Pages

டிரங்குப் பொட்டி - 11




இம்முறை ஊருக்குப் போகும்போது (இன்னும்ம்மா ஊர்ப்புராணம் முடியலைன்னு கேக்கிறது கேக்குது!) எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் போனோம். இருக்கையில் இருக்க டி.வி.யில், ஃப்ளைட் கிளம்பும்போதும், இறங்கும்போதும் வெளியே இரண்டு கேமராக்கள் வைத்து லைவ்வாகக் காட்சிகளை ஒளிபரப்புகிறார்கள். அழகான காட்சிகள்!! அதுவும், லேண்ட் ஆகும்போது ஓடுதளம் தொட்டு சரசரவென ஓடி நிற்கும்போது ஆங்கிலப் படம் பார்ப்பதுபோலத் திரில்லா இருந்துது!!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இத்திஹாத் இரண்டிலும் சிலர் அளவுக்கதிகமா குடிச்சுட்டு சலம்பல் பண்ணிகிட்டிருப்பாங்க. அவங்ககிட்ட ஏர்ஹோஸ்டஸ் அக்காக்கள் கெஞ்சிகிட்டு இருப்பாங்க, ப்ளீஸ், ப்ளீஸ்னு. ஆனா ஒரு பலனும் இருக்காது; இறங்கற வரை அவங்க பிரசங்கங்களைக் கேட்டுத் தொலையணும். இப்பவும் அதே மாதிரி ஒரு சேட்டன் ஆரம்பிச்சார். அக்கா கெஞ்சியும் அடங்கலை; அப்புறம் கோ-பைலட் வந்தார்; அவர்கிட்ட குனிஞ்சு ஒரு ரெண்டு நிமிஷம் பேசினார் (மிரட்டினார்??); அதுக்கப்புறம் மூச்!!

**********^^^^^^^^^^^^^************

பதிவுகளைப் பற்றி பதிவுலகில் அல்லாமல், ட்விட்டர், ஃபேஸ்புக், குழும மடல்கள் எல்லாத்துலயும் டிஸ்கஷன் நடக்குதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். இன்னும் சொல்லப் போனா, சர்ச்சையான சமயங்களில், பதிவுகளில் பே(ஏ)சப்படுவதைவிட, மேற்சொன்ன இடங்களில்தான் அதிகக் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன, விமர்சிக்கப் படுகின்றன என்றும் அறிகிறேன். இது எந்தளவு சரி என்பது ஒருபுறமிருக்க,  இவை எதனிலும் இல்லாத (நம்புங்கள், நிஜம்தான்) என்னைப் போலப் பதிவர்களின் பதிவுகள் குறித்து கருத்துரையாடல் நடந்தால் நான் எப்படித் தெரிந்துகொள்வது, பதிலளிப்பது? (ரொம்ப ஓவர் ஸீனா இருக்கோ?)

உண்மையாகவே ட்விட்டர், ஃபேஸ்புக்,(அக்கவுண்ட் மட்டும்(மே) உண்டு) குழும மடல்கள் என்று எவற்றிலும் நான் பங்குபெறுவதில்லை. அவற்றில் இணைந்தால், ஒரு அடிக்‌ஷன் வந்துவிடுமோ என்ற பயமே காரணம்; பிளாக்கே நேரத்தைக் கொல்கிறது. இருந்தாலும், எல்லாரும் அதைப் பற்றிப் பேசும்போது, நாம் அப்டேட்டாக இல்லியோ என்ற தாழ்வு மனப்பான்மை வருவது போலிருந்தாலும், பிடிவாதமாக விலகி இருக்கிறேன்!!


**********^^^^^^^^^^^^^************

பாகிஸ்தானின் வெள்ளப்போக்கும், அதனால் ஏற்பட்ட/ படவிருக்கும் இழப்புகள் சுனாமியால் உலகுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை விட அதிகமாம். இந்த இழப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கு எத்தனை காலம் எடுக்கும் என்று தெரியவில்லை; 1947 பிரிவினையின்போது இருந்ததை விட மோசமான நிலை,  நாட்டின் முன்னேற்றம் 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளப்பட்டது என்று பிரதமர் கூறியுள்ளார். 20 மில்லியன் மக்கள் வீடிழந்து நிற்கிறார்கள். இன்னும்  பாதிப்புகள் தொடர்கின்றன. பகை நாடாக இருந்த போதிலும், இப்படி பாதிக்கப்பட்டு, அழிவின் விளிம்பில் நிறபதைக் கண்டு மனம் கலங்கத்தான் செய்கிறது. அதுவும் பாதிக்கப்பட்டவர்கள் உணவுக்குச் சண்டை போடும் படங்களைக் கண்டால்.....

இன்னும் கொடுமையாக, வழங்கப்பட்ட நிவாரண உணவுப் பொருட்கள், சமூக விரோதிகளால் சந்தையில் விற்கப்படுவதாக வந்தத் தகவல்கள் தமிழகத்தில் சுனாமி நிவாரண நிதியை நினைவுபடுத்தியது. பாதிக்கப்பட்ட மாகாணங்களிலிருந்து உயிர்தப்ப அண்டை நகரங்களில் நுழைபவர்களை அனுமதிக்கக்கூடாது என்றும் சில விஷமிகள் விஷப் பிரச்சாரம் செய்கிறார்களாம்!!


**********^^^^^^^^^^^^^************

பல வருடங்களுக்கு முன், வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்ற ஆண்கள் விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது, வந்த முதல் வாரத்திலேயே உடல்நலக் குறைவால் அவதிப்படுவார்கள். கேட்டால், “தண்ணி மாறுச்சுல்ல,  அதான்” என்பார்கள். சிலர் நாட்டு வைத்தியமாக, ஊருக்கு வந்தவுடன் முதலில் சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிட்டு விட்டு பின் தண்ணீர் குடிக்கச் சொல்வார்கள்.

இப்பவும் பல நோய்களுக்கு நீர்தான் ஆதாரம் எனும்போது, சில வாரங்கள் மட்டும் விடுமுறைக்கு வருபவர்கள், வெளியே தண்ணீர், ஜூஸ் போன்றவை  அருந்தாமல் கவனமாக இருப்பதில் தவறில்லையே? மினரல் வாட்டர் கேன்கள், வாட்டர் ப்யூரிஃபையர்கள் எங்கள் ஊரில் இன்னும் புழக்கத்திற்கு வரவில்லை; தண்ணீரைக் கொதிக்க வைத்துதான் பயன்படுத்துகிறோம். ஆனால், எத்தனை பேருக்கு 15 - 20 நிமிடங்களாவது கொதிக்க வைத்தால்தான், கிருமிகள் முழுதும் அழியும் என்பது தெரியும்? ஓரளவு சூடானதும் அடுப்பை அணைத்து விடுகிறார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை, கேஸ் விலை அப்படி!!


உறவினர்கள் வீட்டுக்குச் செல்லும்போது, நான் எதையும் மறுப்பதில்லை; ஆனால் பிள்ளைகளுக்குக் கொடுப்பதில் கவனமாகவே இருப்பேன். அவர்களுக்கு உடல்நலக் குறைவு என்றால் எதுவும் ஓடாது அல்லவா? உறவினர்களும் அதைப் புரிந்து கொள்கிறார்கள்; குற்றம் பிடிப்பதில்லை என்பது ஆறுதலாக இருக்கிறது.

**********^^^^^^^^^^^^^************

சென்ற வாரம் ஒரு இஃப்தார் விருந்துக்குச் சென்றிருந்தோம். இரவு உணவாக இடியாப்பம் பரிமாறப்பட்டது. அதைப் பார்த்து பந்தியில் சிலர் பேசிக்கொண்டார்கள்:
“இடியாப்ப அச்சு சரியில்ல போல; அதோட மாவுல தண்ணியும் கூடிப்போச்சு போல, அதான் திரிதிரியா இருக்கு”
“ஆமா, மாவு கிண்டறதுலதான் இருக்கு இடியாப்பத்தின் டேஸ்ட். என்னச் சொல்றீங்க?”
“இல்ல, நான் பிழிய மட்டும்தான் செய்வேன். மாவு கிண்டித் தந்துடுவாங்க. அதனால தெரியல.”
“அப்படியா, பரவாயில்லையே. நீங்க என்ன ஒண்ணுமே சொல்லல?”
“இதுவரை இடியாப்பம் செஞ்சதில்ல வீட்டில. நீங்கல்லாம் பேசிக்கிறதைப் பாத்தா இது ரொம்ப கஷ்டம் போல! இனி கேட்டா செய்யமுடியாதுன்னு சொல்லிடணும்!”

இதுல என்ன மெஸேஜ்னு கேக்கிறீங்களா? இப்படி பேசிக்கிட்டது சில ரங்கமணிகள்!!
  
 

Post Comment

நகர்வலம் - 2




  
 
இதோ நம்ம நகர்வலத்தோட இரண்டாம் பாகம்!! ( ஒரு வேலையை ஆரம்பிச்சா, முழுசா முடிக்கிற வரை விடமாட்டம்ல!!)


[#]    நாகர்கோவிலில் பிளாஸ்டிக் கவர்கள் தடை செய்து விட்டார்கள் என்றதும் சந்தோஷமாருந்தாலும், அதை நம்பிப் பிழைப்பு நடத்தும் குடும்பங்கள் என்னாகுமோ என்ற கவலையும் இருந்தது. இப்போது அழகாக, டிஷ்யூ பேப்பர் போன்ற மக்கக் கூடிய மெல்லிய துணியில் அழகான பைகள் வந்துவிட்டன். ஆனாலும் பல கடைகள் இதை இலவசமாகத் தருவதில்லை. (ஹி. ஹி.. அப்படியே பழகிடுச்சு..)

[#]    ஆனா, நாகர்கோவில்ல ஹெல்மெட் கட்டாயமாக்கப்படாததும்,  குப்பை சேகரிப்பது சரியாக நடைமுறைப்படுத்தப்படாததும் ஆதங்கமா இருக்கு. அதச் செஞ்ச கலெக்டர் இதுவும் செஞ்சா நல்லாருக்கும்.

[#]   நெல்லையிலும் பயங்கர போக்குவரத்து நெரிசல் எங்கப் பாத்தாலும். பாளை ஹிக்கின்பாதம்ஸ்லருந்து, வ.உ.சி. ஸ்டேடியம் எதிர்ல ஈகிள் புக் ஷாப் வரைக்கும் (அஞ்சு நிமிஷம்கூட ஆகாது) நடந்து போலாம்னு பிள்ளைங்களைக் கூட்டிட்டுப் போயிட்டுத் திணறிட்டேன்.

[#]   நெல்லை ஆரெம்கேவியில செக்யூரிட்டி சோதனைகள். போத்தீஸில் சோதனைகள் எதுவும் இல்லை. ஏன்? 

[#]   பல நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது: நெல்லை - நாகர்கோவில், மதுரை-திருச்சி, சென்னை-புதுவை - எல்லா சாலைகளுமே சூப்பர். MNC நிறுவனங்கள் மேற்பார்வையும் பங்களிப்பும் செய்து உருவாக்கிய சாலைகள். அதே சமயம், ஊருக்குள்ள காண்ட்ராக்டர்கள் போடுற சாலைகள் ஒரு மழைக்கே தாங்குறதில்லயே ஏன்னு கேள்வி வருது.

[#]  திருச்சி - மதுரை சாலையில் உள்ள பசுமையான சூழல் ஆச்சர்யம் தந்தது. முதல்முறை பகல்ல இந்த வழியே செல்வதால் மலைகளும், மரங்களும், தோப்புகளும் நிறைந்த சுற்றுப்புறம் வியப்பளித்தது. (இதுவரை ரயிலில்தான் (இரவில்) இந்த ஊர்களின் வழியேச் சென்றிருக்கிறேன்).

[#]   மதுரை அருகே இருக்கும் ஆனைமலை - அழகான காட்சி. ரொம்ப வியந்து பார்த்தேன். இந்த மலையைக் குடைந்து ஒரு “சிற்பப் பூங்கா” ("Sculpture Park") உருவாக்க அரசு திட்டமிட்டதாகவும், அது இந்த மலையிலுள்ள  கிரானைட்டைக் கவர்வதற்கான சதி என்று எழுந்த எதிர்ப்பால் திட்டம் கைவிடப்பட்டதாகவும் அறிந்தேன். 

ஆனைமலை
 இந்த மலை இப்படியே இருப்பதுதான் அழகு என்று தோன்றுகிறது. என்னா நீளமான மலை, ஒரு ஒற்றைக்கல் சிற்பம் போல!! ஆனை படுத்திருப்பதுபோல இருப்பதால் இந்தப் பெயராம்!! (எங்களுக்கே பாடமான்னு கேக்கக்கூடாது; ஒரு ஆர்வம்தான்!!)

[#]   மதுரை நாயக்கர் மஹால் போகத் திட்டமிட்டு, வழக்கம்போல பிள்ளைகளின் உடல்நிலையால் கேன்ஸல் ஆனது.  தமிழ்நாட்டுலயே இப்படி பாக்க வேண்டியது எவ்வளவு இருக்கு!!

[#] திருச்சி ஒரளவு சுத்தமாகத் தெரிகிறது, மற்ற ஊர்களை விட.  

[#]   இன்ஷ்யூரன்ஸில் வேலை பார்க்கும் நண்பர், மக்களிடையே மெடிக்கல் இன்ஷ்யூரன்ஸ் குறித்து நல்ல விழிப்புணர்வு இருப்பதாகச் சொன்னார்.  அவரது அலுவலக வாசலில் பான்கடை வைத்திருப்பவர், தனது குடும்பத்தின் மருத்துவக் காப்பீட்டுக்காக 17,000 ரூபாய் பிரீமியம் கட்டுகிறாராம்!!

[#]  எல்லா ஊரிலும், வீட்டு வேலைக்கு ஆள் கிடைப்பதே இல்லை;  உறவினர் வீட்டில் வேலை பார்ப்பவர், தான் வேலை பார்க்கும் ஐந்து வீடுகளிலும் ரேஷன் கார்டை வாங்கி அதில் அரிசியை வாங்கி வெளியே விற்கிறார். அன்றாட உணவு வேலை செய்யும் வீடுகளில் (பழசில்லை; சூடானதுதான்) அதிகப் படியாகவே கிடைத்துவிடும். தவிர, அரசு தரும் ரேஷன் அரிசி, மளிகைப் பொருட்கள், காஸ் இணைப்பு, இலவச மருத்துவக் காப்பீடு, தொலைக் காட்சி, வீட்டு வசதித் திட்டத்தில் வீடு,... ம்ம் ..

[#] நெருங்கிய உறவினரொருவர்,  இயற்கை விவசாயம் செய்ய விரும்பி நிலம் வாங்க முயற்சி எடுத்தார். பண்ணைக்காரர்கள் முதல் சிறு விவசாயிகள் வரை, ஏன் நில புரோக்கர் கூடச் சொன்ன அறிவுரை “வேண்டாம். வாங்காதீங்க!” காரணம், மழையோ, தண்ணீர் தட்டுப்பாடோ இல்லை; வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்பதே!!

[#] வீடு கட்டுபவர்களிடையேகூட இதே புலம்பல்தான், கட்டுமானப் பணியாளர், தச்சு வேலை செய்பவர், எலெக்ட்ரீஷியன், ப்ளம்பர், பெயிண்டர் - எல்லாருக்குமே பயங்கர டிமாண்ட்; சம்பளமும் கொஞ்ச நஞ்சமில்லை!! அப்புறமும் வெளிநாட்டு வேலைக்கு வந்து கஷ்டப்படுபவர்களும், ஏமாறுபவர்களும் குறைவதாக இல்லயே!!
  
 

Post Comment

கேள்வியின் நாயகன்




  
 

பெரியவனின் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லியே ஓய்ந்து போயிருந்த நிலையில், அடுத்தவன் பிறந்து, ஒன்றரை வயதாகியும் திருத்தமான பேச்சு வரவில்லை. பெரியவன் ஒரு வயதிலெல்லாம் அழகாகப் பேசினானே, இவன் ஏன் இன்னும் பேசவில்லை என்று கேட்பவர்களிடம், அவசரமென்ன, இவனும் சேந்து கேள்வி கேட்க ஆரம்பிச்சான்னா பதில் சொல்லிமுடியாது, மெதுவாப் பேசட்டும் என்று சொல்லுவேன்.

இவனும் அவனைப் போல் ஒருவன்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தபோதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இரண்டு, இரண்டரை வயதில், ஒருநாள் பகலில் படுக்கையில் மூச்சா போய்விட, ஏண்டா போனாய் என்று கேட்ட என்னிடம் நானில்லை என்றான். வீட்டில் வேறு யாருமில்லாத நேரத்தில் நானில்லை என்றால் திகிலாயிருக்குமா இல்லையா? அவனை இழுத்துக் கொண்டுபோய் படுக்கை ஈரத்தைக் காண்பித்து, அப்ப இது என்ன என்று கேட்க, அவன் என்னை ஆழமாகப் (!) பார்த்து, ”நான் என் ஜட்டியில்தான் போனேன்” என்றான்!! இவன் அவனைப் போலில்லை, இவன்கிட்ட கொஞ்சம் கவனமாத்தான் இருக்கணும் என்று புரிந்துகொண்டேன்.

அவன் அப்பாவின் பிறந்தநாளன்றே இவனும் பிறந்திருந்தாலும், வளர்க்கப் போவது நான்தானே, அதனால் அந்த எடக்குமடக்கெல்லாம் வராமப் பாத்துக்கலாம்னு நம்ம்ம்ம்பியிருந்தேன். ஆனா வளர, வளர, அப்பாவை முகச்சாயலில், உடல்வாகில், பாவனைகளில் மட்டுமல்லாமல், குணத்திலும் அப்படியே  உரித்துவைத்திருந்தான்!!

எல்.கே.ஜி. சேர்ந்து கொஞ்ச நாளிலேயே அவனுக்கு எழுதுவது அலுத்துப் போனது. ஹோம் வொர்க் செய்ய சலித்த அவனிடம், படிக்கலைன்னா மாடுமேய்க்கத்தான் போகணும் என்ற அரதப் பழசான அறிவுரையைச் சொல்லி மிரட்டிக் கொண்டிருந்தேன். கோபத்துடன் முறைத்துக்கொண்டே போய்விட்டான். சிறிதுநேரம் கழித்து வந்து கேட்டான், ”மாடெல்லாம் வீட்டுக்குள்ளதானே வச்சிருப்ப?”!!  மிரட்டிய நான்தான் அரண்டுபோய்விட்டேன்!!

பிறகு, But என்பது ”பட்”ன்னா, Put -ஐ ஏன் புட்னு சொல்லணும், Elephantல ஏன் f போடாம ph-போட்டிருக்கு, Iron-ஐ ஏன் ஐரன்னு சொல்லலை போன்ற வழக்கமான கேள்விகளையும் தாண்டி வந்தோம்.

ரொம்ப நாள் பதில் சொல்லத் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த கேள்வி, “என்னை ஏன் முதலில் பெற்றெடுக்காமல் அவனைப் பெற்றாய்?” என்பது. என்னென்னவோ சொல்லியும் திருப்தியடையாதவன், “நீ முதல் பிள்ளையாய் இருந்தால் இன்னும் உன்னை என் மடியில் போட்டுக் கொஞ்ச முடியுமா? கடைக்குட்டியாய் இருப்பதால்தானே இன்னும் நீ செல்லம்” என்ற பதிலில் அடங்கினான்.

”நீ ஏன் இரண்டுமே boy-ஆ பெத்தே? ஒண்ணு boy, ஒண்ணு girlனு டிஃபரண்டா பெத்திருக்கலாம்ல?” என்று அடுத்த கணை தொடுத்தான். “நான் கேர்ள்தான் வேணும்னு அல்லாட்ட கேட்டேன். ஆனா உன் அண்ணந்தான் தம்பி வேணும்னு கேட்டான். அவன் குட் பாயா இருந்ததால அவன் கேட்டதையே கொடுத்துட்டான்”என்றேன். ”அப்ப நீ குட் கேர்ள் இல்லையா?” என்று பூமராங் அனுப்ப, அவன் அப்பா வாய்பொத்திச் சிரித்தார். ”சின்ன பிள்ளைங்க ஆசையா கேக்கிறதத்தானே எல்லாரும் கொடுப்பாங்க, அதான்” என்று சமாளித்தேன்.

பொதுவாகப் பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் வயதுக்கேற்றவாறு ஓரளவு புரிய வைக்க முயற்சிப்பேன். ஆனால் “எங்க மீரா டீச்சர் பொட்டு வச்சிருக்காங்க. அழகாருக்கு. நீ ஏம்மா வைக்கலை?” என்று எல். கே.ஜி. படிக்கும்போது கேட்டபோது திகைத்துத்தான் போனேன். ”எங்க வீட்ல யாருமே வைக்கலை. அதான் நானும் வைக்கலை.” என்றதற்கு, “இப்ப வையேன்” என்றவனிடம், “முந்தியே வச்சுப் பாத்தேன். எனக்கு அது நல்லால்ல.” என்று சமாளித்த பின்னும், பவுடர் கொண்டு வைத்துப் பார்த்தவனுக்கு அது சரியே என்று தோன்றியிருக்க வேண்டும். பிறகு சொல்வதில்லை!!


பிள்ளை வளர்ந்து வருகிறான் என்பதைத் தெரிவிக்கும் விதமாக, யூ.கே.ஜி.யில் ஃபிரண்ட்ஸ்களை இஸ்லாமிக் க்ளாஸ் வருபவர்கள், மாரல் ஸ்டடீஸ் கிளாஸ் போகிறவர்கள் என்று அறிமுகப்படுத்தியவன், இப்போ முஸ்லிம்ஸ், ஹிண்டூஸ், கிரிஸ்டியன்ஸ் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறான். போன தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கணும் என்று ஆசைப் பட்டவனிடம் “அதெல்லாம் ஊர்லதான் முடியும். இங்கே வெடி வெடிக்கக்கூடாதுன்னு போலீஸ் சொல்லியிருக்காங்க” என்றதும், அப்ப தீபாவளியன்னிக்கு மட்டும் ஊருக்குப் போயிட்டு வரலாம் என்று அரிக்க ஆரம்பித்து விட்டான்!! உங்க வாப்பாட்ட ஒரு ஃபிளைட் வாங்கச் சொல்லு; அப்புறம் நினைச்சப்பெல்லாம் போயிட்டு வரலாம்னு அங்க தள்ளிவிட்டேன். அது நடக்காத காரியமென்று தெரிந்தோ என்னவோ கேட்கவேயில்லை.

பிறகு சில்ட்ரன்ஸ் டேக்கு புது உடை வாங்கி கேட்டது (என்னோட டே அது!! அன்னிக்கு நீ எனக்கு விஷ் பண்ணனும்), கிறிஸ்மஸ்க்கு வீட்டுக்கு சாண்டா க்ளாஸ் வருவாரா, கிஃப்ட் தருவாரா, சாண்டா என்றால் யார், கிறிஸ்மஸ் அன்று சர்ச்சுக்குப் போகலாமா என்று கேள்வி மேல் கேள்விகள்.


அவனுக்கு எவ்வளவு கோபம் வந்தாலும், கட்டிப்பிடித்து, ஒரு முத்தம்  கொடுத்தால் போதும், ஐஸாக உருகி, நாம் சொல்லும் வேலையைச் செய்து விடுவான். இவ்வளவு எளிதில் வழிக்கு கொண்டுவர முடிவது மகிழ்ச்சியாக இருந்தாலும், கொஞ்சம் கவலையும் தருகிறது.

இப்பவெல்லாம் கௌ எப்படி  மில்க் மேக் பண்ணும்,  ட்ரெயின் எப்படி, எங்க செய்வாங்க, சீஸ் எப்படி செய்யணும், ஃப்ளைட்ல எப்படி சாப்பாடு கிடைக்குது, அபுதாபில நாம இருக்கும்போது, நாகர்கோவில் எப்படி நம்ம சொந்த ஊராகும் என்று கேள்விகள்  கேட்டுக்கொண்டேயிருக்கும் அவனுக்குப் பதில் சொல்லிக்கொண்டேருக்கிறேன்.

ஒரே ஒரு சந்தேகம்தான் எனக்கு; அவங்கப்பாவிடம் இந்த மாதிரி கேள்விகள் எதுவுமே கேட்பதில்லை, என்னிடம் மட்டும்தான் கேட்கிறான். அவனுக்கு புரிஞ்சிருக்குதா...?? அல்லது அவனுக்கும் தெரிஞ்சுடுச்சா...?
 
 

Post Comment

நகர்வலம் - 1




 
இந்தியா வந்த பயணக் குறிப்புகள் எழுதுறேன்னு சொல்லிருந்தேன்லியா, இதோ: (வாக்குத் தவறக்கூடாதுல்லா!)

சிங்காரச் சென்னை:

##  கிட்டத்தட்ட எட்டு வருஷங்கள் கழிச்சு சென்னைக்கு வந்தேன். நிறைய மாற்றங்கள்!! புதுப்புது கண்ணாடி வேய்ந்த கட்டிடங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் அபரிமித வளர்ச்சியைக் காட்டுகின்றன. 

##  சென்னையில எங்குநோக்கினும் காணக்கிடைப்பது ரெண்டு விஷயங்கள்: மேம்பாலங்களும், பைக்குகளும்!!

##  ”சைக்கிள் கேப்பில ஆட்டோ நுழைவது” எல்லாம் பழைய மொழி; புதுசு, “காற்றுபுகா இடத்துலயும் ரெண்டு பைக் நுழையும்!!” அதுலயும் “தூணிலயும் இருப்பான், துரும்புலயும் இருப்பான்”கிற மாதிரி, எதிர்பார்க்கவே முடியாத சைடுலருந்து ஒரு பைக் வந்து உங்களத் திணறடிக்கலாம்.

##  பைக் ஓட்டுநர்கள் கிட்டத்தட்ட 80 சதவிகிதத்தினர் ஹெல்மெட் போட்டுருப்பதைப் பாத்து ரொம்ப சந்தோஷமாருந்துச்சு!!

##  ஆனா, அதுல 80 சதவிகிதத்தினர் ஹெல்மெட்டின் ஸ்ட்ராப்பை மாட்டாமல் விட்டிருந்ததப் பாத்து ...

##  நந்தனம் ஷெரட்டான் நுழைவாயிலில், காருக்கு பாம் டிடெக்டர், ஆளுக்கு மெட்டல் டிடெக்டர், மொபைல், பர்ஸ், பெல்ட் உட்பட எல்லா பொருட்களுக்கும் ஸ்கேன்னர் என்று ஏர்போர்ட் ரேஞ்சில் செக்யூரிட்டி சோதனைகள்!! (திருநெல்வேலியில் ஆரெம்கேவி யிலயும் இது போல சோதனைகள்!!)

##  சங்கீதாவில் சாப்பிட்டுட்டு, ஒரு மில்க் ஷேக் குடிச்சோம். பில்லைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது, (லிமிடெட்) மீல்ஸ் 60 ரூபாய், மில்க் ஷேக் 90 ரூபாய்!! தமிழ்நாட்டுல அரிசி பருப்பு ரொம்ப சீப் போல!!

##  டிராஃபிக் ஜாம் - துபாய், அபுதாபியெல்லாம் தோத்துடும். புதுச்சேரியிலருந்து சென்னை நுழையிற புறநகர்ப்பகுதிகள்லயே  கடும்நெரிசல் ஆரம்பிடுச்சு!! இத்தனை மேம்பாலங்கள் இருந்துமே, இவ்ளோ நெரிசல்னா....

##  சென்னை மக்களைப் பார்க்கப் பார்க்கப் பரிதாபம் இன்னும் அதிகமாகுது; தமிழ்நாட்டுல செட்டில் ஆகறப்போ, சென்னையில் மட்டும் செட்டில் ஆகிவிடக்கூடாதுன்னு வழக்கம்போல வேண்டிகிட்டேன்!!


 புதுச்சேரி:

##   கேரளா போல பசுமை, காலநிலை உடைய நகரம்.

## ஆரோவில் - அமைதியான, பசுமையான சூழ்நிலை, இயற்கை முறை உணவு,  சூரிய மின்சாரம் என்று எல்லாமே மனதைக் கவருகிறது.

## ஆரோவில் வளாகத்தில் உள்ள பெரிய ஆலமரத்தின் விழுதுகள், தனியே ஒரு மரம் போல உறுதியாக வியக்கவைக்கின்றன. (ஆனாலும் அடையாறு ஆலமரம்தான்..)

##  நகர் முழுவதும் வித விதமான மதுபானக் கடைகள் ... லிக்கர், விஸ்கி, பிராண்டி, ஒயின்.. இன்னும் என்னென்னவோ... இதுக்கெல்லாம் என்ன வித்தியாசம் என்று பெரியவன் கேட்டான். “ஏண்டா என்னைப் பாத்தா எப்படித் தெரியுது?” ன்னு கேட்டேன்.  இதுல ஒரு “லிக்கர் ஹோல்சேல் ஷாப்” வேற.. இதுக்குமா ஹோல்சேல்?!!

##   ”பொட்டானிக்கல் கார்டன்” என்று ஒரு பூங்கா இருக்குது. ரொம்ப ஆர்வத்தோட போனோம். உள்ளே போனால், ஓங்கி உயர்ந்த ஒரு அடர்ந்த காட்டுக்குள் போன ஃபீலிங். ஆனால் பராமரிப்பு என்பதும் இல்லை; மேற்பார்வையும் இல்லை என்பது அங்கங்கே வழியில் “கிடப்பவர்”களாலும், கும்பல்களாக இருந்தவர்களாலும் தெரிந்தது. போன சுருக்கில் வெளியே வந்துவிட்டோம். யாரும் போய்டாதீங்க!!

## ”ஸண்டே மார்க்கெட்” - பிளாட்பாரக் கடைகளில் பேரம்பேசி வாங்கும் அனுபவம் பல வருடங்களுக்குப் பின் கிடைத்தது. நிறையப் புத்தகக் கடைகளும் இருந்தன; ஆசையாப் போய்ப் பாத்தா, எல்லாமே மெகா சைஸ் பொறியியல், மருத்துவப் புத்தகங்கள். நம்ம ஏரியா இல்லை!!
 
 
 

Post Comment

ஆண்டுவிழாக்களும் நானும்




இன்னொரு தொடர்பதிவு. கொசுவத்தி சுத்துறதுன்னா அத விட சந்தோஷம் வேற எது? அந்த காலத்துலன்னு ஆரம்பிச்சு..  சரி..சரி..

பள்ளியில் ஆண்டுவிழாக் கொண்டாட்டம்னு சொன்னா, அது பெரும்பாலும் டான்ஸ்தான். அப்பவெல்லாம்  “ஜெயிக்கப் போவது யாரு”களோ, இல்லை அதற்காக உயிரை விட்டு உழைக்கிற பெற்றோர்களோ இல்லாத காலம்!! நடன நிகழ்ச்சிகள் வழங்குவதற்கென்றே குறிப்பிட்ட சில திறமையான மாணவியர் உண்டு. ஒவ்வொரு முறை விழாவின்போது ஆசிரியைகளிடம் அவர்களுக்கு கிடைக்கும் மதிப்பும், வகுப்புகளைக் கட் அடிக்க சிறப்பு அனுமதிகளும் என்று அவர்களைப் பார்க்கப் பொறாமையாக இருக்கும்.

குழுவாக ஆடும் நடனங்களில் வாய்ப்புகள் கிட்டவேண்டுமென்றாலும், கொஞ்சமாவது நிறமும், அழகும் இருக்க வேண்டும். அதனால் எனக்கு அதுவும் அமையவில்லை.  ஏன், நாடகங்களில்கூட வாய்ப்பு கிட்டவில்லை;  பேச்சு, ஓவியம், கட்டுரை, பாட்டுன்னு மற்ற போட்டிகளிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பும் அறவே இல்லை - சட்டியில இருந்தாத்தானே அகப்பையில்??!! ஆக ஆண்டுவிழா வாய்ப்பு ஒரு ஏக்கமாகவே இருந்தது.


இப்படியிருக்கையில நாலாம் வகுப்பில கிறிஸ்மஸை ஒட்டி நடந்த விழாவுல என்னையும் ஒரு குரூப் டான்ஸ்ல சேத்துகிட்டப்போ அளவில்லா மகிழ்ச்சி எனக்கு. “கிங்கிணி  கிங்கிணி என வரும் மாதா கோயில் மணியோசை” என்ற, சிவாஜி மாலைக்கண் நோய் உடையவரா நடித்த படத்தில் இடம்பெற்ற பாட்டுக்கு,(இது சினிமாப் பாடல்னு ரொம்ப வருஷங்கள் கழிச்சுதான் தெரியும் எனக்கு) அழகான  பிரைட் பேபி பிங்க் கலர்ல, ஸாட்டின் துணியில, அடுக்கடுக்கா ஃப்ரில் வச்ச ஃப்ராக்தான் டான்ஸ் காஸ்ட்யூம்!! அதுக்கு ரிகர்ஸல் நடந்துகிட்டிருந்தப்போ, ஒருநாள் என் டீச்சரை முந்திகிட்டு நான் ஏதோ ஐடியா சொல்லப்போக, டீச்சருக்கு என் மேல பயங்கர கடுப்பாகி, அந்த வருஷமுடிவு வரை அதைச் சொல்லியே திட்டிகிட்டு இருந்தாங்க.

இந்த அனுபவமும், உடைக்குரிய பணத்தை அம்மாகிட்ட வாங்கிறதுக்குள்ள பட்ட பாடும் என் டான்ஸ் ஆர்வத்தையே மூட்டை கட்ட வச்சுடுச்சு!!

அப்புறம், ஒரு நீண்ட இடைவேளைக்கப்புறம், பதினொன்றாம் வகுப்புல ஒருநாள் பி.டி.  டீச்சர் வகுப்புக்கு வந்து, சில மாணவிகளை அவங்களா எழுப்பி விட்டு, பேர்களைக் கேட்டு எழுதிட்டுப் போய்ட்டாங்க. என்ன ஏதுன்னு ஒண்ணு சொல்லல. மறுநாளும் அதே போல வந்து நான் உட்பட இன்னும் சிலரை எழுப்பிவிட்டு பேர்களை எழுதிகிட்டாங்க. அப்ப கிளாஸ் டீச்சர் அவங்ககிட்ட என்னன்னு விவரம் கேட்க, “இண்டிபெண்டண்ட்ஸ் டேக்கு வ.உ.சி. மைதானத்துல கலெக்டர் கொடியேத்தையில  நம்ம ஸ்கூல் சார்பா டான்ஸ்க்கு பிள்ளைங்க செலக்ட் பண்றோம். கொஞ்சம் கலரா உள்ள பிள்ளைங்களா மட்டும் பாத்து எடுத்தா பத்த மாட்டேங்குது; அதான் கொஞ்சம் சுமாரா இருந்தாலும் பரவால்லன்னு இன்னிக்கு இன்னும் கொஞ்ச பேர செலக்ட் பண்ணேன்”னு பி.டி.டீச்சர் சொன்னாங்க!!

நாங்க எல்லாருமே ரொம்ப அனுபவிச்சு செஞ்ச நிகழ்ச்சி அது!! உடைக்குன்னு பெருசா செலவு எதுவும் இல்லைங்கிறதும் ஒரு காரணம். கலர்ப் பேப்பர் வாங்கி, யூனிஃபார்ம் பாவாடை, சட்டையில் அடுக்கடுக்காக ஃபிரில் போல சுருக்கு வைத்து தைத்துக் கொண்டால் உடை ரெடி!! அலை போல எழுந்து அடங்கும் டான்ஸ் அது. டான்ஸ் ரிகர்ஸல், உடை தயாரிப்பு என்று வகுப்புகளைக் கட் அடிக்கவும் முடிந்ததால் மிகவும் மகிழ்ச்சியான காலம் அது.

நிகழ்ச்சி அன்று, எங்களை அழைத்துச் செல்ல இரண்டு பெண் காவலர்களுடன் வந்திருந்த அரசு வாகனத்தில் (ஹி.. ஹி.. போலீஸ் வேனேதான்!!)  ஏறப்போனபோது, ஒரு காவலர் என்னிடம், “ஏம்மா மேக்கப் போடல? கொஞ்சம் பவுடராவது தேச்சுருக்கலாம்ல?”னு அப்பத்தான் பவுடர் போட்டுட்டு வந்த என்னைப் பாத்து கேட்டாரே பார்க்கலாம்!!  பி.டி. டீச்சர் செஞ்சது தப்பேயில்லைன்னு தோணுச்சு.

அடுத்தது, பன்னிரெண்டாம் வகுப்பு ஆண்டுவிழாவில், தமிழாசிரியை எழுதிய தமிழ் வரலாற்று நாடகத்தில் நான்தான் மெயின் ரோல் - அரசர் வேஷம்!! வீராவேசமான வசனங்கள் வேற!! ராஜா உடைக்காக, நல்ல கிராண்டாகப் பட்டுச்சேலை வேண்டுமென  சொல்ல, நான் அம்மா, சித்திகளின் கல்யாணச்சேலையைக் கொண்டு வந்தால், எதுவுமே கிராண்டாக இல்லை என்று ரிஜெக்ட் செய்துவிட்டார்!! சேலை கிடைக்கலைன்னா, அரசர் பதவி போய்டுமேன்னு நான் கலங்க, அம்மா, வசதியான வீட்டிலிருந்து வந்த அவரது அண்ணியிடம் போய்க் கேட்கச் சொன்னார்; அத்தைக்கு மனசேயில்லை; என்றாலும் கேட்பது நாத்தனார் மகளாச்சே, முடியாதுன்னு சொல்லமுடியுமா? “நிறைய பின் குத்தாதே”ன்னு ஒரு நூறுதரம் சொல்லித் தந்தாங்க.

நிகழ்ச்சியன்னிக்கு, தேசமில்லா ராஜாவா நான் கம்பீரமான உடையலங்காரத்தோட எங்க முறையை எதிர்பார்த்து நிக்க, அவசரமா டீச்சர் வந்து சொன்னாங்க, “நேரமாகிடுச்சு, அதனால நம்ம நாடகம் கேன்ஸல்!!”. கைக்கெட்டினது...


அப்புறம், கல்லூரி இறுதியாண்டுல நாங்க பொறுப்பெடுத்து நடத்துன ஆண்டுவிழாவில், ஒரு நிகழ்ச்சியிலாவது பங்குபெறணும்னு தேர்ந்தெடுத்த நிகழ்ச்சி “விளம்பரம் செய்வது”. நாங்க நாலு தோழிகள் சேர்ந்து, கான்செப்ட் ரெடிபண்ணி, வசனமெல்லாம் எழுதி ரெடி பண்ணியாச்சு. இப்ப ஒரே ஒரு “ஹீரோ” வேணும்!! 24 பெண்கள் + 6 ஆண்கள் உள்ள எங்க வகுப்பில உள்ள ஆறு ஆண்கள்ல யாருமே முடியாதுன்னுட்டாங்க. அப்புறம், அடுத்த டிபார்ட்மெண்ட்ல உள்ள ஸ்மார்ட்டான ஒரு பையன் சரின்னு வந்தான். ஒத்திகையெல்லாம் பாத்துகிட்டிருக்கும்போது, ஒரு நாள், எங்க டீம்ல உள்ள ஒரு பெண்ணை, அவளின் அடர்ந்த நிறத்தையும் அழகையும் குறிப்பிட்டு அவன் டீஸ் பண்ண, கோவம் வந்து நாங்க மூணுபேரும் அவன்கிட்ட சண்டை போட, நிகழ்ச்சி கேள்விக்குறியானது. அப்புறம், சில “நல்ல நாட்டாமை”களின் உதவியோடு அவன் மீண்டும் எங்கள் டீமில் வந்து நடித்துத் தந்தான். அதுக்கு ரெண்டாவது பரிசும் வாங்கிட்டோம்!!

என்னவோ ஆண்டுவிழாக்கள் (கூட!!) எனக்குத் தகராறாவே ஆகிப்போச்சு. பசுமையான நினைவுகளை அசைபோட வச்ச அழைப்புக்கு நன்றி தீபா!!


  
 
  

Post Comment

சப்பாத்தி டேஸ் (Days)




 
 
பள்ளிக்கூடம் முடிந்து ஆட்டோவில் ஏறி, வீடு வரும்வரை எங்க ரெண்டு பேருக்கும், அதான், தங்கச்சின்னு ஒரு பிசாசு இருக்கே, ரயிஸாக்கும், எனக்கும் சண்டைதான். வீடு இருக்க தெருவுல நுழையும்போதுதான் அவ ஞாவப்படுத்தினா, “ரஸீனா, இன்னிக்கு ‘சப்பாத்தி டே’!!” அவ்வளவுதான், ரெண்டு பேரும் காத்துப் போன பலூன் மாதிரி புஸ்ஸுன்னு ஆகிட்டோம்.

வீட்டுக்குள்ள வந்து சைலண்டா எல்லா வேலைகளையும் கடகடன்னு ஒழுங்கா செஞ்சு முடிச்சுட்டு படிக்க உக்காந்தோம். உம்மாவும் எரிச்சலா இருக்கது அவங்க மூஞ்சியிலயே தெரிஞ்சுது. வாரத்துக்கு மூணு நாள் ஏன்தான் இந்த “சப்பாத்தி டே” வருதோ? எல்லாம் இந்த வாப்பாவால!!

வாப்பாதான் இப்ப கொஞ்ச நாளா டயட்டுல இருக்கதுனால, வாரத்துக்கு மூணு நாள் ராத்திரி டிஃபன் சப்பாத்திதான் வைக்கணும்னு ஆர்டர் போட்டுட்டாங்க. பிரியாணி, இடியாப்பம், வட்லாப்பம், பாயா, ஜாலரப்பம், பத்திரின்னு விதவிதமா செஞ்சு கலக்குற எங்கும்மாவுக்கு இந்த சப்பாத்தி மட்டும் ஏன் காலை வாருதோ தெரியல? சப்பாத்தி செய்யுற அந்த மூணு நாளும் உம்மாவும் பயங்கர டென்ஷனா இருப்பாங்க. அந்தச் சப்பாத்தியப் பாத்தா, வாப்பாவுக்கு அத விட டென்ஷன் ஏறும்!! அப்புறமென்ன, ரெண்டு பேருக்கும் லடாய்தான்.

அதுலயும்,  வாப்பா எங்க உம்மும்மாவை இழுத்து, “உங்கும்மா உன்னய வளர்த்த லச்சணம் அப்படி.  ஒரு சப்பாத்தி கூடச் சுடத் தெரியல”ன்னு  எதாவது சொல்லிட்டாப் போதும், அன்னிக்குப் பெரிய போர்தான். இதுக்கு நடுவுல, நாங்க ஏதாவது கேட்டாலோ, தொந்தரவு பண்ணாலோ, அவ்ளோதான், ரெண்டு பேரும் சேந்தே டின் கட்டிடுவாங்க. அதனால வாரத்துல இந்த மூணு நா மட்டும் நாங்க ரொம்ம்ம்ப்ப்ப நல்ல புள்ளைங்க!!

உம்மாவும் எவ்வளவோ முயற்சி பண்ணிப் பாத்துட்டாங்க. சமையல் புஸ்தகம், டிவில வர்ற  சமையல் நிகழ்ச்சிகள், ஏன் இண்டர்நெட்ல கூடத் தேடிப் பாத்து அதுலல்லாம் சொல்லிருக்க மாதிரி செஞ்சு பாத்துட்டாங்க; எதுவும் வேலைக்காவல.  அதுலயும் முக்கியமா வாப்பாவுக்கு சப்பாத்தில சொட்டுகூட எண்ணெய் இருக்கக்கூடாது. ஆனாக்க, உம்மாக்கு டிப்ஸ் சொன்ன ஃபிரண்ட்ஸ்,  அக்கம்பக்கத்து வூட்டுக்காரவுங்க எல்லாருமே, சப்பாத்தில ஒரு ஸ்பூனாவது எண்ணெய் தேச்சாத்தான் ஸாட்டா இருக்கும்னு சொல்றாங்க.

ஒருக்கா தஞ்சாவூர் மாமி வீட்டுக்கு வந்திருக்கும்போதும் இதே மாதிரி தகராறு நடக்க, மைனிங்கிற உதார்ல எப்பவும் எங்கும்மாவக் குறை சொல்லும் மாமியே “ ஏந்தம்பி, கொலஸ்ட்ரால், பிரஷர் குறையணும்னுதானே சப்பாத்தி சாப்புடுற? இப்பிடி கோவப்பட்டுகிட்டே சாப்பிட்டா எங்கிட்டிருந்து பிரஷர் குறையும்? கூடத்தான் செய்யும்! அப்புறம் சப்பாத்தி என்னத்துக்கு? பேசாம ரெண்டு புரோட்டாவே தின்னுட்டுப் போலாமே”ன்னு அட்வைஸ் பண்ணிட்டாங்க.

அதுலருந்து, விஷயம் தெரிஞ்சு, இப்பம்லாம் ஊருல இருந்து யாராவது இங்க திருச்சிக்கு வந்தாலோ, அல்லது உறவுமுறைகள்ல கல்யாண வீடுகளுக்குப் போனாலோ, எல்லாரும் உம்மாகிட்ட முதல்ல கேக்குறது “இப்ப சப்பாத்தி ஒழுங்கா வருதா?”ன்னுதான். இது பிரச்னையை இன்னும் பெரிசாக்குச்சு.

அடுத்த வீட்டு கோதை ஆச்சி, எதிர் வீட்டு சாந்தி ஆண்டியெல்லாம் நல்லாத்தான் சப்பாத்தி செய்வாங்க. ”அவங்க வீட்டுல போய் கூட நின்னு செய்யும்போது நல்லாத்தான் வருது; ஆனா தனியா செய்யும்போது இழவு வந்து தொலையமாட்டேங்குது”ன்னு உம்மா புலம்புவாங்க.  உம்மா இப்படி சொல்லிச் சொல்லி, இப்ப கோதை ஆச்சிக்கு சப்பாத்தி ஒழுங்கா வரமாட்டேங்குதாம், அவங்க “நீங்கதான் கண்ணு வச்சிட்டீங்க” ஒருக்கா கோவமாச் சொல்லிட்டாங்க. சாந்தி ஆண்டியும் இப்ப பயந்து, சப்பாத்தி ஹெல்புக்கு வர்றதில்ல. இங்கன சுத்து வட்டாரத்துல இருக்கக் கடைகள்லயும் புரோட்டாதான் கிடைக்குமே தவிர, சப்பாத்தி கிடைக்காது. இல்லன்னா கடையிலயாவது வாங்கிக் கொடுத்து கடமையக் கழிக்கலாம்.

ஒரு நா, வாப்பா தன்னோட வேல பாக்குற அலிபாய் மறுநாள் தன்னை குடும்பத்தோட விருந்துக்கு அழைச்சிருக்கதாச் சொன்னாங்க. மறுநா சப்பாத்தி டே ஆச்சே?ன்னு யோசிக்கும்போதே, வாப்பா அவர்கிட்ட சப்பாத்திதான் செய்யச் சொல்லிருக்கதாச் சொன்னாங்க. இந்த அலிபாய் அங்கிள் ஆஃபிஸுக்கு அடிக்கடி சப்பாத்திதான் கொண்டு வருவார்னு வாப்பா சொல்லக் கேட்டிருக்கோம். “அவர் வீட்டம்மா, காலையில செஞ்சு கொடுக்கிற சப்பாத்தி, மத்தியானம்கூட பஞ்சுபோல இருக்குங்கிறது அவர் அதைப் பிச்சு சாப்பிடும்போதே தெரியும். நீயும் சுடுறியே, கிச்சன்லருந்து பிளேட்டுல வந்து போடுறதுக்குள்ள மொடமொடன்னு ஆவுது”ன்னு எத்தினி தரம் சொல்லிருக்காங்க, மறக்குமா? “இப்பமாவது அவர் வீட்டம்மாகிட்ட எப்படி சப்பாத்தி செய்றாங்கன்னு கேட்டு வச்சுக்கோ. என்னத்த கேட்டு...”ன்னு முணுமுணுத்துட்டுப் போணாங்க.

அந்த இனிய மாலையும் வந்துது. நாலு பேரும் போனோம்.  வாப்பா சொன்னது கரெக்ட்தான், என்னா ஸாஃப்டா பஞ்சு போல இருக்குது சப்பாத்தியெல்லாம்!! வாப்பாவுக்கு தோதா ஒரு சொட்டு கூட எண்ணெய்  இல்லை சப்பாத்தி மேல!! வாப்பா, உம்மாவை முறைச்சுகிட்டே இருந்தாங்க. உம்மாவும் கடுப்பில ஒரு சப்பாத்தி மட்டும்தான் சாப்பிட்டாங்க. வாப்பா உம்மாகிட்ட “கேளு.. கேளு”ன்னு கிசு கிசுன்னு சொல்லிட்டே இருந்தாங்க. உம்மா கேக்கவேயில்ல.  வாப்பாவே அலிபாய் அங்கிள்ட்ட, “சப்பாத்தி எப்படிப்பா இவ்ளோ ஸாஃப்டா இருக்குது?”ன்னு மெதுவா கேக்க, அவர் பெருமையா “பௌசியாம்மா! சார் கேக்குறாகள்ல, மேடத்துகிட்ட சொல்லு”ன்னு சொன்னார்.

அவுங்க உடனே, “சப்பாத்தி என்ன பெரிய விசியமா? மாவைக் குழைக்கதுலத்தான் இருக்கு. கொஞ்சம் தண்ணியும், பாலும் எடுத்துகிட்டு, காலிட்டர் எண்ணெயாவது ஊத்தி குழைக்கணும்”னு சொல்லிகிட்டே போக,  நாங்க வாய மூடிகிட்டுச் சிரிக்க,  உம்மாவுக்கு டக்குன்னு புரையேறிடுச்சு. வாப்பா அதுக்கப்புறம்  சப்பாத்தி டேஸ்ல ஒண்ணும் பேசுறதில்லை.
 
 
 

Post Comment

லொக்.. லொக்.. வந்துட்டோம்ல.. லொக்.. லொக்..




 
 

தலைப்பைப் பாத்தே புரிஞ்சிருப்பீங்க என் நிலைமையை!! இப்ப நல்லா (பதிவு எழுதுற அளவுக்குத்) தேறிட்டேன்.  பசங்களுக்குப் பெரிசா உடல்நலம் பாதிக்காதவரை சந்தோஷம்!!

சின்னவனுக்கு 2 முறை  காய்ச்சல் வந்து, டான்ஸில்ஸ் ஆபரேஷன் பண்ணியே ஆகணும்னு இங்க சொன்ன மாதிரியே அங்கயும் மருத்துவர்கள் சொல்லிட்டாங்க. ஆனாலும், மாற்று மருத்துவ முறை முயற்சி செய்து பாக்கலாம்னு, ஆயுர்வேத சிகிச்சை எடுத்துகிட்டிருக்கோம்.  ஏற்கனவே பயனடைஞ்சவங்க இருந்தீங்கன்னா சொல்லுங்க. கூடுதல் நம்பிக்கை வரும்.

இந்த முறை ஓடோமாஸ் புண்ணியத்துல கொசுக்கடியிலருந்தும் நல்லா தப்பிச்சுகிட்டோம், . டிப்ஸ் தந்து காப்பாத்துனது என் வாப்பா. பின்ன, வீட்டுக்குள்ள குட் நைட், ஆல் அவுட்னு வச்சு கதவடைச்சுகிட்டு தப்பிச்சுக்கலாம். வெளியே போகும்போது, முக்கியமா ரெயில்வே ஸ்டேஷன்லயும், ரயில்லயும் என்ன செய்ய முடியும்? ஓடொமாஸே துணை!!

இந்தியா போக முன்னாடி, சீக்கிரம் இந்தியாவில செட்டில் ஆகிறதுக்குண்டான வழிகளைப் பாக்கணும்னு நினைச்சிகிட்டுப் போனேன். இப்போ, இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமேன்னு தோணுது. வேறென்ன, வழக்கம்போல சுத்தம், சுகாதாரம்தான். அப்ப இங்க இருக்க நாங்கள்லாம் மனுசங்க இல்லையான்னு கேக்கக்கூடாது. என்கிட்ட பதிலில்ல. ஏன்னா, இருவத்தஞ்சு வருஷம் அங்கதான் நானும் இருந்தேன்.

இன்னொரு காரணம், விலைவாசி!!  சென்னை அடையாறில தோழி வாங்கின நடுத்தரமான 3 அறை அடுக்குமாடி வீடு ஒண்ணேகால் கோடி ஆச்சாம்!! மூச்சு நின்னுடுச்சு ஒரு செகண்ட்!! ”புறநகர்ல கொஞ்சம் சீப்பா கிடைக்கும்; ஆனா, கணவர் ஐரோப்பாவில் இருப்பதால், பாதுகாப்பு கருதி இங்க வாங்கினேன்”னு சொல்றா.

இன்னொரு ஷாக், பள்ளி கட்டணங்கள் மற்றும் கடுமையான பாடவேளைகள். நாகர்கோவிலில் ஒரு குறிப்பிட்ட பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் சேர (நன்கொடை உட்பட) ஒரு வருடக் கட்டணம் ரூ. 80,000!! இதை நான் அதிர்ச்சியோடு ஒருவரிடம் சொல்ல, அவரின் உறவினரோ தனது மகளைச் சென்னையில் மிகப் பிரபலமான பள்ளியில் எல்.கே.ஜி. சேர்க்க நன்கொடை (மட்டும்) ஒரு லட்சம் கொடுத்தாராம்!! நான் மயங்கி விழாத குறைதான்!!

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் முழுவதும் வகுப்பு நடந்துள்ளது. அப்பத்தானே சீக்கிரம் நவம்பரிலேயே பத்தாம் வகுப்பு பாடங்களைத் தொடங்க முடியும்!!

பதினொன்றாம் வகுப்பில் பாட நேரம் எப்படி தெரியுமா? காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை!! நெசமாத்தாங்க!! 6-8 am & 5-7 pm 12ம் வகுப்பு பாடங்களும், 9-4 ல் 11ம் வகுப்பு பாடங்களும் நடத்தப்படுமாம். கேட்டுக் கொண்டிருந்த எனக்கே மூளை குழம்பியது. படிக்கும் பிள்ளைகள் என்னாவார்களோ!!

என் பையனை இப்படிக் கொடுமைக்கு ஆளாக்கணுமானு தோணுது!! ஆனா, ’பொறுப்பான பெற்றோரா’ அப்படிப் படிக்க வைக்கலியேன்னு குற்ற உணர்வும் வருது!!

பல பள்ளிகளில், இம்மாதிரிக் கொடுமையெல்லாம் இல்லை. ஆனால், அம்மாணவர்கள் பிரைவேட்டாக டியூஷன் போவதால் அவர்களுக்கும் இந்நேர முறைதான்!! டியூஷன் ஃபீஸ் இப்பவெல்லாம் வருஷ முழுமைக்கும் முதல்லயே கட்டிடணுமாம்!! 9-ம் வகுப்பிலேயே டியூஷன் சேர்ந்து, 10-ம் வகுப்புக்கான முழு கட்டணத்தையும் கட்டினால், ரூ. 2000 தள்ளுபடி உண்டு!!

அரைமணிநேர தொலைவில் உள்ள கல்லூரியின் பேருந்து கட்டணம் ரூ. 3000/; ஐந்து பேர் மட்டும் பள்ளி செல்லும் ஆட்டோவுக்குக் கட்டணம் ரூ. 1000/. ஒரு மாசத்துக்கு மட்டும்ங்க!!

இப்படி பலப்பல ஷாக்குகளைக் கண்டு, கேட்டு வந்ததினாலத்தான் ஜுரம் வந்துடுச்சோ என்னவோ!!

  
 
 

Post Comment

விடைபெறுகிறேன் - 1




 
 
ஹி.. ஹி.. என்னடா, காணாமப் போய் ஒரு மாசம் கழிச்சு ஆற அமர வந்து விடை பெறுகிறேனேன்னு பாக்குறீங்களா? என்ன செய்ய, எவ்வளவு ப்ளான் பண்ணாலும், ஊருக்குப் போற சமயத்துல ஹரிபெரியாகி செய்ய நினைச்சு விட்டுப் போன பல விஷயங்கள்ல இந்த விடைபெறுகிறேன் பதிவும் ஒண்ணு.

வரும்போது சொல்ல விட்டுப்போனா என்ன, போகும்போது மறக்காம சொல்லிட்டுக் கிளம்பிடுவோம்ல!!  என் இனிய தமிழகமே!  என்னுயிர் தமிழ் மக்களே!! உங்களிடமிருந்து தற்போது விடை பெறுகிறேன்!! கூடிய சீக்கிரமே மீண்டும் சந்திப்போம்!! அதுவரை, என் பதிவுகளில் என்னைக் கண்டு ஆறுதல் கொள் தமிழினமே!!

அதென்னா தொடர்கதை மாதிரி 1,2ன்னு நம்பர்னு கேக்குறீங்களா? இது இப்ப ஊருக்கு வந்துட்டுப் போறதுனால விடை பெறுகிற பதிவு. அப்புறம், ஒருவேளை என்னை யாராவது ஏதாவது சொல்லி திட்டிட்டாங்கன்னா, கோவப்பட்டு இன்னொரு விடைபெறுகிறேன் பதிவு போடவேண்டி வரலாம்!! அப்புறம், என்னை வேற யாராவது `உங்கள் சேவை பதிவுலகுக்குத் தேவை`ன்னு கெஞ்சினதும்(!!)  திரும்பி வந்துடுவேன்; அப்புறம்,  அடுத்து ஊருக்குப் போகும்போது, வரும்போது விடைபெறும் பதிவு போடணும். இப்படி நிறைய தேவை இருப்பதால, இப்பவே முன்னெச்சரிக்கையா நம்பர் போட்டுட்டேன்!!

அப்புறம், இந்த ஒரு மாசமா கிட்டத்தட்ட பதிவுலக வனவாசம் இருப்பதனால, இங்க என்ன நடந்தது, நடக்குதுன்னே தெரியாது!! ஏன், என் வீட்டுக்கு வெளியே என்ன நடக்குதுன்னுகூடத் தெரியாத அளவுக்கு பிஸியா இருக்கேன்!! அதனால, யாராவது அப்டேட்ஸ் தாங்க.  தொடர்பதிவுகூட நடக்குதுபோல!!

அப்புறம், பதிவரா இருந்துகிட்டு, பயண அனுபவங்கள் எழுதலன்னா எப்படி? அதுவும், புதுச்சேரி, சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, குற்றாலம்னு ஒரு பத்து பதிவு போடற அளவுக்கு சூறாவளி சுற்றுப்பயணமேல்ல போயிருக்கேன்!! அதனால, கண்டிப்பாப் பயணத் தொடர் உண்டு, கவலைப் படாதீங்க!! (கவலைப்பட்டாலும் பிரயோஜனமில்லை!!)

அமீரகமே...  இதோ வருகிறேன்!! என்னைக் காணாமல் அனலாய்த் தவிக்கிறாயாமே? வந்தவுடன் குளிர்ந்துவிடு!! (அங்க அடிக்கிற வெயில்... கேட்டாலே பயமாருக்கு!! இப்படி ஐஸ் வச்சாலாவது, குறையுதா பாக்கலாம்!! ஹும்... )
 
இவ்வளவு தூரம் வந்துட்டு, பதிவுலக நண்பர்கள் யாரையும் சந்திக்க முடியலை, ஏன் நான்கைந்து பேரைத் தவிர யாரிடமும் தொலைபேசக்கூட முடியவில்லை என்பது வருத்தமாகத்தான் இருக்குது. இருந்தாலும், பதிவுகளில் நாம் எப்போது சந்தித்துக் கொண்டுதானே இருக்கிறோம் என்று திருப்திபட்டுக் கொண்டேன். (வேறுவழி?) ஆனால், ஒருமுறையும் இல்லாதபடி, இம்முறை என் கல்லூரி நண்பர்கள் சிலரைச் சந்தித்தது எனக்குப் பெரிய மனநிறைவைத் தந்தது.  சில உறவினர்களை ஆற, அமர சந்திக்கவும் முடிந்தது, இறைவன் அருளால்.

சனிக்கிழமை அமீரகம் வந்து, செட்டிலானதும் அடுத்த பதிவு, இன்ஷா அல்லாஹ்!!

 
 

Post Comment