Pages

பகிர்ந்துப் பதித்தல்
சவூதிக்கு ஹஜ்ஜுக்காகச் சென்றிருந்தபோது கிடைத்த சில சுவாரசியமான அனுபவங்கள். இங்கே பதிவாகத் தந்து பகிர்ந்து கொள்வதோடு, நினைவுப் பதிப்பாகவும் வைத்துக் கொள்ளலாம் என்று டூ-இன்-ஒன்னாக.....

(படங்கள்: கூகிளுக்கு நன்றி!!)

*^*  மக்கா, மதீனா இரண்டு பள்ளிவாயில்களிலும் அனுதினமும் ஐந்து வேளைகளிலும் தொழுகை முடிந்தவுடன், ஜனாஸாத் தொழுகை நடத்தப்பட்டது. (இறந்தவர்களுக்கான பாவமன்னிப்பு வேண்டி நடத்தப்படும் சிறப்புத் தொழுகை ‘ஜனாஸாத் தொழுகை’ எனப்படும்.) அங்கிருந்த நாட்களில் ஒரு வேளைகூட மரணமடைந்தோருக்கான இத்தொழுகை நடத்தப்படாமல் இல்லை. வாழும் வாழ்க்கைக்கான தொழுகையும், மரணத்திற்கானத் தொழுகையும் அடுத்தடுத்து நடக்கும்போது வரும் உணர்ச்சிக் கலவைகளினூடே, ’ஒரு நாள் நமக்காகவும் இப்படி தொழுகை நடக்கும்’ என்ற நினைப்பும் தவறாமல் வரும்.

 
  *^* ஹஜ்ஜிற்குரிய ஐந்து நாட்களில், முதல் நாள் மக்கள் தங்கவைக்கப்படுவது ஏஸி, மெத்தை  வசதியோடு கூடிய தீப்பிடிக்காத டெண்டுகளில்.  அடுத்த நாள், அரஃபா என்ற இடத்திலோ, மின்சார வசதி இல்லாத - ஷாமியானா வகை டெண்டுகள். அடுத்து, முஜ்தலிஃபா என்ற இடத்திலோ, அதுவும் கிடையாது. வானமே கூரை, பூமியே மெத்தை!! வசதிகள் படிப்படியாகக் குறைந்து வரும்போது, அதன்மூலம் கிட்டும் பாடங்கள் படிப்பினையாகும்.

மினா - டெண்ட் நகரம்..
*^* மினாவில் ஒரு வயதான தம்பதியினர் என்னை மிகவும் கவர்ந்தனர். மனைவியால் நடக்கவோ, தரையில் கிடக்கவோ இயலாதென்பதால், ஹஜ்ஜின் ஐந்து நாளும் வீல்சேரிலேயேதான் இருந்தார். அவரது கணவர் அவரைவிட்டு நகராமல் அருகிலிருந்து கவனித்த விதம்... சொல்லிமுடியாது.

யாரோ..
*^* என் மாமியாரை வீல்சேரில் வைத்துக் கூட்டிப் போனதில் கிடைத்த அனுபங்கள் தனி. வீல் சேர் தள்ளி, முன்அனுபவமில்லாததால்(!!!) முதல் நாள் பலரின் காலில் இடித்துவிட்டு, அசடு வழிந்த அனுபவங்களும் உண்டு. அப்புறம் சுதாரிச்சுட்டோம்ல!!  (வீல் சேர் காலில் இடித்தால், அடிபடுவது கரண்டைக் காலுக்குப் பின் உள்ள எலும்பில் என்பதால் பயங்கரமாய் வலிக்கும்#அனுபவம்) என் மாமியாரோ மிஞ்சிப் போனால் 45 கிலோதான் எடை இருப்பார். அவரை வைத்துத் தள்ளுவதே ஏற்றமான சில இடங்களில் சிரமமாக இருந்தது. ஆனால், மிக அதிக எடை கொண்டவர்களைச் சிலர் வீல் சேரில் தள்ளிக்கொண்டு போவதைப் பார்த்தால் பாவமாக இருக்கும்.


*^*  பள்ளிவாசல்களில் மாடி ஏற வேண்டிய இடங்களிலெல்லாம் எஸ்கலேட்டர் எனப்படும் ‘தானியங்கிப் படிகள்’தான். வளரும் நாடுகளிலிருந்து வரும் பலருக்கும் அதை முறையாக உபயோகிக்கத் தெரிவதில்லை. வயதானவர்கள் பலர் தடுமாறி விழுவது வாடிக்கையாக இருக்கிறது.

*^* எங்கே பார்த்தாலும் ஜனத்திரள் என்பதால், கூட்டத்தில் யாரேனும் தொலைந்து போவதும், பின் அலைந்து திரிந்து தங்குமிடம் வந்து சேர்வதும் அவ்வப்போது நடக்கும். அதைத் தவிர்க்க, குழுவாகச் செல்பவர்கள் யூனிஃபார்ம் போல ஒரே நிற ஆடை அணிந்துகொள்வார்கள்.  வெள்ளைவெளெரென்ற கூட்டத்தின் நடுவே கண்ணைப் பறிக்கும் பளீர் நிறங்களில் அவ்வப்போது ஒரு கூட்டம் போவதை,  மாடியிலிருந்து பார்க்க வெள்ளைத்தாளில் வர்ணத் தீற்றல்கள் போல, அழகாய் இருக்கும்.

*^* அதிலும், எப்பேர்ப்பட்டக் கூட்டமானாலும் இந்தோனேசியா, சீனா, புருனே போன்ற கிழக்காசிய நாட்டைச் சேர்ந்த குழுவினர் மட்டும் ஒருவர்கூட பிரிந்துவிடவே மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இவர்கள் போட்டிருக்கும் ஒரே மாதிரியான கண்ணைப்பறிக்கும் பளீர்வண்ண உடை ஒரு காரணம் என்றாலும், இன்னொன்று, கூட்டத்தின் நடுவே ஒருவர் கையை ஒருவர் விடாமல், நெளிந்து நுழைந்து செல்வது. “நூடுல்ஸ் சாப்பிடுபவர்கள், அதைப் போலவே கூட்டத்தினுள் வளைந்து நுழைந்து நெளிந்து சென்றுவிடுகிறார்கள்” என்று நாங்கள் பேசிக் கொள்வோம்.

*^* எங்கள் குழுவில் அம்மா-மகள்-மருமகன் கொண்ட இன்னொரு தமிழ் குடும்பமும், நாங்களும் மிகவும் நெருக்கமாகிவிட்டதால், எங்களிருவரையும்  அக்கா-தங்கை என்றே நிறைய பேர் நம்பிவிட்டனர்!! என் மாமியாரை அவரது குடும்பமும் கவனித்துக் கொண்டது மிகவும் உதவியாக இருந்தது.

*^*  நமக்குத்தான் பாகிஸ்தானியர்கள் எதிரி!! (& vice-versa) ஆனால், சவூதியினர், இந்தியர்களையும், பாகிஸ்தானியர்களையும் ஒரே நாட்டு மக்கள் போலத்தான் பாவிக்கின்றனர்!! பள்ளிவாயில்களில் விளக்கப் பிரசங்கங்கள் நடத்தும்போதெல்லாம் இரு நாட்டினரையும் அழைத்து ஒன்றாகத்தான் வைத்து பிரசிங்கிக்கின்றனர். அதேபோல, மினா, அரஃபா என்ற இடங்களில் இரு நாட்டினரையும் (பெரும்பாலும்) ஒன்றாக ஒரே கேம்பில்தான் தங்க வைக்கின்றனர். 

(’குழந்தையும் தெய்வமும்’ படத்தில் எதிர் துருவங்களான இரு குட்டி பத்மினிகளும் சண்டை போடும்போது, ஆசிரியர் ஒரே அறையில் போட்டு பூட்டி வைப்பாரே, அதுதான் ஞாபகம் வருது)

*^* அப்படி தங்கவைத்திருந்தபோது, பாகிஸ்தானியர்கள் நம்மைக் குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், (தென்) இந்தியர்களால்தான் அவர்களைப் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை - காரணம்,  அவர்களின் (சீக்கியர்களைப் போன்ற) ஓங்குதாங்கான உடலமைப்பும், உறுதியும்!!

*^* சவூதி அரேபியர்களில்கூட சிலர் தற்போது ஓரளவு ஆங்கிலமும், சில ஹிந்தி வார்த்தைகளும் பேசுகின்றனர்.  பள்ளிவாசல்களில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த நிற்பவர்கள் இந்திய பெண்களையும் “பாஜி” என்று அழகாக அழைத்து, “அந்தர் மகான் நஹி” என்று சொல்ல,  நம் பெண்களோ முழிக்கின்றனர்!!

*^*  எங்களை அழைத்துச் சென்ற தனியார் ஹஜ் நிறுவனம் சவூதி சென்றதும் எங்களைக் கிட்டத்தட்ட கைவிட்டு விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.  எங்கள் குழுவில் இருவருக்கு அரபி மொழி சரளமாகத் தெரிந்திருந்ததால், விமான நிலையம், அரசு அலுவலகங்கள் உட்பட பல இடங்களில் எங்களின் வசதிகளுக்கு நாங்களே ஏற்பாடு செய்துகொள்ள முடிந்தது.

*^* ஹஜ்ஜின் முக்கிய விதிகளில் ஒன்று, பெண்கள் தகுந்த ஆண்துணை இல்லாமல் வரக்கூடாது என்பது. ஆனால், தனியார் ஹஜ் நிறுவங்கள் இந்த விதியை மதிப்பதேயில்லை. பணத்திற்கு ஆசைப்பட்டு, வயதான பெண்களையும் தனியாக அழைத்து வந்துவிடுகின்றனர்.

*^* எங்கள் குழுவிலும் அப்படியொருவர் முதிய பெண்மணி இருந்தார் -  கீழக்கரை சாராம்மா.  இன்னும் மறக்க முடிவில்லை. மிக ஏழையான அவரது ஹஜ் செலவுக்கே அவரது உறவில் ஒரு செல்வந்தர் உதவியதால், உடன் குடும்பத்தினர் யாரும் வர முடியாத நிலை.  சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கடும் மறதி உள்ள அவரை உடன் வந்த பயணிகளும் தம் பொறுப்பில் எடுக்கத் தயங்கினர். அடிப்படை ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதே பெரும்பாடாகி விட்டது. அதற்கு உதவியதும் அந்நிறுவனத்தில் பணிபுரிந்த சமையல்காரரும், மனிதாபிமானமுள்ள சக பயணிகளும்தான்!!

*^* எங்களை அழைத்துச் சென்ற நிறுவனம் செய்த பல குளறுபடிகள் காரணமாக,  இலங்கையைச் சேர்ந்த சமையல்கார இளைஞர் சித்தீக், அவரது குழுவின் துணையோடு,  எங்களுக்காக, தனிப்பட்ட முறையில் எடுத்த ரிஸ்க்குகள் பல.  மறக்கமுடியாதவர். 

*^* சவூதியில் ஹஜ் காலத்தில் டாக்ஸி சார்ஜ் கன்னாபின்னாவென்று ஏறிவிடுகிறது. 5 - 10 ரியால் வாங்கற இடத்துல, 100 - 200 ரியால் கேக்கறாங்க!!  ஏன்னு கேட்டா, இந்த நாலு மாசம்தான் எங்களுக்கு சீஸன், இப்ப சம்பாதிச்சாத்தான் உண்டுங்கிறாங்க. சவூதி அரசாங்கம் பஸ் சேவையை அதிகப்படுத்தினா நல்லாருக்கும். (அதுக்கும் அங்கே ஒரு வாசகர் கடிதம் எழுதி அனுப்பிட்டோமில்ல!!) கடைகள், ஹோட்டல்களிலும் இதேபோல ரேட்டு எகிறிக்கிடக்கிறது.

*^* சென்னையிலிருந்து கிளம்பும்போது, விமானத்தில் எங்களோடு வரவேண்டிய ஒரு தனியார் ஹஜ் குழுவினர், விமானத்திற்கு "final boarding call" அறிவிப்பு பலமுறை வந்தபின்னும், ஏர்போர்ட்டில் நின்று கூட்டாகக் காலைத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர். விமான நேரமும், தொழுகை நேரமும் முன்பே தெரியும். எனில், அதற்கேற்றாற்போல் சீக்கிரம் வந்திருக்க வேண்டும்; அல்லது, தாமதமாகிவிட்டால் விமானத்தில் இருந்தே தொழலாம் என்பதையாவது அறிந்திருக்க வேண்டும்.  பொதுச் சேவை நிறுவனங்களிடத்தில் ஒழுங்கை எதிர்பார்க்கும் நாமும் நம் கடமைகளில் உரிய முறையோடு இருத்தல் வேண்டாமா?


தூணும் நானே...
குடையும் நானே...
*^* மதீனாவில் பள்ளிவாசலைச் சுற்றிப் பரந்துகிடக்கும் திறந்தவெளி மைதான இடத்தில் நின்று தொழுபவர்களின் எண்ணிக்கையும் அதிகம். அவ்விடங்களில் பகல் நேர வெயிலின் தாக்கத்தைக் குறைக்க, அரசு தற்போது மெகா சைஸ் குடைகளை அமைத்துள்ளது. இரவு நேரத்தில் ஒரு சாதாரணத் தூண் போல நிற்கும் இந்தக் குடைகள், காலை 6 மணியளவில் விரியும். ஒரு குடை 625 m² பரப்பளவிற்கு நிழல் தரும்.  இவை விரியும், சுருங்கும் விதத்தைப் பார்க்க அழகாக இருக்கும். ஆனால், ஸ்லோமோஷனில் நடக்கும் என்பதால் பார்க்கப் பொறுமையும் தேவை. 

*^* குடை வெயிலிலிருந்து காக்கும். ஆனால், வெக்கையினால் வரும் புழுக்கத்திலிருந்து எப்படித் தப்பிப்பது? இதற்கும் தண்ணீரைப் பன்னிராகத் தெளிக்கும் ராட்சஸ ஃபேன்கள் அமைத்திருக்கிறார்கள்!!

*^* மில்லியன் கணக்கில் ஆட்கள் புழங்கினாலும், இரவில் சின்னக்கடைகள் அடைக்கப்படுவது இப்படித்தான்!! ஜஸ்ட் ஒரு பெட்ஷீட்!!

*^* கிளம்புவதற்கு ஒரு மாதம் முன்பே சின்னவன் ஒரே புலம்பல், “நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்"னு. சென்னையில் அம்மாவிடம் என் சின்னவனை விட்டுட்டுப் கிளம்பினப்போவும் ஒரே அழுகை. திரும்பி வந்தபோது அவனைப் பார்த்த என் உறவினர் அடித்த கமெண்ட், “அவ்ளோ புலம்பி அழுதானே, நானும் அம்மாவக் காணாம ஒரு மாசத்துல புள்ளை ஏங்கிடுவானோன்னு நினைச்சேன். இப்ப என்னடான்னா, பய அஞ்சு கிலோ வெயிட்டும் கூடி, பளபளன்னுல்ல இருக்கான்!!”
என் பதில்: “நான்தான் அவன் அப்படியே அவங்கப்பா மாதிரின்னு சொன்னேனே!!”

*^* ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, சோகமாக இருந்த என்னிடம் ஏனென்று கேட்டார் என்னவர். ”ப்ச்... ஒரு மாசமா மணியடிச்சா சோறுன்னு இருந்தாச்சு. இனி நானே சமைக்கணுமேன்னு கவலையா இருக்கு”ன்னேன்.  “அத நான் சாப்பிடணுமே. என் நிலைமையை யோசிச்சிப் பாரு!!”

Post Comment

கல்லூரிப் படிப்பு

சமரசம்  என்ற பத்திரிகையில், செப்டம்பர் மாதம் வெளிவந்த எனது சிறுகதை. எனது முதல் பத்திரிகைப் படைப்பு!

 

ஹாஜா மைதீன் பெரியாப்பாவின் இளைய மகள் சகீனாவுக்குக் கல்யாணம். காலை கல்யாணம் சிறப்பாக முடிந்து, மதிய விருந்தும் முடிந்து, எல்லாரும் சற்றே இளைப்பாறிக் கொண்டிருந்தனர். ஊர் வழக்கப்படி வீட்டில் வைத்துத்தான் திருமணம். ஹாஜா மைதீன் பெரியாப்பா, பெரியம்மா ரெண்டு பேருக்குமே பெரிய குடும்பப் பிண்ணனி.  அதனாலும் வீடு முழுக்க,  நெருங்கிய உறவினர்களால் நிரம்பி வழிந்தது. கல்யாண மண்டபம் போல பெரிய, அந்தக் காலத்துக் கல்வீடு. குழந்தைகள் ஓடியாட, இளைஞர்கள் வீட்டுவாசலில் அணிவகுத்திருந்த பைக்குகளின் மீதமர்ந்து மொபைல்களில் விட்டுப்போன அழைப்புகளையும், குறுஞ்செய்திகளையும் பார்க்க, பெண்கள் நடுவீட்டில் ஓய்வெடுக்க,  மற்ற ஆண்கள் தெருவீட்டில் பாய்களிலும், சேர்களிலும் நிரவியிருந்தனர்.

மாலை நேரத்துத் தேநீர் தயாரென்று சமையல் கட்டிலிருந்து அழைப்பு வர, பெண்கள் அனைவருக்கும் பரிமாற ஆரம்பித்தார்கள். குடித்த தேநீர் தந்த சுறுசுறுப்பில் எல்லோரும் ஹாலில் குவிய, கலகலப்பானது வீடு. சற்றே கட்டைக் குரல் உடைய செய்ராத்து பெத்தும்மா, “எலே கபூரு, உம்மவ கமருன்னிஸா பண்ணெண்டாப்புல எம்புட்டு மார்க்கு?” என்று கேட்க, எல்லார் கவனமும் அதில் திரும்பியது. கஃபூர், “ஆயிரத்து நூத்தி முப்பது மாமி” என்றதும், “மாஷா அல்லாஹ். நல்ல மார்க்காச்சே. எந்த காலேஜ்? என்ன கோர்ஸ்ல சேத்திருக்கீயோ காக்கா?” என ஜெய்னம்பு சாச்சி கேட்டார். சாச்சி துபாயில் வசிக்கிறார். அங்கே ஒரு பெரிய நிறுவனத்தில் வேலையும் பார்க்கிறார். அவரது கலகலப்பாலும், தெளிந்த சிந்தனைகளாலும், இளையவர் எல்லாருக்குமே அவர் “சாச்சி”தான். வயது “சாச்சி”க்குரிய நாற்பதுகளில் என்றாலும், பேச்சும், செயல்களும் ஒரு ஆச்சியின் அனுபவத்தைக் கொண்டதாயிருக்கும்!!

“ஊர் கிடக்க கிடப்புல, பொம்பளப்புள்ளய படிக்க வக்கிறது, வவுத்துல நெருப்பக் கட்டிகிட்டு இருக்கமாதிரி இருக்கும். அதான் படிச்சது போதும்னு, மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிட்டேன் ஜெய்னம்பு” என்று சொல்ல, அங்கே ஒரு தர்மசங்கடமான அமைதி நிலவியது.

“என்ன காக்கா சொல்றியோ? இந்தக் காலத்துல பொம்பளப் புள்ளயளுவோ என்னென்ன படிப்பெல்லாம் படிக்குதுவோ. எம்புட்டுப் பெரிய வேலலெல்லாம் இருக்குதுவோ. நீங்க என்ன, படிக்க வக்கதுக்கே இப்படி யோசிக்கிறியோ?”

”வேற என்ன செய்யம்மா? நீயே பாரு, ஒரே எங்கப்பாத்தாலும், அந்தூட்டுப் பிள்ள இவன்கூட ஓடிப்போயிட்டு, இந்தூட்டுப் புள்ள அவன்கூட ஓடிப்போயிட்டுன்னுதான் ஊருல பேச்சாக் கிடக்கு. அதுவும் இப்பும்லாம், கல்யாணம் ஆன பிள்ளையளே ஓடிப்போவுதுவோ. நீ வெளிநாட்டுல இருக்கதுனால உனக்கு வெவரம் கிடக்கலபோல. அந்தப் பிள்ளையளும் படிச்சதுகதான்.”

“அஸ்தஃபிருல்லாஹ்!! இந்தப் பிள்ளையளுக்கு ஏன் இப்படி கூறுகெட்டுப் போச்சு?” என்று ஆதங்கத்துடன் சொன்னாள் ஜெய்னம்பு. ”சரி, அதுக்கும் நம்ம வீட்டுப் புள்ளய படிக்க வக்கதுக்கும் என்ன சம்பந்தம்? நம்ம பிள்ளைய நாமே நம்பாம இருக்கலாமா?”

“என்ன ஜெய்னம்பு நீ பேசுற? படிக்க பிள்ளையள வழிகெடுக்கதுக்குன்னே ஒரு கூட்டம் இருக்குது. பொம்பளப் பிள்ளையள வளத்தமா, கட்டிக்குடுத்தமான்னு நம்ம கடமைய முடிச்சமான்னுகூட இப்பம் இருக்க முடியல. அம்புட்டு தலாக்கு நடக்குது ஊருல. அதுக்கும் புள்ளெயளு படிக்கதத்தான் காரணம் சொல்றா.”

“இதென்ன விவரங்கெட்டத்தனமா இருக்கு? படிச்சா பிள்ளைகளுக்கு திமிர் கூடும்னு சொல்ற மாதிரில்ல இருக்கு இது? தப்பு பண்ற பிள்ளைக எதனால அப்படிச் செய்யுதுவோன்னு பாத்து அதுகளத் திருத்த வழிபாக்காம, மொத்தமா, அம்புட்டுப்பேரையும் தண்டிச்சா எப்புடி காக்கா?”

”இதுல என்ன தப்பு? படிக்கதுனாலத்தான ரொம்ப விவரந் தெரிஞ்சுபோவுது இதுகளுக்கு. இப்ப எல்லாம் காலெஜில ஆம்பள, பொம்பள சேந்து படிக்குதுவோ. பயலுவோகூட வரமுறயில்லாமப் பழவுறது. அப்புறம் அந்தப் பயலுவோ குடுக்க தைரியத்துல இதுக இப்படி ஒரு காரியத்தைச் செய்யத் துணியுதுவோ. அதனால, படிக்க வக்காம இருக்கதுதான் சரி. வேணுன்னா, மார்க்கக் கல்வி படிக்கட்டுமே? குடும்பம் நடத்த மார்க்கம் தெரிஞ்சாப் போதாதா?” இடையில் விழுந்து ’கருத்து’ சொன்னான், இளந்தாரியான கரீம்.

“அதானே? காணாததுக்கு இந்த செல்ஃபோனும், கம்ப்யூட்டரும்!! அதுக அதுல என்ன செய்யுதுன்னு உம்மாமாரும் கவனிக்கதே இல்ல..” பாய்ந்தது இன்னொரு வீரன், ஜலீல்.

“ஆகக் கடைசியில, எல்லாத் தப்புக்கும் காரணம் பொம்பளைகதான்னு வழக்கமா வர்ற முடிவுக்கு வந்தாச்சா?”; ”பையங்க மட்டும் என்னவாம்? நாலஞ்சு மாசத்துக்கொருக்க மாத்திக்கிற லேட்டஸ்ட் மொபைல் என்ன, காஸ்ட்லி வாட்ச் என்ன, பிராண்டட் ஷர்ட்-பேண்ட் என்ன, பல்ஸர் பைக் என்ன..”;  “எங்க அடுத்தூட்டு மம்மாத்து மூணு புள்ளை பெத்ததுக்கப்புறம், எவனோடயோ ஓடிப்போச்சு. அவ எந்த காலேஜில படிச்சா? மழைக்குக்கூட பள்ளிக்கூடம் ஒதுங்காதவ அவ.”  பெண்கள் தரப்பிலிருந்தும் கொதிப்புடன்  பதில்கள் வந்தன.

“அடடா.. இருங்க.. இருங்க.. இப்படி ஒருத்தர ஒருத்தர் மாத்தி மாத்தி குத்தம் சொல்லிகிட்டா, எல்லாம் சரியாகிடுமா? சரி, இப்ப காலேஜில படிச்சா உடனே காதல் வந்துடும்னு என்ன கட்டாயம்? நூறு பேர் படிச்சா, ஒண்ணுரெண்டு அப்படி இருக்கும். அதிலும்கூட, நம்ம வளர்ப்பு சரியா இருந்து, இஸ்லாம்ங்கிற வாழ்க்கை நெறியை சரியாப் புரிஞ்சுகிட்டா, பாதிப் பிரச்னை தீர்ந்துடும்.” ஜெய்னம்பு சற்றே நிறுத்தினாள்.

காத்திருந்த கரீம், “அதத்தான் நாங்களும் சொல்றோம். மதரஸா போதும், காலேஜ்லாம் வேண்டாம்னு.”

“ம்க்கும்.. நம்ம பஹ்ரைன் சாச்சா மகன் ஜெய்லானி தெரியுமா சாச்சி? ‘படிச்ச புள்ளன்னா திமிரா நடக்கும், ஓதுன பொண்ணுதான் வேணும்’னு சொல்லி,  மதரஸாவில ஓதி, அங்கேயே வேலைபாக்ற நஸ்ரினைக் கட்டினான்.  பெண்கள் சம்பாத்தியம் பெண்களுக்கேன்னு குர் ஆன்ல சொல்லிருக்குதுல்ல. அதைச் சுட்டி,  சம்பளத்தக் கணவனிடம் தரத் தேவையில்லனு நஸ்ரின் சொல்ல, ‘அப்படின்னா, வேலைக்கே போவேணாம்’னு ஜெய்லானி சொல்ல... இப்படியே ஆரம்பிச்சு ரெண்டு பேருக்கும் சண்டை. மதரஸாவோ, காலேஜோ.. பெண்களுக்கு இப்ப விழிப்புணர்வு அதிமாகிட்டதைப் பொறுக்க முடியாதவங்கதான், இப்படிலாம் சட்டம் போடுறது” ஃபாயிஸா பதிலுரைத்தாள்.

“ஆமா, பெரிய விழிப்புணர்வு.. எதுக்கெடுத்தாலும் வூட்டுல ஆம்பளைங்ககிட்ட மல்லுக்கு நிக்கது.. நம்ம உம்மாமாரெல்லாம் படிக்கவா செஞ்சாங்க? அழகா, வாப்பாவுக்கு, மாமா-மாமிக்கு அடங்கி குடும்பம் நடத்தலையா? இந்தக் காலத்துலதான், படிக்கிறேன், படிக்கிறேன்னு சொல்லிட்டு, இவளுவோ செய்ற அட்டகாசம் தாங்க முடியல..” நாட்டமை பாணியில் நாசர் சொல்ல, ஜெய்னம்புக்கு இவ்வளவு நேரம் இருந்த பொறுமை போய், கோபம் வந்துவிட்டது.

“படிச்சாதான் திமிர் வரும், அட்டகாசம் பண்ணனும்னு இல்லை. படிக்காமலயே அப்படி இருக்கவங்களும் உண்டு.   படிக்கிறது நம்ம அறிவை விசாலமாக்க. கல்விங்கிறது ஆணுக்கு மட்டும்தான்னு இஸ்லாத்துல எங்கயும் சொல்லல. மார்க்க அறிவு, உலக அறிவு இரண்டையும் அறிஞ்சுதெரிஞ்சு, வாழ்க்கைக்கு, குடும்பத்துக்குத் தேவையான விஷயங்கள்ல சரியாப் பயன்படுத்திக்கறதுலதான் படிச்ச புள்ளையோட திறமையே இருக்கு. இது புரியாத சிலர், தப்பு பண்றாங்க. அதுக்காக, படிக்கவே கூடாதுன்னா எப்படி? படிக்க வைங்க, கூடவே இஸ்லாமையும் சரியாச் சொல்லிக் கொடுங்க. அதுக்கு, முதல்ல பெற்றோர் சரியான இஸ்லாமிய அறிவோட இருக்கணும். எத்தனை பெற்றோர் இங்க அப்படி இருக்காங்க சொல்லுங்க? அதுதான் முதல் தப்பு. இஸ்லாம்னா, தொழுறது, நோன்பு பிடிக்கிறது, பர்தா போட்டுக்கிறது அப்படின்ற அளவுலதான் நிறைய பெண்கள் இருக்காங்க. உங்க வீட்டுப் பெண்கள் அப்படி இருக்காங்கன்னா, தவறு வீட்டு ஆண்கள் மேலத்தான். ஏன் அவங்களுக்குத் தெரியாததைத் தெரிஞ்சுக்க வழிவகைகள் செஞ்சுக் கொடுக்கல?”

“எங்க? சமைக்கிற நேரம் போக, டிவியே கதின்னு இருந்தா எப்படித் தெரியும்?”

“எல்லாரும் பொதுவாச் சொல்ற குற்றச்சாட்டு இது. ஆண்களும் டிவி பாக்கிற விஷயத்தில் திருந்த வேண்டியிருக்கு.  பெண்களுக்கு ஃப்ரீடைம் நிறைய இருக்கதால டிவியில் அதிகம் ஈடுபாடு காட்டறாங்க. அந்த நேரத்தை அவங்க ஆர்வத்துக்கேத்த மாதிரி, பயனான விஷயத்துல கவனம் செலுத்த வசதி செஞ்சு கொடுங்க. உங்க பிஸினஸ்களில், ஆஃபீஸ் வேலைகளில்கூட சிறிய அளவில் உதவச் சொல்லலாம். நிறைய வீடுகள்ல, ஆண்கள் வீட்டுக்கு வர்றதே, சாப்பிடவும், தூங்கவும்தான். மனைவிட்ட மனசுவிட்டுப் பேசுறதே கிடையாது. வெளியே நாலு இடத்துக்கு வேலையாப் போயிட்டு வர ஆண்கள், தம் மனைவியிடம் தான் பார்த்த இடம், ஆட்களைப் பத்திப் பேசுனா, அவங்களுக்கும் டிவி-சினிமாவுல வர்றது போல, உலகம் அவ்வளவு சொகுசு கிடையாதுன்னு புரியும். மேலும், உங்க வேலையின் தன்மை, அதிலுள்ள கஷ்டநஷ்டம் புரியும். பாசம் கூடும். அவங்களையும் பேசவிட்டுக் கேளுங்க.”

“இதெல்லாம் தெரிஞ்சுக்கிறதுக்கும், நாம பேசுற விஷயத்துக்கும் என்ன சம்பந்தம்?” அத்துலக் (அப்துல் ஹக்) சின்னாப்பாதான் எரிச்சலோடு கேட்டார்.

“இப்படித்தான் சின்னாப்பா, நிறைய ஆம்பளைங்க புரியாம இருக்கீங்க. முதல்ல கணவன் -மனைவிக்குள்ள அண்டர்ஸ்டாண்டிங் இருக்கணும். ஒரு கணவன், தன் வருமானம், செலவுகள், சேமிப்பு, கடன், நட்புனு எல்லாத்தையும் தன் மனைவிகிட்ட மறைக்காமச் சொல்லணும். முடிஞ்சா அவ ஆலோசனையையும் கேட்டுக்கிடணும். இது அவங்களுக்கிடைல பந்தத்தை இறுக்கமாக்குறதோட, மனைவிய தன் வருமானத்துக்குள்ள குடும்பம் நடத்த வைக்கவும் உதவும். இப்படி இல்லாம, மனைவிய வேலைக்காரி போல நடத்துனா, அவ படிச்சா என்ன படிக்காட்டி என்ன - மனசு வெறுத்துதான் போகும். இந்தச் சமயத்துல, யாராவது கொஞ்சம் சிநேகமாப் பேசினாலும், தெளிவில்லாதவங்க தவறு செய்ய வாய்ப்பாயிடுது. இப்படி ஆம்பளங்கட்டயும் தப்பை வச்சுகிட்டு, பெண்களை மட்டும் குத்தம் சொன்னா எப்படி?”

“அது சரி. இப்ப நாம பேசிகிட்டிருக்கது, படிக்கிற புள்ளைங்க ஓடிப் போறதுபத்தி..” கரீம் முடிக்குமுன், ஜெய்னம்பு தொடர்ந்தாள்.

“இதச் சரின்னு நீ ஒத்துகிட்டதே சந்தோஷம். எப்பவும் ஃபவுண்டேஷன் ஸ்ட்ராங்கா இருந்தா, பில்டிங்கும் ஸ்ட்ராங்கா இருக்கும். தெளிவான இஸ்லாமிய சிந்தனையோடும், தங்களுக்குள்ள இறுக்கமான பாசத்தோடயும் இருக்க பெற்றோர்கள் வளர்க்கிற பிள்ளைகளும், அதே தெளிவோட இருப்பாங்க. தப்பு செய்ய மாட்டாங்க.  பெத்தவங்களுக்கும் பிள்ளைகளின் நண்பர்கள் யாராரு, ஈ-மெயில், ஃபேஸ்புக் அக்கவுண்ட்களின் பாஸ்வேர்ட் நிச்சயம் தெரிஞ்சிருக்கணும். இதையெல்லாம் உங்ககிட்ட தயக்கமில்லாமப் பகிர்ந்துக்கிற அளவுக்கு நீங்க அவங்ககிட்ட அந்நியோன்யமாப் பழகணும்.  ஃபேஸ்புக்கில என்ன பண்றாங்கன்னு மேலோட்டமா பாக்கற அளவுக்காவது பெற்றோர்கள் கம்ப்யூட்டர் அறிவை வளர்த்துக்கணும்.  பிள்ளைக மேலே கொஞ்சம் கண்காணிப்பும்  இருக்கணும். அதுக்காக, எப்பவும் அவங்க தோள் பின்னாடி நின்னு எட்டிப் பாத்துகிட்டே இருக்கணும்னு சொல்லல. சுதந்திரமோ, கட்டுப்பாடோ, ரெண்டுமே அளவோட இருக்கணும். அளவுக்கு மிஞ்சினா, அமிர்தமே நஞ்சில்லியா?”

“ஆமா, ஒரேடிக்குக் காலைக் கட்டிப்போட்டா, புள்ளையளுக்கும் எரிச்ச வராதா?” ஆமினா மாமி.

“இதயும் மீறி, ஒண்ணுரெண்டுபேர் காதல்,கத்தரிக்கானு போகலாம். அப்படிப் போனா, உடனே தாம்தூம்னு குதிக்காம, கூப்பிட்டு வச்சிப் பேசுங்க. பிள்ளைக சந்தோஷமும் முக்கியம்தானே? பையனோ, குடும்பமோ, சூழ்நிலைகளோ சரியில்லன்னா, எடுத்துச் சொல்லுங்க. புரிஞ்சுக்கிடுவாங்க. இல்லன்னாலும், சமாளிக்க நிறைய வழிகள் இருக்கு. சம்மதமில்லாம வேற மாப்பிள்ளைக்குக் கட்டிக் கொடுக்கதுதான் இந்த மாதிரி தவறான முடிவெடுக்க வைக்கும்.”

யாரும் ஒன்றும் பேசாமல் இருக்க, இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்த வேண்டிக் கேட்டாள். “சரி, பொண்ணுங்க படிச்சதுனால ஓடிப்போறாங்கன்றது ஒரு வாதத்துக்கு சரின்னு வச்சுகிட்டாலும், கூடப் போற முஸ்லிம் பையங்களும் படிச்சவங்கதானே? கரீம் சொன்ன மாதிரி, அவங்க குடுக்கிற தைரியம்தானே, பொண்ணுகள எதுவும் வேணாம்னு உதறிட்டு வர வைக்குது? அப்ப ஆம்பளப் பசங்களுக்கும் படிச்ச திமிர் இருக்குதா இல்ல மார்க்க அறிவு இல்லையா? அந்தப் பசங்க செஞ்சத எப்படி நியாயப் படுத்துவீங்க? சொல்லுங்க?”

“தப்புதான். ஆனா, ஒரு ஆம்பள இத ஈஸியா தாண்டிப் போயிடமுடியும்...” நாஸர் முடிக்குமுன் ஜெய்னம்பு இடைமறித்தாள்.

“ஆங், இதத்தான் “ஆம்பளைன்னா சேறு கண்ட இடம் மிதிச்சு, தண்ணி கண்ட இடம் கழுவுவான்”ன்னு சொல்வாங்க. இந்த எண்ணந்தான் முதல்ல  மாறணும்.  இந்த மாதிரி பேச்சுகள்தான், பையங்களுக்கு தப்பு பண்ணிப் பாக்கலாம்கிற தைரியத்தைக் கொடுக்குது. இந்த உலகத்துக்கு இதுசரி வரும். ஆனா, முஸ்லிம்களுக்கு, நாம செய்ற நல்லது கெட்டது எல்லாத்துக்கும் நாளைக்கு மஹஷர்ல ஆண்டவன்ட்ட பதில் சொல்லியே ஆகணுமே? இஸ்லாத்தில, ஆம்பளை, பொம்பளை எல்லாருக்கும் ஒரே கேள்வி கணக்குதான்கிற அச்சம் பையங்களுக்கும் இருக்கணும். தப்புப் பண்ற பெண்களைக் குற்றப்படுத்துவதுபோல, உடந்தையாருக்க பையங்களுக்கும் தண்டனை கொடுக்கணும். அப்பத்தான், இனியும் இது நடக்காது. இல்லன்னா, ”உங்களில் சிலரை, சிலரைவிட மேன்மையாக்கி வைத்திருக்கிறோம்”னு அல்லாஹுத்தாலாவால கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும் ஆண்கள், அதைத் தவறுகள் செய்றதுக்குக் கொடுத்த உரிமையா நினைக்கிற அளவு சமூகம் பொறுப்பில்லாம இருக்குதுன்னு அர்த்தமாகாது?”

”அதில்ல சாச்சி, பிராக்டிகலாப் பாத்தா, பாதிப்பு ஆணைவிட பெண்ணுக்குத்தானே அதிகம்?”

”இல்லைன்னு சொல்லல. ஒரு முஸ்லிம் ஆண் தப்பு செஞ்சாலும், அங்கயும் பெற்றோர்கள் இணக்கம்-வளர்ப்பு முறை-இஸ்லாம் அறிவு- சரியில்லன்னுதான் அர்த்தம். நான் மேலே சொன்ன ரூல்ஸ் ஆண்பிள்ளைகளுக்கும்தான். ஆம்பளப் பிள்ளன்னு பெருமைய்யா கண்டிக்காம இருந்துட்டு, நாளைக்கு அவன் நரகத்துக்குப் போவ பெத்தவங்களும் ஒரு காரணமாயிடக்கூடாது.”

“என்னத்த சொல்லி என்ன, முஸ்லிம் பயலுவோகூடப் போனதுபோயி, இப்பம் மத்த மதத்துக்காரன்கூடயுமில்லா போவ  ஆரம்பிச்சுட்டாளுவ? ஏற்கனவே டாக்டர்மாரெல்லாம் பணத்தாசையால சிஸேரியனாச் செஞ்சி, நம்ம சனத்தொகையைக் குறைக்கப் பாக்குறாவ. இப்ப இதுவும் அதிகமாகிடுச்சுன்னா?”  வேற யார் இப்படி யோசிக்க முடியும்? அத்துலக் சின்னாப்பாதான்.

“அட ரஹ்மானே!!  சிஸேரியன் அதிகமாறதுக்கு இந்தக்காலத்து உணவுப் பழக்கங்களும், உடற்பயிற்சியே இல்லாத வாழ்க்கைமுறையும்தான் முக்கிய காரணம்.  ஆப்ரேஷன்ல அனஸ்தீஷியா உட்பட நிறைய ரிஸ்க் இருக்கதனால, நினச்சமேனிக்குப் பண்ணிட முடியாது.  டாக்டர்ஸ் கவனமாத்தான் இருப்பாங்க. அப்படில்லாம் அநியாயமாப் பேசக்கூடாது.” சொல்லிவிட்டு, யாரும் பதிலுரைக்க முற்படுமுன், அர்த்தம் பொதிந்த கேள்வியை முன்வைத்தாள்.

”சரி, மாற்றுமத டாக்டர்ஸ் பிரசவம் பாக்கறதனாலத்தானே இப்படிப் பழி சொல்றீங்க. அப்ப ஏன் நாம நம்ம பெண்பிள்ளைகளப் படிக்க வெச்சு டாக்டர் ஆக்கக்கூடாது?” ஊஹூம்... மூச்... பதிலில்லை!! ஜெய்னம்புவே தொடர்ந்தாள். 

“நம்ம பிள்ளைக படிக்கவுங்கூடாது. ஆனா, நமக்கு சேவை செய்றவங்களையும் நாம குத்தம் சொல்வோம். அப்படித்தானே? நாம படிச்சு, எல்லாத் துறைகளிலும் கால்பதிச்சா, மத்தவங்ககிட்ட இதுபோல எதையும் எதிர்பார்க்காம, நம்ம மக்களை நாமளே காக்க முடியுமே? அந்தக் குறிக்கோளுக்காக நம்ம சமுதாயத்து ஆண், பெண் எல்லாரையும் முழுமுனைப்போடு தயார்படுத்துறத விட்டுட்டு, சின்னச் சின்ன தப்புக்கெல்லாம் பயந்து, இப்படி கட்டுப்பெட்டித்தனமா கட்டுப்பாடுகள் விதிச்சா, நஷ்டம் நம்ம சமூகத்துக்குத்தான். “எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக்கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை”னு அல்லாஹ் சொல்லிருக்கான். புரியறவங்க புரிஞ்சிப்பாங்க.” முத்தாய்ப்பாய்ச் சொல்லிவிட்டு எழுந்தாள் ஜெய்னம்பு.

“நான் புரிஞ்சுகிட்டேம்மா” கஃபூர் காக்காவின் பதிலில், ஒரு டாக்டரை உருவாக்கும் உறுதி தெரிந்தது, அல்ஹம்துலில்லாஹ்!!

Post Comment

டிரங்குப் பொட்டி - 20

பதிவுலகுக்கு லீவு போட்டிருந்த ஒரு மாசத்தில சுத்தமா வெளியுலகத் தொடர்பே இல்லாமல் இருந்ததால, வந்ததும் உலகத்தில என்னென்ன நடந்திருக்குமோன்னு செய்திகளைப் பார்த்தா, ம்ஹும்.. ஒரு மாற்றமும்  இல்லை. எல்லாம் அப்படியே standstill ஆனமாதிரிதான் இருந்துச்சு!! அமெரிக்கா Occupy Wall Street போராட்டம்,  ஈரான்/ இஸ்ரேல் அணு அச்சுறுத்தல், சிரியா, லோக்பால், 2ஜி - கனிமொழி ஜாமீன், கூடங்குளம் போராட்டம்னு எல்லாமே நான் போகும்போது எப்படி இருந்ததோ அப்படியேதான் வரும்போதும்!! ஏன், அம்மாகூட, கரெக்டா நான் வந்த அன்னிக்குத்தான் பால்/பஸ் கட்டணங்களை ஏத்துனாங்கன்னா பாத்துக்கோங்க!! :-((((

#############%%%%%%%%%%%%%%%#############

சுப்ரமணியம் சுவாமி, இந்தியாவின் முஸ்லிம்களை இழிவுபடுத்தியும், அவர்களின் ஓட்டுரிமையைப் பறிப்பது குறித்தும் பேசிய பேச்சுக்கு இந்தியாவில் ஏதும் நடவடிக்கை இல்லை. ஆனால், அவர் “விஸிட்டிங் ப்ரொஃபஸராகப்” பணிபுரிந்த ஹார்வேர்ட் பல்கலைக்கழகம் இந்தப் பேச்சைக் கண்டித்து, இவரின் சீட்டைக் கிழித்துவிட்டது!! இவரது கருத்து, யூத அமெரிக்கர்களுக்கும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் ஓட்டுரிமையைப் பறிக்கக் கோருவதற்கு ஒப்பானது என்று சக பேராசிரியர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

#############%%%%%%%%%%%%%%%############# 

துபாயிலிருந்து திருமப சென்னைக்கு வரும்போது, துபாயில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பள்ளியின் (பேர் மறந்துடுச்சு) பிளஸ்1, ப்ளஸ் 2 மாணவ, மாணவியர் சுமார் நூறுபேர் வரை விமானத்தில் வந்தார்கள். என்னன்னு கேட்டேன். அமெரிக்காவுக்கு டூர் போனாங்களாம்!! அப்படியே வர்ற வழில துபாய்ல ரெண்டு நாள் டூராம்!! நாமல்லாம் ஸ்கூல் படிக்கிற காலத்துல கன்னியாகுமரி, மிஞ்சிப் போனா திருவனந்தபுரம் போறதே பெரிய அட்வெஞ்சர் டிரிப்!! இப்பல்லாம் வேர்ல்ட் டூரே போறாங்கப்பா. டூர்  ஃபீஸும் அதிகமில்லை, ஜஸ்ட் ஒண்ணேமுக்கால் லட்சம் ருபீஸ்தான்!!

#############%%%%%%%%%%%%%%%############# 

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள அரசு-சார் “சமூக சேவகர்கள்” (Social workers) என்பவர்களின் பணிகளில் முக்கியமானது, குடும்பங்களில் குழந்தைகள் சரியாகப் பராமரிக்கப்படுகிறார்களா எனக் கண்காணிப்பது. இதில் ஏதேனும் குறைபாடு இருந்தால், (திருந்த சில வாய்ப்புகள் கொடுத்தபின்) பிள்ளைகளைப் பெற்றோர்களிடமிருந்து நிரந்தரமாகப்  பிரித்துக் கொண்டுபோய் இதற்கென உள்ள அரசு காப்பகங்களில் வைத்து வளர்ப்பார்கள். இம்முறைக்கு இப்போது கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.

பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினரான, ஜான் லெம்மிங், “சமீபத்தில் நடந்த லண்டன் கலவரத்தில் ஈடுபட்ட இளைஞர்களில் பெரும்பாலோனோர் இம்மாதிரி அரசு காப்பகங்களில் கண்டிப்பின்றி வளர்க்கப்பட்டவர்களே.  எனவே பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமிடையே அரசு தலையிடக்கூடாது. மேலும், பெற்றவர்களுக்குப் பிள்ளைகளை அடிக்கும் உரிமையை மீளத் தர வேண்டும்.  சிறு அடிகள் தரும் பாதிப்பைவிட, கண்டிப்பேயில்லாது வளர்க்கப்படுவதே நிரந்தரமான பெரும் பாதிப்புகளையேற்படுத்தும். அதனால் பெற்றோருக்கு அதிகாரத்தைக் கொடுங்கள் (“Power to Parents")” என்று வாதிட்டிருக்கிறார்.


#############%%%%%%%%%%%%%%%#############


போன வாரம் கடையில வாங்கிட்டு வந்த காய்கறியில் பூச்சி அரித்திருந்ததால், பார்த்து வாங்கக்கூடாதான்னு கேட்டதுக்கு ரங்ஸின் பதில், “காய்ல பூச்சி இருக்குன்னா, ரசாயன பூச்சி மருந்து அடிக்காத அல்லது அதன் தாக்கம் இல்லாத, ஆரோக்கியமான காய்னு அர்த்தம். இதெல்லாம் புரிஞ்சிருந்தா, என்னைப் பாராட்டியிருப்பே!!”.  அவரைப் “பாராட்டிய” போதுதான் இது ஞாபகம் வந்துச்சு.


#############%%%%%%%%%%%%%%%############# 

அதாவது, சில மாதங்கள் முன்னாடி, ஐரோப்பாவில் ஜெர்மனி, ஃப்ரான்ஸ், ஸ்வீடன், நாடுகளில் பரவிய இ-கோலி என்ற பூச்சித் தொற்று 50 பேரை பலிகொண்டது நினைவிருக்கும். இதுக்கு வெள்ளரிக்காய்தான் காரணம்னு முதல்ல சொன்னாங்க. கடைசியில் முளைவிட்ட வெந்தயம்தான் காரணம்னு கண்டுபிடிச்சாங்க. அடுத்து, அமெரிக்காவில் லிஸ்டீரியா என்ற பூச்சித் தொற்றால், 30 பேரும் இறந்தாங்க. இதுக்கும், கிர்ணிப்பழமே காரணமாம்.

பொதுவா, உணவினால் நோய்/இறப்பு என்றாலே அது அசைவமாலத்தான்  இருக்கும்கிறது எதிர்பார்ப்பு. ஆனா, இந்த முறை இந்த இரண்டு பூச்சித் தொற்றுகளும் காய்கறி மற்றும் பழங்களிலிருந்து  என்பது ஆச்சர்யம் + அதிர்ச்சியான செய்தி. உலகம் முழுதும், காய்கறிகள் - அதுவும் பச்சைக் காய்கள், பழங்கள் அதிகம் சாப்பிடணும்னு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடந்துகிட்டிருக்கு. அதில், அசைவம் என்றாலே ஆபத்துங்கிற மறைமுகப் பிரச்சாரமும் உண்டு.  எனில், இந்தச் சம்பவங்கள் கூறுவது என்ன?


Post Comment

பேபி... மாதாஜி!!!

வந்தாச்சு... இறையருளால் நல்லபடியா எல்லாம் நலமே முடிச்சு வந்தாச்சு. என்னாலும் முடியுமா என்றிருந்தேன்.. ஏகனை நோக்கிய எல்லாரின் பிரார்த்தனைகளும் உறுதுணையாய் இருந்து உதவின என்றுதான் சொல்ல வேண்டும்.

போய் வந்து ரெண்டு வாரமாகுது. ஆனாலும் இன்னும் அந்த பிரமிப்பு, பரவசம், மகிழ்ச்சியிலிருந்து விடுபட முடியவில்லை. பதிவு எழுதலாம் என்று நினைத்தால், எங்கு தொடங்க, எதை எழுத, எதை விட என்று பிடிபடாத நிலை. எல்லாவற்றையும் எழுதினால் தொடராகவே ஆகிவிடும்.

இந்த வருட நோன்பில் (ஆகஸ்ட்) திடீரென ஒரு நாள் ஹஜ்ஜுக்குப் போவோம்னு முடிவெடுத்து, தனியார் ஹஜ் பயண நிறுவனங்களில் விசாரித்து,  பதிவு செய்து, விஸா வரத் தாமதமாகி, புறப்படும் நாள் வரை இந்த வருடம் போவோமா மாட்டோமோ என்று சஸ்பென்ஸாகவே இருந்து, பின் இறைநாட்டத்தால் எல்லாம் கைகூடி... இதோ போய்ட்டு வந்தும் ஆச்சு. ஹஜ் செய்ய ஆசைப்பட்டு, வருடக்கணக்கில் காத்திருப்பவர்கள் இருக்க, ஒரே நாளில் எங்களை முடிவெடுக்க வைத்து, புறப்படச் செய்த இறைவனின் கருணை... என்னவென்று சொல்ல...


முதலில் மதீனா... ஒரு ஏகாந்த அமைதியுடன் காணப்படும் நகரம். நான்கு நாட்கள் அங்கு தங்கிவிட்டு, பின் மக்கா. எப்பொழுதும் பரபரப்பும், சுறுசுறுப்புமாய் இருக்கும் தூங்கா நகரம். இரு நகர்களிலும் முக்கியமான பள்ளிவாசல்கள் உண்டு. ஹஜ் காலங்களில், இரண்டிலும் தினமும் தொழுகைக்காக, ஐந்து நேரமும் மில்லியன் கணக்கில் மக்கள் வெள்ளம் காணப்படும். என்றாலும், பள்ளி வளாகங்களில் எங்கு நோக்கினும் சுத்தம், சுத்தம், பளிச்சிடும் சுத்தம்தான்!! (பிரார்த்தனைகளைப் பத்திச் சொல்லாம, சுத்தத்தைப் பத்தி ப்ரஸ்தாபிக்கிறாளேன்னு நினைப்பீங்க. சுத்தம்தானே பிரார்த்தனையின் முதல் பகுதி!! "Cleanliness is next to Godliness" இல்லையா? )


கூட்டம், கூட்டமாய் மக்கள். உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் ஆட்கள் உண்டு. மொழி, உணவு, உடை, பழக்கவழக்கம் என்று எல்லாவற்றிலும் வேறுபட்டவர்களாயிருந்தும், ஒரே இறைவனை நோக்கிய ஒரே பிரார்த்தனை முறை எனப் பிரமிக்க வைத்தனர்!! அரசாங்கக் குறிப்பின்படி, வெளிநாட்டினர் மட்டுமே 30 லட்சம்பேர் என்றாலும், மொத்தம் 35 லட்சம்பேருக்கும் அதிகம்  இருந்திருக்கலாம். எனினும்,  அலங்கார வளைவுகள், டிஜிட்டல் பேனர்கள், சீட்டுக்கச்சேரி, டாஸ்மாக் அலம்பல்கள், காதைச் செவிடாக்கும் ஸ்பீக்கர்கள், பெண்களைக் குறிவைக்கும் கும்பல்கள்,  கேமராக் கோணங்கள், நாராசக் காலர் ட்யூன்கள்,  முன்னுரிமை சிபாரிசுகள், முதல் மரியாதைகள், டொனேஷன் புக், உண்டியல் குலுக்கல்கள், பிரியாணிப் பொட்டலங்கள் என்று கவனத்தைச் சிதறடிக்கும் எதுவும் இல்லாமல், மனதை பிரார்த்தனையில் மட்டுமே ஒருமுகப்படுத்தத் தோதானச் சூழல். 

வருடாவருடம் பெருகிவரும் புனிதப் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, சவூதி அரசு செய்யும் பிரம்மாண்டமான வசதிகள் வியப்பளிக்கின்றன. நெரிசலைத் தவிர்க்க செய்யப்படும் அவர்களின் முயற்சிகள் பலனளித்து வருவதும் மகிழ்ச்சி.   இந்த வருடமும், வந்த இடத்தில் உடல்நலமில்லாமல் போன ஹஜ் பயணிகளுக்கு இலவசமாக மருத்துவ உதவி செய்திருக்கின்றனர்.  மருத்துவமனையில் படுக்கையில் இருப்பவர்களில் பலரை அரசே  தன் செலவில், ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெச்சர்களிலேயே ஊழியர்கள் துணையோடு  ஹஜ் கிரியைகளை நிறைவேற்ற உதவியுள்ளது. சும்மா இல்லை சவூதி அரசாங்கம் செல்வத்தில் கொழிப்பது - தொட்டனைத் தூறும் மணற்கேணி!!

கவனத்தைக் கவர்ந்த இன்னொரு விஷயம் - முதியவர்கள்!! நெகிழவும், பல சமயங்களில் கலங்கவும் வைத்தனர். தம்பதியராய் வந்திருந்த முதியவர்கள், ஒருவருக்கொருவர் கைப்பிடித்து ஆதரவாய் தாங்கிச் செல்வது கண்கொள்ளாக் காட்சி. தனியே வந்திருந்த முதியவர்கள் - ஆண்களே பெரும்பாலும் - தட்டுத்தடுமாறிச் செல்லும்போது நம்மைத் தவிக்கவும் வைக்கின்றனர். ஒருமுறை என்னருகே சென்ற முதியவரொருவர், பெருந்தொலைவு நடந்த களைப்பினால் நிலைதடுமாறி விழப்போக, நான் இருமுறை பிடித்துத் தூக்கிவிட்டும், தள்ளாடியவாறே நடந்து சென்றது இன்னும் கண்களுக்குள்ளேயே நிற்கிறது. காலத்தே என் துணையோடு கடமையை நிறைவேற்ற வைத்த இறைவனுக்கே எல்லாப் புகழும், நன்றியும்.

உடன் வந்திருந்த என் மாமியாரை நாங்கள் வீல்சேரில் அழைத்துச் செல்லும்போதெல்லாம், வழியில் காணும் பல முதியவர்களின் பார்வைகளில் ஏக்கம் வெளிப்படையாகத் தெரியும். சிலர் என் கணவரைத் தட்டிக்கொடுத்து, அவர்கள் மொழியில் பாராட்டவும் செய்தனர்.

அடுத்த அதிசயம் - ஸம்ஸம் ஊற்று நீர்!! வந்திருந்த 35 மில்லியன் மக்களும் திரும்பிச் செல்லும்போது, குறைந்த பட்சம் 10லி ஸம்ஸம் நீர் தம்மோடு எடுத்துச் செல்வார்கள். மேலும், ஒவ்வொருவரும் அங்கிருக்கும் அனைத்து நாட்களும் (10 முதல் 40 நாட்கள்) அந்நீரையே பருகவும் பயன்படுத்துவார்கள். எனினும்  வற்றாத இறைவன் கருணையாய் அந்த ஊற்றும்!!

இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம்!! ஹஜ்ஜின் ஐந்து நாட்களில் மினா என்ற இடத்தில் கூடாரத்தில் தங்க வேண்டும். ஜனத்திரள் காரணமாய், ஒருவருக்கு ஆறடி இடமே கிடைக்கும். அதாவது படுத்துறங்க மட்டும்!!  உலகில் நீ எவ்வளவு இடம் சேர்த்தாலும், கடைசியில் தேவைப்படுவது ஆறடி நிலமே என்று உணர்த்துவது போலிருந்தது. இப்படி இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டு போகலாம். மொத்தத்தில், அந்த ஐந்து நாள் பரதேச வாழ்வு ஒரு பற்றற்ற நிலை வரவைக்கும்.

இதைச் சொல்லும்போது சென்ற வாரம் பேசிய ஒரு தோழி கேட்டது நினைவுக்கு வருகிறது. “ஹஜ்ஜுக்குப் போய்ட்டு வந்தப்புறம் கிட்டத்தட்ட ஒரு துறவு வாழ்க்கைத்தான் வாழணுமாமே? டிவிகூடப் பார்க்கக் கூடாதாம். நீங்கவேற சின்ன வயசிலேயே போய்ட்டீங்க. கஷ்டமாருக்குமே?” என்று கேட்டார்!!  அவ்வ்வ்... விட்டா என்னையும் “மாதாஜி” ஆக்கிடுவாங்க போலன்னு பதறி, ”அப்படிலாம் இல்லை. ஹஜ்ஜுக்குப் போனாலும் போகலையின்னாலும் எப்பவுமே வாழ்க்கையில ஒரு கட்டுப்பாடு இருக்கணும். நல்லது கெட்டது அறிஞ்சு நடக்கறது எப்பவுமே அவசியம்தான்”னு  அவசரமா  விளக்கம் சொன்னேன்.

ஆனாலும், என் சின்னவன் “ம்மா, நீ இப்ப ஒரு நியூ பேபி மாதிரி, தெரியுமா?”வென்று கேட்டது, கூடுதல் கவனம் வேண்டுமென்பதையே உணர்த்தியது.


குறிப்பு:  ஒருவர் செய்த ஹஜ்ஜை இறைவன் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், அவரது பாவங்கள் மன்னிக்கப்பெற்று, அன்று பிறந்த குழந்தையைப் போல ஆகிவிடுவார் என்பது நபிமொழி.

Post Comment