Pages

2010 & 2011: டைரி & பிளானர்




 
 


விஜிஸ் கிரியேஷன்ஸின் விஜி அழைத்த தொடர்பதிவு இது.

பொதுவாகவே டைரி எழுதும் பழக்கமோ, புது வருட உறுதிமொழி எடுக்கும் பழக்கமெல்லாம் இல்லை எனக்கு. அதெல்லாம் நல்ல பழக்கமாச்சே!! ஆனால், இந்தத் தொடர்பதிவின் தலைப்பைப் பார்த்தபோது, நல்ல விஷயம்தானே எழுதுவோம் என்று நினைத்துச் சம்மதித்தேன். ஆனால், கிட்டத்தட்ட ஒரு மாசமா யோசிக்கிறேன்.. ம்ஹும்.. செஞ்சதாச் சொல்ல ஒரு பாயிண்டும் கிடைக்கலை.. என்னச் செய்யப் போறேன்னு யோசிச்சாலும் ‘ஞே’ தான்!!

இருந்தாலும் விட்டுடுவோமா நாம, படிக்காமலே 30-40 பக்கத்துக்கு காலேஜில எக்ஸாம் எழுதின அனுபவம் இருக்குல்ல!!
 
2001லன்னு நினைக்கிறேன், இந்தியாவின் மக்கள்தொகை ரொம்பப் பெருகிட்டு வருது, இது இந்தியாவின் வளர்ச்சிக்கு நல்லதில்லை, ஆ.. ஊ..ன்னு அலாரம் அடிச்ச ஊடகங்கள், இந்தியாவின் முதல் பில்லியனாவது குழந்தை இத்தனாவது நாள், இத்தனாவது மணிக்கு, இந்த ஊர்ல, இந்த ஆஸ்பத்திரியில் பிறக்கப் போகுதுன்னு கணக்குப் பாத்து (அது எப்படிங்க?) அறிவிச்சுட்டு, கரெக்டா அன்னிக்கு அங்க குழுமிட்டாங்க. நானும் படபடப்பா, அந்த துரதிர்ஷ்ட(??) குழந்தையைப் பெற்ற பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும், என்ன சொல்வாங்களோ,  அப்படின்னு நினைச்சுகிட்டே சோகத்தோட பாத்துகிட்டிருந்தேன்.

ஆனா, என்ன நடந்துச்சு தெரியுமா? ஒரு பெண் மத்திய அமைச்சர் கையில அந்த பில்லியனாவது குழந்தையைக் கொடுத்து “ஸ்வீட் எடு.. கொண்டாடு”ன்னு ஒரே ஆட்டம், பாட்டம்தான் போங்க!! ஒரு சின்னஞ்சிறு குழந்தை அந்தச் சூழ்நிலையையே மாற்றிவிட்டது!! இந்திய மக்கட்தொகை அதிகரிப்பது ஆபத்து என்று அறிவிக்க அங்கே கூடிய அனைவரும் அதையெல்லாம் மறந்து, குதூகலித்ததைப் பார்த்தால், மக்கட்தொகைப் பெருக்கத்தைக் கொண்டாடுவதுபோல எதிர்மறையாக ஆகிப்போனதுதான் காமெடி!!

சம்பந்தமில்லாம இது எதுக்கு இங்கேன்னா, ஒரு வருஷக் காலத்தில் எத்தனையோ நடந்திருக்கும். நல்லதிலும் கெட்டது உண்டு; கெட்டதிலும் நல்லது உண்டு என்பதாக, அவற்றின் மூலம் நாம் பெற்ற “புத்தி கொள்முதல்”களைத் தான் நினைத்துப் பார்த்துக் கொள்ளவேண்டும், இல்லையா?

உதாரணத்துக்கு, என் அலுவலகத்திலும் ரெஸெஷனால் வரிசையாக ப்ராஜக்டுகள் கைவிட்டுப் போக, கவலையோடு ஈயோட்ட ஆரம்பித்த நான், பதிவெழுதவும் ஆரம்பிக்க, மிக வித்தியாசமான கருத்துகள், அனுபவங்கள், அறிவுரைகள், அழிமானங்கள் என்று எல்லாம் கலந்த சங்கமமாகப் பதிவுலகைக் கண்டேன். இதுதான் என்றில்லாமல், அரசியல், விஞ்ஞானம், விவசாயம், சமையல் என்று எல்லா துறைகளிலும் பல்வேறு கண்ணோட்டங்கள், எனக்கு அவைகுறித்த பரந்த அறிவைத் தந்தன. ஒரு இழப்பில், ஒரு லாபம்!! (ஒருத்தரோட இழப்பு, இன்னொருத்தருக்கு லாபம்னும் கொள்ளலாம்!! :-))) )

என்னுடைய “ஃபேவரைட்”டுகளான (இயற்கை) விவசாயம், Three "R"s, உலக வெப்பமயமாதல், தண்ணீர் சிக்கனம் குறித்து நிறைய விழிப்புணர்வுத் தகவல்கள் கிடைக்கின்றன. ஒவ்வொருமுறை தண்ணீர் பைப்பைத் திறக்கும்போதும் இப்பதிவுகள் ஞாபகம் வந்து மிரட்டுகிறது!!  அதுபோல, விவசாயத்தைச் சின்ன அளவில் இப்பொழுதே நடைமுறைப்படுத்திப் பார்க்க ஆசை!! ஆனாலும், ”ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க” என்ற பழமொழியும் நினைவில் வந்துத் தொலைக்கிறது!! :-(

பதிவுலகிலக மற்றும் கல்லூரி நட்புகளை நேரில் சந்திக்க முடிந்தது இவ்வருடத்தில் பெரும் மகிழ்ச்சி தந்த நிகழ்ச்சி!!

சென்ற வருடத்தில், அறிந்த, தெரிந்த பலரும் ரிஸெஷனால் வேலையிழந்ததுதான் மிகவும் பாதித்ததென்றாலும், அனைவரும் வெவ்வேறு இடங்களில் மீண்டும் செட்டிலாகிவிட்டது மகிழ்ச்சியே!! உடல்நலப் பாதிப்புகள் இல்லாமலிருக்கும்வரை எதுவும் பெரிய இழப்பில்லை என்னைப் பொறுத்த வரை.  புதிதுபுதிதாய் வரும் நோய்களும், நடக்கும் விபத்துகள் மட்டுமே என்னைக் கலவரப்படுத்தியுள்ளன.

இப்படிக் கவலைக்குரிய விஷயங்களை யோசித்து யோசித்து எழுதுமளவுக்கு நிம்மதியான, நலமான வாழ்வைத் தந்த இறைவனுக்கு நன்றி!! அடுத்தடுத்த வருடங்களும் இதேபோல கவலைகளை யோசிக்கும் வாழ்வை இறைவன் தரவேண்டுமே என்பதைத் தவிர, தற்போது பெரிய எதிர்பார்ப்பு ஏதுமில்லை!! அனைவருக்கும் இப்படியான நல்வாழ்வை எப்பொழுதும் தர வல்ல நாயனை வேண்டுகிறேன் .
 
 

Post Comment

ஆராய்ச்சிகள் - அன்றும், இன்றும்




 
"ஆராய்ச்சி”, “ஆராய்ச்சியாளர்கள்”, “விஞ்ஞானி” - இதெல்லாம் ரொம்பவே நமக்குப் பரிச்சயமான வார்த்தைகள்.  அவ்வப்போது பத்திரிககளில் “According to latest research..." என்று படித்திருப்போம். உலகில் நமக்கு புரியாத பல புதிர்களை விளங்க வைப்பதும்,  அறியாத பல நல்ல விஷயங்களையும் புரிய வைப்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களே!!

எல்லா புகழ்பெற்ற பெரும் பன்னாட்டு நிறுவனங்களிலும் ஆராய்ச்சிகளுக்கும், புது கண்டுபிடிப்புகளுக்குமென்றே "R & D" எனப்படும் ”ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்துதல்” என்ற தனித் துறையே உண்டு.  இது தவிர அரசாங்கள் சார்பாகவும், பல்கலைக் கழகங்கள் சார்பாகவும் இத்துறை மூலம் பெரிய பெரிய ஆராய்ச்சிகள் நடத்தி, மனித மற்றும் உலக மேம்பாட்டுக்குப் பாடுபடுகிறார்கள்.  எளிதாகப் புரிய வைக்கவேண்டுமென்றால், “மூலிகை பெட்ரோல்” ராமரும் ஒரு ஆராய்ச்சியாளரே!!

ஆராய்ச்சியாளர்களின் தொடர் ஆர்வத்தாலும், முயற்சிகளாலும்தான் இன்றைய உலகில் பல நவீன கருவிகளும், நோய்களுக்கு மருந்துகளும், புதிய சிகிச்சை முறைகளும் கிடைத்திருக்கின்றன.  ஒரு காலத்தில் மருந்தே இல்லைன்னு சொல்லப்பட்ட கேன்ஸர் இன்னிக்கு குணப்படுத்த முடியுற வியாதியா ஆகிடலையா? அதுபோல எய்ட்ஸுக்கும் மருந்து இப்போ இல்லைனாலும், ஆராய்ச்சி தொடருது. சமீபத்துல ஒருவரின் புற்றுநோய்க்குச் செய்த ஸ்டெம் செல் சிகிச்சையால் எதிர்பாராவிதமாக அவரின் எய்ட்ஸ் குணமாகியுள்ளது. இதுவும் ஆராய்ச்சி செய்யப்பட்டு, எய்ட்ஸ் சிகிச்சைக்கு வழிவகுக்கப்படலாம் எதிர்காலத்தில்.

உலகம் உருண்டையென்பதிலிருந்து, இந்த அண்டவெளியில் பூமியைப் போல இன்னும் சுமாராக ஐம்பது பில்லியன் கோள்கள் இருக்கக்கூடும் என்று நமக்கு தெரிவித்ததும் ஆராய்ச்சியாளர்களே!!

சாக்லேட் சாப்பிட்டால் கெடுதல் என்ற நமது நினைப்பை, (டார்க்) சாக்லேட் அளவோடு சாப்பிட்டால் உடல்நலத்திற்கு நல்லது என்று தெளிய வைத்ததும் இப்படியான ஆராய்ச்சிகளே! (க்ரீன்) டீக்கும் இதேதான்.

முன்னெல்லாம் “கொலஸ்ட்ரால்” என்பதே கெட்ட வார்த்தையாக நினைத்து எண்ணெய் வகைகளை நாம் “தீண்டத்” தயங்க, அப்புறம் கொலஸ்ட்ராலிலும் “நல்ல” கொலஸ்ட்ரால் (HDL), “கெட்ட” கொலஸ்ட்ரால் (LDL) உண்டு என்று புரிய வைத்து, அதற்கேற்றவாறு எண்ணெய் வகைகளைத் தேர்ந்தெடுக்க வைத்தனர் ஆராய்ச்சிகள் மூலம்.

முட்டை சாப்பிட்டால் உடல் பருமனும், பி.பி.யும் எகிறும் என்று நினைத்து நாம் தவிர்த்துக் கொண்டிருக்க,  நிறைய முட்டை சாப்பிட்டால் உடலில் கொழுப்பு உருவாகுதலே நிறுத்தப்படும். எனவே இதய நோய் வராது என்று புதிய தகவல் தருகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!!

இதேதான் உப்பு, உருளைக் கிழங்கு, ரெட் மீட் வகையறாக்களுக்கும் - இவையெல்லாம் உடல்நலத்திற்கு பெரும் கேடு விளைவிப்பவை என்ற நம் நினைப்பில் உப்பைத் தூவி, இவைகளிலும் நன்மை உண்டு; ஆனால், அளவுக்கு மிஞ்சினால்தான் ஆபத்து என்று வலியுறுத்துகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த “பதப்படுத்தப் பட்ட உணவுகள்” (frozen foods) குறித்து எல்லாருக்குமே ஒரு இகழ்ச்சி உண்டு. ஹூம், பாக்கெட்டுல போட்டு ஃப்ரீஸர்ல போட்டு வச்சிருக்கதுல என்ன சத்து இருக்கும்? ஃப்ரெஷ்ஷா அன்னிக்கு கடையில வாங்கிச் சாப்பிடுற மாதிரி வருமா? என்று அங்கலாய்ப்பவர்களுக்கும் ஆப்பு இருக்கு. “ஃப்ரெஷ்”னு நாம சொல்ற பல காய்கறி, பழ வகைகள் ஆக்சுவலா ஆறு மாசத்துக்கும் முன்னேயே, அதுவும் அவை சரியான பருவத்துக்கு வருமுன்னே பறிச்சு, செயற்கை முறையில பழுக்க வைக்கப்பட்டு, பல ஊர்கள்/நாடுகள் பயணம் செய்வதில் சத்து இழப்பும் ஏற்பட்டு, நமக்கு கடைகளில் “ஃப்ரெஷ்” என்று விற்கப்படுகின்றன. ஆனால், ஃப்ரோஸன் வகைகளில் காய்கறிகள்/பழங்கள் அவை இயற்கையாகவே சரியான பருவம் அடையும் வரை காத்திருந்து, பின் பறிக்கப்பட்டு, உடன் ஃப்ரீஸ் செய்யப்படுவதால், அவற்றில்தான் முழுமையான சத்துக்களும் இருக்கின்றன என்று இப்போது சொல்கிறார்கள்!!

சாப்பாட்டை விடுங்க, நடைபயிற்சிக்கு வாங்க. இந்த நடைபயிற்சி செய்யணும்னு நினைக்கிறவங்க, செய்ற முதல் வேலை நல்ல ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்குவதுதான்!! அந்த ஷூ வாங்குறதுக்கு (மட்டுமே) அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்போம். பயிற்சியாளர்கள்/ மருத்துவர்களும் சரியான காலணி அணிந்து நடப்பதுதான் நல்லது. இல்லைன்னா, பாதம், முட்டிகளுக்கு பாதிப்பு வரலாம்னு சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனா அதுக்கும் வருது வில்லங்கம். வெறும் காலோடு நடப்பதுதான் நல்லதாம். உள்ளங்காலின் தோல் அதற்கேற்ற உறுதியோடுதான் உள்ளது என்றும், அப்படி நடந்தால்தான் இரத்த ஓட்டமும், தொடுஉணர்ச்சிப் புள்ளிகளும் சரியாகத் தூண்டப்படும் என்றும்  ஆராய்ச்சிகள் சொல்கின்றன. (இது நம்ம நாட்டுக்கு ஒத்து வராதுன்னாலும், ஸ்போர்ட்ஸ் ஷூக்களில் காசைத் தொலைப்பதைத் தடுக்க உதவும்.)

அட இந்த வீடியோ/கம்ப்யூட்டர் கேம்ஸ் - அது கண்ணுக்கு நல்லதில்லை, மூளையை மந்தப்படுத்தும், நிழலைப் பார்த்து நிஜத்திலும் மாயைகளை எதிர்பார்ப்பார்கள் சிறுவர்கள், என்றெல்லாம் சொல்லி கட்டுப்படுத்துவோம் நம் பிள்ளைகளை. இப்போ அதுக்கும் ஒரு நல்ல பாயிண்ட் கண்டுபிடிச்சு சொன்னான் என் மகன் - இந்த மாதிரியான விளையாட்டுகள் கண்-கை ஒருங்கிணைப்புக்கு (Hand-eye coordination) நல்ல பயிற்சியாம்; அத்தோடு problem solving skills, multi-tasking, quick-thinking இப்படி பல நன்மையான விளைவுகள் இருக்கிறதாம். இதுவும் ஆராய்ச்சியால் கிடைத்த  தகவல்தான்.

அது மட்டுமா? நாமல்லாம் சின்ன வயசுல பயாலஜில படிச்சுருப்போம் - நம்ம உடம்புல இருக்கிற குடல்வால் (appendix), வால் எலும்பு (coccyx), ஞானப் பல் (wisdom teeth) போன்ற சில உறுப்புகள் நமக்கு பயன்தராதவை; பரிணாம விதிகளின்படி (evolution theory) குரங்குலருந்து மனுஷன் வந்தப்போ இந்த உறுப்புகளும் கூடவே வந்துடுச்சு. மனிதனுக்கு இவற்றின் தேவையில்லாததால், இவை “பரிணாமத்தின் எச்சங்கள்” (vestigial organs) என அறியப்பட்டன. ஆனா இப்போ ஆராய்ச்சியாளர்கள், அப்படியெல்லாம் இவை மொத்தமாகப் பயனற்றவை அல்ல; இவற்றுக்கென்று சில வேலைகளும் உள்ளன என்று கண்டுள்ளார்கள். உதாரணமா, குடல்வால் என்பது நல்ல பாக்டீரியாக்களின் இருப்பிடம்; வயிற்றுக்கோளாறுகள் வந்து சரியானபின், குடல்களுக்கு நல்ல பாக்டீரியாக்களை அனுப்புமாம் இது. இதுபோல வால் எலும்பும் முதுகெலும்புக்கு ஒரு குஷன் போல செயல்படுகின்றது என்றும் கண்டுபிடித்துள்ளனர். (பார்க்க: http://news.nationalgeographic.com/news/2009/07/090730-spleen-vestigial-organs_2.html; http://en.wikipedia.org/wiki/Vermiform_appendix)

பரிணாமத்தின் முக்கிய ஆதாரமாகக் கருதப்பட்ட vestigial organs குறித்த கருத்தையே மாற்றியமைப்பதால், இது நிச்சயமாக ஆராய்ச்சி அறிவியலில் ஒரு மைல் கல்லாக அமையும்.

மேலே சொன்ன விஷயங்களை ஆராய்ஞ்சு பாத்ததிலிருந்து என்ன தெரியுதுன்னா, ஆராய்ச்சிகளில் அன்னிய தேதிக்கு மனிதனின் அறிவும், அறிவியலும், தொழில் நுட்பங்களும் எவ்வளவு வளர்ச்சியடைஞ்சிருக்கோ அது பொறுத்துதான் முடிவுகள். ஒரு காலத்துல ஏற்றுக்கொள்ளவே முடியாதுன்னு சொல்லப்பட்ட பலதும் பின்னாட்களில் மேம்பட்ட ஆராய்ச்சியினால் சரியென நிரூபிக்கப்பட்டுள்ளது & vice-versa. எந்தவொரு விஷயமும் நம்ம அறிவுக்கு எட்டலை அல்லது ஆராய்ச்சியால் நிரூபிக்கப் படவில்லை என்பதாலேயே தவறாகவோ, பொய்யாகவோ ஆகிவிடாது!!
  
   

Post Comment

அம்மாவும், மனைவியும்




 
  
போன பதிவுல சொன்ன மாதிரி, எங்க வீட்டுல ரொம்பவே சிம்பிளான சாப்பாட்டு முறைதான். அசைவமெல்லாம் வாரம் ரெண்டுமூணு நாள்தான் இருக்கும்; மற்ற நாட்களில் சுத்த சைவம்தான். எங்க ஊர்ல முட்டையும் சைவம்தான் என்று அறிந்து கொள்ளவும். ஏன்னா,  முட்டையெல்லாம்  ‘ஏழைகளின் அசைவம்’!!

ஒரு கீழ்த்தட்டு நடுத்தர கூட்டுக் குடும்பத்தின் இலக்கணப்படி, சாப்பாடு மட்டுமின்றி, அன்றாட நடவடிக்கைகளிலும் கடைஞ்செடுத்த சிக்கனத்தைப் புகுத்தியிருந்தார் என் அம்மா. அத்தோட கலகம் பண்றதுக்கு வீட்டில பையன்களும் கிடையாது. அதனால அம்மாவோட சிக்கன பட்ஜெட்டைக் கேள்வி கேட்பாரே இல்லை!! இப்படியாக, அம்மா சொல்பேச்சு கேட்டு, கொடுத்ததச் சாப்பிட்டும், கிடைச்சத உடுத்தியும், ’அடக்கமான பெண்களா’ வளர்ந்து வந்தோம்.

இதுல என்னன்னா, சமையல்ங்கிறது ஒரு பெரிய கஷ்டமான வேலையாவே படலை எனக்கு. நான் அடுக்களை பக்கம் போறதேயில்லைங்கிறது வேற விஷயம்!! இப்படியா சந்தோஷமா இருக்கும்போது, எனக்குச் சோதனைக்காலமும் வந்துச்சு - கல்யாணம்கிற பேர்ல!!

கல்யாணமாகி மாமியார் வீட்டுக்குப் போன மறுநாளே,  காலையில டீயோட, ரெண்டு ‘ஹாஃப்-பாயில்’ வந்துது ரூமுக்கு!! விடியக்காலையிலயே முட்டையா, அதுவும் ரெண்டான்னு அதிர்ச்சியோட பார்த்தேன். எங்கூர்ல, ரெண்டு முட்டையில நாலு வெங்காயத்தை அரிஞ்சுப் போட்டு ஒரு குடும்பமே ஒருவேளைச் சாப்பாட்டை முடிச்சுப்போம். இங்க ஒருத்தருக்கே ரெண்டு முட்டையான்னுதான் முதல் அதிர்ச்சி. சரி, முதல் நாள்னு ஸ்பெஷலாத் தர்றாங்க போலன்னு எதுவும் சொல்லாம கஷ்டப்பட்டு சாப்பிட்டுகிட்டேன்.

ஆனா அடுத்த நாளும் அது தொடர்ந்துது!! இதுக்கிடையில ரங்க்ஸ் என்ன செய்வார்னா, நான் திக்கிமுக்கி ஒரு முட்டையைச் சாப்பிட்டு முடியுற வரை காத்திருந்து, நைஸா அவருக்குள்ள ரெண்டு ஹாஃப்-பாயில்ல ஒண்ணை என் பிளேட்ல தள்ளிவிட்டுட்டு, “அக்கா, இங்க பாரு, இன்னும் சாப்பிடாம உக்காந்திருக்கா”ன்னு அக்காவை வேற தூண்டிவிட்டுட்டுப் போவார். புதுப்பொண்ணாச்சே, முதல்லயே சுயரூபத்தைக் காட்டவேண்டாம்னு கோவத்தை அடக்கிட்டு இருந்தாலும், இயலாமையில கண்ணுல தண்ணி முட்டும் எனக்கு. ஏன்னா இதச் சாப்பிட்டுட்டு, அடுத்த அரைமணியில ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடணும். வயத்துல இடம் வேணாமா? இப்படியே ஒரு வாரம் போனதும், பொறுக்கமுடியாம மாமியார்கிட்ட காலையில முட்டை வேண்டாம்னு மெதுவாச் சொல்லிட்டேன்.

மூணுவேளையும் விதவிதமான சாப்பாடுதான். சாப்பாடு வகைகளைப் பார்த்தாலே ஆச்சர்யமா இருந்துது. ஏன்னா, எங்க ஊர்ல நான் சொன்னதுபோல, “mass food"தான் நிறைய. ஆனா, இங்கயோ, அரிசிரொட்டி, பாலாடை, ஓட்டப்பம், ஆப்பம், ஜாலரப்பம், பத்திரினு எல்லாமே செய்றதுக்கு ரொம்ப நேரம் எடுக்கிற வகைகள். சரி, கல்யாண வீட்டு ஜோர்ல செய்றாங்கன்னு நினைச்சா, ஒரு மாசம் கழிச்சும் அதேபோல வகைதொகையாச் சாப்பாடு தொடரவும், முதல்முதலா நானும் இப்படியெல்லாம் சமைக்கணுமேன்னு எனக்கு பயம் வந்துது!! எவ்வளவு நாளைக்கு சாப்பிட்டுகிட்டு மட்டுமே இருக்க முடியும்?

அதுவுமில்லாம, ஒவ்வொரு சாப்பாட்டுக்கும் ஒரு காம்பினேஷன் வேற வச்சிருந்தாங்க. உதாரணமா, பாலாடைன்னா அதுக்கு தொட்டுக்க மட்டன் ரோஸ்ட்தான் வேணும்.  இல்லைனா, ‘புலி பசிச்சாலும்..’ கதைதான்!! எங்க வீட்லயோ, சப்பாத்திக்குச் சாம்பார்னாலும்கூட கேள்வியே கேட்காம சாப்பிட்டுக்கிடுவோம். அப்புறம், தேங்காய் - கேரளா பார்டர்ல உள்ளவங்களைக் கேக்கணுமா? ஒரு நாளைக்கு குறைஞ்சது ரெண்டு  தேங்காய் செலவாச்சு. எங்கம்மா மகராசியோ, ஒருநாளைக்குள்ள மொத்தச் சமையலையே ரெண்டு கீத்து தேங்காயில முடிச்சுடுவாங்க!! இப்படி எல்லாத்துலயும் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம்!!

இப்ப நானும் இதேபோல சமையல் செய்யணுமேங்கிற கவலை என்னைப் பிடிச்சுகிச்சு. நல்லவேளை, நாலு மாசத்துலயே ரங்க்ஸ் அபுதாபி வந்துட்டதால பிழைச்சோம்னு கூடவே ஓடிவந்தேன். தனிக்குடித்தனம்தான்கிறதால ஒரு நிம்மதி. மெதுவா எல்லாம் செஞ்சு படிச்சுக்கலாம்னு ரெஸிப்பிகள் எழுதி வாங்கிட்டு வந்தேன். ரங்ஸை சோதனை எலியா வச்சு என் சமையல் ப்ராக்டிகல்களை ஆரம்பிச்சேன். முத முத, முட்டை மஞ்சக்கரு உடையாம ஒரு ஹாஃப்-பாயில் போட நான் பட்ட பாடு என்னைவிட ரங்க்ஸுக்குத்தான் நல்லாத் தெரியும்!! ஆச்சு, இப்படியே பரிசோதனை செய்ய ஆரம்பிச்சு பல வருஷங்கள் ஓடிப்போச்சு.

இப்ப அவர்கிட்ட என் சமையல் எப்படின்னு கேட்டா, முழுசா திருநெல்வேலியாவும் இல்லாம, நாகர்கோவிலாவும் இல்லாம, நடுவால வள்ளியூர்ல நிக்குதும்பார். சரி, 14 வருஷத்துல வள்ளியூர் வரை வந்தாச்சு. இன்னும் ஒரு ஏழெட்டு வருஷத்துல நாகர்கோவில் வந்துடாது?

இப்ப நல்ல முன்னேற்றம் இருக்கு. என்னன்னு கேக்குறீங்களா? ரங்க்ஸ் சோதனை எலியிலிருந்து சோதனைப் பெருச்சாளியா ஆகிட்டார். அவ்ளோ வெயிட் கூடிடுச்சு, இதுவும் முன்னேற்றம்தானே? ஆக, இப்படியே விட்டா நல்லதுக்கில்லைன்னு டயட்ல இருந்தோம்/இருந்துகிட்டேயிருக்கோம் நாங்க. அப்பாடா, சமையல்லருந்து ஓரளவு விடுதலைன்னு சந்தோஷப்படவும் முடியாது. நார்மல் சமையலைவிட, டயட் சமையல் செய்றது இன்னும் கொடுமை!!

அப்படி டயட்ல இருந்த ஒரு சுபயோகத் தினத்துல, வாப்பாவும், புள்ளையுமா உக்காந்து சாப்பிட்டுகிட்டு இருந்தாங்க.  ரங்ஸோட கோட்டா முடிஞ்சும் நகராம உக்காந்துகிட்டிருக்க, நான் அதைக் கண்டுக்காம, மூத்தவனுக்கு மட்டும் பரிமாறிகிட்டிருக்க, “எனக்கு?”ன்னு அப்பாவியாக் கேட்டார். “அதான் மூணு தோசை வச்சேனே?”ன்னு சொல்லிட்டு கருமமே கண்ணாயிருக்க, அவர் புலம்ப ஆரம்பிச்சுட்டார். “ஹூம், எங்கம்மாவெல்லாம் நானே வேண்டாம்னாலும் விடமாட்டாங்க.  கிட்ட உக்காந்து சாப்பிடுப்பான்னு அன்பா பரிமாறுவாங்க. ஏன், இப்ப ஊருக்குப் போனாகூட விடாம, எனக்காக அதைச் செஞ்சு, இதைச் செஞ்சு சாப்பிடுப்பான்னு தருவாங்க. நான் போதும்போதும்னு சொன்னாலும் கேக்காம, இன்னும் சாப்பிடுன்னு வச்சுத் தந்துகிட்டேயிருப்பாங்க. இங்க என்னடான்னா, எண்ணி எண்ணி சாப்பாடு போடுறே நீ? புருஷனுக்கு அளந்து அளந்து சாப்பாடு போடுற அளவு கலி முத்திப் போச்சு!”ன்னு அவர்பாட்டுக்குப் பேசிகிட்டே போக, என் செல்ல மகன் இடைமறிச்சான். “வாப்பா, உங்க உம்மாவும் அப்படித்தானா? என் உம்மாவும் அப்படித்தான்! நான் வேண்டாம்னு சொன்னாலும் விடுறதில்லை; போதும்னாலும் விடாம சாப்பாடு வச்சுகிட்டே இருப்பா. சே, இந்த உம்மாக்களே ரொம்ப மோசம். இல்ல வாப்பா?” என்று சொல்ல, சார் முகத்தப் பாக்கணுமே!!
 
   

Post Comment

இட்லியும், நெய்ச்சோறும்




எங்க ஊரில்,  குடும்பத்துக்கொருவராவது வெளிநாடுகளில் இருப்பதால், செல்வச் செழிப்புடன் இருக்கும் இன்று போலல்லாது, அன்று, அன்றன்றைக்குச் சம்பாதித்து, அன்றைய உணவைத் தேடிக்கொள்ளும் குடும்பங்களே அதிகம்.  ஓரளவு வசதியானதாக சில குடும்பங்கள்  இருந்தாலும், கிராமத்தினருக்கே உரிய சிக்கன குணத்தாலும், “ஊரோடு ஒத்து வாழ்”கின்ற பெரிய மனதினாலும், வசதியான வீடுகளிலும்கூட உணவுகளில் அளவோடு இருந்த காலம்.

உழைத்தால்தான் உணவு என்ற காரணத்தால், பெரும்பாலான வீடுகளில் காலை உணவு என்பது பழைய சோறு அல்லது தெருவில் வரும் இட்லிக்காரம்மாவின் இட்லி அல்லது ஆப்பம்தான். வீட்டில் செய்தால், உழைக்க நேரம் இருக்காதே. அதுபோல, வசதியானவர்கள் எல்லாருமே பெரிய பெரிய கூட்டுக்குடும்பங்கள் என்பதால், சமைக்க அதிக நேரம் பிடிக்கும் இட்லி, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்தி, பூரி போன்றவையெல்லாம் செய்வது மிக மிக அரிது. சேமியா, உப்புமா, கொழுக்கட்டை, புட்டு (குழாப்புட்டு அல்ல) போன்ற “Mass food"தான் எல்லா வீட்டிலும் பெரும்பாலும். செய்வதும் எளிது.

காரணம், ஒவ்வொரு கூட்டுக் குடும்பத்திலும் குறைந்த பட்சம் 10-15 பேராவது இருப்பார்கள். அவ்வளவு பேருக்கும் இட்லியோ தோசையோ வார்த்து முடிவதற்குள் மதியமாகிவிடும். இப்பப் போல, டயட் என்ற பெயரில் 3-4 இட்லி சாப்பிடும் காலமா அது? அத்தோடு விறகு அடுப்பும், கெரசின் ஸ்டவ்வும்தான் உண்டு. அதனால்தான் “mass food"!!  செய்வதும் எளிது; சாப்பிடும் அளவு குறித்தும் கவலையில்லை!!

அதுபோல, பண்டிகை மற்றும் விசேஷ தினங்களில்தான் நெய்ச்சோறு, தேங்காய்ச் சோறு, பிரியாணி போன்ற உணவுகளும். அதுவும்கூட தனித்தனியே வீடுகளில் ஆக்குவது கிடையாது. ஊர்கூடி, ஒவ்வொரு தெருவுக்கும் சேர்த்து ஊர்ப் பெரியவர்கள் பொறுப்பெடுத்து, பணம் வசூலித்து மொத்தமாக ஆக்கி, பங்கிட்டுத் தருவார்கள். ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி பண்டிகை நாட்களில் எல்லோர் வீட்டிலும் ஒரே உணவு. பெரிய பெரிய சட்டிகளில் தெருவில் வைத்து சமைப்பதை வேடிக்கை பார்ப்பதுதான் எங்களுக்குப் பொழுதுபோக்கு. பண்டிகை வந்தால்தான் நெய்ச்சோறு என்பதால் அதற்கும் ஆவலாக காத்திருப்போம்!! எக்ஸ்ட்ரா சைட் டிஷ் மட்டும் அவரவர் வசதிப்படி வீடுகளில் செய்துகொள்வார்கள்.

அந்தக்காலக் கூட்டுக் குடும்பங்களில் இட்லி, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்தி, பூரி போன்றவையெல்லாம் செய்வது வருடத்தில் சில முறைகளாகத்தான் இருக்கும். அதற்கு முந்தைய தினமே அதற்கான தயாரிப்புகளில் இறங்கி,  வீடே பரபரப்பாக இருக்கும்!! வீட்டுத் தலைவியான பாட்டி, தன் மகள்களிடம் ”இட்லி செய்யப் போறோம்; பேரப்பிள்ளைகளை இங்கே அனுப்பிவிடு. மருமகனுக்கும், உன் மாமானாருக்கும் காலைல கொடுத்து விடுறேன்” என்று சேதி சொல்லி விடுவதும் உண்டு.

என் சின்ன வயதில், எங்கள் வீட்டில் இட்லி செய்தால், தாத்தாவுக்குக் கொடுத்து விடுவோம். அதேபோல, அங்கே செய்தால் இங்கே வரும்!! கைக்குழந்தைகள் இருக்கும் சாச்சி, மாமி வீடுகளுக்கும் இட்லி கொடுத்தனுப்பப்படும். இட்லிக்கு மட்டுமல்ல, தோசை, ஆப்பம், இடியாப்பம் போன்ற மற்றவைகளுக்கும் இதே கதைதான்!! அந்த இட்லியைச் சாப்பிடுவதும் தனி சுகம்தான். சாம்பார், பச்சை/ சிவப்புச் சட்னிகளோடு ரசித்து, ருசித்துச் சாப்பிடுவேன்.

கிரைண்டர் வந்தபின், 2-3 மாதத்திற்கு ஒரு நாளாவது இட்லி, தோசை, ஆப்பம் தரிசனங்கள் கிடைத்தது.

பிறகு, சில வீடுகளில் இட்லிக்கு மாவு அரைத்துத் தர ஆரம்பித்தார்கள். இப்ப அடிக்கடி இட்லி செய்ய முடிந்தது. அரிசியும், உளுந்தும் ஊற வைத்துக் கொடுத்துவிட்டால், அரைத்துத் தருவார்கள். அதைக் கொண்டு கொடுக்கும்போது, அம்மாக்கள் சொல்லி அனுப்பும் கண்டிஷன்கள் இருக்கே!! “வேற வீட்டு அரிசி, உளுந்தோட சேத்துப் போடக்கூடாது, தனியாத்தான் போட்டு அரைச்சுத் தரணும்ன்னு சொல்லு; கிரைண்டர் நல்லா கழுவி சுத்தமாருக்கான்னு எட்டிப் பாரு; போன தரம் மாவு ரொம்பக் குறைய இருந்துச்சுன்னு மறக்காமச் சொல்லு” என்று ஆயிரத்தெட்டு கண்டிஷன்கள்!!

பின்னர் வந்த டேபிள்-டாப்/ டில்டிங் கிரைண்டர்கள் மற்றும் ஃப்ரிட்ஜ் தயவாலும், தனிக்குடித்தனங்களாலும் இட்லி தினசரி உணவாகிப் போனது.

இட்லி ஆரோக்கியமான உணவு, செய்வதற்கு எளிதானதும்கூட (!!) என்று பிள்ளைகளுக்குக் காலை உணவாகத் தருகிறேன். அதனால் அவர்களுக்கு இட்லி பிடிப்பதில்லை இப்போது. அவர்களுக்குப் பிடிப்பதில்லை என்பதால், என் அம்மா, மாமியார், தங்கைகள், உறவினர்கள் யாரும் நாங்கள் செல்லும்போது இட்லி செய்வதேயில்லை. பிரியாணிக்காகப் பெருநாளுக்குக் காத்திருப்பதுமில்லை.
 
  
 

Post Comment