Pages

ட்ரங்குப் பொட்டி - 9


அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ன்ற கதையா, ஃபிளைட்  என்ன, பஸ்ல கூட  இப்பல்லாம் எல்லாரையுமே சந்தேகக் கண்ணோடத்தான் பாக்குறாங்க. அந்த வகையில, மூணு வாரம் முன்னாடி, பாகிஸ்தான் கராச்சி ஏர்போர்ட்ல  ஒருத்தரைப் பிடிச்சாங்க. அவரோட ஷூவில பேட்டரி, ஸ்விட்ச்செல்லாம் இருந்ததால, வெடிகுண்டை இயக்கும் ரிமோட்டா  இருக்குமோன்னு பயந்துபோய், முதல்ல அவரைப் பிடிச்சு ஜெயில்ல போட்டுட்டு, அப்புறம் ஷூவைச் செக் பண்ணா, அது ”மஸாஜ் ஷூ”வாம்!! கால்வலிக்கு நல்லதுன்னு வாங்கினாராம். பாவம்!! இதுக்கு கால்வலியையே பொறுத்துக்கிட்டிருந்திருக்கலாம்!!

இந்தியாவிலயும் இந்தப்பக்கம் இப்படி ஓவர் கவனமாயிருந்ததாலத்தான், அந்தப் பக்கம் மாவோயிஸ்ட் தீவிரவாதம் இவ்வளவு  வளர்ந்ததைக் கவனிக்கலபோல!!

^^^^^^^^^***********^^^^^^^^^***********^^^^^^^^^***********

கை மற்றும் தரைவழி தொலைபேசிகளின் கீ-பேட்ல 5-ம் எண் பொத்தான்ல லேசா மேடு போல ஒரு புள்ளி இருக்குமே, கவனிச்சிருக்கீங்களா? அதே போல, கம்ப்யூட்டர் கீ-போர்ட்லயும், “F", "J" எழுத்துகளின் பட்டன்கள் மேலேயும் அதுபோல ஒரு சிறு கோடு போல மேடு இருக்கும். இதெல்லாம் பார்வைக் குறைபாடு உள்ளவங்களுக்கான வசதிகள்.

அவங்க பணத்தை எண்ணும்போது, பொதுவா, தடவித் தடவி கைகளால் அளவை உணர்ந்து எண்ணுவதைப் பார்த்திருப்போம். கனடாவுல சமீபத்துல  அச்சடிக்கிற டாலர் நோட்டுகள்லயும் இதே மாதிரி பணத்தாளின் அளவீடுகளைக் குறிக்கும்படியா புள்ளிகள் வைக்கிறாங்களாம். (கனடாவில இருக்கவங்க உறுதிப்படுத்துங்க ப்ளீஸ்!)

^^^^^^^^^***********^^^^^^^^^***********^^^^^^^^^***********
அலுவலங்களில் மேனேஜ்மெண்ட் பாலிஸிகள் புரிபடவே மாட்டேன்கிறது!! பிராஜக்ட்கள் ஒண்ணும் இல்லாததால, ஏற்கனவே இருக்கவங்களே, ஆளில்லாத கடையில டீ ஆத்திகிட்டிருக்கும்போது, சிலரைப் புதுசா வேலைக்குச் சேத்திருக்காங்க!! வந்தவங்களும் “பிராஜக்ட் எப்ப கிடைக்கும்”னு அப்பாவியா கேட்டுகிட்டிருக்காங்க. இன்னிக்கு கேட்டவர்ட்ட, FBIக்கு சொல்லிருக்கோம்; சீக்கிரமே தேடிக் கொடுத்துடுவாங்கன்னு சொன்னேன். வேறென்ன செய்ய? இதுல, வெற்றிகரமா மூணாவது சம்பளக் கமிஷனும் வருதாம், பட்சி சொல்லுச்சு!! (சம்பளக் கமிஷன் = வெட்டு!!)

^^^^^^^^^***********^^^^^^^^^***********^^^^^^^^^***********

 சென்ற வாரம், இங்கே அபுதாபியில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்துவந்த 25 வயது இளைஞர் மாரடைப்பால் காலமானார். (கெட்ட பழக்கங்கள் இல்லாதவர்). இளைய வயது, அக்குடும்பத்தின் ஒரே வருமானதாரர் என்ற வகையில் மிகுந்த வருத்தமாயிருந்தது. அவர் வேலை செய்த (இந்திய) நிறுவனம், அவரின் உடலைக் கொண்டு செல்ல உதவியதோடு, இன்னும் மூன்று வருடத்திற்கு அவரின் அடிப்படை சம்பளமும் (basic salary)  அவரின் குடும்பத்திற்குச் சேரும் வகையில் செய்துள்ளார்களாம். இதுபோல எதிர்பாராத நிகழ்வின்போது பயன்படவென, 'Employee relief fund"  என்று மாதாமாதம் சிறு தொகை வசூலித்துள்ளார்கள். கேட்க கொஞ்சம் ஆறுதலாயிருந்தது.

^^^^^^^^^***********^^^^^^^^^***********^^^^^^^^^***********


இங்கே  இருக்கும் “எமிரேட்ஸ் பேலஸ்” என்ற நட்சத்திர விடுதியில் “தங்கத் தானி” (Gold ATM) ஒன்று வைத்திருக்கிறார்கள். உலகின் இரண்டாவது தங்கத் தானியாம்!! பணம் போட்டால், தங்க பிஸ்கட் வரும்!! (தங்கத்தானி - நன்றி ஷஃபி!)

அதைவிட சுவாரஸ்யமான தகவல், இந்த நட்சத்திர விடுதியின்  உணவகங்களில் ஒரு வருடத்திற்கு ஐந்து கிலோ தங்கம் பயன்படுத்துகிறார்களாம்!! தங்க பஸ்பம் செய்ய இல்லை!! இனிப்பு பதார்த்தங்களை அழகுபடுத்தவாம்!!

ஏன் இப்படி பெருமூச்சு??

Post Comment

ரீ-ஸைக்ளிங்கும், பழைய இரும்புச்சாமானும்
 
புதாபியின் நீலாங்கரையான அல்-பத்தீன் ஏரியா.

விதவிதமான வடிவங்கள், அமைப்புகள், நிறங்களில் பெரிய பெரிய பங்களாக்கள்.  பிரமிப்பு தரும் பிரமாண்டம!! வாயிற்கதவினூடே தெரியும் தோட்டங்களும் பச்சைப் பசேலென்று இருக்கும். பெரும்பாலும் இந்நாட்டு குடிமக்களும், ஆங்கிலேயே ஐரோப்பிய மக்களுமே இங்கு வசிக்கின்றனர். சில நிறுவனங்களில் உயர்பதவியில் இருக்கும் சில இந்தியர்களும் இங்கு உண்டு. ஒவ்வொரு வீட்டின் முன்னும் குறைந்தது இரண்டு பெரிய கார்களாவது நிற்கும். சில கார்களின்பின் ஒரு சிறுபடகும் இழுவையின் மூலம் மாட்டப்பட்டிருக்கும்.

அந்த பகட்டுக்கு ஒவ்வாத உருவமாக, கரீம்பாய் தனது மெலிந்த சரீரத்துடன், கட்டிடப் பணியாளருக்கேயான நீலநிற யூனிஃபார்ம் உடையில்,  கையில் கனத்த பெரிய கீஸுடன் அடுத்த குப்பைத் தொட்டி நோக்கி நடந்தார். அதைக் கிளறி, அதில் கிடக்கும் காலியான குளிர்பான டின்களைச் சேகரித்து வெளியே எடுத்தார்; ஒவ்வொன்றாகக் காலின் கீழ் வைத்து மிதித்து நசுக்கி, கீஸ் (பிளாஸ்டிக் பை) உள்ளே போட்டார்.  நசுக்காமல் முழுதாகப் போட்டால் கவரில் இடம் போதாமல் போய்விடும்.

அந்த ஏரியாவில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடங்கள் ஒன்றில் கட்டிட வேலை பார்க்கிறார் கரீம்பாய். காலை ஏழு மணிக்குத் தொடங்கும் பணிக்கு, ஐந்தரை மணிக்கே கம்பெனி பஸ் கொண்டுவந்து இறக்கிவிடும். பலப்பல சைட்களில் பணியாளர்களை இறக்கிவிட வேண்டியிருப்பதால் இப்படி சீக்கிரமே வந்துவிட வேண்டும்.

சக பணியாளர்கள், கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் துண்டையோ, பேப்பரையோ விரித்து, விட்ட தூக்கத்தைத் தொடர்ந்துகொண்டிருக்க, இவர் அந்நேரத்தில் ‘பார்ட்-டைம்’ ஜாப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்தக் காலி டின்களைச் சேகரித்து வைத்து, சைட்டில் பழைய இரும்பு சாமான்கள் எடுக்க பிக்-அப் வண்டி கொண்டுவரும் பாக்கிஸ்தானியிடம் கொடுத்தால், எடையைப் பொறுத்து,  அஞ்சோ, பத்தோ திர்ஹம்கள் கிடைக்கும். இந்தியப் பணத்துக்கு, அம்பது, நூறு ரூபாய் கிடைக்குமே!! அப்போ ‘பார்ட்-டைம்’ ஜாப் தானே இது?

ஏழு மணி வரையிலும் இதைச் செய்யலாம் . பின் கட்டிட வேலை தொடங்கும். கரீம் பாய், கையிலிருக்கும் கீஸைப் பார்த்தார். ”ரொம்ப அழுக்கா இருக்கு. கிழியவேற ஆரம்பிச்சுட்டுது. வெள்ளிக்கிழம கடைக்குப் போவும்போது, இதவிடப் பெரிய கீஸ் ஒண்ணு கேட்டு எடுத்துட்டு வரணுன்னு எப்பவும் நினைக்கதுதான். எழவு மறந்துல்ல  தொலையுது.” சலித்துக் கொண்டார்.

அடுத்த குப்பைத் தொட்டியை அடையுமுன், வழியிலேயே அங்கொன்றும், இங்கொன்றுமாக டின்கள் கிடந்ததை எடுத்துக் கொண்டார். ”இளந்தாரிப் பயலுவ குடிச்சுட்டு ரோட்டில போட்டுட்டு போயிருக்கானுவளாருக்கும். குப்பைத் தொட்டி பக்கத்துல இருந்தும் கொண்டு போட என்னா வருத்தம்?” நினைத்துக் கொண்டே நடந்தார். இந்தக் குப்பைத் தொட்டியில் அவ்வளவாக காலி டின்கள் இல்லை. ”இப்பத்தான் பெப்ஸி, கோக்கெல்லாம் குடிக்காதீய. ஒடம்புக்கு நல்லதில்லன்னு பெரச்சாரம் பண்றாவளாமே. எல்லாரும் கேட்டுக்கிட்டாவ போல. அதான் இப்பல்லாம் நெறய கெடைக்க மாட்டுக்குது.”


டாடி, எங்க ஸ்கூல்ல இன்னிக்கு ”ரீ-சைக்ளிங் டே” அப்ஸர்வ் பண்றோம்.” மகள் கொஞ்சிக்கொண்டே காதர் பாஷாவின் அருகில் வந்தமர்ந்தாள்.

காதர் பாஷா அல்-பத்தீனில் வில்லாவில் (பங்களா) தங்கியிருக்கிறார். நகரில் ஒரு பெட்ரோலிய நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருப்பவர். அதன் பலன்களில் சில,  இந்த வில்லாவும், இண்டர்நேஷனல் பள்ளியில் பிள்ளைகளின் படிப்பும். காலை வேளைகளில் வீட்டுத் தோட்டத்தில் சிறு உடற்பயிற்சிகள் செய்துவிட்டு, அங்கேயே அமர்ந்து பேப்பர் படிப்பது அவர் வழக்கம். பத்தாவது படிக்கும் மகள் இந்நேரம் இந்தப் பக்கம் வருவது அரிதிலும் அரிது.

“அதுக்கென்னம்மா செய்யணும்? பணம் எதுவும் கொடுக்கணுமா? ப்ரோக்ராம் வச்சிருக்கீங்களா? ட்ரஸ் வாங்கணுமா?

“ஓ டாட்!! திஸ் இஸ் நாட் அவர் கல்ச்சுரல் டே டு டூ ப்ரோக்ராம்ஸ்! திஸ் இஸ் ரீ-ஸைக்ளிங், யூ நோ?” சிணுங்கினாள்.

“எனக்கென்னம்மா தெரியும்? அதுக்கு நான் என்ன செய்யணுன்னு சொல்லு? நீ அவசியமில்லாம என்கிட்ட இதெல்லாம் சொல்லமாட்டியே? உன் உம்மாகிட்ட சொல்லி நடக்கலன்னாதானே என்கிட்ட வருவ?”

“ஸோ கூல் டாட்!! யூ நோ மீ பெட்டர் தேன் மாம்!! “ரீ-சைக்ளிங் டே”வுக்கு, நாங்க எல்லாரும் ஆளுக்கொரு கவர்ல யூஸ்ட் பிளாஸ்டிக் பாட்டில்ஸ் ஆர்  கேன்ஸ் கொண்டு போணுமாம். ஸ்கூல் வில் கலக்ட் இட் அண்ட் கிவ் தெம் டு த ரீ-சைக்ளிங் கம்பெனி.”

“சரிம்மா. அதான் நம்ம வீட்டிலயே தண்ணி பாட்டில்கள், உன் தம்பி குடிக்கிற மவுண்டன் டியூ கேன்கள், நீ மணிக்கொருதரம் குடிப்பியே அந்த கோக் கேன்களச் சேத்தாலே நாலு கூடை வருமே?”

“ஓ டாட்! பட் ஐ வாண்ட் டு டேக் தெம் நவ், டுடே டு ஸ்கூல். இப்ப உடனே எங்கருந்து அவ்வளவு கேன்ஸ் கிடைக்கும்? மம்மி நேத்தே மெய்ட் சர்வண்ட்கிட்ட சொல்லி எல்லா டஸ்ட் பின்ஸையும் காலி பண்ணிட்டாங்க.”

“டெல் மீ வாட் யூ வாண்ட் எக்ஸாக்ட்லி?” அவள் பாஷைக்கே மாறினார்.

“நத்திங் டாட். இட்ஸ் ஆல்ரெடி 6.15 நவ். 7 ஓ க்ளாக் ஸ்கூல் பஸ் வந்துடும். ஸோ, வாட் ஐ சஜஸ்ட் இஸ், ஐ வில் பை அ பாக்ஸ் ஆஃப் கோக் கேன்ஸ் அண்ட் ஸ்பில் அவுட் த கன்டென்ட்ஸ் அண்ட் கிவ் டு மை டீச்சர். தட்ஸ் வாட் மை ஃப்ரண்ட்ஸ் ஆர் ஆல்ஸோ கோயிங் டு டூ. பட் மம்மி இஸ் அப்ஜெக்டிங் திஸ்.”

காதர் பாஷா பதில்சொல்லாமல் எழுந்து கிரில்கதவருகில் நின்று வெளியே பார்த்தார். ஒரு பெட்டி நிறைய கேன்களை குளிர்பானத்தோடு வாங்கி கீழே கொட்டிவிட்டு, காலி கேன்களை கொடுக்க நினைக்கும் மகள்!! தனது  வறுமையான இளமையை நினைத்து அவர் மனம் நொந்தது.

ரீம் பாய் நடந்துகொண்டிருந்தார். வேர்வை வழிந்து சட்டையெல்லாம் நனைந்து விட்டது. ’கோடை தொடங்கமுன்னயே இப்படி வெயிலடிக்குதே!!’  ஒரு பை நிறைந்து, இரண்டாவது பையும் அரைவாசி ஆகிவிட்டது. அப்படியே வேலை செய்யும் கட்டிடத்தின் திசையில் போனார். கிடைப்பதை எடுத்துக் கொண்டு போய்ச் சேர்ந்தால், ஒரு அஞ்சு நிமிஷம் ரெஸ்ட் கிடைக்கும்.  காண்ட்ராக்டரின் சூபர்வைசர் வந்துவிட்டால் நிற்க விடமாட்டார். கோடை தொடங்கும் அடுத்த மாதத்திலிருந்து மதியம் மூன்று மணிநேரம் கட்டாய ரெஸ்ட் கொடுக்கவேண்டுமென்று அரசாங்க உத்தரவாம். வழக்கமா ரெண்டு மாசந்தான் இந்த ரெஸ்ட். அப்போ இன்னும் கொஞ்சம் சேத்துப் பாத்துக்கலாம். ஆனா, இந்த வருஷம் நோன்பும் கோடையிலதான்  வர்றதுனால, ரொம்ப அலையமுடியுமோ என்னவோ. 

ரீம்பாய் காலி டின்னை நசுக்கிப் பையில் போடுவதை, வீட்டு கேட்டில் நின்றிருந்த   காதர்பாஷா பார்த்தார். ‘பார்த்தால் இந்தியரென்று தெரிகிறது. மலையாளியாக இருக்குமோ’வென்று  எண்ணிக்கொண்டே அவரைச் சைகையால் அழைத்தார். “எவிடயா ஸ்தலம் நாட்டில?” கேட்க, அவர் தடுமாறி, “தமிழ்நாடானு” என்றார்.

“அட தமிழ்தானா!! நானும் தமிழ்தான். சரி, கையில என்னது?”

“அது.. இல்ல.. சும்மா இருக்க நேரத்துல.. இதச் சேத்துக் கொடுத்தா.. கொஞ்சம் காசு.. “

“எவ்ளோ கிடைக்கும்?”

“அது என்னத்த.. பத்து திர்கம் கெடச்சாப் பெரிசு!”

காதர்பாஷா உள்ளே திரும்பி மகளைப் பார்த்தார். பின் கரீம்பாயிடம் “இன்னிக்கு நான் வாங்கிக்கிறேன்” என்றார்.

Post Comment

செத்தும் கொடுத்தான்..


போன வாரம் இங்கே அமீரகத்தில் தலைப்புச் செய்தி, ‘உடல் உறுப்புகள் தானம் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது’ என்பதுதான். ஏற்கனவே 1993ல் உடல் உறுப்புகள் தானம் அங்கீகரிக்கப்பட்டிருந்த சட்டத்தில், மூளைச்சாவு குறித்த சில தெளிவின்மைகளை நீக்கி, மீண்டும் இப்போது உறுதி செய்துள்ளனர்.

ஒரு படிவத்தில் தனது விருப்பத்தை எழுதி, இரு சாட்சிகள் கையொப்பமிட்டால் போதும் என்று மிகவும் எளிமையாக்கியுள்ளனர். இல்லையென்றாலும், இறந்தபின் நெருங்கிய உறவினர் விரும்பினாலும் போதும்.

ஒருவரின் பணம், பொருள், உணவு, கல்வி தானங்கள், அவரவர் வசதி போன்ற தகுதிகளைப் பொறுத்து வேறுபடலாம். ஆனால், ஏறக்குறைய அனைவரும் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாது ஒருபோலச் செய்யக்கூடியது உடலுறுப்பு  தானங்களே!!

உயிரோடிருக்கும்போது, உயிர் பிரியும் நிலையில், உயிர் பிரிந்த பின் என எல்லா நிலைகளிலும் செய்யக்கூடிய உறுப்புகள் பெற்ற மனித உடல், இறைவனின் அற்புதப் படைப்பு. மூன்று நிலைகளிலும் சேர்த்து 25 உறுப்புகள் தானம் செய்யக்கூடிய பேறு படைத்தவர்கள் நாம்.உயிரோடிருக்கும்போது தானம் செய்யக்கூடிய உறுப்புகள் (ஒரு பகுதி மட்டும்):

1. கிட்னி
2. கல்லீரல்
3. நுரையீரல்
4. மண்ணீரல்
5. குடல்
6. இரத்தம்
7. எலும்பு மஜ்ஜை
8. கணையம்

இதுவே மரணத் தருவாயில் இதயம் உள்ளிட்ட மேற்கூறியவற்றில் சில உறுப்புகளும், இறந்தபின் எலும்புகள், தோல், கண்கள், இதய வால்வுகள் போன்றவை தானமாக வழங்கலாம்.

ஒருவருக்கு மாற்று உறுப்பு பொறுத்தப்பட்ட பின், அவரது உடல் அவ்வுறுப்பினை ஏற்றுக் கொள்ளவேண்டும். அதற்குரிய சோதனைகள் முதலிலேயே செய்யப்படும் என்றாலும், உடலின் இயற்கையான எதிர்ப்பு சக்தி அதை உடலில் நுழைந்த நோய்த் தாக்குதலோ என்றெண்ணி புறந்தள்ள முயலும். அதைத் தவிர்க்க, செயற்கையாக அவரின் எதிர்ப்பு சக்தி (ஆன்டிபாடீஸ்) குறைக்கப்படும்; சில சந்தர்ப்பங்களில், இரத்தத்தில் ஆன்டிபாடீஸ் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகிக்கும் மண்ணீரல் (Spleen) நீக்கப்படுவதுமுண்டு. இதன் வேலையை, நுரையீரல் செய்துகொள்ளும் என்பதால், இதை நீக்குவதால் பாதிப்பில்லை.

கிட்னி மாற்று சிகிச்சைகளே அதிகமாக நடக்கின்றன. பரம்பரை காரணங்கள், உணவு முறைகள், வாழ்க்கை முறைகள் போன்றவற்றால் எளிதில் பாதிப்புக்குள்ளாவது சிறுநீரகமே.  இறைவன் கொடையாக ஒருவருக்கு இரு சிறுநீரகங்கள் இருப்பதால் மாற்று உறுப்பு கண்டடைவதும் எளிதாக இருக்கிறது. ஆனாலும், சிகிச்சைக்கு முன்னும், பின்னும் செய்துகொள்ளவேண்டிய அன்றாட நடைமுறை மாற்றங்கள் பெருமளவு உண்டு என்பது நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதனால் அலட்சியமாக இருந்து விடுகின்றனர்.

உடலுறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்களும் ஆரோக்கியமானவர்களே என்று நிரூபிக்கவும், உறுப்பு தானத்தை ஊக்குவிக்கவும் ஏற்படுத்தப்பட்டது, "World Transplant Games"!!

அமீரகத்தில் 2008ம் வருடத்திலிருந்து, அரசாங்க மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் இலவசமாகச் செய்யப்படுகின்றன. தானமளிப்பவர் உறவினராக இருக்கவேண்டும் என்ற நிபந்தனை மட்டுமே. இந்தியாவில் பல லட்சங்கள் செலவில் செய்ய வேண்டிய சிகிச்சை, மற்றும் பின்னர் எடுத்துக் கொள்ளவேண்டிய விலையுயர்ந்த மருந்துகள் போன்றவை இங்கு இலவசமாகவே தரப்படுகிறது. சிறுநீரக மாற்று சிகிச்சை, மருத்துவக் காப்பீடுகளின்கீழ் வராது என்பதால், இது பேருதவியாக இருக்கிறது.

இப்போது புதிய சட்டத்தின்மூலம், உடலுறுப்புகள் தானமும் அதிகரிக்கும் என்பதால், மற்ற உறுப்பு மாற்று சிகிச்சைகளும் செய்யுமளவு இங்குள்ள மருத்துவமனைகளின் கட்டமைப்பும் உயர்த்தப் படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்,  இச்சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை குறையும்.

இறக்கும்போதும் நாம் பிறருக்கு உதவும்வண்ணம் நமது உடலுறுப்புகளைத் தானம் செய்ய முடிவதற்கு, உயிரோடிருக்கும்போது நல்ல மனமும், இறக்கும்போது நல்ல மரணமும் தர இறைவனை வேண்டுவோம்!!
Post Comment

ஊசல்மணி மதியம் 1.30. சாப்பாட்டை எடுத்துக் கொண்டு ஆஃபீஸ் கிச்சனுக்குச் சென்றேன்.  கிச்சனின் ஜன்னல் வழியே வெளியே தெரியும் குடியிருப்பின்  வில்லாக்களையும் (பங்களா), மரங்களையும் பார்த்துக்  கொண்டே சாப்பிட்டுவது வழக்கம். ஆஃபிஸ் ரூமின்வழி  வெளியே பார்க்க முடியாது. வெயிலோ, மழையோ, காற்றோ எதுவானாலும் மாலை வீட்டுக்குப் போகும்போதுதான் தெரியும்! உள்ளே ஏ.ஸி. குளிர் மட்டும்தான். ஆகையால் இந்தப் பத்து நிமிடங்கள் காணும் உலகு கண்ணுக்குக் குளிர்ச்சி!!

அந்த வீடுகளும், பாலைவன மணல் நிறத்தில் அதன் சுவர் அமைப்புகளும், அவற்றோடு உள்ள மரங்களும் ஏக்கம் கொள்ள வைக்கும்.  இந்த வில்லாவிலெல்லாம் நம்மளப் போல சாதாரணப்பட்டவங்க இருக்க முடியுமா? கொள்ளை வாடகை. அல்லது வாடகைக் கொள்ளையோ?

வீட்டோடு சேர்த்து நீச்சல்குளம் உண்டாம். பொதுவில் ஒரு உடற்பயிற்சிக் கூடம், கம்யூனிட்டி ஹால் கூட இருக்காம். பேப்பரில் விளம்பரம் பார்த்து தெரிஞ்சிகிட்டது. நினைத்துக் கொண்டே வெளியே பார்த்தவள் அதிர்ந்தேன்.  ஐயோ, வெளியே மணற்காற்று!! காலையில் வரும்போது வீட்டில் ஜன்னல் திரைச்சீலைகளை மூடவில்லையே!! அப்போதொன்றும் இந்தக் காற்று இல்லையே!

ஜன்னல் கண்ணாடிகள் மூடியிருந்தாலும், அதன் ஓரங்கள் வழியே நுண்ணிய தூசித் துகள்கள் உள்ளே வரும். முதல்மாடி என்பதால் அதிகமாகவே வரும். ஸோஃபா, கட்டில், துணிமணிகள், தரை எல்லாம் தூசிப்படலம் இருக்கும். பால்கனியோ, கேட்கவே வேண்டாம். அப்படியே கிச்சனும்!!

காற்று வேறு பலமா இருக்கே!! சாயங்காலம் வீட்டு வேலை செய்ய வரும் ரஃபீக் இன்னிக்கு வருவானா என்னவோ? சைக்கிளில் வருபவன். எதிர்க்காற்றில் மிதித்து வரவேண்டுமே. பாவம். வீட்டுக்கு அண்மையில் இருந்த அவனது கேம்ப்-ஐ, போன மாதம் நகர அழகுபடுத்துதலின் விளைவாக தொழிற்பேட்டைக்கு மாற்றிவிட்டார்கள்.  அங்கிருந்து சைக்கிளில் வர முக்கால் மணிநேரமாவது ஆகுமாம். அவனுக்குக் கஷ்டமாச்சே என்று, நாசூக்காக வேறு ஆள் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லியாச்சு. ஆனால், அவனோ, பரவால்லக்கா, நானே வர்றேன் என்று பிடிவாதமாக வருகிறான்.

பன்னெண்டு மணிநேரம் ஆஃபீஸ்ல வேலை பாத்து கிடைக்கிற சம்பளம், அவனுக்கு இப்படி 3 மணி நேரம் பார்ட் டைம் பாக்கறதில கிடச்சுடும்கிறதால, இத விட அவனுக்கு மனசில்ல. இவனை விட்டா, புதுசா ஆளு நல்லதாக் கண்டுபிடிச்சு, அப்புறம் வேலைகளைப் பழக்கணும். அதனால இவனைவிட மனசில்ல எனக்கு.

அவன் இருக்கும் ஏரியாவில் பஸ் கிடையாது. டாக்ஸியில் வாப்பா, அதற்குரிய பணம் நான் தந்துவிடுகிறேன் என்று சொன்னதற்கும், அதெல்லாம் வேணாம்க்கா, யாரு பணம்னாலும் வேஸ்டாக்கக் கூடாது. நான் சைக்கிள்லயே வந்துடுவேன்னு சொல்றவங்கிட்ட பேசிச் சமாளிக்க முடியல.  சரி, அவன்  இஷ்டம்னு சம்பளத்தில் சேர்த்துக் கொடுத்தாச்சு. இலங்கையைச் சேர்ந்தவன்; பேசியதில் பிரச்னைக்கு மறுபக்கமும் உண்டெனத் தெரிந்தது.

 காலையிலயே கொஞ்சமாவது காத்து இருந்திருந்தா, கர்ட்டனையெல்லாம் இழுத்து மூடிட்டு வந்திருக்கலாம். அப்படின்னா ஜன்னல் பக்கம் மட்டும்தான் தூசி இருக்கும்; சுலபமா சுத்தம் செஞ்சிடலாம். ஆனா இப்ப வீடு முழுக்க பொடி மணல் பரவியிருக்கும். நடக்கும்போது நரநரன்னு இருக்கும். கதவு, டி.வி., அடுப்பு, ஃபிரிட்ஜ், புத்தகங்கள், காயப்போட்ட ஆடைகள்னு எதைத் தொட்டாலும் தூசியா இருக்கும். ஒரு வேலைக்கு இருவேலை!!

இன்னிக்கு வந்துடுவானா? வரல்லன்னா? இதப் பாக்கிறதா, சமையல், துணி துவைக்க, ஹோம்வொர்க், இப்பப் புதுவரவா பிளாக், மெயில்கள்னு அதைப் பார்க்கவா? ஆனா, எதிர்க்காத்துல சைக்கிள மிதிச்சு வரணுமே.

முதல்மாடியில இருக்கும்போதே, இவ்வளவு தூசி. இதுவே இந்த மாதிரி வில்லாக்கள்னா, எவ்வளவு மண் வரும்? பத்திருவது வருஷமா வில்லாவில இருக்கிற அல்-அய்ன் மாமி சொன்னாங்களே, மணல்காத்து அடிக்கிற அன்னைக்கு, ஏண்டா வில்லாவுக்கு வந்தோம்னு நொந்துக்குவாங்களாம். அந்தளவுக்கு, கார், தோட்டம், செடிகள், போர்டிகோ, வராந்தா, வீடுன்னு ஒரே மணலா இருக்கும். கூட்டிப் பெருக்குறதுக்குள்ள இடுப்பு ஒடிஞ்சுடுமாம். நல்லவேளை நான் வில்லாவுல இல்லைப்பா...Post Comment

தீ மனிதர்கள்

தலைப்புக் காரணம்: ”Fire men" ன்னா, தீ மனிதர்கள்தானே?

அமீரகத்தில் ஷார்ஜாவில் கடந்த செவ்வாய்க் கிழமை (11ந் தேதி), 'நேஷனல் பெயிண்ட்ஸ்’ நிறுவனத்தின் 4 கிடங்குகளில் நடந்த தீவிபத்துதான் மெயின் நியூஸ் இப்ப. இந்த வருஷத்தில், இதுவரை ஷார்ஜாவில் மட்டுமே நடந்த 17 தீ விபத்துகளில், இதுதான் அமீரகத்திலேயே பெரிய விபத்து. இரண்டு பேர் படுகாயம் தவிர, வேறு அசம்பாவிதம் இல்லை. அதுக்கடுத்த நாளே, (நேற்று) துபாயில் 5 பெரிய கிடங்குகளில் தீ விபத்தாம்!

இப்பத்தான் வெயில் காலம் ஆரம்பிச்சிருக்கு; உச்சகட்ட வெயில் இங்க ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள்லதான் இருக்கும்; ஆனா, அதுக்குள்ள தீ விபத்துகளும் ஆரம்பிச்சுடுச்சு. அதுவும் இந்த மாதிரி வேர்ஹவுஸ்களில்தான் அடிக்கடி தீவிபத்துகள் நடக்குது. மிகக் கண்டிப்பான பாதுகாப்புத் திட்டங்களும், அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத திடீர் செக்கிங்களும், அதிகத் தொகை அபராதங்களும், தண்டனைகளும் இங்க நடைமுறையில் இருந்தாலும், தீ விபத்துகள் ஏன் நிறைய நடக்குதுன்னு ஆச்சர்யமாத்தான் இருக்கு.

அதிகாரிகள் இதுக்குக் காரணமா சொல்றது, மக்கள் சரியானபடி விழிப்புணர்வோட இருக்கிறதில்லை; ரொம்ப அலட்சியமா, எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் இருக்கும் இடங்களில் சிகரெட் பிடிப்பது, பழுதுபட்ட மின்சாதனங்கள் பயன்படுத்துவது போன்றவைதான் முக்கியக் காரணமா இருக்காம். இப்பப் புதுசா இன்னொன்னு சொல்றாங்க; பொருளாதாரப் பின்னடைவு காரணமா, வியாபாரம் மந்தமான நிலையில், விற்காத பொருட்கள் நிறையத் தேங்கி விடுவதால், நஷ்டத்தை ஈடுகட்ட, காப்பீடு பெறுவதற்காக, இம்மாதிரி விபத்துகள் செயற்கையா ஏற்படுத்தப்படுவதாகவும் சந்தேகிக்கிறாங்களாம்!!

www.gulfnews.com

ஏன்னா, அமீரகத்திலேயே பெரிய தொழிற்பேட்டையான ஷார்ஜா தொழிற்பேட்டையில், சென்ற மாதத்தில் மட்டும், இரண்டு நாட்களுக்கொருமுறை ஒரு சிறிய தீவிபத்தாவது நடந்திருக்காம்!! அதனால அந்தக் கோணத்துலயும் இப்ப தீ விபத்துகள்ல விசாரணை மேற்கொள்ளப்படுகிறதாம்!

www.khaleejtimes.com
அருகே பணியாளர் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்களின் உடைமைகளுடன் வெளியே.

தீ அணைக்கப்பட்டு விட்டாலும், இடத்தைக் குளிர்விக்கும் நடவடிக்கைகள் ராப்பகலா தீயணைப்பு வீரர்களைக் கொண்டு நடந்துகிட்டிருக்காம். சனிக்கிழமை வரை அந்த இடம் (5 நாட்கள்) அவங்க பொறுப்பிலதான் அந்த இடம் இருக்குமாம். அப்படின்னா, எவ்வளவு பெரிய விபத்தா இருக்கும் பாருங்க!!

இம்மாதிரி தீப்பற்றக்கூடிய பொருட்களில் பற்றிய தீயை அணைப்பதுக்குச் சமமாம், அணைத்தபிறகு அதைக் குளிர்விப்பதும்!! மீண்டும் தீ விபத்து ஏற்படாமல் காக்கவும், கிடங்கிலும், அருகாமையிலும் மிஞ்சிய பொருட்களைக் காக்கவும் இது மிகவும் முக்கியம். இதற்கு ஒரு நுரையைப் பயன்படுத்துவார்களாம். (செய்திகளில், விமான விபத்தைத் தவிர்க்க இப்படிச் செய்வதைப் பார்த்திருப்போம்).

அதுபோல, திறந்தவெளி தீ விபத்தைவிட, மூடிய இடங்களின் தீ விபத்துகளில் (closed fire) ரொம்பக் கவனமாகத் தீயணைப்பை மேற்கொள்ள வேண்டுமாம். எரிந்துகொண்டிருக்கும் கிடங்கு கட்டிடத்தின் கதவுச் சாவி கையில் இருந்தாலும், படங்களில் ஹீரோ சர்வசாதாரணமாக வீட்டுக்குள் குதித்துப்  போவது போல் போய்விட முடியாது. தீ ஏற்படக் காரணம், எந்த இடத்தில் அதிக பாதிப்பு,  உள்ளே என்னென்ன பொருட்கள் இருக்கின்றன, இன்னும் மற்ற விவரங்கள் தெரியாமல் உள்ளே நுழைந்து விடமுடியாது. அதோடு, எரியும் தீ, ஒரு கட்டத்தில், போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல் இருக்கும்; ஆனால் முழுதும் அணைந்துவிடாது. ஒருவேளை தீப்பற்றக்கூடிய வாயுக்கள் உருவாகியிருக்கலாம். அச்சமயத்தில் கதவையோ, ஜன்னலையோ திறப்பது, எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்ததுபோல, பெரும்வெடிப்பை ஏற்படுத்தி, பலத்த உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்த வல்லது. தணலில் ஊதினால் நெருப்பு பற்றிக் கொள்ளுமே, அதுபோல!! இதற்கு backdraft, flashover என்று பெயர்.  ஒரு உதாரண வீடியோ இங்க பாருங்க.

இதைத் தவிர்க்க, இவ்விளைவினால் ஆபத்து ஏற்படாமலும், புகையை வெளியேற்றவும், முதலில் கூரைப் பகுதியிலோ அல்லது அதிக ஆபத்து ஏற்படாதபடி ஒரு இடத்திலோ ஒரு திறப்பு ஏற்படுத்திக் கொள்வார்களாம். சில சமயம் வெப்பத்தைத் தாங்கமுடியாமல், ஜன்னலோ, கதவோ, கூரையோ தானே வெடித்தும் இவ்விளைவுகள் ஏற்படலாம்.

 www.khaleejtimes.com

இப்படிப்பட்ட உயிர்காக்கும் துறையில் வேலை பார்க்கும் தீயணைப்பு வீரர்கள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள். மருத்துவர்களுக்குச் சமமானவர்கள்.  பல சமயங்களில், பணியில் உயிரிழந்தோரும் உண்டு. தியாக மனப்பான்மையுடன் இத்துறையில் பணியாற்றவும் ஒரு தைரியம் வேண்டும்.

அமீரகத்தைப் பொறுத்தவரை, தீயணைப்புத் துறை, அதிநவீன உபகரணங்களுடன் சிறந்த முறையில் செயலாற்றுகிறது.  சில மாதங்கள் முன் அபுதாபியில் சில குடியிருப்புக் கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சில நாடகள் வரை தங்குமிடம்கூட ஏற்பாடு செய்து தந்திருக்கிறார்கள். இங்கிருப்பதனால் ஒரு பாதுகாப்பு உணர்வு கிடைக்கிறது என்றாலும், நம் நாடும் இதுபோல எப்போ ஆகும்கிற ஒரு ஏக்கம்தான் வருது! எங்கேயானாலும், வருமுன் காப்போம் என்பதற்கேற்ப நம்மைத் தற்காத்துக் கொள்வதே சாலச் சிறந்தது, இல்லையா!!


Post Comment

தேடல்களும், விடைகளும்
சின்ன அம்மிணி அழைச்ச தொடர்பதிவுக்கு எழுத இப்பத்தான் எழுத முடிஞ்சுது. கொஞ்சம் லேட்டாயிடுச்சு, அதான் லேட்டு!!

சின்ன வயசுல, கள்ளங்கபடறியா எல்லாப் புள்ளைகளையும் போல, நானும் தெரியாம முழுங்கிட்ட பபிள்கம்மை வெளியே கொண்டுவர தலைகீழா நின்னுகிட்டே, ”பபிள்கம் வெளியே வந்துரட்டும். வயித்துக்குள்ளேயே வெடிச்சிடக்கூடாது அல்லாவே”ன்னு  பிரார்த்தனை செய்யிற அளவுக்குத்தான் எனக்கும் பக்திப் பரவசம் இருந்துது.  ஆனா, இப்பவும் அப்படியேவா இருப்போம்? ”ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி”ன்னு தெரியும்தானே.

முஸ்லிம்கள் நிறைந்து வாழும் ஊரில் பிறந்ததால், என்னைச் சுற்றி எல்லாரும் முஸ்லிம்களே.  எளியவர்களே அதிகம்.  தொழுகை, குர் ஆன், நோன்பு என்பவை வசதி படைத்தவர்களுக்கே உரியது என்ற அறியாமையால், ஓரளவு வசதி படைத்த வீட்டினர் மட்டுமே அவற்றைச் செய்து வந்தனர் (அப்போது). காலச் சுழற்சியில் ஏற்பட்ட மாறுதல்கள் பலரின் அறிவுக் கண்ணைத் திறந்தது. தொழுகை, வசதி பார்த்தோ, ஏற்றத்தாழ்வு பார்த்தோ செய்ய வேண்டியதல்ல; படைக்கப்பட்ட எல்லா உயிர்களுக்கும் உரியதே என்றும் அறிந்து கொண்டோம்.

எப்போதும் எல்லாவற்றிற்கும் ஒரு “ஏன்” என்ற கேள்வி வரும் என் மனதில். அது, நோன்பாகட்டும், தொழுகையாகட்டும், பள்ளிப் பாடங்கள் ஆகட்டும், செய்திகளாகட்டும், “ஏன்” என்ற கேள்வி வராமல் இருந்ததில்லை. வீட்டில் என் கேள்விகளுக்கு விளக்கமாகப் பதில் சொல்ல அதிகம் அறிந்தவர்கள் இல்லை; நர்கீஸ், முஸ்லிம் முரசு போன்ற புத்தகங்கள் அளிக்கும் தீனி பற்றாக்குறையாயிருந்தது.

என் பள்ளிப்பருவம் முழுதும் கிறிஸ்தவ, இந்துப் பள்ளிகளிலேயே கழிந்தது. கிறித்தவப் பள்ளிகளில் கதைகள் மூலமே பெரும்பாலும் போதனைகள் நடைபெறுவதால், நம்மையும் அறியாமல் ஒன்றி விடுவோம். ஆனால், பிரார்த்தனைகளில், ஆண்டவரே எனப்படும்போதெல்லாம், நான் “அல்லாஹ்வே” என்று சொல்லிக் கொள்வேன். வேறு சிலர், கிறிஸ்தவர்களாகவே மாறிவிட்டிருந்த போது, நான் மட்டும் எப்படி இப்படிச் செய்து கொண்டேன் என்பது எனக்குத் தெரியவில்லை. காரணம், என் வீட்டிலும் யாரும் ஒருபோதும் எனக்குப் போதனைகள் செய்ததில்லை. ஆனால், என் “ஈமான்” இன்னும் உறுதிபெற்றது.

என் வாப்பா சவூதி சென்றதில், பொருளாதார நன்மைகள் மட்டுமல்ல; இஸ்லாம் குறித்த பல சரியான தகவல்களும் அறிந்துகொண்டோம். என் வாப்பா, லீவில் ஊருக்கு வரும்போது, தன் நண்பர்களிடம், உறவினர்களிடம் பேசும்போது, நாம் எவ்வாறான சில தவறான முறையில் வழிபாடுகள் செய்கிறோம், அவை செய்யவேண்டிய முறைகள், ஏன் அப்படிச் செய்ய வேண்டும் என்பவை குறித்துப் பேசிக்கொள்ளும்போது கேட்டுக் கொண்டிருப்பேன்.  வயதுக்கு வருமுன்பே பெண்பிள்ளைகளின் படிப்பை நிறுத்தும் என் ஊர் மக்களிடையே, அக்காலத்திலேயே தன் தங்கைகள், மகள்கள் என்று ஆறு பெண்களையும் பட்டப்படிப்பு படிக்கவைத்து, வேலையும் செய்ய ஊக்கமளித்த என் தந்தையும் இஸ்லாமை சரியானபடி புரிந்துகொள்ள ஒரு காரணம்.

ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது, ஒரு முஸ்லிம் ஹாஸ்டலில் தங்கியபோது குர் ஆன், தொழுகை குறித்தச் சரியான விளக்கங்களால், இறைவனை இன்னும் நெருங்கி வர வாய்ப்புக்கிடைத்தது.  அச்சமயத்தில் இஸ்லாமியர்களிடையேயும், இஸ்லாம், கல்வி, பெண்கள் உரிமை, தர்கா வழிபாட்டின் தீமைகள் போன்றவை குறித்தும் அதிக விழிப்புணர்வு பரவத் தொடங்கியிருந்தது.

அப்போது, எங்கள் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள், முஹர்ரம் மாதத்தில் ஒருவித உருவ வழிபாடு நடத்துவார்கள். அதற்கென்று அருகில் ஒரு தலம் வைத்து, அதில் முஹர்ரம் மாதம் வந்தால், திருவிழா நடக்கும். அவர்கள் வீட்டில் மின் இணைப்பு கிடையாதென்பதால், ஒவ்வொரு வருடமும், அந்தப் பத்து, பதினைந்து நாட்கள் மட்டும், எங்கள் வீட்டிலிருந்து மின்சாரம் எடுத்துக் கொள்வார்கள் (இலவசமாகத்தான்).  என் மாமா ஒருவரும், ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த நானும் என் அம்மாவிடம் இது தவறான வழிபாடு; இஸ்லாம் அனுமதிக்கவில்லை; அதனால் மின்சாரம் கொடுக்கக்கூடாது என்று வாதிட்டோம். என் அம்மாவோ, ஒரே முடிவாக, ”அதே இஸ்லாத்தில்தான், “உன் அண்டை வீட்டார் பசித்திருக்க, நீ உண்ணாதே”ன்னும் ஹதீஸ் இருக்கு. இது அவர்கள் உணவு குறித்தது மட்டுமல்ல, அயலாரோடு நட்போடு வாழ வேண்டும் என்பதையும்தான் உணர்த்துகிறது. நான் அவ்வழிப்பாட்டு முறையை விரும்புகிறேனோ, இல்லையோ, அவர்கள் என்னிடம் உதவி கேட்கும்போது மறுக்க மாட்டேன்” என்று சொல்லி விட்டார். இப்பதில், அதிகம் அறிந்தவளாய் நினைத்துக் கொண்டிருந்த எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

பின்னாட்களில், பள்ளியில் படிக்கும்போதும், கல்லூரியில் படிக்கும்போதும் நண்பர்களும், நானும் சக வழிபாட்டு முறைகளை, பழக்கங்களைக் குறித்துப் பேசிக் கொள்வோம். ஒரு விஷயம் குறித்து, மற்ற மதங்களில் இப்படிச் செய்யப் படுகிறது என்றால், இஸ்லாத்தில் அது எவ்வாறாகக் கூறப்படுகிறது என்பது குறித்து உடனே தேடுவது என் வழக்கமாக இருந்தது. இவ்வாறான தேடல்களே என்னை மென்மேலும் செம்மைப் படுத்தின. ஆனால், இஸ்லாம் குறித்த உயர்வான எண்ணங்கள் கிட்டியபோதும், மற்றவர்களைப் பழிக்கும் அகந்தையாக ஒருபோதும் அது மாறவில்லை.

கல்லூரிக்கு வந்துவிட்டதால், இப்போது என் இஸ்லாமியத் தேடல்கள் பெண்களின் உரிமைகள் குறித்ததாக இருந்தது. ஆனால், அவற்றுக்கான விடைகள், கல்லூரி முடித்தபின், என் தந்தையோடு அமீரகம் வந்தபின்னேதான் அதிகம் கிடைத்தது. இஸ்லாம் குறித்த நிறைய புத்தகங்கள் கிடைத்தன. அப்போ இங்கு இணையமும் பயன்பாட்டுக்கு வரத் துவங்கியதால் அதிலும் தேடலைத் துவங்கினேன். என் தோழியின் தந்தை மற்றும் என் தந்தையின் நண்பரின் மகன் என்று பலர் என் தேடல்களைச் சரியான பாதையில் செலுத்த உதவினர்.

என்னைப் பொறுத்தளவில், “இறைவன் இருக்கிறான்” என்பதில் எப்போதுமே சந்தேகம் வந்தது கிடையாது. இஸ்லாத்தின் சரியான வழிமுறைகள்தான் என் தேடல். குடும்பம் என்ற பந்தத்தை வலியுறுத்தி, ஒவ்வொருவரின் பொறுப்புகளை வரையறுத்து, வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும், எவ்வாறான செயல்களைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்யவேண்டும் என்பதை  விளக்கமாகக் கூறுவதாலேயே என்னைக் கவர்ந்தது. எல்லாவற்றிற்கும் அவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையே என்னை உற்சாகமாக இருக்க வைக்கிறது.

ஒவ்வொரு முறையும் “இன்ஷா அல்லாஹ்” என்று சொல்லும்போது, எந்தவொரு காரியமும், என்னால் முடியாவிடிலும், என்னிறைவன் நடத்தித் தருவான் என்ற நம்பிக்கை, எனக்கு அதிகத் தன்னம்பிக்கையையும், உத்வேகத்தையும் கொடுக்கிறது.  அதே சமயம், இறைவன் துணையும் வேண்டும் என்பது,  “எல்லாம் எனக்குத் தெரியும்; என்னால் முடியாததில்லை” என்ற கனம் தலையில் ஏறாமல் காத்து, பணிவைத் தருகிறது.

“..என்னையே நீங்கள்  பிரார்த்தியுங்கள்; நான் உங்கள் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிக்கிறேன்..” என்ற இறைவசனம் என் பிரார்த்தனைகள் வீண்போகாது என்ற நம்பிக்கையைத் தருகின்றன.

“... தண்ணீர் தன் வாய்க்குத் தானாக வந்தடைய வேண்டுமென்று தன் இருகைகளையும் விரித்து ஏந்தி கொண்டு இருப்பவனைப் போல் இருக்கிறது; இவன் அள்ளாது அது வாயை அடைந்து விடாது..” என்ற வசனம், தன்முனைப்பும் வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ளமுடியாத அளவு கஷ்டத்தைக் கொடுப்பதில்லை..” என்ற இறைவசனம், எனக்குச் சோதனைகள் வந்தபோது என்னைத் துவண்டு போகாது காத்துக் கொண்டன; இனியும் அப்படியே, இன்ஷா அல்லாஹ்!!

அது(ஆத்மா) சம்பாதித்ததன் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே!!”  இது என் செயல்களின் விளைவுகளில் கவனம் செலுத்த வைக்கிறது.

”.. நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை விரும்பலாம்; ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும்...” நன்மைகளையும், தீமைகளையும் எப்புறத்திலிருந்தும் எதிர்பார்க்க எச்சரிக்கிறது.

இன்னும், தோல்விகளைக் கண்டு துவளாமல், இதைவிட நல்லது கிட்டும் என்ற அமைதியை, ”ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது” தருகிறது.

எந்தவொரு விஷயத்தையும் கட்டாயத்தினாலோ அல்லது குடும்ப வழக்கம் என்பதினாலோ ஒரு கட்டத்தில் செய்ய நேர்ந்தாலும், அதைத் தொடர வேண்டுமெனில் நாம் முழுமனதோடு விரும்பினால், நம்பினால் மட்டுமே தொடர்ந்து செய்ய முடியும். முஸ்லிமாகப் பிறந்ததால், பெயரளவில் மட்டும் இல்லாது, இன்றும் இஸ்லாமை விரும்பிப் பின்பற்றுகிறேன்; என் மக்களுக்கும் அதைக் குறித்துப் போதிக்கிறேன் எனில், அதன்மீதுள்ள பற்றுதலும், அதனால் நான் அடைந்த பக்குவமுமே காரணம். எனக்கு புரிந்துகொள்ளும் வாய்ப்புகள் எல்லாமே தானாக வாய்க்கவில்லை; ஆர்வத்தினால் தேடித்தேடி வாசித்தும், வாதித்தும்  அறிந்துகொண்டிருக்கிறேன்.

”என் தாய் நல்லவள்” என்றொருவர் சொன்னால், உடன்சேர்ந்து மகிழவும்;

“என் தாய் மட்டுமே நல்லவள்” என்றால், புன்னகையோடு இத்தனை நல்ல தாயைப் பெற்றதற்கு வாழ்த்தவும்,

“எந்தத் தாயும் நல்லவளில்லை” என்று பிதற்றினால், தவறு அவர் புரிதலில்தானே தவிர, தாயின்மீதில்லை என்பதைப் புரிந்து அமைதியாக விலகிச் செல்லவுமான தெளிவைப் பெற்றதற்கு இஸ்லாமைச் சரியாகப் புரிந்ததே காரணம்!!

”கற்றது கைமண்ணளவு; கல்லாதது உலகளவு” என்பதாக இன்றும் தேடல் தொடர்கிறது. எல்லாவற்றிற்கும் விடை இப்போதே கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் விறுவிறுப்பு குறைந்துவிடுமே!!

Post Comment

மெக்கானிக்கல் இஞ்சிநீர்
அடுத்தப் பதிவு உருப்படியா எழுதணும்னு நினைச்சு, ஆரம்பிச்சா, என்ன எழுதன்னே தெரியலை; ஸோ, பேக் டு மொக்கை!! மொக்கைன்னா ரங்ஸைக் கலாய்க்கிறதுதான்னு சொல்லித்தான் தெரியணுமா?

என் ரங்ஸ் ஒரு மெக்கானிக்கல் இஞ்சிநீர் தெரியுமோ? அதுல என்ன வசதின்னு கேட்டீங்கன்னா, வீட்டில் என்ன பொருள் ரிப்பேர் ஆனாலும், சரி பண்ணித் தந்துடுவார். இன்னும் சொல்லப் போனா, அவர் சரி பண்ணிடுவார்ங்கிற தைரியத்துல எதை வேணாலும் உடைக்கலாம். ஆனா, கொடுமை என்னன்னா, எதையும் ரிப்பேராச்சுன்னு தூக்கிப் போட்டுட்டு, புதுசு வாங்க முடியாது!! எங்க வீட்ல கேஸ் ஸ்டவ்லருந்து, வாஷிங் மிஷின் வரைக்கும் முதல்ல வாங்கினதுதான், இன்னும் மாத்தவே இல்லை!!

இந்த ஊர்ல, ரிப்பேர் பார்க்கிற காசில, புதுசாவே அந்தப் பொருளை வாங்கிடலாம். அந்தளவுக்கு விலையும், அலைச்சலும் இருக்கும். அதனால சில பொருட்களைப் பார்த்துப் பார்த்து உபயோகிக்க வேண்டியிருக்கும். அதிலும் என் கை இரும்புக்கை!! இவர் ரிப்பேர் பண்ணுவார்ங்கிறது தெரிஞ்சதும், எனக்கும் ரொம்ப சந்தோஷம். ஜாக்கிரதையா வேலை பார்க்க வேண்டாம் பாருங்க!!

அவ்வளவு ஏன், என் பசங்ககூட, சின்ன வயசுல ஒட்டக்கூட முடியாத பிளாஸ்டிக், மர விளையாட்டுச் சாமான்களையும் உடைச்சுட்டு, “வாப்பா சரி பண்ணிடுவாங்க”ன்னு அவரை ஒரு சூப்பர்மேன் ரேஞ்சுக்கு நினைச்சுகிட்டு இருந்தாங்க.

அப்போ, ஒரு நாள் இவரோட பாஸின் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவங்க சொன்னாங்க, அவங்க வீட்டுக்காரரும் இதே மாதிரி ரிப்பேர் ஸ்பெஷலிஸ்ட்தானாம். இவங்க அக்கா, தங்கச்சி வீட்டுக்குப் போனா அவர் ரொம்ப நேரம் இருக்க விடமாட்டாராம். உடனே இவங்க,  அங்க ரிப்பேரான பொருள் ஏதாவது இருந்தா எடுத்துக் கொண்டு கொடுத்துடுவாங்களாம். அவர் ரிப்பேர் பண்ண ஆரம்பிச்சுட்டா நேரங்காலமே தெரியாதாம். இவங்க ஜாலியா அரட்டை அடிப்பாங்களாம்.

ஆஹா, இது நல்ல ஐடியாவா இருக்கே, நமக்குத் தோணாமப் போச்சேன்னு, அடுத்த முறை தங்கை வீடுகளுக்குப் போனா முத கேள்வியே இதான் “ஏதாவது ரிப்பேர் பண்றதுக்கு இருக்கா”ன்னுதான். இப்படியே போய், கடைசியில, “என்ன நீ?  ”கொடே ரிப்பேஏஏஏர்ர்ர்ர்ர்”னு சத்தம் போட்டுட்டு வர்ற குடை ரிப்பேர்காரர் மாதிரி வரும்போதே “ரிப்பேர் பண்ணனுமா”ன்னு கேட்டுகிட்டே வர்ற? நீ வர்றன்னு நான் என்ன புதுசு புதுசா உடைச்சு வைக்க முடியுமா”ன்னு என்னைத் திட்ட ஆரம்பிச்சுட்டாங்க என் தங்கச்சிங்க.


சரின்னு, இப்பல்லாம் கேட்போருக்குத்தான் சேவைன்னு கொள்கையைச் சுருக்கியாச்சு. இப்படியே போய்கிட்டிருக்கும்போது, ஒரு நாலஞ்சு மாசம் முன்னாடி கிச்சன்ல காஸ் சிலிண்டர் மாத்தினோம். அப்புறம் என்னாச்சுன்னா, சிலிண்டர் வால்வைத் திறந்து வைச்சா, காஸ் வாடை வந்தது. மூடிட்டா ஸ்மெல் இருக்காது. இப்படியே இருக்கவும், என்ன செய்யன்னு யோசனையா இருந்தது. எனக்கோ காஸ் சிலிண்டர்னாலே பயம். ஒவ்வொருக்க சிலிண்டர் மாத்தும்போதும், பாம் ஸ்க்வாட் மாதிரி, கிச்சனைவிட்டு எல்லாரையும் வெளியே அனுப்பிட்டு, நான் மட்டும் தனியா நின்னு மாத்துவேன். எதாவதுன்னா என்னோட போகுமேன்னு. அவர்கூட கிண்டல் பண்ணுவார், பயப்படவேண்டிய மனுஷங்களத் தவிர எல்லாத்துக்கும் பயப்படுறன்னு.

நம்ம ஊர்னா, உடனே காஸ் ஏஜென்ஸிக்கு ஃபோன் பண்ணா, பசங்கள அனுப்பி வைப்பாங்க. இங்க அப்படி ஏஜென்ஸி எதுவும் கிடையாது. நம்ம ஊர் குல்ஃபி வண்டி மாதிரி, ஒரு வண்டியில மணியடிச்சுகிட்டே சிலிண்டர்கள் கொண்டு வருவாங்க. நாம கூப்பிட்டு வாங்கிக்கணும். அல்லது பக்கத்துல உள்ள சின்னச் சின்னக் கடைகளிலும் கிடைக்கும். ஆனா, இங்க எல்லாப் பொருட்களும் விலை கொஞ்சம் கூட இருக்கும். நாமதான் சிக்கனச் சிகாமணியாச்சே. எப்பவும் மொத்தமா வாங்கிடுறதனால, வீட்டுக்குக் கீழே இருக்கக் கடையில எதுவும் வாங்கவேண்டி வராது. அதனால அந்தக் கடைக்காரருக்கு என்மேல காண்டு. தப்பித்தவறி அவர்ட்ட காஸ் வாங்க வேண்டி வந்தாலும் ஸ்டாக் இல்லன்னு சொல்லிடுவார்.

இப்ப காஸ் லீக்காகுதே, என்னச் செய்யன்னு ஒரே ரோசனை. ரங்ஸ்ட்ட சொல்லப் பயம். ஏன்னா, உடனே அவர் வீராவேசமா மெக்கானிக்கல் மூளையோட ரிப்பேர் பார்க்கறேன்னு வந்திடுவார். காஸ் விஷயத்துல விளையாடக்கூடாதே, அதனால சொல்லலை. அன்னிக்கு ஆஃபிஸ் வந்தப்பிறகு, ஃபயர் ஸ்டேஷனுக்கு ஃபோன் பண்ணேன். என்னன்னாங்க; நான் இந்தந்த மாதிரி காஸ்  லீக்காகுது ன்னு சொன்னேன். என் மொபைல் நம்பரை வாங்கிட்டு, கூப்பிடறோம்னாங்க. வச்சவுடனே அங்கிருந்து ஃபோன் வந்துது. ஒரு அரபி ஆஃபிஸர்தான் பேசினார்.

இந்தி தெரியும்னதும், இந்தியிலேயே பேசினார். பின்னாடி பயங்கரமாக ஃபயர் இஞ்சினின் சைரன் சத்தம்!! சிலர் தடதடவென்று நடக்கும் சத்தம் வேறு! என்ன பிரச்னை, வீட்ல யாரும் இருக்காங்களான்னெல்லாம் கேட்டுட்டு, வீடு எங்கன்னு கேட்டார்.  நான் அட்ரஸ் சொல்லச் சொல்ல, அதை அங்க யார்ட்டயோ திருப்பிச் சொன்னார். அப்புறம்,  “ஓ.கே. நாங்க இப்ப உங்க வீட்டுக்குப் போயி  கதவை உடைச்சுட்டு உள்ளப் போப்போறோம்”ன்னாரே பாக்கலாம்!! அவ்வ்வ்வ்வ்வ்!!. அச்சச்சோ, உடைக்காதீங்கன்னு அலறி,  மறுபடியும் அவர்கிட்ட ,  சிலிண்டரைத் திறந்தா மட்டும்தான் பிரச்னைனு விளக்கினதும், அவர் யார்கிட்டயோ “போகவேண்டாம்”னு அரபில சொன்னார். ஹப்பாடா!!

பூட்டின வீட்டுக்குள்ள காஸ் லீக்னு புரிஞ்சுகிட்டாராம் அவர்!! அப்புறம் என்கிட்ட “உன் ஹிந்தி அவ்வளவு தெளிவால்ல”ன்னு சொல்லிட்டு (மனசுக்குள்ள என்னல்லாம் திட்டுனாரோ??), கடையில ஒரு வாஷர் கிடைக்கும்; அதை வாங்கி மாட்டினாப் போதும்னு சொல்லித் தந்தார். டெல்லியில எல்.கே.ஜி. யிலயும், திருநெல்வேலில தூர்தர்ஷன் பாத்தும், அபுதாபில டாக்ஸி டிரைவர்களிடம் மல்லுக்கட்டியும் படிச்ச ஹிந்தியைச் சரியில்லன்னு சொல்லிட்டாரேன்னு ரொம்ப வருத்ததோட, ரங்ஸ்கிட்ட ஃபோன் பண்ணி இப்படிச் சொனாங்கன்னு சொல்ல, அவரும் அவர்பங்குக்குத் திட்டினார் - என் ஹிந்தியை இல்ல, கதவ உடைக்கிற வரைக்கும் வந்ததை!! “ஆல் மை டைம்”னு கேட்டுகிட்டேன், என்ன செய்ய!!

(தகவல்: யூ.ஏ.இ. அவசர போலீஸ் நம்பர் 999. ஆனா, சிலர் இந்த எண்  தெரியாமலோ, அல்லது பதட்டத்திலோ அறியாமல், தங்களின் சொந்த நாட்டுல உள்ள அவசர போலீஸின் எண்ணை டயல் செய்தால் கூட, அது 999க்குப் போகிற மாதிரி அமைச்சிருக்காங்க இங்க.இது எல்லா அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்கா தவிர எந்தெந்த நாட்டு எண்களுக்குப் பொருந்தும்கிற விவரம் தெரியலை!! முயற்சி செய்து, வீட்டுக்குப் போலீஸ் வந்துதுன்னா, நான் பொறுப்பில்ல!! )

Post Comment