பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்திற்கும் பொருந்தும் போல!! இநத வருஷம் என்று சொல்லிக்கொண்டிருந்த 2009, இன்னும் பன்னிரெண்டு மணிநேரத்தில் போன வருடம் ஆகிவிடும்!! ஒரு வயது அதிகரிக்கிறதே என்ற வருத்தமிருந்தாலும், வாழ்நாளில் ஒரு வருடம் கூடிப்போனது குறித்து மகிழ்வும், இறைவனுக்கு நன்றிகளும்!! கழிந்த வருடங்களைப் போலவே இனியும் இறைவன் எல்லாருக்கும் நோயற்ற வாழ்வைத் தரவேண்டும்!!
**************
பிள்ளைகளுக்கு இரண்டு வார குளிர்கால விடுமுறை; இவ்வருடம் நானும் விடுமுறை எடுத்து அவர்களோடு வீட்டில் இருக்கிறேன். தங்கையும் கைக்குழந்தையோடு வந்திருந்தாள். நல்ல ஜாலியா நேரம் போகிறது. வீட்டில் பிஸியாக இருந்ததால் பதிவுலகக் கலகங்கள் எதையும் தலையில் ஏற்றாமல் இருக்க முடிந்தது.
சனிக்கிழமை ஷார்ஜாவில் “Discovery Center" போய் வந்தோம். நல்லாருந்தது. 6 முதல் 12 வயதினருக்கு அறிவியல் விஷயங்களை விளையாட்டுடன் விளக்கும் இடம். கலர்ஃபுல்லாகவும் இருப்பதால் சிறுவயதினருக்கு மிகவும் பிடிக்கும்.
விவரங்களுக்கு www.sharjahmuseums.ae போய்ப் பாருங்க. Airport museum, Wildlife Sanctuary - இங்கேயும் போயிருந்தோம். ஷார்ஜாவில் நிறைய சுற்றுலாத் தலங்கள் இருக்கிறதென்பது நிறைய பேருக்குத் தெரிவதில்லை. ஒரு லீவு கிடைச்சா, உடனே துபாய் கிளம்பிடறாங்க!!
டிஸ்கவரி செண்டரில் ஒரு டி.வி.ஸ்டேஷன் மாடல் வைத்திருக்கிறார்கள். அதில் நம் பிள்ளைகளைப் பாடவோ, பேசவோ சொன்னால், பதிவு செய்து, அங்கிருக்கும் பெரிய ஸ்கிரீனில் உடனே ஒளிபரப்புகிறார்கள்.
கட்டட கட்டுமானங்கள் செய்முறை விளக்கமாக அறிந்துகொள்ள சின்னசின்ன கிரேன்கள், Pulley system, பில்டிங் பிளாக்குகள் என்று வைத்திருப்பதால் அவற்றின் பயன்பாடுகள் குறித்து சிறார்கள் தாங்களே செய்து அறிந்து கொள்ள முடிகிறது.
அதுபோலவே மனித உடல் பாகங்களின் செயல்பாடுகள், கார் வொர்க்ஷாப், ஏர்போர்ட், இன்னும் பலவற்றின் மாடல்கள் இருக்கின்றன. சாலை விதிகள் தெரிந்துகொள்ள சாலையில் கார் ஓட்டியே தெரிந்துகொள்ளலாம்!!
சுவாரஸ்யமான விளையாடுக்களில் 3 மணிநேரம் கரைந்துபோனதே தெரியவில்லை. சிறுவர்களோடு, பெரியவர்களும் அனுபவிக்கக் கூடிய இடம்.
ஷார்ஜா பழைய ஏர்போர்ட் இருந்த இடத்தைத்தான் இப்போ அருங்காட்சியகமா ஆக்கிட்டாங்க. நல்ல விளக்கமான தகவல்களோட, பழைய பிளேன்கள், அவற்றின் இஞ்சின்கள், பாகங்கள், பழைய தகவலேடுகள், வானிலைக் குறிப்புப் புத்தகங்கள்னு அழகா வச்சிருக்காங்க.
லண்டனிலிருந்து ஆஸ்திரேலியா போகும் வழியில் ஒரு நிறுத்துமிடமாக ஆரம்பித்த ஷார்ஜா விமான நிலையத்தின் வளர்ச்சியைப் படிப்படியாக விளக்கியிருக்கிறார்கள். அப்போ வந்த ஆங்கிலேயர்களுக்காக அமைக்கப்பட்ட ஒரு தியேட்டரின் மாதிரியும் வச்சிருந்தாங்க. அதில உட்காரும் இருக்கைகளாகப் பயன்படுத்தப்பட்டது என்ன தெரியுமா? தகர டப்பாக்கள்!! இன்னும் அதை வச்சிருக்காங்க அங்க!! நம்மூரில் இன்றும் பயன்படுத்தும் பெரிய எண்ணெய் டின்கள்தான் அவை.
விமானம் கண்டுபிடித்த வரலாறையும் படமாகக் காட்டுகிறார்கள். ஆதிகால விமான மாடல்களைப் பார்க்க சுவாரசியமா இருந்தது!!
Wildlife Sanctuary-ல் பாலைவன உயிரினங்களைப் பற்றிப் பார்த்து, படித்து அறிந்துகொள்ளலாம். அதனருகே இருக்கும் மரைன் மியுஸியம், குழந்தைகள் (விரும்பும் ஆடு, மாடு, கோழி) பண்ணை ஆகியவையும் உண்டு.
இங்கெல்லாம் போக நினைப்பவர்கள் சரியான மேப் அந்தந்த வலைத் தளங்களிலிருந்து எடுத்துச் செல்வது வழிதவறாமலிருக்க உதவும்.
போனமுறை போல இம்முறையும் நான் ஷார்ஜாவிலருந்து கிளம்பிய பிறகு மழையாம்!! நான் காலடி வைக்கிற நேரமெல்லாம் மழை வருதுபோல!! கன்ஃபர்மா நான் நல்லவதான்!!
புதுவருஷம் அல்-அய்னில கொண்டாடப் போறோம்!! அல்-அய்னின் சிறப்பான ஜெபல் ஹஃபீட் மலையடிவாரத்தில் உள்ள வெந்நீர் ஊற்றுக்களில் கடந்த ஒருமாதமா தண்ணீர் வரல்லையாம்!! நான் போற நேரம் வந்துரும்னு நினைக்கிறேன்!! வெற்றிச் செய்தியோட வர்றேன்!!
அனவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! அடுத்த வருஷம் சந்திப்போம்!!
|
Tweet | |||