Pages

டிரங்குப் பொட்டி - 31




சுமார் 14 வருடங்களுக்கு முன்....

கடைக்குச் சென்று அதை வாங்கி,  தன் கோட்டுப் பாக்கெட்டுக்குள் வைத்தார் அவர். பின் அதை மறந்தே விட்டார். பல இடங்களுக்கு மாறிய அந்த கோட்டை, 14 வருடங்களுக்குப்பின் தற்செயலாகத் திறந்து பார்த்த போது, அது இன்னும் அங்கே ‘பத்திரமாக’ இருந்ததைக் கண்டார். ஆனால், அவர் அதற்காக  மகிழ்ச்சியடையவில்லை; மாறாக பலத்த அதிர்ச்சியடைந்தார்!! ஆம்!!



ஒரு உணவகத்தில் உணவு வாங்கி, ஃப்ரிட்ஜில் வைக்காமல், இரண்டு நாள் கழிச்சு அதைத் திறந்து பாத்தா எப்படியிருக்கும்? நினைக்கவே குமட்டுகிறது அல்லவா? ஆனா, 14 வருடங்கள் கழிந்த பின்னும், அந்த உணவு கெட்டுப் போகாமல் இருந்தால்...???!!!! அந்த உணவு.... மெக் டொனால்டில் வாங்கப்பட்ட “பர்கர்”!!  14 வயது நிறைந்த அந்த பர்கரில், அழுகல் இல்லை, புழு இல்லை, ஏன் பூஞ்சை கூட பிடிக்கவில்லை.

ப்ரிசர்வேடிவ்களின் தாக்கத்தை அறிய இதைவிட சிறந்த வாய்ப்பு ஏது? நுண்ணுயிரிகளில் நல்லவையும் இருக்கின்றன, கெட்டவையும் இருக்கின்றன. நாம் உண்ணும் உணவு செரிக்க,  உடல் உறுப்புகளால் உறிஞ்சப்பட, சக்தியாக சேமிக்கப்பட என்று பல்வேறு வினைகளுக்கு இந்த நல்ல நுண்ணுயிரிகள் தேவை. ஆனால்,  ப்ரிசர்வேடிவ்கள் உணவை அண்டும் கெட்ட நுண்ணுயிரிகளோடு, நம் உடலில் இருக்கும் நல்ல நுண்ணுயிரிகளையும் அழித்துவிடுகின்றன.

 இம்போர்டட் ஆப்பிள் பலநாட்களானாலும் வாடாத அதிசயமும், அன்னம்மா பாட்டியிடம் வாங்கும் கீரை ஒரு நாளிலேயே வாடிப்போகும் ரகசியமும் இப்போ  புரிகிறதா!!


%%%%%%%%%%%%%%%%%%%%%


அரபு நாடுகளுக்குப் பெட்ரோலியம் போல, அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு இயற்கை எரிவாயுக்கள். பெட்ரோலைவிட, இயற்கை எரிவாயுக்கள் சுற்றுச்சூழல் மாசு உண்டாக்காதவை என்று நம்பப்படுவதாலும், பெட்ரோலிய இறக்குமதியைக் குறைப்பதற்காகவும், மேலை நாடுகள் அவற்றில் ஆர்வம் காட்டுகின்றன. ஒரு வகை இயற்கை எரிவாயுவான  “ஷேல் கேஸ்” (Shale Gas), பூமியின் அடிஆழத்தில் பாறைகளுக்கிடையில் காணப்படும்.

இதை எடுப்பதற்காக, ”Hydraulic Fracking"  என்ற முறையில் சுமார் 6000 முதல் 10000 அடிவரை ஆழ்துளையிட்டு,  கெமிக்கல்கள் கலந்த தண்ணீரை அதிக அழுத்தத்தில் பீய்ச்சினால், பாறைகளைத் துளையிட்டு அந்த வாயுவை வெளிக்கொணர முடியும்.

இதன்படி எடுக்கப்படும் இயற்கை எரிவாயுக்களால் எந்தக் கேடும் இல்லையென்றாலும், இவை எடுக்கப்படும் ”Hydraulic Fracking" முறையால், பூமிப்பாறைகள் தகர்க்கப்படுவதால் பூகம்பங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டென்று எதிர்ப்புக் குரல்கள் எழும்பின.  உடனே ஒரு ”ஆராய்ச்சி”  செய்து ”சுரங்கங்கள் தோண்டுவதையும்,  அணை நீர்த்தேக்கங்களையும் விட, இதனால் வரக்கூடிய  மெல்லிய அதிர்வுகள் அப்படியொன்றும் பெரிய அளவில் ஆபத்தானவையல்ல ” என்று சொல்லிவிட்டார்கள். பூகம்ப ஆபத்து அதிகம் இல்லையென்றாலும், ”Hydraulic Fracking"-ஆல் ஏற்படும் நிலத்தடி நீர் மாசு, ஒலி மாசு, காற்று மாசு ஆகியவற்றை மறுக்க முடியாதே!

ஒவ்வொரு பிரமாண்ட கட்டிடத்தையும் அண்ணாந்து பார்க்கையில், இதற்காக பூமிக்கடியில் எவ்வளவு பெரிய அஸ்திவாரம் போட்டிருப்பார்கள் என்ற எண்ணம் வருவதைத் தடுக்க முடியவில்லை!!  அதிக அளவில் பூகம்பம், வெள்ளம் வருவதில் வியப்பென்ன?

%%%%%%%%%%%%%%%%%%%%%

சமீபத்தில் பங்களாதேஷில் கார்மெண்ட் ஃபேக்டரி இடிந்து விழுந்ததில், 17 நாட்கள் கழித்து ஒரு பெண் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி பார்த்திருப்போம்.  ஹைட்டி நாட்டு பூகம்ப இடிபாடுகளிலிருந்து 27 நாட்கள் கழித்து ஒருவர் உயிருடன் கிடைத்ததே இதுவரை சாதனை. இது அதிசயிக்கத்தக்கது என்றாலும், மூச்சுவிட காற்று கிடைக்கும் பட்சத்தில் சாத்தியமே. ஆனால்,  கடலில் மூழ்கி இரண்டரை நாட்களுக்குப் பின்னர்  ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்பது நம்பமுடிகிறதா?

அவர் சென்ற படகு கவிழ்ந்ததில் உடனிருந்த 10 பேரும் மரணித்துவிட, இவர் மட்டும் பிழைத்திருக்கிறார். கவிழ்ந்த படகில், ஒரு இடத்தில் ஒரு “காற்றுக் குமிழி” (air bubble) ஏற்பட, அதைக் கொண்டு மூச்சுவிட்டுக் கொண்டிருந்தவரை, 60 மணிநேரத்திற்குப்  பின் மீட்டிருக்கிறார்கள்!! 

பல வருடங்கள்முன், ஜூனியர் விகடனில் அருவிகளில் விழுந்து இறப்பவர்களின் உடல்களை மீட்பவர்களைப் பற்றிய தொடர் வெளியானது. அதில், பாறைக்கிடையில் இதுபோல ஒரு நீர்க்குமிழியில் மாட்டிய ஒரு சிறுவன் பிழைத்ததைப் பற்றி எழுதியிருந்தார்கள். 

எனினும், இவ்வாறான குமிழிகளில், மூச்சுவிடும்போது வெளிவரும் கார்பன்-டை-ஆக்ஸைடின் அடர்த்தி அதிகமாகிவிடும் என்பதால், சில மணிநேரங்களில் மரணம் தவிர்க்க முடியாது என்பது அறிவியல் நியதி. அதையும் மீறி இவர் உயிர் பிழைத்ததே அதிசயம்.

%%%%%%%%%%%%%%%%%%%%%

பல உயிர்கொல்லி நோய்களுக்கும் தடுப்பு மருந்து இருந்தாலும், கொசுக்கடியினால் வரும்  நோய்களில் பலவற்றிற்கு தடுப்பூசியில்லை. குறிப்பாக, பெரிய அளவில் உயிரிழப்புக்குக் காரணமாகும் மலேரியாவுக்கும் தடுப்பு மருந்து உருவாக்குவது எளிதாக இல்லை. எனினும், ஆராய்ச்சியாளர்கள், ‘மாத்தி யோசி’த்து, கொசுவுக்கே தடுப்பூசி போட்டுவிடும் முறையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட பாக்டீரியா - Wolbachiaவை பெண் கொசுவுக்கு ஊசிமூலம்  செலுத்திவிட்டால், அது மலேரியா வைரஸைப் பரப்பும் திறனைக் குறைப்பதோடு, அதன் 34 தலைமுறைகளுக்கும் அதைச் செலுத்திவிடுகிறது. இந்த கொசுக்கள் கடித்தால், மலேரியா வராது!!

இது நடைமுறைக்கு வந்தா என்னல்லாம் நடக்கும்? ‘கொசுவிரட்டி’ சுருள்களுக்குப் பதிலாக, ’கொசு-வருத்தி’ சுருள்கள் விற்பனைக்கு வரும். முக்கியமா, எந்திரன் -2வில், ரஜினி  ரங்குஸ்கிக்குப் பதிலாக, Wolbachia இருக்கும் கொசுவைத் தேடிக் கொணர்ந்து ஐஸைக் கடிக்கச் சொல்வாரோ? (அப்பவும் ஐஸ்தான் ஜோடியா?)

Wolbachia-கொசுக்கள் நம்ம ஊருக்கு வரும்வரை, ‘ஏழைக்கேத்த எள்ளுருண்டையா’  சிம்பிள் டெக்னிக் ஒண்னு இருக்கு:  அழுக்கு சாக்ஸ்கள்  என்றால் மலேரியா கொசுக்களுக்கு ரொம்பப் பிடிக்குமாம். மூலையில் கழட்டி வீசி எறியப்பட்டு கிடக்கும் சாக்ஸ்களைப் பார்த்து குமுறும் (என்னைப் போன்ற) அம்மணிகள் ஆறுதல் பட்டுக்கொள்ளலாம்!!

%%%%%%%%%%%%%%%%%%%%%


Post Comment

நானும் இப்ப சீனியர் பதிவராக்கும்




ங்கிலத்தில் “Put yourself in their shoes” என்று சொல்வார்கள். நாம அம்மாவா ஆகும்போதுதான், நம்ம அம்மா நமக்கு சொன்ன அறிவுரையெல்லாம் புரியும். டீச்சராகும்போதுதான், நம்ம டீச்சரை படுத்துன பாடெல்லாம் புரியும்.

இந்த மாதிரி விளைவுகள் வரும்னு தெரிஞ்சாலும், அம்மாவாக, அப்பாவாக, டீச்சராக இருப்பதை மகிழ்ச்சியானதாகவே கொள்வோம்.  ஆனா,  ஒரு டவுட்டு: நான் வருங்காலத்தில் மாமியாராகப் போவதை நினைச்சா இப்பவேல்ல பயம்மா இருக்குது??!! 

மூணுமாசம் முன்னாடி, பிரசவித்திருந்த என் தங்கையைப் பார்க்க வந்த அவள் தோழி, என்னிடம், “உங்களைப் பத்தி இவ நிறைய சொல்லிருக்கா. நீங்க அவளுக்கு அக்காவேயில்லை; மாமியார்தான்!!!” என்று சொன்னாள். அவ்வ்வ்வ்வ்...!!!! தங்கச்சியே என்னை மாமியார் ரேஞ்சுக்கு ஆக்கிட்டா. நாளைக்கு மருமக என்ன சொல்வா(ங்க)ளோ!!

இத எதுக்குச் சொல்ல வந்தேன்.. ஆங்.. “in their shoes.."..  வலைப்பதிவு எழுத வந்த புதுசுல,  ஆர்வமா நிறைய கிறுக்கித் தள்ளுனதுண்டு. வாரத்துக்கு ரெண்டு, மூணு பதிவெல்லாம் போட்ட பொற்காலம் அது. (அப்ப நான் ஆபிஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லைன்னு தெரிவிச்சுக்கிறேன்) .

அந்த சமயத்துல, நிறைய சீனியர் பதிவர்கள், ஒண்ணுமே எழுதாமே ப்ளாக்கை,  சும்மா தரிசுநிலம் மாதிரி போட்டு வச்சிருப்பாங்க. எனக்கு ரொம்ப ஆச்சரியம் + கோவமா இருக்கும். “ச்சே, எழுதுறது எவ்வளவு இண்டெரெஸ்டிங்கா இருக்கு!! கருத்து சொல்ல விஷயத்துக்கா நாட்டுல பஞ்சம்?  மாற்றம் கொண்டு வரக்கூடிய எழுத்துத் தெறமையை இப்படி வீணாக்குறாங்களே”ன்னு நெனச்சிருக்கேன். அவங்க செய்யாதத, நாமளாவது செஞ்சுடணும்னு கீ-போர்ட் தேயுற அளவுக்கு எழுதித் தள்ளிருக்கேன். (சில ‘புரட்சிப்’ பதிவுகள் லிங்க் தரட்டுமா? சரி, சரி, இந்தப் பதிவை மட்டும் முழுசாப் படிச்சுடுங்க, ப்ளீஸ்!)

அப்புறம், அப்படியே கொஞ்ச நாள்ல, நானும் வாரம்-ஒரு-பதிவு ரேஞ்சுக்கு வந்துட்டேன். (இப்ப நான் வேலையை விட்டுட்டதுக்கும், இதுக்கும் சம்பந்தமில்லைன்னும் தெரிவிச்சுக்கிறேன்) . அப்புறம் அப்படியே கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதையாப் போனதுக்கப்புறம்தான் அந்த “சீனியர் பதிவர்களின்” நிலை புரிஞ்சுது.

எழுதறதுக்கு மேட்டர் கிடைக்கலேன்னும் சொல்லிக்கலாம். அல்லது, நானும் இப்ப சீனியர் பதிவராக்கும்; அதனால்,  ‘பாஞ்சு நாள்’ நாராயணசாமி மாதிரி அடிக்கடி அறிக்கை விடாம, பிரதமர் மாதிரி ஓன்லி அவசியமான விஷயத்துக்குத்தான் பதிவு எழுதுவேன்னும் பெரும்மையாச் சொல்லிக்கலாம்.


ந்த ரெண்டு மாசத்துல, என் “ரீடரில்” 1000 பதிவுகளுக்கு மேல் சேந்துருச்சு. அத்தனையும் படிச்சு (அல்லது டெலீட் செய்து) முடிக்கவே ஒரு மாசமாகிடுச்சு. கண்ணில் படும் நல்ல வலைப்பூக்களையெல்லாம் ரீடரில் போட்டு வைத்து, இப்போ அது தூக்கமுடியாத ‘ட்ரங்குப்போட்டி’ மாதிரி கனமாகிடுச்சு. அதனால், சென்ற இரண்டு மூன்று  வாரங்களாக வலைச்சரத்தில் நல்ல அறிமுகங்கள் இருந்தும் சேமிக்கவில்லை. இருக்கிறதைப் படிக்கவே நேரத்தைக் காணோம்.

அதுவும் இப்ப ரீடரை திறக்கும்போதெல்லாம் “ஜூலை ஒன்றாம் தேதி முதல் ரீடர் இருக்காது”ன்னு கூகிள் பயங்காட்டுது. ரீடர் இல்லைன்னா என்ன செய்வேன்னு தெரியலை!!! ஏன்னா,  தெரிஞ்ச எல்லா வலைப்பூ முகவரிகளையும் அதில்தான் சேமித்து வச்சிருக்கேன். ரீடர் போச்சுன்னா, அதெல்லாமும் போச்சு! ரீடரை எப்படி back-up எடுக்கிறதுன்னு இதுவரை எந்த டெக்கி பக்கியும்... ஐ மீன், டெக்னிக்கல் பதிவரும் பதிவு எழுதுன மாதிரியும் தெரியலை!! ரீடர் போனா, அதுக்கு மாற்றா என்ன வரும்னும் ஒரு தகவலும் இல்லை.

கொஞ்ச நாள் ஃபேஸ்புக் பக்கம் ஒதுங்கினேன். ப்ளாக் மாதிரி ’உக்காந்து யோசிச்சு’ பெரிசா பதிவு எழுதணும், ஃபார்மட்டிங் செய்யணும்,  படங்கள் தேடிப் போடணும்கிற அவசியம் இல்லாததால, அடிக்கடி எழுத வசதியா இருந்தாலும்,  சில விஷயங்களுக்கு ஃபேஸ்புக்தான் பொருந்தும் என்றாலும், எனக்கு ஏத்த இடம் வலைப்பதிவுதான் என்று புரிஞ்சு, ‘தாய்வீட்டுக்கு’ திரும்பி வந்தாச்சு!!

 

திரும்பி வந்துட்டேனே தவிர, எழுதணும்னு உக்காந்தாலே உடனே மைண்ட் ‘ப்ளாங்க்’ ஆகிடுது. கிச்சன்ல சமைக்கும்போது அதை எழுதணும், இதை எழுதணும்னு  சரசரன்னு நினைவுகள் ஓடுது. ஆனா, கம்ப்யூட்டர் முன்னாடி வந்து உக்காந்தா ஒண்ணும் ஓடமாட்டேங்குது.  இதத்தான் “Writer's block"னு சொல்வாங்களோ?

ஆனா என்ன, கிச்சன்ல நிக்கும்போது ப்ளாக் எழுதறதப் பத்தி நினைக்கிறதால, கடகடன்னு சமைச்சு முடிச்சுடுறேன். ஆனா,  கம்ப்யூட்டர் முன்னாடி இருக்கும்போது, ‘மதியத்துக்குச் சமைக்கணுமே’ன்னு ஒரு டென்ஷன் எப்பவுமே அடினமசுல இருக்குறதாலத்தான் எழுத வரமாட்டேங்குதோ என்னவோ? 




 




(பின்குறிப்பு: ரீடரில் டவுன்லோட் செய்ய, ரீடரின் ‘Help’ பக்கத்துக்குச் சென்று, அங்கிருந்து ”How can I download my Reader data?” க்ளிக் செய்யவும்).

Post Comment