்மையில் சூழ்ந்தது கருமேகம் அல்ல; கருமை நிற பறவைகள்தாம் கூட்டம்கூட்டமாகப் பறந்துவந்தன. அபாபீல் என அரபிமொழியில் அழைக்கப்படும் மிகச்சிறிய உருவிலான அப்பறவைகள் ஒவ்வொன்றின் இரு கால்களிலும், அலகிலும் சிறுசிறுகற்கள் இருந்தன. கஃபாவை அழிக்க வந்த யானைப்படையின் நேர்மேலே வந்ததும் அவை அக்கற்களைப் போட்டன.

ஆயிரமாயிரம் பறவைகளால் தொடர்ந்து வீசியெறியப்பட்ட கற்கள் யானைகள் மீதும், வீரர்கள் மீதும் இடியென விழுந்து அவர்களை நசுக்கி மண்ணோடு மண்ணாகப் புதையச் செய்தன. அப்ரஹாவும் அழிந்தான்!!

அரேபியர்கள் இச்சம்பவம் நடந்த வருடத்தை  ”யானை வருடம்” (Year of the elephant) என்று பதிந்திருக்கின்றனர்!!

இச்சம்பவத்தை இறைவன் தனது திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:

(நபியே!) யானைப் படையை உமது இறைவன் என்ன செய்தான்  என்பதை நீர் அறியவில்லையா? 

அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? 

மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான். 

சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. 

அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். (திருக்குர்ஆன், 105:1-5)


திருக் குர் ஆனில் வரும் இச்சம்பவம் பெரும்பாலானோர் அறிந்ததே. பிற்பகுதியில் வரும் யானைப்படை பறவைக்கூட்டத்தால் அழிக்கப்படும் கதை எல்லாரும் தத்தம் பெற்றோரிடம் கேட்டறிந்து, தமது பிள்ளைகளுக்குக் கூறிய முதல் கதையாகவும் இருக்கும். கதை கூறும் நீதியாக, இறைவன் நினைத்தால் மலைபோல் வரும் துன்பமும் பனிபோல் நீங்கிவிடும் என்பது பெரியவர்களான நமக்கும் மன தைரியத்தைத் தரும்.

ஆனால், இச்சம்பவத்தின் முற்பகுதியாகிய அப்ரஹா, அப்துல் முத்தலிப்பைச் சந்திப்பதும், அவரின் பதிலும் நான் சமீபத்தில்தான் வாசித்து  அறிந்தேன். பிற்பகுதியைவிட முற்பகுதியே என் மனதை வெகுவாகக் கவர்ந்தது.

பலசமயங்களில் நம் மனம் பிரச்னைகளின் தாக்கத்தால் கட்டுக்கடங்காமல் அலைபாயும். நம்மைமீறி எதுவும் செய்துவிடாமல் அணைபோடுவதற்கு “அதனதன் உரிமையாளன் அதனதன் பொறுப்பு” என்ற வாக்கு உதவும்.

சிலசமயம் நம் எல்லைக்குள் வராத சில விஷயங்களில் நாம் எதுவும் செய்யமுடியாமல் கையறுநிலையில் இருப்போம். அச்சமயங்களிலும் “பொறுப்பாளன் இருக்கிறான்; அவன் பார்த்துக்கொள்வான்” என்று நம்மை அமைதிப்படுத்திக் கொள்ள இச்சம்பவத்தை நினைவுகூறுவேன்.

Post Comment

அது என்னுடையதல்ல..





கி.பி. 570-ம் ஆண்டு... முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்குச் சில மாதங்கள் முன்...
 
சவூதி அரேபியா அருகில் உள்ள நாடான ஏமென்,  அபிஸீனிய மன்னரின் ஆளுகைக்குக் கீழ் இருந்தது.  அபிஸீனிய மன்னரின் பிரதிநிதியாக அதை அரசாண்டுகொண்டிருந்தான் அபிஸீனியாவைச் சேர்ந்த “அப்ரஹா அல் அஷ்ரம்” எனும் ஆளுநர். 
 
அரேபியர்கள் மக்காவில் உள்ள கஃபாவை வணங்குவது  அவன் கவனத்திற்கு வந்தது.  அவர்களின் வழிபாட்டு முறையை மாற்ற நினைத்த அவன், ஏமெனின் தலைநகரான “சனா”வில் கஃபாவைவிடப் பெரியதும், அழகானதுமான ஆலயம் ஒன்றைக் கட்டினான். வெள்ளைநிற பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட அதற்கு “குலைஸ்” என்று பெயரிட்டான்.  அதன் உட்புறம் தங்கம் மற்றும் வெள்ளியாலும் இழைக்கப்பட்டிருந்தது. வெளிப்புறம் தந்தத்தால் அழகுபடுத்தப்பட்டிருந்தது.
 
இத்தனை பேரழகும், கலைநயமும் கொண்டு கட்டப்பட்ட ஆலயம் நிச்சயம் மக்களைக் கவரும்; ஆலயத்தில் கூட்டம் அலைமோதும் என்று நம்பினான். ஆனால் அரேபியர்களின் கவனம் கஃபாவை விட்டு இதன்பால் திரும்பவில்லை.  அப்ரஹா பல்வேறு கட்டளைகள் பிறப்பித்தும் யாரும் செவிமடுக்கவில்லை. கஃபாவை விடுத்து, குலைஸ் ஆலயத்திற்கே அனைவரும் புனிதப்பயணம் மேற்கொள்ளவேண்டும் என்றும் உத்தரவிட்டான். 
 
ஆனால் யாரும் அப்ரஹாவின் உத்தரவைச் செயல்படுத்தவில்லை. கஃபாவையே நாடிச் சென்றனர்.  இது அப்ரஹாவைப் பெரும் கோபத்திற்கு உள்ளாக்கியது. கோபம் தலைக்கேறியதில் தன்னிலை இழந்த அவன், கஃபாவை இடித்து அழித்தொழிப்பது என்று முடிவெடுத்தான்.

பெரும் யானைப்படையைத் திரட்டிக்கொண்டு மக்கா நகரை நோக்கிப் படையெடுத்தான். மக்காவின் எல்லையில் இருந்துகொண்டு, சில படைவீரர்களை அனுப்பி மக்கத்துவாசிகளின் படைபலம் மற்றும் நிலவரங்களை உளவறிந்து வரப் பணித்தான்.

மக்கா நகரில் “குறைஷ்” எனும் இனத்தவர்களே பெரும்பான்மையாக இருந்தனர். மக்கா நகரின் தலைவராக இருந்தவர் “அப்துல் முத்தலிப்” என்பவர். இவர்தான் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பாட்டனார். 

 
இதற்கிடையே அப்ரஹாவினால் உளவறிய அனுப்பப்பட்ட படைவீரர்கள்,  செல்லும் வழியில் தென்பட்ட ஒரு  ஒட்டகக் கூட்டத்தைச் சிறைபிடித்து வந்தனர்.  அவர்களிடம் விபரங்களை கேட்டறிந்துகொண்டவன், குறைஷ்களின் தலைவரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துவருமாறு பணித்தான். 
 
அவ்வாறு அழைத்துவரப்பட்ட அப்துல் முத்தலிப் அவர்களின் கண்ணியமான தோற்றத்தினால், தன்னையுமறியாமல் எழுந்துநின்று வரவேற்றவன், அவரிடம் தான் படையெடுத்து வந்த நோக்கத்தைக் கூறினான். கஃபாவை அழிப்பதே தன் நோக்கம் என்றும், அதில் மக்கத்து மக்கள் இடைபடாதிருந்தால் அவர்களின் உயிருக்கு ஆபத்து நேராதென்றும் கூறினான்.  பின்னர் அவரிடம் அப்ரஹா, “ஏதேனும் சொல்ல  விரும்புகிறீர்களா?” எனக் கேட்க, அதற்கவர் தன் ஒட்டகங்களை அவனது  படையினர் பிடித்து வந்துவிட்டதாகவும், அவற்றைத் திரும்பத் தரவேண்டுமென்றும் கேட்டார்.
 
அவரது பதிலைக் கேட்ட அப்ரஹா திகைத்து நின்றான்.  இவர்களது இறைஇல்லத்தை இடிக்க பெரும்படையுடன் வந்து நிற்கும் தன்னிடம்,  தயவுசெய்து இறை இல்லத்தை இடிக்காதே என்று கண்ணீர் விட்டுக் கதறி கெஞ்சுவாரோ அல்லது முடிந்தால் எம்படைகளை வென்றுப்பார் என்று சவால் விடப்போகிறாரோ என்று ஆவலுடன் நின்றால்,  சம்பந்தமே இல்லாமல் ஒட்டகங்களைத் தா, போதும் என்கிறாரே என்று குழம்பி நின்றான். 
 
அவரிடமே கேட்டான், “உம் இறைஇல்லத்தைவிட ஒட்டகங்கள் பெரிதாகிப் போனதோ உமக்கு?” என்று. அப்துல் முத்தலிப் பதிலுரைத்தார் “ஒட்டகங்களுக்கு உரிமையாளன் நான். அவற்றைப் பாதுகாப்பது என் கடமை. இறை இல்லத்தின் உரிமையாளன் அதைப் பாதுகாத்துக் கொள்வான்!!”. 

 இதன் தொடர்ச்சி இங்கே...

Post Comment

வாலை வெட்டணுமா வேண்டாமா?







தலைப்பைப் பார்த்துவிட்டு, என்னவோ ஏதோ என்று வந்திருப்பீங்க!! இதுவும் நல்ல பாடம் சொல்லும் பதிவுதான். தொடர்ந்து படிங்க!!

அப்பெண்டிக்ஸ் என்ற குடல் வால்: இதைப் பற்றி நம்ம எல்லாருக்கும் எந்தளவு தெரியும்?

குடலின் நுனியில் இருக்கும் வால் போன்ற அமைப்பு. இது ஒரு தேவையில்லாத உறுப்பு; திட கழிவுகள் அதில் போய்த் தங்கும். சிலருக்கு திடீரென்று பிரச்னை கொடுக்கும்; வலி வந்துவிட்டால், அறுவை சிகிச்சை செய்து அதை வெட்டியெடுப்பதுதான் ஒரே வழி என்ற வரைதான் எனக்கும் தெரியும், போன வருடம் இந்தியா போயிருந்தபோது என் மகனுக்கும் (12 வயது) இந்தப் பிரச்னை வரும்வரை!!




அப்பெண்டிக்ஸில் பிரச்னை என்றால் வயிற்றின் வலது அடிப்பாகத்தில் மட்டுமே வலிக்கும் என்றுதான் நினைத்திருந்தேன். என் மகனுக்கு முதலில் சாதாரண வலி போல வயிறு முழுதும் வலி. அடுத்த நாள், தொப்புளைச் சுற்றி வலி அதிகம் இருந்தது. வாந்தி தொடங்கியது.  அதற்கடுத்த நாள் வலி வலது அடிவயிற்றில் மட்டும் இருந்தது.

முதலில் பரிசோதித்த மருத்துவர்கள், வாந்தியும் இருந்ததால், ஃபுட் பாய்ஸன் என்றே கருதி, மருந்துகள் கொடுத்தனர். மூன்றாம் நாள், வலது அடிவயிற்றில் வலி என்ற பிறகுதான், அப்பெண்டிக்ஸாக இருக்கலாம் எனச் சந்தேகித்து, ஸ்கேன் செய்யச் சொன்னார். ஸ்கேன் ரிப்போர்ட், எதிர்பார்த்தபடியே, “Acute appendicitis" என்று வந்தது.

பிறகு, வேறொரு மருத்துவமனையில் அனுமதித்தோம். நான் லேப்ரோஸ்கோபிக் முறையில் செய்யும்படிக் கேட்டுக் கொண்டிருந்தேன். சாதாரணமாக அப்பெண்டிக்ஸ் ஆபரேஷன் அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் முடிந்துவிடும்; ஆனால் (வயிற்றின்) உள்ளே உள்ள  நிலைமையைப் (!!) பொறுத்து 2 மணிநேரம் வரை ஆகலாம் என்று டாக்டர் சொன்னார். 

ஆனால் ஆபரேஷன் முடிய 3 மணி நேரம் ஆனது. மருத்துவர் மீண்டும் ஒரு அதிர்ச்சிச் செய்தி சொன்னார். அதாவது அப்பெண்டிக்ஸ் எனப்படும் குடல்வாலை நீக்க முடியவில்லை என்று!! ஏன்?

அப்பெண்டிக்ஸ் எனும் குடல்வால் பிரச்னை வந்தால், அறுவை சிகிச்சை செய்து, அவ்வாலை வெட்டி எடுப்பதுதான் அதற்கான சிகிச்சை என்றே நாம் அறிந்திருக்கிறோம். அவ்வாறு உடனே செய்யாவிட்டால், அது வெடிக்கும் சாத்தியமுண்டென்றும், அது உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடும் என்றும் அறிந்திருக்கிறோம். அதனாலேயே இதுதான் நோய் என்று கண்டறியப்பட்ட உடனே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறுவை சிகிச்சை செய்யப்படும். ஆனால், இங்கே அவ்வாறு செய்ய முடியவில்லை என்று சொல்கிறாரே, அப்படியானால்...

காரணத்தை விளக்கினார் மருத்துவர். குடல்வால் என்பதில் இன்ஃபெக்‌ஷனே வலி உண்டாவதற்குக் காரணம். பெரும்பாலும் உணவின் மூலம் வரும் பாக்டீரியாக்களே அதன் காரணமாக இருக்கும். வாலில் நோய்த்தொற்று ஏற்பட்டு, பின் உடனடி சிகிச்சை அளிக்காமல் விட்டால், வெடிக்கும் நிலைக்குச் செல்லும். இந்த இரண்டிற்கும் நடுவே ஒரு நிலை உண்டு. அதுதான் “Appendicular mass”. அதாவது, தொற்று அதிகரித்து, வாலில் சீழ்பிடித்து, அது அருகில் உள்ள Cecum  என்ற பகுதியுடனும், குடலின் மற்ற சில பகுதிகளுடனும் ஒட்டிக் கொண்டு ஒரு பந்து போல காணப்படும்.

இச்சமயத்தில் இதனை வெட்டி எடுப்பது மிக ஆபத்தானது. குடலில் ஓட்டை விழும் அபாயம் இருப்பதால் அதனை நீக்காமல், சீழை முடிந்த அளவு எடுத்துவிட்டு, சலைன் வாட்டரால் அப்பகுதியைக் கழுவிவிட்டு, அப்படியே மூடிவிட்டார்கள்.

இதற்கு சலைன் மூலம் அதிக வீரியமுள்ள ஆண்டி-பயாடிக் மருந்துகள் ஏற்றுவது மட்டுமே தகுந்த சிகிச்சை. தொற்று முழுமையாகக் குணமாகும் வரை உணவு, தண்ணீர் ஏதும் கொடுக்கக்கூடாது. இவ்வாறாக ஒரு வாரம் படுக்கையிலேயே கழிந்தது. லேப்ரோஸ்கோபிக் முறையில் செய்வதற்காக மூன்று சிறிய துளைகள் வயிற்றில் இட்டிருந்தார்கள். அதில் ஒரு துளை வழியே புண்ணைக் கழுவிய சலைன் வாட்டர் மற்றும் சீழ் (இருந்தால்) வெளியேற என்று ஒரு டியூப் மாட்டியிருந்தார்கள். புண் ஆறி வருவதை அறிய அதையும் கண்காணித்து வந்தார்கள்.

சரி, இப்படி Appendicular mass ஆகிவிட்டது என்று அறுவை சிகிச்சைக்கு முன்பே அறிந்துகொள்ள முடியாதா? தெரிந்திருந்தால் அறுவை சிகிச்சை செய்வதைத் தவிர்த்திருக்கலாமே? இனி மேற்கொள்ளவேண்டிய சிகிச்சைகள் என்னென்ன? இன்னும் பல சந்தேகங்கள் வந்தன. அந்த மருத்துவரிடமும், பின்னர் நான் சந்தித்த சில மருத்துவர்களிடமும் கேட்டும், இணையத்திலும் கண்டு அறிந்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.

அறிகுறிகள்:
1.       தொப்புளைச் சுற்றி வலி இருக்கலாம்.
2.       முதலில் வயிற்று வலி, பின்னரே வாந்தி. (இது முக்கிய அறிகுறி. வயிற்றுக்கோளாறு, ஃபுட் பாய்ஸன் போன்றவற்றில்  வாந்தி முதலிலும், வலி பின்னரும் வரும்).
3.       வயிற்றின் வலது அடிப்பாகம் வலி.


பரிசோதனைகள்:
வலி வந்தவுடன் மருத்துவர் கைகொண்டு வயிற்றைப் பரிசோதித்தல் நலம். அல்ட்ரா-சவுண்ட் ஸ்கேனிலும் குடல்வால் நோயுற்றிருப்பதை ஒரு உத்தேசமாகத்தான் காணமுடியுமாம். ஒரு தேர்ந்த, அனுபவம் வாய்ந்த ரேடியாலஜிஸ்டால்தான் அது என்ன நிலையிலிருக்கிறது என்று சரியாகக் கணித்துச் சொல்ல முடியும்.

அந்தப் படங்களைக் காணும் மருத்துவருக்கும் அதேதான். சி.டி.ஸ்கேன் எடுத்தாலும் தெளிவாகத் தெரியாது. அனுபவமே கைகொடுக்கும்.

சிகிச்சைகள்: (for appendicular mass)
1.       மேலே சொன்னதுபோல உணவு இல்லாமல், டிரிப் மூலம் மருந்துகள் மட்டுமே. தொற்றின் தீவிரத்தைப் பொறுத்து, குறைந்தது ஒரு வாரம் ஆகும். ஒரு மாதமும் ஆகலாம்..
2.       பின்னர், சிறிது காலம் (3 மாதங்கள்) கழித்து, நமக்கு வசதிப்படும் சமயத்தில், அறுவைசிகிச்சை செய்து வாலை வெட்டி எடுப்பது.

இதுகுறித்து மருத்துவர்கள் கருத்து வேறுபடுகிறார்கள். இந்தியாவில் நான் பார்த்த மருத்துவர்கள், ரிஸ்க் வேண்டாம், மீண்டும் ஆபரேஷன் செய்துவிடுவதே நலம் என்றார்கள். பின்னர் இங்கு அபுதாபி வந்து சந்தித்த மருத்துவர்களோ (இந்தியர்கள்தான்) பிரச்னை வரும்வரை அதைத் தொடாமல் இருப்பதே நல்லது; நல்லா இருப்பவனுக்கு நாங்கள் ஆபரேஷன் செய்வதில்லை என்று சொல்கிறார்கள்.

எனக்கும் இதுவே திருப்தி தருவதால், அறுவை சிகிச்சை வேண்டாம் என்றே முடிவு செய்துள்ளோம். இணைய புள்ளிவிவரங்களும், மீண்டும் பிரச்னை வருவதற்கு வாய்ப்பு குறைவு என்றே சொல்கின்றன.

நாகர்கோவிலில் எங்களின் அண்டை வீட்டில் ஒரு பெண்ணும் அவர் மகளுக்கு 5 வயதிருக்கும்போது இதே போல Appendicular mass ஆனதாகவும், டிரிப் மூலம் மருந்து எடுத்துக் கொண்டதில் சரியாகிவிட்டது, த்ற்போது மகளுக்கு 20 வயதாவதாகவும், ஒரு பிரச்னையும் இல்லை என்றும் சொன்னார்.

ஒரு சாதாரண அப்பெண்டிக்ஸ் சிகிச்சைதானே என்று நினைத்த எங்களுக்குப் பல அதிர்ச்சிகளையும், அனுபவ அறிவுகளையும் தந்த நிகழ்ச்சி இது!! அதுகுறித்த சம்பவங்களையும் பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்.

Post Comment

டிரங்குப் பொட்டி - 5






இந்த வருஷத்து முதல் பதிவே நம்ம டிரேட் மார்க் டிரங்குப் பொட்டிப் பதிவு போட்டு நம்ம brand-ஐ எல்லார் மனசிலயும் இன்னும் ஆழமாப் பதிய வழி பண்ணியாச்சு!! இனிமே அல்ட்ராமாடர்னா ஒரு புது மாடல் பிரீஃப் கேஸைப் பாத்தாக்கூட நம்ம டிரங்குப் பொட்டிதான் ஞாபகம் வரும்!! நம்ம பாரம்பரிய கலாச்சாரத்தை மறக்காம இருக்க ஏதோ என்னாலான ஒரு எளிய சேவை!!

^*^*^*^*^*^*^*^*^*^*^*


ஒரு ரெண்டு மூணு வாரம் முன்னாடி கையில மருதாணி போடறதுக்காக பக்கத்தில ஒரு ஹென்னா சலூனுக்குப் போயிருந்தேன். அங்கேயிருந்த பாகிஸ்தானி பியூட்டிஷியன் பொண்ணு எனக்கு மருதாணி வரைஞ்சுகிட்டே, எனக்கடுத்துப் போடறதுக்காகக் காத்துக்கிட்டிருந்த இன்னும் இரண்டு பாகிஸ்தானி பெண்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.  எனக்கு உருது ஸ்டேஷன் சரியாகக் கிடைக்காது என்பதால் பேசாமல் கவனித்துக் கொண்டு மட்டும் இருந்தேன். அரசியல், குண்டுவெடிப்பு, வேலை, குடும்பம் என்று நடந்துகொண்டிருந்த பேச்சு, யெஸ், அதேதான், நீங்க நினைச்ச மாதிரியே தொலைக்காட்சி சீரியல்கள் பக்கம் போனது. ஹிந்தி சீரியல்களும் பார்க்கிறார்கள் என்று அவர்கள் பேச்சில் தெரிந்துகொண்டேன். அதில் ஒருவர், தான் சிலகாலம் பார்க்காம முடியாமல் போன ஒரு தொடரின் கதையைக் கேட்க, இன்னொருவர் சொல்லிக் கொண்டிருந்தார். 

“ரஞ்சனாவின் தங்கை, அக்காவை எப்படியாவது வீட்டை விட்டு துரத்த நினைக்கிறாள். இத்தனைக்கும் ரஞ்சனாதான் தன் தங்கையைத் தன் பணக்காரக் கொழுந்தனுக்குத் திருமணம் செய்து வைத்தாள்.”

“அது எப்படி?”

“ரஞ்சனா தன் கல்யாணத்தின் போதே மாமியாரிடம் அப்படி கண்டிஷன் போட்டிருந்தாள். அதற்குச் சம்மதித்ததால்தான் அந்தப் பைத்தியத்தைக் கல்யாணம் செய்தாள்.”


அட, இந்தப் பைத்தியத்தைக் கல்யாணம் செய்றது தமிழ் சீரியல்களில் மட்டுமில்ல, பாகிஸ்தானிலும் அப்படித்தானா என்று நினைத்துக் கொண்டே அவர்களிடம் கேட்டேன், ”உங்க ஊர் சீரியலும் எங்க ஊர் சீரியல் மாதிரியே இருக்கே” என்று. சிரித்துக் கொண்டவர்கள் சொன்னார்கள், ”ஆனாலும் எங்க ஊர் சீரியல்கள் இந்திய சீரியல்கள் போல இழுவையாக இருக்காது. சீக்கிரம் முடித்துவிடுவார்கள்.  இந்திய சீரியல்களில் ஹீரோயின் பள்ளி மாணவியாக ஆரம்பித்து, பட்டப்படிப்பும் முடித்து, கல்யாணம் ஆகி, அம்மாவாகி, பாட்டி, கொள்ளுப் பாட்டியும் ஆனாலும் தொடர் முடியாது!! சீரியல் பார்க்கும் நாம் இறந்தாலும் இறப்போம், ஆனாலும் சீரியல் முடியாது” என்றவர்கள், ஒரு ஹிந்தி சீரியலில் (கும்கும் என்று பெயர் சொன்னதாக நினைவு) ஹீரோயினின் மறுபிறப்பும் நடந்துள்ளதாகச் சொன்னார்கள்!!

ம்ம், நாட்டுக்கு நாடு தொடர்-கதை!!

^*^*^*^*^*^*^*^*^*^*^*

இந்த  எஃப்.எம். ரேடியோக்களில், பாட்டு வேணும்னு கேக்கிறவங்க, இந்தப் பாட்டை யாருக்கு “டெடிகேட்” செய்றீங்கன்னு ஆர்.ஜே. கேட்டவுடனே, ஒரு லிஸ்ட் அடுக்குவாங்க பாருங்க.... கலா, மாலா, ராதா, கீதா, ராம், லக்‌ஷ்மன், சாதிக், பாஷா, சம்பத்து, சாலமன்,.....இப்படி ஒரு இருவது, முப்பது பேரைச் சொல்லி, இவங்களுக்கெல்லாம் இந்தப் பாட்டை டெடிகேட் செய்றேன் - அப்படின்னு எதோ பாட்டன், முப்பாடன் சொத்தையே அவங்க பேருக்கு எழுதி வச்சுட்ட மாதிரி பெருமையோடச் சொல்லுவாங்க பாருங்க...


அதென்னத்த “டெடிகேஷன்”? இவங்களுக்கு மட்டுந்தான் இந்தப் பாட்டு டெடிகேட்டட்னா, மத்தவங்கள்லாம் காதை மூடிக்கணுமா இல்லை ரேடியோவை ஆஃப் பண்ணிடனுமா? அவங்க மேல அவ்வளவு அன்புன்னா, காசு அல்லது உழைப்பு போட்டு வேற உருப்படியா எதையாவது கொடுக்கலாமே? பைசா செலவில்லாமே ஒரு உருப்படாத பாட்டைப் போடச்சொல்லித்தான் அன்பை வெளிப்படுத்தணுமா? 


இந்த டெடிகேஷன் என்பது, ஆர்.ஜே.க்கள் நேயர் கேக்கிற பாட்டை ஆன் - ஏர்லயே தேடிக் கண்டுபிடிக்கறதுக்காக நேரத்தைக் கடத்தக் கண்டுபிடிச்ச ஒரு டெக்னிக்!! அந்த காலத்துல சிலோன் ரேடியோல, “பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லும் அம்மா, அப்பா, அம்மம்மா, அம்மப்பா, அப்பம்மா, அப்பப்பா, மாமா, மாமி, பெரியப்பா, சித்தப்பா, ......” சொல்றது ஞாபகம் வருது. அப்பவும் அது கேக்கக் கடுப்பாத்தான் இருந்துது!!


^*^*^*^*^*^*^*^*^*^*^*

ஆஃபிஸ்லயும், ஷாப்பிங் மால்களிலும்  சிலர் “டங் டங்” என்று தரை அதிர நடப்பதைப் பார்த்தால் எரிச்சலாக வரும். அதுவும் ஆஃபிஸில் அமைதியான சூழலைக் கிழித்துக் கொண்டு, டொம் டொம் என்று நடப்பது கேட்க நாராசமாக இருக்கும்.  நம் தலையும் சேர்ந்து அதிர்வது போலிருக்கும். 

^*^*^*^*^*^*^*^*^*^*^*
விஜயின் வேட்டைக்காரனை வழக்கம்போல எல்லாரும் கிழித்து, தோரணம் கட்டித் தொங்கவிட்டுவிட்டார்கள். விஜய் படம் இப்படித்தான் இருக்கவேண்டும் ஒரு ஃபார்முலா இருக்கிறதென்று தெரிந்தும், அதைப் போய்ப் பார்த்துவிட்டு, புலம்புபவர்களைப் பார்த்தா, வேலியில போற ஓணான கதைதான் நினைவுக்கு வருது.


விஜய் படத்துல லாஜிக் எதிர்பார்க்குறதும், என் பிளாக்குல இலக்கிய ரசம் சொட்ட ஒரு கவிதை எதிர்பார்க்கிறதும் ஒண்ணுதான், இல்லையா?

Post Comment