Pages

என்ன விலை அழகே..??
சில மாதங்களுக்கு முன்பு, சின்னவனுக்கு நெற்றியில் ஒரு சின்ன கொப்புளம் வர, அதற்காக மருத்துவரைச் சந்திக்க சென்றிருந்தோம். பரிசோதனைக்குப் பின், கொப்புளத்தைச் சிறு அறுவை சிகிச்சை செய்து நீக்கியாக வேண்டும் என்று சொன்ன மருத்துவர், தன் பேச்சினிடையில் ஒரு ஏழெட்டு முறையாவது “கண்டிப்பாக முகத்தில் தழும்பு வரத்தான் செய்யும்; அதுக்கு ஒண்ணும் செய்ய முடியாது” என்று சொல்லிவிட்டார்.

நான் அறுவை சிகிச்சை, அனஸ்தீஷியா என்ற கவலையில் இருந்ததால் அதைப் பற்றிக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், மீண்டும் மீண்டும் சொல்லவும், ”ஏன் டாக்டர், தழும்பு இருந்தா என்ன? அதனால வேற எதும் பிரச்னை வருமா?” என்று நான் கேட்க... டாக்டர் ஒருமாதிரி ஜெர்க் ஆகிப்போனார். பிறகுதான் புரிந்தது.  அறுவை சிகிச்சை நிபுணரான அவரிடம் வருபவர்கள் அநேகமாக எல்லாருமே சொல்லும் முதல் கண்டிஷன், “தழும்பு வராத மாதிரி ஆபரேஷன் பண்ணுங்க” என்றுதானாம்!!

”அதனால் வருபவர்கள் எல்லோரையுமே, அடுத்த ரூமில் இருக்கும் ப்ளாஸ்டிக் சர்ஜனிடம் அனுப்பி விடுகிறேன். கீழே விழுந்து முகத்தைக் கிழித்துக் கொண்டு வரும் சிறுவர்களுக்குக்கூட தையல் தழும்பு தெரியக்கூடாது என்று பெற்றோர் சொல்கிறார்கள்.” என்று வருத்தப்பட்டுச் சொன்னார்!! அழகு படுத்தும் பாடு!!

ன் பெரியவனுக்கு, ஒன்றிரண்டு பற்கள் மட்டும் முன்பின்னாக இருக்கும். அதனால் பிரச்னைகள் இல்லை. ஆனால், ஒரு நண்பர் குடும்பத்தினர், என்னைப் பார்க்கும்போதெல்லாம், அவனது தெற்றுப்பல்லைச் சரியாக்கும்படி என்னை வலியுறுத்துவர். அதற்குக் காரணமென அவர்கள் சொல்வது, பேச்சு அல்லது உண்பது அல்லது பற்தூய்மை என்பவை அல்ல. நாளை அவன் வேலைக்கு இண்டர்வியூ போகும்போது, பல்வரிசை சரியா இல்லன்னா, அவனுக்கு Self-confidence இருக்காதாம்!! ஙே....

இப்ப ட்ரெண்ட் என்னன்னா,  தெத்துப் பல் ஒன்றுகூட இல்லாத பல்வரிசை இருக்கிறவங்ககூட “க்ளிப்” மாட்டிட்டு இருக்காங்க!!  ”அழகான” பல்வரிசைக்காகவாம்!! எனக்கு அதுல ஆச்சரியம் என்னன்னா,  பல்வலி வந்தாலே டாக்டர்கிட்ட போகப் பயம் - ஊசி போடுவாங்களே... அதுவும் கத்தமுடியாதபடிக்கு வாயத் திறந்து வச்சுல்ல போடுவாங்க!!  இதுவே, பல்வரிசையைச் சரிபண்ணனும்னா, எத்தனை ஊசி போடணும், எத்தனை பல் எடுக்கணும், அந்த க்ளிப்பை மாட்டி வச்சுகிட்டு சாப்பிடப் படுகிற அவஸ்தை இருக்கே... எப்பா....  அதைவிட முக்கியமாக அதற்கு ஆகும் செலவு!! ஆனா, “அழகு” என்ற ஒன்றுக்காக வலி, சிரமம், செலவு எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளத் தயாராக இருப்பவர்களைப் பார்க்கும்போது வருவது ஆச்சரியமா, அதிர்ச்சியா??!!

சென்ற வருடம் உறவு வட்டத்தில், ஒரே சமயத்தில் மூன்று குழந்தைப் பேறுகள் இருந்தன.  ஒருவரின் குழந்தை,  பிறந்து சில நாட்களில் இதயக் கோளாறு காரணமாய் இறந்துவிட்டது. இன்னொருவருக்கோ, சில பிரச்னைகளால் குறைமாதத்தில் பிறந்து, தொடர் ஆஸ்பத்திரி வாசம் என்று சிரமப்பட்டார்கள்.  இதையெல்லாம் யோசித்துக் கொண்டே, மூன்றாமவருக்கு தொலைபேசி, குழந்தை நலமா என்று விசாரித்தேன். பேசியவர், “நலம்தான், ஆனா...” என்று இழுத்தார்.

பதற்றத்தில், “என்னாச்சு” என்று கூட கேட்க முடியவில்லை என்னால். “ஆனா, கறுப்பா இருக்கு. பொம்பளப் புள்ள கறுப்பா பிறந்திருக்கேன்னு கவலையா இருக்கு” என்றார்!! அவரைச் சொல்லிக் குற்றமில்லை.  மேற்சொன்ன இரு நிகழ்வுகளையும் சொல்லி,  ஆரோக்கியமாய் அதுவும் சுகப்பிரசவமாய்ப் பிறந்ததே பெரிதல்லவா என்று கூறினேன்.  இந்தியா போகும்போதெல்லாம், சிலர் என்னிடமே  ”உன் மகன் கறுப்பா ஆகிட்டே வரான், அதைத் தேய் இதைக் குடு”ன்னு ஒரே டார்ச்சர்!!


இப்படி அழகு, அழகு என்று ஒரு மாயையில் மூழ்கிக் கிடப்பவர்களைக் குற்றம் சொல்வதா, அல்லது சமூகம்தான் அதற்குக் காரணம் என்று சொல்லி அவர்களை நியாயப்படுத்துவதா எனப் புரியவில்லை. ஆனால் ஒரு விஷயம், இந்த அழகு என்பது, பலருக்கும் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போதுதான் தேவைப்படுகிறது. வீட்டினுள் குறைந்தபட்ச சுத்தமாகக் கூட இருக்க முடியாதவர்கள், புற இடத்தில் மட்டும் அழகைப் பேணுவது புதிரானது.புறஅழகு மட்டுமே இவ்வுலகில் பிரதானமாக இருப்பதன் தொடர்ச்சிதான், “ஆஸிட் வீச்சு”களும். காண்டாக்ட் லென்ஸ்கள்கூட.  அதிலும் இந்தப் புற அழகை, தன்னம்பிக்கையோடு தொடர்புபடுத்தும் வியாபாரத் தந்திரத்தை என்னவென்பது. சிவப்பாய், அழகாய் இருப்பதுதான் Confidence-ஆம்!! அதைப் புரிந்துகொள்ளாத இளைய தலைமுறையைக் கண்டு நம் மனம் பதறுகிறது.தடுப்பூசி காணாத சென்ற தலைமுறைகளில், ”பெரியம்மை” என்றும் ஒரு நோய் இருந்தது. இந்நோயால் தாக்கப்பட்டவர்களின் முகங்கள் முழுதும் அம்மைத் தழும்புகளால் நிறைந்திருக்கும். பெண்களே ஆயினும், அத்தழும்புகள் அவர்களின் திருமணத்திற்கு ஒரு போதும் தடையாக இருந்ததேயில்லை!! இன்று...???

Post Comment

10 comments:

raja said...

arumaya pathivu

ஸாதிகா said...

அத்தழும்புகள் அவர்களின் திருமணத்திற்கு ஒரு போதும் தடையாக இருந்ததேயில்லை!! //eean illai????niraiya iruwthuthu irukkinRathu.

ஸ்ரீராம். said...

எனக்கென்னவோ பல்-தன்னம்பிக்கை விஷயம் சரிதான் என்று படுகிறது.

கோமதி அரசு said...

அன்று பல்தூக்கலாக அப்படியே இருந்து இருக்கிறார்கள்.அப்போது இப்படிப்பட்ட வசதிகள் இல்லை. இப்போது வசதி வாய்ப்புகள் மருத்துவத்தில் வந்து விட்டது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முக சீர் அமைப்பு, பல் சீரமைப்பு செய்து கொள்கிறார்கள்.

ஆசிட் பட்டு முகம் கோரமாக இருப்பவர்களை ஓரளவு பார்க்கும் படி வைப்பதும் மருத்துவ முன்னேற்றம் தான். அவசியம் என்றால் செய்து தான் ஆக வேண்டும்.

ஆனால் அழகுக்காக ஸ்ரீதேவி போல் மூக்கை மாற்றிக் கொள்வது தேவை இல்லை.ஸ்ரீதேவியின் பழைய மூக்கு தான் எனக்கு பிடிக்கும்.அமுதா கிருஷ்ணா said...

கரெக்ட்டா சொன்னீங்க.வலி,வேதனை,பணம் என்று எதை பற்றியும் கவலை இல்லாமல் பல் டாக்டரிடம் டிங்கரிங் செய்வதே இப்போதைய ட்ரெண்ட்.இஞ்சினியரிங் படிக்கிற மாதிரி இப்போ வீட்டுக்கு ஒருத்தர் கிளிப் போட்டு இருக்காங்க.

புதுகைத் தென்றல் said...

சரியா சொன்னீங்க ஹுசைனம்மா,

பலர் வீட்டுல அழுக்கு ட்ரஸ்/ நைட்டி இல்லாட்டி மேட்சிங்கே இல்லாத ட்ரஸ்,தலைய வாரிக்கட்டாம இருப்பாங்க. கேட்டா வீட்டுலதானே இருக்கேன்னு சொல்வாங்க.

வெளிய தெருவ போனாக்கூட கொஞ்ச நேரத்துல திரும்ப வந்திடுவோம். அதுக்கே அலங்காரம்னு இருப்பாங்க. வீட்டுல கூட இருக்கறவங்களுக்கு எப்படி இருக்கும்னு நினைச்சுக்கூட பாக்க மாட்டாங்க.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

gud post

ஹுஸைனம்மா said...

ராஜா: நன்றிங்க.

ஸாதிகா அக்கா: முன் காலங்களில் அழகுக்காக திருமணம் தள்ளிப்போனதாக நான் கேள்விப்பட்டதில்லை அக்கா. உங்களுக்குத் தெரிந்த சம்பவங்கல் இருந்தால் பகிருங்கள்.

ஸ்ரீராம் சார்: /பல்-தன்னம்பிக்கை விஷயம் சரிதான்//

சார், சிலருக்கு பற்கள் வெளியே மிகவும் துருத்திக் கொண்டிருக்கும். அவர்கள் விரும்பி செய்வது தன்னம்பிக்கையைக் கூட்டும். ஆனால், அப்படியில்லாதவரக்ளும் - சாதாரணமாகத் தெரியும் பற்களுக்கும் செய்வது தேவையில்லை என்பது என் கருத்து. வீணாக உடம்பை வருத்துவது ஏன்? பணமும் விரயம்.

ஹுஸைனம்மா said...

கோமதி அக்கா: கரெக்டாச் சொன்னீங்கக்கா.

அமுதா கிருஷ்ணா: //இஞ்சினியரிங் படிக்கிற மாதிரி இப்போ வீட்டுக்கு ஒருத்தர் கிளிப் போட்டு இருக்காங்க//

உங்களுக்கு இந்த இஞ்சினியருங்க மேலே என்ன கோவம் அப்படி? :-D

ஹுஸைனம்மா said...

புதுகைத் தென்றல்: ஆமாப்பா... அவ்ங்க மட்டுமில்ல, வீடும் அந்த கோலத்துலதான் இருக்கும். சொல்லாமப் போயிட்டோம், மேக்கப் இல்லாத நடிகையப் பாத்தது போலத்தான் அவங்கலும், வீடும் இருப்பாங்க.

அபுநிஹான்: நன்றிங்க.