Pages

ஆப்பமும், பெண்ணெனும் படைப்பும்






எனக்கு கூடப்பொறந்த அண்ணந்தம்பி இல்லைங்கிறதும், பெண்குழந்தை இல்லங்கிறதும் பதிவுலகுக்கு நல்லாவே தெரிஞ்ச விஷயந்தான். எத்தினி தடவ புலம்பிருக்கேன்? யாராலயாவது  மறக்க முடியுமா என்ன?

நாங்க நாலு பேரும் பொண்ணுங்கங்கிறதுனால, வீடு ரொம்ப அமைதியா இருக்கும்னெல்லாம் கற்பனை பண்ணிக்காதீங்க. அப்பப்ப கொஞ்சம் கலவரம் நடக்கும்னாலும், அது அம்மாவோட ஒரே ஆர்டர்லயே ஊரடங்கு உத்தரவு பிறப்பிச்ச மாதிரி அமைதியாகிடும். சொந்தக்காரங்க வீட்டில பையங்க இருக்காங்கன்னாலும், அங்கயும் அதிகம் சேதாரங்கள் இருந்தமாதிரி பாத்த ஞாபகமில்ல. ஏன்னா, அப்பல்லாம் பசங்க என்னிக்கு வீடு தங்கிருக்காங்க, இன்னிக்கு மாதிரி? சாப்பிடவும், தூங்கவும்தானே வீட்டுக்கு வருவாங்க. அதனால, அந்த ஆபத்துகள் அப்ப புரியலை!!

அதனால, முதல் குழந்தை ஆசைப்பட்டபடியே  பையனாப் பிறந்ததும் ரொம்ப சந்தோஷம். எஸ், நான்தான் ஆசைப்பட்டேன். ஏனா? அதான் சொன்னேனே, அதன் விளைவுகள் அப்பத் தெரியாதுன்னு!!

என்னது, பெரிசா பெண்ணுரிமை பேசிட்டு, பையனுக்கு ஆசைப்பட்டேன்னு கேக்கிறீங்களா? ஒரு காரணம், எங்க வீட்டில எல்லாம் பொண்ணுங்கிறதுனால, பையன்னா ஏதோ புண்ணியம் பண்ணவங்களுக்குத்தான் பிறக்கும் அப்படிங்கிற ரேஞ்சில அப்ப சிலர் நெனச்சிகிட்டு இருந்தாங்க. எனக்கும் பையன் பிறந்தா, எனக்கே பிறந்துடுச்சு, அதனால அதுக்குனு புண்ணியமெல்லாம் பண்ணத் தேவையில்லைன்னு புரிஞ்சுக்கலாமே. அதோட, பத்து பட்டுச்சேலை இருந்தாலும், நம்மகிட்ட இல்லாத ஒரு காட்டன் சேலைக்குத்தானே ஆசைப்படுவோம். அதப்போலவும்னு வச்சிக்கோங்களேன்.

சரி, முடிஞ்ச கதையை விடுங்க. முதல் பையனுக்கு ரொம்பவே அதிகமா ஆண்டவன்கிட்ட வேண்டிக்கிட்டேன்போல, அதான் ரெண்டாவதும் பையன்னு நினைச்சுகிட்டிருந்தேன். ஆனா, ரொம்ப பெண்ணுரிமை, பெண் சுதந்திரம்னு பேசினதோட விளைவோ (தண்டனையோ)ன்னு இப்பத் தோணுது. 

ஆனாலும், அவ்வளவு சீக்கிரம் விட்டுக்கொடுத்திடுவோமா நாம? பொண்ணு இல்லாத பழியை என்னவர் தலையிலையே தூக்கிப் போட்டுட்டேன்ல!! “எங்க வாப்பா பொறுப்பில ஏழு பொண்ணைக் (3 தங்கைகள் + 4 மகள்கள்) கொடுத்த ஆண்டவன், உங்க பொறுப்பில ஒரு மகளையாவது, ஏன் அட்லீஸ்ட் உங்களுக்கு ஒரு தங்கச்சியாவது கொடுத்தானா?”னு சொல்லி பேசமுடியாம ஆக்கிட்டோம்ல.  (இருந்தாலும், ரெண்டும் பையனா இருக்கதிலேயும் ஒரு நன்மை இருக்குது. அதை இங்க எழுதிருக்கேன்  பாருங்க)

ஆனா, இந்த பருப்பெல்லாம் பையங்ககிட்ட வேகத்தான் கஷ்டமா இருக்குது.  சின்னவனுக்கு, இப்பத்தான் பள்ளியில், Islamic Studies-ல், Creation of humans சொல்லிக் கொடுத்திருக்காங்க. அதைப் பத்தி பேசும்போது, அவன் என்னிடம், “மனுஷன எப்படி படைச்சான்னு உனக்குத் தெரியுமா?”ன்னு கேட்டான். நாமதான் சந்தர்ப்பம் கிடைச்சா விடமாட்டம்ல. உடனே, “ஆம்பளைங்கள களிமண்ணுல இருந்து படைச்சான். ஆனா, பெண்ணை ஒரு உயிருலிருந்து படைச்சான். நீங்கள்லாம் ஆஃப்டர்-ஆல் களிமண்லருந்து வந்தவங்க. ஆனா, நான் ஒரு living beingலருந்து வந்தவ”னு பெருமையாச் சொன்னேன்.

உடனே, பெரியவன் ஓடி வந்து, ”அதென்ன லிவிங்-திங்? ஆம்பளையிலிருந்துதானே பெண்ணைப் படைச்சான்?”

”அதேதான். ஆனா ஏன் ஆண்னு பாக்கிற? அதுவே பெண்ணை முதல்ல படைச்சு, பெண்ணிலிருந்து ஆணைப் படைக்கத் தெரியாதா ஆண்டவனுக்கு? அல்லது, ஆணைப் படைச்ச அதே களிமண்ணிலிருந்து பெண்ணைப் படைக்கத் தெரியாதா அவனுக்கு? பெண் பல சிறப்புகள், பெருமைகள் பெற்றவள் என்பதை உணர்த்தும் விதமாகத்தான் அவளை ஒரு உயிரிலிருந்து படைச்சான்”.

”இருந்தாலும், ஆண் தானே முதல் படைப்பு?”

சரி, அவன் வழியிலேயே போய்ப் புரியவைப்போம்னு, “டேய், எப்பவுமே முதல்ல செஞ்சு பாக்கிறது ஒரு டிரையல் மாதிரி. இப்ப பேனா எழுதுதான்னு பாக்க நீ முதல்ல எதாவது எழுதிப் பாப்பேல்லியா? ஏன், நான் இப்ப தோசை அல்லது ஆப்பம் சுடுறேன்னா, முதல்ல ஊத்துற ஆப்பம் சரியா வராது. அடுத்ததுதான் சரியா வரும்.  அதுமாதிரி, அதிகப் பொறுப்புள்ள இனமான பெண்ணைப் படைப்பதுக்கு முன்னால, ஆம்பளையைப் படைச்சு டிரையல் பாத்தமாதிரின்னு வையேன்?”

பதிலே வரலை. ஹா, ஹா, நம்மகிட்ட பேசி ஜெயிக்க முடியுமான்னு பெருமையா, “என்னடா, சத்தத்தையே காணோம்?”

”ம்ம்ம்... ஆண்டவனோட படைப்புகளிலேயே அற்புதப்படைப்பு மனித இனம். அதை நீ சுடற தோசையோடயும், ஆப்பத்தோடயும் ஒப்பிட்டுச் சொல்றியே? அதனாலத்தான் எல்லாம் அறிஞ்ச ஆண்டவன் பெண்ணைக் களிமண்ணுலருந்து படைக்கலை!!”

அவ்வ்வ்வ்... இப்பவும் நானாத்தானா....

 

Post Comment

காதலர் தினம் - அஞ்சலிக் கவிதைகள் எழுதவா?





காதலர் தினமாம் இன்னிக்கு. காதல்ங்கிறது கல்யாணத்துக்கு முன்னாடி மட்டுமே செய்ற விஷயமா இருந்தது போய், இப்ப கல்யாணத்துக்கு அப்புறமாவும் செய்ற விஷயமா ஆகிடுச்சு!! சரிதானே, கல்யாணத்துக்கு அப்புறந்தானே கணவன் - மனைவியிடையே காதல், புரிதல் அதிகமா இருக்கணும்னு பின்னூட்டம் போட ரெடியானீங்கன்னா, ஸாரி, நீங்க ரொம்ம்ம்ப அப்பாவியாருக்கீங்க இன்னும் - என்னை மாதிரியே!!

கல்யாணத்துக்கப்புறம் அடுத்தவரைக் காதலிப்பதுதான் இப்ப அதிகமாகிட்டிருக்கு. சில ‘பெரீய்ய்ய மனசுள்ள’ இளைஞர்களும் கல்யாணமாகி, பிள்ளைகள் பெற்றாலும் பரவாயில்லை; என்னோடு வந்துடுன்னு பெண்கள் முன்னே தியாகியாகிடுறாங்க!! அப்பேர்ப்பட்ட தியாகிகள் கிடைத்தவுடன், இவுங்களும் தன் தற்போதைய கணவன் -பிள்ளைகளை விஷம் வச்சுக் கொன்னுட்டு, கிளம்பிடுறாங்க!! ஆண்களைப் போல குடும்பத்தை அம்போன்னு விட்டுடாமப் போறாங்களாமாம்!!

இப்ப லேட்டஸ்டா உள்ள ட்ரெண்ட் என்னன்னா, காதலர் தினம்கிறது, தன் முன்னாள் காதல்(என்ற தவறான புரிதல்)களை நினைவுகூர்ந்து அஞ்சலிக் கவிதைகள்  எழுதுவதுற்குத்தானாம்!! அதிலும், மூணாங்கிளாஸ் படிச்சப்போ, பக்கத்து பெஞ்ச் மகேஸ்வரி, ஒழுகும் மூக்கைத் துடைத்த கையைத் துடைக்காமலே தந்த தேன்மிட்டாயை, நீ தொட்டுத் தந்ததால்தான் தேன்மிட்டாய் இனிப்பு இன்னும் என் நாவில் தித்திக்கிறதோ (கருமம், அதுக்கப்புறம் பல்லே விளக்கலையோ?? தொடாமத் தந்தாலும் தேன்மிட்டாய் இனிக்கத்தானேடா செய்யும்?)ன்னு கவிதையெழுதத்தான் காதலர் தினமாம்!!


அநேகப் பதிவர்களின் பதிவுகளைப் பாத்தீங்கன்னா, பழைய காதல்களை, அல்லது சிறுவயது பெண் நட்புகளை காதலா அர்த்தப்படுத்தி, அதைப் பாராட்டி, சிலாகித்து, அல்லது ஏங்கி, கவிதை/கதை/பதிவு எழுதுறாங்க. ஏன் பழசுலயே உழண்டுகிட்டிருக்காங்க இன்னும்? அவங்களுக்குன்னு ஒரு வாழ்க்கைத் துணை அமைந்த பின்னும் பழசை நினைச்சுகிட்டிருந்தா வாழ்க்கை எப்படி சுகிக்கும்?

பெண்கள், தற்காலத்துலே, எல்லா ஆண்களுக்கும் இப்படியொரு முன்கதை இருக்கும்னு புரிஞ்சுகிட்டாலும், அது ஒரு சின்ன வயசு infatuationதான்; தன்னைத்தான் தன்னவர் முழுமையா விரும்புறாருன்னுதான் நம்பிகிட்டிருக்காங்க. ஆனா, திருமணம் செஞ்சு செட்டிலாகி பலவருடங்கள் ஆன பின்னும் இப்படி பழங்கதைகள் பேசினா, நிச்சயம் பிரச்னைதான் வரும். அப்புறம், அரசனை நம்பி, புருஷனைக் கைவிட்ட கதைதான்!!

இப்போ ஆணுக்கு நிகர் பெண்ணென்று சொல்வதாலயோ என்னவோ, இப்போவெல்லாம் கதைகளில் (நல்லவேளை கதைகளில் மட்டும்) பெண்களும் அப்படி முந்தைய ஆண் நட்பைத் தம் கணவரோடு ஒப்பிட்டுப் பார்ப்பதாகக் கதைகளில் எழுதுகிறார்கள். கல்லானாலும்.. புல்லானாலும்... என்ற ரகமல்ல நான். எனினும், இது பொறுக்க முடியாததாக இருக்கிறது.

என் கணவரைவிட மிகைத்தவர்கள் இருக்கலாம்; இருப்பார்கள்; எனினும், என்னவரிடம் உள்ள சிறந்த குணங்களை நினைத்துப் பார்த்து, திருப்தியடைந்து மகிழ்ச்சிகொண்டு, இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.

சில நாட்களுக்குமுன் ஒரு பிரபல பதிவில் ஒரு கதை வாசித்தேன். தன் கணவர் நல்லவரேயாயினும், தன் நண்பனிடம் தான் ரசித்த சில கலகலப்பான குணங்கள் இல்லாததால், அந்நண்பனின் நினைவோடே வாழ்கிறாள். அவனைச் சந்திக்க நேரும்போது, அதை அவனிடம் குறிப்பால் உணர்த்தவும் செய்கிறாள்.  இக்கதையை அநேகர் பாராட்டி, சிலாகித்து எழுதியிருந்தனர். நல்ல எழுத்தோட்டமுள்ள கதை. எழுதியவர் திறமையானவர், அதனால் வசீகரமான எழுத்துக்கும், ரசனைக்கும் கேட்கவேண்டுமா?

நான் அவரின் திறமைக்குமுன் ஒன்றுமில்லைதான். விமர்சிக்கக்கூடத்  தகுதியில்லையென சிலர் வாதிடலாம். எனினும், இக்கதைக்கருவை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. 

இதேபோல, இன்னொரு பதிவர், தன் எழுத்தார்வமில்லா மனைவியை, தன் நண்பரின் எழுத்தாள மனைவியோடு ஒப்பிட்டிருந்தார் ஒரு பதிவில். இதைச் சுட்டிக்காட்டி நான் எழுதிய பின்னூட்டத்தை வெளியிடாமல், ”என்னைப் பற்றிய முன்முடிவோடு எழுதுகிறீர்கள்” என்று பதில் அனுப்பினார்!! அவரை எனக்கு அவரின் பதிவு மூலம்தான் தெரியும். அவர் மனைவியையும் அவர் எழுதிய பதிவுகளின் மூலம்தான் தெரியும். அப்புறம் எப்படி முன்முடிவு செய்ய முடியும்?

ஒப்பிடுதல் என்பது குழந்தைகளுக்கே செய்யக்கூடாது என்பது மருத்துவர்களின் ஆலோசனை. ஏன், சொந்த சகோதரன்/சகோதரியோடுகூட ஒப்பிடாதீர்கள் என்கிறார்கள். எனில், கணவன்/மனைவியை ஒப்பிட ஆரம்பித்தால்? ஒரு மனைவி, “எங்க அப்பா வீட்டில..”ன்னு ஆரம்பிச்சாலே வீட்டு ஆணுக்கு எகிறும். அதுவே, பிற ஆணோடு ஒப்பிடுவதென்பது எதில் கொண்டு விடும் என்று தெரியாதா? 

அதேபோலத்தான் பெண்களுக்கும் இருக்கும். “என்னவானாலும் எங்கம்மா கைப்பக்குவம் உனக்கு வராது”ன்னு அம்மாவோட தன்னை ஒப்பிடுவதே வீட்டில் வானிலை மாற்றங்கள் ஏற்படுத்தும். அப்படியிருக்க, விவரமில்லா வயதில் கண்ட பெண்களோடு ஒப்பிட்டால்? இல்லை, இது ஒப்பு இல்லை; அது ஒரு அனுபவம், சம்சார சாகரம் இன்னொருவித அனுபவம் என்பவர்களுக்கு - நீங்க சொல்றது என்னன்னு புரிஞ்சுதான் பேசுறீங்களா? நீங்க இப்ப நினைச்சுப் பார்க்கிற அந்தக் கால காதலி இன்னிக்கு இன்னொருவருக்குச் சொந்தமானவர். பிறன்மனை நோக்கா பேராண்மைங்கிற ஒழுக்கம், உங்க மனைவியைப் பார்க்கிறவங்களுக்கு மட்டுமில்லை, உங்களுக்கும் தேவையே!!

ஒன்றிருக்கும்போதே நாம் இன்னொன்றை நினைவு கூறுகிறோம்னா, அதற்கு நாம் இருப்பதைக் கொண்டு திருப்தி அடையவில்லை, அல்லது கிடைத்திருப்பதின் அருமையை அறியவில்லை என்றே பொருள். பொருளுக்கே இப்படின்னா, கவனமாக் கையாளப்படவேண்டிய உறவுகளுக்கு?



Post Comment

தடங்கலுக்கு வருந்துகிறோம்





சிநேகிதன் அக்பர் ஒரு கொசுவத்திச் சுத்தக் கூப்பிட்டிருந்தார்; எல்லாம் ரெடி பண்ணிட்டு வர இவ்ளோ நாளாகிட்டுது. தடங்கலுக்கு வருந்துகிறேன்!!

இந்த “தடங்கலுக்கு..”ங்கிற வார்த்தையைப் பாத்தாலே நினைவுக்கு வர்றது.. அதேதான்... தூர்தர்ஷன்தான்!!

ஊர்ல அங்கொண்ணு, இங்கொண்ணா இருந்த ஒயிட்&பிளாக் டிவிகளுக்கு மத்தியில, சவூதில இருந்து, 1984-ல எங்க வாப்பா அனுப்பிவிட்ட 21-இஞ்ச் ஸோனி கலர் டிவியினால, தெருவில எங்க வீட்டுக்கு ஒரு தனி அந்தஸ்தே கிடைச்சுது!! அதுவரை, ஆஃப்டர் ஆல் ஒரு ஒயிட்&பிளாக் டிவியை வச்சுகிட்டு எங்க தெருவிலயே ‘டிவி இருக்கும் ஒரே வீடு’ என்ற பெருமையை பெற்றிருந்த அந்த வீடு, எங்க கலர் டிவி, அதுவும் ஃபாரின் டிவியால் டிபாஸிட் இழந்தது. எங்கள் வீடோ, கலைஞர் இலவச கலர் டிவியால் மீள்வெற்றி பெற்றதைப் போல, ”லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா கலர் டிவியோட வந்தோம்ல” என்று டிவியால் புதுப்பெருமை பெற்று, புளகாங்கிதமடைந்தோம், அதனால் வரப்போகும் விபரீதங்களை அறியாமல்!!

அதிலும், அந்த ஒயிட்&பிளாக் டிவியில் “ஒளியும் ஒலியும்”க்கு 10 பைசா, ஞாயிற்றுக்கிழமை படத்துக்கு நாலணா கட்டணம் அந்த வீட்டில்; எங்கள் வீட்டிலோ, கலைஞர் பாணியில் “எல்லாமே இலவசம்”!! கேட்கணுமா கூட்டத்துக்கு? மக்கள்ஸ் பக்கத்து தெருவில் இருந்து உறவினர்களையெல்லாம் அழைத்து வந்தார்கள். எத்தனை பேர் வந்ந்தாலும் ஃபிரீதானே? ஆரம்ப மாதங்களில், கோயில் போல, திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு என்று  கூட்டம் வரத் தொடங்கியது!! ஆரம்பப் பெருமை அகன்று, கூட்டம் கூடுவதின் சிரமங்கள் தெரிய ஆரம்பித்தது. எனக்கோ படிக்க முடியவில்லை என்று வருத்தம். பின்ன, இப்பப்போல ஸ்டடி ரூம் உள்ள வீடா என்ன? ஒரே அறை, அதுதான் ஹால், படுக்கை அறை, டைனிங் ரும், ஸ்டடி ரூம் என்று ஆல்-இன் ஆல்!! அடுத்துள்ள கிச்சனிலிருந்து படித்தாலும், சத்தம் கேட்டுத் தொலைக்கும்!! இப்பத்தான் “அந்த” வீட்டில் ஏன் கட்டணம் வசூலித்தார்கள் என்று புரிந்தது. அப்ப உலகக் கோப்பை கிரிக்கெட் வேறு நடந்தது. (இந்தியா வென்றது என்ற ஞாபகம்). அதைப் பார்க்க ஆண்கள் கூட்டம் வேறு!!

நாங்களோ எதுவும் செய்ய முடியாமல் முழித்தோம். பிறகு மெல்ல மெல்ல நேரக் கொள்கை வகுத்து, புரிய வைத்து... வீடுகளில் டிவிக்கள் பெருக ஆரம்பித்ததும், நாங்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்!!

டிவியால் சிரமங்கள் வந்தாலும், டிவி நிகழ்ச்சிகள் அலுக்கவில்லை. அதுவும் அப்போதெல்லாம், குறிப்பிட்ட நேரங்களில் மட்டும்தான் தமிழ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். மற்ற நேரங்களில் டெல்லி ப்ரோக்ராம்கள்தான்!! அதைப் பார்த்து, பார்த்தே நான் எல்.கே.ஜி.ல படிச்சு மறந்துபோன ஹிந்தியை மீட்டெடுத்துட்டேன்னா பாத்துக்கோங்க எப்படி டிவி பாத்திருப்பேன்னு!! (சிரிக்கக்கூடாது. நான் எல்.கே.ஜி. படிச்சது டெல்லியிலயாக்கும்!!)

டிவி எனக்கு ஒரு நல்ல ஆசானா இருந்தது. அப்போவெல்லாம் நான் புதிய, அரிய விஷயங்கள் தெரிந்துகொண்டது பத்திரிகைகள் மூலம்தான். அதுவும் கல்கண்டு பத்திரிகையும், அதன் ஆசிரியரான லேனா தமிழ்வாணனும்தான் என்னைப் போன்று வெளியுலகம் காணாத கிராமத்துப் பெண்களுக்கு செய்திக் களஞ்சியம்!! பின்னர் (அப்போதைய) டிவி வந்து அதன் இடத்தைப் பிடித்துக் கொண்டது. மாலை ஐந்தரைக்கு ஆரம்பித்து, பத்து, பதினொரு மணி வரை எல்லா நிகழ்ச்சிகளிலுமே புதிதாகத் தெரிந்துகொள்ள விஷயங்கள் இருந்தன எனக்கு. அது ‘வயலும் வாழ்வும்’ ஆக இருந்தாலும் சரி, வாத்யக் கச்சேரியாக இருந்தாலும் சரி. பட்டணத்தைப் பார்த்த பட்டிக்காட்டான் கதைதான்!!

சிறுவர் நிகழ்ச்சிகள், வாராந்திர சீரியல்கள், துப்பறியும் நிகழ்ச்சிகள், பிறமொழிப் படங்கள் என்று ஒன்றையும் விடுவதில்லை நான்!! அதற்குமேல் க்விஸ் நிகழ்ச்சிகள்!! சித்தார்த்த பாசு ஞாபகம் இருக்கா?  உலக செய்திகளோடு, உச்சரிப்பும் பழகவென்றே ஆங்கிலச் செய்திகள் பார்ப்பதும், புதியன பழகவென டாக்குமெண்டரி படங்கள் பார்ப்பதுமென... அது ஒரு கனாக்காலம்னுதான் சொல்லணும்!!

டிவி வந்த பள்ளிக்காலத்துலருந்து, கல்லூரி முடியும் வரை கிட்டத்தட்ட விடாமல் தொடர்ந்து பார்த்த நிகழ்ச்சி “UGC Grants" என்ற நிகழ்ச்சி!! இது மாணவர்களுக்கான நிகழ்ச்சி. ஒவ்வொரு பாடமாக எடுத்து செயல்முறை விளக்கத்தோடு நடத்தப்படும். பகலில் நடக்கும் என்பதால், வார நாட்களில் இதை ரிகார்ட் செய்து வைத்து பார்ப்பேன்!! (டிவியோடு விசிஆரும் வந்தது. அதில், பேக்ரவுண்ட் ரெக்கார்டிங் வசதியும் உண்டு. செட் செய்து ஆன் செய்து வைத்துவிட்டு, அம்மாவிடம் மறந்தும் டிவி ஸ்விட்சை ஆஃப் செய்துவிடாதே என்று கெஞ்சி/மிரட்டி சொல்லிவிட்டுப் போவேன்).

அதில் ஒரு நிகழ்ச்சி இன்னும் நினைவிருக்கிறது!! ஒரு நிகழ்ச்சியில் அரிசி எப்படி உருவாகிறதென்று(!!) நாத்து நடுவதிலிருந்து அறுவடை வரை காண்பித்தார்கள்!! வயலில் விளையாடி வளர்ந்த எனக்கு அது பேராச்சர்யமாக இருந்தது, இதைப் போய்ப் பெரிசா காமிக்கிறாங்களேன்னு!! ஹூம்.. அவங்க தீர்க்கதரிசி!! காலப்போக்குல இதெல்லாம் டிவிலத்தான் பாக்கமுடியும்னு தெரிஞ்சுத்தான் அப்பவே படம்புடிச்சு வச்சுகிட்டாங்கபோல!!

’எப்படியிருந்த நான் இப்படி ஆகிட்டேன்’கிற கதையா, இப்படியெல்லாம் ரசிச்சு, ருசிச்ச டிவி, ஒரு கட்டத்துல நேரத்தை விழுங்க ஆரம்பிச்சுது. பிள்ளைங்க வந்த பிறகு கொஞ்ச கொஞ்சமாக் குறைச்சு, இதோ போன மார்ச்சுலருந்து ஒரேயடியா மூடுவிழா நடத்தி மூடி வச்சிருக்கேன்!! தொழிநுட்பங்கள் வளர்ந்திருக்க இந்த காலத்துல டிவியினால இன்னும் அதிகமா பயனடைஞ்சிருக்கக்கூடிய சாத்தியங்கள் இருக்கும் சமயத்தில், நான் பெற்ற வாய்ப்பைப் பிள்ளைகளுக்குக் கொடுக்காம இருக்கேனேன்னு தோணினாலும், அதனால் கெட்டவைகளையே அவர்கள் அதிகம் அறியும் வாய்ப்புண்டு என்பதால் வருத்தமில்லை. என் தங்கைகள் வீட்டிலும் ஸேம் பிளட்!!

மிச்சப்படும் நேரத்தில் பிள்ளைகள் புத்தகங்கள், செய்தித்தாள் வாசிக்கப் பழகிவிட்டார்கள். எப்படியாவது நேரம் போகணுமே? வார இறுதிகளில் சேர்ந்து நல்ல (தமிழ்/சிறுவர்) படங்கள் பார்ப்போம்.  டிவியை மிஸ் பண்ணவேயில்லை - அதான் இணையம் இருக்கே!!  டிவியிடமிருந்து போராடி மீட்ட நேரத்தை இப்போ இணையம்(பிளாக்) தின்னுகிறது. இப்படியே போனா, இணையத்துக்கும் ஒரு மூடுவிழா நடத்திடுவேனோன்னு தோணுது, பார்க்கலாம்!!

 
  

Post Comment

டிரங்குப் பொட்டி - 14






துபாய்ல ஒரு தமிழ் நண்பர் - வயசு அம்பதைத் தாண்டிடுச்சுன்னாலும், டீக்கா டிரஸ் பண்ணி “யூத்”தாகக் காமிச்சுக்க விரும்புவார். எப்பவும் டிப்-டாப்தான். ஒருநாள் அவர் ஆஃபிஸுக்கு வந்த ஒரு அமீரகக் குடிமகன் அவரிடம் “Are you from UK?" என்று கேட்டிருக்கிறார். அவ்வளவுதான், மிதக்க ஆரம்பித்துவிட்டார். தன்னை வெள்ளைக்காரன் என்று நினைக்குமளவு இருக்கிறோமா என்ற நினைப்பில், தடுமாற்றத்தில், என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் நிற்க.. தொடர்ந்த அந்த அரபி, “I asked are you from United Kerala?" என்று சொல்ல, அவ்வளவுதான். நொந்து நூடுல்ஸாகிப் போனார்!!

%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&

நம்ம பதிவர்களில் நிறையாப் பேர் ஹோட்டல் உணவு அனுபவங்கள் பற்றி எழுதுறாங்க. அப்படித்தான், குவைத்ல ஒரு பதிவர், ஒரு புது ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு, சாப்பாடு நல்லால்லன்னு எழுதப்போக, அவர்மேல நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துருக்கு நிர்வாகம். பதிவரோ, சக பதிவர்களின் (ட்விட்டர்) சப்போர்ட்டோட, வர்றதப் பாப்போம்னு சொல்றார்.

%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&

அரபுநாடுகளில் அடிக்கடி சொல்லப்படுற குற்றச்சாட்டு, வீட்டுப் பணியாளர்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்பது. ஆனா, வித்தியாசமா, தங்கள் வீட்டில் வேலை பார்த்த இந்தோனேஷியப் பணிப்பெண்ணைப் படிக்கவைத்து, ஒரு பல்கலைக் கழக விரிவுரையாளராவும் ஆக்கிருக்காங்க ஒரு சவுதி அரேபியக் குடும்பத்தினர். இதெல்லாம் வெளிச்சத்துக்கே வராது!! செஞ்சவங்க விளம்பரத்தை விரும்பலை போல!! 

%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&

இதேமாதிரி வெளிச்சத்துக்கு வராத இன்னொரு நியூஸ், ஒரு குண்டுவெடிப்பு வழக்குல கைது செய்யப்பட்ட ஒரு நிரபராதியும், குற்றம் சாட்டப்பட்டவரும் ஜெயில்ல தற்செயலாச் சந்திக்க நேர, நிரபராதியோட கஷ்டங்களைக் கேட்ட குற்றவாளி மனம்திருந்தி அப்ரூவரா மாறிட்டார்!! சினிமா மாதிரியே இருக்குல்ல? அந்த நிரபராதி - அப்துல் கலீம்; குற்றவாளி - அஸிமானந்தா; அவர் தனக்காக ஆர்.எஸ்.எஸ்.-ஆல் நியமிக்கப்பட்ட வக்கீலையும் ஏற்க மறுத்துட்டார்.

%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&

கர்நாடக முதல்வர், தனக்கும் பில்லி-சூனியம் வைக்கப்பட்டதாகச் சொல்லி, அதற்கு பரிகாரம்கிற பேரில செய்யும் கூத்துகளை செய்திகளில் வாசிக்கிறீங்களா? ஐடியில் கொடிகட்டிப் பறக்கும் பெங்களூர்லயா இப்படின்னு இருக்கு. அதுசரி, புதுமை வந்துட்டாலும், பழமையை விட்டுடக் கூடாதுல்ல? சிலர் இப்படி வெளிப்படையா, சிலர் மறைமுகமா மஞ்சத் துண்டோட..! எட்டி சாருக்கு ஒரு சின்ஸியர் அட்வைஸ். வயசுபோன வயசுகாலத்துல, இந்தக் குளிர்ல, வெறுந்தரையில டிரஸ் போடாம படுத்தா ஜல்ப்பு பிடிச்சுக்கும்.

%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&

போன வாரம் ஒரு நாள், உளுந்து சாதம் செய்திருந்தேன். சின்னவன், (வழக்கம்போல), இது என்ன சாப்பாடுன்னு கேட்டான். சொன்னதும், உளுந்துன்னா என்னன்னான். உளுந்துவடைக்குப் போடுவோம்ல, அதுதான்னேன். எப்படிச் செய்வேன்னான். இட்லிக்குப் போடுற மாதிரி, அரிசியும், உளுந்தும் போட்டு, ஆனா அரைக்காம, அப்படியே குக்கர்ல வைக்கணும்னேன். அப்புறம் கொஞ்சம்கூட யோசிக்காம, “ஓ, இட்லி செய்யணும்னா கிரைண்டர்ல அரைக்கணும், அப்புறம் இட்லிச் சட்டியில அவிக்கணும். அதான், அப்படியே சோறா ஆக்கிட்டியோ?”ன்னான். அவ்வ்வ்வ்.... டேய்.. அப்படியே அப்பா மாதிரியே சிரிக்காம கவுக்குறியேடா???

%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&
  
 

Post Comment

தொடர் புரட்சிகள்






புரட்சி.. புரட்சி.. எங்கே பார்த்தாலும் ஒரே புரட்சிமயமா இருக்கு!! முத முதல்ல, சூடான் நாட்டைப் பிரிக்கணும்னு ஆரம்பிச்சு அதுக்காக ஓட்டெடுப்பு நடத்தி, பிரிச்சேயாகணும்னு முடிவு பண்ணிட்டாய்ங்க. அடுத்து, எண்ணெய்க் கிணறுகளின் வருவாய் குறித்து ரெண்டு நாடுகளும் - வட, தென் சூடான்கள் - அடிச்சுக்காம இருக்கணும்.

அடுத்தது, துனீஷியா நாட்டுல, வேலையில்லாத் திண்டாட்டத்தால ஒரு இளைஞர் அரசு அலுவலகம் முன் தீக்குளிக்க, ஏற்கனவே பொருளாதார நெருக்கடியாலும், ஊழல்களாலும் வெறுத்துப் போயிருந்த அந்நாட்டு மக்கள் ஆரம்பிச்ச புரட்சி அந்த நாட்டுத் தலைவரை தப்பிச்சோம், பிழைச்சோம்னு நாட்டைவிட்டு ஓட வச்சுடுச்சு.

இப்ப, அந்தப் புரட்சி சூறாவளி கரைகடந்து, பக்கத்தில இருக்க எகிப்து நாட்டை  சுழட்டியடிச்சுகிட்டு இருக்குது. எகிப்து அதிபரின் வாரிசு (அடுத்த அதிபரா ஆகியிருக்க வேண்டியவர்) குடும்பத்தோட லண்டனுக்கு தப்பிச்சு ஓடிட்டார். 30 வருஷ அதிபர் முபாரக் ‘அஞ்சாநெஞ்சரா’ ஈடுகொடுத்து நிக்கிறார். எகிப்திலும் அதே பொருளாதார நெருக்கடியும், ஆட்சியாளர்களின் உறவினர்களின் ஊழல்கள், வேலையில்லாத் திண்டாட்டம்தான் பிரச்னை.

இன்னுமொரு அரேபிய நாடான ஏமனிலும் புரட்சியாளர்கள், 32 வருட ஆட்சியாளரான சாலேஹ்-விற்கு எதிராகத் தலைதூக்க ஆரம்பிக்க, கொஞ்சம் தட்டி வைக்கப்பட்டிருக்கிறார்கள். என்றாலும், அதுவும் நீறு பூத்த நெருப்பாகத்தான் இருக்கு. புரட்சியிலும் இன்னொரு புரட்சியா, ஏமனில் புரட்சிக்குத் தலைமை தாங்குவது “தவக்குல்” என்ற பெண்மணி!! (பெண்)குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடக்கிறதென்றும், தீவிரவாதிகளுக்குப் புகலிடம் என்றும் குற்றம் சாட்டப்படும் அரபு நாடான ஏமனில் இதுவே ஒரு பெரும்புரட்சியாகத் தெரிகிறது.


அந்த புரட்சி, இந்தப் புரட்சின்னு நாமெல்லாம் பள்ளிக் கூடத்துல வரலாறு பாடத்துல படிச்சுத்தாம் பார்த்திருக்கோம்.  நாம வாழுங்காலத்திலேயே பாக்கக் கொடுத்து வச்சிருக்கணும்!! என்ன ஒண்ணு, இந்த புரட்சிகள் எல்லாம் அந்தந்த நாட்டின் பிரச்னைகளுக்கு விடிவு தந்தால் சந்தோஷம்தான். காரணம், இந்த நாடுகளில் ஏற்கனவே சில தீவிரவாத குழுக்கள் செயல்பட்டு வந்தாலும், இந்த அதிபர்கள்தான் அவற்றைக் கடுமையாக அடக்கி வச்சிருக்காங்க. அப்புறம், வாணலிக்குத் தப்பி அடுப்பில விழுந்த கதையா ஆகிடக் கூடாதுங்கிறதுதான் நம்ம கவலை.

இந்த நாடுகளின் பொதுவான பிரச்னைகள் என்னன்னா, பொருளாதாரத் தேக்கமும், வேலையில்லாத் திண்டாட்டங்களும் என்றாலும், நீண்டகாலமாக ஆட்சிபுரியும் ஆட்சியாளர்கள் மற்றும் உறவினர்களின் ஊழல்களும், வாரிசு அரசியலும்தான் முக்கிய காரணங்கள். பாவம், இந்த ஆட்சியாளர்களுக்கு இலவசங்களின் மகிமையை யாரும் சொல்லவில்லை போல!!

எகிப்திலும் போராட்டங்கள் ஒரு வாரமா நடந்துகிட்டிருந்தாலும், இணையம், தொலைபேசி தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, செய்திகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் அதிபரின் பிடி இறுக்கமாகத்தான் இருக்கிறது என்ற செய்திகள் ஒருபுறமும், இல்லையில்லை ராணுவமும் அவருக்கு எதிராக திரும்புகிறது என்ற செய்திகளும் வருகின்றன. என்ன நடக்கிறது பார்ப்போம். இதுக்கிடையில், சந்துல சிந்து பாடுன கதையா, ‘பிக் பாஸ்’ அமெரிக்காவும், புரட்சியாளர்களுக்குக் கருத்துச் சுதந்திரம் வேணும்னு தன் ஆதரவை மறைமுகமாத் தெரிவித்துள்ளது. ஆமை நுழைஞ்ச வீடுகூட உருப்பட்டுடும், அமெரிக்கா நுழைஞ்ச நாடு என்னாகும்னு, ஈராக் ஒண்ணே உதாரணம்!!

இந்தத் தொடர் புரட்சிகளைப் பார்த்து அரண்டு போயிருக்கும் நாடுகளில் ஒன்று சீனா!! அவசர அவசரமாக, தன் நாட்டு இணையத்தில் “எகிப்து ” என்ற வார்த்தையைத் தேடுயந்திரத்தில் பயன்படுத்தத் தடை விதித்திருக்கிறது.

புரட்சின்னதும், நம்ம நாட்டுல கம்யூனிஸமும், அப்புறம் கேரளாவும் கண்டிப்பா ஞாபகம் வரும்.  கேரளாவில கொஞ்ச நாள் முன்னாடி, கேரளாவில்  பிரபல வி-கார்ட் நிறுவனத்தின் தலைவர் கொச்சோஸஃப், தானே லோடுமேனாக மாறி, தன் நிறுவனத்திற்கு வந்த  வண்டியிலிருந்து சுமைகளை இறக்கினார்.  தமிழ்நாட்டிலதான் இலவசங்களாலும், நூறு நாள் திட்டத்தாலும் வேலைக்கு ஆட்கள் கிடைக்க மாட்டேங்குதுன்னா, அங்கே ஆட்கள் இருந்தாலும் வெளியிலிருந்து சிலர் தலையிட்டு செய்ய விடமாட்டேங்கிறாங்களாம். தொழிலாளர் பிரச்னைகள் தீராவிட்டால், வி-கார்ட் நிறுவனத்தை வேறு மாநிலத்திற்கு இடம் மாற்றப் போவதாகவும் சொல்லிருக்கார்.

தமிழநாட்டுல வீட்டு கட்டுமான வேலைகளுக்கு தினச்சம்பளம் 400 ரூபாயாம். உறவினர் ஒருத்தர், அமீரகம் வந்து இருவது வருஷங்களுக்குப் பிறகு, எல்லாக் குடும்பக் கடமைகளையும் முடிச்சுட்டு இப்பத்தான் இந்தியாவுல வீடு கட்ட முடிஞ்சிருக்கு. ஒரு வருசம்  முன்னாடி கட்ட ஆரம்பிச்சப்போ, 300 ரூபாயா இருந்தது, அப்புறம் 350 ஆகி, இதோ போன வாரம் பெட்ரோல் விலை கூடினதைக் காரணம் காட்டி(!!) 400 ஆக்கிட்டாங்க!! ”அட, அப்படின்னாலும் வேலைக்கு ஒழுங்கா வந்தாச் சர்தான்னு இருக்கு. ரெண்டு நா வந்தா, நாலு நாள் வரமாட்டேங்கிறாங்க. வேற எங்கயும் வேலைக்கும் போறமாதிரி தெரியலை. எப்படித்தான் அவங்களுக்குக் கட்டுப்படியாகுதோ”ன்னு புலம்புறார் அவர்.

இன்னொரு உறவினரின் வீட்டில் பராமரிப்பு வேலை நடக்கிறது. அங்கேயும் இதே கதைதான். வீட்டுத் தலைவி சொல்கிறார், “காலையில  9 மணிக்கு இங்கே வந்ததுக்கப்புறம் காலைச் சாப்பாடுக்கொரு முக்கா மணிநேரம். 11 மணிக்கு டீ டைம் அரைமணி நேரம். அப்புறம் லஞ்சுக்கு ஒரு மணிநேரம். 3 மணிக்கு டீ குடிக்கப் போனா, முக்கா மணி நேரம். அப்புறம், அஞ்சு மணிக்கே எல்லாத்தையும் ஏறக்கட்ட ஆரம்பிச்சிடுறாங்க. இப்பம்லாம் டீ குடிக்க வெளிய போவேணாமுன்னு சொல்லி, நானே வீட்டுல ரெண்டு வேளை டீ போட்டுக் கொடுத்துடுறேன். ஒரு மணிநேரம் கூடக் கிடைக்குமே? மொத்தத்துல ஒரு நாள்ல ஆறு மணிநேரம் வேலை பாத்தாங்கன்னா அதிகம். ஒரு வார்த்தைச் சொல்லிட்டோம்னா  அவ்ளோதான், அப்புறம் வேலைக்கு வரமாட்டாங்க. வேற ஆட்களைத் தேடிக் கண்டுபிடிக்க மின்ன பெரும்பாடு. வர்றவங்களும் நம்பிக்கையான ஆளா இருக்கணுமேயின்னு பயம். அதனால, என்னைய வாயத் தொறக்கக்கூடாதுன்னு எங்கூட்டுக்காரர் சொல்லிருக்கார். ஒவ்வொரு நாளும் கூலி கொடுக்கும்போது வயிறு எரியத்தான் செய்யுது. எங்கூட்டுக்காரருக்கென்ன கவுர்மெண்டு வேலையா இல்லை துபாய் காசா?” அவ்வ்வ்வ்... துபாய்ல மட்டும் மரத்துலயா காய்க்குது காசு?

இதன் விளைவுதானோ, பெரும் கட்டிடங்களின் பணிகளில் பீஹாரிகளும், நேப்பாளிகளும், வடகிழக்கு மாநிலத்தவர்களும் தமிழகத்தில் பெருமளவில் காணப்படுகிறார்கள்? இப்படியே போனால், இங்கும் வெளிமாநிலத்தவர்களை வேலைக்குக் கூட்டி வரக்கூடாதென்று தாக்கரே-பாணி புரட்சி  வெடித்தாலும் ஆச்சர்யமில்லை.

கேரளத்துக்கதையொன்று: வறுமையில் வாடும் வயதான அம்மா, தன்னைக் கவனிக்காத மகனிடம், “மகனே! உன்னை எப்படியெல்லாம் வளர்த்தேன்? சுடுசோற்றை உனக்குத் தந்துவிட்டு, வெறும் கஞ்சியை நான் குடித்தேனே!” என்று சொல்ல,  மகனோ, “சத்துக்கள் நிறைந்த கஞ்சியை நீ குடித்துவிட்டு, சோறெனும் சக்கையைத்தானே நீயெனக்குத் தந்தாய்?” என்றானாம்.

  

Post Comment