Pages

டவுட்ஃபுல் டயட்
"ங்க இது சரிவருமா...”

“அதெல்லாம் சரியாத்தான் இருக்கும்..”

“இல்லை, இதுக்கு முன்னாடியும் பலமுறை முயற்சி பண்ணியும்... ஒண்ணும் பிரயோஜனம் இல்லை.. அதான் டவுட்டா இருக்கு..”

”இந்த வாட்டி கண்டிப்பாச் சரியா வரும். கவலைப் படாதே..”

“அதில்லைங்க......”

“ஸ்ஸ்... என்ன நீ? புருஷன் ஒரு நல்ல காரியம் செய்யப்போறான்னா, அதுக்கு மனைவி “சென்று வா, வென்று வா”ன்னு பக்கபலமா நிக்கணும். அத விட்டுட்டு, “போகாதே போகாதே என் கணவா”ன்னு பத்மினி மாதிரி புலம்பக் கூடாது!!”

“ஆங்... நீங்க மட்டும் போருக்குப் போறதுன்னா, நான் ஏன் தடுக்கப் போறேன்... நல்லா போயிட்டு வாங்கன்னு ஜந்தோஜமா அனுப்பி வைப்பேன்.. இங்க என்னையுஞ் சேத்துல்ல இழுக்குறீங்க...”


“இதென்ன போருக்குப் போற அளவுக்குக் கஷ்டமா? டயட் சமையல்தானே?”

“ஆமா.. அன்னாடம் சமையலே ஒரு குருஷேத்திரமாத்தான் இருக்கு!! சாதாரண சமையலுக்கே நாக்கு தள்ளும்.. இதிலே நீங்க வேற டாக்டர் தந்தாருன்னு டயட் சமையல் லிஸ்டை நீட்டுறீங்க..... ஏந்தான் ஆண்டவன் எனக்கு இப்பிடிலாம் சோதனைகள் தர்றானோ.. இதுக்கு நிஜப் போர்க்களமே பரவால்லை... அங்கல்லாம் சமைக்க வேண்டாமே”

புலம்பிக் கொண்டே “டயட் லிஸ்ட்” மீது பார்வையை ஓடவிட்டேன். அதிர்ந்து போய் அலறினேன்!!

“சந்தேகமேயில்லை, இந்த டாக்டர் போலி டாக்டர்தான்!! எங்கப் போய் பிடிச்சீங்க இந்த டாக்டரை? வாங்க உடனே ஒரு “வாசகர் கடிதம்” எழுதுவோம்!!” 


“ஏய், நிறுத்து...நிறுத்து.... போலி டாக்டரா.. என்ன சொல்றே?”

“ஆமாம், டயட்னா என்ன? அசைவமே சாப்பிடாம, காய்கறி, பழங்களைப் பச்சயா சாப்பிடுறதுதானே? அதிலயும் கேரட்தான் நிறையச் சாப்பிடச் சொல்வாங்க. இந்த டாக்டர் என்ன எழுதிருக்கார் பாருங்க... காலையில் முட்டை, மதியம் சிக்கன்-மட்டன், ராத்திரி மீனுன்னு மூணுவேளையும்  அசைவம் அதுவும் தெனமும் சாப்பிடச் சொல்லி எழுதிருக்கார்!! அதுவுமில்லாம, கேரட்டே சாப்பிடக்கூடாதாம்!! என்ன கொடுமை இது??”

"இவ ஒருத்தி... எப்படி விளங்க வைப்பேன்... ஆ.. காட்டுல பாத்தீன்னா, யானை இலை தழை மட்டும்தான் சாப்பிடும். சிறுத்தை, அசைவம் மட்டும்தான் சாப்பிடும். இப்பச் சொல்லு, எது ஒல்லியா இருக்கு?”

“ம்ம்... சிறுத்தை எப்பவும் ஓடியாடி இருக்கும். ஆனை அசைஞ்சு அசைஞ்சு மெதுவாத்தேன் நடக்கும். அதயும் சொல்லுங்களேன்..."

"இந்த எடக்கு மடக்கு பேச்சுக்கொண்ணும் குறைவில்லை... போய் அதுல இருக்கதச் செஞ்சுக் கொண்டுவா...”

“ஏங்க நல்லா கன்ஃபர்மாத் தெரியுமா... இது உங்களுக்கான மெனுதானா?”

“ஏன்?”

“இல்ல... காலை 2 முட்டை; மதியம் கால்கிலோ மட்டன்; இரவு கால்கிலோ சிக்கன்” அப்படின்னு இருக்கிறதப் பாத்தா, எனக்கென்னவோ, ஏதோ ஒரு ஜிம்மி, டாமிக்கு எழுதிவச்சத மாத்தி உங்ககிட்ட கொடுத்துட்டாரோன்னு..... சரி, சரி, முறைக்காதீங்க.... உங்களுக்கு வாக்கப்பட்ட நான் மட்டும் மலக்கு(ஏஞ்சல்)ன்னா சொல்லிக்க முடியும்? ஜிம்மிக்கேத்த டாமிதானே வாக்கப்படும்?

ப்படியாகத் தொடங்கியது அந்தப் போராட்டம்.... அடிப்படை இதுதான்: கார்போஹைட்ரேட்களான சோறு, கோதுமை, சோளம் போன்றவற்றோடு, கேரட் பீட்ரூட், உருளை போன்ற மண்ணிற்கு அடியில் கிடைப்பவற்றையும் அறவே தவிர்க்க வேண்டும். எண்ணெய், சீனி கூடவே கூடாது. வாழை, மாம்பழம், திராட்சை போன்ற சில பழவகைகளும் சாப்பிடக் கூடாது. இவ்வளவுதான்.
cdm.nhg.com.sg
காலை அவித்த முட்டை, மதியமும் இரவும் அவித்த அல்லது க்ரில் செய்த மட்டன், சிக்கன் அல்லது மீன். உடன் வெள்ளரி, லெட்யூஸ், ப்ரக்கோலி, கிவி, அன்னாசி போன்ற சில காய்கறி மற்றும் பழங்கள்.  அதாவது, ப்ரோட்டீன் மற்றும் விட்டமின்கள் மட்டும் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இதில் நல்ல காரியம் என்னன்னா, சீஸ் (Cheese), பால், முட்டை ஆகியவற்றை எடை அதிகரிக்கச் செய்பவை என்று ஒதுக்கியிருந்தது தவறென்று புரிந்து கொண்டோம்.  மற்றும், அசைவ உணவுகள் எடையைக் கூட்டுபவை அல்ல, அவற்றை நாம் சமைக்கும் முறையே அதனால் வரும் பிரச்னைகளுக்குக் காரணம் என்று நான் சொல்லிவந்தது உண்மையே என்று நிரூபணமானது.

எண்ணெய், தேங்காய், முந்திரி எதுவும் சேர்க்காமல், உரிய மசாலாக்கள் சேர்த்து வேக வைத்தோ, க்ரில் செய்தோ உண்டால் போதுமானது. உப்பு குறைக்கச் சொல்லப்படவில்லை என்றபோதும், இந்த டயட்டினாலேயே என் கணவரின் உயர் இரத்த அழுத்தமும் சீரானது இன்னொரு பலன்.

(எச்சரிக்கை: இந்த ப்ரோட்டீன்-ரிச் டயட் கிட்னி செயல்பாட்டைப் பாதிக்கும் என்பதால் யாரும் சுயமாக, மருத்துவர் ஆலோசனையின்றி இந்த டயட்டை முயற்சிக்க வேண்டாம்).

ப்படியாக, ஒரே மாதத்தில் 6 -7 கிலோ எடை குறையவும், பார்ட்டி பயங்கர சந்தோஷமும்  பெருமையுமாக என்னிடம் வந்து சொன்னார்.


“என்னது, 7 கிலோ குறைஞ்சிடுச்சா?”

”ஏன் வருத்தமாருக்கா? இப்படி சாப்பிடாமக் கிடந்து எடையக் குறைக்கிறேனானே புருஷன்னு கவலையாருக்கா உனக்கு? எடை குறைஞ்சா ஆரோக்கியம் கூடும். கவலைப்படாதே..”

“ம்க்கும்.... இங்க யாரு கவலைப்பட்டாங்களாம்? ஏதோ நீங்க கொஞ்சம் குண்டா இருக்கப் போயித்தான், உங்கம்மா எனக்கும் சமைக்கத் தெரியும்னு நம்புறாங்க. ஏற்கனவே “பூனையை வளர்த்து கிளி கையில் கொடுத்துட்டோமே”ன்னு அவங்களுக்கு ஏக வருத்தம். இதுல நீங்க இப்படி ஒல்லியாப் போனா அவ்ளோதான்.. என் தலைதான் உருளும்...”

“ஙே...”
ரம்பத்தில் அலுவலகம் மற்றும் வெளியே சந்திக்கும் நண்பர்கள், உறவுகள் எல்லாரும் “அடடே, வெயிட் குறைச்சிருக்கியா? வெரிகுட்” என்று பாராட்டுவதை என்னவோ சந்தூர் சோப் விளம்பரத்தில் “எச்சூஸ்மி, நீங்க எந்த காலேஜ்” என்று கேட்டதைப் போல  உச்சி குளுந்து போய் வந்து சொல்லி சொல்லி பெருமையடிச்சுகிட்டிருந்தார்.

தொடர்ந்து அடுத்த மாதங்களிலும் இதே மெனு தொடர்ந்ததில் நல்ல முன்னேற்றம் - எடை குறைவதில். இப்போது பார்ப்பவர்களெல்லாம், “ஏ.. என்னப்பா சுகர் எதுவும் இருக்கா? டாக்டர்ட்ட போய் செக் பண்ணு. இப்படி எளச்சிட்டியே?” என்று கேட்பதாகச் சொல்லிக் கடுப்பானார். எனக்கு சந்தோஷம். இருக்காதா...

விக்கிபீடியா
healthyfoodforkidsfree.blogspot.com
ப்படியாக ஒரு நாள், இருவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது எங்கள் இருவரின் உணவுத்தட்டுகளையும் சுட்டிக்காட்டிச் சொன்னேன், “இதெல்லாம் ரொம்ப அநியாயங்க.. என் ப்ளேட்டைப் பாருங்க, அரை ப்ளேட் சோறு, தொட்டுக்க கொஞ்சமா கூட்டு, கறி இருக்கு. உங்க ப்ளேட்ல பாருங்க, ப்ளேட் முழுசும் நெறஞ்ச மாதிரி சிக்கன், தொட்டுக்கக் கொஞ்சமா சோறுன்னு இருக்கு... எனக்கென்னவோ இன்னும் டவுட்டாத்தான் இருக்கு!!”

“ஸ்ஸ்... இனும் உன் டவுட் போகலையா... அவர் நெஜ டாக்டர்தான்னு எத்தனை தடவை...”

“எனக்கு டவுட் டாக்டர் மேலே இல்லை”

“அப்போ....”

“ம்ம்... ’எம்பொண்டாட்டி மட்டன்சிக்கனையே எங்கண்ணுல காட்ட மாட்டேங்கிறா.. காய்கறியா போட்டு கொல்றா.. நீங்கதான் என்னைக் காப்பாத்தணும்’ன்னு டாக்டர்கிட்ட நீங்களே போய்ச் சொல்லி மூணுவேளையும் நான் -வெஜ் சாப்பிட ப்ளான் பண்ணி டயட் மெனு எழுதி வாங்கினீங்களோன்னுதான் எனக்கு டவுட்!!”

Post Comment

23 comments:

இராஜராஜேஸ்வரி said...

ஆச்சர்யமான டயட்...

Ranjani Narayanan said...

நல்ல டயட் தான்.
இந்த டயட் விஷயத்தில் மருத்துவர்கள் சொல்வது சிலசமயம் புரியத்தான் மாட்டேனென்கிறது.
பாவம் உங்கள் கணவர், நல்ல டவுட் உங்களுக்கு!

//ஜிம்மிக்கேத்த டாமிதானே வாக்கப்படும்?” // நகைச்சுவை அசத்தல்! பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைத்தது உங்கள் பதிவு.
பாராட்டுக்கள்!

கோமதி அரசு said...

“இதெல்லாம் ரொம்ப அநியாயங்க.. என் ப்ளேட்டைப் பாருங்க, அரை ப்ளேட் சோறு, தொட்டுக்க கொஞ்சமா கூட்டு, கறி இருக்கு. உங்க ப்ளேட்ல பாருங்க, ப்ளேட் முழுசும் நெறஞ்ச மாதிரி சிக்கன், தொட்டுக்கக் கொஞ்சமா சோறுன்னு இருக்கு... எனக்கென்னவோ இன்னும் டவுட்டாத்தான் இருக்கு!!”//

ஆமாம், எனக்கும் டவுட்டாத்தான் இருக்கிறது.

இந்த மக்கள் இருக்கிறார்களே! மெலிந்தால் என்ன உடம்புக்கு? ஏன் மெலிந்து விட்டாய் என்கிறார்கள்.
வயசுக்கு ஏத்த உடம்பு வேண்டாமா? சின்ன பிள்ளை போல் இருக்கிறாயே என்கிறார்கள்.


கீழே விழுந்து கால் அடிபட்டு ஆறு ஏழுமாதமாய் உடற்பயிற்சி செய்யாமல் உடம்பு கொஞ்சம் சதை வைத்தவுடன் ஏன் இப்படி குண்டாகி விட்டாய்? வெகு அழகாய் கொடி போல் உடம்பு சின்னபெண்ணாய் இருந்ததே! என்கிறார்கள்.

நல்ல நகைச்சுவையுடன், ஆரோக்கியம் உணவு பற்றி சொல்லி விட்டீர்கள்.
கோமதி அரசு said...

ஸ்ஸ்... என்ன நீ? புருஷன் ஒரு நல்ல காரியம் செய்யப்போறான்னா, அதுக்கு மனைவி “சென்று வா, வென்று வா”ன்னு பக்கபலமா நிக்கணும். அத விட்டுட்டு, “போகாதே போகாதே என் கணவா”ன்னு பத்மினி மாதிரி புலம்பக் கூடாது!!”//


“பூனையை வளர்த்து கிளி கையில் கொடுத்துட்டோமே”ன்னு அவங்களுக்கு ஏக வருத்தம். இதுல நீங்க இப்படி ஒல்லியாப் போனா அவ்ளோதான்.. என் தலைதான் உருளும்...”//

ரசித்து சிரித்தேன்.

நல்ல நகைச்சுவை பதிவுகள் தொடர்ந்து எழுதலாம் ஹுஸைனம்மா.

எங்களுக்கு மனம் விட்டு சிரிக்க நல்ல வாய்ப்பு.

ஸ்ரீராம். said...

ஹா...ஹா... ஹா...

இந்த டயட் எல்லோருக்கும் ஒத்து வருமா என்பது சந்தேகம்தான். சிக்கன் சாப்பிட்டாலும் மட்டன் சாப்பிடவே கூடாது என்றுதானே சொல்வார்கள்? முட்டையில் கூட வெள்ளைக்கரு அல்லது மஞ்சள் கரு மட்டும் என்று சொல்வார்களே...

எண்ணெய், உப்பு, காரம் மசாலா ஆகியவைகளைத் தவிர்த்தால் போதும் போலும்!

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

செம...வயித்துல பால வார்த்தீங்க :-)

சிராஜ் said...

பொதுவா டயட் பற்றிய கட்டுரைகள் என்றாலே போர் அடிக்கும்... கத்திரிக்காய வேக வை, பீன்ஸ அவுச்சு வைன்னு போட்டு அறுப்பாங்க... ஆனால் ஒரு இன்ட்ரஸ்டிங்கான நடையில் எழுதி முழு கட்டுரையையும் படிக்க வச்சது ஒரு சாதனை தான்...

அழகான பதிவு... வெல் டன்...

msuzhi said...

சிரிப்பு டயட்.

Nooruddin said...

Hilarious. "சுவை"யான பதிவு.

ராமலக்ஷ்மி said...

ஆம். எடை அதிகரிக்கச் செய்பவை என நாம் ஒதுக்குபவற்றைப் பரிந்துரைக்கிறார்கள் இப்போது மருத்துவர்கள். ஒவ்வொருவருக்கும் இது வேறுபடும் என்பதும் கவனத்தில் வைக்க வேண்டியதாயிருக்கிறது.

பதிவு, ஏகத்துக்கும் இனிப்பு கலந்து தரப்பட்ட டயட்:))!

தராசு said...

ஹூஸைனம்மா,

வணக்கம். ரொம்ப நாளைக்கப்புறம் இப்பத்தான் உங்க பக்கம் வர முடிஞ்சுது.
இன்னும் அந்த தியாகியை (எங்க மச்சானைத்தான்)கொடுமைப் படுத்துறதை நீங்க நிறுத்தலையா????

கீதமஞ்சரி said...

எந்த விஷயத்தையும் நீங்க எழுதற விதமே அலாதி. கடைசியில் நீங்க சொன்ன விஷயமும் யோசிக்க வேண்டியவிஷயம்தான். எத்தனை நாளைக்குதான் இப்படி இரண்டு சமையல் செய்வது? அலுத்துப்போயிடுமே... எப்படியோ ஆரோக்கியமாக இருந்தால் சரிதான்.

வெங்கட் நாகராஜ் said...

இந்த டயட்டில் ‘நகைச்சுவை” அதிகம்.....

ரசித்தேன்...

நிலாமகள் said...

ஹஹஹா....

நல்ல வேளை! நீங்க அசைவம்:))

சைவ டயட்டில் நானும் போன மாசம் 6 கிலோ குறைந்தேன். விரைவில் பதிவேன்.

தனிமரம் said...

இந்த டயட்விடயமே ஜொல்லுதான் !ஹீ

ஹுஸைனம்மா said...

ராஜி மேடம்: நன்றி.

ரஞ்சனி மேடம்: ஒவ்வொருவருக்குமான உடல்நலம் மற்றும் வேலை சூழ்நிலைக்கேற்ற மாதிரி டயட்டை வடிவமைக்கிறாங்க போல. நன்றி மேடம்.

கோமதி அக்கா: ஆமா, வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் வையகம்னு சொல்றமாதிரி, மெலிஞ்சாலும் கேள்விகள், எடை கூடினாலும் கேள்விகள்தான். நன்றி அக்கா.

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார்: ஒரே டயட் எல்லாருக்கும் பொருந்தாதுதான். //சிக்கன் சாப்பிட்டாலும் மட்டன் சாப்பிடவே கூடாது // சமைக்கும் முறையில்தான் இருக்கிறது. மேலும், எதுவானாலும் அளவோடு இருப்பதும் அவசியம்.

//எண்ணெய், உப்பு, காரம் மசாலா ஆகியவைகளைத் தவிர்த்தால் போதும்//

காரம், மசாலா குறைத்தால் போதும் - முழுமையாகத் தவிர்த்தால் சுவை இராது. எண்ணெய், உப்பு, சோறு, சீனி ஆகியவை முடிந்தவரை குறைத்தல் நன்று. நன்றி சார்.

ஹுஸைனம்மா said...

ஆஷிக் தம்பி: வ அலைக்கும் ஸலாம். //வயித்துல பால வார்த்தீங்க// சமைக்கும் முறையைக் கவனமாக வாசிச்சுக்கோங்க தம்பி. :-)

சிராஜ்: //ஒரு இன்ட்ரஸ்டிங்கான நடையில் எழுதி// நன்றி.
//முழு கட்டுரையையும் படிக்க வச்சது// கட்டுரையா இது?? இதுக்கு நீங்க பாராட்டாமலே இருந்திருக்கலாம்.

ஹுஸைனம்மா said...

துரை: நன்றிங்க.

நூருத்தீன் அண்ணன்: நன்றி.

ராமலக்ஷ்மிக்கா: மிக்க நன்றி அக்கா.

ஹுஸைனம்மா said...

தராசு: வாங்க, நானும் ரொம்ப நாளைக்கப்புறந்தான் வர்றேன்.
//அந்த தியாகியை (எங்க மச்சானைத்தான்)கொடுமைப் படுத்துறதை நீங்க நிறுத்தலையா//
அவர நிறுத்தச் சொல்லுங்க. நானும் நிறுத்துறேன். :-)

கீத மஞ்சரி: நன்றிப்பா. ஆமா, நாலே பேர் இருக்க வீட்டுல ரெண்டுவித சமையலா.. ஒரு சமையல் செய்றதுக்கே கஷ்டமாருக்கு!!

ஹுஸைனம்மா said...

வெங்கட் நாகராஜ்: நன்றிங்க.

நிலா மகள்: சைவத்துக்கே டயட் தேவைப்படுதா? எப்படிக் குறைச்சீங்க? பதிவு எழுதிட்டீங்களா?

தனிமரம்: நன்றி.

Ranjani Narayanan said...

இன்றைய வலைச்சரத்தை நீங்கள் அலங்கரிக்கிறீர்கள். நேரம் கிடைக்கும் போது வாருங்கள்.
http://blogintamil.blogspot.in/2015/02/blog-post_15.html

Unknown said...

Hussainamma eppavum weight reduce irukka