Pages

டிரங்குப்பெட்டி - 25




நோன்பு ஆரம்பமாகிவிட்டது. இங்கு அமீரகத்தில் வெயில்னா வெயில், இதுவரை ”வரலாறு காணாத” வெயில். வீட்டில், ஆஃபிஸில் ஏஸியில் இருப்பவர்களுக்குப் பரவாயில்லை. வெளியே வேலை செய்பவர்களுக்குத்தான் சிரமம்.

இவ்வளவு வெயிலில் நோன்பு ஏன் என்ற கேள்வி வரும். இஸ்லாமிய வருடம் என்பது சந்திரனை அடிப்படையாகக் கொண்டது என்பதால், காலநிலை ஒவ்வொரு மாதத்திற்கும் வருடாவருடம் வேறுபடும். அதாவது சூரியனை அடிப்படையாக கொண்ட ஆங்கில வருடத்தில் டிஸம்பர் என்றால் எல்லா வருடமும் (இந்தியா, வளைகுடா நாடுகளில்) குளிர்தான். ஆனால், சந்திர வருடத்தில் அப்படியல்ல.  சுழற்சி முறையில் எல்லா மாதங்களுமே வெயில், பனி, குளிர்  என்று எல்லா காலநிலைகளிலும் வரும். உதாரணமாக 1994-ல் ரமலான் மாதம் ஃபிப்ரவரியில் வந்தது. அடுத்தடுத்த வருடங்களில், அது அப்படியே ஜனவரி, டிஸம்பர் என்று பின்னோக்கி முன்னேறி இந்த வருடம் ஜூலையில். இனி 2027-ல் மறுபடியும் ஃபிப்ரவரிக்கு  வரும். அதாவது சராசரியாக 33 வருடங்கள் தொடர்ந்து நோன்பு வைக்கும் ஒருவர், கடுங்குளிரிலும் நோன்பு வைத்திருப்பார்; சுடும் வெயிலிலும் நோற்றிருப்பார்!!
-=-=-=-=-=-=-=-=-=-=-


17-ஜூலை-2012 தேதியிட்ட அவள் விகடனில் நெட்-டாக்ஸ் பகுதியில் ”வலைப்பூவரசி” யாக என் வலைப்பூ வந்தது இன்ப அதிர்ச்சி எனக்கு!! நண்பர்கள் பலரும் மெயிலிலும், பதிவிலும் வாழ்த்தியிருந்தார்கள். அனைவருக்கும் நன்றி. எனக்கும் இதைச் சாத்தியப்படுத்தித் தந்த இறைவனுக்கே புகழனைத்தும்!!

-=-=-=-=-=-=-=-=-=-=-

www.khaleejtimes.com
நடிகர் விவேக் ஒரு படத்தில் கையில், ஊதிய பலூன்களை உடம்பில் அங்கங்கு மறைத்துவைத்துக் கொண்டு “muscles” என்று ஊரை ஏமாற்றுவார். அதுபோல, “இண்ஸ்டண்ட் மஸில்ஸ்”  கிடைக்க ஒரு இலகு வழி இருக்கிறதாம். Macrolane என்ற ஒருவகை ஜெல்லை தேவையான இடங்களில் இஞ்ஜெக்‌ஷன் போட்டால் போதுமாம், ஒரு வருஷத்துக்கு 6-பேக், 8-பேக் வச்சு போஸ் கொடுக்கலாம்.  விலையும் ரொம்ப சீப்தான், ஒரு கோர்ஸ் ஒன்றரை லட்சத்திலிருந்து ஆரம்பிக்குது. இது இன்னும் நம்மூருக்கு வரலையோ?

-=-=-=-=-=-=-=-=-=-=-

புகைப்படக் கலை தொடங்கிய காலத்திய இந்தியாவைப் புகைப்படங்களில் பார்க்க ஆச்சர்யமாக இருக்கும். அவ்வப்போது எங்கேனும் ஓரிரண்டு  புகைப்படங்கள் காணக்கிடைக்கும். இப்போது இதற்கென்றே ஒரு தளம் பார்த்தேன், “http://www.indianmemoryproject.com”.  வாசகர்கள் தம்மிடம் இருக்கும் அரிய புகைப்படங்களை மட்டுமல்லாது, அதையொட்டிய சம்பவங்களையும் இதில் பகிர்வதுதான் இதன் சிறப்பு. அந்தக் கால அனுபவங்களை வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.

-=-=-=-=-=-=-=-=-=-=-

சுவத்துக்குப் பெயிண்ட் அடிப்பாங்க; கல்லுக்குப் பெயிண்ட் அடிப்பாங்க; புல்லுக்குமா பெயிண்ட்??!!

இன்றைய க்ளோபல் வார்மிங் காலத்தில், ஆனானப்பட்ட அமெரிக்காவையும் வறட்சி விட்டுவைக்கவில்லை. அமெரிக்காவின் கோடைக்காலமான தற்போது, பெரும்பகுதி வரண்டுபோய், நல்ல நீர்வளம் உள்ள இடங்கள்கூட இப்போது தண்ணீரில்லாமல் காய்ந்து கிடக்கிறதாம். அமெரிக்காவின் அநேக அலுவலக வளாகம்,  வீடுகளிலும் உள்ள புல்வெளிகள் பாதிக்கப்பட்டு,   தண்ணீரின்றி காய்ந்து கிடக்கின்றன. அதனால் “aesthetic view" பாதிக்கப்படுவதாலும், புல்வெளியைக் கவனிக்காமல் விட்டால் அரசு அபராதம் விதிக்கும் என்பதாலும், அதன்மீது ஒருவித ஆர்கானிக் பச்சைநிற பெயிண்ட் அடித்துப் ‘பச்சைபசேலென்று’ காட்டுகிறார்கள்.

-=-=-=-=-=-=-=-=-=-=-

Before
Now

பெண்களின்மீதான ஆஸிட் அட்டாக்குகளில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு இந்தியாவும் சளைத்ததல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக இன்னுமொரு சம்பவம். சம்பவம் நடந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது; ஆனால் குற்றவாளிகள் பெயில் பெற்று சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட ஜார்கண்டைச் சேர்ந்த சோனாலி முகர்ஜி  இன்னும் தவித்துக் கொண்டிருப்பதால், தனக்கு அரசு உரிய சிகிச்சைக்கு ஆவண செய்யவேண்டும் அல்லது கருணைக்கொலை செய்துவிடுங்கள் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.

1999 முதல் 2010 வரை 150 பேர் (ஆவணப்படுத்தாதது எத்தனையோ) வரை பாதிக்கப்பட்டுள்ள, இந்த ஆஸிட் வீச்சு சம்பவங்கள் தொடர ஒரு முக்கியக் காரணம், இக்குற்றம் சட்டரீதியாக இன்னும் ’படுகாயம் விளைவிப்பது’ (grevious hurt) என்ற சாதாரண நிலைக்குற்றமாகக் கருதப்படுவதே. சமூக ஆர்வலர்களின் முயற்சியால், இதை  தண்டனைக்குரிய பெருங்குற்றமாக வகைப்படுத்த,  தற்போது மந்திரிசபை நடவடிக்கை எடுத்துவருகிறது.  மேலும், சந்தையில் கறிகாய் வாங்குவதைப்போல, ஐம்பது ரூபாய்க்கு ஆஸிடும் வாங்க முடிகின்ற நிலையும் மாறவேண்டும்.

-=-=-=-=-=-=-=-=-=-=-

Post Comment

போன்ஸாய் குழந்தைகள்





இன்று உலகில் பல சிறுவர்கள் ‘சிறுமுது அறிவர்’ அதாவது Child Prodigy என்று போற்றப்படுகின்றனர். இரண்டு வார்த்தைகளுமே புரியாத புதிராகத் தோன்றும். புரியும்படிச் சொல்ல வேண்டுமென்றால், “குழந்தை மேதை” என்று சொல்லலாம். இவர்களை, “சிறிய வயதிலேயே பெரியவர்களுக்குண்டான அறிவும் திறமையும் கைவரப்பெற்றோர்” என்று விக்கிபீடியா வரையறுக்கிறது.   அதிகப் பயிற்சி தேவைப்படும் துறையில் மிகத்தேர்ந்த பெரியவரின் திறமையைத் தன் செயலில் காட்டும் சிறுவர்களே சிறுமுது அறிவர்” என்பது இன்னொரு வரையறை. இதில் சிறுவர்கள் என்பதற்கான அதிகபட்ச வயது எல்லை எதுவென்பது இன்னும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.

12 வயதுச் சிறுமி அமெரிக்க அல்லது இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்தாள்; 10 வயதுச் சிறுவன் பி.ஹெச்டி முடித்தான்; 8 வயதிலேயே மைக்ரோஸாஃப்ட் தேர்வுகள் எழுதி பட்டயம் பெற்றார் என்றெல்லாம் செய்திகளில் வருவார்களே இவர்கள்தான் இந்தக் குழந்தை மேதைகள்!

ஆனால், கூர்ந்து கவனித்திருந்தீர்களானால், ஒரு விஷயம் புலப்பட்டிருக்கும். செய்திகளில் பரபரப்பாகப் பேசப்படும் இந்தக் குழந்தை மேதைகளில் அநேகர்களும், பெரியவர்களானதும் இதுபோல பேசப்படும்படியான திறமையான செயல்கள் எதுவும் செய்திருப்பதாக அறியப்பட்டிருக்க மாட்டார்கள். அந்த வயதில், ஒரு சராசரி மனிதருக்குரிய இயல்பான வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அதாவது, “Child prodigy”க்கள் எல்லாருமே பிற்காலத்தில் ஜீனியஸ்களாக ஆவதில்லை.

சிறு வயதில், தன் வயதுக்கு மீறிய திறமையுடன் செயல்பட்டதாகச் சொல்லப்படும் இவர்கள், அதே ஆர்வம் மேலும் தொடர்ந்திருந்தால், பெரியவர்களானதும், எவ்வளவு பெரிய புகழ்பெற்ற திறமைசாலிகளாக வந்திருக்க வேண்டும்? புகழ் பெறவில்லையென்றாலும், தன் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாவது கண்டிருக்க வேண்டுமே! சிறு வயதிலேயே சாதனைகள் செய்ய முடிந்த இவர்களால், பெரியவர்களானதும் அதே போல சாதனைகள் புரிவதற்கு என்ன தடை?

இங்கேதான் இந்த “மேதை”களின் ”மேடைக்குப் பின் நடக்கும்” (behind the screen) நிகழ்வுகளின் சூட்சுமங்கள் இருக்கின்றன.

பிறந்த குழந்தைகள் பொதுவாக 4 மாதத்தில் குப்புற விழும், 6 மாதத்தில் தவழும், 9 மாதத்தில் நிற்கும், 12 மாதத்தில் நடக்கத் தொடங்கும். அரிதாகச் சில குழந்தைகள் இதற்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ இச்செயல்களைச் செய்யும். அப்படி ஒரு குழந்தை, 9 மாதத்திலேயே நடக்க ஆரம்பித்துவிட்டால், பெற்றவர்களுக்குப் பெருமையாகவே இருக்கும். ஆனால், 9 மாதத்தில் நடக்க ஆரம்பித்து விட்டது என்பதற்காக, 2 வயதிலேயே அக்குழந்தை மாரத்தான் ஓட வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்த்தால்?? 

இதுதான் பெரும்பான்மையான “Child prodigy”க்கள் விஷயத்தில் நடக்கிறது.
சிறுவர்களுக்கு இயல்பாகவே புதிய விஷயங்களில் பெரும் ஆர்வம் இருக்கும். அதைச் சரியான முறையில் ஊக்குவித்தால், அவர்களின் திறமை அதில் பெருகும். ஒருசில குழந்தைகள் அந்த ஆர்வத்தைத் தக்கவைத்து, ஊக்குவிப்பைச் சரியான முறையில் கைகொண்டு, தம் வயதுக்கு மீறிய வகையில் சில சிறு சாதனைகள் புரிகின்றனர்.

இதன்பின்னர்தான் அப்பெற்றோருக்கு, தம் குழந்தை எல்லாவற்றிலும் முதலாவதாக வரவேண்டும் என்ற ஆவல் எழுந்து, அக்குழந்தையை தன் சக்திக்குமீறி உந்திச் செயல்படத் தூண்டத் தொடங்குகின்றனர். அக்குழந்தைக்கு முதலில் தானாக ஆர்வம் ஏற்பட்ட ஒரு விஷயம், வேறொருவரால் வலியத் திணிக்கப்படும்போது, அந்த ஆர்வம் வடிந்து, வேண்டாவெறுப்பாக அதில் ஈடுபடுகின்றனர். பின் ஒரு காலத்தில் முழுமையாக அதில் இருந்து விடுபட்டு விடுகின்றனர்.
இக்குழந்தைகளின் நிலையை போன்ஸாய் மரங்களுடன் ஒப்பிடலாம். ஓங்கி உயர்ந்த மரங்களாக வளர்ந்திருக்க வேண்டியவற்றை, அழகுக்காக, பெருமைக்காக, சிலசமயம் பணத்துக்காகவும், அதன் இயல்பான வளர்ச்சியைக் கத்தரித்து, கத்தரித்து, குறுக்கி, ஒரு தொட்டிச்செடியைவிடச் சிறிதான குறுமரமாக – போன்ஸாயாக ஆக்கிவிடுவர். அதேபோல, இக்குழந்தைகளின் வயதுக்கேயுரிய இயற்கையான ஆர்வங்கள் கத்தரிக்கப்பட்டு, சிறுவயதிலேயே சாதனைகளைச் செய்யத் தூண்டப்படுவதால், முறையான வளர்ச்சி பாதிக்கப்பட்டு போன்ஸாயைப் போல மனசுக்குள் குறுகிவிடுகின்றனர்.

பொதுவாகவே, தற்காலங்களில் “குழந்தை மேதைகள்” என்று புகழப்படுபவர்கள் ஈடுபடும் துறைகள் எவையெவை என்று பார்த்தால், அவை கணிதம், இசை, செஸ், கணினி போன்ற நினைவுத் திறன் அதிகம் தேவைப்படக்கூடிய, “விதிமுறை-சார்ந்த” (rule based) துறைகளே அதிகமாக இருக்கும். அதாவது, ஞாபக சக்தியைத் தகுந்த முறையில் பயன்படுத்தி வெற்றி பெறக்கூடிய துறைகளில்தான் சிறுமுது அறிவர்கள் தற்போது அதிகம் காணப்படுகின்றனர். தனித்திறமை தேவைப்படும் இலக்கியம், அறிவியல், மருத்துவம் போன்ற துறைகளில் குழந்தை மேதைகள் மிக அரிதாகவே இரு(ந்திரு)க்கின்றனர்.

இவர்களில் சிலர், பிற்காலத்தில் தாம் சார்ந்த துறையில் கற்றுத் தேர்ந்து, பெரிய நிறுவனங்களில் பெரும் பொறுப்புகளிலும், பதவிகளிலும் அமர்ந்தாலும், தன் அறிவுத் திறமையைக் கொண்டு புதிய ஆய்வுகளோ, கண்டுபிடிப்புகளோ செய்வதில்லை.

சில குழந்தை மேதைகளோ, வளர வளர ஆர்வமிழந்து, வேறு பாதைகளில் திரும்பிவிடுகின்றனர். இதற்குக் காரணம், அவர்களின் இயல்பான ஆர்வம் ஆரம்பத்தில் கொண்டுவந்த புகழ் வெளிச்சத்தின் மகிழ்ச்சியில் திளைத்த அவர்களின் பெற்றோர்கள் அவர்களை “இன்னும், இன்னும்” என்று கட்டாயப்படுத்த முயன்றது ஒரு கட்டத்தில் எதிர்வினை புரிந்திருக்கலாம். 
அல்லது, அறிவில் சிறந்திருந்தாலும், உள்ளத்தில் அவர்கள் சராசரி சிறுவர்களாகவே இருப்பதால், நண்பர்களைத் தேடும்போது, இவர்களின் அபரிமித அறிவைக் கண்டு பயந்து இவர்களைச் சக வயதினர் ஒதுக்கவோ, பொறாமையால் வெறுக்கவோ செய்யும்போது மனபலம் இழந்து, அதற்குக் காரணமான தன் அறிவை வெறுக்கின்றனர்.

இது கல்வி போன்ற விஷயங்களில் மட்டுமல்ல, இன்று பல தொலைக்காட்சிகளில் நடக்கும் ஜூனியர் சிங்கர்/டான்ஸர், இன்னபிற போட்டிகளுக்கும் பொருந்தும். எத்தனை ஷோக்களில், குழந்தைகள் பாடும்போது, அக்குழந்தையின் பெற்றோர் நகம்கடித்து டென்ஷனுடன் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறோம்? இப்போதெல்லாம், டிவி ஷோக்களில் பங்குபெறும் குழந்தைகளைப் பார்க்கும்போது, ஆச்சர்யத்தைவிட பரிதாபம்தானே மேலோங்கிறது. ஏன்? இந்த போட்டியில் பங்குபெற இந்தக்குழந்தை தன் வயதுக்குரிய இனிமையான அனுபவங்களில் எதனையெல்லாம் இழந்திருப்பாள்/ன், எவ்வளவு தியாகம் செய்ய வேண்டியிருந்திருக்கும் என்ற எண்ணங்கள் மேலோங்குவதால்தானே?

ஒரு சிறுவன், ஒரு குறிப்பிட்ட விளையாட்டில் திறமை கொண்டிருந்தான் என்றால், அதற்கான போட்டிகளில் அவன் தன் வயதுக்குரிய பிரிவுகளில் மட்டுமே பங்குபெற முடியும். 10 வயதுச் சிறுவன் 20 வயதானவர்களுக்கான போட்டியில் பங்குபெற முடியாது. ஏன்? உடல்ரீதியாகத் தனக்குச் சமமாக உள்ளோருடன் மட்டுமே அவன் போட்டியிட்டு தன் திறமையை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகத்தானே?

அவ்வளவு ஏன், பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க ஒரு குறிப்பிட்ட வயதை நிர்ணயித்திருப்பது, பாடங்களைக் கிரகிக்கவும், எழுதவும் உடல் வளர்ச்சியோடு மனவளர்ச்சியும் சரியான அளவுகளில் இருக்கவேண்டியது அத்தியாவசியம் என்பதால்தான். எனில், பெரியவர்களுக்கான பாடங்களை, தேர்வுகளை இளவயதிலேயே இந்தக் குழந்தை மேதைகள் எதிர்கொள்கிறார்கள் என்றால், அவர்கள் மனரீதியாக அதற்கென எதிர்கொள்ளும் சவால்களும் மிக அதிகமாகத்தான் இருக்கும். 

அக்குழந்தைகளைப் பக்குவமாக வழிநடத்துவது பெற்றோரின் கையில்தான் உள்ளது. அவர்களது அறிவுத் திறனையும் வளர்த்து, அதே சமயம் அவர்களது பருவத்துக்கேயான விளையாட்டு, நட்பு மற்றும் பொழுதுபோக்குகளிலும் ஈடுபட அவர்களைத் தடை செய்யாமல் இருந்தால் ஒரு நல்ல அறிஞரை இழக்காதிருக்கலாம். கணித மேதை இராமானுஜம், பீத்தோவன், ப்ளெய்ஸ் பாஸ்கல், சகுந்தலா தேவி, உஸ்தாத் ஜாகிர் ஹுஸேன் ஆகியோர் குழந்தை மேதைகளும்கூட.

அவ்வாறல்லாது, வெறும் புகழ்போதையால் மட்டுமே உந்தப்பட்டோ, அல்லது தம் கனவுகளைத் தம் பிள்ளைகளின் மேல் திணிக்க முயன்றோ, குழந்தைகளைத் தூண்டிக் கொண்டிருந்தால் அது மோசமான பின் விளைவுகளையே தரும். 11 வயதில் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் கணிதம் படிக்கச் சேர்ந்த சூஃபியா, கடைசித் தேர்வு முடிந்த அடுத்த நாள் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார், பெற்றோரின் வெறித்தனமான தூண்டுதல் தாங்கமுடியாமல். 10 வயதில் சாதனை செய்த அமெரிக்காவைச் சேர்ந்த ப்ராண்டன் பெம்மெர், 14வது வயதில் திடீரென தற்கொலை செய்துகொண்டார். 9 வயதில் மைரோஸாஃப்ட் பட்டயம் பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஃபா கரீம், 16வது வயதில் மூளை பாதிப்பு வந்து கோமா நிலைக்குச் சென்று மரணித்தார். இப்படி உதா’ரணங்கள்’ பல உள்ளன.

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். அவ்விளம்பயிரை இனம் கண்டுகொண்டால், அதிக விளைச்சலுக்குப் பேராசைப்பட்டு, அளவுக்கதிகமாக ரசாயன உரங்களைக் கொட்டிக் கருக விட்டுவிடாமல், தேவையான அளவுக்கு மட்டுமே உரமும் தண்ணீரும் விட்டு வளர்ப்போம். ‘இயற்கை’ முறையே எப்பொழுது நல்லது.

Post Comment

ஃபேமிலி இங்கயா? ஊர்லயா?




அபுதாபியில் இருக்கும் தோழியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, எப்பவும் பேசிமுடித்ததும் ஞாபகம் வரும் ஒருவிஷயம், அன்று நல்லவேளை பேசும்போதே ஞாபகம் வந்தது. ”உன் கொழுந்தனுக்குப் பெண் பார்த்துகிட்டிருந்தீங்களே என்னாச்சு?” என்றேன். ”ம்.. ஒரு பொண்ணு பாத்துருக்காங்க, கல்யாணம் ஒரு 6 மாசம் கழிச்சு இருக்கும்” என்றாள். ”ஆமா, உன் கொழுந்தனுக்கு துபாயிலதானே வேலை. கல்யாணம் ஆனதும் ஃபேமிலியைக் கூட்டிவர்றதுக்கு வசதியா, அவளை இப்பவே பாஸ்போர்ட்டுக்கு அப்ளை பண்ணிவைக்கச் சொல்றதுதானே? உனக்கு கல்யாணத்துக்கப்புறம் எடுக்கும்போது ரொம்ப லேட் ஆச்சே?” என்று தெரியாமல் சொல்லிவிட்டேன்.

“என்னது, பாஸ்போர்ட்டா, இப்பவேவா? கிழிஞ்சுது போ!! பெண்ணைப் பற்றி விசாரிக்கும்போதே பாஸ்போர்ட் இருக்குன்னு தெரிஞ்சா உடனே ரிஜக்ட் பண்ணிடுவாங்க.  அதெல்லாம் கல்யாணமாகி குறைஞ்சது ஒரு வருஷம் கழிச்சு, மாமியார் பெர்மிஷன் கிடைச்சாத்தான் பாஸ்போர்ட் அப்ளை பண்ணனும்” என்றாள்!! ”ஓ, அப்ப அந்த ஒரு வருஷமும் ப்ரோபஷனரி பீரியட்னு சொல்லு. மருமகப் போஸ்டிங்ல பெர்ஃபார்மன்ஸ் ஓக்கேன்னாதான் பாஸ்போர்ட்டு, ஆன் ஸைட்டெல்லாம் அப்ரூவல் ஆகுமோ??!!” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டோம்.


 

Post Comment

பண வளர்ச்சியா, மனமகிழ்ச்சியா?





 2011 டிசம்பர் 1-15 ”சமரசம்” இதழில்வெளியான எனது கட்டுரை.

செய்தித்தாட்களை ”அட்டை டூ அட்டை” வாசிப்பவர்கள், பிஸினஸ் பக்கங்களில் “GDP" என்ற வார்த்தையை அடிக்கடி பார்த்திருக்கக்கூடும். ”Gross Democratic Product" - ”மொத்த உற்பத்திக் குறியீடு” என்ற இந்த மதிப்புதான் ஒரு நாடு ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கிறதா என்பதைத் தெரிவிக்கும் அளவீடு. ஒரு நாட்டின் ஒருவருட மொத்தச் சந்தை உற்பத்தியை அளவிடும் இதை வைத்துத்தான் ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியைக் கண்டிருக்கிறதா அல்லது பின்னடைவா என்று கணக்கிடப்படும். உலக நடைமுறை இது.

இந்த GDPயின் அடிப்படையிலான வளர்ச்சியின்படிதான்,  தற்போது முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவை 2050-ல் சீனா முந்திவிடும் என்றும், இந்தியா மூன்றாமிடத்திற்கு வந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுமைக்குமாகக் கணக்கிடப்படும் உற்பத்தியை, நாட்டின் மக்கள தொகையால் வகுத்தால், அந்நாட்டின் “தனிநபர் வருமானமும்” (GDP per capita) கிடைத்துவிடும்!! நாட்டின் GDPயில் ஏற்படும் மாற்றங்கள், அந்நாட்டு பங்குச் சந்தையிலும் கணிசமாக எதிரொலிக்கும் என்பதால், எல்லா தரப்பினராலும் இதன் மாற்றங்கள் கூர்ந்து கவனிக்கப்படும். மொத்தத்தில், பணவசதியைக் கொண்டு மனிதர்களை உலகம்  மதிப்பதுபோல, பொருள்சார்ந்த ஜி.டி.பி.யை வைத்துத்தான் ஒரு நாட்டின் மதிப்பும்!!

ஆனால், யோசித்துப் பார்த்தால், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அந்நாட்டு மக்களின் ”வாழ்க்கைத் தரத்தைத்” (standard of living) தீர்மானிக்கலாம்; ஆனால், மக்களின் மகிழ்ச்சியை, மன நிறைவைத் தீர்மானிக்குமா? மனிதனை, அவன் சொத்துமதிப்பைக் கொண்டு ”வசதி படைத்தவன்” என்று சொல்ல முடியும், ஆனால் பணம் மட்டும்தான் வாழ்க்கையா? பெரும் பணக்காரராக இருப்பவர்தான் வாழ்க்கையில் அதிக மனநிறைவைக் கொண்டவர் என்று சொல்ல முடியுமா என்றெல்லாம் கேள்விகள் நம்முள் எழும் அல்லவா?

இதே எண்ண அலைகள் ஒருசிலரிடையே தோன்றியதன் விளைவுதான் “GNH" என்ற அளவீடு உருவாக்கம். ஒரு நாட்டின் வளர்ச்சியை "GDP"ஆல் அளவிடக்கூடாது;  "GNH" - Gross National Happiness - தேசிய மகிழ்ச்சி அளவீடு - என்ற அலகால்தான் அளவிட வேண்டும் என்று குரல்கள் எழுகின்றன.  தற்போது, ஐ.நா. சபையின் பொதுக்குழுவே, தன் செயல்திட்டங்களில் ஒன்றாக இதனை ஏற்று, அதன்மீது உறுப்பு நாடுகளை விவாதிக்க அழைக்கும் தீர்மானம் நிறைவேற்றுமளவு இந்தக் குறியீடு முக்கியத்துவம் பெற்றுள்ளது!!

GNH - என்ன, எப்படி, யாரால்?

இந்தக் கொள்கையை - பொருள்சார் வளர்ச்சியைவிட, மக்களின் மன மகிழ்ச்சிக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் கொள்கையை - உலகுக்கு அறிமுகப்படுத்தியது, அதைத் தற்போது பின்பற்றும் ஒரே நாடான - பூடான்!! இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு சிறிய புள்ளி போன்ற நாடுதான் இவ்வளவு அரிய தத்துவத்தை உலகின் முன்வைத்திருப்பது!! ”வளர்ந்த நாடுகள்” என்று சொல்லிக் கொள்ளும் பலமான பொருளாதாரச் சக்தி கொண்ட பல பெரிய நாடுகள் எல்லாம் பணமே பிரதானம் என்று அதன்பின் ஓடிக் களைத்து, ”கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரமாக” தற்போது கம்பெனிகளை ஒவ்வொன்றாக இழுத்துமூடும் அளவு பொருளாதாரப் பின்னடைவால் தத்தளித்துக் கொண்டிருக்கையில், ஒரு மிகச் சிறிய நாடு “இயைந்த சமூக-பொருளாதார முன்னேற்றமே உண்மையான  முன்னேற்றம்” என்று ஐ.நா. மூலம் உலகிற்கே பரிந்துரை சொல்வது விந்தைதான் இல்லையா?

wikipedia.com
1972-ல், பூடான் நாட்டு மன்னராகப் பதவியேற்ற பதினாறே வயதான ஜிக்மே சிங்யே வாங்சுக், தன் நாட்டு மக்களின் முன்னேற்றம் குறித்த பேச்சின் நடுவே தற்செயலாக  சொன்ன GNH- மொத்தத் தேசிய மகிழ்ச்சி என்ற வாக்கின் கருத்து சிறப்பானதாகத் தோன்றவே, அந்நாட்டு கல்வி மையம் செய்த பல ஆராய்ச்சிகளின் பின்னர், இதை அளவிடுவதற்கும், செயல்படுத்துவதற்கும் வரைமுறைகள் உருவாக்கப்பட்டது.

அதன்படி, சந்தைப் பொருட்கள் உற்பத்தியோடு மக்களின் ஆத்மார்த்த வளர்ச்சியும் இணைந்து முன்னேற்றம் கண்டால்தான் நாடு வளர்ச்சியடைவதாகக் கருத வேண்டும். GNH-ன் நான்கு தூண்களான,

* தொடர்ச்சியான ஒப்புரவான சமூகப் பொருளாதார மேம்பாடு,
* பண்பாடு பேணுதல், 
* இயற்கைச் சுற்றுப்புறப் பாதுகாப்பு,
* நல்லாட்சி நிர்வாகம்

ஆகிய அனைத்தும் சமமாக முன்னேற்றம் அடையும்படி வளர்ச்சித் திட்டங்கள் வகுக்கப் படுகின்றன. சுருங்கச் சொன்னால், இது ஒரு சமநிலையான, ஒருமுகப்படுத்தப்பட்ட முன்னேற்றத்திற்கான அணுகுமுறை.

இதன்படி, பூடான் நாட்டின் வகுக்கப்படும் கொள்கைகள், திட்டங்கள் யாவும் GNH-ன்  அடிப்படை விதிகளுக்கு மாறுசெய்யாமல் இருக்கிறதா என்று பரிசீலித்துத்தான் நிறைவேற்றுகிறார்களாம்!! தன் நாட்டின் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவசியமான மகிழ்ச்சியை, மனநிறைவை இயற்கையைப் பாதிக்காவண்ணம் தருவதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகிறது பூடான்!! இக்குறிக்கோளைத் தாங்கள் இன்னும் முழுமையாக அடைந்துவிடவில்லை என்றபோதும், முயற்சிகளை அயராது தொடர்ந்துகொண்டிருக்கிறோம் என்றும் கூறுகின்றது.

தன் நாட்டில் இது சிறப்பாகக் கடைபிடிக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து, உலக மக்களும் இதன் பயனைப் பெறவேண்டும் என்ற நல்லெண்ணத்தில், இக்கருத்தை தன் நாட்டிலும், பிற நாடுகளிலும் பல கருத்தரங்குகளின் வாயிலாக விரிவாக்கம் செய்ததின்பலனாக, பல்வேறு அமெரிக்க-ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சியாளர்கள் இக்கொள்கையின்மீது நடத்திய ஆராய்ச்சிகள் சாதகமான முடிவுகளையே தந்தன.  அந்த ஊக்கத்தாலும், “தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற உயரிய எண்ணத்தாலும்,  ஐ.நா. பொதுக்குழுவில் பூடான் விடுத்த வேண்டுகோளின்படி, ஐ.நா. தன் செயல்திட்டத்தில் இக்குறிப்பை ஏற்றுக்கொண்டு, இதன்மீது உறுப்புநாடுகள் விவாதிக்க வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

முடிவுரை:

GNH - இக்கொள்கையைப் பற்றி விரிவாக வாசிக்கும்போதே. நம் அனைவர் மனங்களிலும் ஒரு எண்ணம் ஓடியிருக்கக் கூடும். அது - இஸ்லாம் சொல்வதும் இதுதானே என்ற கேள்வி!!  தன்னம்பிக்கை டானிக்காக ஈமான்,  சமூக முன்னேற்றத்திற்காக ஸகாத், ஸதகா, பைத்துல் மால்; மன முன்னேற்றத்திற்காக நோன்பு, இத்திகாஃப், ஹஜ் என்று அரிய பல வழிகளை வகுத்துத் தந்து, பணத்தை வியாபாரப் பொருளாக்காதீர்கள், பணத்தைவிட இறைநம்பிக்கையே பெரிது, சகோதரத்துவமே சிறந்தது, உன் அயலான் பசித்திருக்க நீ உண்ணாதே,   அவசியமல்லாது மரத்தின் ஒரு இலையைப் பறிப்பதுகூடப் பாவச்செயல் என்று போதித்ததும் இஸ்லாம்!!

இவ்வழகிய மார்க்கத்தை வாழ்வியல் நெறியாகக் கொண்ட ஒரு முஸ்லிம் நாடாவது இதைக் கடைபிடித்து, முன்வைத்திருக்க வேண்டாமா என்ற ஏக்கமும் தோன்றுகிறது.  ஏற்கனவே நமக்கு இஸ்லாம் வழங்கியுள்ள நெறிமுறைகளை, மேலைநாட்டுச் சித்தாந்தமாகச் சொல்லப்பட்டால்தான் ஏற்றுக்கொள்வோமா?
__________________________________________________________________________________
(பிற்சேர்க்கை)
மேலதிகத் தகவல்கள்:

ஏப்ரல் 2 - 2012,  அன்று, ஐ.நா. தலைமையகத்தில் பன்னாட்டுத் தலைவர்களும்கூடி இதுகுறித்துக் கலந்துரையாடினார்கள். அனைவரும் இதைக் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அடுத்து இரண்டு நாட்கள் இதுபற்றிய வொர்க்‌ஷாப்களும் நடந்தன. இறுதியாக, இவ்வினிய கொள்கையை ஐ.நா.வின் அனைத்து உறுப்பினர் நாடுகளுக்கும் எடுத்துச் சொல்வது என்றும், ஜூன் மாத Rio +20 மாநாட்டிலும் 2013-ல் ஐ.நா. பொதுக்குழு கூட்டத்திலும் இதைப் பற்றிப் பேசுவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுருக்கமாச் சொன்னா, இதுபத்தி பேசிகிட்டே (மட்டும்) இருக்கப் போறாங்க!! :-))))

Ref:
http://www.gpiatlantic.org/conference/proceedings/thinley.htm
http://en.wikipedia.org/wiki/Gross_national_happiness#Weakness_of_GDP
http://www.un.org/wcm/webdav/site/ldc/shared/Bhutan.pdf
http://www.gnhusa.org/wp-content/uploads/2011/07/UN-Resolution-on-Happiness-Measures-7-13-2011.pdf
http://www.2apr.gov.bt/images/BhutanReport_WEB_F.pdf
http://chronicleproject.com/stories_362.html
http://www.un.org/apps/news/newsmakers.asp?NewsID=49

Post Comment