Pages

டாக்டர் அடிச்ச கொட்டுமேளம்







மருத்துவமனை போக வேண்டியிருந்தது. அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிட்டுப் போனாலே, குறைஞ்சது ஒருமணிநேரமாவது காவல் காத்தாத்தான் ”தரிசனம்” கிடைக்கும். நோயாளிங்க கூடிட்டாங்களா இல்லை மருத்துவர்கள் குறைஞ்சிட்டாங்களான்னு புரியலை. அதனால், ஒவ்வொரு ஹாஸ்பிட்டலா கூப்பிட்டு, டாக்டர் யாராவது நம்ம வசதிப்படி ‘ஃப்ரீயா’   இருக்காங்களான்னு கேட்டப்போ, ஒரே ஒரு ஆஸ்பத்திரியில மட்டும் இருக்காங்கன்னு சொன்னாங்க.  அதுவும், இந்திய டாக்டராம். ஹை, டபுள் டமாக்கான்னு நினைச்சுகிட்டே பேரைக் கேட்டேன்.

வேற நாட்டு டாக்டரா இருந்தா, மொழிப் பிரச்னை என்பதால்தான் இந்திய டாக்டரா தேடுறது.  அப்புறம் ‘ஜீன்ஸ்’ பட லட்சுமிப்பாட்டிக்கு நடந்த மாதிரி, இடது மூளைக்குப் பதிலா வலது மூளைல ஆபரேஷன் பண்ணி வைக்கவா?  எனக்கு இருக்கிறதே ஒரேயொரு ‘குட்டி’ மூளை.  ஏன்னா, ஒண்ணு நான் பேசுற ‘இங்லிபீஸ்’ அவங்களுக்குப் புரியாது; அல்லது,  அவங்க பேசுற ’அரபுலீஸ்’ எனக்கு தகராறு ஆகும்.   இதுவாவது பரவால்ல, டாக்டர் ஆங்கிலத்தைத் தாய்மொழியா கொண்ட நாட்டவரா இருந்துட்டா இன்னும் சிக்கல். அவரோட ’தூய’ ஆங்கிலம் நம்ம ‘சிற்றறிவுக்கு’ ..ஊஹூம்.... பிரியவே பிரியாது!!

இந்த யோசனையில இருந்ததாலயோ என்னவோ, ஃபோன்ல பேசுன ‘ஃபிலிப்பைனி’ மேடம் சொன்ன பேரைச் சரியா கவனிக்காம விட்டுட்டேன். ஒரு எச்சூஸ்மி போட்டு, மறுக்காச் சொல்லச் சொன்னா.. என்ன பேர் இது? “ஏஸிசாய்”!!  இப்படி ஒரு இந்தியப் பேரா? ஒரு வேலை கோவாக்காரப் பெண்ணா இருப்பாரோ டாக்டர்?

இப்படித்தான், ரொம்ப நாள் முன்னாடி, வேறொரு மருத்துவமனையில் ஒரு டாக்டர் பேரை, “டேங்காமேனி போன்யா” என்றார் இன்னொரு ஃபிலிப்பைனி அக்கா. போய்ப்பார்த்தால், அவர் “தங்கமணி பொன்னையா”!! அதுலயும் அக்மார்க் தின்னவேலிக்காரர் வேற.  நல்லவேளை, அவர் பேர் “நேசமணி பொன்னையா” இல்லை; இருந்தா, அதையும் கவுண்டமணி மாதிரி, ’நாசமா’ ஆக்கிருப்பாங்கன்னு நினைச்சுகிட்டேன்.  சரி,அந்த அதிர்ச்சியையே தாங்கிட்டோம். இது முடியாதான்னு நினைச்சுகிட்டு ஆஸ்பத்திரி போனேன்.

அதான் சொன்னோம்ல, அவங்க பேர் என்ன தெரியுமா? எனி கெஸ்?

அவங்க பேர் “ஏழிசை”!!  பக்கா தமிழச்சிங்க .. அட.. தமிழ்நாட்டவங்கன்னு சொன்னேன்!!  ஆங்கிலத்துல பேரை ”Ezhisai" னு எழுதினதால வந்த வினை!! அட, ரஹ்மானேன்னு நொந்துகிட்டு, பரிசோதனைலாம் முடிஞ்சப்புறம் பேசிக்கிட்டிருந்தோம். அப்ப, டீனேஜர்ஸ் பத்தி பேச்சு வந்துது.  அவர்களின் லேட்டஸ்ட் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களின் மீதான மோகம், எதிர்வாதங்கள், வீட்டு வேலைகளில் பங்கெடுத்தல் குறித்த எதிர்ப்புகள் இப்படி பேசிக்கிட்டிருந்தோம்.  எனக்கும் டீனேஜ்ல ஒரு வாரிசு இருக்கதால, நானும் கொஞ்சம்  புலம்பினேன்.

அப்ப அவங்க எதிர்கொண்ட சில நிகழ்வுகளை உதாரணமாச் சொன்னாங்க.

அபுதாபியில் அவரது டீனேஜ் மகளின் இந்தியத் தோழி அபுதாபியில் தன் பெற்றோர் வாங்கிய புதிய வீட்டுக்கு குடிபோயிருப்பதாகச் சொன்னாளாம். குறிப்பிட்ட அந்த ஏரியாவில், வெளிநாட்டினர் வீடு வாங்க முடியாதென்பதுகூட அவளுக்குத் தெரியவில்லையே என்று மகள் சொல்ல, வாடகைக்கு வீடு எடுப்பதற்கும், சொந்த வீடு வாங்குவதற்கும் உள்ள வித்தியாசம்கூட தெரியாமல் அவளை வளர்த்திருப்பது பெற்றோரின் தவறே என்று அவர் சொன்னாராம்.

விடுமுறைக்கு தமிழகம் சென்றிருந்தபோது, அதற்கு மூன்றே மாதங்கள் முன்னர் நடந்த இரு திருமணங்களுக்கான பரிசுபொருட்களுடன் இரு தம்பதியரையும் சந்திக்கப் புறப்பட்டால், அதிர்ச்சி.. இரு ஜோடிகளுமே பிரிந்துவிட்டிருந்தனர் என்று தகவல் வந்ததாம்!! அவர் கணித்த காரணம், செல்லமாக வளர்க்கப்பட்ட பிள்ளைகள் என்பது.

இன்னொண்ணும் சொன்னார். சிலர் ஆம்பளைப் பிள்ளைங்கன்னு சமையல், வீட்டு வேலைகள் எதுவுமே சொல்லிக் கொடுக்கிறதில்லை. பின்னாளில் அவன் மேல்படிப்பு/வேலை விஷயமா, வெளிநாடுகளில், தன் அறைத் தோழர்களோடு சேர்ந்து வேலை செய்தாக வேண்டிய நிர்பந்தம் வரும்போது, எதுவுமே தெரியாததால் பாத்திரங்கள்/அறை சுத்தம் செய்யும் பொறுப்பு தரப்படுகிறது. இந்த வேலையில் தவறில்லை என்றாலும், இந்தச் செல்லப் பிள்ளைகளுக்கு அதுவும் அவமானமாகத் தெரியும். மேலும், சிலரால், ’கைப்புள்ள’ ரேஞ்சுக்கு நடத்தப்படுகிறார்கள்.

இப்படிப் பலதும் பேசிட்டு, கடைசியில் அவர் சொன்னார், “நம் பிள்ளைகளுக்கு “இல்லை” என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ள நாம்தான் பழக்கப்படுத்த வேண்டும். பெற்றோரிடம் ”நோ” கேட்டுப் பழகினால்தான், வெளியுலகம் தரும் ஏமாற்றங்கள் அவர்களுக்கு சோர்வைத் தராமல், உறுதியைத் தரும். அதனால், குழந்தை ஆசைப்படுறாளே/னேன்னு கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுப்பதைத் தவிர்த்து, வீட்டுச் சூழல் அறிந்து நடக்கவும், வீட்டில் சின்னச் சின்ன உதவிகள் செய்து தரவும் பழக்கப் படுத்துவது  பெற்றோர்களின் கட்டாயக் கடமை”  என்று முடித்தார்.

வீட்டுக்கு வந்து, என்னவரிடம், இதையெல்லாம்சொன்னேன். பின்னே, அவர்தானே எனக்கும் பெரியவனுக்கும் நடுவுல ‘அம்பயர்”!!  ”கேட்டீங்களா? நானும் இதத்தானே தெனைக்கும் சொல்வேன் வீட்டில, யார் கேக்கிறீங்க? படிச்ச டாக்டரே அதத்தான் சொல்றாங்க பாருங்க. இனிமே  நீங்க என்ன சொன்னாலும், நான் சொல்றதச் சொல்லத்தான் செய்வேன்”னு பெருமையாச் சொல்லிகிட்டேயிருக்க...

பாருங்க, பாருங்க, நான் என்ன பல்பு வாங்கினேன்னு ஆவலா நீங்க எல்லாரும் தேடுறீங்க... ஹூம்...

கேட்டுக்கோங்க, இதத்தான் சொன்னார் என்னவர்: “சும்மாவே ஆடுற பேய், கொட்டுமேளத்தைக் கண்டா விடுமா?!!”


Post Comment

பார்வைகள்





அப்போ:

”ஹை!! எவ்ளோ அழகான பட்டர்ஃப்ளைஸ்!! கலர் கலரா பறக்கிறதைப் பாக்கப் பாக்கப் பிடிச்சு வச்சுக்கணும்போல இருக்குல்லம்மா?”

“பார்க்ல நிறைய பூ இருக்குல்லடா. அதான் வருது. நம்ம வீட்டுத் தோட்டத்திலயும் செடியெல்லாம் வளந்து, நிறைய பூ வரும்போது இதே மாதிரி வீட்டுலயும் வரும். அப்போ பாத்துகிட்டே இருக்கலாம். வா போலாம்.”

இப்போ:

”ம்மா..  பாரேன், நீ சொன்ன மாதிரி நம்ம வீட்டுலயும் பட்டஃப்ளைஸ்!! சூப்பரா இருக்குல்ல?”

”அய்யோ, பட்டர்ஃப்ளையா? அதெல்லாம் செடியில இருக்க இலையில முட்டை போட்டுச்சுன்னா, கேட்டர்பில்லர் வந்து இலையை அரிச்சுடுமே!!”

(%)(%)(%)(%)(%)(%)(%)(%)(%)(%)

அப்போ:

”ரோட்டோரமா இருக்க சின்னத் தோட்டம்னாலும், குருவி, புறா, மைனான்னு இந்த இடமே ஒரு ஹெவன்லியா இருக்கு இல்ல? இதுக்காகவே நம்ம வீட்டுல கார்டன் வைக்கணுங்க”.

இப்போ:

”இத்துணூண்டு இருக்க குருவிக்கு என்ன அறிவு பாரேன்? அரிசியைத் தின்னாம, கரெக்டா, அதுக்குத் தேவையான செடியில இலையைக் கொத்தித் திங்குது பாரேன்!!”

”அடடா, முந்தா நாள் போட்ட விதையில முளைச்ச மிளகா நாத்தைத் தின்னு நாசம் பண்ணுது. அதை ரசிச்சு வேற பாத்துகிட்டு. போய் விரட்டி விடுங்க. ஒரு சோளக்கொல்லை பொம்மை செஞ்சு வைக்காமச் சரியா வராது போல. அதுவரைக்கும்,  தினம் நீங்க இங்க வீட்டுக்குள்ள உக்காந்து படிக்கிற பேப்பரை தோட்டத்துல போய் உக்காந்து படிங்க, போங்க.”

(%)(%)(%)(%)(%)(%)(%)(%)(%)(%)

அப்போ:

”அடேய்!! ஏண்டா செடியில இலையைப் பறிக்கிற?”

“சும்மாதான். அழகா இருக்கு. அதான் பிச்சு வச்சுக்கப் போறேன்.  ரோட்டுல இருக்க மரம்தானே? வீட்டுல இருக்க செடியப் பிச்ச மாதிரி சத்தம் போடுற?”

“எங்கேயானாலும், நமக்குத் தேவைப் படாத சமயத்துல, அநாவசியமா ஒரு இலையைக் கூடப் பறிக்கக்கூடாது. உன்னைக் கிள்ளினா வலிக்குதுல்ல? அதுமாதிரி செடிக்கும் இலையைப் பறிச்சா வலிக்கும், தெரியுதா?”

இப்போ:

”எம்மா, யம்மா!! ஏன் அந்தப் பூவையும், இலையையும் பிச்சுப் போடுற? அழகாத்தானே இருக்கு?”

”எல்லாம் எனக்குத்  தெரியும். நீ போ.  செடி உச்சியில பூ வந்துடுச்சுன்னா, அதுக்கு மேலே அவ்வளவா வளராது. கொஞ்சமெல்லாம் பக்கவாட்டுல இருக்க இலைகளப் பறிச்சு விட்டாத்தான், செடி உயரமா வளரும். இல்லன்னா,  தண்டு ஸ்ட்ராங்காகாது.”

(%)(%)(%)(%)(%)(%)(%)(%)(%)(%)


 ஐஸ்கிரீம் சாப்பிடும் புல் புல்!!

இதுதான் நாங்க தோட்டம் வளர்க்கிற கதை!!  போன வாரம் நான் பண்ணின ஆராய்ச்சி பத்தி சொல்லிருந்தேனே, அது இதான்:

குருவி/புறா/புல் புல்- ஆகியவைக்குப் பிடிச்சது:   
தக்காளி, மிளகாய், வெந்தயக் கீரை,  அரைக்கீரை செடிகளின் இலைகள்.

பிடிக்காதது:  
வெண்டை, பாகற்காய், வேம்பு, முட்டைக்கோஸ் ஆகிய செடிகளின் இலைகள்.

ஆரோக்கியத்தின் ரகசியம்:
ஓமவல்லி, துளசி இலைகளைக் கபளீகரம் செய்வது!!

ஒரு மூணு மாசமா, நானும் செடியின் விதைகளைப் போடுறதும், நாத்து முளைக்கிறதும், முளைச்ச அடுத்த நாளே இலைகள் காணாமப் போறதும்.. நானும் மண்ணு சரியில்லியோ, வெயில் அதிகமோ,  முந்தா நாள் அடிச்ச மணல்காத்துனாலயா, தண்ணி காணாதோ, இல்லை விதையே சரியில்லையோன்னு யோசிச்சு, யோசிச்சு, “தன் முயற்சியில் மனந்தளராத விக்கிரமனா” மறுபடி மறுபடி விதை விதைக்கிறதும், அது முளைச்சு காணாமப் போறதும்..    ஒருவழியா திருடனைப் பிடிச்சாச்சு!! குருவியும், புறாவும், மைனா போன்றிருக்கும் புல்புல் பறவையும்தான் ‘திருடர்கள்’!!


    

அடுத்து, செடிகளைப் பாதுகாக்க என்ன வழின்னு யோசிச்சப்போ, புலப்பட்ட ஒரே வழி,  மேலே படத்தில்!!  குருவி, புறாக்கள் போன்ற intruders-களிடமிருந்து மட்டுமில்லை, (பட்டர்ஃப்ளை போன்ற) அந்துப் பூச்சி, கருக வைக்கும் சுடுமணற்காற்று, அனலடிக்கும் 47 டிகிரி வெயில் எல்லாவற்றிலிருந்தும் பாதுகாப்பு பெற ஒரே வழி பர்தாதான்!! சர்வரோக நிவாரணி!! :-)))))))

Post Comment

டிரங்குப் பொட்டி - 16





பதிவுலகில் காணாமப் போனவங்க நிறைய பேர், மறுபடி இப்ப வர ஆரம்பிச்சிட்டாங்க. இதுக்கும், என் முந்தைய பதிவுக்கும் நிச்சயம் சம்பந்தம் இருக்குன்னு நம்புறேன்!!

^^^^^^^^^**********^^^^^^^^^^^***********

ஊர்ல வெயில் காலமான ஏப்ரல், மே மாதங்களில் இங்க அவ்வளவா வெயில் இருக்காது. ஆனா, இந்த வருஷம் அப்பவே இங்கயும் கொளுத்தித் தள்ளிடுச்சு!! அங்க வெயில் குறைஞ்சு, மழை வர்ற நேரம் ஆகிடுச்சு; ஆனா,  இங்க இன்னும் அனல் கூடிகிட்டிருக்கு!! வெளியில வேலை செய்றவங்களை நினச்சாத்தான் பாவமாருக்கு. இந்த மாசம் 15 தேதியிலிருந்தே மதிய இடைவேளை 3 மணிநேரம் (12 டூ 3) விடணும்னு சொல்லிருக்காங்க.

^^^^^^^^^**********^^^^^^^^^^^***********

வெயில் காலம்னாலே, இங்க சின்னம்மை (Chicken pox) பரவும். ரெண்டு வருஷம் முன்னாடியே என் பசங்களுக்கு வந்திருச்சு. இதுல என்ன கொடுமைன்னா, ரெண்டு பேருக்குமே தடுப்பூசி போட்டிருந்தேன்!! தடுப்பூசி போட்டா, வராது; அப்படியே வந்தாலும் லேசாத்தான் வரும்னு சொல்லுவாங்க டாக்டர்ஸ். பத்து வருஷம் முன்னாடி தடுப்பூசி போட்ட பெரியவனுக்கு ரொம்ப லைட்டா வந்துது; ஒரு வருஷம் முன்னாடி போட்ட சின்னவனுக்கு நிறைய அள்ளிப் போட்டிருந்துது.

அப்போ, இணையத்துல அதப் பத்தி வாசிச்சப்போ ஒரு ஆச்சர்யமான தகவல் கிடைச்சுது!! அதாவது, சிக்கன் பாக்ஸ் எப்படி பரவுதுன்னு சொல்லுவாங்க? கொப்புளங்கள் காய்ஞ்சு, உதிரும்போதுதானே? அப்படி இல்லையாம்!! கொப்புளங்கள் வரும் முன்னேயான 4-5 நாட்களும், வரத் தொடங்கிய 4-5 நாட்களும்தான் பிறருக்குப் பரவுமாம்!! காய்ந்தபிறகுதான் பாதுகாப்பாம்; பரவாதாம்!! அதாவது, நமக்கு வந்திருக்குன்னு நமக்கு தெரியுமுன்னேயே, நாம் நம் மூச்சுக் காற்று மூலம் (தும்மல், இருமல்) பரப்பிவிடுகிறோமாம்!!

^^^^^^^^^**********^^^^^^^^^^^***********

நாலுமாசமா ஒரு (வெட்டி) ஆராய்ச்சி பண்ணினதுல, சில அரிய கண்டுபிடிப்புகள் செய்திருக்கேன். அடுத்த பதிவுல சொல்றேன்!!

^^^^^^^^^**********^^^^^^^^^^^***********
 
அபுதாபியில் சாலை விபத்துக்களைக் குறைக்கும் விதமா, காவல்துறை கடுமையான கண்டிப்போடு கண்காணிக்கிறார்கள். எதிர்பாரா விதமாக, எதிர்பாராத வண்டிகளில் பிந்தொடர்ந்து வந்து, அபராதம் விதிக்கிறார்கள். இதனால் கணிசமான அளவு விபத்துகள் குறைந்துள்ளது. இறைவனுக்கு நன்றி.

ஆனால், இப்படி குறையும் மரண விகிதத்தை ஈடுகட்டவோ என்னவோ, அமீரகத்தில் தற்கொலைகள் இந்தியர்களிடையே அதிகமாகியுள்ளன!! ஒவ்வொரு மூன்று நாளுக்கும் ஒரு இந்தியர் தற்கொலை செய்வதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. முன்பெல்லாம், தனியாக வசித்து வந்த ஆண்கள்தான் தற்கொலை செய்வதாக செய்திகள் வரும். ஆனால், இப்போது குடும்பத்தோடு இருப்பவர்களே, அதிலும் பெண்கள்கூட, தற்கொலை செய்கிறார்கள்!!

^^^^^^^^^**********^^^^^^^^^^^***********

யோகாங்கிறது, உடலுக்கு மட்டுமில்ல, மனதுக்கும் வலிமை தரும் பயிற்சி. பல காலங்களாகத் தொடர்ந்து யோகா செய்துவருபவர்களுக்கு, நல்ல உடல்நலம் மற்றும் வலிமையோடு, அதிகமான மனவலிமையும், கட்டுப்பாடும் இருக்கும்னு சொல்லுவாங்க.  பல யோகிகள் வார/மாதக்கணக்கா தவம் இருந்து அதை நிரூபிச்சிருக்காங்கன்னும் படிச்சிருக்கேன். ஆனா, தற்போது உண்ணாவிரதம் இருந்துவரும் பாபா ராம்தேவின் உடல்நிலை சீர்குறைந்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறுவயது முதலே யோகா செய்துவரும் அவரின் உடல் உறுதி இவ்வளவுதானா என்று கேள்வி வருகிறது. ஒருவேளை அவரின் மூப்பு காரணமா இருக்குமோ?

^^^^^^^^^**********^^^^^^^^^^^***********

பாட்மிண்டன் விளையாட்டில், தற்போது மினி ஸ்கர்ட்தான் அணிந்து விளையாட வேண்டுமென்று புதிய விதிமுறையை சர்வதேச பாட்மிண்டன் கூட்டமைப்பு போன மாதம் வெளியிட்டது. நானும், ஒருவேளை, இலகுவாக விளையாடும் வசதிக்குன்னு இந்த விதிமுறை சொல்றாங்களோன்னு நினைச்சேன்!!   ம்ம்.. நிறைய விளம்பரதாரர்களைக் கவரவும், பெண்மையை அழகாக வெளிப்படுத்தவும் (!!), டிவி ரேட்டிங்கைக் அதிகரிக்கவும்தானாம் இந்த நடைமுறை!!

போன வாரம் ஈரானின் பெண்கள் கால்பந்து அணியினரையும் முழு உடை அணிந்த (!!!) காரணத்தால் போட்டியில் பங்கேற்க தடை செஞ்சிருக்காங்க. அந்த அணியினர் வழக்கு தொடர்ந்திருக்காங்க.

^^^^^^^^^**********^^^^^^^^^^^***********
 
அம்மா, ”சூரியன் இனிமே உதிக்கவே உதிக்காது”னு அடிச்சு சொல்லிருக்காங்க. ”தமிழகத்திற்கு இனி இருண்ட காலம்தான்”னு சிம்பாலிக்காச் சொல்றாங்களோ?

^^^^^^^^^**********^^^^^^^^^^^***********

என் சின்னவன், ஒரு வாரமா ரொம்ப சீரியஸா, “கிங்  (king) ஆகிறது எப்படி?”னு கேட்டுகிட்டேயிருக்கான். அதுக்கு, ராஜாவுக்குப் புள்ளையா பிறக்கணும்டானு சொன்னா, ‘போம்மா, ஜோக் பண்ணாத. ராஜாவா ஆகிறதுக்கு என்ன படிக்கணும்?”னு கேக்கிறான்!! இவன், இவ்ளோ அப்பாவியான்னு நம்பமுடியலை!!

^^^^^^^^^**********^^^^^^^^^^^***********


Post Comment