Pages

Showing posts with label சமரசம். Show all posts
Showing posts with label சமரசம். Show all posts

கண்ணுறங்கும் காலம்!!








ஸ்லாமிய வரலாறுகள், ஹதீஸ்கள் வாசிக்கும்போதெல்லாம் அடிக்கடி நம் கண்ணில் படும் ஒரு விஷயம்,   நபி(ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் இரவில் அதிக நேரம் தஹஜ்ஜத் தொழுதார்கள் என்பதுதான். உதாரணமாக, கலீஃபா உமர்(ரலி) அவர்கள், இரவில் மூன்றிலொரு பகுதி முழுதும் தஹஜ்ஜத் தொழுதார்கள் என்று வாசித்த போது ஆச்சரியம் தாளவில்லை எனக்கு!!
ஓர் இரவின் மூன்றிலொரு பகுதி என்பது குறைந்தது இரண்டு மணி நேரம் என்று வைத்துக் கொண்டாலும்எப்படி அவர்களால் அவ்வளவு நேரம் தொழ முடிகிறது என்று யோசிக்கத் தோன்றுகிறதல்லவா?
நமக்கெல்லாம் சுபுஹூ தொழ எழும்பவே மிகக் கஷ்டமாக இருக்கும்.  கட்டாயத்துக்காகத்தான் சுபுஹுவே எழுந்து தொழுகிறோம். இதில் எங்கே தஹஜ்ஜத் தொழ? அப்படியே தொழுதாலும், சுபுஹுவுக்குப் பத்து நிமிஷம் முன் எழுந்து அவசர அவசரமாகத் தொழுமளவுதான் இருக்கிறது நம் நிலை.
அதிலும் உமர்(ரலி) அவர்கள் தஹஜ்த் தொழுவது மட்டுமல்லஇரவின் இன்னொரு  மூன்றிலொரு பகுதியில் நகர்வலமும் சென்று வருவார்களாம்.
அப்படின்னா அவர்கள் இரவில் தூங்குவதே இல்லையோ என்று சந்தேகம் வருமல்லவா? எப்படி அவர்களால்  போதிய தூக்கமில்லாமல் தாக்குப் பிடிக்க முடிகிறது?
ருத்துவ உலகம், ஒரு மனிதனுக்கு ஒரு நாளில் குறைந்த பட்சம் ஆறு - ஏழு மணி நேர தூக்கம் கண்டிப்பாக வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அப்படி இல்லையென்றால், அது பலவித உடல் உபாதைகள் மற்றும் மன நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கடுமையாகக் கண்டிக்கிறது. அது உண்மையே என்று பலரின் அனுபவங்கள் உறுதிப்படுத்துகின்றன.

ஒரே ஒரு நாள் சரியாகத் தூங்கவில்லையென்றால் கூட, அடுத்த நாள் பகலில் தூக்கம் கண்ணைச் சுழற்றிக் கொண்டே இருக்கும். மனம் நிலையாக இருக்காது. எதைப் பார்த்தாலும், யாரிடம் பேசினாலும் எரிச்சல் எரிச்சலாக, கோபமாக வரும். 
எனில், எப்படி நபிகளும், சஹாபாக்களும் தொடர்ந்து போதிய அளவு தூக்கம் இல்லாமல் தாக்குப் பிடிக்க முடிந்ததுஅவர்களால் முடிந்தது நம்மால் ஏன் முடிவதில்லை என்ற கேள்வி மனதைக் குடைந்து கொண்டே இருந்த சம்யத்தில்தான், கீழ்க்கண்ட ஹதீஸ் கண்ணில் பட்டது!!
இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதும்இஷாத் தொழுகைக்குப் பின்னர் பேசுவதும் வெறுக்கத்தக்க செயலாகும்.  568. அபூ பர்ஸா(ரலி) அறிவித்தார்.

'
நபி(ஸல்) அவர்கள் இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசுவதையும் வெறுப்பவர்களாக இருந்தனர்.'  Book : 9  ஸஹீஹ்  புஹாரி

இதற்குப் பின்புதான், இப்புதிருக்கு விடை கிடைத்தது.  இஷாவுக்குப் பிறகு பேசக்கூடாதென்றால், உடனே உறங்கிவிட வேண்டும் என்று பொருள்.  இஷா என்பது நமக்கான நாள் முடிந்துவிட்டது என்பதற்கான வரையறை. நமது அனைத்து வேலைகளையும் அத்தோடு முடித்துவிட்டுஉறங்கிவிட வேண்டும்.
அவ்வாறு உறங்கினால், தஹஜ்ஜத் நேரம் வரை தாராளமாக ஆறு முதல் ஏழு மணிநேர தூக்கம் கிடைக்கும்.  தஹஜ்ஜத்திற்கு எழுவது இலகுவாக இருக்கும்.
மருத்துவ ரீதியாகச் சொல்லப்படும் ஏழு மணி நேரத் தூக்கம்என்பதும் இதன் மூலம் சாத்தியப்பட்டு, அறிவியலும், இஸ்லாமும் எப்போது ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல என்றும் நிரூபணமாகிறது.

சில அறிவியல் ஆய்வுகளும், இரவுத் தூக்கம் எவ்வளவு இன்றியமையாதது என்று வலியுறுத்துகின்றன. உதாரணமாக, இரவு நேரத்தில்தான், நம் உடலின் மிக முக்கியமான மெலடோனின்என்ற ஹார்மோன் சுரக்கின்றது. 

இதைச் சுரக்கும் பீனியல்சுரப்பி, கண்ணோடு இயைந்து செயலாற்றுகிறது. அதாவது கண்ணில் ஒளிபடாவிட்டால் மட்டுமே, இச்சுரப்பி மெலடோனினைச் சுரக்கச் செய்யும். இந்த ஹார்மோன், நம் உடலின் தூக்கம்-விழிப்பு சுழற்சியைக் கட்டுப்படுத்தவும், இரத்த அழுத்தத்தைச் சீராக்கவும் செய்வதோடுபெரும் நோய்களான ஹெச்ஐவி, கேன்ஸர் போன்ற நோய்களும் நம் உடலைத் தாக்காவண்ணம் எதிர்ப்பு சக்தியாகச் செயல்படுகிறது. 

இன்ஸுலின்என்ற இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஹார்மோனும் இரவு தூக்கத்தைப் பொறுத்தே சிறப்பாகச் செயல்படும். போதிய தூக்கமின்மை, தாம்பத்திய வாழ்வையும், குழந்தை பிறப்பையும் கூட பாதிக்கும்.  மறதி அதிகரிப்பதும், விரைவில் உடலில் வயதாகிப் போன தன்மைகள் வருவதும்இதய நோய்சர்க்கரை நோய், எதிலும் மனம் ஒன்றி கவனம் செலுத்த முடியாமை,  ஆகியவையும் தூக்கமின்மையின் பின்விளைவுகளே. 

ஏன், தூக்கமின்மை  அகோரப்பசியை உண்டாக்குவதால், உடற்பருமனுக்கும் காரணமாகிறது.  சுருக்கமாக, தூக்கமின்மை பாதிக்காத செயற்பாடுகளே நம் உடலில் இல்லை எனலாம். அதன் தொடர்ச்சியாக நம் குணத்தில் - எண்ணங்களிலும் பாதிப்பு ஏற்படுத்தும். ஆம், போதிய தூக்கமின்மை உடல் பாதிப்புகளை மட்டுமல்லாது, மன நலப் பாதிப்புகளையும் ஏற்படுத்தவல்லது. 

சமீபகாலமாக, தமிழகத்தில் மிக இளவயதினர் - எந்த நோயுமில்லாதவர்கள்கூட - திடீர் திடீரென மரணிப்பதைக் காண்கிறோம். இவ்வாறான திடீர் மரணத்திற்கும், தூக்கமின்மைக்கும் தொடர்பிருக்க வாய்ப்பிருக்கக் கூடும் என்பதை முழுமையாக மறுக்க முடியாது. 

தனால்தான் அல்லாஹ் தனது திருமறையில்பல இடங்களில்  இரவு தூக்கத்திற்கானது  என்று  மீண்டும் மீண்டும்வலியுறுத்தியுள்ளான்.  இதைக்கூடச் சொல்லித்தான் தெரியவேண்டுமா என்று அன்று அதை வாசிக்கும்போது தோன்றினாலும், இன்று இதன் அத்தியாவசியம் புரிகிறது. இன்றைய சமூகம் புரிய வைத்துள்ளது. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!! 

30:23இன்னும், இரவில்  உங்களுடைய (ஓய்வும்) உறக்கமும்;  பகலில்அவன் அருளிலிருந்து நீங்கள் தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளினின்றும் உள்ளன - செவியுறும் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. 

 [78:9]   மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.   

25:47] அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், நித்திரையை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும், அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான்.

தையெல்லாம் அறியாமல், இன்றைய சமூகம் இரவுத் தூக்கத்தையே விட்டொழிக்கும் நிலைக்கு வந்திருக்கிறது.  செல்ஃபோன், டிவி, லேப்டாப், பார்ட்டி, சினிமா என்று ஏதாவது ஒன்றில் நம் தூக்கத்தைத் தொலைக்கிறோம்.  

வணக்க வழிபாடுகளில் இரவைச் செலவழித்த நபிமார்கள், கலீஃபாக்கள், ஸஹாபாக்கள், இறைநேசர்கள் வழி வந்த நாம் இன்று, வெற்றுக் கேளிக்கைகளில் நம் இரவுகளை - தூக்கத்தைத் தொலைக்கின்றோம்!! இரவுகளில் அதிகமதிகம் வணக்க வழிபாடுகள் செய்தபின்பும்கூட அவசியமான அளவு தூங்கி, உடலையும் மனதையும் பாதுகாத்துப் போஷித்த நம் முன்னோர்கள் எங்கே?

இரவுத் தொழுகை என்ற ஒன்றே இல்லாமல், இரவுகளில்  விழித்து  வீண் காரியங்களில் ஈடுபட்டு உடலையும் மனதையும் சீர்கெடுத்துப் பாழாக்கிக் கொண்டிருக்கும் நம் தலைமுறை எங்கே?

சமரசம் 16-30 ஏப்ரல் 2018 இதழில் வெளியான கட்டுரை.

Post Comment

டூ பை த்ரீ - டீயில் மட்டுமில்லை, உணவிலும் வேண்டும்!!




 சமரசம் 1-15 ஜுலை 2012 இதழில் (பக்கம் 36) வெளியான எனது கட்டுரை

அழிவுப் பாதையில் சமுதாயம்!!

ட்புரீதியான விருந்தொன்றிற்கு அழைப்பு வந்திருந்தது. சென்றேன். பிரமித்து விட்டேன். எத்தனைவிதமான பதார்த்தங்கள்!! எவ்வளவுதான் சாப்பிடுவது? ’ஒரு சாண்’ வயிறுதானே, அதுவும் எவ்வளவுதான் தாங்கும்.

மீதமாகும் உணவுகள் வேறு யாருக்கும் வழங்கப்பட வாய்ப்பில்லை, வீணாகத்தான் போகும் என்று பேச்சிலிருந்து அறிந்துகொண்டதில் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. அதற்காக என் வயிற்றையா எலாஸ்டிக் பை போல விரித்து அத்தனையையும் கொட்டிக்கொள்ள முடியும்? என்னால் முடிந்தவரை, வழக்கமான அளவுக்குமேலேயே சாப்பிட்டு விட்டேன். என் எண்ணமெல்லாம் மீதமான வீணாக்கப்பட்ட உணவின்மீதே சுற்றி வந்ததில், பேச்சில் கவனம் இல்லாமல் போனது. இத்தனைக்கும், சந்தித்த நண்பர்கள், விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தவர் என எல்லாருமே முஸ்லிம்கள்தான்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  (புஹாரி 5392,Volume :6 Book :70)

இருவருக்குப் போதுமான உணவைக் கொண்டு மூவரைப் பகிர்ந்து உண்ணச் சொல்லும் இஸ்லாம் மார்க்கத்தில் இருந்துகொண்டுதானா நாம் இவ்வாறு உணவை வீணடிக்கிறோம்?

உணவு, உடை, உடைமைகள் என்று எல்லாவற்றிலும் சிக்கனம் தேவை என்பது குறித்து இஸ்லாம் சொல்லியிருப்பது - ஏன் கடுமையாகக் கண்டித்தேயிருப்பதை -  அறியாதவர்களாகவா இருக்கிறோம்? வீணாக்குமளவுக்கு செல்வம் மிதமிஞ்சிப் போய்விட்டதா அல்லது மறுமையைக் குறித்த அலட்சியம் மிகைத்துவிட்டதா? இஸ்லாமே தெரியாதவராயினும், நம்மைச் சுற்றி நிகழ்பவைகளை அறியாமலா இருக்கிறோம்?

விருந்தோம்பல் என்பதன் அர்த்தமே மாறிவிட்டது இன்று. வீட்டுக்கு வருபவர்களுக்கு நம்மால் முடிந்தவற்றை, நமக்கென சமைப்பதில், சிறிது கூடுதலாகச் சமைத்து, உடனிருத்தி அன்போடு பரிமாறுவதுதான் விருந்தோம்பலாக இருந்துவந்தது. ஆனால், புதிய புதிய பதார்த்தங்களைக் கண்டுபிடித்து, அளவுக்கதிகமாகச் சமைத்து வைப்பதே விருந்தின் இயல்பாகிவிட்டது.  ‘பசித்தவருக்கு உணவளிப்பது’ என்றில்லாமல், பெண்களுக்குத் தம் சமையல் திறமையை வெளிக்காட்டவும், ஆண்களுக்குத் தம் செல்வச் சிறப்பை விளம்பரம் செய்யவும்தான் விருந்து என்றாகிவிட்டது. 

”இன்னும், எவர்கள் மற்ற மனிதர்களுக்குக் காட்டுவதற்காகத் தங்கள் பொருட்களைச் செலவு செய்வதுடன், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான் கூட்டாளியாவான்)”  4:38

சாதாரண விருந்துகளில் மட்டுமல்ல, கல்யாண விருந்துகளிலும்கூட இப்படித்தான் உணவு வீணடிக்கப்படுகிறது. விதவிதமான உணவு வகைகள், உண்பவரின் கொள்ளவுக்கு மேலாகத் திணிக்கப்படுகிறது.  உணவுத் தட்டில் ஒரு பருக்கைகூட மீதி வைக்காமல், கைவிரல்களிலிருக்கும் உணவுத்துகள்களையும் வீணாக்காமல் உண்ணச் சொலவது இஸ்லாம். ஆனால்,  உண்டதுபோக இன்றைய ”நாகரீகம்” கருதி மீதம் வைக்கப்பட்ட உணவோடே இலை குப்பையில் எறியப்படுகிறது. 

”உங்களில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒரு துண்டு உணவுப் பொருள் கீழே விழுந்து விட்டால் அதில் அசுத்தம் ஏதும் பட்டிருந்தால் அதை நீக்கி விட்டு சாப்பிடட்டும். அதை ஷைத்தானுக்கு விட்டு விட வேண்டாம்” என்று  அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நகர்களில், திருமணங்களில் மிஞ்சும் உணவை, அக்கம்பக்கம் உள்ள எளியவர்களுக்கோ அல்லது ஆதரவற்றோர் இல்லங்களுக்கோ விநியோகம் செய்யப்படுவதைவிட, அக்குடும்பத்தினரின் வசதியான உறவுகளுக்கும், சம்பந்திகளுக்கும் கொடுப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படும். இப்படித்தான் இருக்கிறது தமிழக முஸ்லிம்கள் மனப்போக்கு.

மேலும் முன்காலங்களில், கல்யாண விருந்து என்றால், சீமான்-எளியவர் பேதமில்லாமல் ஊருக்கேற்றவாறு ஒரே ‘மெனு’தான் இருந்துவந்தது. ஆனால், வசதிகள் பெருகப் பெருக, கல்யாண விருந்துகளில் விளம்பப்படும் பதார்த்தங்களின் எண்ணிக்கை பிரமிக்க வைக்கிறது. ஏன், சில கல்யாண விருந்துகளில், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களைப் போல பஃபே சிஸ்டமே வைக்கிறார்கள்!! சமூகத்திற்கு உதாரணமாக இருக்கவேண்டிய செல்வந்தர்கள் படோடோபம் செய்வதைப் பார்த்து, வசதியில்லாதவர்களும் விட்டில்பூச்சிகளாகின்றனர்.

கல்யாணத்திற்கு மட்டுமா விருந்து. இன்று இஸ்லாமிய சமுதாயத்தில், நின்றால் விருந்து, நடந்தால் விருந்து, இருந்தால் விருந்து, வந்தால் விருந்து, போனால் விருந்து என்று எதற்கெடுத்தாலும் - உண்பதற்காகவே படைக்கப்பட்ட சமுதாயமாகி வருகிறோமோ என்று ஐயப்படுமளவுக்கு என்றென்றும் விருந்துமயம்தான்!!

விருந்துகளில் மட்டுமா, பெரும்பாலான இஸ்லாமிய இல்லங்களின் உணவுப் பழக்கங்களை அவதானித்தால், நாம் வாழ்வதற்காக உண்கிறோமா (Eat to live), அல்லது உண்பதற்காகவே உயிர் வாழ்கிறோமா (Live to Eat) என்ற சந்தேகம்தான் வரும்.  இறைவன் நமக்கு அசைவமும் சாப்பிட அனுமதியளித்திருக்கிறான். ஆனால், ஏதோ அசைவம் மட்டுமே சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டதுபோல, தினமும் கறி, கோழி, மீன், முட்டை,மாசி அட அட்லீஸ்ட் கருவாடாவது இருந்தால்தான் உணவு தொண்டைக்குழிக்குள் இறங்கும் என்று சொல்லும்படியல்லவா நிலைமை மாறிவிட்டது!!

பருப்புன்னா வெறுப்பு
ரசம்னா விசம்
சட்னின்னா பட்டினி
பொறியல்னா மறியல்
கறின்னாதான் சரி

கேட்க வேடிக்கையாக இருந்தாலும்,  இன்று இதுதான் வாடிக்கையாக இருக்கிறது. காய்கறிகளும் நமக்கு  அனுமதிக்கப்பட்டவையே என்பதை மறந்துவிட்டோமா அல்லது மட்டன் குழம்பு வைக்கத் தேவையான வெங்காயம், தக்காளி, இஞ்சிபூண்டு, தேங்காய் ஆகியவற்றோடு நம் காய்கறி வட்டத்தைச் சுருக்கிக் கொண்டோமா?

பொய்யாகச் சொல்லவில்லை. உங்களுக்கு எத்தனை காய்கறிகள் தெரியும் என்று சொல்லிப் பாருங்கள். ஐந்து, ஆறு... பலருக்குப் பத்து தாண்டாது நிச்சயம். ஒவ்வொரு காயிலும் ஒவ்வொரு நன்மை உள்ளது. ஆனால், சர்க்கரை நோய் வரும்வரை பாகற்காய் யார் கண்ணிலும் படுவதில்லை; சிறுநீரகக் கல் வரும்வரை வாழைத் தண்டு, வாழைப்பூ ஆகியவை இன்னதென்று தெரிவதுமில்லை. மூலநோய் வரும்வரை கீரைகள் ஆடுமாடுகளின் உணவு என்ற எண்ணத்திலே இருக்கிறோம்!!

அசைவம் சாப்பிடுகிறோமே, அதையாவது முறையாகச் சமைத்துச் சாப்பிடுகிறோமா என்றால் அதுவும் இல்லை!! மட்டன், கோழி எதுவானாலும் அவற்றில் இயற்கையாகவே உள்ள கொழுப்போடு  (நீக்கினால் ருசி போய்விடுமாம்) சேர்த்தே,  எண்ணெய், நெய், தேங்காய், முந்திரி என அபரிமிதமான கொழுப்புகளைக் கலந்து உண்கிறோம். மீன்  நல்ல சத்துக்கள் மிகுந்த உணவுதான். ஆனால் உண்பது எவ்வாறு? மசாலாக்கள் கலந்து தேங்காயில் மிதக்கவிட்டு   குழம்பாக அல்லது எண்ணெயில் மூழ்கடித்துப் பொறித்து உண்ணும்போது அதிலிருக்கும் சத்து செத்துதான் போகும்.

முன்காலத்தில் வயதானவர்களை மட்டுமே தாக்கும் நோயாக இருந்த உயர் இரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும், இன்று உலக சுகாதார மையமே வேகமாகப் பரவிவரும் நோய்களாகக் குறிப்பிடுமளவுக்கு, இளம்வயதினரிடையேயும் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரகக் கோளாறுகள், வாதம், இதயக் கோளாறுகள் வருவது சாதாரணமாக ஆகிவிட்டது. ஏற்கனவே உலகமயமாக்கல், விலைவாசி, கலாச்சாரச் சீரழிவு, வேலைப்பளு என்று மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு, உணவும் தகுந்தபடி இல்லாதுபோனால் உடல்நலம் பாதிக்கப்படுவது இயல்பே.  மற்றவை நம் கட்டுப்பாட்டில் இல்லையெனும்போது, நம் கட்டுப்பாட்டு எல்லையில் உள்ள உணவிலாவது நாம் பேணுதலோடு நடக்க வேண்டாமா?

“உணவே மருந்து; மருந்தே உணவு” என்ற பழஞ்சொல்லில்தான் எவ்வளவு உண்மை உள்ளது? நம் அன்றாட உணவை உடலுக்கான மருந்தாக நினைத்து, நல்ல உணவு வகைகளை, அவசியமான அளவு மட்டும் உண்டு வந்தால் உடல்நலம் சிறப்பாக இருக்கும். அதுவே, தேவைக்கு  மிஞ்சி ஆசைக்காக உண்ணுவதை வழக்கமாக்கிக் கொண்டால், உடல்நலம் சீர்கெட்டு, பின்னர் அதற்கான மருந்துகளே நம் உணவாகிவிட நேரிடும்.

அரபுநாடுகளில் அசைவம்தான் பெரிதும் உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. ஆனால், அரபிகளிடையே வாதம், இதய நோய், கொழுப்பு, இரத்த அழுத்தம் போன்ற விளைவுகள் நம் நாட்டைவிட மிகக் குறைவு. ஏன்? அவர்களின் உணவு முறையில் இதுபோன்ற அதிகப்படி மசாலா, எண்ணெய், நெய், தேங்காய் எதுவும் சேர்க்கப்படுவதில்லை என்பதும் ஒரு முக்கியக் காரணம். மேலும் மாமிசத்தைப் பொறிப்பதைவிட, தீயில் சுட்டோ, அவித்தோதான் உண்பர்.

மைதா என்றொரு உணவுப்பொருளின் தீமைகளை அறிவோமா நாம்?  கோதுமைமாவு தயாரிக்கும்போது கிடைக்கும், எந்தச் சத்துமில்லாத ஒரு சக்கையான இறுதிப் பொருள்தான் அது.  உடல் பருமனுக்கும், பல்வித நோய்களுக்கும் காரணமான அதை வெண்மையாக்குவதற்காகச் சேர்க்கப்படுகின்ற வேதிப்பொருள் ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யபட்டது. ஆனால் அந்த மைதாதான் நம் இல்லங்களில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. பரோட்டா, முர்தபா, ஜாலர் அப்பம், பெட்டி பணியாரம், டோப்பிடஹான், பூரியான், கோழியாப்பம், பின்னல் பணியாரம், சொக்காப்பூ உள்ளிட்ட எண்ணிலடங்கா பலகாரங்கள் இதைக்கொண்டே செய்யப்படுவது முஸ்லிம்கள் தம் உடல்நலத்தைக் காட்டிலும் ருசிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தையே காட்டுகிறது.

இதில் சந்தேகம் இருந்தால், இன்று நல்ல நிலைமையில் உள்ள முஸ்லிம்களைக் கவனித்துப் பாருங்கள். அதில் எத்தனை பேர் தொப்பையில்லாமல் இருக்கிறார்கள்? ஆண், பெண் வித்தியாசமின்றி உடல் பருமனும், தொப்பையும், அதன் பக்கவிளைவுகளான பல நோய்களும் தாக்காத மக்களை விரல்விட்டு எண்ணிவிடும் அளவில்தான் உள்ளனர். ஏனிந்த நிலை? இப்படியே போனால், முஸ்லிம்களின் அடையாளமாகக் கருதப்படும் தாடி, தொப்பி ஆகிவற்றோடு, இனிவருங்காலங்களில் தொப்பையும் இடம்பிடித்துவிடும்போல!!

மனம், நாவு அடக்குதல் என்பது மற்றெல்லோரையும்விட, நோன்பு எனும் அருட்கொடையுடைய முஸ்லிம்களுக்கல்லவா எளிதானதாக இருக்க வேண்டும்? ஆனால், நாம்தான் உணவைப் பிரதானப்படுத்துபவர்களாக இருக்கிறோம். அதிலும் நோன்பு காலங்களில்தான் அளவுகடந்து உணவு வீணாக்கப்படுவதும் நடக்கிறது. 

முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார் இறக்கும்வரை, கோதுமை ரொட்டியை தொடர்ந்து  மூன்று நாட்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை. (சஹீஹ் முஸ்லிம் 5682; அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி))

நபிவழியில் நடக்கவேண்டுமென்று பட்டினி கிடக்கவேண்டிய அவசியமில்லை. தொழுகைக்கு நேரமானாலும், உணவு தயாராக இருப்பின், உணவை முதலில் உண்ணச் சொல்லித் தந்தார்கள் நபி பெருமானார்(ஸல்) அவர்கள். அத்தகைய முக்கியத்துவம் கொண்டது பசி தீர்ப்பது. அப்பேர்ப்பட்ட உணவை எப்படி உண்ணுவது என்றும் நாயகம் (ஸல்) அவர்கள் படிப்பித்துள்ளார்கள்.

”நீங்கள் உண்ணும்போது மூன்றில் ஒரு பகுதி உணவும், மூன்றில் ஒரு பகுதி தண்ணீரும், மீதமுள்ள பகுதியை (மூச்சு விடுவதற்காக) காலியாகவும் விட்டு வையுங்கள்”

இல்லறம், உணவு, உடை, உலக வாழ்வு என்று எதிலானாலும், இஸ்லாம் துறவறத்தை அனுமதிக்கவில்லை. எதிலுமே அளவோடு இருக்கும்படிதான் அறிவுறுத்துகிறது என்பதற்கு மேற்சொன்ன நபிமொழி இன்னொரு சாட்சி. அவசியத்திற்கு மட்டுமே உண்டு, அதையும் பகிர்ந்து உண்ணுவதன் மூலம் இறைவனின் அருளையும், ரிஸ்க் விஸ்தீரணமும் ஒருங்கே பெற்று வளமோடு வாழவே இஸ்லாம் சொல்லித் தருகிறது.

வீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அல்லாஹ் வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (6:141)

உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.  (7:31)


உலகின் ஒரு பக்கம் பட்டினிச் சாவுகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், நாம் அளவுக்கு மிஞ்சி உணவின்மீது ஆர்வம் கொண்டு வீண் செலவுகள் செய்வது, இறைவன் நமக்களித்துள்ள அருட்கொடைகளை அவமதிப்பதாகாதா? இறைவன் வீண் விரையம் செய்பவர்களை நேசிப்பதில்லை என்ற இறைவாக்கு நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை மணி. 

Post Comment

ஜீவனாம்சம்




மீபத்தில் விவாகரத்தான ஒரு நண்பரையும், அவரது தாயாரையும் சந்திக்க நேர்ந்தது. நண்பர் மிகவும் வாடிப் போய் இருக்க, தாயாரோ புலம்பித் தள்ளி விட்டார்கள். விஷயம் இதுதான்: தலாக் சொல்லியபோது, இரு குடும்பத்தார்களுக்கும் பொதுவாகப் பேசி காரியங்களைச் சுமுகமாக்கி வைத்த ஊர் ஜமாத்தார்கள் பெண் தரப்பிற்கு அதிக நஷ்ட ஈட்டை வாங்கித் தந்துவிட்டார்களாம். “எனது இத்தனை வருடகால உழைப்பும் இதற்கே சரியாகிவிட்டது. இனி எல்லாவற்றையும் புதிதாகத் தொடங்க வேண்டும்” என்று வருந்தினார் நண்பர். பரிதாபமாக இருந்தது.

”இஸ்லாத்தில் இந்த நஷ்ட ஈடு, ஜீவனாம்சம் எதுவும் கிடையாது. ஆனா, பொம்பளைன்னா இரக்கம் காட்டணும்னு சொல்லிகிட்டு இஸ்லாத்துக்கு மாறா நடக்குறாங்கம்மா… உன்னை மாதிரி பெண்ணுரிமை பேசுற ஆட்கள் இதையும் சரின்னு சொல்வீங்களே…” என்று என்னையும் தாக்கினார்!!

அவரிடம் ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன், “விவாகரத்து இஸ்லாமிய முறைப்படி நடக்கலை, சரி. கல்யாணம் இஸ்லாமிய முறைப்படிதான் நடத்துனீங்களா?”

ஸ்லாம் அதிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட்ட இந்த காலகட்டத்திலும், திருமணம் என்பது இன்னும் பெண் வீட்டாருக்கு ஒரு பொருளாதாரச் சுமையாகவே இருக்கிறது.

மகளுக்கு நகைகள், பட்டாடைகள், பாத்திர பண்டங்கள், கட்டில், பீரோ மற்றும் வாஷிங் மெஷின் – ஃப்ரிட்ஜ் போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்கள், மாப்பிளைக்கு பைக்-வாட்ச்-செயின், மாமியார் நாத்தனார்களுக்கும் நகைகள் இவைபோக, மப்பிள்ளை வீட்டார் போக்குவரவு – தங்குவதற்கான செலவுகள், திருமண மண்டபச் செலவுகள், பல வித விருந்து செலவுகள், சீர்கள் என்று மூச்சு முட்ட வைக்கும் அளவுக்கு செலவுகள் திருமணத்தின்போது!!

இத்தோடு முடிந்ததா? வருடா வருடம் நோன்புச் சீர், பெருநாள் சீர்கள்; தவிர குழந்தைகள் பிறந்தால் மருத்துவச் செலவும் பெண்வீட்டாருடையதே. பிறந்த குழந்தைக்கு நகைகள், விருந்துகள், இன்ன பிற செலவுகள்.

இங்கு சொல்லியிருப்பவையெல்லாம் குறைந்த பட்சம்தான். ஊருக்கு ஊர் வசதிக்கேற்றவாறு இன்னும் கூடுதலாகவே உண்டு.

ப்படி, ஒரு மகளுக்கே தந்தை தன் வாழ்நாள் சேமிப்பைக் கரைக்க வேண்டியிருக்கிறது!! இதில் ஒன்றுக்கு மேற்பட்ட மகள்கள் இருந்தால், தந்தையின் நிலை பரிதாபம்தான்!!

இதுவா இஸ்லாம் சொல்லும் திருமண முறை? கேட்டால் மாப்பிளை தரப்பில் சொல்லுவார்கள், “நாங்களும்தான் மஹர் நகை போடுறோம். வலீமா விருந்து வைக்கிறோம்”. சிரிப்பு வருகிறதா, சிரித்து விடுங்கள்.

3 முதல் 10 பவுன் நகையை மஹர் என்ற பெயரில் போடுகிறார்கள். அந்த நகை கணவன் அல்லது அவர் வீட்டார் சுய விருப்பத்தின் பேரில் மனைவிக்கு அளிப்பது. மஹர் என்றால் என்ன? பெண்ணின் விருப்பத்திற்கு ஏற்ப நகையோ, பணமோ, அல்லது அவள் கேட்கும் பொருட்கள் வடிவில் கொடுப்பதுதான் மஹர். இவர்களாகவே ஒரு அளவை நிர்ணயம் செய்து கொடுப்பது மஹராகுமா? அல்லது பெண் விருப்பத்தைக் கேட்டுச் செய்யும் நிலைதான் இங்கு நிலவுகிறதா என்ன?

திருமணத்தன்று, மணமகளின் தந்தை செலவில் இரு தரப்பிலுமாக குறைந்த பட்சம் ஆயிரம் ரெண்டாயிரம் பேர்கள் விருந்துண்டபின், மணமகன் தன் தரப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறவினர்களுக்கும், மணமகள் வீட்டைச் சேர்ந்தவர்களுக்கும் மட்டுமே கொடுக்கப்படும் சிறிய அளவிலான விருந்தை வலீமா என்று சொல்லிக் கொள்கிறார்கள்!!

ரபுநாடுகளில், அரசுகள் ஆணின் திருமண செலவுக்கு நிதியுதவி செய்வதற்கென மையங்கள் வைத்து இருக்கின்றன. நம் நாட்டிலோ, அரசுகள் மதபேதமின்றி பெண்ணின் தாலிக்கு தங்கமும், சீருக்கு பணமும் தருகின்றன. வங்கிகளும் “மகள்களின் திருமணத்திற்கு” என பல திட்டங்கள் வைத்திருக்கின்றன!!

இப்படி சேமிப்பு அனைத்தையும் கரைத்து, கடனுக்கு மேல் கடனும் வாங்கி திருமணம் செய்து வைத்த மகள், ஒருவேளை மணவாழ்க்கை தோல்வியுற்று திரும்பி வந்தால், பின்னர் அவள் நிலை என்ன? அவளும் அவள் குழந்தைகளும் தந்தை வீட்டில் அடைக்கலமாகின்றனர். அவளுக்கு அடுத்து ஒரு திருமணம் என்பதெல்லாம் நம் நாட்டில் கனவுதான்.

விவாகரத்தான அல்லது விதவையான பெண் குறித்து இஸ்லாம் சொல்வதென்ன? “தலாக் என்றால், கொடுக்கப்பட்ட மஹர் திரும்பி வாங்கப்படக்கூடாது. குழந்தைகளின் (இருப்பின்) எல்லாவித செலவும் அக்குழந்தைகளின் தந்தையுடையதே”.

துணையை இழந்தாலும், பிரிந்தாலும், அவர்கள் உரிய காலத்தில் உடன் மறுமணம் செய்துகொள்ளுதல் வேண்டும். இது ஆண், பெண் இருவருக்குமான பொதுவிதி. இதற்கு வயது ஒரு தடையே கிடையாது. “திருமணம் ஈமானில் பாதி” என்ற ஹதீஸ் முதல் திருமணத்திற்கானது மட்டுமல்ல. முஸ்லிம் ஆணும், பெண்ணும் இறுதி வரை ஒரு திருமண பந்தத்தில் இருக்க வேண்டும். அதுதான் இஸ்லாமிய கட்டளை.

தனால்தான் விவாகரத்தான பெண்ணுக்கு ஜீவனாம்சம் என்பது இஸ்லாத்தில் கிடையாது. தன்னை வேண்டாமென்று ஒதுக்கிவிட்ட ஒருவனின் பணத்தை எதிர்பார்த்து வாழும் அவலநிலையை விட்டும் பெண் பாதுகாக்கப்பட்டு, அதே சமயம், எந்நாளும் ஒரு குடும்பத்தின் தலைவியாக இருக்கும் உயர்வு கொடுக்கப்பட்டுள்ளாள். ஆனால், இங்கு நடப்பது என்ன? ஒரு முறை திருமண பந்தத்திலிருந்து விலகிவிட்டால், அந்தப் பெண்ணுக்கு அடுத்த திருமணம் என்பது எந்தளவு சாத்தியம் என்பதை யாரும் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.
அதுவும் குழந்தைகள் உடைய பெண் என்றால், கேட்கவே வேண்டாம். 
 
குழந்தைகள் தாயின் மறுமணம் வரை மட்டுமே தாயுடன் இருக்க வேண்டும், மறுமணம் செய்யாத பட்சத்தில் 7 வயது வரை இருக்கலாம். அதன் பின், குழந்தைகளின் விருப்பம் மற்றும் நலனைப் பொறுத்து தாயுடனோ தந்தையுடனோ இருக்க வேண்டும்; எனினும் தந்தையுடன் இருப்பதே வலியுறுத்தப்படுகிறது. இதுதான் இஸ்லாமிய சட்டம்.

இங்கோ குழந்தைகள் இருந்தால், அப்பெண் தன் சுகதுக்கங்களை மறந்து, அக்குழந்தைகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு வாழ்க்கையைத் தனியாகவே எதிர்கொள்ள வேண்டும் என்பதே நடைமுறையாகிவிட்டது. தாய் என்றால் தியாகத்தின் திருவுரு என்று சொல்லிச் சொல்லியே, பெண்ணாக அவளின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

ஸ்லாமிய சட்டப்படி, விவாகரத்து பெற்ற பெண், மறுமணம் வரை தந்தை அல்லது சகோதரர்கள் பொறுப்பில் ஆகிறாள். அவளோடு, அவளின் குழந்தைகளுக்கும் அவர்கள் செலவு செய்யும் நிர்பந்தம் ஏற்படுகிறது. அவளின் முதல் திருமணத்திற்கென செய்த செலவுகளே பெரும் கடனாகி நிற்கும் நிலையில், இப்போதும் நிரந்தரமாக அவளைப் பராமரிக்கும் நிலை ஏற்படுத்திய பொருளாதாரச் சுமையின் காரணமாக, அவளை வெறுப்புடன் நடத்தும் நிலை ஏற்பட்டு விடுகிறது. பல குடும்பங்களில் சம்பளமில்லா வேலைக்காரி நிலை என்றால், சில இடங்களில் கழிவிரக்கம் காரணமாக அதிகாரம் செலுத்தும் நாத்தனாராக!!

இஸ்லாம் பெண்களுக்கு ஏற்றம் தருகிறது என்று சொல்லிக் கொண்டு மட்டும் இருக்கிறோம். ஆனால் நடைமுறையில், இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று மக்களைச் சொல்ல வைத்தது இஸ்லாத்திற்கு மாற்றமான நமது செயல்பாடுகளே!!

லீஃபா அபூபக்கர் அவர்களின் மனைவிகளில் ஒருவரான அஸ்மா பின்த் உமைஸ் என்பவர். இவர் 15 வருடங்களுக்கு மேல் ஜாஃபர் இப்னு அபூதாலீப் அவர்களின் மனைவியாக இருந்து, அவரின் மரணத்திற்குப் பின் அபூபக்கர்(ரலி) அவர்களை மணந்தார். சுமார் ஐந்து வருடங்களுக்குப் பின் அவர் மரணித்தபின், அலீ இப்னு அபூதாலிப்(ரலி) அவர்களை மணந்தார்.

நபி(ஸல்) அவர்களின் முதல் திருமணமானது, கதீஜா(ரலி) அவர்களுக்கு மூன்றாவது திருமணம்!!

ஜாஹிலியா (அறியாமை) காலத்திற்கெல்லாம் போக வேண்டாம், இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன் தவ்ஹீது அறியாத தர்ஹா காலத்தில்கூட, நம் பாட்டிகளுக்கெல்லாம் மறுமணங்கள் வெகுஇயல்பாக நடந்தது கண்டிருக்கிறோம்.

ஆனால், இன்று பலப்பல முன்னேற்றங்களைக் கண்ட, இஸ்லாமிய கொள்கைகள் சிறப்பாகப் புரியப்பட்டுள்ள இக்காலத்தில் பெண்ணுக்கு மறுமணம் என்பது குதிரைக் கொம்பாக ஆகிவிட்டது!!

ரு பெண்ணுக்கு வாழ்நாளில் ஒரு திருமணம் மட்டுமே என்றாகிவிட்ட நிலையில், அதுவுமே முடிவுக்கு வருமானால், தனியே கடந்தாக வேண்டிய அவளது மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை உத்தேசித்துதான் ஜமாத்தார்கள் நஷ்ட ஈடு, அதுவும் அவளது பெற்றோர் செலவு செய்த தொகைக்கு ஈடாகவே மீட்டுத் தருகிறார்கள்.

இதில் கணவனின் குடும்பத்தினர், செட்டில்மெண்டாக தாம் முன்னர் பெற்ற சீர்ப் பொருட்களையும் திருப்பிக் கொடுக்கின்றனர். பயன்படுத்தப்பட்ட கட்டில், மெத்தை, பாத்திர பண்டங்கள் எல்லாவற்றையும் திருப்பிக் கொடுப்பது, அப்பெண் அவற்றைத் தினமும் கண்முன் வைத்து கடந்த காலத்தை மறந்துவிடாமல் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கவா??

எப்போதுமே விளைவுகளைப் பற்றி மட்டுமே பேசப்படும் இவ்வுலகில், மூலகாரணங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதே இல்லை. அதுபோலத்தான் இங்கும், விவாகரத்தில் இஸ்லாம் பேணப்படுவதில்லை என்று கொதித்தெழும் நாம், திருமணத்தில் – திருமண வாழ்வில் இஸ்லாம் எள்ளளவும் பேணப்படுவதில்லை என்ற மூல காரணத்தைப் புறந்தள்ளிவிடுகிறோம்.

இதற்கு திருமண இருதரப்பு வீட்டாரோடு, திருமணத்தை நடத்தி வைக்கும் ஜமாத்தாரும் காரணம்தான். ஆனால், மணமகன் வீட்டார்தான் முதல் முயற்சி எடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ளனர்.

பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதில் காட்டும் தீவிரத்தை, ஏற்கனவே நமக்கிருக்கும் தனியார் சட்ட உரிமைகளை முறையாகப் பயன்படுத்துவதிலும் காட்ட வேண்டும். திருமண விஷயங்களில் முஸ்லிம் சட்டம் என்பது பலதார மணத்திற்கும், விவாகரத்தில் ஜீவனாம்சம் கொடுக்க மறுப்பதற்கும் மட்டுமல்ல; திருமணம் என்பது பெண் வீட்டினருக்கு சற்றுகூட சுமையாக இல்லாமலும் இருப்பதும்தான் முஸ்லிம் சட்டம். பெண்ணுக்கு மறுமணம் என்பதும் இலகுவாக்கப்பட வேண்டும்.

இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த சமுதாய, இயக்க, ஜமாத் தலைவர்கள் முழுமுயற்சி எடுக்க வேண்டும். நமக்களிக்கப்பட்ட இஸ்லாமியச் சட்டத்தைக் கொண்டு நம் சமுதாயத்தில் பெண்கள் நிலையை மேம்படுத்தி, முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அதைக் கொண்டு இஸ்லாத்தின் மேன்மையை எடுத்து சொல்லவேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது.

ஒரு மகளின் திருமணச் செலவுகள், பெற்ற தந்தையின் வாழ்நாள் சேமிப்பையே மொத்தமாகக் காலி செய்யும் நிலை மாறாதவரை, விவாகரத்து என்பதும் கணவனின் ஒருசில ஆண்டுகால சேமிப்பை உறிஞ்சுவதாகத்தான் இருக்கும்.

என்றைக்கு திருமணங்கள் முழுமையாக இஸ்லாமிய முறைப்படி நடக்கின்றனவோ அப்போதுதான், அக்காலத்தில் நடக்கும் மிகச் சொற்ப விவாகரத்துகளும் இஸ்லாமிய முறைப்படி நடக்கும்!!


இஸ்லாமிய மாதமிருமுறை இதழான ”சமரசம்” 2015 டிசம்பர் 16-31 பதிப்பில் வெளிவந்தது.

Post Comment

இளம்பிறைகள்




ல்லூரியின் வெள்ளி விழா ஆண்டை ஒட்டி, “முன்னாள் மாணவர்” (alumni) விழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பல ஊர்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும், நாடுகளிலிருந்தும் உயர் அலுவலர்கள், நிறுவன அதிபர்கள், பேராசியர்களாக இந்நாளில் இருக்கும் முன்னாள் மாணவர்கள்வந்திருந்தனர். அனைவரின் பேச்சும் ஒரே விஷயத்தையே பிரதிபலித்தன, “மாணவப் பருவம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கட்டுப்பாடுகள் ஏதுமின்றி, சுதந்திரமாக இருந்தோம். நிறைய அனுபவித்தோம். இன்றைய வாழ்க்கை அதில் நூற்றில் ஒரு பங்குகூட மகிழ்ச்சியாக இல்லைஎன்பதே!!

ள்ளியிறுதியில் படிக்கும் உங்கள் மகனுக்கு இந்த கோடை விடுமுறையில் ஏதேனும்  நிறுவனத்தில் பகுதி நேர வேலை ஏற்பாடு செய்து கொடுத்தால், நேரம் பயனுள்ளதாகக் கழிவதோடு, வாழ்க்கைக்கும் பயனளிக்குமே?” என்று கேட்ட தன் நண்பரிடம், “அதெல்லாம் வேண்டாங்க. இந்த வயசுலதான் அவன் ஃப்ரீயா ஜாலியா எஞ்சாய் பண்ண முடியும். படிச்சு முடிச்சு வேலைக்கு போக ஆரம்பிச்சான்னா, அப்புறம் ரிடையர் ஆனால் கூட, ஓய்விருக்காது. இப்பவே அவனைக் கஷ்டப்பட வைக்கணுமா?” என்று பதிலளித்தார் அவர்.

ம்மா, உனக்கு உடம்பு சரியில்லாத சமயத்திலாவது உனக்கு உதவுற மாதிரி மகளை கொஞ்சம் சமையல் பழக்கக் கூடாதா? ஒரே மகள்னு ரொம்பத்தான் செல்லம் கொடுக்கிற…” என்று கண்டித்த கணவனிடம், “சும்மா இருங்ககல்யாணமாகிற வரைக்கும்தானே அவ ஜாலியா இருக்க முடியும். அதுக்கப்புறம் எங்க ஓய்வு கிடைக்கும்? நாளை மாமியார், நாத்தனார்னு எத்தனை பிக்கல் பிடுங்கல்களைச் சமாளிக்கணுமோவாழ்க்கையை அவ இப்ப அனுபவிச்சாத்தான் உண்டு.” என்றாள் அம்மா.

வாழ்க்கையை அனுபவிப்பது”, “ஃபிரீயா இருப்பது”, “ஜாலியா சுற்றுவது”இளைஞர்களின் விருப்பம்  என்னவென்று கேட்டால் அவர்கள் அனைவரின் பதிலும் சந்தேகமேயின்றி இதுவாகத்தான் இருக்கும். அவர்கள் மீது தவறில்லை, இன்றைய உலகில் அவர்கள் காணும் மக்கள், சமூகம், நிறுவனங்கள், அரசாங்கம்  என்று எல்லாமே பணம் மற்றும் பணத்தின் மூலம் வரும் மகிழ்ச்சி ஆகியவற்றையே இலக்காகக் கொண்டு செயல்படும்போது, அதைக் கண்ணுற்று வளரும் இளைய சமுதாயம் இதற்கு விதிவிலக்காகி விடுமா?

ஆனால், பொறுப்புகளேதுமின்றி மகிழ்ச்சியாகக் கழிப்பதற்காகவா இளமைக்காலம்?  உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை6:32.என்று அல்லாஹுத் ஆலா சொல்வதை அதன் சொல்லுக்குச் சொல்லானநேரடிஅர்த்தத்தில் எடுத்துக்  கொண்டார்கள் போல!!  இஸ்லாத்தின் கட்டாயக் கடமையான தொழுகையை, இறைவன் ஏழு வயது முதலே கடைபிடிக்கச் சொல்கிறான் எனும்போது, பதின்மவயதில் விளையாட்டாக இருப்பதை இஸ்லாம் அனுமதிக்குமா?

வாழ்க்கையை மூன்று பகுதிகளாக இறைவேதம் பிரிக்கிறது: அல்லாஹ் தான் உங்களை (ஆரம்பத்தில்) பலஹீனமான நிலையில் படைக்கிறான்; பலஹீனத்திற்குப் பின்னர், அவனே பலத்தை(யும் உங்களுக்கு)உண்டாக்குகிறான்; (அந்தப்) பலத்திற்குப் பின், பஹீனத்தையும் நரையையும் அவனே உண்டாக்குகிறான்; (30:54. ) இதில், நடுப்பருவமான இளமைப் பருவத்தை மட்டுமே பலமுள்ளதாகச் சிறப்பித்துக் கூறுகிறான். எனில், அந்தப் பருவம் எத்தனை முக்கியமானதாக எடுத்துக் கொள்ளப் படவேண்டும் என்பதை நாம் உணரமறுப்பதேன்?

குழந்தைப் பருவம் என்பது பலமற்றது, பலரைச் சார்ந்திருக்க வேண்டியது. அனுபவ அறிவுகள் நிறைந்து இருந்தாலும், அவற்றைக் கொண்டு செயலாற்றத் தேவையான உடல் பலமில்லாததால், முதுமைப் பருவமும் மற்றொருகுழந்தைப் பருவமே”. ஆகவே, அறிவும் பலமும் நிறைந்து விளங்கும் இளமைப்பருவத்தை நாம் பயனற்ற வகையில் கழித்துவிடுவது சரிதானா?

திருக்குர் ஆனில், இம்மூன்று பருவத்தினரில், சிறியோர்கள், முதியோர்கள் என்றோ குறிப்பிட்டு அழைத்து ஏதும் கூறாத வல்லோன், நடுப்பருவத்தினரான இளைஞர்களை பல இடங்களில் நேராக அவர்களிடம் உரையாடுகிறான். இளைஞர்களின் கதையைச் சொல்லவெனவே மகத்தானகஹ்ஃப்சூராவில் மூன்றிலொரு பாகம் ஒதுக்கியுள்ளான். அந்தக் கதையில் இளைஞர்களுக்கு அழகான ஒரு வழிகாட்டல் உள்ளது!! அநியாயக்கார மன்னனுக்கு அடிபணிய மறுத்து, மறைவா குகைக்குச் சென்று இறைவனிடம் தஞ்சம் தேடும் இளைஞர்களைக் குறித்துப் பேசுகிறான் இறைவன். 

அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ளதாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!என்று கூறினார்கள். 18:10
என்கிற அவ்விளைஞர்களின் பிரார்த்தனைக்கு,
 
நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம் 18:13
என்று இறைவன் பதிலளிக்கிறான். இன்றைய இளைய தலைமுறைக்கு இதில் வழிகாட்டல் இருக்கிறது.

ருவத்தே பயிர் செய்என்பது வேளாண்மைக்கு மட்டுமல்ல; வாழ்வின் மேலாண்மைக்கும் பொருந்தும்!! இளமைப் பருவத்தில் நாம் எதை விதைத்து பயிர் செய்து பராமரிக்கிறோமோ, அதற்கான விளைச்சலைத்தான் அதற்குப் பின்னான பருவங்களில்முதுமை மற்றும் மறுமை - அறுவடை செய்வோம். ஆக, இளம்வயது என்பது பட்டாம்பூச்சி போல பறந்தோடி மகிழ்ந்து இருப்பதற்கானதல்ல. பறந்து பறந்து கற்று, வாழ்க்கை கட்டுமானத்தைப் பலப்படுத்த வேண்டிய பருவம்!! 

நபிமார்களின் வாழ்க்கையைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள். பெரும்பாலான நபிமார்களை, அவர்களின் இளமைப் பருவத்தில், சோதனைமேல் சோதனைகள் கொடுத்து கடுமையாகப் பரீட்சித்துள்ளான். அதில் மன உறுதியோடு, கட்டுப்பாட்டோடு தேறியவர்கள்தாம் நம் நபிமார்கள்!!

யூஸுஃப்(அலை) அவர்களுக்கு ஒரு அழகான பெண்ணிடமிருந்து வந்த சோதனைபோல, இன்றுள்ள இளைஞர்களுக்கு வந்தால், தாண்டி வருமளவு நம் முஸ்லிம் இளைய சமுதாயம் உறுதியான ஈமான் கொண்டுள்ளதா?

இப்ராஹீம்(அலை) அவர்களை நெருப்பில் தூக்கிப் போட்டது; நபி(ஸல்) அவர்களை ஊர்விலக்கம் செய்துவைத்தது, பின் ஊரைவிட்டே இடம்பெயரச் செய்தது போன்ற சோதனைகளைத் தாங்குவதற்கான மனோதிடம் இன்றைய பதின்ம வயதினருக்கு உண்டா?

பள்ளிகல்லூரிகளில் பாடங்களைப் படித்து தேர்வெழுதி வெற்றி பெறுவது மட்டுமல்ல இளமைப் பருவம்!! வாழ்க்கை எனும் தேர்வை எழுதி, “சுவர்க்கம்எனும் வெற்றிக்கனியைப் பறிப்பதற்கான பாடங்களைக் கற்க வேண்டிய பருவமாகும் பதின்மப் பருவம்!!

றுதித் தீர்ப்பு நாளில் எல்லா மனிதனுக்கும் ஐந்து கேள்விகள் கேட்கப்படும்; அதற்கான முறையான பதில்கள் கிட்டாதவரை அவன் நகரமுடியாது என்று நபி(ஸல்) கூறுகிறார்கள்.
1. வாழ்நாளை எப்படி கழித்தாய்?
2. வாலிபத்தை எப்படி கழித்தாய்?
3. பொருளை எப்படி சேர்த்தாய்?
4. எப்படி செலவு செய்தாய்?
5. கற்ற கல்வியைக்கொண்டு என்ன அமல் செய்தாய்?

கேள்விகளைக் கவனியுங்கள்: முதலில் வாழ்நாளை குறித்து கேட்கப்படுகிறது. அடுத்து, இளமைப்பருவத்தைக் குறித்து கேட்கப்படுகிறது. வாழ்நாள்” என்பதிலேயே இளமைப் பருவமும் அடங்கிவிடும். ஆனாலும், தனியாக அதற்கும் ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. குழந்தைப் பருவம் குறித்து கேட்கவில்லை, ஏன், பக்குவம் கூடிய முதுமைப் பருவம் குறித்தும் கேட்கப்படவில்லை. இளமைப் பருவத்திற்கென தனி கேள்வி என்பதிலிருந்தே இவ்வயதுக்கான முக்கியத்துவம் விளங்கும். இப்பருவத்தினை எத்துணைக் கவனமாகச் செலவழிக்க வேண்டும் என்பதை உணரமுடியும்.

இன்னமும் கேளுங்கள்: இறுதித் தீர்ப்பு நாளில் - சூரியனின் அருகில் சுட்டுப் பொசுக்கும் வெப்பத்தில், தஞ்சமடைய ஒரு பொட்டு நிழலேதும் இல்லாத நாளான அன்று, ஏழு வகையான மனிதர்களுக்கே இறைவன் தன் அரியணையின்கீழ் நிழல் தருவேன் என்று வாக்களிக்கிறான். அந்த ஏழுபேர்களில் ஒருவர், நேர்வழியில் உருவான இளைஞர்!!

வற்றிலிருந்து நாம் அறிவது என்ன? இளமைப் பருவம், பொறுப்பின்றி திரியவேண்டிய பருவம் அல்ல. தீனில் திருத்தமாக நிலைகொண்டு, திறமைகளைத் திறம்பட வளர்க்க வேண்டிய பருவம். ஆனால், இன்றைய இளைய சமூகம் எப்படி இருக்கிறது? நண்பர்களோடு கூட்டம் கூட்டமாக அலைவதும், வீண் விளையாட்டுகளில் நேரம் மற்றும் பணம் விரயம் செய்வதுமாக ஒரு பகுதியினரும்; அதிகப் பணம் சம்பாதிக்கக்கூடிய வேலையைத் தேடித் தரும் படிப்புகளாகப் பார்த்து, ஊன் உறக்கமின்றி படிப்பதும், பின்னர் பணம் சம்பாதிப்பதிலேயே மீதி காலத்தைச் செலவழிப்பதுமாக மறு பகுதியினர்!!

இன்பம் துய்ப்பதும், பணம் சம்பாதிப்பதும் தடை செய்யப்பட்டவையல்ல இஸ்லாத்தில். ஆனால், அவற்றின் பக்கமாக முழுமையாகச் சாய்ந்து விடுவதால், தீனை விட்டுவிடும் நிலைக்குள்ளாகிறார்கள்.

இறைவேதத்திலிருந்தும், இறைச்செய்தி கொண்டு வந்த தூதர்களின் வாழ்விலிருந்தும் நாம் அறிவது, இளமைப் பருவம் என்பது ஒரு கடும் பயிற்சிக் களம்!! இராணுவம், காவல் துறையில் நுழைவதற்கு முன்னான ஓரிரு வருடங்கள் கடும் உடற்பயிற்சிகள் மேற்கொள்வார்கள். அதுபோல, தீனுக்கும் துனியா மற்றும் ஆகிரத்துக்குமான கடும்பயிற்சிக் காலமே இளமைப் பருவம்! நெருப்பாற்றில் நீந்தி வந்த தங்கம், அழகுமிகு ஆபரணமாக உருவெடுப்பதுபோல, இளமையில் எதிர்கொள்ளும் சோதனைக் களத்தை வெற்றியுடன் கடந்து வந்த இளைஞனே வாழ்விலும், மறுமையிலும் இறையருளால் மிளிர்வான். 

ளைஞர்கள், தம் இளம்பருவத்தை அலட்சியமாக கருதுவதற்கு, சில பெற்றோர்களும் ஒரு காரணம்!! “சின்னப் பிள்ளைதானே, இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்”, “இப்ப ஜாலியா இல்லாம வேற எப்ப இருக்கிறது”, “அவனு(ளு)க்கு பிடிச்ச மாதிரி வாழட்டும்”, “நாந்தான் சின்ன வயசுல கஷ்டப்பட்டேன், அவ(ளா)னாவது வசதியா சந்தோஷமா இருக்கட்டும்”, ”என் குடும்பத்தித்திற்காக நான் எனக்குப் பிடிக்காத படிப்பைப் படிச்சேன், அவனாவது அவனுக்கு பிடிச்ச படிப்பைப் படிக்கட்டும்” – இவையெல்லாம் இன்றைய பெற்றோர்களின் எண்ணங்களும், பேச்சுக்களும். 

இப்படிச் சொல்லியே, தொழுகையைக் கூட வலியுறுத்தாத பெற்றோர் உண்டு!! சிலர், மற்ற தொழுகைகளை வலியுறுத்தினாலும், வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் வேளையான சுபுஹுவை சாய்ஸில் விட்டுவிடுவார்கள் – ‘பாவம் பிள்ளை தூங்கட்டும்’ என்று. 

இன்னும் சிலர், அவர்களின் படிப்பையும் அவர்கள் விருப்பத்திற்கே விட்டு விடுகிறார்கள். சமூகத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டே நம் இளைய சமுதாயத்தின் கல்வித் தேடல் அமைய வேண்டும். பெற்றோர்கள், அவர்களின் திறமை மற்றும் ஆர்வத்தைக் கண்டறிந்து அதை சமூகத்திற்குப் பயன்படும்விதமாக மடைமாற்றிவிட வேண்டும்

மனம் விரும்பியபடியெல்லாம் வாழ்வது ஒரு மூமினான முஸ்லிமின் வழியல்ல. இளமை, கல்வி, வேலை, திருமணம், குழந்தைகள், முதுமை என்று வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் இஸ்லாம் வகுத்த வழியில், சமூகத்தின் முன்னேற்றத்தையும் சுய ஈடேற்றத்தையும் கருத்தில் கொண்டு வாழ்வதே முஸ்லிமின் கடமை. இதற்கு இளமைப் பருவம்தான் ஆரம்ப அடித்தளம்

ட்டிடத்தின் அஸ்திவாரத்திற்கு ஒப்பான, வாழ்க்கையின் இளமைப் பருவத்தை வீணாகச் செலவழித்துவிட்டால், அதன் தாக்கம் பிந்தைய வாழ்க்கையிலும் இருந்துகொண்டே இருக்கும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமாஎன்று சொல்வார்கள். மேலும், நம் வாழ்வு இளமைப் பருவம் தாண்டியும்  நீடிக்கும் என்று நம்மால் உறுதியாகச் சொல்லத்தான் முடியுமா?
இளம்பிறைகளுக்கு ஒப்பான இளைஞர்கள், ஒரு சமுதாயத்தின் சொத்து. அந்தச் சொத்தை முறையாகப் பராமரித்துப் பேணி வளர்ச்சியடையச் செய்வதில்தான் நம் சமுதாயத்தின் எதிர்காலம் சிறப்பு உள்ளது.
_______________________________
மே 16-31, 2015 வெளியான சமரசம் “கல்விச் சிறப்பிதழில்” வெளியான என் கட்டுரை.

Post Comment