Pages

விடை பெறுகிறேன் - 2




தலைப்பைப் பாத்ததும் என்னவோ ஏதோன்னு  அடிச்சுப் பிடிச்சு, “எல்லாம் நல்லாத்தானே போயிட்டிருக்கு, இப்ப என்னாச்சு?”னு கேள்வியோட பதட்டமா வந்திருப்பீங்க. ஒண்ணுமில்ல நல்ல விஷயந்தான். ஜந்தோஜமா வந்தவங்களுக்கு “ஆசை தோசை அப்பளம் வடை”!!  சீரியல் மாதிரி எபிசோட் நம்பரெல்லாம் ஏன்னு கேக்கிறவங்களுக்குப் பதில்  "விடை பெறுகிறேன்-1"-ல் இருக்கு!!

ஏற்கனவே மக்காவுக்குச் சென்று, இறைவனருளால், இரண்டுமுறை “சின்ன ஹஜ்” எனப்படும் “உம்ரா” செய்திருந்தாலும் முழுமையான ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசையிருந்தது. சரி, சின்னவன் வளரட்டும், அதுக்குள்ள நமக்கும்  மனசுல ஒரு பக்குவம், maturity, ஒரு முதிர்ச்சி, பொறுப்புணர்ச்சி வந்துடும் அப்படின்னு நினைச்சுக் (நம்ம்ம்ம்ம்பி) காத்திருந்தோம்.

முதல் கண்டிஷன்படி, அல்ஹம்துலில்லாஹ், சின்னவன் நல்லபடியா வளந்துட்டான். ஆனா, அடுத்ததுதான்.... பக்குவம், முதிர்ச்சிக்கு எல்லாம்  அளவுகோல் ஏது?   மேலும், போன பதிவுல சொல்லியிருந்த மாதிரி, நாளை என்ன நடக்கும்கிறது நம்ம கையிலயா? அதனால, அலை எப்ப ஓயறது, தலை எப்ப முழுகுறதுன்னு காத்திருக்காம, ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டுக் கிளம்பிட்டோம். ஆமா, நாங்க இந்த வருட ஹஜ்ஜுக்குப் போறோம், இன்ஷா அல்லாஹ். 
முன்னே ரெண்டு முறை உம்ராவுக்காகப் போனப்போ, ஹஜ் போல  அதிகக் கூட்டமில்லை என்றாலும், அதற்கே அங்கு வந்திருக்கும் பல நாட்டு மக்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள், தனித்துவங்கள்னு நிறைய வேறுபாடுகள் இருந்த போதிலும், பிரார்த்தனைநேரம் என வரும்போது அனைவரும் ஒரே மாதிரி, ஒரே இறைவனை நோக்கி ஒருமுகப்பட்டு நிற்பது ஆச்சர்யமாக இருக்கும். இதுதான் வேற்றுமையில் ஒற்றுமையோ!!!




ஒருமுறை கஃபா அருகில் திறந்த வெளியில் நின்று நாங்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தபோது, மழை பெய்ய ஆரம்பித்தது. உடனே சுற்றிலும் உள்ள மூடிய பகுதிக்கு எல்லாரும் வர முற்பட்டுக் கொண்டிருந்தபோது, தடதடவென போலீஸ்காரர்கள் நிறைய பேர் கஃபாவின் ஒரு பகுதியில் சென்று அரண் போல வளைத்து நின்று கொண்டார்கள். நாங்கள் அதைக் கண்டு, ஒருவேளை அரச குடும்பத்தைச் சார்ந்த அல்லது வேறு நாட்டுத் தலைவர்கள் யாரும் வரப்போகிறார்கள் போல (நம்ம ஊர்ப் பழக்கதோஷம்!!)  என்று  நினைத்துக் கொண்டே, மழையிலிருந்து பாதுகாப்பாக கூரையடியில் நின்றுகொண்டே வருவது யாராக இருக்கும் என்று உடன்வந்த உறவினரிடம் (சவூதியில் கிட்டத்தட்ட 20-25 வருடங்களாக இருப்பவர்!!) கேட்க, அவர் சிரித்துக் கொண்டே, “கஃபா மேல விழுற மழைத்தண்ணி வடிகால் வழியா வழியும்போது அதைப் புனித நீர்னு சிலர் பிடிச்சுக்க ஓடி வருவாங்க. அதைத் தடுக்கத்தான் போலீஸ்காரங்க சுத்தி நிக்கிறாங்க” என்றார்!! 


இப்படிப் பல சுவாரசியங்கள் நிறைந்த படிப்பினைகள் கிட்டும் இடம். இந்த முறை பதிவராகவும் இருப்பதாலும், ஹஜ்ஜுக்குப் பெருந்திரள் வருமென்பதாலும், அலைபாயும் கவனத்தைக்  கட்டி இழுத்து பிரார்த்தனையில் செலுத்தமுடியுமா என்று பயமாருக்கிறது என்று தோழியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ”அங்கே எப்பேர்ப்பட்ட ராஜாவானாலும் ஒரே மாதிரி எளிய ஆடையில் கூடாரங்களிலும், மைதானங்களிலும் பாலைவன மணல்தரையில் தங்கி, செருக்கு மறைந்து ஏக இறைவனைப் பிரார்த்திப்பதைக் காணும்போது நீ யார் எவரென்றெல்லாம் மறந்து, அந்த மனிதக் கடலில் நீ ஒரு துளி மட்டுமே என்பதை உணரும் தருணத்தில், கவனம் வேறு எதிலும் போகமுடியாது” என்றாள். இறைவன் நாட்டம்.
 

நட்புகளுக்கு என் மனமார்ந்த தீபாவளி மற்றும் பெருநாள் வாழ்த்துகள். நவம்பர் இறுதியில் சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்!!

(பின்னூட்டங்களைப் பப்ளிஷ் செய்யவோ, பதிலளிக்கவோ நேரமில்லை என்பதால் பின்னூட்டப் பெட்டி இந்தப் பதிவிற்கு மட்டும் இல்லை!! நன்றி.)

Post Comment

கடைசிக் கடமை




அலுவலகமானாலும், வீடானாலும், நாம் நமக்குரிய கடமைகளை, அல்லது அன்றாட வேலைகளைச் செயல்படுத்தும்போது, அவற்றை வரிசையாக முன்னுரிமைப் படுத்தி, முதலில் செய்ய வேண்டுவனவற்றை முதலில், மற்றவற்றை அடுத்தடுத்து என அவற்றின் காரணகாரியங்களைப் பொறுத்துச் செய்வதுண்டு. எனினும், எதையும் செய்யாமல் விடுவதில்லை. சிலவற்றை செய்துமுடிக்க, வேறு தொடர்புடைய ஆவணங்கள் தேவைப்படலாம். எனில், அவற்றைக் கேட்டுப் பெற்று, செய்து முடிப்போம்.

இதேபோலத்தான்  நாடு, மொழி, இனம், ஆண், பெண், ஏழை, பணக்காரன், இளையவர், முதியவர் என எந்தப் பேதமுமில்லாமல் கடைபிடிக்க வேண்டிய முஸ்லிம்களின் ஐந்து கடமைகளும்.

1  ஒரு முஸ்லிமாக இருப்பவர் நிறைவேற்ற வேண்டிய ஐந்து கடமைகளில், முதலாவது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே என்ற இறை நம்பிக்கை. 24x7 கடைபிடிக்க வேண்டியது.

2. இரண்டாவதான தொழுகை: தினமும் ஐந்து முறை தொழுவது எல்லாருக்கும் கட்டாயமான  கடமை.

3. மூன்றாவதான நோன்பு:  வருடத்தில் குறிப்பிட்ட தினங்களில், சூர்யோதயம் முதல் சூர்ய அஸ்தமனம் நோன்பிருப்பது எல்லாருக்கும் கடமை. ஆனால் உடல் நலமில்லாதவர்களுக்கு மட்டும் சலுகைகளுண்டு. எனினும், பின்னர் உடல்நலமடைந்தவுடன் விட்ட நோன்புகளை நிறைவேற்றுவது அல்லது பசித்தோருக்கு உணவளிப்பது என்று பரிகாரங்கள் உண்டு.

4. நான்காவதான ஸகாத் எனப்படும் தர்மம்: குறிப்பிட்ட அளவுக்குமேல் செல்வம் உடையோருக்கு மட்டுமே உரிய கடமை.

5. அதுபோலத்தான் ஐந்தாவதான ஹஜ்ஜும்.  கடைசிக் கடமையாய் குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்தே புரியும்,  பல நிபந்தனைகளுக்குட்பட்டது என்று.

1. நிபந்தனைகள்:

மற்ற கடமைகளெல்லாம் அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே செய்யக்கூடியவை. ஆனால், ஹஜ் என்பது, ஒரு குறிப்பிட்ட மாதத்தில், சவூதி அரேபியா நாட்டில் உள்ள “மக்கா” என்ற நகருக்குச் சென்று நிறைவேற்ற வேண்டிய கடமை. அதனால்தான், அந்நாட்டிற்குச் சென்றுவருமளவு பணவசதியும், உடல்நலமும் உள்ளவர்கள்மீதே இந்தப் புனிதப் பயணம் மேற்கொள்வது கடமையாக்கப்பட்டுள்ளது.

உடல்நலம்: தூரதேசப் பயணம் மற்றும் அலைச்சல் ஆகியவற்றைத் தாங்கி,  பிரார்த்தனைகளைத் தடங்கலின்றி நிறைவேற்றித் திரும்புமளவு குறைந்த பட்ச உடல் மற்றும் மனநலம் அவசியம்.

பணவசதி: சவூதிக்குச் சென்று வருவதற்கு மட்டுமல்லாமல், அங்கிருக்கும் நாட்களில் தனக்கு வேண்டிய பராமரிப்பு மற்றும் அச்சமயத்தில் தன் குடும்பத்திற்குரிய பராமரிப்பு  ஆகியவற்றைக் குறைவின்றி நிறைவேற்றத் தேவையான பணம் இருக்கவேண்டும்.

இவையிரண்டும் ஒருவரிடம் இருந்தால்தான், அவருக்கு ஹஜ் செய்ய வேண்டிய கடமையாக ஆகின்றது.

இன்னும் சில உண்டு:

* அதாவது, ஹஜ்ஜைவிட முன்னுரிமைப்படுத்த வேண்டியத் தேவைகளை/ கடமைகளை முதலில் நிறைவேற்ற வேண்டும். உதாரணம்: அடைக்கப் படவேண்டிய அவசியமான கடன்கள், தான் இல்லாத சமயத்தில் குடும்பத்தின் பாதுகாப்பு, தேவைகள் நிறைவேற்ற வழிகள் கண்டு, பொறுப்பாளரை நியமித்தல் .

* ஒருவரின் ஹஜ்ஜை நிறைவேற்ற அவரேதான் பொறுப்பாளி. அதாவது, பெற்றோர் தன் மகனையோ, மனைவி தன் கணவனையோ அதற்கான செலவிற்கு எதிர்பார்த்தல் கூடாது. அதே சமயம், அன்பினால் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டால் தவறில்லை.

* அதேபோல, வசதியில்லாதவர்கள், பக்திமேலீட்டால் யாசகம் பெற்றாவது ஹஜ் செய்ய வேண்டும் என்று எண்ணுதல் கூடாது. எனினும், தான் எதிர்பாராமல் அவ்விதம் ஒரு உதவி தன்னைத் தேடி வந்தால், விருப்பமிருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்.

* ஹஜ்ஜிற்கான பணத்தை நேர்வழியில் சம்பாதிருத்தல் அவசியம்.

* பணமிருந்து, உடல்நலமில்லை என்றால், தனக்காக உறவினரை தனது செலவில் செய்து வருமாறு கேட்கலாம். ஆனால், அவ்வுறவினர் தனக்கான ஹஜ்ஜை ஏற்கனவே செய்தவராக இருக்க வேண்டும்.

* நிபந்தனைகள்படி ஒருவர்மீது, ஹஜ் கடமையாக இருந்து, ஆனால் செய்யாமல் இறந்துவிட்டாரானால், அவரது வாரிசுகளின்மீது  பெற்றவருக்காக அதை நிறைவேற்றும் கடமை உண்டு. இதற்கு இறந்தவரின் சொத்திலிருந்தே பணம் எடுக்க வேண்டும்.

* ஒருவரின் வாழ்நாளில் ஒரே ஒருமுறைதான் ஹஜ் செய்யவேண்டியது கட்டாயக் கடமை. எனினும், விருப்பப்பட்டு, நிபந்தனைகளுக்குட்பட்டு, பலமுறைகள் செய்வதில் தவறில்லை.

”மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். எனவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள்!” என்று நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆற்றிய உரையின்போது குறிப்பிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! ஓவ்வொரு ஆண்டுமா?” என்று கேட்டார். அவர் இவ்வாறு மூன்று தடவை கேட்கும் வரை நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்துவிட்டு “நான் ஆம் என்று கூறினால் அவ்வாறே கடமையாகிவிடும். அதற்கு நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள்” என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ)

இறைவன் இஸ்லாமை பின்பற்ற எளிமையானதாகவே ஆக்கித் தந்திருக்கிறான் என்பதை இவையெல்லாம்  மேலும் உறுதிப் படுத்துகின்றன.

2. எப்பொழுது:

இஸ்லாமிய காலண்டர்படி, 9-வது மாதமான ”ரமலான்” மாதத்தில் நோன்பு முடிந்ததிலிருந்து, 12-வது மாதமான ”துல் ஹஜ்” மாதத்தின் 8-13 தேதிகளில் நிறைவேற்ற வேண்டியது ஹஜ்.  இவ்வருடம், ஆங்கிலக் காலண்டரில் நவம்பர் முதல் வாரத்தில் வரும்.

இப்போது ஹஜ்ஜுப் பயண காலம் தொடங்கிவிட்டது.  இந்தியாவிலிருந்தும் பல குழுக்களாக ஹாஜிகள் (ஹஜ்ஜு செய்பவர்கள்) சவூதி சென்று இறங்கத் தொடங்கிவிட்டார்கள்.

3.  ஹஜ்ஜின்போது என்ன செய்வார்கள்:



1. ஹஜ் செய்வதற்காக “இஹ்ராம்” எனப்படும் உடை, செயல் மற்றும் மனக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளுதல்.  ஆண்கள் தைக்கப்படாத ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் தங்கள் இயல்பான உடையை அணிந்துகொள்ளலாம்.

2. மக்காவை அடுத்துள்ள ‘அரஃபா’ என்ற இடத்திற்கு 9-ம் நாள் சென்று தங்கியிருத்தல்.

3. பின்னர் மக்கா வந்து,  கஃபா எனப்படும் இறையில்லத்தை ஏழு முறை வலம் வரவேண்டும். இதற்கு தவாஃப் எனப்பெயர்.

4. பின்னர் முடியிறக்க வேண்டும். ஆண்கள் மொட்டையடித்துக் கொள்வது சிறந்தது. பெண்கள் ஒருவிரல் நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவேண்டும்.

இவை தவிர,

1. ஸயீ - மக்காவில் ஸஃபா, மர்வா என்ற இரண்டு சிறு குன்றுகளுக்கிடையில் ஏழு முறை நடத்தல். 

இப்ராஹீம் நபியின் மனைவி ஹாஜராவும், குழந்தை இஸ்மாயிலும் பாலைவனத்தில் இம்மலைகளின் அருகில் சென்று கொண்டிருந்தபோது, குழந்தை தாகத்தால் தவித்து அழ, தண்ணீர் தேடி ஹாஜரா அவர்கள்  ஓடினார்கள். ஒரு மலையின் புறமிருந்து பார்க்கும்போது இன்னொரு மலையில் நீர் தெரியும். தண்ணீரென்று நம்பி ஓடினால், அது கானல் நீர்!! இவ்வாறு ஏழு முறை பரிதவித்து ஓடிய பொழுது, குழந்தையின் பாதத்தினடியிலேயே இறைவன் ஒரு நீரூற்றை வரச் செய்தான். வழிந்து ஓடும் நீரைக் கண்ட ஹாஜரா அவர்கள், குடிப்பதற்குமுன் தண்ணீர் முழுதும் வழிந்தோடிவிடுமோ, குடிக்கக் கிடைக்காதோ என்ற அச்சத்தில் “நில் நில்” என்று பொருள்படும் “ஸம் ஸம்” எனக் கூறியபடி நீரை நோக்கி ஓடினார்கள். அந்த நீரூற்றுதான் இன்றும் - பல ஆயிரமாண்டுகள் கழிந்தும் - வற்றாத ஊற்றாக இருக்கும் “ஸம் ஸம்” என்ற ஊற்று. இது கஃபாவின் அருகிலேயே உள்ளது.

2. ஷைத்தானின் மீது கல்லெறிதல்.

இப்ராஹீம் நபிக்கு திருமணமாகி பல ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர் இஸ்மாயீல் நபி. எனினும், அவரைப் பரிசோதிக்க எண்ணிய இறைவன், இஸ்மாயீலைப் பலியிடுமாறு இப்ராஹீமுக்குக் கட்டளையிட, அவரும் இறைகட்டளையை ஏற்று, பலியிடச் செல்லும்போது, ஷைத்தான் மூன்று முறை அவரின் உறுதியைக் கலைக்க முயலுகிறான். எனினும், அவனைப் புறந்தள்ளி இறைவனுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றச் செல்கிறார். அவரின் நம்பிக்கையால் திருப்தியடைந்த இறைவன், ஆடு ஒன்றைப் பலி கொடுக்கச் செய்கிறான்.

இதேபோல, நாமும் தீய சக்திகளின் சூழ்ச்சிக்கு ஆட்படாமல் இருக்க வேண்டி, அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மூன்று தூண்கள் மீது கல்லெறிதல் வேண்டும்.

3. மினா, முஜ்தலிஃபா ஆகிய இடங்களில் குறிப்பிட்ட நாட்களில் தங்கியிருத்தல்.

4. ஆடு, மாடு அல்லது ஒட்டகம் ஏதேனும் ஒன்றை குர்பானி கொடுத்தல்.

ஆக மொத்தம் இவையே ஹஜ் எனப்படும் புனிதப் பயணத்தில் செய்ய வேண்டியவை. ஹஜ் நிறைவேற்ற 5 நாட்களே தேவைப்படும் என்றாலும், புனித பூமியான மக்காவிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்ததோடு மேலும் பல நாட்கள் இருந்து, அதிகப்படியான தொழுகைகள், ‘உம்ரா’ எனப்படும் ’சிறிய ஹஜ்’, மதினா சென்று சிறப்பு வாய்ந்த நபி பள்ளியில் பிரார்த்தித்தல்,  இன்னும் சில வரலாற்றுப் பிரசித்திப் பெற்ற இடங்களைக் கண்டு வருதல் ஆகிய காரணங்களுக்காகவே இந்தியாவிலிருந்து செல்பவர்கள் இதை ஒரு மாதப் பயணமாக மேற்கொள்கிறார்கள்.

இனி, ஹஜ் செய்ய விரும்புபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவைகளைப் பர்க்கலாம்.

4. செல்லுமுன்:

* ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள். (அல்குர்ஆன் 2:19) 
அல்லாஹ்வுக்காக அந்த ஆலயம் சென்று ஹஜ் செய்வது மனிதர்களில் அதன் பால் (சென்றுவர) சக்தி பெற்றவர் மீது கடமையாகும். (அல்குர்ஆன் 3 : 97)

ஆகிய குர் ஆன் வசனங்களின்படி, நாம் செய்யும் ஹஜ் இறைவனுக்காக மட்டுமே செய்யப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்க.

*ஏறக்குறைய ஒரு மாத காலம், லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தில், அதுவும் புதிய நாட்டில் இருக்க வேண்டும் என்பதால் கவனமெடுத்து நம் உடல்நலத்தைப் பேணிக் கொள்வது நல்லது.

*பிரார்த்தனைகள் பலவும் நடந்தே சென்று நிறைவேற்ற வேண்டியவை என்பதால், செல்வதற்குப் பல மாதம் முன்பே நடைப் பயிற்சி மேற்கொள்ளுவது சிரமத்தைக் குறைக்கும்.

* முன்சென்றவர்களிடம் கேட்டறிந்து, என்ன மாதிரியான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிந்துகொள்ளுதல் வேண்டும்.

* ஹஜ் செல்வதன் பெயரால் விருந்துகள், சம்பந்திச்சீர்கள் போன்ற அநாச்சாரங்களைச் செய்யவோ, ஏற்கவோ கூடாது. மேலும், அரசியல்வாதி போல, ரயில், விமான நிலையங்களுக்கு தம் உறவு, நட்புக் கூட்டங்களுடன் வந்து மற்ற பயணிகளுக்கும், பணிபுரிபவர்களுக்கும் சிரமத்தைத் தரக்கூடாது. மற்றவர்களிடையே இஸ்லாம் குறித்த முகச்சுளிப்பு ஏற்பட வைக்கக் கூடாது.

5. சென்ற பின்:

* அங்கு சென்றிருப்பது, இறைகடமைக்காக மட்டுமே என்பதை மனதில் வைத்து பிரார்த்தனைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

* இறைவன் ஒருவனே வணக்கத்திற்குரியவன் என்பதை எப்போதும் மறக்க வேண்டாம். கஃபாவின் சுவர்களைத் தேய்த்துத் தடவுவது, முத்தம் கொடுப்பது, ஹஜ்ருல் அஸ்வத்தைத் தொட விரும்பி கூட்டநெரிசலில் அடித்துப்பிடித்து நுழைவது, நபி(ஸல்) அடக்கஸ்தலத்தில் அவர்களிடம் பிரார்த்திப்பது போன்ற, மற்றவர்கள் அறியாமையில் செய்யும் அநாச்சாரங்களைக் கண்டு, நீங்களும் உணர்ச்சி வசப்பட்டு செய்துவிட வேண்டாம்.

* லட்சக் கணக்கானோர் கூடியிருக்கும் இடத்தில்  பல அசௌகரியங்கள் இருக்கலாம். எனினும், அவற்றை அதிகம் பொருட்படுத்தாமல் இருத்தல் அல்லது அதற்கேற்றவாறு மாறிக் கொள்ளுதல் அவசியம். ’டில்லிக்கு ராஜான்னாலும், பள்ளிக்குப் பிள்ளைதான்” - மறக்க வேண்டாம். பிரார்த்தனையே நமது முதல் இலட்சியம்.

* நம்மால் எந்த சிரமமும் மற்றவர்களுக்கேற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, பள்ளிகளில் மக்கள் செல்லும் பாதைகளில் அமர்வதைத் தவிர்ப்பது; குப்பைகளை உரிய இடத்தில் போடுவது; சுத்தத்தைப் பேணுவது.

* தேவையான மாத்திரை, மருந்துகளை உரிய மருந்துச் சீட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள்.மக்கள் கூட்டத்தால் ஜலதோஷம் போன்ற தொற்று நோய்கள் பரவுவது எளிது. அதைத் தடுக்க “மாஸ்க்” அணியலாம்.

* சவூதியில் உங்கள் உறவினர்கள், நண்பர்கள் இருப்பார்களாயின், அதிகம் உரிமையெடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். நீங்கள் வந்து சென்றது அவர்களுக்கு நல்ல நினைவாக இருக்கும்படி நடந்துகொள்ள வேண்டும்.

6. செல்வதன் பலன்?

ஹஜ்ஜின் கடமைகளைச் சரியாக, குறைவில்லாமல், முழுமையாகச் செய்து, இறைவன் அந்த ஹஜ்ஜை ஏற்றுக் கொள்வானாயின், அவரை அன்று பிறந்த பாலகன்போல பாவங்களிலிருந்து மன்னித்து விடுவான்.

7. சென்று வந்த பின்:

ஒருவர் செய்த ஹஜ் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அவரது அதுவரையான பாவங்கள் மாத்திரமே மன்னிக்கப் பெறும். அதன் பின்னர் அந்நிலையைத் தன் நல்ல நடத்தைகளினால் தக்கவைத்துக் கொள்வது அவர் பொறுப்பு.

அதனால்தான், அந்தக் காலங்களில், பக்குவம் அதிகம் வந்திருக்கும் வயதான காலத்தில்தான் ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தார்கள்போல. எனினும், வாய்த்திருக்கும் வசதியும், வாழ்க்கையும் (உயிர்) என்றுவரை நிலைத்திருக்கும் என்பதை நாம் அறியமுடியாதே! ஆகையால், உரிய காலத்திலேயே இக்கடமையை  நிறைவேற்ற முனைவோம், இன்ஷா அல்லாஹ்.

Ref: www.ourdialogue.com/pilgrimage

Post Comment

ரெண்டாங்கல்யாணம்




உயிரோசை  05 - 09 - 2011 இதழில் வெளியான எனது சிறுகதை.



காலிங் பெல் அடித்தது. அலுவலகம் கிளம்பிக்கொண்டிருக்கும் இக்காலைநேரத்தில் யார்? அபுதாபியில் சேல்ஸ்கேர்ள்/மேன் எல்லாம் அபூர்வத்திலும் அபூர்வம். அதிலும் அபூர்வம் யாசகம் கேட்டு வருபவர்கள். நோன்பு காலத்தில் கொஞ்சம் வருவார்கள். அதுவும் பெண்கள்தான். அவர்களைப் பார்த்தால், அவர்கள்முன் நாம்தான் எளிமையாகத் தெரிவோம்.

கதவு லென்ஸ்வழி பார்த்தேன். பர்தாவுடன் ஒரு பெண். சரிதான், எவ்வளவு கொடுக்கலாம் என்று நினைத்து மீண்டும் பார்த்தபோது, கையில் பெட்டி, பையுடன் நிற்பது தெரிந்தது. குழப்பமாகக் கதவைத் திறக்க, அவள் அதற்குமேலான குழப்பப் பார்வையுடன், "இது அஜீஸ் வீடுதானே?". அட, தமிழ்தான்!! 

"அஜீஸ் பாய் வீடு மூணாவது ஃப்ளோர். இது ஃபர்ஸ்ட் ஃப்ளோர்."

"ஓ.. நான் இப்பத்தான் ஊர்லருந்து வரேன். லிஃப்ட்ல பட்டன் மாத்தி அமுத்திட்டேன்போல."

"பரவால்ல. நான் வேணா கூட வரவா லிஃப்ட்ல? நீங்க யாரு? கூட யாரும் வரலையா?"

"இல்லை, நானே போயிக்கிறேன். நான் அவர் வைஃப். அவர்தான் ஏர்போர்ட் வந்தார். கீழே கார் பார்க்கிங் பண்ணிட்டிருக்கார்."

சொன்ன பதிலில் நான் அதிர்ந்து நிற்க, அவள் போய்விட்டாள். புன்னகைத்த மாதிரிகூட இருந்தது. பின்னே, ஏற்கனவே மனைவியும், இரண்டு மகன்களுமாக இருப்பவருக்கு, இவளும் மனைவியென்றால் அதிராதா? சின்னப் பெண்ணாகவும் தெரியவில்லை. தாடியும், தலையில் எப்பவும் தொப்பியுமாகத்தான் இருப்பார் அஜீஸ்பாய். ஐவேளையும் மகன்களோடு பள்ளியில்தான் தொழுகை என்று என்னவர் சொல்வார். அப்படிப்பட்டவரா?

அவர் மனைவியோடு எனக்குப் பரிச்சயமில்லை; மற்ற ஃப்ளாட்டுகளில் இருப்பவர்களையாவது அவ்வப்போது லிஃப்டில் பார்க்கும்போது ஒரு புன்னகையும், "கேஸே ஹோ?" அல்லது "சுகந்தன்னே?" என்று ஒரு வரியில் நலம் விசாரிப்புடன் முடிந்துவிடும். அஜீஸ்பாய் மனைவியை மட்டும் பார்த்ததேயில்லை. ஏனென்று இப்போத்தான் கேள்வி வந்தது. அவரின் இரண்டாவது மகனுக்கு என் சின்னவனைவிட இரண்டொரு வயதே குறைவாக இருக்கும். இப்போப் போயி, ரெண்டாங்கல்யாணமா? தாங்கவே முடியலை.

மாலை வீட்டிற்கு வந்த என்னவரிடம், வாசற்கதவு திறந்த கையோடு இதைச் சொல்ல, அவருக்கும் அதிர்ச்சி. ஆனாலும், அது அவரை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. எனக்கோ இந்தச் சிந்தனை அரித்துக் கொண்டேயிருந்தது.  

ஒவ்வொரு முறை என்னவர் தொழுகைக்காகப் பள்ளி சென்று வந்தபோதும் "அஜீஸ்பாய் பாத்தீங்களா? ஏதாவது கேட்டீங்களா? அவராவது சொன்னாரா?" என்று கேட்க, கடைசியில் எரிந்தே விழுந்தார். "தொழ வந்திருக்க ஒரு மனுசங்கிட்ட, நீங்க ரெண்டாங்கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களாமேன்னு எப்படிபோய் கேக்கமுடியும்? அவரென்ன புதுவேலைக்குப் போறாரா? இல்லை புதுவீடு, கார் வாங்கிருக்காரா? விசாரிக்க? அவரென்ன பண்ணா நமக்கென்ன? உன்வேலையப் பார்."

கோபத்தில் முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டாலும், "நடந்தது என்ன?" பாணியில் அரித்துக் கொண்டேயிருந்தது. ஃபர்ஸ்ட் ஃப்ளோரில் நாங்கள் மட்டும்தான் குடும்பமாக வசிப்பது. மற்றதெல்லாம் பேச்சிலர்கள். அதனால் யாரிடம் விசாரிக்க? மற்ற ஃப்ளோர்களில் இருப்பவர்களிடமும் லிஃப்ட்-நட்பு மட்டுமே. அதில் இதைப் போய் எப்படிக் கேட்பது?
எதுவுமே தெரியவில்லை. இரு மனைவியரும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிந்தது. இப்படியே ஒருவாரம் போனது. பின் மாதங்கள் கழிந்தது. மறந்துவிட்டாலும், அவ்வப்போது ஞாபகம் வந்துபோனது. 

ன்றரை வருடங்கள் கழித்து, நான் காலையில் ஆஃபீஸ் போக வண்டிக்காகக் காத்து நிற்கையில், அதோ அவளேதான் - அட, தள்ளுவண்டியில் ஒரு குழந்தையும்கூட!! 

புன்னகைத்துக் கொண்டோம், "எங்கே ஆளையேக் காணோம்?" என்ற என் கேள்விக்கு, "ஆஃபீஸுக்குக் கிளம்பியாச்சா?" என்ற கேள்வியையே பதிலாக்கினாள். பிறகு தினமும் அவளை அந்த நேரத்தில் பார்க்க முடிந்தது. மகனுக்குள்ள சரும பாதிப்பிற்காக, மருத்துவர் அறிவுரைப்படி காலைவெயிலில் வாக்கிங் போகிறாளாம். தொடர்ந்த நட்பில் பலதும் பேசினாலும், அந்தக் கேள்வி மட்டும் என் மனதில் தொக்கி நின்றபடியே இருந்தது. எப்படி இவளிடம் கேட்பது? அஜீஸ் பாயிடம் என்னவரைக் கேட்கச் சொன்ன நான், சம்பந்தப்பட்டவளே என்முன் நின்றபோதும் கேட்கத் துணிவில்லாமல் நின்றேன்.

பலநாட்கள் பேசியதில், ஏழைத் தகப்பனுக்குப் பிறந்த ஐந்து மகள்களில் கடைசி என்று தெரிந்தது. அதான், ஈஸியா ரெண்டாங்கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க முடிஞ்சுதுபோலன்னு நெனச்சுக்கிட்டேன். நட்பு தொடர்ந்து வீடு வரை வந்தது. ஒரு மாலைநேரம் தனியாக வந்திருந்தாள். இந்தியா செல்வதைச் சொல்லிவிட்டுப் போக வந்திருக்கிறாளாம். பேசிக்கொண்டிருந்தபோது, மனதிற்குள் அதே அரிப்பு, கேளு, கேளு என்று. மீண்டும் தயக்கம். 

வளே சொன்னாள், "நானும் குழந்தையும் மட்டும்தான் போறோம். அக்காவும், பிள்ளைகளும் இங்கதான் இருக்காங்க. நான் டெலிவரிக்குப் போனப்போ அவங்களும் வந்திருந்தாங்க என்கூட. இப்ப நல்லாருக்காங்க, தனியா சமாளிச்சுக்க முடியும் அதான், அவங்க வரலை."

இதென்ன புதுக்கதை? ஓ, முதல் மனைவிக்கு உடல்நலமில்லை என்பதால், இரண்டாங்கல்யாணமோ? "என்ன உடம்புக்கு?"

"உடம்புக்கு ஒண்ணுமில்லை; மனசுக்குத்தான் சுகமில்லாம இருந்தாங்க. இப்ப என் கவனிப்பில் வந்தப்பறம் நல்லா ஆகிட்டாங்க. ரெண்டாவது பிரசவத்துக்கு அவங்களால ஊருக்குப் போக முடியல. தனியா இங்கயே இருந்து கஷ்டப்பட்டுட்டாங்க போல, அதான் கொஞ்சம் குழம்புன மாதிரி ஆகிட்டாங்க."

"போஸ்ட்-பார்ட்டம் டிப்ரஷன்" என நான் என் அறிவை விளம்பரம் செய்ய, புரியாமல் விழித்தவள்,"இல்ல, சிலருக்கு டெலிவரி சமயத்துல இப்படி மனக்குழப்பங்கள் வரும், அதச் சொன்னேன்" என்றதும் தொடர்ந்தாள்.

"ஓ? அப்படித்தான் இருக்கும்போல. அவரும் நிறைய ட்ரீட்மெண்ட் எடுத்துப் பாத்திருக்கார். ஆனா தனியா, சின்னக் குழந்தைகளை வச்சுகிட்டு, சரியா கவனிக்கவோ, நேரத்துக்கு மருந்து, ட்ரீட்மெண்ட் கொடுக்கவோ அவருக்கும் முடியல. ஊருலயும் பொறுப்பா கவனிச்சுக்க சொந்தக்காரங்க யாரும் இல்ல. அதான், ரெண்டாவதா என்னைக் கல்யாணம் செஞ்சு கூட்டி வந்தார். கல்யாணத்துக்கு மின்னயே எல்லா விபரமும் சொல்லித்தான் சம்மதம் வாங்கினார்."
 
சட்டெனச் சொன்னேன், "அதுதான் காரணம்னா, வேலைக்காரி வச்சிருக்கலாமே?"

"வேலைக்காரி வச்சுப்பார்க்கிற ரோகமில்ல இது. தெரியாத நாட்டுல, பணத்துக்காக வேலை செய்ற வேலைக்காரிகிட்ட, கிட்டத்தட்ட தான் என்ன செய்கிறோம்னே தெரியாத நிலையில் இருக்கும் மனைவியையும், சின்னப் பிள்ளைகளையும் எப்படி விட்டுப் போக முடியும்? கூட வேற உறவுக்காரங்க இருந்தாக் கூட பரவால்ல. அதுவும் அவர் ஷிஃப்ட்ல வேலை பாக்கிறவர். ஒருநா காலயில வேலைன்னா, ஒரு நா ராத்திரி. உங்களுக்குத் தெரியாதா?"

”அப்படின்னா ஒரு விதவையையோ, தலாக் ஆனவங்களையோ கட்டிக்கிடலாமே? ஏன் கல்யாணமாகாத உன்னைப் போயி?" சொல்லியபின், அப்படிச் சொல்லியிருக்க வேண்டாமோன்னு தோண, சாரி சொல்லவா வேண்டாமான்னு நிற்க, அவளோ சலனமில்லா முகத்துடன் தொடர்ந்தாள்.

 (படம்: உயிரோசை இதழில் கதையோடு வெளியானது)

"ம்.. அப்படித்தான் நினைச்சு ஒரு வருஷமா தேடிருக்காங்க. ஆனா, இப்பல்லாம் ரெண்டாங்கல்யாணம் பண்ற பொண்ணுங்ககூட, தனக்குப் பிள்ளைங்க இருந்தாலும், கட்டிக்கிற ஆம்பளைங்களுக்கு பிள்ளைங்க இருக்கக்கூடாதுன்னு கண்டிஷன் போடுறாங்களே. இதுல இவருக்கு, பிள்ளைக மட்டுமா, முதல் பொண்டாட்டியும்ல கூட இருக்காங்க. யாரு சம்மதிப்பா? எங்களுக்கு இந்த சம்பந்தத்தைத் துப்புச் சொன்னதே தலாக்கான ஃபிர்தௌஸக்காதான். அவங்களுக்கு வந்த சம்பந்தத்தைத்தான் எனக்கு அனுப்பிவிட்டாங்க. அஞ்சு பெத்தா அரசனே ஆண்டி. எங்க வாப்பா ஏற்கனவே ஆண்டிதான். நாலுபேரை தத்திமுத்தி கரையேத்தின வாப்பா, என்னைக் கரையேத்த வழியில்லாம கடன்ல முங்கிப் போயி கிடந்தாங்க. ஆனாலும், வாப்பா ரெண்டாந்தாரச் சம்பந்தம் வேண்டாமுன்னுதான் சொன்னாங்க. நாந்தான் வயசு முப்பதைத் தாண்டினப்புறம் என்ன வீராப்பு வேண்டிக்கிடக்கு? ஒவ்வொருத்தனைப் போல ஏமாத்தவா செய்றாங்க? உள்ளதச் சொல்லித்தானே சம்மதம் கேக்குறாகன்னு எடுத்துச் சொன்னேன். பொண்டாட்டி நோய்ல விழுந்தா, அவளைத் தள்ளிவச்சுட்டு, புதுசு தேடற இந்தக் காலத்துல, அவளைக் கவனிச்சுக்கவும், அதே சமயம், தன் விருப்பங்களையும் நோய்வாய்ப்பட்ட அவகிட்ட தீர்த்துக்க முனையாம, சட்டத்துக்குட்பட்ட நியாயமான வழியில நிறைவேத்திக்க நினைக்கிறவர் எனக்கு தப்பாத் தெரியல. அதான் சம்மதிச்சு கட்டிக்கிட்டேன். என் அன்பால பிள்ளைகளும் சந்தோஷமாருக்காங்க. அக்காவும் இப்ப என் கவனிப்பில நல்லா ஆகிட்டாங்க. இன்னும் ஒரு ஆறேழு மாசம் மாத்திரை சாப்பிட்டா போதும்னு டாக்டர் சொல்லிட்டார்."

"நல்லா ஆகிட்டாங்கன்னா? நீ யாருன்னு தெரியுமா? ஒண்ணும் சொல்லலையா? முழுசும் குணமாகி உன்னை வீட்டைவிட்டு அனுப்பிட்டா?"

"ஏன் எப்பவும் இப்படியே யோசிக்கிறீங்க? நல்லதும் நடக்க வாய்ப்பிருக்கில்ல? அக்காவுக்கு நான் யாருன்னு நல்லாவேத் தெரியும். அவங்களுக்கு அதில சந்தோஷமா இல்லையாங்கிறதைவிட, வருத்தமில்லைன்னுதான் சொல்வேன். முக்கியமா சின்னஞ்சிறுசுகளா இருந்த அவங்க பிள்ளைகளை நான் கண்ணும் கருத்துமா கவனிச்சிக்கிட்டதை, ரெண்டுபேரும் என்னையும் உம்மான்னு கூப்பிடறதிலிருந்து புரிஞ்சிக்கிட்டாங்க. அதனால என்னை எந்த பேதமும் இல்லாம தன் சொந்த சகோதரிபோலத்தான் பாக்கிறாங்க. என்னை வீட்டை விட்டு அனுப்பவேண்டிய அவசியம் எதுவும் இப்ப இல்லை; வரவும் செய்யாது."

"வந்துட்டா?"

உற்றுப் பார்த்தவள் சொன்னாள், "எப்பவுமே, இப்படியொரு சூழ்நிலை வருமோ வந்துடுமோன்னு பயந்துகிட்டே இருந்தா இருக்கும் வாழ்வை ரசிச்சு வாழ முடியாது. அதுக்காக, எதுவும் நடக்கலாம்கிறதையும் மறக்கல நான். அப்படியொரு சூழ்நிலை வந்தா, என் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டேன்கிறது அவருக்கு நல்லாவே தெரியும்."

"இருந்தாலும், அவர் ஆம்பிளைங்கிறதால இப்படி ரெண்டாங்கல்யாணம் பண்ணிக்க முடிஞ்சுது. இதுவே, ஒரு பொண்ணுக்கு, அவ புருஷனுக்கு அப்படி ஆகியிருந்தா, அவளால அப்படி கட்ட முடியுமா?"

"நீங்க படிச்சவங்க இல்லியா" என்று புன்னகைத்தவள், மீண்டும் சலனமற்ற முகத்துடன், "உண்மைதான், அவர் ஆம்பளையா இருக்கப் போயி, அதுவும் ஒண்ணுக்கு மேலே கட்ட அனுமதி இருக்கறதாலத்தான் என்னையக் கட்டிகிட்டார். இதே நெலம பொண்ணுக்கு வந்தா என்ன செய்வாள்னோ, என்ன செய்யணும்னோ எனக்குத் தெரியலை. நீங்க சொல்லுங்களேன். இப்படியொரு நிலைமைல நீங்க இருந்தா என்ன செய்வீங்க?"

திடீர்த்தாக்குதலாகத் தோன்றிய இந்தக் கேள்வியால் நிலைகுலைந்த நான், "சே, என்ன சொல்ற, அவருக்கு அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகாது" என்றேன் பதறியவளாய்.

"நெருப்புன்னா வாய் சுடுமா என்ன? உங்க அறிவை வச்சுச் சொல்லுங்களேன், ஒரு பெண் அப்படியொரு நிலைக்கு ஆளானா என்ன செய்யணும்னு?"

"அது... " தடுமாறினேன். "பெண்ணுக்கு இருக்கக்கூடிய ஒரே வாய்ப்பு, அவரை உடனிருந்து கண்ணுங்கருத்துமா கவனிச்சுக்கிறது; இல்லைன்னா விவாகரத்து செஞ்சுட்டு, வேற திருமணம் செஞ்சுக்கிறது. ஆணைப் போல ரெண்டாங்கல்யாணமாம் செஞ்சுக்கவா முடியும்?"

"ஏன் முடியாதுன்னு நினைக்கிறீங்க? ஒருவேளை சட்டபூர்வமா அப்படி அனுமதியிருந்தா செய்வீங்களா?"

"அது எப்படி.. சே.. சே.."

"அத நீங்க உங்க மனசாட்சிப்படி தப்புன்னு நினச்சு, பண்ணக்கூடாதுன்னு நினைக்கிறீங்களே தவிர, அப்படி ஒரு பெண்ணுக்கு ஒரே சமயத்துல சட்டப்படி கணவனா இருக்க ஆண்கள் சம்மதிப்பாங்களான்னு நினச்சுப் பாக்கலை நீங்க".

"ஏன், பாஞ்சாலி ஒரே சமயம் அஞ்சு பேரக் கல்யாணம் பண்ணினாளே?"
 
"அது புராணக்கதை. நடந்துதா இல்லை கதையான்னு சந்தேகத்தோட இருக்கற கதை அது. அதுவும் அவளே விருப்பப்பட்டுச் செய்யவில்லை. அந்தக் கதைல கூட, அவ வருஷத்துக்கு ஒருத்தர்னு ஒரு சமயத்துல ஒருத்தர்கூடத்தான் மனைவியா வாழ்ந்தா. அஞ்சுபேரும் கூடப் பிறந்த சகோதரர்களா இருந்தும்கூட அவளை ஒரே சமயத்துல மனைவியா வைத்துக்கொள்ளும் பக்குவம் இல்லை அவங்களுக்கு."

"அதுதான் நீயே சொல்றியே புராணக்கதைன்னு. எழுதுனதும் ஒரு ஆணாகத்தானே இருக்கும்?" பிளேட்டைத் திருப்பிப் போட்டேன்.

"ஓ,  உங்களுக்கு நிஜக்கதை வேணுமா? அஞ்சாறு வருஷம் முன்னே வடக்கே ஒரு பொண்ணு, கார்கில் போருக்குப் போன புருஷன் செத்துட்டதா நினைச்சு, ரெண்டாங்கல்யாணம் பண்ணப்புறம் திரும்பி வந்தாரே முதல் புருஷன், ஞாபகம் இருக்கா? அப்ப எவ்வளவு சர்ச்சை, விவாதம் நடந்துது? ஆளாளுக்கு ஆலோசனை சொன்னாங்களே? மரம் வெட்டுறவன்லருந்து, மாளிகைல இருக்கிறவங்க வரை அந்தப் பொண்ணு மொதப் புருசன்கூட போகணுமா, இல்ல ரெண்டாம் புருசன்கூட வாழணுமான்னு ஐடியா சொன்னாங்களே? அதில ஒருத்தர், யாராவது ஒருத்தர், ஒரே ஒருத்தராவது, அவ ரெண்டு பேரோடயும் சேந்து வாழட்டும்னு சொன்னாங்களா? ஏன், நீங்களாவது அப்படி நினச்சீங்களா?"

Post Comment

தமிழ் என்கிற மெஷின் லாங்வேஜ்





ஆங்கிலம் மட்டுமல்ல,
தாய்மொழியும்  அவசியம்தானாம்!!

பள்ளி, கல்லூரி இரண்டுமே ஆங்கில வழியில்தான் பயின்றேன். என்றாலும், +2 பொதுத் தேர்வு மதிப்பெண்களைப் பார்த்துவிட்டு, அழுதுகொண்டிருந்த(!!) என்னைப் பார்த்த க்ளாஸ் டீச்சர் கரிசனத்துடன் விசாரிக்க, தமிழில் மார்க் குறைந்ததற்காக அழுகிறேன் என்று தெரிந்ததும் டென்ஷனாகி, ”மேத்ஸ்ல செண்டம் வாங்கலைன்னு அழுறியோன்னு நினச்சு வந்தா... லூஸா பிள்ள நீயி?”ன்னு திட்டு வாங்குன அளவுக்கு தமிழ்ப்பாசம் உண்டு!!  ஏன் இப்பவும் பாருங்களேன், பிளாக் எழுதலாம்னு முடிவு பண்ணதும், கிஞ்சித்தும் சந்தேகத்துக்கு இடமில்லாம, எழுதினா தமிழ்லதான் எழுதணும்னு முடிவுபண்ற அளவுக்கு தமிழ்ப் பற்று!! (ஹி..ஹி.. இங்லீபீஸ் புலமை பத்தியெல்லாம் இங்க பேசக்கூடாது!!)

இடையில் 9-ம் வகுப்பு மட்டும், தமிழ் மீடியத்தில் படிக்க நேர்ந்த போது, கணக்கு, வரலாறு, அவ்வளவு ஏன், புவியியல் பாடம்கூட தமிழில் படிக்க ரொம்பக் கஷ்டப்படலைங்க. இத்தனைக்கும், ஆங்கிலம் என்பது பள்ளியைத் தவிர வேறு எங்கும் மருந்துக்குக்கூட பயன்படாத காலம் அது. ஆனா, அந்த அறிவியல்..  அப்பப்பா, நான் பட்டபாடு இருக்கே.. இப்பவும் மறக்க முடியாது!! அதுவும் அப்போ இயற்பியல்ல முதல்பாடமே “முடுக்கம்” பற்றியது!! அப்படின்னா என்னன்னு சொல்லுங்க பாப்போம்... அவ்வ்வ்... "Acceleration”ங்க அது!! தமிழில் அறிவியல் புத்தகத்தை/பொருளாதாரப் புத்தகத்தை  வாசிச்சா, ஏதோ அகத்தியர்காலத் தமிழில் பேசுவதுபோல உணரலாம்!!. அப்புறம், ஆங்கில வழி அறிவியல் புத்தகம் வாங்கி, அதுல வாசிச்சுப் புரிஞ்சுகிட்டு, பின் தமிழில் படிப்பேன். ஆங்கில essayக்களை தமிழ்ல ”transliterate" பண்ணிப் படிச்சவங்களுக்கு மத்தியில, இப்படி "tamil to english translation" செஞ்சுப் படிச்ச என்னை ஹாஸ்டல்ல ”பந்தா பார்ட்டி”ன்னே முடிவு பண்ணிட்டாங்க. :-((((

இப்பவும், ஐன்ஸ்டீன் - ஒளி வேகம் குறித்து ஆங்கிலச் செய்தித்தாளில் வாசித்த செய்தியை, முந்தைய டிரங்குப் பொட்டி பதிவில் எழுதலாம் என்று  எழுத ஆரம்பித்து, அறிவியல் சொற்களின் தமிழ்ப் பதங்கள் என்னவென  “முழி”பெயர்ந்து நிற்கையில்,  உதவியது  www.tamilcube.com!! 


இப்படியே படிச்சு முதலிடம் பெற்று சமாளிச்சிட்டாலும், அடுத்த வருஷம் வேற ஸ்கூல்ல இங்லீஷ் மீடியத்துல சேந்துட்டேன். அங்க, வகுப்புல முதல் நாள், "ASL" மாதிரி என்னைப் பத்தி டீடெய்ல் கேட்ட பொண்ணுகிட்ட பேச்சுவாக்குல, நான் தமிழ்மீடியத்துல..ன்னு சொல்லத்தான் ஆரம்பிச்சேன், அதுக்குள்ள பரமக்குடி கலவரத்துக்குக் காரணமான வதந்தீ மாதிரி பத்திகிச்சு க்ளாஸ்ல!! க்ளாஸ் டீச்சர் என்னைக் கூப்பிட்டு, தமிழ் மீடியத்துல படிச்ச நீ எப்படி இங்லீஷ் மீடியத்துல சேரப்போச்சுன்னு எகிற... அவ்வ்வ்... டீக்கடையில கிளாஸ் மாறிப் போன மாதிரில்ல இருக்கு?? எங்கே என்னை மறுபடி தமிழ்மீடியம் அனுப்பிடுவங்களோன்னு பயத்துல, அவசர அவசரமா, ஊர்விலக்கம் பண்ண மாதிரி ஒரேயொரு வருஷம் மட்டும் தமிழ் மீடியம் படிச்ச கதயச் சொன்னாலும், முழுசா என்னை நம்பலைன்னு அவங்க பார்வையே சொன்னது.

நீங்க என்ன சொன்னாலும் செய்றேன், என்னை வீட்டைவிட்டு மட்டும் அனுப்பிடாதீங்க அத்தான்னு கெஞ்சுற ஹீரோயின் மாதிரி (கெரகம்.. வர்ற உதாரணத்தப் பாரு..), கண்ணுல நீர் தளும்ப நின்ன என்கிட்ட, “முத மன்த்லி டெஸ்ட்ல நீ வாங்குற மார்க்கை வச்சுத்தான் நீ இங்க கண்டினியூ ஆகமுடியுமா இல்லியான்னு சொல்லமுடியும்”னு தீர்ப்பைச் சொல்லிட்டு, சொம்பை.. ச்சே.. ஹேண்ட் பேகை எடுத்துட்டுப் போயே போய்ட்டாங்க!! 

இப்படிக் கஷ்டப்பட்டு ஆங்கில மீடியத்துல படிச்சாலும், யோசிப்பது, பேசுவது, பழகுவது எல்லாம் (வழக்குத்) தமிழில்தான். எங்கெங்கு காணினும் தமிழ்தான் என்பதால் தமிழ் அந்நியமாகிவிடவில்லை!! சொல்லப் போனால், ஆங்கிலவழியில் படிப்பதினாலேயே ஆங்கிலத்தில் புலிகளாகி விடுவதுமில்லை.  

பள்ளி இறுதியாண்டு படிக்கும்போது, பரிட்சையில், ஆங்கிலத்தில் சில தலைப்புகள் கொடுத்து கட்டுரை எழுதும் பகுதி உண்டு. இதற்காக, எதிர்பார்க்கப்படும் பல தலைப்புகளில் கட்டுரைகள் படித்துக் கொள்வோம். ஒருமுறை, பரிட்சையில் "Adulteration" என்ற தலைப்பும் கொடுக்கப் பட்டிருந்தது. நாங்கள் அதுவரை படித்திராதது என்றாலும், கலப்படத்தைப் பற்றித்தானேன்னு ஈஸியா எழுதிவிட்டேன்.  பரிட்சை முடிந்து, சக தோழிகளிடம் பேசியபோது, இந்தக் கேள்வியை "Adult Education" என்று புரிந்துகொண்டு பதில் எழுதியவர்களில் சுதாவும் அடக்கம் என்பதறிந்து ஷாக்காகிவிட்டேன். ஏன்னா, அவங்க வீட்டில்தான் அம்மா உட்பட எல்லாருமே படித்தவர்கள்; கடினமான அறிவியல் பகுதிகளில் எனக்கு சந்தேகம் போக்குவாள். முக்கியமாக “ஹிந்து” பேப்பர் வாடிக்கையாக வாங்குகிறார்கள். அதனால் அவளை நான் வைத்திருந்த லெவலே வேறு என்பதால், பேரதிர்ச்சி எனக்கு.  (என் வீட்டில் என் வாப்பா ஊருக்கு வரும் அந்த ஒரு மாதம் மட்டுமே ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் என “டபுள் பொனான்ஸா”. மற்ற நேரங்களில் தினந்தந்தி மட்டுமே.)

காலேஜ் வந்ததும், தலையணை சைஸ் டிக்‌ஷனரி வாங்கவேண்டியிருந்தாலும், ஆங்கிலவழிப்  பள்ளிப்படிப்புதான் ஆரம்பகால திணறல்களிலிருந்து ரொம்பவே காப்பாற்றியது. ஆனாலும், அடுத்தடுத்த வருஷங்களில்  “Material Science" என்ற பாடமும், அதை நடத்திய ராஜகோபால் சார் பேசின இங்லீஷ்,  பாடப் புத்தகம் எல்லாமே “looked greek to me!!" எனக்கு நினைவு தெரிஞ்சு என் வாழ்க்கையிலேயே முதலும், கடைசியுமா க்ளாஸ் டெஸ்டுக்குக் கட் அடிச்சது அப்பதான்!! அந்தப் பாடத்துல ஃபைனல் எக்ஸாம்ல எப்படி ஃபர்ஸ்ட் அட்டெம்ப்ட்லயே (ஜஸ்ட்)பாஸானேன்கிறது, இப்பவும் புரியாத புதிர் எனக்கு.

ஆங்கில மொழி புலமைக்கும், புரிதலுக்கும், அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை இன்னும் அழுத்தமாப் புரிய வச்சது Material Scienceதான். ஆனாலும், இப்ப(வும்) கல்வி கற்பது, ஆங்கிலத்துல புலமை பெறுவதற்குத்தான் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். ஆங்கிலத்தைச் சரளமாக, அலட்டலான உச்சரிப்புடன் பேசுவதுதான் கற்றவர்களுக்கு அடையாளம் என்பதாகக் கருதுபவர்களைப் பார்க்கும்போது என்ன சொல்லிப் புரிய வைக்க? ஒருமுறை, விகடனில் கமலஹாசன் உள்ளிட்ட சிலர், கல்வி அவசியம் என எச்சந்தர்ப்பங்களில் உணர்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “ஆங்கிலத்தில் உரையாட முடியாதபோது படிக்கவில்லையேவென மிக வருந்துகிறோம்” என்று சொல்லியிருந்தது குறித்து, "கண்டிப்பாக கல்வி கற்கத்தான் வேண்டுமா?" என்கிற என் முந்தைய ஒரு பதிவிலும் விசனத்துடன் சொல்லியிருக்கிறேன்.

கல்வி என்பது ஒருகாலத்தில் அறியாமையைப் போக்கும் ஒளியாகக் காணப்பட்டது. அதனால்தான் கற்றவர்களை மதிப்போடு நடத்தினார்கள். ஆனால், இன்றோ செல்வம் சேர்ப்பதற்காகவே கல்வி (கற்பிப்பவர்கள், கற்பவர்கள் இருதரப்பிற்குமே) என்றாகிவிட்டபின், பட்டங்கள் பல பெற்றவர்களை, அவர்கள் திறமைக்காக மட்டுமே முதலில் மதிக்கத் தோன்றுகிறது.  

அன்றாட வாழ்வில், இருக்கும் நாட்டிற்கேற்ப,  செய்யும் வேலைக்கேற்ப, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகள் தெரிந்திருப்பது மிக அவசியம். அதற்காக ஆங்கிலம் தெரிவதுதான் அறிவின் அடையாளம் என்று எண்ணுவதுதான் தவறு. வளைகுடா நாடுகளில் பள்ளிக்கல்வி கற்கும் மாணவர்கள், பேச்சு-ஆங்கிலத்தில் புலமை பெறுகிறார்கள். பின்னர் இந்தியா சென்று கல்வியைத் தொடரும்போது, (சில) ஆசிரியர்களின் குறைவான ஆங்கிலப் புலமையை வைத்து அவர்களைக் குறைவாக எடை போடுகிறார்கள். அதே சமயம், ஆங்கிலத்தில் பாடம் நடத்த வேண்டிய ஆசிரியர்களும், விளக்கம் தருமளவாவது ஆங்கிலப் புலமை பெற்றிருத்தலும் அவசியம்தானே?


90களின் பிற்பகுதியில் நான் அமீரகத்தில் ஒரு பள்ளியில் 11ம் வகுப்புக்கு கம்ப்யூட்டர் ஆசிரியையாகத் தற்காலிகமாகப் பணிபுரிந்தபோது, ”Machine language" என்பதைப் புரியவைக்க, “நாமெல்லாம் ஆங்கிலத்தில் படித்தாலும், புரிந்துகொள்வதும், சிந்திப்பதும் நம் தாய்மொழியில்தானே?” என்று சொல்ல, ஒரு சிறு சலசலப்பு... இல்லையாம், அவர்கள் சிந்திப்பதே ஆங்கிலத்தில்தானாம!! இடக்கெல்லாம் இல்லை, நிஜம்தானாம்!! நிறையவே திகைத்து நின்றது நினைவுக்கு வருகிறது. அந்தப் பாதிப்போ என்னவோ, என் பிள்ளைகள் தமிழ் தெரியாதவர்களாக இருக்கக்கூடாது என்று உறுதியாய் இருக்கிறேன்.

இங்கு வேலை பார்க்கத் தொடங்கிய சமயத்தில், ஆங்கிலத்தைத் தாய்மொழியாக கொண்டவர்கள், எனது ஆங்கிலத்தில் குறையைக் கண்டுவிடுவார்களோ என்று அஞ்சியிருக்கிறேன். ஆனால், அவர்களில் சிலர், கடிதங்கள் அனுப்பும்போது செய்யும் ‘சில்லி மிஸ்டேக்’குகளைப் பார்த்து சிரிப்பும், ஆனந்தமும், அதிர்ச்சியும் வரும்!! தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே சிலசமயம் தமிழில் எழுத்து/பொருட் பிழைகள் விடுவதுண்டல்லவா, அவர்களும் அப்படித்தான் போல. நாம் அவர்களை பிரமிப்பாய்ப் பார்க்க, அவர்களோ, தாய்மொழியோடு, கூட பல மொழிகள் சரளமாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்களே என்று நம்மைக் கண்டு பொறாமைப்பட.. அக்கரைப் பச்சைதான் போங்கள்!!

அதே சமயம், அரேபியர்/சீனர்/ஜப்பானியர் சிலர், தயக்கமே இல்லாமல் தில்லாக தப்புந்தவறுமாக ஆங்கிலத்தில் உரையாடக் கண்டு ஆரம்பத்தில் நகைத்தாலும், பின்னாளில்தான், சொல்லப்படும் விஷயம் புரிபட்டுவிடுகிறதல்லவா, அது போதுமே?  என்ற ‘ஞானம்’ பிறந்தது. Conveying the message - இதற்குத்தானே மொழிகளெல்லாம்?

நேற்று சின்னவனுக்கு, கம்ப்யூட்டர் பாடத்தில், அதே மெஷின் லாங்வேஜ் வந்திருந்தது. புரியவில்லை என்று கேட்டான். (காலச்சக்கரம்!!) 11ங்கிளாஸ்ல அப்போ வந்தது இப்ப மூணாங்கிளாஸ்லயே வந்ததச் சொல்லவா; இல்லை அப்பவும், இப்பவும் இதே மெஷின் லாங்வேஜ், (நான் விட்டுட்டாலும்) என்னைய விடாமச் சுத்தி வர்றதச் சொல்லவா.. ஆனாலும் நான் மாறலையே..  வாக்கு சுத்தம்!! அதே கேள்வியத்தான் இப்பவும் கேட்டேன்.. ”நீ இங்லீஷ்ல படிக்கிற பாடங்களை, எப்படிப் புரிஞ்சு நினைவில வச்சுப்ப?” “தமிழ்ல”. வெரிகுட்!!

Post Comment