Pages

கண்டிப்பாக கல்வி கற்கத்தான் வேண்டுமா?
என்னடா, போன ப‌திவில தமிழ்தான் படிக்கணுமா வேணாமான்னுதான் கேட்டிருந்தா, இப்ப மொத்தமா படிக்கவே வேணுமான்னு கேக்கறாளேன்னு நினைக்கிறீங்களா?

நேற்று அவள் விகடனில் "கற்கை நன்றே, கற்கை நன்றே" என்ற தலைப்பில் கல்வியின் சிறப்பு குறித்து ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்தது. அதில் கமலஹாஸன் முதல் கே.பி.என். டிராவல்ஸ் அதிபர் வரை கருத்து தெரிவித்திருந்தார்கள். அவர்கள் படிக்க முடியவில்லை என்பதற்காக வருந்தி, எல்லாருமே கண்டிப்பாக கல்வி கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார்கள். இதில் நான் மாறுபடுகிறேன்.

கருத்து கூறியிருந்த எல்லாருமே தத்தம் தொழிலில் வெற்றி பெற்றவர்கள். அடிப்படை கல்வி கூட இல்லாமல், திறமை, உழைப்பு, ஆர்வம் ஆகியவற்றை மட்டுமே கொண்டு பல இன்னல்களைத் தாண்டி ஜெயித்திருக்கிறார்கள். ஆனாலும் இவர்கள் (கமல் தவிர) கல்வி கற்காததால் பட்ட கஷ்டங்கள் என்ன என்று பார்த்தால், ஆங்கிலப் புலமை இல்லாத‌தையே சுட்டிக் காட்டுகிறார்கள்!!

இந்த ஆங்கிலம் என்ற மொழியில் புலமை இல்லாததால் மற்றவர்களோடு (மற்ற நாட்டவர், வேற்று மாநிலத்தவர், கல்லூரி, பள்ளி மாணவர்கள்) இவர்களால் சகஜமாக பேச முடியவில்லையாம்!! அதனால், தாம் பட்ட கஷ்டம் மற்றவர்களும் பட வேண்டாம் என்று எல்லாரையும் கல்வி கற்க அறிவுரை கூறியிருந்தார்கள்!

படிக்காததால், அடிப்படை அறிவு பெறமுடியவில்லை, தொழிலின் நுணுக்கங்கள் கற்க முடியவில்லை, தொழிலை விஸ்திகரிக்க முடியவில்லை என்றெல்லாம் சொல்லி, அதற்காகப் படியுங்கள் என்று சொல்லியிருந்தால் ஒத்துக் கொள்ளலாம். அதைவிட்டு, ஆங்கிலம் தெரியாமல் கஷ்டப்பட்டேன், அதனால் படியுங்கள் என்று சொன்னால், இது ஹிந்தி படிக்கணுமா, வேண்டாமா மாதிரியில்ல இருக்குது?

ஆங்கிலம் என்பது தமிழ், ஹிந்தி போல ஒரு மொழி, அவ்வளவே. அதில் புலமை பெறுவது ஒன்றும் கம்பசூத்திரம் இல்லை. உதாரணம், கமலஹாசன்.  பள்ளிப் படிப்பு இல்லையென்றாலும் ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவர். இதுபோல இன்னும் எவ்வளவோ உதாரணங்கள் உண்டு.  நானறிந்த பள்ளிப்படிப்பில்லாத தமிழ் குடும்பத்தலைவி ஒருவர், இப்போது  திருமணத்திற்குப்பின் அமீரகம் வந்ததில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் சரளமாக உரையாடுவார். இணையத்திலும் உலவுவார். ஏன், படிப்பறிவில்லாத கீழ்நிலை வேலைகளில் (சரியான வார்த்தைதானா?) ஈடுபட்டுள்ள எத்தனையோ பேர் மலையாளம், ஹிந்தி, அரபி மொழிகளில் வெளுத்து வாங்கவில்லையா? 

ஒரு மொழியில் புலமை பெறுவதற்காக 12+3 வருடங்கள் கல்வி கற்க முடியவில்லையே என்று வருந்துவது சரிதானா? சரி, இத்தனை வருடங்கள் கல்வி கற்ற ஒருவர் மட்டும் அவரது வேலையில் அல்லது சொந்தத் தொழிலில் உடனே வெற்றி பெறுகிறாரா? அரசு விதிமுறைகள் புரிந்துகொள்ளுதல், வங்கி கடன் பெறும் தகுதி மற்றும் விதிமுறைகள் அறிந்துகொள்ளுதல் போன்ற  சில படிகளை எளிதாகத் தாண்ட இந்த கல்வி உதவுமே தவிர, தொழில் தொடங்குவோர்க்கு கல்வியினால் பெரிய பயன் ஒன்றும் இல்லை என்றே சொல்வேன். ஆதாரம்,  நாணயம் விகடனில், “களமும், கல்லூரியும்” என்று ஒரு தொடர் வந்தது. அதில் பாண்டிபஜாரில் பொம்மை விற்கும் கல்வி கற்காத இரு இளைஞர்களிடம் ஒரு எம்.பி.ஏ. மாணவர் பேசிவிட்டுச் சொன்னது, ”நாங்கள் ஏட்டில் படித்து வருவதைச் செயலாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்!!” அந்த பாண்டிபஜார் இளைஞர்களின் மாத வருமானம் ரூ.20,000!!
 

வேலைக்குச் சேருபவர்களும்,  தாங்கள் படித்த துறையிலேயே வேலை செய்கிறார்களா என்றால் அதுவும் நூறு சதவிகிதம் இல்லை. என் அலுவலகத்தின் I.T. Administrator-ஆக பணிபுரிபவர், B.Sc.(Physics), B.Ed. படித்தவர். கணிப்பொறி படித்த பெண் Office Administrator!! இப்படி ”நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்று” என்ற கதையாகப் படிப்பது ஒன்றும், வேலை செய்வது வேறொரு துறையிலும் என்பது  வாடிக்கையாகிவிட்டது இக்காலத்தில்.


ஆக, அதற்காகப் படிக்கவே வேண்டாம் என்று சொல்லவில்லை. கல்வி என்பது அவசியமே!! ஆனால் கல்வி இல்லை என்றால் வாழ்வே இல்லை என்று முடிவு செய்யக் கூடாது!! கல்வி கற்க முடியாத நிலையில் இருப்பவர்கள் அதை நினைத்து வருந்திகொண்டிராமல், தமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியான முறையில் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்பதே என் கருத்து. ஏன் சொல்கிறேன் என்றால், தமிழ்நாட்டில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஒரு ஏழை மாணவர், மேற்படிப்புக்கு கல்விக் கடன் கிடைக்கவில்லை என்று தீக்குளித்திருக்கிறார்!!  அதில் அவர் இறக்கவில்லை; பிழைத்துக் கொண்டார்.  ஏற்கனவே வறுமையிலும், கடனிலும் தத்தளித்துக் கொண்டிருக்கும் அந்தக் குடும்பம், இனி இவரது வைத்தியச் செலவுக்கும் கடன் வாங்க வேண்டும்!! அந்த மாணவர் பி.ஏ. படித்திருக்கிறார் என்பதால் அதை வைத்து வேலை தேட முயற்சித்திருக்கலாம் அல்லது விவசாயமே செய்திருக்கலாமே, அதில் என்ன இழிவு?

இதுவல்லாமல், கட்டாயத்துக்காகப் படிக்க வேண்டியிருக்கும் பணக்கார வீட்டுப் பிள்ளைகளும் உண்டு!!    உலகம்தான் எத்தனை விதமான மனிதர்களைக் கொண்டது!!

Post Comment

10 comments:

நாஸியா said...

நான் mba சேர்ந்தப்போ இதே மாதிரி நினைச்சேன். எதுக்கு நைட்டு ஒரு மணி வரைக்கும் கிளாஸ் அட்டென்ட் பண்ணனும்.. நம்ம ம்மா வாப்பவேல்லாம் படிக்கவா செஞ்சாங்கன்னு..

(வருகைக்கு நன்றி சகோதரி.. நானும் இன்ஷா அல்லாஹ் அமீரகத்துக்கு தான் வர போறேன், இந்த மாச கடைசியில.. )

பீர் | Peer said...

புரியல... கல்வி தேவையில்லைன்னு சொல்றீங்களா?

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

பல உதாரணங்கள் காட்டினாலும், படிப்பு அவசியமே, ஆனால் படிப்பு மட்டும் போதாது, பொது அறிவு, ஆளுமை, தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்ற மற்ற திறமைகளும் வேண்டும்.

ஹுஸைனம்மா said...

நாஸியா,
வருகைக்கு நன்றி.
அமீரகத்துக்கு வந்தவுடனே மெயில் அனுப்புங்க, பேசலாம்!!

ஹுஸைனம்மா said...

பீர்,

கல்வி அவசியம்தான். ஆனால் கல்வி (பட்டம்) இல்லையென்றால் வாழ்வே இல்லையென்றாகாது இல்லையா?

ஹுஸைனம்மா said...

ஷ‌ஃபிக்ஸ்,

கல்வி அவசியம் என்பதை மறுக்கவில்லை. ஆனால் வெறும் ஏட்டறிவு பெற வழியில்லை என்ற காரணத்துக்காக முடங்கிவிடுவது கூடாது. மேலும் நான் கூறிய உதாரணகர்த்தாக்கள் எல்லாருமே ஆங்கிலப் புலமை இல்லை என்ற காரணத்தினாலேயே கல்வியை வலியுறுத்துகிறார்கள். அந்தக் கோணம் தவறு என்கிறேன், சரிதானே?

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

கல்விக்கும் ஆங்கிலத்திற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை, முற்றிலும் சரி, என்னோட கசின் பத்தாவது தான் படிச்சான், ஆனால் பிசினசில் கில்லாடி, அமேரிக்கன் அக்ஸ்னட்டில் பிச்சு உதருகிறான், ஆனால் அவனும் சில சமயத்தில் படிச்சு ஒரு டிகிரி வாங்காமல் இருந்துட்டோமேன்னு கவலையா சொல்லுவான், அது ஏன்னு தெரியவில்லைங்க, அக்கரைக்கு இக்கரை பச்சையோ? ஆனா ஒன்னு, படிப்பெல்லாம் என்னைப் போன்று நிறுவனத்தில் வேலை செய்றவங்களுக்குதான் ரொம்ப முக்கியம், ப்ரோமோஷன்னு போய் நின்னா எம்.பி.ஏ இருக்கா, அடிஷனல் குவாலிஃபிகேஷன் இருக்கான்னு தொன தொனன்னு கேள்வி, இதுக்காகவே இப்போ எம்.பி.ஏ. படிக்கிறேன், இறைவன் உதவியால் அடுத்த வருஷம் பிப்ரவரியில் முடிச்சுடலாம். ஹும்ம்ம்!!

நாஸியா said...

இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா!

ஹுஸைனம்மா said...

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...
//அக்கரைக்கு இக்கரை பச்சையோ?//

அதே, அதே!!

//ப்ரோமோஷன்னு போய் நின்னா எம்.பி.ஏ இருக்கா, அடிஷனல் குவாலிஃபிகேஷன் இருக்கான்னு தொன தொனன்னு கேள்வி//

கெவுர்மெண்ட் கம்பனியோ? இல்லை மேலிடத்து ஆட்கள் எல்லாம் தமிழ்நாட்டுக் காரங்களா?

cheena (சீனா) said...

நல்ல சிந்தனை ஹூஸைனம்மா

நல்வாழ்த்துகள்