Pages

புது இடமும், புது வருடமும்




இந்த வருஷத்தின் கடைசி நாள் இன்று!!

பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்திற்கும் பொருந்தும் போல!! இநத வருஷம் என்று சொல்லிக்கொண்டிருந்த 2009,  இன்னும் பன்னிரெண்டு மணிநேரத்தில் போன வருடம் ஆகிவிடும்!! ஒரு வயது அதிகரிக்கிறதே என்ற வருத்தமிருந்தாலும், வாழ்நாளில் ஒரு வருடம் கூடிப்போனது குறித்து மகிழ்வும், இறைவனுக்கு நன்றிகளும்!! கழிந்த வருடங்களைப் போலவே இனியும் இறைவன் எல்லாருக்கும் நோயற்ற வாழ்வைத் தரவேண்டும்!!

**************

பிள்ளைகளுக்கு இரண்டு வார குளிர்கால விடுமுறை; இவ்வருடம் நானும் விடுமுறை எடுத்து அவர்களோடு வீட்டில் இருக்கிறேன். தங்கையும் கைக்குழந்தையோடு வந்திருந்தாள். நல்ல ஜாலியா நேரம் போகிறது.  வீட்டில் பிஸியாக இருந்ததால் பதிவுலகக் கலகங்கள் எதையும் தலையில் ஏற்றாமல் இருக்க முடிந்தது.

சனிக்கிழமை ஷார்ஜாவில் “Discovery Center" போய் வந்தோம். நல்லாருந்தது. 6 முதல் 12 வயதினருக்கு அறிவியல் விஷயங்களை விளையாட்டுடன் விளக்கும் இடம்.  கலர்ஃபுல்லாகவும் இருப்பதால் சிறுவயதினருக்கு மிகவும் பிடிக்கும்.

விவரங்களுக்கு www.sharjahmuseums.ae போய்ப் பாருங்க. Airport museum, Wildlife Sanctuary - இங்கேயும் போயிருந்தோம். ஷார்ஜாவில் நிறைய சுற்றுலாத் தலங்கள் இருக்கிறதென்பது நிறைய பேருக்குத் தெரிவதில்லை. ஒரு லீவு கிடைச்சா, உடனே துபாய் கிளம்பிடறாங்க!!





டிஸ்கவரி செண்டரில் ஒரு டி.வி.ஸ்டேஷன் மாடல் வைத்திருக்கிறார்கள். அதில் நம் பிள்ளைகளைப் பாடவோ, பேசவோ சொன்னால், பதிவு செய்து, அங்கிருக்கும் பெரிய ஸ்கிரீனில் உடனே ஒளிபரப்புகிறார்கள்.

கட்டட கட்டுமானங்கள் செய்முறை விளக்கமாக அறிந்துகொள்ள சின்னசின்ன கிரேன்கள், Pulley system, பில்டிங் பிளாக்குகள் என்று வைத்திருப்பதால் அவற்றின் பயன்பாடுகள் குறித்து சிறார்கள் தாங்களே  செய்து அறிந்து கொள்ள முடிகிறது. 

அதுபோலவே  மனித உடல் பாகங்களின் செயல்பாடுகள், கார் வொர்க்‌ஷாப், ஏர்போர்ட், இன்னும் பலவற்றின் மாடல்கள் இருக்கின்றன. சாலை விதிகள் தெரிந்துகொள்ள சாலையில் கார் ஓட்டியே தெரிந்துகொள்ளலாம்!!

சுவாரஸ்யமான விளையாடுக்களில் 3 மணிநேரம் கரைந்துபோனதே தெரியவில்லை. சிறுவர்களோடு, பெரியவர்களும் அனுபவிக்கக் கூடிய இடம்.




 ஷார்ஜா பழைய ஏர்போர்ட் இருந்த இடத்தைத்தான் இப்போ அருங்காட்சியகமா ஆக்கிட்டாங்க. நல்ல விளக்கமான  தகவல்களோட,  பழைய பிளேன்கள், அவற்றின் இஞ்சின்கள், பாகங்கள்,  பழைய தகவலேடுகள், வானிலைக் குறிப்புப் புத்தகங்கள்னு அழகா வச்சிருக்காங்க. 




லண்டனிலிருந்து ஆஸ்திரேலியா போகும் வழியில் ஒரு நிறுத்துமிடமாக ஆரம்பித்த ஷார்ஜா விமான நிலையத்தின் வளர்ச்சியைப் படிப்படியாக விளக்கியிருக்கிறார்கள். அப்போ வந்த ஆங்கிலேயர்களுக்காக அமைக்கப்பட்ட ஒரு தியேட்டரின் மாதிரியும் வச்சிருந்தாங்க. அதில உட்காரும் இருக்கைகளாகப் பயன்படுத்தப்பட்டது என்ன தெரியுமா? தகர டப்பாக்கள்!! இன்னும் அதை வச்சிருக்காங்க அங்க!! நம்மூரில் இன்றும் பயன்படுத்தும் பெரிய எண்ணெய் டின்கள்தான் அவை.

விமானம் கண்டுபிடித்த வரலாறையும் படமாகக் காட்டுகிறார்கள். ஆதிகால விமான மாடல்களைப் பார்க்க சுவாரசியமா இருந்தது!!

Wildlife Sanctuary-ல் பாலைவன உயிரினங்களைப் பற்றிப் பார்த்து, படித்து அறிந்துகொள்ளலாம். அதனருகே இருக்கும் மரைன் மியுஸியம்,  குழந்தைகள் (விரும்பும் ஆடு, மாடு, கோழி) பண்ணை ஆகியவையும் உண்டு.

இங்கெல்லாம் போக நினைப்பவர்கள் சரியான மேப் அந்தந்த வலைத் தளங்களிலிருந்து எடுத்துச் செல்வது வழிதவறாமலிருக்க உதவும்.

போனமுறை போல இம்முறையும் நான் ஷார்ஜாவிலருந்து கிளம்பிய பிறகு மழையாம்!! நான் காலடி வைக்கிற நேரமெல்லாம் மழை வருதுபோல!! கன்ஃபர்மா நான் நல்லவதான்!!

புதுவருஷம் அல்-அய்னில கொண்டாடப் போறோம்!! அல்-அய்னின் சிறப்பான ஜெபல் ஹஃபீட் மலையடிவாரத்தில் உள்ள வெந்நீர் ஊற்றுக்களில் கடந்த ஒருமாதமா தண்ணீர் வரல்லையாம்!! நான் போற நேரம் வந்துரும்னு நினைக்கிறேன்!! வெற்றிச் செய்தியோட வர்றேன்!!

அனவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! அடுத்த வருஷம் சந்திப்போம்!!

Post Comment

சகாயம் வேணுமா...






திருநெல்வேலிச் சீமையின் எலே, வாலே, ஏட்டி, இங்கிட்டு, கோட்டிக்கார பயலே, என்னவே செய்றீரு போன்றவையின் நடுவில் வளர்ந்த எனக்கு,  மெட்ராஸ் தமிழ் (டி.வி. உபயம்), திருநெல்வேலி தமிழ் தவிர வேறு ஸ்லாங்குகளையும் கேட்கும் பாக்கியம் கல்லூரி சென்ற பிறகுதான் கிடைத்தது. அதிலும் சிலர் நாகரீகமாகப் பேசவேண்டும் என்பதால், தம் சொந்த மண்ணின் மணத்தில் பேசமாட்டார்கள் (என்னை மாதிரி).


என் வாப்பாவின் சவூதி வேலை காரணமாக அவ்வப்போது திருவனந்தபுரம் (ஏர்போர்ட்) போவதாலும், கேரளத்து நண்பர்களாலும் மலையாளம் பேசக் கேட்டிருக்கிறேன். எனக்கு எட்டு வயது இருக்கும்போது, மேத்யூ என்ற என் வாப்பாவின் நண்பர் வந்திருந்தார். அவரிடம் தற்செயலாக நான் மணி என்ன என்று கேட்க, அவர் “பந்த்ரெண்டு” என்றார். முதல்முறை அவ்வார்த்தையைக் கேட்பதால், அதைக் கேட்டு எனக்குச் சிரிப்பாக வந்தது. மீண்டும் மீண்டும் அவரிடம் கொஞ்ச நேரத்திற்கு ஒருமுறை மணி கேட்க, அவர் பந்த்ரெண்டு பத்து, பந்த்ரெண்டு பதினஞ்சு என்று சொல்லிச் சொல்லி நொந்துவிட்டார். என்னை ஒன்றும் சொல்லவும் முடியவில்லை அவரால். மணி ஒன்று ஆனபிறகுதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். கேரளா-தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் வசிக்கும் தமிழர்களின் தமிழ் நான் அதிகம் கேட்டதில்லை.


அருகாமை மாவட்டமான கன்னியாகுமரியில் இருந்து நிறைய பேர் என் கல்லூரியில் படித்தனர். மலையாளமும், தமிழும் கலந்து, ஒரு தனி விதமாக இருக்கும அவர்களின் நாகர்கோவில் தமிழ் கேட்க மிக இனிமையாக இருக்கும் எனக்கு முன்பு. கொஞ்சம் ஈழத்தமிழின் சாயலும் இருக்கும்.  கல்லூரியில் நாகர்கோவிலைச் சேர்ந்தச் சில சக நண்பர்களை அடிக்கடி கூப்பிட்டு வைத்து ஏதாவது கேள்வி கேட்டுப் பேச வைத்துக் கேட்டுக்கொண்டிருப்பேன். அதனாலேயோ என்னவோ எனக்குப் புகுந்தவீடு நாகர்கோவிலிலேயே வாய்த்தது!


கல்யாணமான புதிதில் என் மாமியாரின் "தமிலாளம்" (தமிழ் 20% + மலையாளம் 80%) எனக்குச் சுத்தமாகப் புரியாது. என்னவரும், மைனியும் மொழிபெயர்ப்பார்கள் எனக்காக. மச்சினரின் மனைவியோ (ஓரகத்தி) கேரளாவைச் சேர்ந்தவர். தமிழ் தெரியாது. மலையாளம்தான் பேசுவார்.


அங்கே வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரியைப் பார்த்தால் வேலைக்காரி என்று சொல்லமுடியாது. காலை ஏழு மணிக்கே அயர்ன் செய்த சேலை, பிளவுஸும், பவுடரும், கண்மையுமாக ஆஃபீஸுக்குப் போவது போல் வருவார். கிராமத்துப் பிண்ணனியில் இருந்து வந்த எனக்கு இது ரொம்பப் புதிதாக இருந்தது. அதுமட்டுமல்ல, வேலைக்காரியை வேலைவாங்க எல்லோருக்கும் பயம் வேறு!! யோசித்துதான் அவளிடம் பேசவே செய்வார்கள் வீட்டிலுள்ளவர்கள். கேட்டால், நாம் ஏதாவது சொல்ல அவள் நின்றுவிட்டால் வேலைக்கு வேறு ஆள் கிடைப்பது சிரமம் என்று சொன்னார்கள்.



என் வீட்டிலோ, வேலைக்கு வருபவர்கள் என் அம்மா, பாட்டியுடன் செய்யும் வாக்குவாதம்தான் எங்களுக்குப் பொழுதுபோக்கே. சிலசமயம் வேலைக்கு வருபவர்களுக்கு வாதங்களை எடுத்துக் கொடுப்பதே நாங்கள்தான்!! சரிக்குச் சமமாய் நாங்களும் அவர்களோடு கதை பேசிக்கொண்டே வேலைகளும் சொல்லிக்கொண்டு என்று, எங்கள் குறும்புகளால் அவர்களும் எங்களை விரட்டுவதும் என்று அவர்கள் வந்தாலே எங்களுக்கெல்லாம் கலகலப்பாக நேரம் போகும்.


அதனால் வேலையாளிடம் இவ்வளவு பயம் இருப்பது என்பது எனக்கு என் புகுந்த வீட்டில் வியப்பாக இருந்த பல விஷயங்களில் ஒன்று.


ஒருநாள் என் ஓரகத்தி புது மணப்பெண்ணாகிய என்னிடம் என் கணவரின் அருமைபெருமைகளைப் பற்றி (வேறென்ன, சோம்பேறித்தனத்தைப் பற்றித்தான்) மலையாள‌த்தில் சொல்லிக் கொண்டிருந்தார். ஓர‌ளவு புரிந்தும், புரியாமலும் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அவரின் ஒரு வாக்கியம் கேட்டவுடன் தூக்கிவாரிப் போட்டது!! அந்த வாக்கியம் "ஹுஸைனுக்கு எல்லாத்துக்கும் சகாயம் வேணும்". தூக்கிவாரிப் போட்டதன் காரணம், வீட்டு வேலைக்காரியின் பெயர் "சகாயம்". சே, சே, அப்படியெல்லாம் இருக்கவே இருக்காது என்று மனம் சொன்னாலும், அருகிலிருந்த என் கணவரைக் கேட்கவா, வேண்டாமா என ஒரு குழப்பத்துடன் பார்த்துக்கொண்டே நின்றேன். என் பேய்முழியைப் பார்த்த அவர் புரிந்துகொண்டார். "மைனி, மைனி, நிறுத்துங்கோ, போதும், போதும்" என்றவர், என்னிடம் "பைத்தியமே, சகாயம் என்றால் மலையாளத்தில் உதவி என்று அர்த்தம்" என்று விளக்கினார்.


அது ஆச்சு பதிமூணு  வருஷம்; ஆனாலும் இன்னைக்கும் என் புகுந்த வீட்டினர் என்னிடம் கொஞ்சம் கவனமாத்தான் பேசுவாங்க!


Post Comment

எவ்வளவு குடிக்கலாம்?




ஈரோடு பதிவர் சந்திப்பினால் பதிவர்கள் பல சந்தித்துக் கொண்டதும், கருத்துக்களைப் பறிமாறிக் கொண்டதும் சில நல்ல விளைவுகள் என்றால், இன்னொரு நல்ல காரியமும் தன்னே நடந்துள்ளது.

சவூதி அரேபியா, யூ.ஏ.இ., மற்றும் இன்னும் சில நாடுகளில் வேகம்தான் விபத்துக்களுக்கு முக்கிய காரணம். அதைத் தடுக்க ஒரு யுத்தியாக, விபத்தில் சிதிலமடைந்த கார்களை அகற்றாமல் ரோட்டோரத்தில் சிலகாலத்திற்குப் போட்டு வைத்துவிடுவார்கள். பல விளம்பரங்கள், அபராதங்களில் கிடைக்காத பலன் இதில் நிச்சயம் இருக்கும்.

அதேபோல, குடியின் தீமைகளில் ஒன்றை மட்டும் விளக்கி, ஒரு “live demo" நடந்துள்ளது. பார்த்தவர்கள், படித்தவர்கள் விளங்கிக் கொள்வார்கள்.

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.


(ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?).

இந்நிகழ்ச்சியின் தொடர்விளைவுகளை வாசித்து வந்ததில் எனக்குச் சில கேள்விகள் எழுந்துள்ளன. அதாவது, சிலர் சொல்கிறார்கள், ஒரு குடிகாரனை நண்பனாக உடையவர்கள், அவனின் இயல்போடு அவனை நண்பனாக ஏற்றுக் கொள்வதுதான் நியாயமாம். அப்படின்னா, குடிப்பவன் குடிக்கட்டும். ஆட்டம் போடட்டும். அவன் அழிவதோடு, குடும்பமும் அழியட்டும். ஆனால் நண்பனை நாம் திருத்த முயலக் கூடாது, அப்படித்தானே?

இதுவே, ஒரு திருடன் அல்லது கொலைகாரனைக்கூட இதே மாதிரி இயல்போடு நண்பனா ஏற்றுக் கொள்வாங்களா இவங்க? கூட வேலை பார்க்கிற நண்பர், கம்பெனி பணத்தைக் கையாடல் செய்கிறார்னா, சொல்லித் திருத்துவோமா இல்லை திருடினாலும் நீ என் நண்பன்னு பெருமையா சொல்வோமா?

அதிலயும் ஒருசிலர் மட்டும் போனாப் போகுதுன்னு அட்வைஸ் சொல்றாங்க. அதுவும் குடிக்காதீங்கன்னு இல்லை, கொஞ்சமா குடிங்கன்னு!! சிலர் இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு வரும்போது மட்டுமாவது கொஞ்சமா குடிங்கன்னு சொல்றாங்க. மத்த நேரத்தில எப்படியும் தொலைங்கன்னு சொல்றாங்களோ? இது, “தவறான உடலுறவுக்குமுன் ஆணுறை பயன்படுத்துங்கள்” என்ற அரசின் எய்ட்ஸ் விளம்பரத்தைத்தான் நினைவுபடுத்துது எனக்கு.

குடியிலென்ன கொஞ்சம் குடிப்பதும், நிறையக் குடிப்பதும்? எல்லாம் ஒன்றுதானே?

ஒரு காலத்தில குடிப்பது என்றால் அருவருப்பாகப் பார்த்த நிலை மாறி, இப்ப குடிப்பதும் நம் கலாச்சாரத்தில் ஒன்று என்று ஏற்றுக்கொள்ளும் மனநிலை வந்துவிட்டது. அதனால்தான் குடிப்பவர்களைக் கொஞ்சமாகக் குடியுங்கள் என நல்வழிப்படுத்துகிறோம்!! முன்பெல்லாம் சில ஆண்கள் குடித்தாலும் வெளியில் அந்தப் பழக்கமிருப்பதாகக் காட்டிக்கொள்ள வெட்குவார்கள். ஆனால், இப்போ குடிப்பதை வெளிப்படையாகச் சொல்லிக்கொள்கிறார்கள். நண்பர்கள் சந்தித்தால் உடனே டீ, காபி குடிப்பதைப் போலக் குடிக்கிறார்கள். அவர்களின் மனைவியரும் இதை அனுமதிப்பதும் ஆச்சர்யமான விஷயமே!! சிலரின் மனைவியர் கோட்டா வைத்துக் குடிக்கச் சொல்கிறார்களாம், ஒரு மாதத்துக்கு இவ்வளவு என்று!!

இஸ்லாமியக் குடும்பங்களில் உள்ள ஆண்கள் குடிப்பதில்லை. அதுவும் முஸ்லிம்கள் பெரும்பானமையாக வாழும் ஊர்களில் குடிக்கே இடமில்லை என்று நிச்சயமாகச் சொல்லமுடியும். ஆனால், நகரங்களில் வாழும் முஸ்லிம் ஆண்களில் வெகுச்சிலர், கார்ப்போரேட் கலாச்சாரத்தில் மூழ்கியோ, சினிமாத் தொடர்புகளாலோ, கூடா நட்புகளாலோ ஆட்பட்டு குடிக்கின்றனர். சிலர் பீர் மட்டும்தான் குடிப்பேன் என்று (பெருமையுடன்) சொல்லிக் கொள்கின்றனர். பின் அது ஒரு ஆரம்பமாக அமைந்துவிடுகின்றது. இவ்வளவிலும் குடிக்காமல் கட்டுப்பாட்டோடு இருப்பவர்கள், தம் நண்பர்கள் குடித்தழிவதற்கு ஒரு சாட்சியாக இருக்கிறார்கள். கேட்டால், அது அவர்கள் விருப்பம். அவர்களது தனிமனிதச் சுதந்திரத்தில் தலையிடுவது தவறு என்பார்கள்.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.


(ஒருவனோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் அன்று; நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டபோது விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதற்குமாம்).

இந்த தனிமனிதச் சுதந்திரம் பத்தி அவருக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லாததினாலத்தான் திருவள்ளுவர் இப்படிச் சொல்லிட்டாரோ?



Post Comment

எங்கேயோ கேட்ட குரல்...




“என்னம்மா, நல்லாருக்கியா? பிள்ளைங்க, மாப்பிள்ளை நல்லாருக்காங்களா?”

“நல்லாருக்கோம் வாப்பா. நீங்க எப்...”

“தங்கச்சி நல்லாருக்காளா? போய்ப் பாத்தியா?”

“நல்லாருக்கா. போன வாரம் போனேன் ரஹ்மத்தைப் பாக்க, பிள்ளையும் நல்லாருக்குது. இந்த வாரம் போகமுடியல. ஃபோன்லதான் பேசிகிட்டேன்.”

“அப்படியா, அடிக்கடி பேசிக்கோ. போயும் பாத்துக்கோ. எப்படிச் சமாளிக்கிறாளோன்னு ஒரே கவலையா இருக்கு”

“அதெல்லாம் பழகி வந்துடும். நாங்களும் இங்கதான இருக்கோம். பாத்துக்கிடுவோம். நீங்க கவலைப்படாம இருங்க.”

” சரிம்மா,  ஒழுங்கா சாப்பிடச் சொல்லு. நேரத்துக்குச் சாப்பிட மாட்டா. பிள்ளையையும் பத்திரமா பாத்துக்கச் சொல்லு. அவளே சின்னப் புள்ள. கையில வேற பிள்ள இருக்கு. .”

“என்னத்த சின்ன புள்ளை, இருவத்திரெண்டு வயசாவுது. இந்த வயசுல ஒண்ணொண்ணும் ஊர்ல மூணு, நாலுன்னு கையில பிடிச்சுகிட்டு வீட்டையும் பாத்துகிடுதுக. இதே வயசுல எனக்கும் ரெண்டு பிள்ளை ஆயாச்சு. நீங்கதான் இன்னும் சினனப் புள்ள, சின்னப் புள்ளன்னுகிட்டு இருக்கீங்க.”

 ”நீ மூத்தப் பொண்ணு. சுதாரிப்பா இருந்துக்கிடுவ. அவ கடைக்குட்டி. விளையாட்டுத் தனமாவே இருப்பா, அதான்மா, வேற ஒண்ணுமில்ல.”

”சரி, சரி, அடுத்த மாசம் நீங்களும் உம்மாவும் இங்க துபாய்க்கு வருவீங்கள்ல, அப்பப் பாருங்க.”

“சரிம்மா.  இன்ஷா அல்லாஹ் பாப்போம்”

@@@@@@@@@@@@@@@@@@@@@

“என்னம்மா, நல்லாருக்கியா? பிள்ளைங்க, மாப்பிள்ளை நல்லாருக்காங்களா?”

“ம்.ம். நீங்க, உம்மா, ரஹ்மத், பிள்ளை எல்லாம் நல்லாருக்கீங்களா?”

“ஆமாம்மா நல்லாருக்கோம். பிள்ளையோட இருக்கதனால நேரம் போறதே தெரியல. ரஹமத் என்னமா இளச்சு போயிருக்கா. உம்மா கூட இருக்கதுனால அவளுக்கு கொஞ்சம் ஃபிரீயா இருக்கு.”

“இங்க வந்து 2 வாரமாச்சு. எப்ப எங்க வீட்டில வந்து இருக்கப் போறீங்க? இன்னும் 2 வாரத்தில நீங்க கிளம்பணும்.”

“அதுக்கென்னம்மா இன்னும் ஒரு பத்துநா இங்கன இருந்துட்டு வாறனே. கைப்புள்ளக்காரில்லியா? கூட இருந்தா கொஞ்சம் ஆசுவாசமா இருக்கும்”

“இப்படீத்தான் வந்ததுலருந்து சொல்லிகிட்டிருக்கீங்க. என் பிள்ளைங்களும் நன்னா, நன்னி எப்ப நம்ம வீட்டில வந்து இருப்பாங்கன்னு கேட்டுகிட்டே இருக்காங்க.”

“எம்மா, அதான் நீ அடிக்கடி வந்து பாத்துட்டுப் போறியே, நாங்களும் ரெண்டு மூணு தரம் வந்தோம். பிள்ளைங்களை வேணா இங்க கொண்டு விடேன். ஒரு வாரம் இருக்கட்டும் எங்க கூட ரஹமத் வீட்டில”.

 “அதெல்லாம் வேண்டாம். அவங்களுக்கு ஸ்கூல் இருக்கு. எனக்கும் உங்க கூட இருக்கணும்னு ஆசை இருக்காதா? நான் என்ன எனக்கு உதவிக்கா கூப்பிடறேன். ”

“இல்லம்மா நீ பெரிய பொண்ணு. சமாளிச்சுகிடுவ. ரஹ்மத் சின்னவ இல்லியா? அதான்..”

“எப்பப் பாத்தாலும் இப்படியே சொல்லுங்க, நீ மூத்தவ, பெரிய பொண்ணு,  பொறுப்பா இருக்கணும்னு. எப்பவும் நாந்தான் அட்ஜஸ்ட் பண்ணனும்.  அப்பவும் அப்படித்தான், இப்பவும் அப்படித்தான்”.

“சரிம்மா, கோவப்படாத. நாங்க சீக்கிரமே அங்க வர்றோம்”.

ஆதங்கத்துடன் ஃபோனை வைத்துவிட்டு நிமிர்ந்தபோது சத்தம் கேட்டது.

டாம், டூம், டிஷும், .... “எப்படிடா நீ எடுப்பே” “ எடுத்தா என்னடா”

“டேய், டேய், நிறுத்துங்கடா. எதுக்குடா சண்டை இப்ப? கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விடமாட்டீங்களே”

“ம்மா, என் ஸ்கூல்பேக்கை அவன் ஏன் தொடறான்? அதில என் பாட்ஜ், காசெல்லாம் வச்சிருக்கேன். தொலைஞ்சா அவனா தருவான்?”

“என் ரப்பரைக் காணோம். அதனால உன் ரப்பர் எடுக்க வந்தேன். உன் பேக் என்ன பெரிய இதா? ஒருத்தரும் தொடக்கூடாதா?”

“டேய், அண்ணன்கிட்ட  மரியாதையில்லாம என்ன பேசுற நீ ?  ரப்பர் வேணும்னா கேக்க வேண்டியதுதானே? ஏண்டா, நீதானே பெரியவன், சின்னப் பையனைப் போட்டு இப்படி அடிக்கிற? என்ன வேணும்னு கேட்டுக் கொடுக்க வேண்டியதுதானே?எப்பப் பாத்தாலும் சண்டை போட்டுகிட்டு.. பெரியவன்ற பொறுப்பு கொஞ்சமாவது இருக்கா? கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணத் தெரியாதா?....” சட்டென்று நிறுத்தினேன். எங்கேயோ கேட்டது போல இருந்தது.

Post Comment

பனியில்லாத மார்கழியா? மழை இல்லாத பதிவர் சந்திப்பா?




  சென்ற வெள்ளிக்கிழமை ஷார்ஜாவில் ஆஸிஃப் மீரான் வீட்டில் நடந்த பட வெளியீடு மற்றும் பதிவர் சந்திப்புக்கு நானும், என்னவரும் போயிருந்தோம். பதிவில் மட்டுமே படித்திருந்த மற்றும் இதுவரை படித்திராத பல பதிவர்களை நேரில் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது.

வீட்டு வாசலிலும், வீட்டினுள்ளும் சுவர்களே தெரியாமல் படத்தின் கலர் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது வேட்டைக்காரனுக்கு வந்துவிட்டோமோ என்று நினைக்க வைத்தது.

ஜெஸீலாவும், கலைச்சாரல் மலிக்காவும் வந்திருந்தனர். வெள்ளிக்கிழமை, விருந்தினர் வருகை போன்ற காரணங்களால் சஃபீனா, ஜலீலா, பிரியாணி நாஸியா ஆகியோர் வரமுடியவில்லை. அமீரகத்தில் வேறு பெண்பதிவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. (இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள்).

உணவுக்குப்பின் பட ரிலீஸ் தொடங்கியது. உண்ட பிரியாணி, படத்தில் கடி அதிகமாக இருந்தால் தாங்கிக் கொள்ளும் தெம்பு தரும் அல்லது மொக்கையாக இருந்தால் தூக்கம் தரும் என்ற நம்பிக்கையுடன் வசதியாக ஸோஃபாவில் அமர்ந்துகொண்டோம். விருந்தினர்களான எங்களுக்கு ஸோஃபா டிக்கட்டும், விசில் அடித்து, கைதட்ட அழைத்து வரப்பட்டவர்களுக்கு தரை டிக்கட்டும் கொடுத்து நாங்களும் ஒரு பேரரசு-விஜய் கூட்டணிதான் என்று உணர்த்தினர் கீழை ராஸாவும், ஆஸிஃப் மீரானும். ரசிகர்களும் போட்ட பிரியாணிக்கு மேலேயே கைதட்டி, விஸிலடித்து நாங்களும் விஜய் ரசிகர்களுக்கு சளைத்தவர்களல்ல என்று நிரூபிக்கத் தவறவில்லை.  சில இடங்களில் வசனங்களே கேட்காத அளவிற்குப் போக, அண்ணாச்சி, வாத்தியார் போல டேய், உஷ் என்று அதட்டிய பிறகுதான் சத்தம் குறைந்தது!!

படம் அருமையாக இருந்தது. குத்துப் பாட்டும், ஸ்டண்டும் இல்லாத குறையே தெரியாமல் ஒரு முழுநீளக் காமெடிச் சித்திரம். அவற்றைச் சேர்த்துவிட்டால் உலக அரங்குகளிலேயே  வெளியிடலாம். (படம் பார்க்க இங்கே செல்லுங்கள்).

பட இயக்குனரான கட்டிடக்கலையாளர் (ஆர்க்கிடெக்ட்) கீழை ராஸாவிடம் திரைப்படக் கல்லூரியில் படித்தீர்களா என்று ஒருவர் கேட்க (இதெல்லாம் ரொம்ப ஓவர்), இன்னொருவர்  ஆர்கிடெக்ட் என்றாலும், இயக்குனர் என்றாலும் படம்  காட்டுவதுதான் வேலை. அதனால் தனிப்படிப்பு தேவையில்லை, அவரது வேலை அனுபவமே போதுமானது என்று “உண்மை”யை உரக்கச் சொன்னார்.

பிரியாணி பாத்திரம் எடுத்துப் போகும்போது “எங்கே செல்லும் இந்தப் பாதை” பாட்டு போட்டது நல்ல டைமிங் சென்ஸுக்கு ஒரு உதாரணம். பிரியாணியைப் பரிமாறக் கரண்டி எடுத்துச் செல்ல மறந்ததால், தண்ணீர் பாட்டில் கரண்டியாக உருவெடுத்தது புதுமை.


படத்தை உருவாக்கக் கடுமையாக உழைத்திருப்பது நன்றாகத் தெரிந்தது. படக்குழுவினர் எல்லாருக்குமே பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!!  என்னவரும் மிக ரசித்துப் பாராட்டினார்.

 பிறகு பதிவர்கள் அறிமுகம் நடந்தது. நான் ஹுஸைனம்மா என்று அறிமுகப் படுத்திக் கொண்டதும் எழுந்த ஆரவாரமும், கைதட்டலும் இளையதலைமுறையை வழிநடத்திச் செல்ல வேண்டிய பெரும்பொறுப்பு என்முன்னே இருப்பதை எனக்கு உணர்த்தின. பின்னர்,  பினாத்தல் சுரேஷும், சென்ஷியும் என்னிடம் “நீங்க வர்றதை ஏன் முன்னாடியே சொல்லலை” என்று மீண்டும் மீண்டும் கேட்க,  அருகேயிருந்த ஆஸிஃப் அண்ணாச்சி, “சொல்லியிருந்தா மட்டும்?” என்று அவர்களிடம் கேட்டு, எனக்கென ஒரு கோஷ்டி காங்கிரஸ் உருவாகியிருக்கக் கூடிய சாத்தியத்தை முளையிலேயே கிள்ளினார். ஆனாலும், அழகாக இருகைகளால் கும்பிட்டு “வணக்கம் ஹுஸைனம்மா” என்று சொன்ன ஆதவனும்,  சிநேகமாய்ச் சிரித்த குசும்பனும் (நமபலாமா?), ”ஹுஸைனம்மா என்றவுடன் ஒரு வயதான, அதிக எடை கொண்ட ஒருவரை எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமே” என்ற மூத்தப் பதிவரும் எனக்கும் பதிவுலக அரசியலில் ஒரு எதிர்காலம் இருக்கின்றது என்ற நம்பிக்கையைத் தந்தார்கள்.  நாஞ்சில் பிரதாப், நான் வருவதாகச் சொன்னதால் பயந்து வரவில்லை போல. என்னவருக்குத்தான் ரொம்ப வருத்தம், அவருக்கென ஆதரவுக்குரல் கொடுக்கும் அவரது ஊர்க்காரரைச் சந்திக்க முடியவில்லையே என.

பின்னர் சிறப்பு விருந்தினரான திரு. ஜின்னாஹ் சர்புதீன் அவர்கள் உரையாற்றினார். தமிழின் பெயரால் மதங்களை மறந்து தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே ஒன்றுக்கூடி வாழ்வதைப் பெருமைபடுத்தினார். அவர் சுவைபடப் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு பதிவர் சத்தமாகக் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தது நிரடலாக இருந்தது.

பதிவர் சந்திப்பென்பதால் மழை பெய்யுமோ என்று பயந்து கொண்டிருந்த எனக்கு மழை பெய்யாதது ஆறுதலாயிருந்தது. ஆனால், நான் கிளம்பி அபுதாபி  வரும்போது  சொன்னார்கள், ஷார்ஜாவில் நல்ல மழை (படத்தைப் பாத்துட்டு இயறகையே கதறிடுச்சு) என்று. உடனே “நல்லார் ஒருவர் உளரேல்..”னு ஆரம்பிச்சிராதீங்க. இப்பல்லாம் மழை பெய்ஞ்சா நகரமே வெள்ளக்காடா மாறிப் போகிற  நிலவரப்படி, நாம இருக்கிற ஊர்ல மழை பெய்யலன்னாதான் நாம நல்லவங்க. அதனால நானும் நல்லவதான்!!

Post Comment

டிரங்குப் பொட்டி - 4




கவிதையின் கதை:

என்னமோ எனக்கும் அந்த ஆசை வந்துடிச்சி. நிச்சயத்துக்கும், கல்யாணத்துக்கும் நடுவில கூட கவிதை எழுதணும்னு தோணலை. இப்பப் போயி, ஹூம், என்னத்தச் சொல்ல!!

காலேஜுல கொஞ்ச நாள் வேலைபாத்தப்ப, பக்கத்தில ஒரு பொண்ணு, அவ டேபிளைக் குப்பை மாதிரிப் போட்டு வச்சிருப்பா. எனக்கோ எல்லாம் தூசி தும்பில்லாம அழகா அடுக்கி வச்சிருக்கணும். பக்கத்து டேபிள் எனக்கு பார்வைல பட்டுகிட்டே இருக்குங்கிறதால எரிச்சல் எரிச்சலா வரும். நானாவது அடுக்கித் தரேண்டின்னு அவகிட்டச் சொன்னா, பதறிடுவா. டச் பண்ணாத, எனக்கு இப்படி இருந்தாத்தான் வசதிம்பா. ஸ்டூடண்ட்ஸ் சப்மிட் செஞ்ச ரெக்கார்ட், அஸைன்மெண்ட்டெல்லாம் கேட்டு வந்தாங்கன்னா ஒருமணி நேரமாவது தேடாமக் கிடைக்காது. கிடைக்காமலே போனதும் உண்டு. (முரண் அப்படின்னு தலைப்பு போட்டு இதையே ஒரு கவிதயா எழுதியிருக்கலாமோ? ஆஹா, வட போச்சே..)

வேலை இடத்தில மட்டுமில்ல, வீட்டிலயும் அப்படித்தான். அதிலயும், கிச்சனை அவ்வளவு சுத்தமா வச்சுருப்பேன். சமையலும் அவ்வளவா வராதது ரொம்ப வசதியாப் போச்சு.

ஒரு நெருங்கிய உறவினர் வீட்டுக்கு அடிக்கடி போவேன். (பெரிய மாமியெல்லாம் இல்லை, அது சும்மா ’ப’னாவுக்குப் ’ப’னா வரணும்கிறதுக்காக...) அவங்க கிச்சன் ரொம்ப அழுக்கா இருக்கும். நானும், அவங்க நல்ல சமையல் நிறைய செய்யறதுனால நேரமே இல்லை போலன்னு போற நேரமெல்லாம் தேச்சு, அடுக்கிச் சுத்தம் செய்து கொடுப்பேன். (தெரிஞ்ச வேலையைத்தானே செய்ய முடியும்..)  மீண்டும் மீண்டும் அதே நிலையில் கிச்சன் இருக்கவும்தான் மேலே சொன்ன தோழி ஞாபகத்துக்கு வந்தா. அவங்க வீடு, அவங்க இஷ்டம். என் விருப்பம் என் எல்லைக்குள் மட்டுமேன்னு புரிஞ்சுகிட்டேன். இதத்தான் கவிதையிலச் சொல்ல வந்தேன். சொல்லியிருந்தேனா? ஏங்க, காதல் பத்தி மட்டும்தான் கவிதை எழுதணுமா?


பதிவர் சந்திப்பும், மழையும்:

அபுதாபி, துபாய், ஷார்ஜா மற்றும் ஓமன்னு எல்லா இடத்திலயும் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது. ஒரு பத்து வருஷம் முன்ன வரை, வருஷத்துக்கு ஒரு முறை தூறல் விழுந்தாலே அதிகம். இப்ப இப்படி மழை!! இதுக்கெல்லாம் இங்க நடுற மரங்கள்தான் காரணம்னு ஒரு பேச்சு நடக்குது. மரம் நடுறதெல்லாம் ஷேக் ஸாயத் காலத்தோட போச்சு. (இப்ப இருக்க அதிபரின் மறைந்த தந்தை).

இங்கயும் இப்ப காடுகளை அழிச்சு கட்டிடங்கள் கட்டுறாங்க. காஃப் (Ghaf - Prosopis cineraria)  மரங்கள் இந்த மண்ணின் தனித்தன்மை. இந்தக் காடுகளை நகரத்தின் நடுவே கூட முன்பு நிறைய பார்க்கலாம். இப்ப இந்த மரத்தை அரசின் அனுமதியின்றி வெட்டக்கூடாதுன்னு தடை போடற அளவுக்கு அரிதாகிவிட்டது.

சென்னைல ரெண்டு, மூணு வருஷம் முன்னாடி புயல்ல நிறைய மரங்கள் விழுந்தன. காரணம் என்னன்னு சொன்னாங்கன்னா, அழகுக்காக நடப்படும்  “Flame of the forest" மரத்தின் (நெருப்புச் சிவப்புல பூப்பூக்கும், தமிழ்ப் பெயர் தெரியல)  வேர்கள் ஆழமாகப் போகாது. அதனால சின்னப் புயலுக்குக் கூட நிக்காம விழுந்துடுமாம். அந்த வகை மரங்கள்தான் நிறைய விழுந்தன அப்போ!!  இப்ப இங்கயும் இந்த மரங்கள்தான் நிறைய தென்படுகின்றன. வேப்பமரங்களும் நிறைய இருக்கு!! புதிதாக நடப்படும் மரங்கள் அழகுக்காகத்தானே தவிர, மண்ணின் வளத்துக்கோ, மழைக்கோ எவ்வளவு உதவும்  என்று தெரியவில்லை. எப்படியோ, மரங்கள் நட்டா சரிதான்!! Something is better than nothing.

எனக்கென்னவோ, மழைக்குக் காரணம், ஷார்ஜாவில வர்ற வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருக்க பதிவர் சந்திப்புதான்னு தோணுது!!

குளிர்:  

ஏற்கனவே குளிர் லேசா ஆரம்பிச்சிருந்துது. மழையில இன்னும் அதிகமாகிவிட்டது. பசங்க ரெண்டு பேருக்கும் காலையில குளிர்ல தலை, காது, மூக்கு மறைக்கும் “Monkey Cap" போட்டுட்டுப் போறது எவ்ளோ கஷ்டமாயிருக்கு? இப்பவே ஸ்டைல் பாக்கிறாங்க. பெரியவன் முடியவே முடியாதுன்னு சாதிச்சுட்டான். என் வற்புறுத்தலினால ஜெர்கின்ஸின் “hood"ஐ தலையில சும்மா வச்சுட்டுப் போறான் பெயரளவில!!

தினம்தினம் வீட்டில் வார்த்தைக்கு வார்த்தை எதிர்வாதம், பிடிவாதம் எல்லாம்  பெரியவர் டீனேஜில் நுழைகிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது. அவங்கப்பாவிடம் சொன்னால், அவன் டீனேஜ்,  அதனால் வாதம் செய்கிறான். உனக்கும் இன்னும் டீனேஜுன்னு நினைப்பா? என்று அவர் பாணியில் தாக்குகிறார். மூன்று ஆண்களுக்கு நடுவில் நான் தனியாக!!

சின்னவனும், ஆறரை வயசுதான் ஆகுது, அதுக்குள்ளே என்னா அலப்பரை பண்றான்? அப்படியே அண்ணனை இமிடேட் செய்றான். வீட்டிலருந்து அஞ்சு நிமிஷ நடையில பள்ளி. அதுக்குள்ள, தொப்பியை இப்பக் கழட்டிடவா? இப்பக் கழட்டிடவா?ன்னு ஒரு நூறு தரம் கேட்டுகிட்டு வருவான்.  பள்ளியின் வாசல் தென்பட்டதும் அனுமதிக்கெல்லாம் காத்திராமல் கழட்டித் தந்துவிடுவான். கிளாஸ்மேட்ஸ் யாராவது  பார்த்துவிட்டார்களா என்ற அவன் தவிப்பைப் பார்க்கச் சிரிப்பாக வரும். பயலுக்கு இப்பவே கேர்ள் ஃபிரண்ட்ஸ் நிறைய இருக்காங்க!!

Post Comment

ஆண்டவா.. காப்பாத்து....








Picture: blogs.trb.com



மீண்டும் அலங்கோலமாய்க் கிடந்தன
பெரிய மாமி வீட்டில்
போன தடவை வந்தபோது
அடுக்கிய சமையலறை அலமாரியும்
அழுந்தித் தேய்த்தப் பாத்திரங்களும்
எனக்கான எல்லைகள் மட்டும் தெளிவாய்...
 



டிஸ்கி: ஹை.. நானும் எண்டர் தட்டிட்டேனே!! அப்புறம், ஏதோ கவிதப் போட்டி நடக்குதாமே, அதுக்கு இத எப்படி அனுப்புறதுன்னு ... அடிக்காம சொல்லித்தாங்க, ப்ளீஸ்!!


கவிதை எழுதச்சொல்லி ஊக்குவித்த ஷஃபிக்கும், ஏஞ்சலுக்கும்  நன்றி!!







Post Comment

நான் மறக்கவில்லை




இது அமீரக தேசிய தினம் பற்றிய பதிவு. ஆனா அப்படித் தலைப்பு வச்சா யாரும் வரமாட்டீங்களே, அதனாலத்தான் கவிதை மாதிரி ஒரு தலைப்பு!!எப்படியோ வந்துட்டீங்கல்ல, முழுசும் வாசிச்சுடுங்க.



1971, டிசம்பர் 2-ந்தேதி அபுதாபி, ஷார்ஜா, துபாய், மற்றும் இன்னபிற (மொத்தம் ஏழு) சமஸ்தானங்களைச் சேர்த்து ஐக்கிய அமீரகம் என்று ஒரே நாடாக்கினாங்க. அதைத்தான் வருஷாவருஷம் தேசிய தினம்னு கொண்டாடுறாங்க. அதற்குச் சிலகாலம் முன்வரை பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தில் இருந்தது இந்த சமஸ்தானங்கள்.  இதுதான் தேசிய தினத்தின் வரலாறு!! (இதுலயும் வரலாறா...)

ஒரு முப்பது வருஷம் வரைக்கும் அதிக ஆடம்பரமில்லாமத்தான் கொண்டாடிகிட்டு இருந்தாங்க. இந்த காதலர் தினம், மகளிர் தினம், அன்னையர் தினம், அப்பா தினம், அக்கா தினம்னு எல்லாமே சந்தைப்படுத்தப்பட்டு திடீர்னு எல்லாராலயுமே கொண்டாடப்பட ஆரம்பிச்ச மாதிரி, அமீரக தேசிய தினமும் ஒரு பரபரப்பான தினமாகிவிட்டது இப்போது.

இந்நாட்டு குடிமக்களோடு இணைந்து, இங்கு வாழும் வெளிநாட்டினரும் இத்தினத்தை ஆவலோடு எதிர்பார்த்து இருப்பர். நாட்டுப்பற்றுடன், அன்றைய தினம் விடுமுறை என்பதும் ஒரு காரணம்!! சமீப காலமாக இங்கு வாழும் வெளிநாட்டவர்களும் இக்கொண்டாட்டங்களில் ஆர்வத்துடன் கலந்துகொள்கின்றனர்.




இத்தினத்தையொட்டி நாடு முழுதும் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருக்கும். பிரபல அலுவலகக் கட்டிடங்களும் ஒளிமயமாக இருக்கும். பார்க்கும்போதே நம்மையும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். பற்பல சிறப்பு நிகழ்ச்சிகள் அரசாலும், தனியாராலும் ஏற்பாடு செய்யப்படும்.


முதல் பரிசு வாங்கிய கார்


அவை மட்டுமல்ல, கார்களும் விதவிதமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும்.  ஒரு குடும்பத்தின் கௌரவத்தில், அவர்களின் காருக்குச் செய்யப்பட்டிருக்கும்  அலங்காரத்திலும் பங்கு இருப்பதாகவும், அது தேசப்பற்றின் அளவுகோலாகவும் (!!) இருப்பதாக, அமீரகப் பெண்மணியொருவர் பேட்டி  கொடுத்திருந்தார்!! இம்முறை அழகிய அலங்காரத்திற்கானப் பரிசுகளும் காரின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் சில அலங்கரிக்கப்பட்ட கார்கள் இங்கே பார்க்கலாம்.



அதிலும் இம்முறை, சரியாக இந்நேரம் பார்த்து துபாய் வேர்ல்ட்டின் கடன் பிரச்னை வெளிவர,  இல்லை, நாங்கள் நன்றாகவே இருக்கிறோம் என்று காட்ட வேண்டிய அவசியம் வந்ததால் கொஞ்சம் அதிகப்படியானக் கொண்டாட்டங்கள்.




கடைகளிலும், தேசிய தின சிறப்பு வெளியீடுகளாக, அமீரகக் கொடிகள்,  பேட்ஜுகள், ஸ்டிக்கர்கள், தொப்பிகள், உடைகள், கேக்குகள், சாக்லேட்டுகள் என்று இன்னதுதான் என்றில்லாமல் எதை எடுத்தாலும் தேசியக் கொடியின் வர்ணங்களில்!!


அன்றிரவு உலகிலேயே மிகப் பெரிய வாண வேடிக்கை (Firecrackers show) அபுதாபி கடற்கரைப் பக்கம் நடந்தது .  மிக அழகாக, வண்ணமயமாக இருந்தது.

அன்று மாலைவேளையில் ஊர்வலமாகக் கார்களில் இளைஞர்கள் வித்தைகள் காட்டிப் பறப்பது வழக்கம். போன வருடம் ஆண்களுக்குப் பெண்கள் சளைத்தவர்களல்ல என்று நிறைய இளைஞிகளும் களத்தில் இருந்தனர். ஆனால் இந்த வருடம் காரோட்டமெல்லாம் கொஞ்சம் குறைவாத்தான் இருந்துது; அதிலயும் பொம்பளைப் புள்ளைகளை ரொம்பக் காணோமேனு என்னவர் ரொம்பவே வருத்தப்பட்டார்.


இந்நாட்டினர்  தமது நாட்டின் மீதான பற்றில் தேசிய தினத்தைக் கொண்டாட, மற்றவர்களுக்கு "A home away from home" ஆகிவிட்ட இந்நாட்டின் மீதான தம் நேசத்தை நிரூபிக்க, கொண்டாட வேண்டியக் கட்டாயமாகவும் ஆகிவிட்டது!!

இன்னொரு காரணம், நம்மூருல, இதுபோன்ற தினங்கள்ல, நம்ம வீட்டு வாசல்ல அல்லது கார்ல ஒரு கொடிகூட க/ஒட்டி வைக்க முடியாது. கட்டினா ஒரு குரூப் முறைப்பாங்க, கட்டலைன்னாக்க இன்னொரு குரூப் “தேசப்பற்றில்லாதவர்கள்”னு முத்திரை குத்த காத்துகிட்டிருப்பாங்க.  இதுல அன்னிக்கு நம்ம வெளியே கூட எங்கயும் போக முடியாது.  என்ன நடக்குமோன்னு பயந்து இல்லங்க, எதுவும் நடந்துருமோன்னு இந்த போலீஸ்காரங்க சோதனைன்னு பண்ற அலப்பரைக்குப் பயந்துதான். ஊருக்குப் போக, திரும்பி வர்றதுக்குக் கூட சில தேதிகளைக் கவனமாத் தவிர்க்க வேண்டியிருக்கு.

அதையும் மீறி, ஆசையா கொடியோ அல்லது வேற ஏதாவதோ ஒட்டினா, அதையும் தப்பாச் செஞ்சுட்டோம்னு போட்டுக் கொடுத்துருவாங்களோன்னு பயமாயிருக்கு. இந்த மாதிரி குற்றங்களில் மாட்டினா, மீண்டு வர்றது கனவுதான். இந்தக் கட்டுப்பாடுகள்தான் நம்மவர்களை வெளிநாடுகளில் இதுபோன்றக் கொண்டாட்டங்களில் ஆர்வத்துடன் பங்குபெற வைக்கிறதோ என்னவோ.

சில வருடங்கள் முன்பு படித்தேன்:  இந்தியாவில் ஒரு ரூபாய் காயினில் ஓட்டைப் போட்டு செயினில் டாலராகப் போட்டிருந்ததைப் பார்த்த ஒருவர் அவருக்கு அறிவுறுத்தினாராம், அவ்வாறு செய்வது இந்திய அரசியல் சட்டப்படி மிகப் பெரிய குற்றம் என்று!!

ஒரு விதத்துல, இவங்க கொண்டாடறதைப் பாத்தாப் பொறாமையா இருக்குது. எவ்ளோ ஃப்ரீயா, சந்தோஷமா, கொண்டாடுறாங்க எல்லாரும் ஒண்ணாச் சேர்ந்து!! ஒரே மொழி, மதம் என்றாலும் கூட, நம்மைப் போல மாநிலங்கள் வாரியாகக் கூடப் பிரிந்திருக்கவில்லையே இவர்கள். ஒரு மாநிலத்துக்குக் கஷ்டம் என்றால் அடுத்த மாநிலத்தவர் ஓடி வந்து உதவுகிறார்களே!! பல இனத்தவர்களும் உண்டு இவர்களில், ஆனாலும் பிரிவினையில்லை.

அதுவுமில்லாம, ஒரு விஷயம் கவனித்தேன், இங்கே தேசியக் கொடியை/ வர்ணங்களை எதிலும், அதாவது, டி-ஷர்ட்,தொப்பி, கேக், சாக்லேட், இன்னும் என்னவாக வேண்டுமானாலும் உருவகப் படுத்திக் கொள்கிறார்கள். பல நாடுகளிலும் அவ்வாறே செய்வதைக் கண்டிருக்கிறேன். இதுலயும் நம்மூரில கொடியை அப்படி பண்ணக்கூடாது, இப்படிச் செய்யக்கூடாதுன்னு ரொம்பக் கட்டுப்பாடு இருக்கு. போன வருஷமோ அதுக்கு முன்னாடியோ, ஒரு வெளிநாட்டுல உள்ள இந்தியத் தூதரகத்துல இந்தியத் தேசியக்கொடி மாதிரி கேக் செஞ்சு வெட்டி சாப்பிட்டுட்டாங்கன்னு ஒரே பரபரப்பா இருந்துது. யூ.ஏ.இ.-ன் தேசியச் சின்னத்தை (Falcon) அனுமதியில்லாமல் பயன்படுத்தக் கூடாது என்று புதியச் சட்டம் இங்கு நேற்று வந்திருக்கிறது.

அப்புறம், அடுத்த பதிவில, ஒருவேளை ஒரு நல்ல செய்தி பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கலாம் உங்களோடு!!  (பதிவெழுதுறதை நிறுத்துவேன்னு மட்டும் கனவு காணவேண்டாம்).

Pictures: GulfNews.com,  team1uae.blogspot.com, www.manipaldubaiblog.com




Post Comment

வரலாறும், பொறியலும் ...




டிஸ்கி: தலைப்பில் பிழையில்லை.

பதிவு எழுத வந்து ரெண்டே ரெண்டு மாசம் மட்டுமே ஆன பதிவுலகக் குழந்தையான  என்னையும் வரலாறு எழுதச் சொன்னதுலயே உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும் நான் ஒரு "Child Prodigy"ன்னு!! (வளர்ந்ததுக்கப்புறம் இந்த prodigy எல்லாம் காணாமப் போயிடுறாங்களேன்னு நக்கல் பேசக்கூடாது.)

முஸ்லிம்கள்னா அசைவம்தான் அதிகம் சாப்பிடுவாங்கன்ற முதுமொழிக்கு ஏற்ப அசைவமே சமைச்சுகிட்டிருந்த நான், எடை எக்கச்சக்கமா கூடிப்போயி உக்கார்றதும், எந்திக்கறதுமே ஒரு பெரிய வேலையா ஆகிப்போன நிலையில கொஞ்சமாவது சைவத்துக்கு மாறலாம்னு முடிவெடுத்துச் செய்ய ஆரம்பிச்சப்போதான் முதுமொழிக்கான காரணம் புரிஞ்சது. அசைவத்தை எப்படி சமைச்சாலும் ருசியா இருக்கும்; காய்கறிகளை கொஞ்சம் கருத்தா சமைச்சாதான் வாயிலயாவது வைக்க முடியும்னு தெரிஞ்சுது.

(இந்த இடத்தில, தொடர் எழுத அழைச்ச பீர் நினைக்கிறார்: “என்னது, இந்தம்மாட்ட எழுத வந்த கதயச் சொல்லச்சொன்னா, இது சமைக்க வந்த கதய சொல்லிகிட்டிருக்கு?”.  வெயிட் பீர், எங்க வெயிட்டக் குறைச்ச கதையிலதான் அந்தக் கதையும் இருக்கு.)

இருந்தாலும் எடுத்த முடிவில பின்வாங்கக்கூடாதுன்னு உறுதியோட வலையை வலம்வந்து அறுசுவைங்கிற தளத்துக்குள்ள நுழைஞ்சா, அங்கே சுஹைனா (சுமஜ்லா)வோட அறிமுகம் கிடைச்சுது. அங்கயும் கவிதைகள்  எழுதிகிட்டிருந்த அவர், அவரோட ஹஜ் பயணத்தைப் பத்தி அந்தத் தளத்துல எழுத நினைச்சப்போ, அனுமதி கிடைக்காததால, தனியா பிளாக் ஆரம்பிச்சார். அதைப் படிக்க வந்தப்பதான் இங்க தனியா ஒரு ப்ளாக் மாஃபியாவே நடந்துகிட்டிருக்கது தெரிஞ்சுது!!

கிட்டத்தட்ட ஒரு ஏழெட்டு மாசமா ஒழுங்கா பிளாக்குகளைப் படிச்சுகிட்டு மட்டுமே இருந்தேன் . இடையில அறுசுவையில சில விவாதங்களிலும், அனுபவங்களையும் நான் எழுதப்போக, அப்பதான் எனக்குள்ள ஒளிஞ்சுகிட்டு இருந்த எழுத்துத் தெறம எனக்கே தெரிஞ்சுது. இதுல சில பிளாக்குகளைப் பாத்துட்டு, Why not me? என்ற கேள்வி மீண்டும் மீண்டும் எழவும் (இழவு இல்லை; வந்தது என்ற அர்த்தம்) எழுத ஆரம்பிச்சேன். (புலி/பூனை,  மயில்/வான்கோழி, பருந்து/குருவி.. இப்படியெல்லாம் உங்க மனசுக்குள்ள எண்ணங்கள் ஓடுதுன்னு எனக்குத் தெரியும்...)

பிளாக் எழுத ஆரம்பிச்சதில வேற ஒரு லட்சியமும் இல்ல.என் எழுதும் ஆசையைத் தீர்த்துக் கொள்(ல்)வது மட்டுமே. ஆனா,  அப்படியே இந்த “காதல்” படத்தில சொல்ற மாதிரி, “முதல்ல ஹீரோ, அப்புறம் கட்சி, சி.எம்., பி.எம்” ங்கிற மாதிரி எனக்கும் வாய்ப்புக்கள் வரலாம் ஒருவேளை!! (ஈஸி, ஈஸி பீர்; கூல், கூல், தனியா ரூம்ல இப்படி வெறிபிடிச்ச மாதிரி கத்தினா தப்பா எடுத்துக்கப் போறாங்க!)


எழுத ஆரம்பித்துச் சில வாரங்கள் வாசகர்களோ, பின்னூட்டங்களோ அதிகம் இல்லாமல் ஈ ஓட்டிக் கொண்டிருந்தேன். அப்பத்தான் பிரபல பதிவர் அ.மு.செய்யது என்னை ஒரு தொடர்பதிவு எழுத அழைத்தார். அதில் நான் சொல்லியிருந்த முற்போக்கான சில கருத்துக்கள் எனக்கு பொதுமக்களிடையே பேராதரவைப் பெற்றுத் தந்தது. (சரி, சரி).  ஓடாத படத்துக்கு விளம்பரம் வேண்டி யாரையாவது வச்சு கேஸ் போடுவாங்களே, அது மாதிரி எனக்கும் விளம்பரம் கிடைச்சுது; எப்படி விளம்பரம் தேடிக்கிறதுங்குற யுத்தியும் கொஞ்சம் தெரிஞ்சுது!!


மிகக் கட்டுப்பாடாக வளர்க்கப்பட்டதாலும், ஒரு மிகமிகச்சிறிய அரசியல் பிண்ணனி இருப்பதாலும் எனக்கு சமூகச் சிந்தனைகள் (சிந்தனைகள் மட்டுமே) அதிகம்.  (அட, நம்புங்க!) அதையும் மீறி என் பதிவுகளில் தென்படும் மெலிதான நகைச்சுவைக்கு  முழுமுதற் காரணம் என்னவர்தான். ஒரு ஆறேழு மாசம் முன்னாடி ரிஸெஷன்ல இவர் வேலைக்கும் அபாயம் வர்ற மாதிரி இருந்துது. என்கிட்ட விஷயத்தைச் சொல்லிட்டு குறட்டை விட்டு தூங்கிட்டார். நான் தூக்கம் வராமல் தவிச்சு, கோபத்தில் இவரை எழுப்பி,  எவ்வளவு லோன் இருக்கு, கவலையே இல்லாம இப்படி தூங்குறீங்களேன்னு கத்த, அதுபத்தி லோன் கொடுத்தவந்தான் கவலைப்படணும். நான் ஏன் கவலைப்படணும்னு சொல்லிட்டு மறுபடியும் குறட்டை... இப்பவெல்லாம் சண்டை ஆரம்பிக்குமுன்பே சொல்லிவிடுவேன், நடுவில எதாச்சும் ஜோக்கடிச்சீங்க, கொன்னுடுவேன் என்று. அதனால் என் மொக்கை பதிவுகளுக்கு காரணம் அவரே !! (நாஞ்சில் பிரதாப், உங்க கேள்விக்குப் பதில் கிடைச்சுதா?)

நிற்க!! (எழுந்து நிக்காதீங்க, அப்படின்னு பயங்கர மொக்கையெல்லாம் போடமாட்டேன்)

பள்ளிக்காலம் முதலே தமிழ்ப் பாடம் பிடிக்கும். தமிழில் வாசிக்கும் ஆர்வமும்  இருந்தது. அதாவது புரியாத இலக்கியம், கவிதை, பின்/முன் நவீனம் இந்த மாதிரி ஆர்வம் இல்லை. சாதாரண பேச்சுத்தமிழ் நடையில் ஒரு “காமன் வுமன்” ஆன எனக்குப் புரியும்படியான எழுத்து பிடிக்கும். வெகுஜன பத்திரிக்கைகள்தான் என் ஆர்வத்திற்குத் தீனி போட்டன.

தமிழ் எழுத முதல்ல tamileditor.org-ம்,  தற்போது NHM editor-ம் உபயோகிக்கிறேன்.  திரட்டிகள் பற்றி அதிகம் தெரியவில்லை. எப்படி உபயோகப்படுத்திக்கொள்வது என்று யாராவது டியூஷன் எடுப்பார்களா? என் பதிவுகள் அதிகம் பேரை சென்றடைய தமிழ்மணம், தமிழிஷ் ஆகியவற்றில் சமர்ப்பிக்கிறேன், அவ்வளவே. அபுதாபியில் பதிவர் பட்டறை நடக்குமா என்று எதிர்பார்த்திருக்கிறேன். (ஆனா, கவிதை, இலக்கியம்னு பேசுவீங்கன்னா, வரமாட்டேன்).

நான் ஏற்கனவே சொன்னதுபோல, எழுத்துலகில் நான் இன்னும் ஒரு குழந்தைதான். குழந்தை என்ன செய்தாலும் சுற்றியிருப்பவர் மகிழ்வதுபோல, என் எழுத்துக்களையும் படித்து ஆதரவளிக்கும் நீங்களே என் வளர்ச்சிக்குக் காரணம். (கட்சிக் கூட்டத்தில பேசற மாதிரி இருந்தாலும், இதுதான் உண்மை). முடிந்தவரை பிழைகள் இல்லாமல் எழுத முனைகிறேன். சந்திப் பிழை, இலக்கணப் பிழைகள் அதிகம் அறியாததால் இருக்கலாம்; எழுத்துப் பிழைகளைக் கவனமாகத் தவிர்க்கிறேன். எனக்கு பதிவுகள் குறித்து சந்தேகங்கள் ஏற்பட்டால் தயங்காமல் உதவி செய்யும்/ செய்யப்போகும் சக பதிவர்களுக்கு மிக நன்றி.

இதைத் தொடர யாரைக் கூப்பிடலாம்? போன தொடர்ல நான் கூப்பிட்டவங்கள்ல, புதுகைத் தென்றல் அக்கா தவிர யாரும் எழுதல, ரொம்பப் பிஸியாம்!!

1. நாஞ்சில் பிரதாப்
2. அ.மு.செய்யது (பழி வாங்கிட்டேனே!!)
3. ஸாதிகா அக்கா
4. தேவன்மாயம்

இனி யாராவது தொடர்பதிவுக்கு அழைப்பீங்க?

 

 

   

Post Comment

எய்ட்ஸும், கேன்ஸரும்





டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் தினம்.



எண்பதுகளின் தொடக்கத்தில் அங்கங்கே தென்பட ஆரம்பித்த இந்நோய் இன்று நீக்குபோக்கில்லாமல் எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது. எய்ட்ஸ் வருவதன் முக்கிய காரணம் எல்லாரும் அறிந்ததே. அதாவது தவறான வாழ்க்கைமுறை வாழ்பவர்கள், ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடற்று வாழ்பவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் ஆகியோர் தெரிந்தே தருவித்துக் கொள்ளும் நோய் எய்ட்ஸ். அதுதவிர, சுத்திகரிக்கப்படாத ஊசி, சோதிக்கப்படாத இரத்த மாற்று (blood transfusion), நோயை மறைத்துத் திருமணம் செய்பவர்களின் மனைவி, மக்கள் என்று அறியாமல் அதன் வலைக்குள் சிக்கிக்கொள்பவர்களும் உண்டு.


இந்த நோய்க்கு மருந்து இல்லை, வந்தால் நிச்சயம் மரணம்தான் என்பதால் இதைக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த பல்வேறு அரசுகளும், WHO, UN ஆகியவை கணக்கில்லாமல் பணத்தைச் செலவழித்து முயன்று கொண்டிருக்கின்றன.ஆனால் HIV/எய்ட்ஸ் மூலம் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.


வாழ்க்கையைச் சரியான முறையில் வாழ்ந்து வந்தால் எய்ட்ஸ் நோய் பாதிக்காது. ஏற்கனவே கூறியபடி முறையற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கே இந்நோய் பீடிக்கும் அபாயம் உள்ளதால், இதைக் குறித்த அறிவுரை என்னவாக இருக்க வேண்டும்? இல்லறத்தை நல்லறமாகப் பேணுவோம், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உடலுறவு கூடாது என்பதை மெதுவாகச் சொல்லிக் கொண்டு, அது முடியவில்லை என்றால் ஆணுறை பயன்படுத்துங்கள் என்று சத்தமாக  நல்வழி காட்டுகிறார்கள்!!


முழுக்க முழுக்க தனிப்பட்ட ஒருவனின்/ ஒருத்தியின் திமிரெடுத்த ஆசைகளினால் வரும் நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கங்களும், ஐ.நா., உலக சுகாதார மையங்களும் இந்தளவு மெனக்கெட வேண்டிய அவசியம் என்ன? இதற்கு அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை, மருந்து என்று இந்திய அரசாங்கம் செலவழிக்கும் தொகையும் மிக அதிகம். அதை வைத்துச் சில தொண்டு நிறுவனங்கள் ஆதாயம் பார்க்கும் கொடுமையும் நடக்கிறது.








இது போன்ற இன்னொரு கொடுமையான நோய் புற்றுநோய்!! இந்நோயால் பீடிக்கப்பட்டவர்களுக்கு சரியான முறையில், சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப் பட்டால் மீண்டு விடலாம்.  உடலில் பலபாகங்களில் வரக்கூடியது.   ஒருவரின் புகை, குடி, தவறான உணவுப் பழக்கங்கள் காரணமாக இந்நோய் தாக்குவதாகக் கூறப்பட்டாலும் பாதிக்கப்பட்ட பலரும் தவறான பழக்கங்கள் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். கெட்ட பழக்கங்கள் இல்லாத ஒருவருக்கு கேன்ஸர் வருவதன் காரணம் இதுவரை அறியப்படவில்லை. அதுபோல காலம்காலமாகக் குடியும், புகையுமாக இருப்பவருக்குக் கேன்ஸர் வராததும் புதிரே!!



மேலும் இந்நோய்க்கு எடுக்க வேண்டிய சிகிச்சைக்கு அதிகப் பணம் தேவைப்படும்.அரசாங்க மருத்துவமனைகளில் (சில) தரமான மருத்துவர்களும், சிகிச்சை உபகரணங்களும் இருந்தாலும், அங்கு சிகிச்சைக்கு நேரம் ஒதுக்கப்பட காத்திருக்க வேண்டும். நாம் காத்திருக்கலாம், நோய் காத்திருக்குமா? முதல்வரே அரசு மருத்துவமனையை நம்பாமல்தானே தனியாரிடம் சிகிச்சை பெறுகிறார்!!


அரசு மருத்துவமனைகளில் இருக்கும் அதிகப்படியான கூட்டத்தினால், நோயாளிகளுக்கு மிக அவசியமான ஆதரவும், ஆறுதலும் மருத்துவர்களால் தரமுடிவதில்லை. இன்னும் பல காரணங்களால் அரசு மருத்துவமனைகளை மக்கள் அதிகம் நாடுவதில்லை. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் தனியார் மருத்துவமனைகள் இதில் கொள்ளை லாபம் பார்க்கின்றன. ஒரு கட்ட சிகிச்சைக்கு மட்டுமே  குறைந்தது 15 லட்ச ரூபாய் தேவைப்படும். இது சாமானிய மனிதனால் புரட்டக்கூடியதா? 


இது தவிர, மேல் சிகிச்சை, மருந்துகள், தொடர் கண்காணிப்பு பரிசோதனைகள் என்று மிகுந்த செலவு பிடிக்கும் நோய் இது. நோய் வருமுன் மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தால் ஓரளவு சமாளித்துவிடலாம். நோய் வந்தபின் எடுப்பதற்கு காப்பீட்டு நிறுவனங்களின் கட்டண முறைகள் அத்துணை சாதகமாக இல்லை.


நோயிலிருந்து மீண்டு வருவதற்கும், சிகிச்சை விளைவுகளைத் தாங்கிக் கொள்ளவும் மிகுந்த மனதைரியமும், பொறுமையும், தன்னம்பிக்கையும் வேண்டும்.  அதோடு செலவுகளும் கைமீறிப் போனால்? 


திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கேன்ஸரால் பாதிக்கப்பட்டவர்கள் திருவனந்தபுரம் கேன்ஸர் இன்ஸ்டிடியூட் மற்றும்  சித்திரைத் திருநாள் மருத்துவமனைகளுக்கே செல்கின்றனர். 

 பதிவர் திருமதி. அனுராதா அவர்களின் கேன்ஸருக்கு எதிரான போராட்டத்தைப் பலமாதங்கள் முன்பே வாசித்திருக்கிறேன். பலரின் அனுபவங்களைப் பத்திரிக்கைகளில் படித்திருந்தாலும், அவர்களின் விரிவான பதிவுகளைப் பார்க்கும்போது ஒரு நடுக்கம் வருகிறது. யாருக்கும் இந்நிலை நேரலாம் நாளை. அதற்குத் தேவையான விழிப்புணர்வு இருக்கிறதா நம்மிடையே?


 சில வெளிநாட்டுத் தனியார் தொண்டு நிறுவனங்களின் புண்ணியத்தில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பரவி வருகிறது. சுய பரிசோதனைகள் விளக்கப்படுகின்றன. 


கேன்ஸர் எதனால் வரும்? எவ்வாறு அறியலாம்? தடுப்பது எப்படி? முன்னெச்சரிக்கையாகச் செய்ய வேண்டிய பரிசோதனைகள் என்னென்ன?  இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் இதற்கென என்ன செய்யப்படுகிறது என்று யாருக்காவது தெரியுமா? புத்தகங்கள், பத்திரிக்கைகள் வாசிக்கும் மக்களுக்கு வேண்டுமானால் சுயமுயற்சியால் இதுகுறித்த சிறு விழிப்புணர்வு இருக்கலாம். ஆனால் நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களிடம் இதுகுறித்த எந்த விழிப்புணர்வும் இல்லை. வந்தபிறகுகூட, சரியான சிகிச்சை பெறவேண்டும் என்று அறியாமலே இருக்கிறார்கள். தெரிந்தாலும் அதற்குரிய பணமும், நேரமும் செலவழிக்க இயலாத நிலையே பலருக்கும். அரசாங்கமும் அதுகுறித்து கவலைப்படவில்லை.


புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா என்று கேட்டு கேட்டு எய்ட்ஸ் பற்றி அறியாதவர்கள் இன்றில்லை. ஆனால் புற்றுநோய் குறித்த அறிவு மக்களுக்குக் கிடைப்பது தமிழ்த் திரைப்படங்களின் மூலமே! அதுவும் கேன்ஸர் வந்தால் ரத்தம் கக்கியே செத்துவிடுவார்கள் என்று போதித்து எய்ட்ஸை விட கேன்ஸர் மோசமாகச் சித்தரிக்கப்படுகிறது .


சரியான நேரத்தில், சரியான சிகிச்சை கிடைத்தால் புற்றுநோயை வெல்லலாம். அதற்குப் போதுமான விழிப்புணர்வு தேவை. அரசை எதிர்பாராமல் நாமே விழித்துக் கொள்வோம்.





Post Comment

லீவு முடிஞ்சிடுச்சி...





 
 
 அப்படி இப்படின்னு கொஞ்சம் பெரிய லீவாப் போச்சுது இந்த முறை!! பெருநாள் நல்ல ஜாலியா இருந்துது. வெள்ளிக்கிழமை என்னோட சித்தி, மாமா பசங்க நாலுபேர் துபாய்லருந்து வந்திருந்தாங்க. பையன்க பேச்சுலர்ஸ்ங்கிறதுன்னால காலையில கொஞ்சம் நல்ல சமையல் செஞ்சிருந்தேன் . ஆப்பம்,  உறட்டி(அரிசிமாவு ரொட்டி),  மட்டன் குழம்பு,  பரோட்டா,  பட்டர் சிக்கன்,  கிண்ணத்தப்பம்,  குலோப் ஜாமுன்னு வச்சதில பசங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.  அதுவும் ஆப்பத்தில முட்டை ஆப்பம், ஃபிளவர் ஆப்பமெல்லாம் ரொம்ப பிடிச்சுப் போச்சு. ஒரு வெட்டு வெட்டிட்டாங்க. பேச்சிலர்ஸ், புதுசா கல்யாணம் ஆனவங்க இவங்கல்லாம் வீட்டுக்கு வந்தா கொஞ்சம் நல்லா கவனிப்பேன். பாவம், நல்ல சாப்பாடு கிடைக்காதான்னு ஏங்கிக் கிடப்பாங்க.

மத்தியான சாப்பாடு தங்கச்சி வீட்டில. பிரியாணி கடையில வாங்கிகிட்டு, சைட் டிஷ்கள் வீட்டில செஞ்சுகிட்டோம்.  நல்லா ஃபுல் கட்டு கட்டினதுல வெளியே கிளம்பவே முடியல. பெருநாளும் அதுவுமா ஒரு இடத்துக்காவது போய்ட்டு வரலன்னா குத்தங்குறை எதுவும் வந்துடப்படாதேன்னு
இரவு எட்டு மணிபோல மூணு கார்லஅபுதாபி கடற்கரை பார்க்குக்கு மட்டும் போய்ட்டு வந்தோம் !! போய் ஷட்டில், வாலிபால் விளையாடி என்ர்ஜியைச் செலவழிச்சுட்டு தங்கச்சி வீட்டுக்கு வந்து மறுபடியும் சாப்பாடு. இப்ப சிம்பிளா குபூஸ், எம்ப்ட்டி சால்னா (பிரியாணியோட கிடைச்சது), ஹமூஸ், முதப்பல்னு ஒருமாதிரி இந்திய, அரேபிய உணவுகளைக் கலந்துகட்டி அடிச்சோம். (ஹமூஸ்: சுண்டல்+எள் பேஸ்ட்; முதப்பல்: சுட்ட கத்தரிக்காய்+எள் பேஸ்ட்).

முந்தின நாள் சாப்பிட்டதுக்கு பேலன்ஸ் பண்றதுக்காக மறுநாள் வெறும் தயிர்சாதம் மட்டுமே!! அடுத்து 3 மணிக்கு கலீஃபா பார்க் போனோம். அங்க மீன்கள் காட்சியகமும், maritime museum-ம் அருமையா இருக்கு. பார்க் அனுமதிக் கட்டணம் 10 திர்ஹத்துல இருந்து இப்ப 1 திர்ஹம் ஆக்கிட்டாங்க, ரொம்ப ஆச்சர்யமா இருந்துது. அங்கயிருந்து 10 மணிக்கு பிட்ஸா ஹட் போயிட்டு வந்து லேட்டா தூங்கினதுல காலையில ரொம்பவே லேட்டா எழுந்ததினால (ஹேங் ஓவர்??!!) அன்னைக்கு ஆஃபிஸுக்கு கட் அடிச்சாச்சு. பின்ன, பசங்களுக்கும் அவருக்கும் பத்து நாள் லீவு. எனக்கு மட்டும் ஆஃபீஸ் வச்சா எப்படி?  மெதுவா ஒரு பதினொரு, பன்னெண்டு மணிக்கு தோசை சாப்பிட்டுட்டு துபாய்க்கு வண்டி விட்டாச்சு. அமீரகத்துல இருந்துகிட்டு ஒரு நல்ல நாள், லீவு நாள் வந்தா துபாய் போகலன்னா அந்த லீவு லீவாவே இருக்காது; ஏதோ குறைஞ்ச மாதிரி ஒரு ஃபீலிங் இருந்துகிட்டே இருக்கும்.

அங்க ஸபீல் பார்க்குல புதுசா ஆரம்பிச்ச ”ஸ்டார் கேட்” போனோம். என்னன்னவோ விளம்பரம் பண்ணியிருந்தாங்க, ஆனா அவங்க வெப்சைட் பாத்தவுடனே புரிஞ்சிடுச்சி இதுவும் இன்னொரு ஃபன் சிட்டி தான்னு.  (விளையாட்டு நகரம்) . தங்கச்சி மகன், மச்சான் மகள்ன்னு ஒரு கூட்டம் சேத்துகிட்டுப் போனோம். பெரிய ஏரியா, பணத்தை அள்ளி இறைச்சிருக்காங்க. முடி இருக்கறவ அள்ளி முடியுறா, நம்மால முடியுமா? நல்லா சுத்திப் பாத்துட்டு, அளவாச் செலவழிச்சுகிட்டோம்.  10 நிமிஷ 3D படம், GO-KART, Mini go-kart, மேஜிக் ஷோ இந்த மாதிரிச் சில விஷயங்கள் நல்லா இருந்துது. Go-Kart போன பெரிய மகன் அன்னைக்கு முழுசும் வண்டி ஓட்டினவங்கள்ல, வேகமா ஓட்டி,  முத அஞ்சு இடத்துக்குள்ள வந்திருந்தான். அவன்கூட ஓட்டினவங்கள்ல அவந்தான் ஃபர்ஸ்ட் (வேகத்துல). எல்லாத்தையும் புள்ளிவிவரத்தோட ஒரு கிராஃப் போட்டு அச்சடிச்சு கொடுக்குறாங்க. இன்னும் ஒருமாசத்துக்கு இது போதும் அவனுக்கு பேசித் தீர்க்க, அதுவும் ஆதாரத்தோட!!

துபாயில பார்க்லயும், முன்பு போயிருந்த தமிழ்ச்சங்க விழாவிலயும் ஜீன்ஸ், டாப்ஸ் போட்ட நிறைய தமிழ்ப் பெண்கள் பார்க்க முடிந்தது. எல்லாரிடமும் ஒரு ஒற்றுமை, கழுத்தில் விரல் தடிமனில், நீண்ட முறுக்குத் தாலிச் செயின்!! சென்டிமெண்ட்ஸ்?? அதிலும் தமிழ்ச்சங்க விழாவுல, அநேக ஆண்கள் கழுத்திலயும் மினுமினுத்தது.

துபாய்ல பொது இடங்கள்ல ஷேக் முஹம்மதுவின் (துபாய் ஆட்சியாளர் & அமீரகப் பிரதமர்) படம் வைக்கப்பட்டிருக்கும். இப்ப அதோடு ஷேக் கலீஃபாவின் படமும் (அபுதாபி ஆட்சியாளர் & அமீரக அதிபதி) சேர்த்து வைக்கப்பட்டிருந்தது.





 

வரும் புதன்கிழமை 2-ந் தேதி 38-ஆவது அமீரக தேசிய தினம் கொண்டாடப்பட இருக்கிறது. அதற்காகவும், பெருநாளுக்காகவும் நாடு முழுதும் விழாக்கோலம் பூண்டு இருக்கிறது. தேசிய தினக் கொண்டாட்டங்கள் இன்னும் சிறப்பா இருக்கும். கண்டிப்பா அதப் பத்தியும் எழுதி உங்கள டரியலாக்குவேன்!!

 

 


 


 
  

Post Comment

“புலம்பல்கள்” (இது ஆதியின் பதிவல்ல!!)






இது எதற்கும் எதிர்பதிவல்ல!! எனது “புலம்பல்கள்” மட்டுமே!! நிறைய இருக்கு, நீளம் கருதி, பத்தோட நிறுத்தியிருக்கேன்.

1. வீட்டுல நான் என்ன கரடியா கத்துனாலும், நீ பாட்டுக்கு கத்திகிட்டேயிரு, எனக்குத் தோணுனதைத்தான் நான் செய்வேன்னு செய்யற நீங்க, உங்க அம்மா, அண்ணன் அல்லது அக்கா முன்னாடி மட்டும், அவங்க எதாவது செய்யச்சொல்லும்போது “என்னம்மா, அப்படியே செஞ்சுருவோமா, சரிதானே”ன்னு அவங்க முன்னாடியே என்கிட்ட கேட்டு ஏன் மானத்த வாங்கறீங்க?

2. அது எப்படி தினமும் காலையில கரெக்டா நீங்க ஷூ போட்டதுக்கு அப்புறம்தான் மொபைல்/ கார்ச்சாவி எடுக்கலைன்னு உங்களுக்கு ஞாபகம் வருது..

3. மொபைலையோ, லேப்டாப்பையோ வெளியே வைக்காதீங்கன்னு எவ்வளவு சொன்னாலும் கேக்காம, டேபிள்ல போட்டுட்டு அத நம்ம பிள்ளைங்க தொட்டுப் பாத்தாலே, பங்காளிச் சண்டை போடறீங்க...இதுவே உங்க நண்பர்கள்/ உங்க உறவினர் பிள்ளைங்களோ எடுத்து அது உயிரே போற அளவு நோண்டினாலும், சிரிச்சுகிட்டே இருக்கறதோட, “நல்ல இண்டெலிஜண்டா இருக்கானே உங்க பிள்ளை”ன்னு பாராட்டி சர்டிஃபிகேட் வேற கொடுக்கிறீங்க?

4. உங்க ஆஃபிஸ்ல நீங்க இல்லாம ஒரு வேலையும் நடக்காது; உங்க ஆஃபீஸே உங்கள நம்பித்தான் இருக்குங்கிற மாதிரி அப்படி ஒரு பில்ட்-அப் கொடுப்பீங்க. ஆனா, ஒரு மாசம் லீவுல ஊருக்குப் போகும்போது ஒருதரம் கூட ஆஃபிஸ் மேட்டராவோ, அட நீங்க நல்லாருக்கீங்களான்னு கேட்டு கூட ஒருத்தரும் ஒரு மெயில் அனுப்பவோ, ஃபோனோ பண்றதில்லையே ஏங்க?

5. ஒண்ணாங்கிளாஸ் படிக்கிற நம்ம சின்னவனுக்கு ஒரு சிம்பிளான 1+1 கூட்டல் கணக்கு சொல்லிக் கொடுக்கச் சொன்னா, அதுக்கு அல்ஜீப்ரா, கால்குலஸ், பிதோகிரஸ் தியரத்தையெல்லாம் இழுத்து, கடைசியில அவனுக்குத் தெரிஞ்ச ஒண்ணு, ரெண்டு, மூணைக் கூட மறக்க வச்சிர்றீங்களே, எப்படிங்க அது?

6. நம்ம வீட்டு ஏரியாவில பேங்க் இருக்கறதால பணம் கொடுத்து கட்டச் சொன்ன என் சொந்தக்காரரை என்னவெல்லாம் சொன்னீங்க என்கிட்ட! ஆனா, உங்க நண்பர் அவரோடபக்கத்து பில்டிங்க்ல இருக்க E.B.யில கரண்ட் பில் கட்ட உங்களக் கூப்பிட்டாகூட இதோ வந்துட்டேன்டான்னு ஓடிப் போறீங்களே எப்படிங்க?

7. சமைக்கும்போது கிச்சன்ல வந்து நின்னு, அதப் போடு, இத ஊத்துன்னு ஐடியா கொடுத்து, கொஞ்சம் சுமாராவாவது வந்துருக்கக்கூடியதை வாயிலயே வைக்கமுடியாம ஆக்குறீங்களே ஏங்க?

8. ஏதாவது ஒரு விஷயத்தைப் பத்தி எங்கப்பாகிட்ட பேசி, கஷ்டப்பட்டு என் வழிக்கு கொண்டு வந்துகிட்டு இருக்கும்போது, மேட்டர் என்னன்னே தெரியாம,
நடுவுல பூந்து உங்கப்பா சொல்றதுதான் சரின்னு சொல்லி, ”மாப்பிள்ளையே சொல்லிட்டாரும்மா”ன்னு எனக்கெதிரா எங்கப்பாவையே திருப்பி விட்டுர்றீங்களே எப்படிங்க அது?

9. இன்னிக்கு ஸ்டாக் கிளியரன்ஸ், அப்பாடா, சமைக்க வேண்டாம்னு சந்தோஷமா சொன்னதுக்கப்புறமும், அன்னைக்குன்னு நேரங்காலம் தெரியாம குடும்பத்தோட வந்து நிக்கிற உங்க ஃப்ரண்டை சாப்பிடாம போகக்கூடாதுன்னு பிடிச்சு வைப்பீங்களே, அது ஏங்க?

10. இவ்வளவும் நீங்க தெரிஞ்சே செய்றீங்கன்னு தெரிஞ்சும் உங்க மேல என்னை பைத்தியமா இருக்க வச்சுருக்கீங்களே, அதுதான் எப்படின்னு கொஞ்சம்கூட புரியவேயில்லைங்க!!

இது தொடர் பதிவு இல்லதான்; இருந்தாலும், தோழிகள் அவங்கவங்க ரங்ஸ் மேலே பாடவேண்டிய பாட்டுக்கள் இருந்துதுன்னா தொடர்ந்து பாடுங்க!!

பெருநாளை முன்னிட்டு கடை 3 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. பின்னூட்டம் போட்டு வைங்க, வந்து கண்டுக்கிறேன். வீட்டுலயும் ரொம்ப பிஸியா இருக்கும். 3 நாள்ல என்னை மறந்துறாதீங்க.(மறந்தா என்ன, சோனியா காந்தியை ஏன் பிடிக்கும்னு ஒரு பதிவு போட்டா எல்லாரும் ஓடி வந்துற மாட்டீங்க?)

எல்லாருக்கும் பெருநாள்/ விடுமுறை வாழ்த்துக்கள்!!(பெருநாள் வெள்ளிக்கிழமை வந்ததால, ரெண்டு நாள் லீவு போச்சு!!)

Post Comment

டிரங்குப் பொட்டி - 3







“டிரங்குப் பொட்டி”ன்னு பேர் வச்சிருக்கோமே, அது என்ன, எப்படி இருக்கும்னே தெரியாத “யூத்”கள் இங்கே நிறையா இருக்காங்களே, அவங்களுக்காகவாவது டிரங்குப் பொட்டியோட ஒரு படம் போடணும்னு நினைச்சிட்டே இருக்கும்போது, ஒரு நாள் இங்க இருக்கிற “Emirates Heritage Village"க்குப் போனோம். அங்க அவங்க பழங்கால வாழ்க்கை முறையை விளக்கி மாதிரிகள் வச்சிருந்தாங்க. அதில இந்த டிரங்குப் பொட்டியும் இருந்துது. உடனே ஒரு படம் புடிச்சாச்சு உங்களுக்கெல்லாம் காமிக்க. நல்லாருக்கா? (படம் எடுத்தது எங்க ரங்ஸ். அவர் நல்லா படம் காட்டுவாருங்கோ.)

@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@

அமெரிக்காவுல கைதான டேவிட் ஹெட்லிக்கும் இந்தியாவில சில நடிகைகளுக்கும், இன்னும் சில பிரபலங்களுக்கும் தொடர்பு இருந்துதாம். பாவம், இன்னும் யார் தலையெல்லாம் உருளப்போகுதோ? யாரைப் பிடிச்சாலும், உடனே இவனுக்கு இன்னாரின்னாரோடல்லாம் தொடர்பு இருக்கு அப்படின்னு உறுதிப்படுத்துறதுக்கு முன்னாடியே நியூஸ் போட்டுர்றாங்க. இது பரபரப்பு ஏற்படுத்துறதுக்குப் பதிலா இப்பல்லாம் அடப்பாவமேன்னு பரிதாபத்தத்தான் ஏற்படுத்துது. பிரபலமா இருக்கிறதுக்காக, அவங்க கொடுக்கிற விலைகள்ல ஒண்ணு, போறவன், வர்றவன் எல்லாரோடயும் சிரிச்சி ஃபோட்டோ எடுத்துக்கறது. இந்த ஃபோட்டோ பின்னாட்கள்ல எப்படி வேணும்னாலும் உபயோகப்படுத்தப் படலாம். ரசிகன்னு சொல்லி வர்ற ஒவ்வொருத்தன்கிட்டயும் ஜாதகமா கேட்டுகிட்டு இருக்க முடியும்?

அதே மாதிரி இப்பல்லாம், ”இந்த கொள்ளை/ கொலை/ குண்டுவெடிப்பு கேஸுல போலீஸ் இவங்களையெல்லாம் பிடிச்சிருக்காங்க” அப்படின்னு ஒரு நாலஞ்சு பேரை வரிசையா நிக்கவெச்சு டிவியில காட்டுவாங்க.முன்னெல்லாம் இந்த மாதிரி காட்டும்போது, ஒரு கோபம் வரும் அந்தக் குற்றவாளிங்களைப் பாக்கும்போது. ஆனா இப்ப? நிஜமா சொல்லுங்க, அவங்களையெல்லாம் பாக்கும்போது, அய்யோ, யாரு பெத்த புள்ளைகளோ, இவங்க மேல இன்னும் கண்டுபிடிக்காம இருக்க எந்தெந்த கேஸுங்களைப் போட்டு க்ளோஸ் பண்ணப்போறாங்களோன்னுதானே தோணுது?

@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@

போனவாரம் நம்ம பக்கத்து ஊருல (நாட்டுல!!) கருணாகரன் அய்யா உடல்நிலை ரொம்ப கவலைக்கிடமா இருந்துது. (இப்ப தேறிட்டார்). ரொம்ப சீரியஸ் அப்படின்னவுடனே, எதிர்க்கட்சித் தலைவர்கள், காங்கிரஸ் எதிர்கோஷ்டித் தலைவர்கள்னு எல்லாரும் போய் அவரைப் பாத்துட்டு வந்தாங்க. நம்ம ஊர்ல அப்படி ஒரு காட்சியை நினைச்சுக்கூடப் பாக்க முடியாது. அதே மாதிரி, மேடைகள்ல கேரள முதல்வர்ல ஆரம்பிச்சு, நடிகர்கள் வரை ஒருத்தர் விட்டு வைக்காம சகட்டுமேனிக்குக் கிண்டல் பண்ணி நடிச்சு காட்டுவாங்க. நம்ம ஊர்ல.. நீங்க வேற, நான் ஏதாவது சொல்லப்போக, அப்புறம் அபுதாபிக்கே ஆட்டோ அனுப்பப்போறாங்க!! நான் புள்ளகுட்டிக்காரிங்க, எனக்கெதுக்கு வம்பு..

@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@

போன வியாழக்கிழமை பஸ்ல ஏறும்போது, என்னோட ஒரு சீன நாட்டுப் பெண்ணும் ஏறினார். கையில் பெரிய லக்கேஜ், அவர் அப்போதுதான் ஊர்ல இருந்து வந்ததைக் காட்டியது. பஸ் கிளம்பிய பிறகு டிக்கெட் (2 திர்ஹம்) எடுக்க முனைந்தவரிடம் ஒரு நூறு திர்ஹம் நோட்டு மட்டுமே இருந்தது. டிரைவரும் சில்லறை இல்லை என்று சொல்லிவிட்டு டிக்கெட்டைக் கையில் கொடுத்துவிட்டார். (இங்க டிரைவர், கண்டக்டர் எல்லாம் ஒரே ஆளுதான்). இவர் கைப்பையைப் போட்டுத் துழாவிக் கொண்டிருந்தார். நான் என்னிடம் இருந்த சில்லறையில் 2 திர்ஹமைக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டு நூறு திர்ஹம் நோட்டை என்னிடமும் நீட்ட, நான் சில்லறை இல்லை, பரவாயில்லை 2 திர்ஹம்தானே, வேண்டாம் என்று சொல்லி விட்டேன். அவர் மீண்டும் கைப்பையைத் துழாவி. இரண்டு சீன பணத்தாட்களை (1 Yuan each) என் கையில் திணித்தார். மறுத்தும் கேட்கவில்லை. என் மகனின் நாணய சேமிப்பு (Numismatism) ஞாபகம் வர, மறுக்கவில்லை. சிறிது நேரம் கழித்து, மீண்டும் துழாவி ஒரு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்துத் திணித்தார். இப்போ மிகுந்த தர்மசங்கடமான நிலையில் நான் . கொடுத்ததோ வெறும் 2 திர்ஹம், இதற்கு இன்னும் என்னவெல்லாம் கொடுக்கப் போகிறாரோ என்று, பஸ்ஸில் இப்போ வேடிக்கைப் பொருள் அவரிலிருந்து, நானானேன். இது சரிவராது என்று அவரிடம் பேச்சுக் கொடுத்துப் பேசிக்கொண்டே வந்தேன். (பேச்சு சுவாரஸ்யத்தில் அதன்பிறகு கைப்பையைத் துழாவவில்லை). என் ஸ்டாப்பில் இறங்கப் போகையில் மீண்டும் ஒரு நூறு நன்றிகள் கூறி என் கை குலுக்கி அனுப்பி வைத்தார். அந்த 2 திர்ஹம் கொடுக்கும்போது இருந்த ஒரு சிறு கர்வம் அவரது நன்றியில் சுட்டெரிந்து போனது.

(அந்த டிக்கெட்டுக்கு காசு கொடுக்கவில்லையென்றாலும் டிரைவர் அவரை ஒன்றும் சொல்லி இருக்கப் போவதில்லை!!)

@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@

என்னவரைப் பற்றி நான்எழுதியிருந்த (நல்லவிதமாத்தான்!!) சில விஷயங்களைக் குறித்துப் பல ஆண் பதிவர்கள் ஆண்கள் சார்பாகக் கொதித்தெழுந்து விட்டார்கள், என்னவோ அவரை நான் கொடுமை செய்வது போல்!! விட்டா, சென்னையில இருக்கிற “ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தில” புகார் செஞ்சுடுவாங்க போல்!! ஒரு சில உதாரணங்கள் சொன்னால் புரியும் யார் வில்லன் என்று!!

ஃபார்முலா 1 ரேஸ் நடந்த வெள்ளிகிழமை இங்க லீவு நாள். ஆனா அவர் (நான் தூங்கிகிட்டு இருக்கும்போதே) வேலைக்குப் போயிட்டார். நான் ஃபோன் செஞ்சு:
“என்னங்க, மத்தியானம் என்ன சமைக்கிறது”
”நான் மத்தியானம் சாப்பிட வரமாட்டேன்”
“இல்லைங்க மட்டன், கோழி, மீன் எதுவுமே வீட்டில இல்லைங்க, நீங்களும் ஒண்ணும் வாங்கித் தராம போயிட்டீங்க”
“அதான் நான் சாப்பிட வரமாட்டேன்னு சொல்றேன்ல”
”!!??!!??!!”

புரியுதுங்களா, அதாவது அவர் சாப்பிடலைன்னா, நாங்களும் சாப்பிடக்கூடாதாம்!! அப்புறம் என்ன செய்ய, சிம்பிளா முட்டை ஃப்ரைட் ரைஸும், ஆலு ஃபிரையும் செஞ்சு நானும் பிள்ளைகளும் சாப்பிட்டுகிட்டோம்.

இன்னும் நிறைய இருக்கு. ஒவ்வொண்ணா
சொல்றேன் !!

@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@

பதிவர் சிங்கை செந்தில்நாதன் இப்போ நல்லபடியா உடல் தேறி விட்டார் என்று அறிகிறேன். அவரின் ஒன்றிரண்டு பின்னூட்டங்களும் கண்டேன். ஆனால் இன்னமும் அவர் உடல்நலம் பெற உதவுங்கள் என்ற வாசகங்கள் பலரின் பதிவுப் பக்கங்களிலிருந்து நீக்கப்படவில்லை. வலையை வலம் வரும் அவரின் கண்களில் இவை பட்டால் நல்லா இருக்காது இல்லையா?

@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@

ஊரிலிருந்து அம்மா, அப்பா, தங்கை, தங்கையின் 5 மாதக்குழந்தை ஃபரீஹா வந்திருக்கிறார்கள். பெருநாளைக்குப் பிறகு என் பெற்றோர் ஊர் போய் விடுவார்கள். ஃபரீஹா - the sweet bundle of joy!! எல்லோரும் குழந்தைகள் பெற்று வளர்த்து விட்டோம்; என் பெற்றோருக்கும் இது ஆறாவது பேரக்குழந்தை. ஆனாலும் யாருக்கும் ஃபரீஹாவைப் பார்க்க அலுப்பில்லை; சலிப்பில்லை. ஏதோ celebrity போல குடும்பத்தில் உள்ள எல்லாரும் நேற்று முழுதும் அவளைச் சுற்றித்தான்!! அவளது ஒவ்வொர் அசைவுக்கும் ஒவ்வொருவரும் ஒரு அர்த்தம் சொல்லி... நாள் போனதே தெரியவில்லை. நான், என் தங்கைகள் முதல் எங்கள் வீட்டு வாண்டுகள் வரை சண்டை, என் கையில் தா, என் கையில் தா என்று!! அம்மாக்காரி பதறிவிட்டாள், கையையும் காலையும் பிச்சிருவீங்க போலருக்கே என்று. அவள் அப்பாதான் பாவம், எல்லாரும் எப்பக் கிளம்புவாங்க, பிள்ளையை எப்ப தூக்கிக் கொஞ்சலாம் என்று உட்கார்ந்திருந்தார்.

வெள்ளிக்கிழமை அதிகாலை வந்து சேர்ந்திருக்க வேண்டியவர்கள், ஃபிளைட் technical snag காரணமாக சனிக்கிழமை காலைதான் வந்தார்கள். இன்னும் வரலையா என்று கேட்டவர்களிடம் ஃப்ளைட் லேட் என்றதும், ஏர் இந்தியாவா என்று கேட்டார்கள். இல்லை, இத்திஹாத் ஏர்வேஸ் என்றதும், இவங்களும் இப்படி ஆகிட்டாங்களா என்று பதில்.

@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@^^^^^^^@

இப்பவெல்லாம் வேலைக்கு விண்ணப்பிப்பவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள, நிறுவனங்கள் ஃபேஸ்புக்கிலிருந்து விவரங்களை சேகரிப்பதாகச் செய்திகள் வந்தன. இன்று இந்தச் செய்தியும் பார்த்தேன். கனடா ஐ.பி.எம்.மில் வேலை செய்யும் அந்நாட்டுப் பெண் ஒருவர், மன உளைச்சலால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, நீண்ட கால விடுப்பு எடுத்திருக்கிறார். இன்ஷ்யூரன்ஸ் மூலம் இவ்விடுப்பிற்கான இழப்பீடும் பெற்று வந்தார்.

லீவெடுத்து சும்மா இருக்க முடியாமல், பாரிலும், டிஸ்கொதேவிலும் நண்பர்களோடு போட்ட ஆட்டத்தை ஃபேஸ்புக்கில் போட, அதைப் பார்த்த இன்ஷ்யூரன்ஸ் நிறுவனம், ஆட்டம் போட முடிகிறது, வேலைக்கு மட்டும் போக முடியலையா என்று இழப்பீட்டை நிறுத்தி விட்டது. டாக்டர்தான் என்னை அங்கேயெல்லாம் போய் ரிலாக்ஸ் செய்யச் சொன்னார் என்று பொண்ணும் போராட்டத்தில் இறங்கி இருக்குது.


அதனால, மக்களே, கவனமா இருங்க!!











Post Comment

செட்டிலானதுக்கப்புறம் மேரேஜ்







முதலிலேயே டிஸ்கி போட்டுக்கிறேன்:
இந்த எனது பதிவு, திருமணங்கள் குறித்த ஒரு அலசல் மட்டுமே. இதன் மூலம் நான் பால்ய விவாகம், வரதட்சணை, பெண்ணடிமைத்தனம் போன்ற எதையும் நான் முன்பும் ஆதரித்ததில்லை; இப்பவும் ஆதரிக்கவில்லை என்பதைக் கொஞ்சம் ஸ்ட்ராங்காவே சொல்லிக்கிறேன்!!

(செட்டில் ஆயிட்டோம், ஆனாலும் வீட்டில கல்யாணப் பேச்சு எடுக்க மாட்டேங்கிறாங்களேன்னு புலம்புறவங்க இந்தப் பதிவை வீட்டில காட்டுங்க, ஒரு வேளை வொர்க் அவுட் ஆகலாம்!!)

இப்ப கொஞ்ச வருடங்களாகவே இளைஞர்களிடம் நிலவி வரும் டிரெண்ட் என்னன்னு பாத்தோம்னா, படித்து முடித்தவுடன் முதலில் வேலை, அப்புறம் ஒரு வண்டி, நல்ல ஏரியாவில ஒரு வீடு, கொஞ்சம் பேங்க் பேலன்ஸ் இப்படி செட்டில் ஆனபிறகுதான் கல்யாணம் அப்படிங்கிறதுல உறுதியா இருக்காங்க. ஆண்கள் மட்டுமில்லை, பெண்களும் அப்படித்தான் இருக்காங்க. இக்கால நிலையற்ற உறவுகள் இந்தக் காரணங்களை நியாயப்படுத்துகின்றன.

அதிலயும் இப்ப அநேகமா எல்லாருமே ஒரு முதுநிலைப் பட்டமும் வேலைக்கு ரொம்ப உதவும்னு படிக்கிறதால அதுக்கும் சில வருடங்கள் பிடிக்கிறது. முதுநிலை படிப்புக்குத் தேவையான நுழைவுத் தேர்வுக்குத் தயாராவதற்கும் ஒரு குறிப்பிட்ட காலம் பிடிக்கிறது. அப்படி, இப்படின்னு ஒரு 28, 29 வயசில கொஞ்சம் செட்டில் ஆனாலும் இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்துட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருப்பாங்க. இதில யூ.எஸ்., கனடா, ஆஸ்திரேலியான்னு ஏதாவது ஒரு சிட்டிஸன்ஷிப் வாங்கினப்புறம்தான் கல்யாணம் பண்ணுவேன்னு அடம் புடிக்கிறவங்களும் இருக்காங்க.

இப்படி எல்லாம் சரியா வந்து, கல்யாணம் பண்ணும்போது, ஆணுக்கு 30 வயது தாண்டிவிடுகிறது. பெண் முப்பது வயதைச் சில வருடங்களில்/மாதங்களில் எட்டிப் பிடிக்கிறவர்களாக இருப்பார்கள். மணமக்களின் பெற்றோர்களோ 60+ வயதுகளில் இருப்பார்கள்.

ஒரு பதினைஞ்சு, இருபது வருஷத்துக்கு முன்னாடி பாத்தோம்னா, ஆண்கள் படிச்சு ஒரு வேலை கிடைச்சவுடனேவும், பெண்கள் படிச்சு முடிச்சவுடனேவும் கல்யாணம் பண்ணிகிடுவாங்க. கல்யாண வாழ்க்கையை தங்கள் வருமானம் மற்றும் பெற்றோர் ஆதரவுடன் நடத்தி வந்தனர். இந்த கல்யாணங்களில் மணமக்களின் பெற்றோரும் நடுத்தர வயதைத் தாண்டி இருப்பார்கள். பெண்ணும் வேலை பார்த்தால் குழந்தை வளர்ப்பில் மிகவும் உதவியாக இருப்பார்கள்.

அதுக்கும் முன்னாடி, அதாவது ஒரு 30-40 வருஷம் முன்னாடி போனா, ஆண்கள் கல்லூரியில படிச்சுகிட்டிருக்கும்போதும், பெண்கள் 15-18 வயசிலயும் கல்யாணம் பண்ணினாங்க. ஆணின் கல்யாணத்தின் பின் உள்ள வாழ்க்கைக்கு அவரது பெற்றோர் ஆதரவாக இருந்தனர். ஆண்களுக்கு வேலை கிடைத்து செட்டில் ஆகும்போது பெற்றோர் நடுத்தர வயதைக்கூட எட்டியிருக்கமாட்டார்கள். இந்த கல்யாணங்களில் பொதுவா ஆணுக்கே 20 வயதுக்குள்தான் இருக்கும். அவனின் படிப்புச் செலவு, மனைவி, குழந்தைகளுக்கான செலவு எல்லாமே அவனது குடும்பத்தினரால் (சில சமயம் பெண் வீட்டாராலும்) அளிக்கப்படும். அவன் வேலையில் சேரும்போது குழந்தைகள் பள்ளி செல்லும் வயதில் இருப்பார்கள். (சில வீடுகளில் ஒரே நேரத்தில் அப்பா கல்லூரியிலும், மகன் பள்ளியிலும் படித்தும் இருக்கிறார்கள்).

ஒன்றிரண்டு தலைமுறை முன் பார்த்தோமானால், பேரன்/பேத்திகளின் திருமணத்தை முடிவு செய்து, நடத்தி வைப்பதுகூட தாத்தாவாகத்தான் இருக்கும். தாய், தந்தைக்கு அவ்வளவு அதிகாரம்/ சுதந்திரம் இருக்காது.அந்தளவு கூட்டுக்குடும்பம் சக்திவாய்ந்ததாக இருந்தது.

அதாவது இவ்விரண்டு கால கட்டங்களிலும் பருவ வயது வந்தவுடன் திருமணம் செய்யும் வாய்ப்பு இருந்தது. அதனால் தவறுகள் குறைவாகவே இருந்தன. தவறுகள் என்று நான் சொல்வது, அறியாப்பருவக் காதல், கல்யாணத்திற்கு முன்பே தவறான உறவு போன்றவற்றை. இந்த வயதில் எதிர்பாலர் குறித்த ஈர்ப்பு, ஆர்வம் அதிகம் இருக்கும். அதை ஈடுகட்டத்தான் அந்த காலத்தில் சிறுவயதிலேயே பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்தனர் போலும். பின், அதனால் பாதிப்புகள் அதிகமாக விளையத் தொடங்கியதால் (பால்ய விதவைகள், பிரசவ மரணங்கள் போன்றவை) வரும் காலங்களில் திருமண வயது அதிகரிக்கப்பட்டது.

அதன்பின்னரும் வரதட்சணை, மாமியார் கொடுமை, இளவயதுப் பிரசவங்கள் போன்ற பல காரணங்களால் பெண்கள் அதிகமாகப் பாதிப்புக்குள்ளாகியதால், படித்து ஒரு பட்டம் பெற்ற பின்னரே பெண்கள் திருமணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இக்கால கட்டங்களில் நகரக் குடியேற்றம் அதிகரித்த காரணத்தாலும் கூட்டுக்குடும்ப முறை சிதைய ஆரம்பித்தது.

முன்னர் ஒரு பெண் திருமணத்திற்குப் பின் பிரச்னை ஏற்பட்டு பிறந்த வீட்டுக்குத் திரும்பி வந்தால் ஆதரிக்க பெற்றோரும், சகோதரர்களும் தயாராய் இருந்தனர். கூட்டுக்குடும்ப முறை குறைந்ததில் இதற்கும் பாதிப்பு ஏற்பட்டது. திருமண வயது அதிகரித்ததால் பெற்றோரும் வயதானவர்களாக ஆகி, மகனின் ஆதரவில் இருக்கும்போது, மண வாழ்விழந்த மகளைச் சரியாகப் பராமரிக்க முடியாமல் தவித்தனர். ஏறிக் கொண்டிருக்கும் விலைவாசியில் பெற்றோரைப் பராமரிப்பதே சிரமமாகிப் போன நிலையில் மகன்கள், சகோதரிகளையும் பராமரிக்கத் திணறினர். இம்மாதிரிச் சூழ்நிலைகள் பெண்கள் வேலைக்குச் சேர்ந்து காலூன்றிய பிறகே திருமணம் செய்ய வேண்டும் என்ற பிரச்சாரத்திற்கு வலுவேற்றின. இது பெண்களின் திருமண வயதை இன்னும் அதிகப் படுத்தியது.

ஆண்களின் நிலையைப் பார்த்தால், விலைவாசி உயர்வு, குடும்பப் பொறுப்புகள் கூடிப்போனது, வரதட்சணை எதிர்ப்பு ஆகியவை அவர்களின் பணத்தேவையை அதிகப் படுத்தின. அதனால் அவர்களும் மேலே சொன்னமாதிரி படிப்பு, மேற்படிப்பு, வேலை, அயல்நாட்டுக் குடியுரிமை என்று திருமண வயதை தங்கள் பங்குக்கு ஏற்றிக் கொண்டார்கள்.

தற்போதைய நிலவரப்படி இந்தியர்களும் வெள்ளைக்காரர்களைப் போல் வயதான பிறகு திருமணம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். கேட்டால், கொஞ்ச நாளாவது லைஃபை எஞ்ஜாய் செய்ய வேண்டும், அதற்குள்ளே திருமணமா என்கிறார்கள். ஆனால், இந்த வயதில் வரும் உடல் வேட்கையை அடக்க முடியாமல் தவறான வழிகளில் போகிறார்கள். சிலர் லிவிங் டுகெதர் என்ற முறையிலும் வாழ்கிறார்கள்.

இவ்வாறு திருமணத்தை இக்காலத்தில் இருபாலரும் வெறுப்பதன் காரணமென்ன? “Afraid to take responsibilities" அதாவது பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதால் வரும் பிரச்னைகளை எதிர்கொள்ள அச்சம், அதிவசதியான வாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணம், வறுமையை எதிர்கொள்ள பயம் போன்ற பல காரணங்களைக் கூறலாம். சிலரிடம் கேட்டால் சொல்வார்கள், ”நானும், என் குடும்பமும் வசதியாக இருக்கவேண்டும். என் பிள்ளைகளையும் வசதியாக வளர்க்க வேண்டும். நான் பட்ட கஷ்டங்கள் படக்கூடாது. அதற்குத் தேவையான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்ட பின்னர்தான் திருமணம் பற்றி யோசிக்க வேண்டும்” என்று. நல்ல முறையில் குடும்பத்தைப் பேண நினைக்கும் பொறுப்பானவர் என்ற முறையில் அவரின் எண்ணம் சரியே.

ஆனால், இதன் உள்ளர்த்தம் என்ன? வாழ்வின் அடிப்படைத் தேவைகள் பெறுமளவு சம்பாதித்தால் போதாது. நவீன காலத்தின் தேவைக்கதிகமான வசதி வாய்ப்புகள் எல்லாம் பெற்று, கண்ணில் பட்டதெல்லாம், நினைத்ததெல்லாம் வாங்குமளவு செல்வம் பெற்றிருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். தாங்கள் அப்படி இருப்பது மட்டுமல்லாமல், தங்கள் பிள்ளைகளையும் அவ்வாறே வளர்க்கின்றனர். திரு. கதிர் அவர்கள் தன் பதிவில் கூறியிருந்தது போல பசிக்கு உண்ணும் வாழ்வு இல்லை இவர்களது. இந்த மனப்பான்மையில் வளரும்போது ஒருவேளை பிற்பாடு வறுமையை, பசியை எதிர்கொள்ள வேண்டி வந்தால் துவண்டு போகிறார்கள். இந்நிலையில் குடும்பத்தோடு தற்கொலை முடிவு எடுக்கவும் செய்கின்றனர் சிலர்.

முந்தைய காலங்களில் ஒரு குடும்பத் தலைவர் தன் வாழ்நாளில் சொந்தமாக ஒரு வீடு கட்டி முடிப்பதே தன் லட்சியமாகக் கொண்டு, சிறுகச் சிறுகச் சேர்த்து வருவார். மனைவி, மக்கள் என்று மொத்தக் குடும்பமுமே தங்களால் இயன்ற வரை தங்கள் ஆசைகளை அடக்கிக் கொண்டு அந்தக் கனவு நிறைவேற உறுதுணையாயிருப்பர்.

யோசித்துப் பாருங்கள், நம் காலத்தில் ஒரு பென்சிலோ, பேனாவோ வாங்க நாம் நம் பெற்றோரிடம் எவ்வளவு தவம் இருந்திருப்போம்? ஒரு மாசம் (??!!) கூட ஆகல, அதுக்குள்ள அடுத்ததா? என்பது போன்ற எத்தனைப் புலன் விசாரணைகளுக்குப் பின் நமக்கு அந்தப் பொருள் சாங்ஷன் ஆகும்? அதில் கிடைக்கும் மகிழ்ச்சியிலேயே அப்பொருளைப் பொன் போலப் பாதுகாப்போம். ஆனால் இன்று, நம் பிள்ளைகளுக்கு, முதலிலேயே 12 பென்சில்கள் அடங்கிய பெட்டிகள் சிலவற்றை வாங்கிக் கொடுத்து விடுகிறோம். வலியில்லாமல் கிடைப்பதால், அவர்களும் அதை முடிந்தவரை வீணாக்குகிறார்கள். ஒரு நாள் உறவினர் வீட்டுப் பெண்ணின் பாக்ஸில் பார்த்தேன், ஏழெட்டு பென்சில்கள். அதுமட்டுமல்ல, வீட்டில் தடுக்கி விழுந்த இடமெல்லாம் பென்சில்கள் மற்றும் இதர பொருட்கள்!! (இதில் பாதிக்கப்படும் சுற்றுச்சூழல் பற்றி எழுத ஆரம்பித்தால், அது ஒரு தனிப் பதிவு அளவு ஆகிவிடும்.) ஆக, செல்வச் செருக்குடன் செல்லமாகவும் வளர்க்கப்படுவதால் குணம் மாறும் குழந்தைகள் லேட் மேரேஜின் ஒரு விளைவு எனலாம்.

பணம்/ சொத்து சேர்ப்பதற்காகத் திருமணத்தைத் தள்ளிப்போடும் இளைஞர்களில் இயற்கையான தமது உடல் வேட்கையை அடக்க முடியாதவர்கள் சிலர் என்ன செய்வார்கள்? நெட் சாட்டிங், தவறான தொடர்புகள், முறையற்ற உறவுகள், கேர்ள் ஃபிரெண்ட், லிவிங்க் டுகெதர், உடல்நலத்தைக் கேடாக்கும் பழக்கவழக்கங்கள் என்று பல வழிகளில் சீரழிகிறார்கள். இது மற்றொரு விளைவு!!

ஒருவழியாகக் கல்யாணம் செய்த பிறகும், குழந்தையைக் கவனிக்க ஆளில்லை, பிரமோஷன் வர்ற சமயம் என்பது போன்ற காரணங்களால் குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட்டு், கிட்டத்தட்ட பேரன், பேத்தி எடுக்கும் வயதில் பிள்ளைகள் பெற்றுக்கொள்வதால் வரும் ”தலைமுறை இடைவெளி” (”ஜெனரேஷன் கேப்”) வேறு!!

என்னதான் சொல்ல வர்றே, குழப்பாம சீக்கிரம் சொல்லுங்கறீங்களா? பெரியவர்கள் சொல்வார்கள், “அதது காலாகாலத்தில் நடக்க வேண்டும்” என்று. அதுபோல, ஆணோ, பெண்ணோ, அந்தந்த வயதில் திருமணம் செய்துகோண்டு, வசதிகளை மேம்படுத்தும் வழிகளை குடும்பத்தினரின் உறுதுணையோடு செய்வது நல்லது. சரிதானே?

வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய இளமைக் காலத்தில் திருமணம் செய்துகொண்டு, நல்ல உடல்நலத்துடன் இருக்கும்போதே குழந்தைப் பேறு அடைவது நல்லது. சிறு வயதில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகமாக இருக்கும். இளவயது என்றால் குழந்தை பெறுவதில் அதிகச் சிரமும் இருக்காது. இன்று குடும்பநல கோர்ட்டுகளிலும், குழந்தைப்பேறு மருத்துவமனைகளிலும் இருக்கும் கூட்டங்களும் இதைத்தானே சொல்லாமல் சொல்லுகின்றன!!

நாம் மட்டுமல்ல, நம் பெற்றோர் திடகாத்திரமாக இருக்கும்போதே குழந்தை பெற்றுக் கொண்டால், குழந்தை வளர்ப்பில் அவர்களால் ஆதரவாக இருக்க முடிவதுடன், பேரக்குழந்தைகளுடன் சுவாரசியமாகப் பொழுதுபோக்க முடியும். அதோடு, நமது பேரக்குழந்தைகள் வரும்போது நாமும் அவர்களுக்கு ஈடுகொடுக்க இளவயதினராக இருக்கலாமே!! முன்னெல்லாம், “நான் எங்க தாத்தா, பாட்டிட்டதான் வளர்ந்தேன்”, “ஒவ்வொரு லீவுக்கும் நான் தாத்தா, பாட்டிட்ட போயிடுவேன்” என்றெல்லாம் நிறையபேர் கூறக் கேட்டிருப்போம். நம்மை வளர்த்தெடுக்குமளவு அவர்கள் அதிக வயதானவராக இல்லாமல், ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால், இப்ப நம் பிள்ளைகளை சில நாட்கள் கூட நம் பெற்றோருடன் தனியாக விட மிகவும் யோசிக்கிறோம், “அப்பாவுக்கு ஏற்கனவே பிரஷர் இருக்கு; அம்மாவுக்கு மூட்டுவலி உண்டு. இவனை எப்படி தனியா சமாளிப்பாங்க” என்றெல்லாம் கவலைப் படுகிறோம்.

யோசிங்கப்பா!!

கொசுறுத் தகவல்: தமிழ்நாட்டில் திருமணமாகாத ஏழைப்பெண்களுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.20,000 வழங்கப்படுகிறது. யு..ஏ.இ.யில் இதேபோல திருமண உதவித்தொகை 70,000 திர்ஹம் (கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய்) வழங்கப்படுகிறது. ஆனால், ஏழைப்பையன்களுக்கு!!

Post Comment

அவர் ஏன் அதைப் பாடினார்...




எங்க வீட்டில சன், கலைஞர் மற்றும் இன்ன பிற சேனல்கள் கிடையாது. ராஜ் நியூஸ், மக்கள், தமிழன், மெகா இந்த மாதிரி உருப்படாத(!!) சேனல்கள்தான் உண்டு. இதனால நாங்க மிஸ் பண்றது எதுவுமில்லன்னாலும், அப்பப்ப போடற பட்டிமன்றங்கள் மட்டும் பார்க்க முடியலையேன்னு ஒரு ஏக்கம் உண்டு. அவ்ளோ தமிழார்வம் எங்களுக்கு!!

இப்படியா இருக்கும்போது, துபாயில தமிழ்ச்சங்கத்தில பட்டிமன்றம் நடத்தப்போறதா மெயில் வந்துது. அந்த சங்கத்தில உறுப்பினரானதுக்காக ஒரே ஒரு நிகழ்ச்சிக்குப் போனதோட சரி. இதுக்குப் போவோம்னு முடிவுசெஞ்சு போனோம். திருப்பித்திருப்பி மெயில் அனுப்பியிருந்தாங்க, சீக்கிரம் வந்துருங்க, கரெக்டா 6 மணிக்கு ஆரம்பிச்சுருவோம்னு.

நம்மால லேட்டாயிரக்கூடாதேன்னு 5.45க்கெல்லாம் உள்ளே போயிட்டோம். பிள்ளைகளை விட்டுட்டு, நானும், அவரும் மட்டும் போயிருந்தோம். பிள்ளைங்களுக்கு இம்மாதிரி நிகழ்ச்சிகளில் ஆர்வமிருக்காது; நமக்காக அவர்களை ஏன் அரங்குக்குள் கட்டிப் போடவேண்டும்? எங்க ரெண்டு பேருக்குமே ஒரு இடத்தில அரைமணி நேரத்துக்குமேல உக்காந்திருக்கிறது கஷ்டம். இதனாலேயே நாங்க இதுமாதிரி எந்த நிகழ்ச்சிகளுக்கும் போறதில்ல. பட்டிமன்றத்துக்காக வந்தோம். எங்களுக்குப் பின்னாடி 3 பாலக்காட்டுப் பெண்மணிகள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கிட்டுருந்ததனால ஒரு மணி நேரம் சுவாரசியமாகப் போனதே தெரியவில்லை. என்னவருக்கு அவல் நிறையவே கிடைத்தது!! சரியா 6.50க்கு நெப்போலியன் வந்தார்.

நிறைய பேர் கைக்குழந்தைகளோடும், சிறுவர்களோடும் வர்றதைப் பரிதாபமா பார்த்தேன். தமிழ்க் கலாசாரப்படி 6.50க்கு நிகழ்ச்சி ஆரம்பிச்சாங்க. வரவேற்பு நடனம் நல்லாருந்துது. ஃபோட்டோ எடுக்கலாம்னு பாத்தப்போ, கேமரா கொண்டுவர வழக்கம்போல் மறந்தது தெரிந்தது. மொபைலில் எடுத்தோம். ஈரோடு மகேஷ் நிகழ்ச்சி நல்லா சிரிக்கும்படியா இருந்துது. கணவன் - மனைவிகளைக் கிண்டல் செய்யத் தவறவில்லை. கோகுலின் கடைசி நடனம் (மட்டும்) நல்லா இருந்தது. சின்னஞ்சிறுவர்கள் நிறைய பாடல்களுக்குச் சிறப்பாக நடனம் ஆடினார்கள். பிறகு, வந்திருந்த விருந்தினர்கள் பேசினார்கள். தமிழ்க் கலாசாரப்படி, அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசும் கொடுத்தாங்க.

திரு. நெப்போலியன் சுவையாகப் பேசினார். Social Justice & Empowerment துறை மந்திரியான அவர் சமூகவாரியாக ஒதுக்கீடு செய்வதுதான் தன் துறையின் வேலை என்று சொன்னார். கலைஞர் புகழ்பாடவும் மறக்கவில்லை. குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகள் தம்மை வெகுவாகக் கவர்ந்ததாகவும், அவர்கள் துபாய் வந்தும் தமிழ்க் கலாசாரத்தை மறக்காமலிருப்பது பெருமகிழ்வைத் தருவதாகவும் குறிப்பிட்டார். சினிமாப் பாட்டுக்கு டான்ஸ் ஆடுவதுதான் தமிழ்க் கலாசாரமா என்ற கேள்வி வருகிறதா உங்களுக்கும்? கடைசியில் “கிழக்குச் சீமையிலே” பாட்டைப் பாடினார். ரசித்தோம். அதோடு நிறுத்தியிராமல், “ஜீன்ஸ்” படத்தின், “பூவுக்குள் ஒளிந்திருக்கும்” பாடலின் 4,5 வரிகள் பாடினார். இனி அந்தப் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் நெப்போலியன் குரல்தான் ஞாபகம் வந்துத் தொலைக்கும்!!

மற்றபடி நல்ல கலகலப்பானவராக இருந்தார். முக்கியமாக மாணவர்களுக்குப் பரிசு வழங்கும்போது, அவர்களின் பெயர்களைக் கேட்டுச் சரியானப் பதக்கங்களை எடுத்துக் கொடுத்து, ஃபோட்டோவுக்குச் சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்தார். நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற எல்லாரையும் மறக்காமல் மேடையில் குறிப்பிட்டுப் பாராட்டினார். மேடையின் கீழே உட்கார்ந்திருக்கும்போது சரமாரியாக எல்லோரும் ஆட்டோகிராஃப் கேட்டு, ஃபோட்டோ எடுத்தனர். முகம் சுளிக்காமல் ஒவ்வொரு குழந்தையாக மடியில் வைத்துப் படம் எடுத்துக் கொண்டது ஆச்சர்யம் தந்தது.

கொஞ்சம் பிரபலமானாலே பயங்கர பந்தா விடுபவர்கள் போலல்லாமல் இவரைப்போல் எளிமையான ஒருவரைக் காண்பது அரிது. E.T.A. வின் திரு. சலாஹுத்தீன் பேசும்போது பால்கனியிலிருந்து வந்த முழக்கங்கள், ETAகாரர்களுக்கென்று பால்கனி ரிசர்வ் செய்யப்பட்டதோ என்ற ஐயம் தந்தது. அமீரகப் பதிவர்களின் சுற்றுலாப் படங்கள் பார்த்திருந்ததால், யாராவது தென்படுகிறார்களா என்று பார்த்தேன். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற கதையாக எல்லோருமே அப்படித்தான் தெரிந்தார்கள். கீழை ராஸா (சாருகேசி) போலிருந்த ஒருவர் அடிக்கடி மேலேயும் கீழேயும் நடந்து கொண்டே இருந்தார். உடல் இளைக்கப் பயிற்சியோ என்னவோ!!

அப்படி இப்படி என்று பட்டிமன்றம் ஆரம்பிக்க 10 மணியாகி விட்டது. நாங்கள் அபுதாபியிலிருந்து வந்தபடியால், பத்து, பத்தரைக்கு நிகழ்ச்சி முடிந்துவிடும், கிளம்பிவிடலாம் என்றுதான் நினைத்திருந்தோம்.
நாங்கள் வந்தது பட்டிமன்றத்துக்காகத்தான் என்பதால் நேரமானாலும் போக மனமில்லை. நடுவர் ராஜாவும் இதைப் பலமுறைச் சுட்டிக் காட்டினார். இதற்கிடையில் எதிர்பார்த்தது போலவே, கைக்குழந்தைகள் அழ ஆரம்பிக்க, சிறார்கள் ஓடியாடி விளையாட, கூட்டட்த்தில் சலசலப்பு அதிகமானது. என் வலது இருக்கையில் 3 பெண் குழந்தைகள். அவர்களாவது பேசிக்கொண்டுதான் இருந்தார்கள். என்னவரின் இருக்கையின் இடதுபுறம் 3 பையன்கள். குதித்து, அடித்து, சண்டை போட்டு என்று அதகளம்தான். ராஜா குழந்தைகளை அமைதிப் படுத்துமாறு வேண்டியும், யாராலும் முடியவில்லை. பின்னால் 3 சேச்சிகளின் சத்தமான லைவ் கமெண்ட்ஸ் வேறு, அந்த சேலையைப் பாத்தியா, இதைப் பாத்தியான்னு. அங்கங்கே சோர்வில் அழும் பிள்ளைகளைப் பெற்றோர்கள் கோபத்தில் அடிப்பதையும் பார்க்க முடிந்தது.

பட்டிமன்றம் கலகலப்பா இருந்தது. பேசிய 6 அமீரகப் பேச்சாளர்களுமே நன்றாகப் பேசினர். ராஜா சொன்னதுபோல, துபாயில் மேடை வாய்ப்புகள் அதிகம் கிடைக்காத நிலையிலும் இவ்வளவு பேச்சுத்திறன் இருப்பது ஆச்சர்யமே. ராஜாவும் ஏமாற்றாமல் கலகலப்பாக நடத்திச் சென்றார் நிகழ்ச்சியை. நடுவர் தீர்ப்பு சொல்ல ஆரம்பிக்கும்போது 11.55 ஆகிவிட்டது. அதற்குமேல் லேட்டாகப் போய் (குழந்தைகளை விட்டுவந்த துபாய்) உறவினர் வீட்டைத் தட்டிக் கொண்டிருப்பது நாகரீகமல்ல என்பதால் கிளம்பி விட்டோம். அதனால், தீர்ப்பு என்னவென்று தெரிந்தவர்கள் சொல்லுங்கப்பா.

பொதுவாக நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால் இன்னும் நேரத்தைச் சரியாகக் கணித்து. குறித்த நேரத்தில் ஆரம்பிப்பது, பிந்தினால், அதற்கேற்றவாறு சில நிகழ்ச்சிகளை விரைவுபடுத்துதல் என்று செய்திருந்தால் பலரும் நிகழ்ச்சியின் ஹைலைட்டான பட்டிமன்றத்தைத் தவிர்க்க நேராதிருந்திருக்கும். இம்மாதிரி நிகழ்ச்சிகளின் நடுவில் குழந்தைகளின் நடனங்கள் இல்லாமலிருப்பதே நல்லது என்பது என் கருத்து. எத்தனை பேர் அதை ரசித்துப் பார்த்தார்கள்? கடனே என்றுதான் நிறைய பேர் இருந்தார்கள்.அதுபோல இம்மாதிரி நிகழ்ச்சிகளுக்கு வருபவர்கள் குழந்தைகளை அழைத்து வராமல் இருப்பதே நல்லது. குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள உறவினர்கள்/ நண்பர்கள் இல்லையென்றால் போகாமலிருப்பது நல்லது.

மேடையில் பேசிய அமீரகத் தமிழ் நண்பர்கள் சிலர் தமிழ் உச்சரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பங்கு பெற்ற முதல் பெரிய நிகழ்ச்சி என்பதால் ஏற்பட்ட பதற்றமாகவும் இருக்கலாம் ஒருவேளை.

இந்நாள் நல்லதொரு நாளாக இருக்கும் எங்கள் நினைவில்! நன்றி யூ.ஏ.இ. தமிழ்ச்சங்கம்!!

(படங்கள் பின்னர் இணைக்கிறேன்.)

Post Comment

வருக, வருக..




(முன்குறிப்பு: ப்ளாக்கர்களின் (அய்யோ, சரியா வாசிங்க. அது கெட்ட வார்த்தை இல்லை. ப்ளாக்கர் - Blogger, அதாவது என்னைப் போல ப்ளாக் எழுதுறவங்க!!) பாஷையில் ரங்கமணின்னா புருஷன், தங்கமணின்னா மனைவி, புரியுதா? ஷார்ட்டா, ரங்ஸ், தங்ஸ்!!)

நேத்து பெய்ஞ்ச மழையில முளைச்ச காளானாட்டம் இப்பதான் பதிவு எழுத ஆரம்பிச்சுட்டு, மூத்தகுடி பதிவர்களான நமக்கே தங்ஸ், ரங்ஸ் விளக்கம் சொல்றாளேன்னு தயவுசெய்து யாரும் தப்பா நினைக்காதீங்க!!

இதுவரை பலமுறை கெஞ்சியும் என் ப்ளாக் பக்கமே வராத எங்க ரங்ஸ் (வீட்லத்தான் நீ எழுதிவைக்கிற ஜாப் லிஸ்ட், ஷாப்பிங் லிஸ்ட் தினமும் படிக்கிறேனே, அங்கயுமா?) இன்னிக்குத்தான் என் ப்ளாக் பக்கம் வரப் போகிறார் என்பதால் இந்த விளக்கம். (யாராவது இதான் சாக்குன்னு முந்தைய பதிவுகள்ல நான் அவரைப் பத்தி எழுதுனதெல்லாம் போட்டுக் கொடுத்தீங்க....)

பத்திரி்கைகள் அவ்வப்போது சிறப்பிதழ்கள் வெளியிடுவார்கள், எங்கள் ஊருக்கு வரும் சிங்கமே வருக என்று அவரின் சிறப்பெல்லாம் போட்டு வரும். இதுவும் அதுபோல ஒரு பதிவுதான்!! முதன்முதல் என் பிளாக் பக்கம் வரும் என் ரங்ஸே, வருக, வருக என்று வரவேற்கிறேன். என்னாங்க, என் தோழர்கள் உங்களை வரவேற்றுப் போடும் கோஷம் விண்ணை முட்டுவது கேட்கிறதா உங்களுக்கு?

எங்க ரங்க்ஸ் பத்திச் சொல்லணுன்னா, அபுதாபியில எஃப் 1 ரேஸ் நடந்துதே, அந்த யாஸ் தீவிலதான் இஞ்சிநீரா இருக்கார். எஃப் 1 ரேஸ் வரைக்கும் பிஸின்னா அப்படி ஒரு பிஸி!! ஏதோ இவர் அங்க இருக்கப் போயி ரேஸ் நல்லபடியா எந்த அசம்பாவிதமும் இல்லாம நடந்து முடிஞ்சுது!!

அப்புறம், ரொம்ப நல்லவர், வல்லவர், அன்பும், பண்பும் நிறைந்தவர்.


இந்த நல்லவரை பதிவுலகச் சார்பாக மீண்டும் வருக வருகவென வரவேற்கிறேன். ம்ம்ம்...இனி கொஞ்சம் கவனமாத்தான் எழுதணும் :-(








Post Comment

அன்புள்ள சகோதரர்கள்..




என் வீட்டில் நாங்கள் நாலு சகோதரிகள். சகோதரர்கள் இல்லை. நான் மூத்த பெண். என் அப்பாவுக்கும் மூன்று சகோதரிகள் மட்டுமே, வீட்டில் ஒரே ஆண். எண்பதுகளில் ஒரு கிராமத்துச் சூழ்நிலையில், பெண்கள் அதிகம் வெளியே செல்வதில்லை என்பது அறிவோம். என் அப்பாவோ சவூதியில் வேலை செய்துவந்தார்.

வீட்டுக் காரியங்களில் ஒரு காலம் வரை தாய்மாமன்கள் வந்து உதவிசெய்தனர். அதன்பிறகு அவர்களும் சொந்தத் தொழில், வேலை என்று பிஸியாகிவிட்டனர். அம்மா, அப்பா இருவரும் அவரவர் வீட்டில் மூத்தவர்கள் என்பதால் அத்தை, மாமா, சித்திகளுக்கு உள்ள ஆண் குழந்தைகள் எல்லாரும் என்னை விட ரொம்பச் சின்னப் பசங்க. சிறு வயதில் பள்ளிக்கு மாட்டு வண்டியிலும், விவரம் தெரிந்த பிறகு அதில் போக மறுத்து, ஆட்டோவிலும் போனதால் நானே கடைக்குச் செல்லும் சாத்தியங்களும் இல்லை. அனுமதியும் கிடைக்கவில்லை. ஊரினுள் பலசரக்கு, மருந்து, டீக் கடைகளைத் தவிர வேறு கடைகளும் இல்லை.

தேவைப்படும் பள்ளி சார்ந்த பொருள்களை (இந்தியா மேப், ஜியோமெட்ரி பாக்ஸ், இங்க் பாட்டில், இத்யாதிகள்..) ஜங்ஷன், டவுணிலிருந்து வரும் சக மாணவிகளிடம் வாங்கி வரச் சொல்வேன். அவர்களால் வாங்கிவர முடியாத பொருட்களை உறவினர்களிடம் (மாமா, சித்தப்பா..) சொல்லி வாங்கித் தரச்சொல்வதும், பிறகு அவர்களையும் தொந்தரவு செய்ய முடியாமல் போக.. பதின்ம வயதுகளில் நான் கடைக்குப் போகிறேன் என்று அம்மாவிடம் அழுது, தொந்தரவு செய்ய, ஒழுங்கா பள்ளிக்கூடத்துக்கு மட்டும் போய்வர்றதுன்னா போ, இல்லை பேசாமல் வீட்டில் உட்கார் என்று மிரட்டப்பட்டதால் அதையும் கைவிட நேர்ந்தது. அம்மாவின் வீட்டுத் தீர்வை கட்ட ஆள் வேண்டுமே, வயலுக்கு மருந்தடிப்பதை மேற்பார்வையிட யாரை அனுப்புவது போன்ற கவலைகளின் நடுவே என் தேவைகள் முக்கியத்துவம் பெறவில்லை.

பின் தேவைகளின் அவசியத்தை உணர்ந்து, (சர்ஃப் பவுடர் ஜங்ஷனில்தான் விலை குறைவு, ஆப்பிள் இங்கே கிடைக்காது...) அம்மாவே அவ்வப்போது ஜங்ஷன் சென்று வாங்கி வருவார். இரண்டு, மூன்று மாதங்களுக்கொரு முறை செல்லும் அந்தப் பயணம் புறப்படுவதே மிகவும் சுவாரசியமாக இருக்கும். அந்தப் பயணங்களில் கடைசித் தங்கை மட்டும் உடன் சென்று வர அனுமதியுண்டு. அம்மா எப்பவும் துணைக்கு தம்பியை அழைத்துச் செல்வதால் மாமாவின் வசதியைப் பொறுத்தே பயணம் ஏற்பாடு செய்யப்படும். நாங்கள் நால்வரும் எங்களின் தேவைகளை எழுதிக்கொடுக்க, அதில் அம்மாவின் வீட்டோ பவரால் ரிஜெக்ட் செய்யப்பட்டது போக மீதி வாங்கி வரப்படும். அதிலும் நாங்கள் கேட்ட பிராண்ட் விலை அதிகம் என்பதால், வேறு விலை குறைந்த அல்லது பிடிக்காத நிறத்தில்..எதுவாக இருந்தாலும் கிடைத்த வரை லாபம் என்று வைத்துக் கொள்வேன். நாங்கள் கேட்காமலே அம்மா எப்பவும் வாங்கிவரும் இரண்டு ஃபைவ் ஸ்டார் (ஆளுக்குப்பாதி மட்டும்), ஒரு பாக்கெட் ஜெம்ஸ் (எண்ணி ரெண்டு அல்லது மூன்று மட்டும் ஒருவருக்கு) ஆகியவை அந்தக் கோபத்தைத் தணித்துவிடும்.

பத்தாம் வகுப்பில் நிறைய ஸ்பெஷல் கிளாஸ் இருந்ததால் ஆட்டோவிலிருந்து விடுதலை அடைந்து பஸ்சில் செல்ல ஆரம்பித்தேன். என் பள்ளியருகே உள்ள பாளை பஸ் ஸ்டாண்டில் உள்ள ஸ்டூடண்ட்ஸ், ஈகிள் கடைகள் மாணவர்களிடையே பிரசித்தம். மெல்ல மெல்ல அந்தக் கடைகளுக்கு மட்டும் செல்ல அனுமதி கிடைத்தது. பரிட்சை பேப்பர், கணக்கு நோட்டு, ஒரு பக்கம் மட்டும் கோடு போட்ட சயின்ஸ் நோட்டு, இப்படி என் தேவைகளை மட்டுமல்லாது, தங்கைகளுடையதையும் நானே பூர்த்தி செய்ய ஆரம்பித்தேன்.

முந்தைய கால‌கட்டங்களில் வகுப்பில் டீச்சர் மேப், கிராஃப் பேப்பர், போன்றவைகள் கொண்டு வரவேண்டும் என்று சொல்லிவிட்டாலே எப்படி, யாரிடம் சொல்லி வாங்கப் போகிறோம் என்று கவலையாக இருக்கும். இப்படி எனது ஒவ்வொரு தேவையையும் போராடி நான் நிறைவேற்றிக் கொண்டிருந்த நாட்களில், சக மாணவிகள் கவலையே இல்லாமல் இருந்தனர். அவர்களுக்கு அவர்களின் அண்ணன்கள், தம்பிகள் அல்லது அப்பா வாங்கி கொண்டு வந்து தருவார்கள். அப்போதும் ஏனோ எனக்கும் ஒரு அண்ணன் இருந்தால் இதற்கெல்லாம் உதவியாக இருந்திருக்குமே என்று தோன்றவில்லை.

பின்னர் கல்லூரி நாட்களில் ரொம்பவே சுதந்திரம் எடுத்துக் கொண்டேன். கல்லூரிக்குத் தேவையான புத்தகங்கள், நோட்ஸ், லேப் உபகரணங்கள் என்று நானே ஜங்ஷன், டவுண் சென்று வாங்க ஆரம்பித்தேன். கோ-எஜுகேஷன் கல்லூரி என்றாலும் இரண்டாம் வருடத்திலிருந்துதான் சக மாணவர்களிடம் சகஜமாகப் பழக முடிந்தது. பிறகு எந்தக் கடையில் டிராயிங் பேப்பர்கள் விலை கம்மி, பிராஜக்ட் ஒர்க் எங்கே டைப் செய்யலாம், எக்ஸாம் ஃபீஸுக்கு எங்கே சலான் எடுக்கணும், அரியர்ஸுக்கு ஃபீஸ் எப்போ கட்டணும் என்ற அவர்களின் வழிகாட்டுதலுடன் அதிகச் சிரமமில்லாமல் கல்லூரிப் படிப்பு நிறைவேறியது. அப்போ கொஞ்சமும் தோணவேயில்லை நமக்கு ஒரு அண்ணன் இல்லையே என்று.

ஆனால் பள்ளியிலும், கல்லூரியிலும் சில தோழிகளின் பேச்சுகளிலிருந்து அண்ணன்கள் இருப்பது ஒரு வகையில் வசதி என்றாலும், அவர்களின் ஆதிக்கம், அடக்குமுறை அதிகம் இருக்கும் என்பதை அறிந்து கொண்டேன். அதோடு அடிக்கடி அவர்களின் பேச்சில் இடம்பெறும், “அண்ணன் வரும் நேரம்”, “தம்பி பாத்தா தொலைஞ்சேன்”, “அண்ணனுக்குத் தெரிஞ்சா திட்டுவான்” போன்ற பேச்சுகள் நல்லவேளை எனக்கு அண்ணன் இல்லை என்ற ஆசுவாசத்தையே தந்தன.

பின் என் திருமண சமயத்திலும் அப்பா, உறவினர்களோடு நானும் வேலையை இழுத்துப் போட்டுச் செய்த போதும் தோன்றவேயில்லை சகோதரன் இல்லையே என்று. திருமணமாகிப் பல வருடம் கழித்து கணவரிடம் அவரது சகோதரியினைக் குறித்த எனது மனத்தாங்கலைக் கூற, “அதெல்லாம் கண்டுக்காதே” என்ற அவரின் பதிலைக் கேட்டபோது தோன்றியது, எனக்கும் இப்படி ஒரு அண்ணன் இருந்திருக்கலாமே என்று!!








Post Comment