Pages

சீசாவுக்குள் சுனாமி





மீபத்தில் ஒரு ஆங்கில வார இதழில், ஒரு எழுத்தாளர் விமானப் பயணங்களில் குழந்தைகள் இல்லாமலிருந்தால் எவ்வளவு நல்லாருக்கும் என்று எழுதிருந்தார். கொஞ்சம் நெருடலாக இருந்தாலும், அதற்குச் சில வாரங்கள் கழித்து, பிரிட்டனில் பொதுமக்களிடம் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் ‘குழந்தைகள் இல்லாத (child-free) விமானத்தில்’ பயணிப்பதற்காக அதிகக் கட்டணம் கொடுக்கவும் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தது அதிர்ச்சியளிக்கவில்லை.  நீண்ட தூர பிரயாணங்களில் அனுபவிச்சவங்களுக்குத் தெ/புரியும்.

என்னதான் ‘குழந்தையும் தெய்வமும் ஒன்று’, ‘குழலினிது யாழினிது என்பர் மழலை சொல் கேளாதோர்’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும்,  ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பது குழந்தைகளின் சேட்டைகளுக்கும் பொருந்தும்.

ரு பட்டிமன்ற நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். கலை நிகழ்ச்சிகள், வந்திருந்த பெரியவர்களின் பேச்சு எல்லாம் முடிஞ்சு, ‘இந்திய நேர ஒழுங்கின்படி’, பட்டிமன்றம் ஆரம்பிக்கிறதுக்கே இரவு 9 மணிபோல ஆகிடுச்சு!! நிறைய தம்பதிகள் தத்தம் கைக்குழந்தைகள் மற்றும் சிறுவர்களோடு வந்திருந்தார்கள். 

ஆரம்பத்தில கொஞ்ச நேரம் அலுங்காமல், நலுங்காமல் சமர்த்தாக இருந்த குழந்தைகள், கொஞ்சம் கொஞ்சமா கசமுசன்னு ஆரம்பிச்சு, ஓடியாடி, விழுந்து எந்திரிச்சு, அப்படியே சரியா பட்டிமன்றம் ஆரம்பிக்கும்போது அநேகமா எல்லாக் குழந்தைகளுமே சோர்வு, எரிச்சல், பசி ஆகியவற்றால் அழவும், சிலர் தரையில் உருண்டு அடம்பிடிக்கவும் ஆரம்பிக்க, பெரிய களேபரமா ஆகிடுச்சு!! சில பெற்றோர்கள் பட்டிமன்றத்தைச் சரியா கேட்க முடியாத எரிச்சலிலும், மற்றவர்களுக்கு இடையூறாக ஆகிவிட்ட கோபத்திலும் அங்கேயே குழந்தைகளை அடிக்கவும் செய்தார்கள்.



என் மனதில் எழுந்த கேள்வி இதுதான்: இந்த மாதிரி நிகழ்ச்சிகள் முடியுறதுக்கு குறைந்த பட்சம் மூணு மணிநேரம் ஆகும்னு எல்லாராலயும் சுலபமா ஊகிக்க முடியும். அத்தனை நேரம் நம் குழந்தைகள் அமைதியாக, பொறுமையாக இருப்பார்களா என்று பெற்றோருக்குத் தெரியாதா என்ன? அதிலும் குழந்தைகளுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத இடத்தில் எப்படி குழந்தைகள் அமைதி காப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும்? இப்போதைய பெற்றோர்கள் இந்த குறைந்த பட்ச அறிவு/அனுபவம்கூடவா இல்லாமல் இருக்கிறார்கள் என்று ஆச்சரியமாக உள்ளது.
          
ந்த மாதிரி நிகழ்ச்சிகளை விடுங்க - இவையாவது கொஞ்சம் காற்றோட்டமா, வெளிச்சமா இருக்கிற இடத்தில் நடக்கும். சினிமா தியேட்டர்கள்?? அங்கயும் கைக்குழந்தை முதல் எல்லா வயசு வரை பிள்ளைகளை அழைத்துச் செல்கிறார்கள். அழும் குழந்தைகளால் அவர்களுக்கும் கஷ்டம், மற்றவர்களும் ‘நாங்களும் காசு கொடுத்துத்தான் பார்க்க வந்திருக்கோம்’ என்று சண்டைக்கு வருவார்கள். முக்கால்வாசி நேரம், குழந்தையை வைத்துக் கொண்டு இருவரில் ஒருவர் - பெரும்பாலும் அப்பாதான் - வெளியே நிற்பார். இதுக்கு, பிள்ளைய வச்சுகிட்டு வீட்டிலேயே அவர் இருந்திருந்தால், டிக்கட் காசோடு நிம்மதியும் மிஞ்சியிருக்கும்.

இதைவிடக் கொடுமை, பயங்கர வன்முறைக் காட்சிகள் நிறைந்த படத்திற்கு சிறுவர்களையும் அழைத்து வருவது! எப்படி முடியுது இவங்களால?

ருசில பெற்றோர்களிடம் பேசியபோது அவர்கள் சொல்லும் காரணங்கள், ’நாங்க தனியா இருக்கோம், பிள்ளைகளை வீட்டில் பாத்துக்க ஆளில்லை’ என்பது.  சரி, குழந்தைகள் வளரும்வரை இந்த மாதிரி நிகழ்ச்சிகளெல்லாம் தவிர்க்கலாமே என்றால்,  ‘எங்களுக்கும் ஒரு பொழுதுபோக்கு, ரிலாக்ஸ் பண்ணிக்க வழி வேண்டாமா?’ என்று நம்மை முறைக்கிறார்கள். அட அப்பாம்மாக்களே, போற இடத்துல குழந்தைகள் இப்படி அழுது அழிச்சாட்டியம் பண்ணி வைக்கும்போது இருக்குற நிம்மதியும்ல போய்த் தொலையும்?

’அங்கெல்லாம் நாங்க போறதில்லை; பிரார்த்தனைக் கூடங்களுக்கு மட்டுமே போகிறோம். அங்கு எங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்வதன்மூலம் அவர்களைச் சிறுவயதிலேயே ஆன்மீகத்தில் பழக்குகிறோம்’ என்கிறீர்களா?  எந்த இடமானால் என்ன, குழந்தைகளுக்குச் சுவாரசியமான விஷயங்கள் இல்லாத இடம் என்றால், அரைமணி அமைதியாக இருந்தாலே அதிசயம்தான்!

அறியாப் பிள்ளைகளை அதிக நேரம் பிடிக்கும் பிரார்த்தனைகள், ஆன்மீகச் சொற்பொழிவு நடக்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்வதும் தவிர்க்க வேண்டியதே. உங்கள் குழந்தைகளின் “tolerance point" உங்களுக்கு நிச்சயம் தெரியும். அதைச் சோதனைக்குள்ளாக்கி, அமைதி நாடி அங்கு வந்திருக்கும் மற்றவர்களின் நிம்மதியையும் பொறுமையையும் சோதிக்காதீர்கள். சட்டப்படி இதற்குத் தடை இல்லை என்றாலும், நமக்கென்று சில சுய கட்டுப்பாடுகள் வேண்டும்.

மனக்கிலேசத்துடன் வருபவர்கள் எத்தனையோ பேர்.. அவர்களுக்கு மன அமைதி கிடைக்கக்கூடிய இடத்தில் நம்மால் பங்கம் நேரலாமா? நம்மை அவர்களின் இடத்தில் வைத்துப் பார்த்தால்தான் இது புரியும்.

னில், குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு இதற்கெல்லாம் உரிமை இல்லையா என்ற கேள்வி வரும். நமக்கு உரிமை இருக்கிறதென்பதற்காக, மற்றவர்களுக்கும் இருக்கும் உரிமைக்கு ஊறு விளைவிக்கக் கூடாது.   கைக்குழந்தைகள் இருக்கும்போது, நம் உணவுப் பழக்கங்களில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருக்கவில்லையா? அதுபோலத்தான் இதுவும் சில வருடங்களுக்கு.  ஏன், பல தாய்மார்களுக்கு மருத்துவர்கள் நோய்த் தடுப்பிற்காக ”பலர் கூடும் பொது இடங்களுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லாதீர்கள்” என்று அறிவுறுத்தினால்  தவறாமல் பின்பற்றத்தானே செய்கிறோம்!!

சரி, அப்படின்னா குழந்தை இருக்குதுங்கிறதுக்காக நாங்க எங்கயுமே போகக்கூடாதாவென்றால், அப்படியில்லை. குழந்தைகளுக்கும் பிரியமான இடங்களுக்கு - பூங்கா, விளையாட்டு மைதானங்கள், உறவுகளின்/பள்ளித் தோழர்களின் வீடுகள் - இப்படியான இடங்களுக்கு அதிகம் செல்லலாம் .  அழைத்துச் சென்றேயாக வேண்டிய இடங்களுக்கு, உரிய தயாரிப்போடு செல்லுங்கள்.  செல்லும்முன்பே சிறுவர்களுக்கு அறிவுறுத்தி அழைத்துச் செல்லலாம். அங்கே சென்றபின் அவர்கள் நேரம் செலவிடும்படியாக சிறு விளையாட்டுப் பொருட்களை உடன் எடுத்துச் செல்லலாம். நசநசவென ஆகிவிடாத உணவுப் பண்டங்கள் வைத்துக் கொள்ளலாம்.

 
                           
 
ந்த விஷயத்தைக் குழந்தைகளின் தரப்பிலிருந்து பெற்றோர்கள் பார்க்கத் தவறிவிடுகின்றனர். நம்ம வீட்டிலேயே ஒரு இடத்தில் அரைமணிக்குமேல் இருக்க முடியாத பிராயத்திலுள்ளவர்களை பொது நிகழ்ச்சிகள், சினிமாக்கள், ஆன்மீகச் சொற்பொழிவுகளில் அமைதியாக இருக்கவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? அட, எத்தனை பேருக்கு, தம் குழந்தைகளை ஒரு இடத்தில் அமரவைத்து சாப்பாடு கொடுக்கவோ, ஹோம்வொர்க் முழுதுவதையும் எழுத வைக்கவோ முடிகிறது?

இப்பேர்ப்பட்ட குழந்தைகளை, நமக்கு (மட்டும்) பிடித்தமான இடங்களுக்கு அழைத்துச் சென்று,  கட்டிப்போட்டதுபோல மணிக்கணக்கில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முறையா? குழந்தைகளை ஒரு அறைக்குள் அடைப்பதும், சுனாமியை சீசாவுக்குள் அடைப்பதும் ஒன்றுதான்.

Post Comment