கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டை ஒட்டி, “முன்னாள் மாணவர்” (alumni) விழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பல ஊர்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும், நாடுகளிலிருந்தும் உயர் அலுவலர்கள், நிறுவன அதிபர்கள், பேராசியர்களாக இந்நாளில் இருக்கும் முன்னாள் மாணவர்கள் –வந்திருந்தனர். அனைவரின் பேச்சும் ஒரே விஷயத்தையே பிரதிபலித்தன, “மாணவப் பருவம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கட்டுப்பாடுகள் ஏதுமின்றி, சுதந்திரமாக இருந்தோம். நிறைய அனுபவித்தோம். இன்றைய வாழ்க்கை
அதில் நூற்றில் ஒரு பங்குகூட மகிழ்ச்சியாக இல்லை” என்பதே!!
”பள்ளியிறுதியில் படிக்கும் உங்கள் மகனுக்கு இந்த கோடை விடுமுறையில் ஏதேனும் நிறுவனத்தில் பகுதி நேர வேலை ஏற்பாடு செய்து கொடுத்தால், நேரம் பயனுள்ளதாகக் கழிவதோடு, வாழ்க்கைக்கும் பயனளிக்குமே?” என்று கேட்ட தன் நண்பரிடம், “அதெல்லாம் வேண்டாங்க. இந்த வயசுலதான் அவன் ஃப்ரீயா ஜாலியா எஞ்சாய் பண்ண முடியும். படிச்சு முடிச்சு வேலைக்கு போக ஆரம்பிச்சான்னா, அப்புறம் ரிடையர் ஆனால் கூட, ஓய்விருக்காது. இப்பவே அவனைக் கஷ்டப்பட வைக்கணுமா?” என்று பதிலளித்தார் அவர்.
“ஏம்மா, உனக்கு உடம்பு சரியில்லாத சமயத்திலாவது உனக்கு உதவுற மாதிரி மகளை கொஞ்சம் சமையல் பழக்கக் கூடாதா? ஒரே மகள்னு ரொம்பத்தான் செல்லம் கொடுக்கிற…” என்று கண்டித்த கணவனிடம், “சும்மா இருங்க… கல்யாணமாகிற வரைக்கும்தானே அவ ஜாலியா இருக்க முடியும். அதுக்கப்புறம் எங்க ஓய்வு கிடைக்கும்? நாளை மாமியார், நாத்தனார்னு எத்தனை பிக்கல் பிடுங்கல்களைச் சமாளிக்கணுமோ… வாழ்க்கையை அவ இப்ப அனுபவிச்சாத்தான்
உண்டு.” என்றாள் அம்மா.
”வாழ்க்கையை அனுபவிப்பது”, “ஃபிரீயா இருப்பது”, “ஜாலியா சுற்றுவது” – இளைஞர்களின் விருப்பம் என்னவென்று கேட்டால் அவர்கள் அனைவரின் பதிலும் சந்தேகமேயின்றி இதுவாகத்தான் இருக்கும். அவர்கள் மீது தவறில்லை, இன்றைய உலகில் அவர்கள் காணும் மக்கள், சமூகம், நிறுவனங்கள், அரசாங்கம் என்று எல்லாமே பணம் மற்றும் பணத்தின் மூலம் வரும் மகிழ்ச்சி ஆகியவற்றையே இலக்காகக் கொண்டு செயல்படும்போது, அதைக் கண்ணுற்று வளரும் இளைய சமுதாயம் இதற்கு விதிவிலக்காகி விடுமா?
ஆனால், பொறுப்புகளேதுமின்றி
மகிழ்ச்சியாகக் கழிப்பதற்காகவா இளமைக்காலம்? ” உலக வாழ்க்கை
வீணும் விளையாட்டுமேயன்றி
வேறில்லை6:32.” என்று அல்லாஹுத் த ஆலா சொல்வதை அதன் சொல்லுக்குச் சொல்லான ”நேரடி” அர்த்தத்தில் எடுத்துக் கொண்டார்கள் போல!! இஸ்லாத்தின் கட்டாயக் கடமையான தொழுகையை, இறைவன் ஏழு வயது முதலே கடைபிடிக்கச் சொல்கிறான் எனும்போது, பதின்மவயதில் விளையாட்டாக இருப்பதை இஸ்லாம் அனுமதிக்குமா?
வாழ்க்கையை மூன்று பகுதிகளாக இறைவேதம் பிரிக்கிறது: அல்லாஹ் தான் உங்களை (ஆரம்பத்தில்)
பலஹீனமான நிலையில் படைக்கிறான்; பலஹீனத்திற்குப் பின்னர்,
அவனே
பலத்தை(யும் உங்களுக்கு)உண்டாக்குகிறான்; (அந்தப்) பலத்திற்குப் பின்,
பஹீனத்தையும்
நரையையும் அவனே உண்டாக்குகிறான்; (30:54. )
இதில்,
நடுப்பருவமான இளமைப் பருவத்தை மட்டுமே பலமுள்ளதாகச் சிறப்பித்துக் கூறுகிறான். எனில், அந்தப் பருவம் எத்தனை முக்கியமானதாக எடுத்துக் கொள்ளப் படவேண்டும் என்பதை நாம் உணரமறுப்பதேன்?
குழந்தைப் பருவம் என்பது பலமற்றது, பலரைச் சார்ந்திருக்க வேண்டியது. அனுபவ அறிவுகள் நிறைந்து இருந்தாலும், அவற்றைக் கொண்டு செயலாற்றத் தேவையான உடல் பலமில்லாததால், முதுமைப் பருவமும் மற்றொரு “குழந்தைப் பருவமே”. ஆகவே, அறிவும் பலமும் நிறைந்து விளங்கும் இளமைப்பருவத்தை நாம் பயனற்ற வகையில் கழித்துவிடுவது சரிதானா?
திருக்குர் ஆனில், இம்மூன்று பருவத்தினரில், சிறியோர்கள், முதியோர்கள் என்றோ குறிப்பிட்டு அழைத்து ஏதும் கூறாத வல்லோன், நடுப்பருவத்தினரான
இளைஞர்களை பல இடங்களில் நேராக அவர்களிடம் உரையாடுகிறான். இளைஞர்களின் கதையைச் சொல்லவெனவே மகத்தான ”கஹ்ஃப்” சூராவில் மூன்றிலொரு பாகம் ஒதுக்கியுள்ளான். அந்தக் கதையில் இளைஞர்களுக்கு அழகான ஒரு வழிகாட்டல் உள்ளது!! அநியாயக்கார மன்னனுக்கு அடிபணிய
மறுத்து, மறைவாக குகைக்குச் சென்று இறைவனிடம் தஞ்சம் தேடும்
இளைஞர்களைக் குறித்துப் பேசுகிறான் இறைவன்.
“அந்த இளைஞர்கள் குகையினுள்
தஞ்சம் புகுந்த போது அவர்கள் ”எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு
ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள்
காரியத்தை(ப் பலனுள்ளதாக)ச்
சீர்திருத்தித் தருவாயாக!” என்று கூறினார்கள்.” 18:10
என்கிற
அவ்விளைஞர்களின் பிரார்த்தனைக்கு,நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் – தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம் 18:13
என்று இறைவன் பதிலளிக்கிறான். இன்றைய இளைய தலைமுறைக்கு இதில் வழிகாட்டல் இருக்கிறது.
“பருவத்தே பயிர் செய்” என்பது வேளாண்மைக்கு மட்டுமல்ல; வாழ்வின் மேலாண்மைக்கும் பொருந்தும்!! இளமைப் பருவத்தில் நாம் எதை விதைத்து பயிர் செய்து பராமரிக்கிறோமோ, அதற்கான விளைச்சலைத்தான் அதற்குப் பின்னான பருவங்களில் – முதுமை மற்றும் மறுமை - அறுவடை செய்வோம். ஆக, இளம்வயது என்பது பட்டாம்பூச்சி போல பறந்தோடி மகிழ்ந்து இருப்பதற்கானதல்ல. பறந்து பறந்து கற்று, வாழ்க்கை கட்டுமானத்தைப் பலப்படுத்த வேண்டிய பருவம்!!
நபிமார்களின் வாழ்க்கையைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள். பெரும்பாலான நபிமார்களை, அவர்களின் இளமைப் பருவத்தில், சோதனைமேல் சோதனைகள் கொடுத்து கடுமையாகப் பரீட்சித்துள்ளான். அதில் மன உறுதியோடு, கட்டுப்பாட்டோடு
தேறியவர்கள்தாம் நம் நபிமார்கள்!!
யூஸுஃப்(அலை)
அவர்களுக்கு ஒரு அழகான பெண்ணிடமிருந்து
வந்த சோதனைபோல, இன்றுள்ள இளைஞர்களுக்கு வந்தால், தாண்டி வருமளவு நம் முஸ்லிம் இளைய
சமுதாயம் உறுதியான ஈமான் கொண்டுள்ளதா?
இப்ராஹீம்(அலை)
அவர்களை நெருப்பில் தூக்கிப் போட்டது; நபி(ஸல்)
அவர்களை ஊர்விலக்கம் செய்துவைத்தது, பின் ஊரைவிட்டே இடம்பெயரச்
செய்தது போன்ற சோதனைகளைத் தாங்குவதற்கான மனோதிடம் இன்றைய பதின்ம வயதினருக்கு உண்டா?
பள்ளி – கல்லூரிகளில் பாடங்களைப் படித்து தேர்வெழுதி வெற்றி பெறுவது மட்டுமல்ல இளமைப் பருவம்!! வாழ்க்கை எனும் தேர்வை எழுதி, “சுவர்க்கம்” எனும் வெற்றிக்கனியைப் பறிப்பதற்கான பாடங்களைக் கற்க வேண்டிய பருவமாகும் பதின்மப் பருவம்!!
இறுதித் தீர்ப்பு நாளில் எல்லா மனிதனுக்கும் ஐந்து கேள்விகள் கேட்கப்படும்; அதற்கான முறையான பதில்கள் கிட்டாதவரை அவன் நகரமுடியாது
என்று நபி(ஸல்) கூறுகிறார்கள்.
1.
வாழ்நாளை எப்படி கழித்தாய்?
2.
வாலிபத்தை எப்படி கழித்தாய்?
3.
பொருளை எப்படி சேர்த்தாய்?
4. எப்படி செலவு செய்தாய்?
5. கற்ற கல்வியைக்கொண்டு என்ன அமல் செய்தாய்?
கேள்விகளைக் கவனியுங்கள்: முதலில் வாழ்நாளை குறித்து கேட்கப்படுகிறது. அடுத்து, இளமைப்பருவத்தைக் குறித்து கேட்கப்படுகிறது. “வாழ்நாள்” என்பதிலேயே இளமைப் பருவமும் அடங்கிவிடும்.
ஆனாலும், தனியாக அதற்கும் ஒரு கேள்வி
முன்வைக்கப்படுகிறது. குழந்தைப் பருவம் குறித்து கேட்கவில்லை, ஏன், பக்குவம் கூடிய முதுமைப் பருவம்
குறித்தும் கேட்கப்படவில்லை. இளமைப் பருவத்திற்கென தனி கேள்வி என்பதிலிருந்தே
இவ்வயதுக்கான முக்கியத்துவம் விளங்கும். இப்பருவத்தினை எத்துணைக் கவனமாகச்
செலவழிக்க வேண்டும் என்பதை உணரமுடியும்.
இன்னமும் கேளுங்கள்: இறுதித் தீர்ப்பு நாளில் - சூரியனின் அருகில் சுட்டுப்
பொசுக்கும் வெப்பத்தில், தஞ்சமடைய ஒரு பொட்டு நிழலேதும்
இல்லாத நாளான அன்று, ஏழு வகையான மனிதர்களுக்கே இறைவன்
தன் அரியணையின்கீழ் நிழல் தருவேன் என்று வாக்களிக்கிறான். அந்த ஏழுபேர்களில்
ஒருவர், நேர்வழியில் உருவான இளைஞர்!!
இவற்றிலிருந்து நாம் அறிவது என்ன? இளமைப் பருவம், பொறுப்பின்றி திரியவேண்டிய பருவம் அல்ல. தீனில் திருத்தமாக நிலைகொண்டு, திறமைகளைத் திறம்பட வளர்க்க வேண்டிய பருவம். ஆனால், இன்றைய இளைய சமூகம் எப்படி இருக்கிறது? நண்பர்களோடு கூட்டம் கூட்டமாக அலைவதும், வீண் விளையாட்டுகளில் நேரம் மற்றும் பணம் விரயம் செய்வதுமாக ஒரு பகுதியினரும்; அதிகப் பணம் சம்பாதிக்கக்கூடிய
வேலையைத்
தேடித்
தரும்
படிப்புகளாகப் பார்த்து,
ஊன்
உறக்கமின்றி
படிப்பதும்,
பின்னர்
பணம்
சம்பாதிப்பதிலேயே மீதி
காலத்தைச்
செலவழிப்பதுமாக மறு
பகுதியினர்!!
இன்பம் துய்ப்பதும், பணம் சம்பாதிப்பதும் தடை செய்யப்பட்டவையல்ல இஸ்லாத்தில். ஆனால், அவற்றின் பக்கமாக முழுமையாகச் சாய்ந்து விடுவதால், தீனை விட்டுவிடும் நிலைக்குள்ளாகிறார்கள்.
இறைவேதத்திலிருந்தும், இறைச்செய்தி கொண்டு வந்த தூதர்களின் வாழ்விலிருந்தும் நாம் அறிவது, இளமைப் பருவம் என்பது ஒரு கடும் பயிற்சிக் களம்!! இராணுவம், காவல் துறையில் நுழைவதற்கு முன்னான ஓரிரு வருடங்கள் கடும் உடற்பயிற்சிகள் மேற்கொள்வார்கள். அதுபோல, தீனுக்கும் துனியா மற்றும் ஆகிரத்துக்குமான கடும்பயிற்சிக் காலமே இளமைப் பருவம்! நெருப்பாற்றில் நீந்தி வந்த தங்கம், அழகுமிகு ஆபரணமாக உருவெடுப்பதுபோல, இளமையில் எதிர்கொள்ளும் சோதனைக் களத்தை வெற்றியுடன் கடந்து வந்த இளைஞனே வாழ்விலும், மறுமையிலும் இறையருளால் மிளிர்வான்.
இன்பம் துய்ப்பதும், பணம் சம்பாதிப்பதும் தடை செய்யப்பட்டவையல்ல இஸ்லாத்தில். ஆனால், அவற்றின் பக்கமாக முழுமையாகச் சாய்ந்து விடுவதால், தீனை விட்டுவிடும் நிலைக்குள்ளாகிறார்கள்.
இறைவேதத்திலிருந்தும், இறைச்செய்தி கொண்டு வந்த தூதர்களின் வாழ்விலிருந்தும் நாம் அறிவது, இளமைப் பருவம் என்பது ஒரு கடும் பயிற்சிக் களம்!! இராணுவம், காவல் துறையில் நுழைவதற்கு முன்னான ஓரிரு வருடங்கள் கடும் உடற்பயிற்சிகள் மேற்கொள்வார்கள். அதுபோல, தீனுக்கும் துனியா மற்றும் ஆகிரத்துக்குமான கடும்பயிற்சிக் காலமே இளமைப் பருவம்! நெருப்பாற்றில் நீந்தி வந்த தங்கம், அழகுமிகு ஆபரணமாக உருவெடுப்பதுபோல, இளமையில் எதிர்கொள்ளும் சோதனைக் களத்தை வெற்றியுடன் கடந்து வந்த இளைஞனே வாழ்விலும், மறுமையிலும் இறையருளால் மிளிர்வான்.
இளைஞர்கள், தம் இளம்பருவத்தை அலட்சியமாக கருதுவதற்கு, சில பெற்றோர்களும் ஒரு
காரணம்!! “சின்னப் பிள்ளைதானே, இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்”, “இப்ப ஜாலியா
இல்லாம வேற எப்ப இருக்கிறது”, “அவனு(ளு)க்கு பிடிச்ச மாதிரி வாழட்டும்”, “நாந்தான்
சின்ன வயசுல கஷ்டப்பட்டேன், அவ(ளா)னாவது வசதியா சந்தோஷமா இருக்கட்டும்”, ”என்
குடும்பத்தித்திற்காக நான் எனக்குப் பிடிக்காத படிப்பைப் படிச்சேன், அவனாவது
அவனுக்கு பிடிச்ச படிப்பைப் படிக்கட்டும்” – இவையெல்லாம் இன்றைய பெற்றோர்களின் எண்ணங்களும்,
பேச்சுக்களும்.
இப்படிச் சொல்லியே, தொழுகையைக் கூட வலியுறுத்தாத பெற்றோர் உண்டு!! சிலர், மற்ற
தொழுகைகளை வலியுறுத்தினாலும், வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் வேளையான சுபுஹுவை
சாய்ஸில் விட்டுவிடுவார்கள் – ‘பாவம் பிள்ளை தூங்கட்டும்’ என்று.
இன்னும் சிலர், அவர்களின் படிப்பையும் அவர்கள் விருப்பத்திற்கே விட்டு
விடுகிறார்கள். சமூகத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டே நம் இளைய சமுதாயத்தின் கல்வித்
தேடல் அமைய வேண்டும். பெற்றோர்கள்,
அவர்களின் திறமை மற்றும் ஆர்வத்தைக் கண்டறிந்து அதை சமூகத்திற்குப் பயன்படும்விதமாக
மடைமாற்றிவிட வேண்டும்.
மனம் விரும்பியபடியெல்லாம் வாழ்வது ஒரு மூமினான முஸ்லிமின் வழியல்ல. இளமை, கல்வி, வேலை, திருமணம், குழந்தைகள், முதுமை என்று வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் இஸ்லாம் வகுத்த வழியில், சமூகத்தின் முன்னேற்றத்தையும் சுய ஈடேற்றத்தையும்
கருத்தில்
கொண்டு
வாழ்வதே
முஸ்லிமின்
கடமை.
இதற்கு
இளமைப்
பருவம்தான்
ஆரம்ப
அடித்தளம்.
கட்டிடத்தின் அஸ்திவாரத்திற்கு ஒப்பான, வாழ்க்கையின் இளமைப் பருவத்தை வீணாகச்
செலவழித்துவிட்டால், அதன் தாக்கம் பிந்தைய
வாழ்க்கையிலும் இருந்துகொண்டே இருக்கும். ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில்
வளையுமா’ என்று சொல்வார்கள். மேலும், நம்
வாழ்வு இளமைப் பருவம் தாண்டியும் நீடிக்கும் என்று நம்மால் உறுதியாகச் சொல்லத்தான்
முடியுமா?
இளம்பிறைகளுக்கு ஒப்பான இளைஞர்கள், ஒரு சமுதாயத்தின் சொத்து. அந்தச் சொத்தை
முறையாகப் பராமரித்துப் பேணி வளர்ச்சியடையச் செய்வதில்தான் நம் சமுதாயத்தின்
எதிர்காலம் சிறப்பு உள்ளது.
_______________________________
மே 16-31, 2015 வெளியான சமரசம் “கல்விச் சிறப்பிதழில்” வெளியான என் கட்டுரை.
_______________________________
மே 16-31, 2015 வெளியான சமரசம் “கல்விச் சிறப்பிதழில்” வெளியான என் கட்டுரை.
|
Tweet | |||
10 comments:
சிறப்பானதொரு ஆக்கம்
அஸ்ஸலாமு அலைக்கும்
சிறப்பான கட்டுரை. இளைஞர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்... போலவே பெற்றோர்களும்.....
நல்லதொரு கட்டுரை... அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்...
”அடுத்த முறை இன்னும் நல்லா பரீட்சை எழுதினா தான் கையெழுத்து போடுவேன்”.
அதற்கு என் மகன், “போம்மா.. இதெல்லாம் சினிமாவில் தான் சொல்வாங்க... நிஜத்தில் எதுவும் சொல்லமாட்டாங்க”
அவ்வ்.
இப்ப பெற்றொர்களே குழம்பி விடுகின்றனர் சமயத்தில். நல்லதொரு வழிகாட்டும் கட்டுரைக்கும் சமரசத்தில் இடம்பெற்றதற்கும் வாழ்த்துகள்.
ஆழமான சிந்தனை.அருமையாக எழுதி உள்ளீர்கள்.மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
அன்பு ஹுஸைனம்மா, வாழ்கவளமுடன். உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்.
சிறப்பான கட்டுரை வாழ்த்துக்கள்.
இளம்பிறைகளுக்கு ஒப்பான இளைஞர்கள், ஒரு சமுதாயத்தின் சொத்து. அந்தச் சொத்தை முறையாகப் பராமரித்துப் பேணி வளர்ச்சியடையச் செய்வதில்தான் நம் சமுதாயத்தின் எதிர்காலம் சிறப்பு உள்ளது.//
அருமையான கட்டுரை, வாழ்த்துக்கள்.
இளம்பிறைகளுக்கு ஒப்பான இளைஞர்கள், ஒரு சமுதாயத்தின் சொத்து. அந்தச் சொத்தை முறையாகப் பராமரித்துப் பேணி வளர்ச்சியடையச் செய்வதில்தான் நம் சமுதாயத்தின் எதிர்காலம் சிறப்பு உள்ளது.//
உண்மைதான் இளம்பிறைகள் இளகுவாக கையாண்டால் இந்தியாவென்ன எவற்றையும் செவ்வென சிறப்பென செய்துமுடிக்கும் வலிமையோடு வலுப்பெறும்..
அருமையான கட்டுரையம்மா..
நல்ல அறிவுரைகளைக் கேட்க நல்ல பிள்ளைகளாக நாங்கள் வளர்ந்த காலம் முதல் இப்போது
மிக மாறிவிட்டது. இங்கேயும் வேலைக்குப் போகும் மாணவர்களைப் பார்க்கும்போது பெருமையாக
இருக்கிறது.
உங்கள் அறிவுரை சிலர் காதிலாவது விழுந்தால் நல்லது.
Post a Comment