Pages

சிங்கமும் புலியும்




காலையில் எல்லாரையும் ஆஃபீஸ்-பள்ளி அனுப்பிவிட்டு, சில்லறை வேலைகளை முடித்துவிட்டு, ‘பிஸ்மில்லாஹ்’ என கம்ப்யூட்டரை ஆன் செய்துவிட்டால், அது பயன்பாட்டுக்கு ரெடியாகிவர ஒரு எட்டு-பத்து நிமிஷம் ஆகும். என்ன செய்ய... பழைய கம்ப்யூட்டர்.. (அதற்காக, வாசகர்கள் உடனே புது லேப்டாப் வாங்கி அனுப்பிவிடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்)

அந்த பத்து நிமிஷத்தையும் வேஸ்ட் பண்ண மனசில்லாம (ம்க்கும்...) ஏதேனும் வாசிப்பேன். இன்றும் அப்படித்தான் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு அமர்ந்தேன். வாசிக்க ஆரம்பித்ததில், கம்ப்யூட்டரை முற்றிலுமாக மறந்து, சுமார் ஒன்றரை - இரண்டு மணி நேரமாகத் தொடர்ந்து அந்தப் புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டுத்தான் கீழே வைத்தேன்!!

வாசித்த சம்பவங்களின் பிரமிப்பில் இருந்து மீள முடியாமலேயே புத்தகத்தை மூடியபோது, பின் அட்டையில் கலைஞர் கருணாநிதி அவர்கள் இப்புத்தகத்தைப் பற்றித் தெரிவித்த கருத்து கண்ணில் பட்டது: “சென்னையிலிருந்து ஈரோடுக்கு இரயிலில் செல்லும்போது, சற்று நேரம் மட்டும் வாசித்துவிட்டுக் கண்ணயரலாம் என்று நினைத்துக் கையில் எடுத்த புத்தகத்தைக் கீழே வைக்கும்போது ரயில் ஈரோடுக்கு அருகில் வந்திருந்தது!!”

அப்படி எந்த புத்தகம் அது? நாவலர் ஏ.எம்.யூசுப் அவர்கள் எழுதிய, “பாலைவனச் சிங்கம்” என்றழைக்கப்படும் உமர் முக்தார் அவர்களின் போராட்ட வரலாறு.


ம் இந்தியா, பிரிட்டிஷாரால் ஆக்கிரமிக்கப்பட்டதுபோல, ஆப்பிரிக்க நாடான “லிபியா”வும் இத்தாலியால் ஆக்கிரமிக்கப்பட்டது. அப்போது மக்களைத் திரட்டி ஒன்று சேர்த்து சுதந்திர உணர்வையூட்டி, போராட்டத்திற்கு வித்திட்டவர்தான் இந்த உமர் முக்தார். இவர் ஒரு எளிய ஆசிரியர் என்பதும், எழுபதுகளில் உள்ள ஒரு முதியவர் என்பதுவும்தான் இவ்வரலாற்றின் ஆச்சரியப்புள்ளிகள். புரட்சிப் படையினருக்குப் போர் தந்திரங்களையும், கெரில்லா போர் முறையையும் பயிற்றுவித்தது எழுபதைத் தாண்டிய ஒரு முதியவர் என்பது ஆச்சரியம்தானே!!

உமர் முக்தார் தலைமையிலான புரட்சிப் படையின் போராட்டத்தை அடக்கி, அடியோடு அழித்துவிடவென இத்தாலியின் முசோலினி சிறப்பு அதிகாரம் கொடுத்து, ஜெனரல் ரொடோல்ஃபோ கிராஸியானி-யை லிபியாவுக்கு அனுப்பி வைக்கிறார். வந்ததும், ஆரம்ப ஜோரில் ஆழம் தெரியாமல் காலைவிட, இராவணுத்திற்கு பெருநஷ்டம் ஏற்படுகிறது. போரைத் தொடர்ந்து நடத்த, இத்தாலியிலிருந்து கூடுதல் படை வந்தால் மட்டும் முடியும் என்ற நிலையில், படை வந்து சேரும் காலம் வரை புரட்சிப் படையினரைத் தாக்குதலில் ஈடுபடாமல் தடுத்து வைக்க “பேச்சு வார்த்தை” என்னும் உபாயத்தைக் கைகொள்கிறார் கிராஸியானி!!

வழக்கமாகப் போராளிக் குழுக்கள்தாம், தம் கைவசம் உள்ள ஆயுதங்கள் தீர்ந்து போகும்போது, ஆயுத பலத்தையும் படை பலத்தையும் பெருக்கிக் கொள்ள போர் நிறுத்த அவகாசம் கோருவார்கள். ஆனால், இங்கு இராணுவமே அதைச் செய்வதிலிருந்து இராவணுத்துக்கு ஏற்பட்ட இழப்பின் அளவு எத்தனை வலியது என்று தெரிகிறது. ஆயுத பலத்திலும், படைபலத்திலும் அசுரனாய் நிற்கும் இத்தாலி இராணுவத்தின் முன்பு, எந்தவித முறையான பயிற்சியோ, கிஞ்சிற்றேனும் ஆயுதங்களோ, அதற்கான பணமோ, படைபலமோ எதுவுமே இல்லாத போதிலும், லிபிய புரட்சிப் படையால் அவர்களுக்கு எங்ஙனம் பலத்த நஷ்டத்தை உண்டாக்க முடிந்தது?

அவர்களுக்கு அனுகூலமாய் இருந்த பாலை நிலப் பிரதேசத்தின் இயல்பை முழுமையாக அறிந்திருந்ததும், கைவசம் இருக்கும் சிறு படை மற்றும் தளவாடங்களைக் கொண்டு கச்சிதமாகத் திட்டமிட்டதுடன், இறையச்சத்தை முழுமையாகக் கைகொண்டு, நாட்டுச் சுதந்திரத்துக்காகப் போரிடுவதை தேசபக்தி என்றெல்லாம் செயற்கையாகப் பெயரிடாமல், அந்நிய ஆதிக்கத்தை எதிர்க்கும் இறைவழியிலான போர் என்ற முழுநம்பிக்கையுடன் செயல்பட்டதுதான்!!

மேலும், நோக்கம் நேராக இருந்து, கூடவே இறைபக்தியும் இருந்தால், படைபலம் - தளவாடம் குறித்த எண்ணிக்கைக் குறைவு இலட்சியத்தை அடைய ஒருபோதும் தடையில்லை என்பது இஸ்லாமிய வரலாற்றில் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்ட ஒன்று!!

பேச்சுவார்த்தையின் அழைப்புக்குப் பின் உள்ள தந்திர நோக்கம் புரிந்தாலும், அமைதியை நாடி புரட்சிக்குழுவினர் அதற்குச் சம்மதிக்கின்றனர். அந்தச் சந்திப்பில், உமர் முக்தார், தமது போராட்டம் மற்றும் கோரிக்கைகளின் நியாயத்தைப் புரிய வைக்கும் முயற்சியில் எதிரியாக இருக்கும் கிராஸியானியைத் தமக்கு ஆதரவாக மாற்றிவிடுகிறார்!! அதன் பலனாக, போராட்டக் குழுவுக்கு ஆதரவாகத் தன் அதிகாரத்தைக் கொண்டு தாக்குதலின் கடுமையைக் குறைக்கிறார்.

ஆரம்ப காலம் தொட்டு, இஸ்லாமிய வரலாறுகளில் நுணுக்கமாகக் கவனித்தால் ஒரு விஷயம் புலப்படும். அன்று முதல் இன்று வரை, எதிர்த் தரப்பிலிருந்து முக்கியமான ஒருவர், முஸ்லிம் படைகளின் நடவடிக்கைகளால் கவரப்பட்டோ, பேச்சு வார்த்தையின்போதோ, இஸ்லாமிய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு முஸ்லிமாக மாறி விடுவார்!! இன்றும் இஸ்லாத்தைக் கடுமையாக எதிர்த்த எத்தனையோ பேர் முஸ்லிம்களாக மாறி இருக்கின்றனர்.  இங்கும்,  தொடக்கத்தில் உமர் முக்தாருக்கு ஆதரவாக மட்டும் மாறும் ஜெனரல் கிராஸியானியின் மனம், படிப்படியாக இஸ்லாத்தின் பக்கமாகச் சாய்ந்துவிடுகிறது.

ஆனால், விதி இப்போது முஸோலினியால் அனுப்பப்படும் “ஜெனரல் மக்ரோனி” என்கிற இன்னொரு எதிரி வடிவில் வந்து பேயாட்டம் போடுகிறது. அதனால் நடக்கும் தாக்குதல்களில், மக்ரோனி உயிரிழக்கவும், உமர் முக்தார் பிடிபடவும் நேருகிறது. தூக்கு தண்டனையைக் குறைத்துவிடுவதாக ஆசை காட்டினாலும் முஸோலினிக்கு மன்னிப்புக் கடிதம் எழுத மறுக்கிறார். அதன் பின் சிறையில் இருக்கும்போதும், தூக்குமேடையிலும் அவர் காட்டிய கம்பீரமும் உறுதியும் அமைதியும் இத்தாலியப் படையினரையே வியப்பில் ஆழ்த்தியதென்பது, இஸ்லாமிய வரலாற்றில் புதியதல்ல!! 

னி சில சுவாரஸ்யமான சம்பவங்களைப் பார்ப்போம்!!
#**# பேச்சுவார்த்தையின்போது, முகத்தை மறைத்து வரும் புரட்சிக் குழுவினரிடம், ஜெனரல் கிராஸியானி “முகம் பார்த்துப் பேசினால் மனம் திறந்து உரையாடலாமே?” என வினவ, ”முகத்தை மூடியிருப்பவர்களெல்லாம் மனதை மூடியிருப்பவர்களல்ல; முகத்தைத் திறந்திருப்பவர்களெல்லாம் மனதைத் திறந்திருப்பவர்களுமல்ல என்பது ஜெனரலுக்குத் தெரியாதா?” என பேச்சுவார்த்தையின் நோக்கத்தைச் சுட்டிக்காட்டி “பஞ்ச்” வைக்கிறார் உமர் முக்தார்!!

#**# பேச்சுவார்த்தையின்போது உமர் முக்தார் வைக்கும் ஒரே வேண்டுகோள், புரட்சிப் படையின் மீதுள்ள கோபத்தை அப்பாவிப் பொதுமக்களிடம் காட்ட வேண்டாம் என்பதே.... இன்றும்கூட இராணுவங்களின் ஒரே யுக்தி அதுவாகத்தானே இருந்து வருகிறது!! :-(

#**# லிபியாவை அடிமைப்படுத்திய இத்தாலி நாடு, முன்னர் அந்நிய நாடான சர்தீனியாவின் ஆட்சியின் கீழ் இருந்தது;  அப்போது இத்தாலியின் விடுதலைக்காக பெனிடோ முஸோலினியின் தலைமையில் போராடினார்கள்; விடுதலை கிட்டியதும் ஆட்சித்தலைவராகப் பதவியில் ஏறிய அதே முஸோலினி பின்னர் இத்தாலியின் சர்வாதிகாரியாக ஆகிவிட்டார்!! மேலும் அண்டை நாடுகளைப் பிடித்து அடிமைப்படுத்தவும் செய்தார்; தமது பதவிக்கு எதிராக இருப்பவர்களின் மீது பொய்யான #தேசத்துரோகக்_குற்றம் சுமத்தி சிறையிலடைக்கவோ, தூக்கிலிடவோ செய்தார்!! அதிகார போதை எதுவும் செய்ய வைக்கும்!!

#**# போராட்டக் குழுவில், உமர் முக்தாருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் அல்-கரீமி. உமர் முக்தார் சிங்கம் என்றால், அல்-கரீமி புலி! ஆரம்பத்தில் இத்தாலிய இராணுவத்தில் இருந்தவர்.   அவர், முஸோலினியைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது,  லிபிய இளைஞர்கள் அரசுப் பணிகளில் குமாஸ்தா பதவிக்கு மேல் செல்ல முடியாத நிலையைச் சுட்டிக் காட்டி, அவர்களின் படிப்புக்கு ஏற்ற வகையில் உரிய பதவி உயர்வுகளும், உயர் அரசுப் பதவிகளும் கொடுத்தால் இளைஞர்கள் புரட்சிப் படையில் சேருவதைத் தடுக்கலாம் என்று ஆலோசனை கூறுகிறார். அதை ஏற்க மறுக்கும் முஸோலினி, “உங்களைப் போல ஓரிருவர் உயர் பதவிகளில் இருப்பதே லிபியர்களுக்கு மிகவும் அதிகம்” என்று கூறிவிடுகிறார்.

இதைக் கேட்ட அதிர்ச்சியில் தம் பதவியை இராஜினாமா செய்து, புரட்சிக் குழுவில் சேர்ந்து, தம் இராணுவ அறிவின் மூலம் பல வெற்றிகளுக்கு வழிவகுத்துக் கொடுத்தார்!!

#**#  இரண்டாம் உலகப் போரில், முஸோலினியின் கூட்டாளியான ஹிட்லர் தற்கொலை செய்துகொள்ள, அண்டை நாட்டுக்குத் தப்பித்து ஓட முயன்ற முஸோலினி மக்களாலேயே சுடப்பட்டு, பின் தலைகீழாகத் தூக்கில் போடப்பட்டார். அவரது பிணம் மக்களால் சிதைக்கப்பட்டது!! சகல அதிகாரம் பொருந்திய சர்வாதிகாரிகளின் மரணங்கள் இவ்வாறாக அமைந்தன.

ரு நாட்டில் போராட்டங்களும், புரட்சிகளும் அநீதியான அடக்குமுறைகளை எதிர்த்தே எழுகின்றன என்ற வரலாற்றினையே “உமர் முக்தார்” புத்தகமும் மீண்டும் உறுதி செய்கிறது!! ஒரு போராளியின் அணுகுமுறை, போராட்ட வழிமுறை எவ்வாறாக இருக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் உமர் முக்தாரின் வாழ்க்கை முழுதும் நிறைந்துகிடக்கின்றன.

Post Comment