Pages

துபாய் ரொம்ப சீப்!!





இந்தியா போகும்போது ரொம்பப் பயந்த (எல்லாரும் பயங்காட்டுன) விஷயம் மின்சாரத் தடை. கஷ்டத்தை எதிர்பார்த்தே போனதால், பெருங்கஷ்டமாத் தெரியலை. சமையலறையில் மட்டும் - கரண்ட் இருந்தாலும், இல்லாவிட்டாலும்- வியர்க்கத்தான் செய்கிறது. வீட்டில் இன்வர்ட்டர் இல்லை என்பதால் வாடகைக்கு எடுத்து வைத்துக் கொண்டோம். ஆனால், அதுவும் கடைசி நாட்களில் கொஞ்சம் அதிகமாகப் பயன்படுத்த வேண்டிவந்ததால் உயிர் ஊசலாடும் நிலைமைக்குப் போய்விட்டது.

only4funny.blogspot.com
இன்வர்ட்டரில் ஒருமுறை முழுமையாக சார்ஜ் இறங்கிவிட்டதென்றால், பின்னர் 12 மணிநேரம் தொடர்ச்சியாக சார்ஜ் ஏற்றினால்தான் சரியாக வேலை செய்யுமாம். இருக்கும் கரெண்ட்கட்டில் 12 மணி நேரம் எப்படி சார்ஜ் செய்வது? அந்த கம்பெனிக்காரர்களிடம் சொன்னால், எடுத்துக் கொண்டுபோய் (ஜெனரேட்டர் மூலம்) சார்ஜ் செய்து தருவார்கள்.

மின்சாரப் பற்றாக்குறை ஒருபக்கம் என்றால், சமையல் கேஸ் பற்றாக்குறை இன்னொரு பக்கம். அதற்காக, இண்டக்‌ஷன் அடுப்பு வாங்கிவைத்து, “நேரங்காலம்” பார்த்து, சமைக்கிறார்கள் மக்கள்!!

இந்த வெயில் காலத்திலும் கொசுக்கள் தாராளமாக இருக்கின்றன என்பது ஆச்சர்யம்!!

பாண்டிச்சேரி போயிருந்தேன்.   கரண்ட் கட் இல்லை; வியர்வை இல்லை... ஹூம், கொடுத்துவச்ச மக்கள்ஸ்.


தமிழகத்தில் இன்னும் பல குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு இல்லை. அதனால் போர் தண்ணியையே குடித்து வந்தனர். இம்முறை அநேகமாக எல்லா வீடுகளிலும் ஒரு "RO plant with filter" (உப்புநீரை குடிநீராக்கிச் சுத்திகரிக்கும் மெஷின்) இருக்கிறது. விலையும் 12,000 ரூபாயதான்; பராமரிப்பும் வருடத்திற்கொருமுறை மட்டுமே என்பதால் யாரும் கார்ப்பரேஷன் தண்ணீர் குறித்துக் கவலைப்படுவதில்லை!!


அதேபோல பாரபட்சமில்லாமல் எல்லா மக்களிடமும் இருக்கும் கண்டிப்பாக இருக்கும் இன்னொரு பொருள் - டார்ச்!! வெளியே செல்லும் எல்லாரும் ஒரு சிறிய பென் டார்ச் கொண்டுசெல்லத் தவறுவதில்லை. ”எவரெடி” காலம் திரும்புகிறது!!

மதுரை திருமலைநாயக்கர் மஹாலில் நடைபெறும் “ஒலி - ஒளி காட்சி” பார்க்கப் போயிருந்தோம். பல வருடங்களாய் மதுரையில் இருக்கும்  நண்பர்களிடம் கேட்டபோது ”பார்த்ததில்லை” என்றார்கள்!! ம்ம்ம்... முற்றத்து மல்லிகைக்கு வாசமில்லை!!




 வெளிநாடுகளில் “ஒலி-ஒளி” காட்சிகளைப் பார்த்தபின், இது ரொம்ப சிம்பிளாகத்தான் தெரிகிறது. இருந்தாலும் பார்க்கலாம். காட்சிக்கேற்றபடி நகரும் ஒளி அமைப்புகள் வித்தியாசம். ஒலியோடு, ஒளியாலான உருவ அமைப்புகளும் இருந்திருந்தால் (animation போல) இன்னும் சுவாரஸ்யமாய் இருந்திருக்கும்.

ஒலி-ஒளி காட்சியின்போது பிரகாசிக்கும் மஹால்
திருமலை நாயக்கரின் காலத்தில் நடந்த சில நிகழ்வுகளை “ஒலி”யாக தகுந்த இசையோடு விவரிக்கிறார்கள். நாங்கள் பார்த்தது ஆங்கிலக் காட்சி. அவ்வளவாக இனிமையாயில்லை. தமிழ்க் காட்சி பார்த்திருந்தால் நன்றாக ரசித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆரம்பத்தில் நிறைந்திருந்த பார்வையாளர் அரங்கம், ஆங்கிலத்தில் வர்ணனை ஆரம்பித்ததும் மெல்ல மெல்லக் காலியாகியே விட்டது!!


இக்காட்சி நடப்பது நாயக்கர் அரண்மனையின் தர்பார் ஹாலில். அருகிலேயே உள்ள அரண்மனையையும் சுற்றிப் பார்க்கலாம். ஆனால், மாலை ஐந்து மணி வரை மட்டுமே அதற்கு அனுமதி. ஒலி-ஒளி காட்சிகள் 7 மணிக்குத் துவங்கும்.
மேலதிகத் தகவலுக்கு: http://www.maduraidirectory.com/palace/sl.php


வழக்கம்போல ”பைக்”குகள் ராஜ்யம்தான் நாட்டில். ஏப்ரல் வெயிலில் நானும் என்னவரோடு பைக்கில் சுற்ற வேண்டியிருந்த போது,   ஒரு கடைக்குப் போயிட்டு வந்து வெயிலில் நிற்கும் பைக்கில் உக்கார முடியல.. சீட் கொதிக்குது.... “ஹெல்மெட் மாதிரி, பைக் சீட்டுக்கும் ஒரு தெர்மோகோல் கவர் செஞ்சு வச்சுக்கணும்” என்று தோன்றியது.  உடல்நலத்தைப் பாதிக்கும் விஷயம் என்பதால் பைக்கிலேயே சுற்றும் மக்கள் யோசிக்கவும்.

என்னவரிடம் இதைச் சொன்னபோது, “இதுக்கே இப்படியா? அபுதாபியின் கோடைக்குமுன் இது ஒன்றுமேயில்லை. எப்படியோ எங்க (ஆண்களின்) கஷ்டம் புரிஞ்சாச் சரி” என்றார். அபுதாபி சம்மரில் காரினுள் இதுபோல அனலாக இருக்கும். ஸ்டீரிங்கைக் கூடத் தொடமுடியாது. ஏஸியை ஆன் செய்தாலும், கார் குளிர வெகுநேரம் எடுக்கும்.

இரு புதிய நாகர்கோவில்/கேரளா ஸ்பெஷல் பழவகைகள் உண்ணக் கிடைத்தன. ஒன்று, அயினிச் சக்கை; மற்றது “ஜம்பக்கா”!! யாரக்கா? ஜம்பக்கா..




மேலே படத்தில் இருப்பது அயினிச் சக்கை. இது பலாப்பழ வகையைச் சேர்ந்தது. பார்ப்பதற்குக் கிட்டத்தட்ட  ஒரு மினி பழாப்பழம் போலவே, ஆனால் ஆப்பிள் சைஸில் இருக்கும். பலாப்பழத்தின் “மைக்ரோ-மினி” வடிவம் என்றுகூடச் சொல்லலாம். இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை.

ஜம்பக்கா(ய்), பார்க்க அழகாய் இருக்கிறது. முழுதாக அப்படியே கடித்துச் சாப்பிடவேண்டியதுதான். ஆனால், இனிப்பே இல்லாமல், துவர்ப்பாய் இருக்கும் என்பதால் தொடர்ந்து சாப்பிட ஆசை வராது.  Looks deceive!! :-D

 
ஆங்கிலத்தில் Wax apple என்று பெயர். சில மனிதர்களைப் போல, தோற்றத்தில் ஜம்பமாக இருந்து, உள்ளே சுவையில்லாமல் இருப்பதால்தான் இதுக்கு “ஜம்பக்காய்” என்று பேர் வந்ததோ? 


மகன்களுக்கு வெள்ளியில் மோதிரம் வாங்க நகைக்கடைக்குப் போயிருந்தேன். அங்கேதான் ’பகல்கொள்ளை’  என்றால் என்னவென்று புரிந்தது. 3 கிராம் எடையுள்ள மோதிரத்திற்கு சேதாரம் 2.5 கிராம் எனச் சொன்னார்கள்!!  பேசியதும் கொஞ்சம் (மட்டும்)  குறைத்தார்கள்.

அதே கடையில், ஒரு நடுத்தரக் குடும்பம், நகைச்சீட்டில் சேர்ந்திருந்த பணத்திற்கு நகை வாங்க வந்திருந்தார்கள். நகைச்சீட்டில் உள்ள பணத்திற்கு ஏற்றபடி, ஒரு சிறிய வெள்ளி டம்ளர் தேர்ந்தெடுத்து பில் போடச் சொன்னார்கள். (ரூ. 2000+)  உடன்வந்திருந்த மகளின் கல்யாணத்திற்காயிருக்கும்போல. அந்த மகளோ, “ரெண்டா வாங்கினாத்தான் என்னவாம்?” என்று அம்மாவைக் கேட்டுக் கொண்டிருந்தாள்!! அதுவல்ல விஷயம்.

நகைச்சீட்டு சேரும்போது செய்கூலி, சேதாரம் கிடையாது என்று சொன்னார்களாம். இப்போது எவ்வளவு நகை வாங்கினாலும் - தங்கமோ, வெள்ளியோ - எவ்வளவு வாங்கினாலும்,  அதில் 0.850 மில்லிகிராமுக்கு மட்டுமே செய்கூலி கிடையாது; மீதி நகைக்கு செய்கூலி உண்டு என்றார்கள்!!  ஒரு கிராம் கூட இல்லை, வெறும் 0.850 மில்லிகிராம்!! அந்தக் குடும்பத்தலைவர் வெறுத்துப்போய் ஒன்றும் வாங்காமலே கிளம்பிவிட்டார். ஏப்ரல், மே கல்யாண சீஸன் என்பதால், கடையில் கூட்டம் அலைமோதிக் கொண்டுதான் இருந்தது.

ரயில் - சாலைப் பயணங்கள்...  வழக்கம்போலத்தான். சாலைப் பயணங்கள் தற்போது விரைவாகவும், சுகமாகவும் இருந்தாலும், பயமாக இருக்கிறது. அதற்காக ரயிலில் போனால், சர்வம் அழுக்கு மயம்!!

ஒரு ரயில்பயணத்தில், நடு இரவில்  “குடிமகன்” ஒருவன் செய்த அலம்பலில் பயணிகள் எரிச்சலடைய, டி.டி.ஆர். அவரை அவரது சீட்டுக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்து,  ”இதுதான் உங்க இடம். இங்கேதான் இருக்கணும். வேற எங்கயும் போகக்கூடாது. சரியா?” என்று மிகப் பவ்யமாகப் பேசினார்!! அரசு ஊழியர், அதுவும் மத்திய அரசு ஊழியர் இவ்வளவு பணிவாகப் பேசியது ஆச்சர்யம்தான். ஆனாலும் ஒரு குடிகாரனிடம்போய் இந்தப் பணிவு தேவையா என்றும் கோபம் வந்தது. ஒருவேளை கோவப்பட்டிருந்தால் அவன் இன்னும் அதிகம் கலாட்டா செய்திருக்கலாம் என்று பொறுமையாப் பேசினாரோ என்னவோ.

அடுத்த ஸ்டேஷனில் வேறொருவர் வந்து அந்த குடிமகனின் சீட்டைத் தன் இடம் என்று சொல்ல, டிடிஆர் செக் செய்து பார்த்தால், குடிமகன் இருப்பது சரியான சீட் எண்தான்; ஆனால் ‘கம்பார்ட்மெண்ட்’ நம்பர்தான் வேறே!!


சமச்சீர் கல்வி பத்தாம் வகுப்பு புத்தகங்கள் பார்த்தேன். நல்லா இருக்கு. Monotone-ஆக இல்லாமல், தியரி, செய்முறை விளக்கம், டிப்ஸ், புதிர் என்று கலர் கலர் கட்டமாக, பார்க்கும்போதே படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது (- பெற்றோர்களுக்கு!!).  ஒரு மாணவியிடம் (உறவினர் மகள் ) கேட்டபோது, வெறுமே மனப்பாடம் செய்ய முடியாது, புரிந்தால்தான் படிக்க முடியும், அதுவும் அறிவியலில், தியரியாக இல்லாமல், ப்ராக்டிக்கலாக தியரியை அப்ளை செய்து தீர்க்கும் முறையில் பாடங்கள் இருக்கின்றன என்று சொன்னாள்.

தமிழ்ப் பாடத்தில், கொடுக்கப்படும் தலைப்புக்குக் கவிதைகூட எழுதணுமாம். ரொம்பக் கடினமா இருக்குன்னு சொன்னாள். ஒரு பதிவரா இருந்துட்டு கவிதை எழுதத் தெரியலைன்னு சொல்றதைக் கேட்டுட்டுச் சும்மா இருக்க முடியுமா? கவிதை எழுதுவதற்கு எளிய வழி சொல்லிக் கொடுத்துவிட்டு வந்தேன். ஹி.. ஹி.. அதான் “எண்டர் தட்டுறது”!!

  பள்ளிகள் கட்டணம் இன்னும் பயமுறுத்துவதாகத்தான் இருக்கின்றன. இங்கிருக்கும் ஒரு நண்பர், தம் மூன்று பிள்ளைகளையும் இந்தியாவில் பள்ளியில் சேர்க்கலாம் என்று நினைத்திருந்தவர், எண்ணத்தை மாற்றிக் கொண்டார். மூன்று பேருக்கும் பள்ளி கட்டணம், பேருந்து கட்டணம், வீட்டுச் செலவுகள் எல்லாமே அமீரகம் போலத்தான் இருக்கின்றது. மேலும் டொனேஷனாகப் பெருந்தொகை வேறு கொடுக்க வேண்டும். எல்லாம் கணக்கிட்டுப் பார்க்கும்போது, பள்ளிப் படிப்பு இங்கு முடித்துவிட்டு, கல்லூரிப் படிப்புக்கு இந்தியா போவதே நல்லது என்று முடிவெடுத்துவிட்டார்.

துபாய்த் தோழியின் தம்பி, சென்னைவாசி. துபாய்க்குச் சுற்றுலா வந்திருந்தவன், “அக்கா, சென்னையைவிட துபாய் சீப்பாகத் தெரிகிறதே!!” என்று சொன்னானாம்.  ஒவ்வொருமுறை இந்தியா போய் வரும்போதும் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது!!

Post Comment

திறப்புவிழா






ஸ்ஸப்பா... வருஷா வருஷம் இது ஒரு வேலையாப் போச்சு. நம்மூர்ல போகிப் பொங்கலுக்கு இதைச் செய்வாங்க. நான் வருஷத்துக்கொருவாட்டி ஊருக்குப் போகும்போதெல்லாம் இதைச் செய்யவேண்டி இருக்கு...

என்னன்னு சொல்லாமலே புலம்பிகிட்டிருக்கேன் பாத்தீங்களா.. என் ரங்க்ஸும் இதத்தான் சொல்வாரு. முதல்ல விஷயத்தைச் சொல்லிட்டு அப்புறம் புலம்புன்னு. அப்படின்னா அவரும் கரெக்டாத்தான் சொல்லிருக்காரு போல.. நாந்தான் உடனே அதுக்கும் கூட நாலு புலம்பல் சேர்த்துப் புலம்புவேன்.

சரி..சரி.. நீங்களும் டென்ஷனாகாதீங்க..  வேறென்னங்க.. வருஷா வருஷம் லீவுல ஊருக்குப் போறோம்னு ஒருவார்த்தையில சொல்லிட்டுக் கிளம்பிடுறோம். ஆனா, அந்த ஒரு வார்த்தைக்குப் பின்னாடி எம்புட்டு வேலை இருக்கு தெரியுமா? கிளம்புற ஒரு மாசத்துக்கு மின்னயே அரிசி, பருப்பு, புளின்னு மளிகைகளை எல்லாம் கணக்குப் பாத்துச் செலவு பண்ணிக் காலி பண்ணிடனும். ஃப்ரிட்ஜிலயும் காய்கறிகளோட பட்டர், ஜாம், சாஸ்,சீஸ் எல்லாத்தையும்  காலி பண்ணனும். அதுவும் எப்படின்னா, கரெக்டா கடைசி நாள்தான் எல்லாம் காலியாகிற மாதிரி பாத்துக்கணும். கடைசி நாள் சிம்பிளாவாவது சமைக்கவேண்டாமா பின்ன? (யாரது.. தினமுமே என் சமையல் சிம்பிள்தானே நக்கலடிக்கிறது..)

அப்புறம் பேப்பர், ஃபோன், தண்ணி கட் பண்றதுக்கு ஃபோன் பண்ணியாச்சான்னு ரங்க்ஸை நச்சரிக்கணும்.. கிச்சன்ல அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர் முதல் ஹால் ஃபர்னிச்சர் - ஸோஃபா, டைனிங் டேபிள், சேர், கம்ப்யூட்டர்+டேபிள் போன்ற எல்லாத்தையும் தூசி அடையாம இருக்க பெட்ஷீட் அல்லது பேப்பர் போட்டு மூடணும். இடையில் ஊருக்குப் போற ஷாப்பிங், பேக்கிங்.. நடுவுல பசங்க பரிட்சை, ஹோம் வர்க்.. இதுல குக்கிங்கும் செய்யணும்...  கதவு, ஏஸி, ஜன்னல்னு காத்துல தூசி வீட்டுக்குள்ள வர்ற வழிகளை டைட்டா மூடி/பேப்பர் வச்சு அடைக்கணும்.

இருந்தாலும் ஒரு பத்து நாளைக்கொரு தரம் வீட்டைத் திறந்து பாத்துக்கச் சொல்லி யார்கிட்டயாவது பொறுப்பாச் சாவி கொடுக்கணும். நட்புகள், உறவுகள்னு எல்லார்கிட்டயும் ஊருக்குப் போறேன்/வர்றேன்னு தகவல் சொல்லணும். செடிகளுக்குத் தண்ணி ஊத்த ஆள் ஏற்பாடு பண்ணனும். அந்த ஆள் தவறாம வர்றாரான்னு கவனிச்சுக்க இன்னொரு ஆள்கிட்டச் சொல்லி (alternative) வைக்கணும்... என்னது இதுக்கே “ஸ்ஸப்பா”ங்கிறீங்க..



இப்ப ஊருக்குப் போயாச்சு. அப்பாடான்னு மூச்சு விடாதீங்க.. அங்க பூட்டிக் கிடக்கிற வீட்டைத் திறந்து ”திறப்பு விழா”  நடத்தணும்.. அதாங்க.. சுத்தம் செய்யணும். அவ்வ்வ்வ்...  பேப்பர், பால், தண்ணி, வேலைக்காரர் எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணனும்.  சமையலுக்கு இங்க போட்ட மாதிரியே ஒரு ஸ்பூன் மிளகாய்ப் பொடியைப் போட்டுட்டு, “அச்சச்சோ, காரம் கூடிப் போச்சே”ன்னு மாமியார்கிட்டே அசடு வழியணும்... ஒரு வழியா “கை திருந்தி” சமைக்க ஆரம்பிக்கும்போது லீவு முடியும். மறுபடி எல்லாம் ஏறக்கட்டி,  காலி பண்ணி...  கிளம்பி இங்க வந்து... ”இனிமே யாராவது லீவுல ஊருக்குப் போணும்னு சொல்லிப் பாருங்க”ன்னு புலம்பிகிட்டே இங்க மறுபடி எல்லாத்துக்கும் ”திறப்பு விழா” நடத்தி...

அதெங்கே..? ‘பிரசவ வைராக்கியம்’ மாதிரி அடுத்த மாசமே, “இன்ஷா அல்லாஹ் அடுத்த வாட்டி ஊருக்குப் போகும்போது...”ன்னு ஆரம்பிக்கிறது வேற யாரு.. நானேதான்... ஹூம்...

இதெல்லாம் போறாதுன்னு இப்ப ஒரு மூணு வருஷமா இன்னொன்னுக்கும் சேத்து மூடு விழா/ திறப்புவிழா நடத்த வேண்டியிருக்கு. என்னன்னு கண்டுபிடிங்க பாப்போம்..  ஆமாம், “வலைப்பூ”வுக்குத்தான்!!

ஊருக்குப் போயாச்சு, வந்தாச்சு.. அப்புறமென்ன... வழக்கம்போல அடுத்த பதிவு “India Special Edition"தான்!!

Post Comment