Pages

அஹிம்சை ஆயுதம்!!

Character Assassination - இதற்குச் சரியான தமிழ்ப் பதம் என்னவாயிருக்கும்?


இது ஒரு அஹிம்சை ஆயுதம்!! ஆமாம், கத்தியின்றி ரத்தமின்றி எதிரிகளை, குறிப்பாகப் பெண் எதிரிகளைப் பழி வாங்க நல்லதொரு ஆயுதம்!! பொதுவாக அலுவலகங்களில் சக பெண் அலுவலர்களுக்கும், அக்கம்பக்கத்தில் உள்ள பெண்களுக்கும், உறவுகளில் உள்ள பிடிக்காத பெண்களுக்கு எதிராக உபயோகிக்கப் படும் ஆயுதம். அதுவும் சில இடங்களில் பெண்களாலேயே பாவிக்கப் படுகிறது. அரசியலில் இதுதான் பிரதான ஆயுதம்!!பழிசுமத்தப் படும் பெண் கொஞ்சம் மன உறுதி இல்லாதவர் என்றால், தற்கொலையிலோ, கொலையிலோ கொண்டு போய் விடும். அதிக பாதிப்பு இல்லாத (!!) விளைவுகள் என்றால், விவாகரத்து, குடும்பத்தை விட்டு விலக்கி வைத்தல், வேலை இழத்தல் போன்றவை நிகழலாம்.

பெண்ணின் நடத்தை மீது பழி சுமத்துவது (சரியான மொழிபெயர்ப்பாக எனக்குத் தோன்றவில்லை; வேறு வார்த்தைகளும் தெரியவில்லை; அதனால் பிரயோகிக்கிறேன்.) என்பது நம் நாட்டில் வழமையாக நடந்து வருவது!! ”சிறுபான்மை அரசு - திருமதி. ஜெயலலிதா” ஞாபகம் வருகிறதா? புகழ்பெற்ற பெண் அரசியல்வாதிகள், பெண் உயரதிகாரிகள் உயர்நிலைக்கு வரும்போது தவறாமல் முதன்முதலில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பாணம்!! இதிலிருந்து மீண்டு வந்துவிட்டார்களென்றால் பின் ஜெயம்தான்!!  


உயிரோடு இருக்கும்போது மட்டுமே அதிகமாக பாய்ச்சப்பட்டு வந்த இந்த ஆயுதம்,  சமீபகாலமாக இறந்த பெண்களின் மீதும் ஏவப்படுகிறது.  கொலை செய்யப் பட்ட பெண்களின் மீதும் இப்போதெல்லாம் கூறப்படுகிறது. இது மிகவும் வசதி. இறந்தவர் உண்மையை நிரூபிக்க வரப் போவதில்லையே! முறையற்ற தொடர்பால் சில கொலைகள் நடந்தன என்பதால் இறக்கும் எல்லா பெண்களும் அவ்வாறே இருப்பார்களா?கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பு கொலை செய்யப்பட்ட அனந்தலட்சுமி, காவலர் ஜெபமணி ஆகியோர் மீதும் இப்பாணம் ஏவப்பட்டது. அதிலும் அனந்தலட்சுமியைக் குறித்து வந்தவையெல்லாம், அவரது கணவர் பெங்களூரிலும், இவர் சென்னையிலும் வசிக்கிறார் என்பதால் ஆமாம், அவர் அப்படித்தான் என்ற ரீதியிலேயே இருந்தது கொடுமை.  இப்போ விசாரணையில் அது உண்மையல்ல என்று தெரிய வந்துள்ளது. அதுவரை சொல்லப்பட்டதன் பாதிப்பு?  அக்குடும்பம் என்ன பாடு பட்டிருக்கும்? எவ்வளவு மனவேதனை,  அவமானம், சுடுசொற்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும் அவரின் குடும்பத்தினர்?


அனந்தலட்சுமியின் சிரித்தமுகத்தையும், மகனுடன் நிற்கும் பெருமிதமும், சிவப்பு மடிசாரும், கள்ளமில்லா சிரிப்பையும் பார்த்தபோதே தோன்றியது, இவர் நிச்சயம் அப்படிப்பட்டவராக இருக்கமுடியாது என்று. அதுபோலவே விசாரணையில் திருப்பங்கள். நல்லவேளை அச்சமயம் புவனேஸ்வரி விஷயம் தலைதூக்கியதால் இந்த வழக்கு பின்னுக்குப் போய்விட்டது. இல்லையென்றால் ஊடகங்களில் ஒரு தொடர்கதையே எழுதப்பட்டிருக்கும்.


அதேபோல, பெண்காவலர் ஜெபமணியின் விஷயத்திலும். அரசு விழா பந்தோபஸ்துக்காகப் போனவர் பத்து நாட்களுக்கு மேலாகியும் வீடு திரும்பவில்லை என்றவுடன் முறையற்ற தொடர்பு உண்டா என்ற கோணத்திலேயே பத்திரிகைச் செய்திகள் வந்தன. பிறகு தெரிந்தது வழியில் லிஃப்ட் கொடுத்தவன் (ஒரு சீரியல் கில்லர்) கற்பழித்துக் கொலை செய்தான் என்று!!


இவ்விரு சம்பவங்களிலும் போலீசார் புலனாய்வதற்காக இந்தக் கோணத்தில் விசாரிக்க வேண்டியதிருந்திருக்கலாம். அதை உடனே பத்திரிகைகளில் வெளியிடத்தான் வேண்டுமா? இன்று ஊடகம் ஒரு பெரிய சக்தியாக உருவெடுத்திருக்கும் நிலையில்,  ஊகமே மனிதனைக் கொல்லும் காலத்தில், இம்மாதிரிச் செய்திகள் சம்பந்தப்பட்டவர்களை எவ்வளவு பாதிக்கும் என்பதைக்  காவல்துறையோ, ஊடகங்களோ அறியாமல் போனது ஏன்?


மறுப்புச் செய்திகள் பின்னர் கொடுக்கப் பட்டாலும் சம்பந்தப் பட்டவர்கள் மனதில் ஏற்பட்ட வடு மறையுமா? அவர்களுக்குக் குழந்தைகள் இருந்தால் அவர்களின் பிஞ்சு மனது என்ன பாடுபடும்?


ஏற்கனவே பரிந்துரைக்கப்படுகின்றபடி, ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படவேண்டும். வழக்குகளின் விசாரணை முழுமையாக முடிவடையும் வரை அதுகுறித்து ஊடகங்களில் செய்தி வருவது முறைப்படுத்தப் பட வேண்டும்.  ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கலாம், ஊரார் வாய்க்கு?


இவ்வழக்குகளிலிருந்து இன்னும் சில விஷயங்கள் நாம் அறிய வருகின்றன. அனந்தலட்சுமியைக் கொலை செய்தவன் அவருக்கு அறிமுகமானவனே. அப்படியானால் நம்மோடு நட்புடன் இருப்பவர்களைக் கூட நம்பமுடியாதா இனி?  வெளியாட்களுடன், அக்கம்பக்கத்தினருடன் பழகாமலிருந்தாலும் சிடுமூஞ்சி என்று பெயர். கலகலப்பாகப் பழகினாலும் ஆபத்து!! குழப்பம்தான்.

ஜெபமணி பந்தோபஸ்து பணிக்காக வெளியூர் சென்ற இடத்தில் கொலை செய்யப்பட்டார். பெண்காவலர்களுக்கு இது ஒரு பெருந்தொல்லை. காவல்துறை சரியான போக்குவரத்து வசதி செய்து கொடுத்திருந்தால் இது நடந்திருக்காது. சொற்பமாக பேட்டா தருவதுடன் காவல்துறையின் கடமை முடிந்துவிடுகிறது. இனியாவது இப்போக்கை காவல்துறை மாற்றிக் கொள்ளுமா?


இன்னும் ஒரு கேள்வி: காவலர்களுக்கு வழமையான உடற்பயிற்சியெல்லாம் இல்லையா? காவலர்கள் என்றால் குற்றவாளிகளை அடித்துக் கொல்வார்கள் என்பதெல்லாம் சினிமாவில் மட்டும்தானா? காவலராக இருந்தும் சாதாரணப் பெண்ணைப் போலப் போராடித்தான் உயிரை விட்டிருக்கிறார்.  அப்படியென்றால் இவர்கள் என்ன சமாளிப்பார்கள் என்று நம்பி பொதுக்கூட்ட பந்தோபஸ்து பணிகளில் ஈடுபடுத்துகிறார்கள்?கேள்விகள் எத்தனையோ எழத்தான் செய்கின்றன. பதில்தான் எங்கு கிடைக்கும் எனத் தெரியவில்லை.Post Comment

13 comments:

பீர் | Peer said...

:(

நாஸியா said...

மிக, மிக ஆழமான கருத்துக்கள் சகோதரி..

எனக்கு குரானில் இறைவன் கூறும் கருது தான் நினைவுக்கு வருகிறது.. ஒரு பெண்ணின் நடத்தையில் யாரேனும் கேள்வி எழுப்பினால் நான்கு சாட்சிகள் இல்லாமல் அதை கூற கூடாது. அது தவறாக இருப்பின் அவர்களுக்கு கசையடிகள் தண்டனை...

எதனை கசையடிகளைக்கொடுக்கலாம் இந்த மானங்கெட்ட பிழைப்பு நடத்துபவர்களுக்கு?

Hussainamma said...

வாங்க பீர்; :-D

Hussainamma said...

//நாஸியா Says:
மிக, மிக ஆழமான கருத்துக்கள் சகோதரி..
//
நாஸியா, நன்றி.

அன்புடன் மலிக்கா said...

நல்ல பதிவு, தமிழ்சங்க விழாவிற்கு போனீர்களா?

ஹுஸைனம்மா said...

நன்றி மலிக்கா.

இல்லை போகவில்லை. தெரிந்தவர்கள் வந்தால் வரலாம் என்று நினைத்தேன்.

cheena (சீனா) said...

ம்ம்ம் பெண்ணாய்ப் பிறந்தவர்க்ள் பலர் அனுபவிக்கும் கொடுமைதான் இது - எப்பொழுது மாறும் இந்நிலைமை

நல்ல சிந்தனை ஹூஸைனம்மா

நல்வாழ்த்துகள்

ஹுஸைனம்மா said...

சீனா சார், மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் புது வரவு என்றாலும், சும்மா படித்துவிட்டுப் போகாமல் தனித்தனியே பதிலும் எழுதுவதற்கு ரொம்பப் பெருந்தன்மை வேண்டும்.

நன்றி சார்!!

நஜி said...

நல்ல கருத்து

கிளியனூர் இஸ்மத் said...

என்னச் சொல்வது இந்த நிலைக் கெட்ட மனிதர்களை எண்ணி

Barari said...

samooka sinthanaiyudaiya nalla idukai.vazthukal sakothari.

..:: Mãstän ::.. said...

தமிழ்மணம் விருதுக்கு வாழ்த்துக்கள் ஹுஸைனம்மா. :)

சென்ஷி said...

:(