Pages

முகமலர் இற்றைகள் - 3




எனது ஃபேஸ்புக் பதிவுகள் இங்கும் இற்றைப்படுத்திக் கொள்வதற்காக....

வலைப்பதிவைப் போலவே, ஃபேஸ்புக்கிலும் பின்னூட்டப் பதிவுகளில்தான் சுவாரசியம் நிறைய இருக்கும். ஒவ்வொரு பதிவின் அருகே இருக்கும், தேதியை (Date stamp) க்ளிக் செய்தால், அந்தப் பதிவையும், அதன் பின்னூட்டங்களையும் பார்க்கலாம். நாங்க என்ன வெட்டியாவா இருக்கோம்னு எகிறாதீங்க. தேதியோடு பதிவுகளைக் கொடுத்துள்ளதால், தொடர்புபடுத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.

September 12, 2013

“.... அவனே (யாவருக்கும்) உணவளிக்கிறான்; அவனுக்கு எவராலும் உணவளிக்கப் படுவதில்லை”

”இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை;” — feeling amused.




September 15, 2013
சென்ற தி.மு.க. ஆட்சியில் தினமும் நான்கு மணிநேரம் கரண்ட் கட். ‘நாங்க ஆட்சிக்கு வந்தா மின்சாரத் தடையே இருக்காது’ன்னு சொன்ன அ.தி.மு.க.வின் ஆட்சியில், அது ”வளர்ச்சி” அடைந்து 12-14 மணி நேரம் வரை ஆனதால், தமிழர்கள் ஆற்காட்டாரிடம் மானசீகமாகவும், போஸ்டர் அடிச்சு ஒட்டியும் மன்னிப்பு கேட்டார்கள்.

#பெட்ரோல்_விலை_மற்றும்_வரவிருக்கும்_எலெக்‌ஷன்!!
#சூடு_கண்ட_பூனைfeeling determined.


September 23, 2013
அவ்வப்போது மகன்களை அதீத பாசத்துடன் ”அறிவுக்கொழுந்து” என்று “பாராட்டுவது” உண்டு. எப்போது கேட்டுக் கொண்டு சும்மா இருக்கும் பெரியவன், இன்று திடீரென்று “வேப்பங்கொழுந்து தெரியும்; (மாசத்துக்கொருக்க சாப்பிடுவதால்) அதென்ன அறிவுக் கொழுந்து?” என்று கேட்டதில் கொஞ்சம் திக்குமுக்காடித்தான் போனேன். உடனே சமாளித்து, ”கொழுந்துன்னா அப்பதான் வளர்ந்து வரும் இளம் இலைன்னு அர்த்தம். ஆள் மரம் மாதிரி வளந்திருந்தாலும், அறிவு மட்டும் இன்னும் கொழுந்து ரேஞ்சுக்கே இருக்க்கிறவங்கதான் அறிவுக்கொழுந்துகள்!!!”

#ஃபீலிங்_தமிழம்மா....

(அடுத்த பகுதிகளில் ‘மடச்சாம்பிராணி’, ‘விளக்கெண்ணெய்’ ஆகியவற்றுக்கான விளக்கங்களைப் பார்க்கலாம்.)

October 2, 2013

மீட்டிங், ட்ரெயினிங், பார்ட்டி என்ற பெயரில் வாரத்துக்கு ஒருநாளாவது ‘நல்ல’ சாப்பாடு கிடைத்து விடுகிறது - அவருக்கு. — feeling jealous.

September 29, 2013

பாலிலிருந்து வெண்ணெய் செய்வது(?) எப்படி என்று தெரியும்தானே? பாலைத் தயிராக்கி, மோராக்கி, மோரைக் கடைந்தால் கிடைப்பது வெண்ணெய் - Butter!! டயட்டிங் ஆரம்பித்தபின் செய்த ஆராய்ச்சியில், “Peanut butter" எனப்படும் வேர்க்கடலையிலிருந்து கிடைக்கும் ‘வெண்ணெய்’ டயட்டுக்கு உகந்தது என்றறிந்ததில், அதுவும் தினப்படி காலை உணவில் சேர்ந்துகொண்டது.

பாலிலிருந்து வெண்ணெய் எடுக்கும் முறை மட்டுமே தெரியும் என்பதால், ‘வேர்க்கடலை வெண்ணெய்’ என்பதும் இதே போல ‘கஷ்ஷ்ட்ட்டமான செய்முறை’ கொண்டது என்றே நினைத்திருந்தேன். அதனால் அதன் செய்முறை பற்றி ஆர்வம் காட்டவில்லை.

சமீபத்தில், @Geetha.achalrecipes தனது பதிவில், Almond butter - பாதாம் வெண்ணெய் செய்முறையைப் பதிந்திருந்தார். மிக மிக இலகுவாய் இருந்தது. அதைப் பார்த்ததும்தான் இந்த ட்யூப்லைட்டுக்குள்ளும் ஒரு ஃப்ளாஷ்!! அப்ப, ‘வேர்க்கடலை வெண்ணெயும்’ இப்படித்தான் ஈஸியா இருக்குமோன்னு இணையத்தில் தேடியதில்... ஆமாம், பயங்கர ஈஸி!! வேர்க்கடலையை மட்டும் மிக்ஸியில் போட்டு சிறிது நேரம் அரைத்தால், "Peanut Butter!!" தயார்!!

இதுவரை நான் வாங்கிவந்த சுவையான ரெடிமேட் வேர்க்கடலை வெண்ணெயில் சேர்க்கப்பட்ட பொருட்கள் கீழே:

Sugar
Corn syrup
Hydrogenated oils
Molasses
Salt
Citric acid
Pectin
Pottasium Sorbate
Sodium Citrate
Flavour

நான் செய்ததில் இது எதுவுமே இல்லை, வேர்க்கடலை மட்டுமே!! எந்த additive-ம் இல்லை என்பதால், உடல்நலத்திற்குக் கேடு இல்லை; அதே சமயம் சுவையும் இல்லை!! அவ்வ்வ்வ்..... ஆமாம், இதுதான் ஒரிஜினல் செய்முறை என்றாலும், இதுவரை “கூடுதல் சுவையூட்டும் பொருட்கள்” சேர்த்துச் செய்தவற்றையே உண்டு பழகிவிட்டதால், இது சுவை குறைவாக இருக்கிறது!!!

இருந்தாலும், இதையே இனி பின்பற்றலாம் என்றிருக்கிறேன். இது மட்டுமல்ல, பீட்ஸா, நக்கெட்ஸ், பர்கர்.... ஏன் பட்டர் சிக்கன், நாண் இந்திய வகைகள்கூட வீட்டில் செய்யும்போது கடையில் வாங்கும் சுவை வருவதில்லை. இருப்பினும், ஆரோக்கியம் கருதி நாக்கைக் கொஞ்சம் சுருட்டி ஓரமா வச்சுகிட்டு சாப்பிட்டுகிடுறோம்.

”சப்புனு இருந்தாலும், நானே செஞ்சது”

feeling accomplished.


October 9, 2013

அம்மா சாப்பிடட்டும்னு பிள்ளைகள் விட்டு வச்சிருந்த (கடையில் வாங்கிய) கடைசி இனிப்பு...
......
பிணைமா னினிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்
கள்ளத்தி னூச்சுஞ் சுரமென்பர் காதல
ருள்ளம் படர்ந்த நெறி.

இதுவும் காதலே..... — feeling blessed.




இதுவே வீட்டுல செஞ்சதுன்னா, முழுசையும் எனக்கே விட்டுக் கொடுத்துருவாங்க!! பாசக்காரப் பயலுவோ...

October 10, 2013

மறைந்த விநோதினியின் தாய் சரஸ்வதியின் தற்கொலை குறித்து விகடனில்::
_________________________________________
''...சிகிச்சையின்போது உதவுவதற்காக, 'ஹெல்ப் வினோதினி டாட் காம்’ என்ற வெப்சைட் ஆரம்பித்தனர் அவரது உறவினர்கள். ஏராளமான வெளிநாடு மற்றும் உள்நாட்டு தமிழ் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் அளித்த நன்கொடை கோடிகளைத் தாண்டியது. பிரதமர் ந¤வாரண ந¤தி, முதல்வர் நிவாரண நிதி என அரசு தரப்பில் இருந¢தும் உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில்தான் குடிப்பழக்கம் கொண்ட வினோதினியின் தந்தை ஜெயபால், பணத¢தை எடுத்து செலவு செய்திருக்கிறார். கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவுகிற வகையில்தான் இதை செலவுசெய்ய வேண்டும் என்று சரஸ்வதியும் கண்டிப்புக் காட்டியுள்ளார். ... இறந்த பிறகும் பணத்தை எடுத்து செலவு செய்திருக்கிறார்கள்.

... எல்லாவற்றையும் நிர்வகிப்பது அவர்களது தூரத்து உறவுக்காரரான ரமேஷ். வங்கிக் கணக்கில் இப்போது 67 லட்சத்துக்கு மேல் இருக்கிறது. இவர்கள் எடுத்து செலவுசெய்ததைப் பார்த்து வங்கியினர், 'வினோதினி ஆசிட் வீச்சு வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், இப்போது பணத்தை எடுக்க முடியாது’ என தடை விதித்தனர். நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகுதான், வினோதினி பெயரில் ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சட்டப்படி உரிமம் வாங்கி இருக்கிறார்கள்.”
_____________________________________________

பணம், பத்து என்ன அதுக்கு மேலேயும் செய்யுமாம். — feeling depressed.

October 14, 2013

தெரிந்த குடும்பத்தில் ஒரு மாணவி, எதிர்பாராதவிதமாக கல்லூரித் தேர்வில் முக்கியமான இரு பாடங்களில் தோல்வியடைந்துவிட்டாள். மாணவியைப் போலவே, வீட்டினருக்கும் அதிர்ச்சிதான் என்றாலும், மாணவியைத் தேற்றும்விதமாக ஆறுதலாகவே நடந்துகொள்கின்றனர். மாணவியின் தோழி, மாணவியின் அம்மாவிடம், “உங்கள் மகள் தற்கொலை செஞ்சுக்க மாட்டாள்ல?” என்று கேட்கிறாள்!!!!!!

பிரச்னைகள் வரும்போது தற்கொலை (முயற்சியாவது) செஞ்சுகிட்டாதான் ”மானஸ்தி” போல!! — feeling meh.


October 17, 2013

நாற்பது வயதுக்கு மேல், கண்ணாடி அணியாமல், சின்ன எழுத்துகள் சரியாகத் தெரிவதில்லை. வாழ்க்கையின் சின்னச் சின்ன குறைகளும் பெரிதாகத் தெரியாமல் போக ஆரம்பிக்கும் காலமும் அதே நாற்பதில்தான்!! — feeling blessed.

Post Comment

என்ன விலை அழகே..??




சில மாதங்களுக்கு முன்பு, சின்னவனுக்கு நெற்றியில் ஒரு சின்ன கொப்புளம் வர, அதற்காக மருத்துவரைச் சந்திக்க சென்றிருந்தோம். பரிசோதனைக்குப் பின், கொப்புளத்தைச் சிறு அறுவை சிகிச்சை செய்து நீக்கியாக வேண்டும் என்று சொன்ன மருத்துவர், தன் பேச்சினிடையில் ஒரு ஏழெட்டு முறையாவது “கண்டிப்பாக முகத்தில் தழும்பு வரத்தான் செய்யும்; அதுக்கு ஒண்ணும் செய்ய முடியாது” என்று சொல்லிவிட்டார்.

நான் அறுவை சிகிச்சை, அனஸ்தீஷியா என்ற கவலையில் இருந்ததால் அதைப் பற்றிக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், மீண்டும் மீண்டும் சொல்லவும், ”ஏன் டாக்டர், தழும்பு இருந்தா என்ன? அதனால வேற எதும் பிரச்னை வருமா?” என்று நான் கேட்க... டாக்டர் ஒருமாதிரி ஜெர்க் ஆகிப்போனார். பிறகுதான் புரிந்தது.  அறுவை சிகிச்சை நிபுணரான அவரிடம் வருபவர்கள் அநேகமாக எல்லாருமே சொல்லும் முதல் கண்டிஷன், “தழும்பு வராத மாதிரி ஆபரேஷன் பண்ணுங்க” என்றுதானாம்!!

”அதனால் வருபவர்கள் எல்லோரையுமே, அடுத்த ரூமில் இருக்கும் ப்ளாஸ்டிக் சர்ஜனிடம் அனுப்பி விடுகிறேன். கீழே விழுந்து முகத்தைக் கிழித்துக் கொண்டு வரும் சிறுவர்களுக்குக்கூட தையல் தழும்பு தெரியக்கூடாது என்று பெற்றோர் சொல்கிறார்கள்.” என்று வருத்தப்பட்டுச் சொன்னார்!! அழகு படுத்தும் பாடு!!

ன் பெரியவனுக்கு, ஒன்றிரண்டு பற்கள் மட்டும் முன்பின்னாக இருக்கும். அதனால் பிரச்னைகள் இல்லை. ஆனால், ஒரு நண்பர் குடும்பத்தினர், என்னைப் பார்க்கும்போதெல்லாம், அவனது தெற்றுப்பல்லைச் சரியாக்கும்படி என்னை வலியுறுத்துவர். அதற்குக் காரணமென அவர்கள் சொல்வது, பேச்சு அல்லது உண்பது அல்லது பற்தூய்மை என்பவை அல்ல. நாளை அவன் வேலைக்கு இண்டர்வியூ போகும்போது, பல்வரிசை சரியா இல்லன்னா, அவனுக்கு Self-confidence இருக்காதாம்!! ஙே....

இப்ப ட்ரெண்ட் என்னன்னா,  தெத்துப் பல் ஒன்றுகூட இல்லாத பல்வரிசை இருக்கிறவங்ககூட “க்ளிப்” மாட்டிட்டு இருக்காங்க!!  ”அழகான” பல்வரிசைக்காகவாம்!! எனக்கு அதுல ஆச்சரியம் என்னன்னா,  பல்வலி வந்தாலே டாக்டர்கிட்ட போகப் பயம் - ஊசி போடுவாங்களே... அதுவும் கத்தமுடியாதபடிக்கு வாயத் திறந்து வச்சுல்ல போடுவாங்க!!  இதுவே, பல்வரிசையைச் சரிபண்ணனும்னா, எத்தனை ஊசி போடணும், எத்தனை பல் எடுக்கணும், அந்த க்ளிப்பை மாட்டி வச்சுகிட்டு சாப்பிடப் படுகிற அவஸ்தை இருக்கே... எப்பா....  அதைவிட முக்கியமாக அதற்கு ஆகும் செலவு!! ஆனா, “அழகு” என்ற ஒன்றுக்காக வலி, சிரமம், செலவு எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளத் தயாராக இருப்பவர்களைப் பார்க்கும்போது வருவது ஆச்சரியமா, அதிர்ச்சியா??!!

சென்ற வருடம் உறவு வட்டத்தில், ஒரே சமயத்தில் மூன்று குழந்தைப் பேறுகள் இருந்தன.  ஒருவரின் குழந்தை,  பிறந்து சில நாட்களில் இதயக் கோளாறு காரணமாய் இறந்துவிட்டது. இன்னொருவருக்கோ, சில பிரச்னைகளால் குறைமாதத்தில் பிறந்து, தொடர் ஆஸ்பத்திரி வாசம் என்று சிரமப்பட்டார்கள்.  இதையெல்லாம் யோசித்துக் கொண்டே, மூன்றாமவருக்கு தொலைபேசி, குழந்தை நலமா என்று விசாரித்தேன். பேசியவர், “நலம்தான், ஆனா...” என்று இழுத்தார்.

பதற்றத்தில், “என்னாச்சு” என்று கூட கேட்க முடியவில்லை என்னால். “ஆனா, கறுப்பா இருக்கு. பொம்பளப் புள்ள கறுப்பா பிறந்திருக்கேன்னு கவலையா இருக்கு” என்றார்!! அவரைச் சொல்லிக் குற்றமில்லை.  மேற்சொன்ன இரு நிகழ்வுகளையும் சொல்லி,  ஆரோக்கியமாய் அதுவும் சுகப்பிரசவமாய்ப் பிறந்ததே பெரிதல்லவா என்று கூறினேன்.  இந்தியா போகும்போதெல்லாம், சிலர் என்னிடமே  ”உன் மகன் கறுப்பா ஆகிட்டே வரான், அதைத் தேய் இதைக் குடு”ன்னு ஒரே டார்ச்சர்!!


இப்படி அழகு, அழகு என்று ஒரு மாயையில் மூழ்கிக் கிடப்பவர்களைக் குற்றம் சொல்வதா, அல்லது சமூகம்தான் அதற்குக் காரணம் என்று சொல்லி அவர்களை நியாயப்படுத்துவதா எனப் புரியவில்லை. ஆனால் ஒரு விஷயம், இந்த அழகு என்பது, பலருக்கும் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போதுதான் தேவைப்படுகிறது. வீட்டினுள் குறைந்தபட்ச சுத்தமாகக் கூட இருக்க முடியாதவர்கள், புற இடத்தில் மட்டும் அழகைப் பேணுவது புதிரானது.



புறஅழகு மட்டுமே இவ்வுலகில் பிரதானமாக இருப்பதன் தொடர்ச்சிதான், “ஆஸிட் வீச்சு”களும். காண்டாக்ட் லென்ஸ்கள்கூட.  அதிலும் இந்தப் புற அழகை, தன்னம்பிக்கையோடு தொடர்புபடுத்தும் வியாபாரத் தந்திரத்தை என்னவென்பது. சிவப்பாய், அழகாய் இருப்பதுதான் Confidence-ஆம்!! அதைப் புரிந்துகொள்ளாத இளைய தலைமுறையைக் கண்டு நம் மனம் பதறுகிறது.



தடுப்பூசி காணாத சென்ற தலைமுறைகளில், ”பெரியம்மை” என்றும் ஒரு நோய் இருந்தது. இந்நோயால் தாக்கப்பட்டவர்களின் முகங்கள் முழுதும் அம்மைத் தழும்புகளால் நிறைந்திருக்கும். பெண்களே ஆயினும், அத்தழும்புகள் அவர்களின் திருமணத்திற்கு ஒரு போதும் தடையாக இருந்ததேயில்லை!! இன்று...???

Post Comment

டவுட்ஃபுல் டயட்




"ங்க இது சரிவருமா...”

“அதெல்லாம் சரியாத்தான் இருக்கும்..”

“இல்லை, இதுக்கு முன்னாடியும் பலமுறை முயற்சி பண்ணியும்... ஒண்ணும் பிரயோஜனம் இல்லை.. அதான் டவுட்டா இருக்கு..”

”இந்த வாட்டி கண்டிப்பாச் சரியா வரும். கவலைப் படாதே..”

“அதில்லைங்க......”

“ஸ்ஸ்... என்ன நீ? புருஷன் ஒரு நல்ல காரியம் செய்யப்போறான்னா, அதுக்கு மனைவி “சென்று வா, வென்று வா”ன்னு பக்கபலமா நிக்கணும். அத விட்டுட்டு, “போகாதே போகாதே என் கணவா”ன்னு பத்மினி மாதிரி புலம்பக் கூடாது!!”

“ஆங்... நீங்க மட்டும் போருக்குப் போறதுன்னா, நான் ஏன் தடுக்கப் போறேன்... நல்லா போயிட்டு வாங்கன்னு ஜந்தோஜமா அனுப்பி வைப்பேன்.. இங்க என்னையுஞ் சேத்துல்ல இழுக்குறீங்க...”


“இதென்ன போருக்குப் போற அளவுக்குக் கஷ்டமா? டயட் சமையல்தானே?”

“ஆமா.. அன்னாடம் சமையலே ஒரு குருஷேத்திரமாத்தான் இருக்கு!! சாதாரண சமையலுக்கே நாக்கு தள்ளும்.. இதிலே நீங்க வேற டாக்டர் தந்தாருன்னு டயட் சமையல் லிஸ்டை நீட்டுறீங்க..... ஏந்தான் ஆண்டவன் எனக்கு இப்பிடிலாம் சோதனைகள் தர்றானோ.. இதுக்கு நிஜப் போர்க்களமே பரவால்லை... அங்கல்லாம் சமைக்க வேண்டாமே”

புலம்பிக் கொண்டே “டயட் லிஸ்ட்” மீது பார்வையை ஓடவிட்டேன். அதிர்ந்து போய் அலறினேன்!!

“சந்தேகமேயில்லை, இந்த டாக்டர் போலி டாக்டர்தான்!! எங்கப் போய் பிடிச்சீங்க இந்த டாக்டரை? வாங்க உடனே ஒரு “வாசகர் கடிதம்” எழுதுவோம்!!” 


“ஏய், நிறுத்து...நிறுத்து.... போலி டாக்டரா.. என்ன சொல்றே?”

“ஆமாம், டயட்னா என்ன? அசைவமே சாப்பிடாம, காய்கறி, பழங்களைப் பச்சயா சாப்பிடுறதுதானே? அதிலயும் கேரட்தான் நிறையச் சாப்பிடச் சொல்வாங்க. இந்த டாக்டர் என்ன எழுதிருக்கார் பாருங்க... காலையில் முட்டை, மதியம் சிக்கன்-மட்டன், ராத்திரி மீனுன்னு மூணுவேளையும்  அசைவம் அதுவும் தெனமும் சாப்பிடச் சொல்லி எழுதிருக்கார்!! அதுவுமில்லாம, கேரட்டே சாப்பிடக்கூடாதாம்!! என்ன கொடுமை இது??”

"இவ ஒருத்தி... எப்படி விளங்க வைப்பேன்... ஆ.. காட்டுல பாத்தீன்னா, யானை இலை தழை மட்டும்தான் சாப்பிடும். சிறுத்தை, அசைவம் மட்டும்தான் சாப்பிடும். இப்பச் சொல்லு, எது ஒல்லியா இருக்கு?”

“ம்ம்... சிறுத்தை எப்பவும் ஓடியாடி இருக்கும். ஆனை அசைஞ்சு அசைஞ்சு மெதுவாத்தேன் நடக்கும். அதயும் சொல்லுங்களேன்..."

"இந்த எடக்கு மடக்கு பேச்சுக்கொண்ணும் குறைவில்லை... போய் அதுல இருக்கதச் செஞ்சுக் கொண்டுவா...”

“ஏங்க நல்லா கன்ஃபர்மாத் தெரியுமா... இது உங்களுக்கான மெனுதானா?”

“ஏன்?”

“இல்ல... காலை 2 முட்டை; மதியம் கால்கிலோ மட்டன்; இரவு கால்கிலோ சிக்கன்” அப்படின்னு இருக்கிறதப் பாத்தா, எனக்கென்னவோ, ஏதோ ஒரு ஜிம்மி, டாமிக்கு எழுதிவச்சத மாத்தி உங்ககிட்ட கொடுத்துட்டாரோன்னு..... சரி, சரி, முறைக்காதீங்க.... உங்களுக்கு வாக்கப்பட்ட நான் மட்டும் மலக்கு(ஏஞ்சல்)ன்னா சொல்லிக்க முடியும்? ஜிம்மிக்கேத்த டாமிதானே வாக்கப்படும்?

ப்படியாகத் தொடங்கியது அந்தப் போராட்டம்.... அடிப்படை இதுதான்: கார்போஹைட்ரேட்களான சோறு, கோதுமை, சோளம் போன்றவற்றோடு, கேரட் பீட்ரூட், உருளை போன்ற மண்ணிற்கு அடியில் கிடைப்பவற்றையும் அறவே தவிர்க்க வேண்டும். எண்ணெய், சீனி கூடவே கூடாது. வாழை, மாம்பழம், திராட்சை போன்ற சில பழவகைகளும் சாப்பிடக் கூடாது. இவ்வளவுதான்.
cdm.nhg.com.sg
காலை அவித்த முட்டை, மதியமும் இரவும் அவித்த அல்லது க்ரில் செய்த மட்டன், சிக்கன் அல்லது மீன். உடன் வெள்ளரி, லெட்யூஸ், ப்ரக்கோலி, கிவி, அன்னாசி போன்ற சில காய்கறி மற்றும் பழங்கள்.  அதாவது, ப்ரோட்டீன் மற்றும் விட்டமின்கள் மட்டும் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இதில் நல்ல காரியம் என்னன்னா, சீஸ் (Cheese), பால், முட்டை ஆகியவற்றை எடை அதிகரிக்கச் செய்பவை என்று ஒதுக்கியிருந்தது தவறென்று புரிந்து கொண்டோம்.  மற்றும், அசைவ உணவுகள் எடையைக் கூட்டுபவை அல்ல, அவற்றை நாம் சமைக்கும் முறையே அதனால் வரும் பிரச்னைகளுக்குக் காரணம் என்று நான் சொல்லிவந்தது உண்மையே என்று நிரூபணமானது.

எண்ணெய், தேங்காய், முந்திரி எதுவும் சேர்க்காமல், உரிய மசாலாக்கள் சேர்த்து வேக வைத்தோ, க்ரில் செய்தோ உண்டால் போதுமானது. உப்பு குறைக்கச் சொல்லப்படவில்லை என்றபோதும், இந்த டயட்டினாலேயே என் கணவரின் உயர் இரத்த அழுத்தமும் சீரானது இன்னொரு பலன்.

(எச்சரிக்கை: இந்த ப்ரோட்டீன்-ரிச் டயட் கிட்னி செயல்பாட்டைப் பாதிக்கும் என்பதால் யாரும் சுயமாக, மருத்துவர் ஆலோசனையின்றி இந்த டயட்டை முயற்சிக்க வேண்டாம்).

ப்படியாக, ஒரே மாதத்தில் 6 -7 கிலோ எடை குறையவும், பார்ட்டி பயங்கர சந்தோஷமும்  பெருமையுமாக என்னிடம் வந்து சொன்னார்.


“என்னது, 7 கிலோ குறைஞ்சிடுச்சா?”

”ஏன் வருத்தமாருக்கா? இப்படி சாப்பிடாமக் கிடந்து எடையக் குறைக்கிறேனானே புருஷன்னு கவலையாருக்கா உனக்கு? எடை குறைஞ்சா ஆரோக்கியம் கூடும். கவலைப்படாதே..”

“ம்க்கும்.... இங்க யாரு கவலைப்பட்டாங்களாம்? ஏதோ நீங்க கொஞ்சம் குண்டா இருக்கப் போயித்தான், உங்கம்மா எனக்கும் சமைக்கத் தெரியும்னு நம்புறாங்க. ஏற்கனவே “பூனையை வளர்த்து கிளி கையில் கொடுத்துட்டோமே”ன்னு அவங்களுக்கு ஏக வருத்தம். இதுல நீங்க இப்படி ஒல்லியாப் போனா அவ்ளோதான்.. என் தலைதான் உருளும்...”

“ஙே...”
ரம்பத்தில் அலுவலகம் மற்றும் வெளியே சந்திக்கும் நண்பர்கள், உறவுகள் எல்லாரும் “அடடே, வெயிட் குறைச்சிருக்கியா? வெரிகுட்” என்று பாராட்டுவதை என்னவோ சந்தூர் சோப் விளம்பரத்தில் “எச்சூஸ்மி, நீங்க எந்த காலேஜ்” என்று கேட்டதைப் போல  உச்சி குளுந்து போய் வந்து சொல்லி சொல்லி பெருமையடிச்சுகிட்டிருந்தார்.

தொடர்ந்து அடுத்த மாதங்களிலும் இதே மெனு தொடர்ந்ததில் நல்ல முன்னேற்றம் - எடை குறைவதில். இப்போது பார்ப்பவர்களெல்லாம், “ஏ.. என்னப்பா சுகர் எதுவும் இருக்கா? டாக்டர்ட்ட போய் செக் பண்ணு. இப்படி எளச்சிட்டியே?” என்று கேட்பதாகச் சொல்லிக் கடுப்பானார். எனக்கு சந்தோஷம். இருக்காதா...

விக்கிபீடியா
healthyfoodforkidsfree.blogspot.com
ப்படியாக ஒரு நாள், இருவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது எங்கள் இருவரின் உணவுத்தட்டுகளையும் சுட்டிக்காட்டிச் சொன்னேன், “இதெல்லாம் ரொம்ப அநியாயங்க.. என் ப்ளேட்டைப் பாருங்க, அரை ப்ளேட் சோறு, தொட்டுக்க கொஞ்சமா கூட்டு, கறி இருக்கு. உங்க ப்ளேட்ல பாருங்க, ப்ளேட் முழுசும் நெறஞ்ச மாதிரி சிக்கன், தொட்டுக்கக் கொஞ்சமா சோறுன்னு இருக்கு... எனக்கென்னவோ இன்னும் டவுட்டாத்தான் இருக்கு!!”

“ஸ்ஸ்... இனும் உன் டவுட் போகலையா... அவர் நெஜ டாக்டர்தான்னு எத்தனை தடவை...”

“எனக்கு டவுட் டாக்டர் மேலே இல்லை”

“அப்போ....”

“ம்ம்... ’எம்பொண்டாட்டி மட்டன்சிக்கனையே எங்கண்ணுல காட்ட மாட்டேங்கிறா.. காய்கறியா போட்டு கொல்றா.. நீங்கதான் என்னைக் காப்பாத்தணும்’ன்னு டாக்டர்கிட்ட நீங்களே போய்ச் சொல்லி மூணுவேளையும் நான் -வெஜ் சாப்பிட ப்ளான் பண்ணி டயட் மெனு எழுதி வாங்கினீங்களோன்னுதான் எனக்கு டவுட்!!”

Post Comment