Pages

டிரங்குப்பெட்டி - 24





சிலசமயம், தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே  ஒரே வார்த்தைக்கு இரண்டு அல்லது மூன்று  அர்த்தங்கள் இருக்கும். பயன்படுத்தும் முறைகளைப் பொறுத்து, அர்த்தம் வேறுபடும். உதாரணமாக, "drop"  என்ற வார்த்தைக்கு ”கீழே போடுதல்”, “துளி”, ”விட்டுவிடுதல்” என்று அர்த்தங்கள் உண்டு. இதே போல, ஆங்கிலத்தில் இருப்பதிலேயே அதிக அர்த்தங்கள் கொண்ட வார்த்தை எதுவென்று தெரியுமா?

“SET" என்ற வார்த்தைதான். சரி, எத்தனை அர்த்தங்கள் இதற்கு உண்டு என்று யூகியுங்களேன் பார்ப்போம். என்னது அஞ்சு, ஆறா.. ம்ஹூம், 10, 20.. இல்லை.. 100? உங்ககிட்ட இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன்... மொத்தம் 464!! ஆமாம், 464 அர்த்தங்கள் அந்த ஒரு வார்த்தைக்கு!!

^v^v^v^v^v^v^v^v^v^v^v^v^v^v

”பிரிக்க முடியாதது எவை?”ங்கிற கேள்விக்குச் சொல்லக்கூடிய பதில்களின் எண்ணிக்கைக்கும் கேள்வி கேட்கலாம். ஆனா, அடிக்க வந்துடுவீங்க. அந்த லிஸ்ட்ல முதல் 10 இடங்களில் கட்டாயம் “போலீஸும், தொப்பையும்” என்ற பதிலும் இருக்கும். தமிழ்நாட்டுல மட்டும்தான் இது(தொப்பை) கொஞ்சம் அதிகமோ நினைச்சுகிட்டிருந்தேன். ஆனா, இது ஒரு உலகளாவிய பிரச்னைன்னு இந்த ரெண்டு நியூஸையும் பார்த்ததும் புரிஞ்சுது. (அமீரகத்தில் இதுவரை தொப்பை போலீஸ் பார்த்ததில்லை!!)

பாகிஸ்தானில் போலீஸார் தொப்பைகளை இந்த மாத இறுதிக்குள் கரைக்கலைன்னா தண்டனையாம்!! பிலிப்பைன்ஸில் வருடாந்திர உடல் தகுதி தேர்வில் தொப்பை குறிப்பிட்ட அளவுக்குமேல் இருந்தால் ‘அலவன்ஸ்’ கட் என்பதால், தேர்வுக்குமுன் தீவிர பயிற்சியில் ஈடுபடுவார்களாம்!!

^v^v^v^v^v^v^v^v^v^v^v^v^v^v

அரசியல்வாதிகளின் வழக்கமான அலப்பறைகளுக்கு நடுவே, ஒண்ணுரெண்டு  (கம்யூனிஸ்ட் கட்சி) எம்மெல்லேக்கள் மட்டும் பஸ்ஸில போய்ட்டு வந்துகிட்டிருக்காங்கங்கிறது ஆறுதலா இருந்துது. அதுலயும் இப்போ கண் விழுந்துடுச்சு.

போன வாரம் பஸ்ஸில போன பெரியகுளம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பஸ்ஸில்  வரும்போது கூட்டத்தின் காரணமா உட்கார இடம் கிடைக்கலையாம். தனக்கு கண்டக்டர் இடவசதி செஞ்சுத் தரலைன்னு மேலாளர்கிட்ட கம்ப்ளைண்ட் செஞ்சிருக்கார். அரசு பேருந்துகளில் எம்.எல்.ஏ., எம்.பி.களுக்குன்னு சீட் ஒதுக்கப்பட்டிருக்குமாம் (பெண்கள், உடல் ஊனமுற்றோருக்கு ஒதுக்குவது போல). அதைக் காலி செஞ்சு கொடுக்கலையாம் கண்டக்டர்!!
^v^v^v^v^v^v^v^v^v^v^v^v^v^v

இன்னிக்கு இந்தியர்களின் வாயில் அதிகமாக வறுபடுவது பிரதமர் மன்மோகன்சிங்தான்!! இவரைக் குறை சொல்லாதவர் இல்லை.அநாகரீகமாக ‘மண்ணுமோகன்’ என்றெல்லாம்கூட வசைபாடுவதைப் பார்த்தால், என்னவோ இதுவரை வந்த எல்லாப் பிரதமர்களுமே ஸ்ட்ராங்கா இருந்த மாதிரியும், இவர் மட்டும்தான் ‘கைப்புள்ள’ மாதிரியும் இருக்குது. பிரதமரா இருப்பவர் தன்னிச்சையா, உறுதியா முடிவெடுக்கணும்னா, அட்லீஸ்ட் தனிக்கட்சி ஆட்சியாவது இருக்கணும். கூட்டணி ஆட்சியின்னா, இதுதான் கதி. உறுதியான பிரதமர்ங்கிறதெல்லாம், இந்திரா காந்தி காலத்தோட போச்சு.

அவ்வளவு ஏன், தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி செய்த பிரதமர் வாஜ்பாய் அவர்களால் மட்டும் என்ன செய்ய முடிஞ்சுது? “பிரதமரா இருந்தும் என்னால் ஒன்றும் செய்ய முடியலையே?”ன்னு கண்ணீரே விட்டாரே!! அவர் அரசில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரா இருந்த திரு. பிரிஜேஷ் மிஷ்ராவின் சென்ற வாரப் பேட்டியும் அதைத்தானே உறுதிப்படுத்தியது?!

இருந்தாலும், (தமிழ்நாட்டைப் போல) கேள்விகேட்பாரில்லாமல், ‘வானளாவிய அதிகாரம்’ படைத்தவர்களைப் போல ஒருவர் பிரதமராக வந்துவிடுவதை நினைத்துப் பார்த்தாலே, பகீரென்றுதான் இருக்கிறது.

^v^v^v^v^v^v^v^v^v^v^v^v^v^v

என் பெரியவன் ‘சுடோகு’ ஆர்வமாச் செய்வான். ஒருமுறை அவன் செய்துமுடித்தவுடன், ”நிஜமாவே முடிச்சுட்டியா?”ன்னு ஒரு ஆர்வக்கோளாறுல கேட்டுட்டேன். உடனே சாருக்கு ரொம்பக் கோபம் வந்து, “பாருங்க வாப்பா, உம்மாவுக்கு எனக்கு(ம்) அறிவு இருக்குன்னு நம்பவே முடியலை”ன்னான். ”நீ அவ பெத்த பிள்ளையாச்செ, அதான் உங்கம்மாவுக்கு டவுட்டு”ன்னு பல்பு கொடுத்தார்!!

உடனே ரோஷம் வந்து பொங்கி எழுந்து, நானும் சொடக்கு போட்டு, சுடோகு போட ஆரம்பிச்சுட்டேன். ஆனா, ஹி.. ஹி.. எப்பவாவதுதான் முழுசும் முடிப்பேன் ஹி.. ஹி... ஜாம் ஆகி பாதியில் நிக்கிற சுடோகு கட்டங்களைப் பெரியவன் வந்து கடகடன்னு போட்டு முடிக்கிறதைப் பாக்கும்போது, என்னதான் “ஸேம் ப்ளட்”ன்னாலும், லைட்டா புகை வரத்தான் செய்யுது!!

^v^v^v^v^v^v^v^v^v^v^v^v^v^v

சமீபத்தில் அவள் விகடனில், விபத்தினால் படுக்கையில் இருக்கும் 32 வயது மகனைக் கவனிக்க முடியாத வயதான தகப்பன், மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தானும் தூக்கில் தொங்கியதைப் படித்தபோது மனம் கனத்துப் போனது. சில நாட்களுக்குமுன்புதான் வீட்டையும், கணவரையும், மகனையும் கவனித்து வந்த அவரின் மனைவி இறந்து போனாராம். அதுவரை வீட்டுவேலைகள் எதுவும் செய்து பழக்கமில்லாததால், தனியே தாக்குப் பிடிக்கமுடியாமல் சில நாட்களிலேயே இப்படிச் செய்திருக்கிறார்.

சில அம்மாக்கள் மகன்களை வீட்டு வேலைகள் எதுவும் செய்யச் சொல்வதில்லை. பல கணவர்களோ அடுப்படி பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை. இதைப் பார்த்தாவது திருந்தட்டும்.

^v^v^v^v^v^v^v^v^v^v^v^v^v^v



Post Comment

வியப்பும் திகைப்பும்





தெருவில் நின்று விளையாடிக் கொண்டிருக்கும்போது தூரத்தில் அவன்(ர்) வருவது தெரிந்தது. உடனே திண்ணையில் ஏறி நின்று கொண்டேன். பயம் இல்லை... ஆனாலும் ஏனோ அவனைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு திடுக்கிடல் மற்றும் வேடிக்கை பார்க்கும் மனோபாவமும்கூட வரும்.

மெதுவாக அடிமேல் அடி எடுத்து வைத்து நடந்து வந்து கொண்டிருந்தான். அப்போதெல்லாம் ‘அடிப்பிரதட்சணம்’ என்றால் என்னவென்று தெரியாது. இப்போது புரிகிறது, அதுபோல்தான் அவன் மெதுவாக நடந்துவந்துகொண்டிருந்தான். யாரும் அவன் வழியில் குறுக்கிட மாட்டார்கள். தெரியாமல் வந்துவிட்டால் அவ்வளவுதான் வசைமாறிப் பொழியத் தொடங்குவான்!! அதற்குப் பயந்தே எல்லாரும் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளைக் கூட இழுத்து வைத்துக் கொள்வார்கள்.

பக்கத்து வீட்டுத் திண்ணையில் பீடி சுற்றிக்கொண்டிருக்கும் பெண்களிடையே  இப்போதே முணுமுணுப்பு தொடங்கிவிட்டது. ”எளா, ஜெய்லானி வர்றான். துட்டு வச்சிருக்கியா?” “போளா, துட்டுக்கு எங்கப் போவ? கொள்ளையில போவான் வாயில என்னத்தல்லாம் கேக்கணுமோ?”

ஜெய்லானி... வட்டிக்கு கடன் கொடுப்பவன். ஆள் பார்க்க ஒல்லியாக, குள்ளமாக, லேசாகத் தட்டினாலே ஒடிந்துவிடுபவன் போலத்தான் இருப்பான். அதற்கெல்லாம் சேர்த்து வாய் பெரிது. கண் பார்க்க நார்மலாக இருப்பது போலத் தெரிந்தாலும், பார்வை கிடையாது!! அதனால்தான், அடிமேல் அடி வைத்து நடப்பது - ஒருபடத்தில் மேஜர் சுந்தர்ராஜன் நடப்பாரே, அதுபோல. காது படுஷார்ப். எண்ணியெண்ணி நடந்தே, யார் வீடு எங்கு என்று துல்லியமாக அறிந்து, ஆளையும் இருக்கிறாரா இல்லையா என்றும் கண்டுபிடித்துவிடுவான்.

நான் மிகவும் ஆச்சர்யப்படுவது, கடன் வாங்கியவர் அங்கு இருந்துகொண்டே இல்லையென்று சொன்னாலும், அங்குதான் இருக்கிறார் என்று கண்டுபிடிப்பது எப்படி என்றுதான்!! அவரிடமிருந்து பணத்தை வாங்கிவிட்டு அல்லது வசவுகளை வாரிக் கொடுத்துவிட்டுத்தான் செல்வான். எங்க ஊர் கெட்டவார்த்தைகள் பலவற்றிற்கு எனக்கு இந்த ஜெய்லானிதான் அகராதி.

பணம் எண்ணித் தருவதிலும், கணக்குப் புத்தகமோ, சுவற்றில் கோடுகளோ எதுவும் இல்லாமல் கணக்கைச் சரியாகச் சொல்வதிலும் ... அது கால்குலேட்டர்கள் இல்லாக் காலம்தான் என்றாலும்,  எங்கேயும் எழுதியும் வைக்காமல் எப்படி இப்படி என்று அசந்துபோனதுண்டு.  ரூபாய் நோட்டுகளையும் கைகளால் தடவித்தடவியே சரியாகச் சொல்வதையும் விழிவிரிய வேடிக்கைப் பார்த்ததும்...

சொல்லவும் வேண்டுமா, பெரும்பாலும் பெண்கள்தான் இவனது ‘கஸ்டமர்கள்’!!  வசவுகளை அள்ளிப் பொழிவதில் ஆண்-பெண் சமத்துவம் பேணுபவன். யாருமே அவனைத் தட்டிக் கேட்டதில்லை. கேட்பவர் பரம்பரையும் வீதிக்கு வருமே!!

இவன்(ர்)தான் எனக்கு நேரில் அறிமுகமான முதல் பார்வையற்றவர். காது கேளாதவர்கள், நடக்க இயலாதவர்கள் என்று ஒன்றிரண்டு பேரை அறிந்திருந்தாலும், அவை பார்வையின்மையைப் போல அனுதாபப்பட வைத்ததில்லை. ஆனால், ஜெய்லானி மீது யாருக்குமே சொட்டுகூட அனுதாபம் இருந்ததில்லை.

பின்னர், ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பார்வையற்ற தோழிகள் நிறையப் பேர் கூடப்படித்தனர். அவர்கள் அனைவரும் ஒன்றாக ஒரு ஆதரவு இல்லத்தில் தங்கியிருப்பவர்கள். எந்தப் பாகுபாடுமில்லாமல் அனைவருமே அவர்களோடு நன்கு நட்புடன் பழகுவோம். பள்ளிப் புத்தகத்தின் பிரதி,  பிரெய்ல் புத்தகமாய் ஒன்றே ஒன்று மட்டுமே உண்டு என்பதால், ஷேர் செய்துதான் படிக்க வேண்டும். ஆகையால், பள்ளியில் இருக்கும்போது யாராவது ஒருவர் எல்லாருக்குமாய் வாசித்துக் காட்டுவோம்.

ஆசிரியர்களும் பாடத்தை நடத்தும்போது, அவர்கள் உள்வாங்கிகொள்ளவேண்டுமென்று நிதானமாகத்தான் நடத்துவார்கள். அதுவும், கணக்கு ஆசிரியை, ஒவ்வொரு ஸ்டெப்பையும் மறுபடி மறுபடி சொல்லி.. எப்படித்தான் பொறுமையாய் செய்தார்களோ என்று இன்று நினைக்கும்போது மலைப்பாய் இருக்கிறது. ஆனால், எவ்வளவு நன்றாகப் படித்தாலும் அவர்களால் கணக்குப் பாடத்தில் 100 மதிப்பெண் பெற முடியாது - ஜியோமெட்ரி வரைய முடியாதே!! அதிலிருந்து விலக்கும் கிடையாது. போலவே அறிவியலில் படங்கள் வரைவது, வரலாறு-புவியியலில் மேப்களுக்கான மதிப்பெண்களும் கிடைக்காது.

ஒருமுறை,  அவர்களின் பொறுப்பாசிரியர், இன்னொரு வகுப்பில் உள்ள பார்வையில்லாத மாணவியை அழைத்து வரச் சொல்லி என்னை அனுப்பினார். நான் அந்த வகுப்பில் இருந்த ஆசிரியையிடம், “அந்த ப்ளைண்ட் கேர்ள் மகாலக்ஷ்மியை டீச்சர்...” என்று ஆரம்பிக்க, அவர் உடனே, “அதான் மகாலக்ஷ்மின்னு பேர் இருக்கே,  ‘ப்ளைண்ட் கேர்ள்’னு அடைமொழி வேற ஏன்?” என்று கேட்க, என் தவறுணர்ந்தேன்.

பள்ளியில் பாடத்தைக் கவனித்ததைவிட, அவர்களைத்தான் அதிகம் கவனித்தேன். கண்ணில்லாத குறை, செவியில் நிறையாக இருக்கும். துல்லியமான கவனிக்கும் சக்தி - ஒருவரின் நடையை, வாசனைகளை வைத்தே அவர் யாரென்று அநாயாசமாகக் கண்டுபிடித்துவிடுவார்கள்!!  அவர்களிடம் எப்படிப் படிப்பார்கள், துவைப்பார்கள் என்று எப்போதும் கேள்விகளாய் கேட்டுக் கொண்டிருப்பேன். இப்போது யோசித்துப் பார்த்தால், நான் தான் அவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தேனே தவிர, அவர்கள் என்னிடம் இதுபோல் கேள்விகள் எழுப்பியதில்லை!!

பிறகு பள்ளி மாறியதில், அவர்களின் தொடர்பு விட்டுப் போயிற்று. பார்வையற்றவர்களுக்கான தற்காலத் தொழில்நுட்பங்களைக் கேள்விப்படும்போதெல்லாம் அவர்களின் ஞாபகம் வந்துபோகும்.  பின்னர் ரொம்ப நாள் கழித்துதான், ஹெலன் கெல்லர் பற்றி அறிந்தேன். கண் இல்லையென்றால், காது கண்ணுக்குக் கண்ணாகும். ஆனால் இவருக்கோ கண்ணோடு காதும் செயலிழந்தது என்றறிந்தபோது எப்படி வாழ்ந்தார் என்று அதிர்ச்சி. அவருக்கு ஒரு ஆசிரியை தொடுமொழி மூலம் பயிற்றுவித்தார் என்று மட்டும் அறிந்திருந்தேன்.

சென்ற வாரம், கீதமஞ்சரியின் பதிவில் ஹெலன் கெல்லரின் வரலாறும், அவரை அவரின் ஆசிரியர் பயிற்றுவித்ததைக் குறித்த திரைப்படமான Miracle worker-ஐயும் தந்திருந்தார். உடனே பார்த்தேன். Amazing!!

ஹெலன்  &  ஆன் சல்லிவன்
ஆன் சல்லிவன் என்ற அந்த ஆசிரியையின் திறமை அபாரம்!! செல்லக் குழந்தையாக, எந்தக் கட்டுப்பாடுமில்லாமல் வளர்க்கப் பட்டிருக்கும் ஹெலன் கெல்லரைப் பார்த்துவிட்டு, “அவளை ஒரு செல்லப் பிராணிபோல வளர்த்திருக்கிறீர்கள்” என்று தைரியமாக அவளின் பணக்காரப் பெற்றோரைச் சாடுவதும், பின் அவளைத் தன் முழு கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதும், ஹெலன் முதலில் அவரை எதிர்த்தாலும், பின் படிப்படியாகப் புதிய விஷயங்கள் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் ஆசிரியையோடு ஒன்றுவதும்... நீங்களே பாருங்கள். ஒரு ஆசிரியைக்கான அளவுகோல் அவரிடம்.

ஒரு காப்பகத்தில் வளர்ந்த ஆன் சல்லிவனின் மனதைரியமும், உறுதியும்தான், ஹெலனை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்று வைராக்கியம் கொள்ள வைக்கிறது. ஹெலனின் வளர்ச்சியில் ஆன் சல்லிவனின் பங்கு மிக மிகப் பெரிது. 49 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக இணைந்து இருந்திருக்கின்றார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். காது கேளாத ஹெலன் பேசவும் ”கற்றுக்கொண்டு”, பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்!! பல்கலைப் பட்டம் பெற்றுள்ளார், 39 நாடுகள் சுற்றியுள்ளார்.12 புத்தகங்கள் எழுதியுள்ளார்.

Documentary about Helen & Anne Sullivan - இதில் ஹெலன் எப்படிப் பேசப் படித்தார் என்று ஆன் சல்லிவன் விளக்குகிறார். ஹெலன் பேச்சையும் கேட்கலாம். கண்டிப்பாகப் பாருங்கள்.

சிலரைப் பார்த்து இறைவனின் படைப்பை வியப்பதுண்டு. சிலரைப் பார்த்து திகைப்பதுண்டு, எதற்கு இப்படியொரு சோதனை என்று. ஹெலன் கெல்லரையும் அப்படியே. ஆனால், அந்த அவரின் படைப்பினால்தான் அவர் எத்தனை பேருக்கு தன்னம்பிக்கை ஊற்றாக இரு(ந்திரு)க்கிறார்!! சாதாரண மனிதரால் அது சாத்தியமா? இதையேதான் 88 வயது வரை வாழ்ந்த ஹெலனும் கூறுகிறார்:

“இந்த இருண்ட அமைதியான என் வாழ்வை கடவுள் ஏதோவொரு திட்டத்தோடு தான் படைத்திருக்கின்றார். அதை என்றாவது ஒரு நாள் நான் உணர்வேன். அப்போது நான் அது குறித்து மகிழ்வேன்”
- ஹெலன் கெல்லர்
ஹெலனின் கையெழுத்து!!
 

Post Comment

கேள்வியின் நாயகன் - 3




guardian.co.uk

”ம்மா, உனக்கு ராபின்ஹூட் தெரியுமா?” (ஓ, லைப்ரரி புக்கைப் படிச்சி முடிச்சாச்சு போல!!)

“ம்.. ம்.. புக்ல படிச்சிருக்கேன்”

“அவர் என்ன செஞ்சார் தெரியுமா? அவரோட கண்ட்ரில (country) இருக்க ஏழைங்களுக்கு ஹெல்ப் பண்றதுக்காக, அங்க உள்ள பணக்காரங்ககிட்ட பணத்தைத் திருடினார்”

“திருடுறது தப்பில்லியா?”

“ஆனா, அவர் புவர் பீப்பிளுக்கு ஹெல்ப் பண்ணத்தானே திருடினார்?”

“யாருக்காவது ஹெல்ப் பண்ணனுன்னா, நம்மகிட்ட இருக்கிறதைத்தான் கொடுக்கணும். திருடவெல்லாம் கூடாது.”

“அவர்கிட்ட அவ்ளோ மணி (money) இல்லை. அதான் திருடிக் கொடுத்தார்.”

“சம்பாதிச்சுக் கொடுக்கணும். இல்லைன்னா, அந்தப் பணக்காரங்ககிட்ட போய்ப் பேசி, ஏழைங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்கன்னு சொல்லிருக்கணும். திருடக்கூடாது.”

“ம்ம்மாஆஆ!!.. (எப்பா, என்னா கோவம்..) அந்த புவர் பீப்பிள்ஸ்லாம் அந்தப் பணக்காரங்களோட ஃபேக்டரிலயும், ஃபார்ம்லயும்தான் வேலை செஞ்சாங்க. ஆனா அவங்களுக்கு ரொம்பக் கொஞ்சமாத்தான் சம்பளம் கொடுத்தாங்க. அது அவங்களுக்குக் காணாது.  அவர் அந்தப் பணக்காரங்ககிட்ட நிறையப் பணம் கொடுக்கச் சொல்லத்தான் செஞ்சார். ஆனா, அவுங்க அதெல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அதான் ராபின்ஹூட் திருடிக் கொடுத்தார்.”

”சம்பளம் கொஞ்சமாக் கொடுத்தாங்கன்னா, அங்க வேலை பாக்கமாட்டோம்னு எல்லாரும் சேந்து சொல்லிருக்கணும். அல்லது, சம்பளம் நிறையக் கிடைக்கிற வேற வேலை தேடிருக்கலாம்.  ஏன், ராபின் ஹூட்டே அந்த புவர் பீப்பிளையெல்லாம் ஒண்ணாச் சேத்து ஏதாவது தொழில் ஆரம்பிச்சு எல்லாருக்கும் நிறையச் சம்பாதிக்க வழிபண்ணிருக்கலாம். (சினிமால ஒர்ரே பாட்டுல பெரீய்ய ஆளாகிறதைப் பாத்த எஃபெக்டோ??!!) இப்படி எதாவது வழி கண்டுபிடிச்சிருக்கணும். அதைவிட்டுட்டு, திருடித்தான் ஹெல்ப் பண்ணணும்னு நினைக்கிறதெல்லாம் ரொம்பத் தப்பு.”

“......”

“சரி, இப்ப போலீஸ்கிட்ட  அடுத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணத்தான் திருடுனேன்னு சொன்னா, திருடனை  விட்டுடுவாங்களா சொல்லு? (இல்லைன்னு தலையாட்டல்) விடமாட்டாங்கள்ல? ஏன்னா, எதுக்காகச் செஞ்சாலும் திருட்டு திருட்டுதான். புரியுதா?”

“ம்..” (தலைவர் சிந்திக்கிறார்!!)

ஸ்ஸப்பா.. வாசிக்கிறது நல்லப் பழக்கம்னுதானே சொன்னாங்க.  இப்பிடியெல்லாம் வில்லங்கம் வரும்னு சொல்லவேயில்லியே??!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

”வாப்பா, நம்ம வீட்டு கேட்(gate)டையும் ரிமோட் கேட்டா ஆக்கிடலாம் வாப்பா. (கார் போக-வர கேட்டைத் திறந்துமூடுவது பிள்ளைகள் வேலை. அவன் கஷ்டம் அவனுக்கு!!)
 
“அதெல்லாம் வேண்டாம் மகனே, தன் கையே தனக்குதவி.”

“அப்படின்னா?”

“நம்ம கைதான் நமக்கு எப்பவும் உதவும்னு அர்த்தம்”

“வாப்பா, ரிமோட்டையும் நம்ம கையாலதானே அமுத்துவோம்? அதனால சீக்கிரம் ரிமோட் வைங்க!!”

எனக்கு என்னா சந்தோஷமாருக்கு!! ஃபார் எ சேஞ்ச், இந்த முறை வாப்பாவுக்கு பல்பு!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

உறவினர் குடும்பத்தோடு ஷாப்பிங் மாலுக்குப் போயிருந்தோம். சின்னவன், அவர்களின் மகள் (நல்ல சிவந்த நிறம்) கையைப் பிடித்துக் கொண்டு, எங்களுக்கு முன்னால் நடந்துகொண்டிருந்தான். திடீரென்று அவள் ஓடிவந்து என்னிடம், “சின்னம்மா, இவன் ஏன் என்கிட்ட இப்பிடிச் சொன்னான்?”

”என்ன சொன்னான்?”

“நான் அவன்கிட்ட ஒண்ணுமே கேக்கலை. ஆனாலும், அவனா அப்பிடிச் சொன்னான். ஏன்?”

அப்படி என்ன சொல்லித் தொலைஞ்சான்னு தெரியலையே.... என்னவர்  பக்கத்துலதான் இருக்காரான்னு பாத்துகிட்டேன். ‘உங்க பிள்ளை....’ன்னு பழிபோட ஆள் வேணுமே!!

“என்ன சொன்னான்னு முதல்ல சொல்லு..”

“ஒருநாள் அவன் உங்ககிட்ட ”நான் ஏன் கருப்பா இருக்கேன்”னு கேட்டானாம். அதுக்கு நீங்க, “Be happy with what you have"னு சொன்னீங்களாம். என்கிட்ட எதுக்கு இப்ப இதைச் சொல்றான்? நான் அவனை ஒண்ணுமே சொல்லலியே?”

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

”ம்மா, வயிறு வலிக்குது. எண்ணெய் தேச்சுவிடு”

“நான் மீன் கழுவிட்டிருக்கேன். நீ வாப்பாட்ட தேச்சுவிடச் சொல்லு”

“வேண்டாம். வாப்பா ஒண்ணுமே சொல்லாம, சும்மா தேச்சு மட்டும் விடுவாங்க. நீதான் வயிறு வலி சீக்கிரம் சரியாகணும்னு துஆ செஞ்சுகிட்டே தேச்சுவிடுவே.  நீயே அப்புறமா வந்து தேய்.”

அப்படியே உச்சிகுளிர்ந்துபோய், உடனே கைகழுவிட்டு, எண்ணெய் தேச்சுவிட்டேன். அப்புறம்தான் யோசிச்சேன், இப்பிடியிப்பிடிச் செய்ங்கன்னு வாப்பாவுக்கு ஆர்டர் போடாம, நானே ஏன் ஓடினேன்? ம்ம்ம்.. .. ‘பின்புத்தி’!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 ”ம்மா,  இந்த வாட்டி நான் எப்படியாவது நல்லாப் படிச்சு ஃபர்ஸ்ட் ரேங் வாங்கிடுறேன். (நடக்கிற காரியமாப் பேசு மகனே!!) அப்ப எனக்கு அந்த ஃப்ரீ கார் ஆஃபர் உள்ள ”கெல்லாக்ஸ் சாக்கோரிங்க்ஸ்” வாங்கித் தருவியா?”

மண்டைக்குள் ‘சிவப்பு விளக்கு’ எரிய, உடனே உஷாராகினேன். ”நீ நல்லாப் படிச்சு, நல்ல மார்க் வாங்கினா உனக்கு எப்பவும் நல்லது. அது வாங்கித் தந்தா ஃப்ர்ஸ்ட் ரேங்க் எடுப்பேன், இத வாங்கித் தந்தா 10 அவுட் ஆஃப் 10 எடுப்பேன்னெல்லாம் சொல்றது நல்ல ஸ்டூடண்டுக்கு அழகு இல்லை.  அதேமாதிரி ஏதாவது வேணும்னா என்கிட்ட சொல்லு. நல்லதா இருந்தா வாங்கித் தர்றேன். அப்பிடியில்லாம, இதைச் செஞ்சா, அதைச் செஞ்சா வாங்கித் தான்னு சொல்லக்கூடாது. சரியா?”

பிள்ளை காருக்காகப் படிக்கவே துணிஞ்சுட்டானேன்னு நெகிழ்ந்துபோய், கார் (மட்டும்) வாங்கிக் கொடுத்தாச்சு. அப்புறம் எக்ஸாம் நேரத்துல படிக்க வைக்க பட்ட பாட்டுல, பேசாம அவன் டீலுக்கே ஒத்துகிட்டிருக்கலாமோன்னு தோணியது!! காரும் கொடுத்து, பாடும் பட்டு.....

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Post Comment