சமீபத்தில் என் கல்லூரித் தோழியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, பிள்ளைகளின் படிப்பு, பள்ளி பற்றிப் பேச்சு வந்தது. (இரண்டு பேர் சந்தித்தால், வால் ஸ்ட்ரீட், ஒபாமா, கன்கார்டியா, க்ரீஸ்& யூரோன்னு ‘வெட்டிப்பேச்சு’ பேசுறது ஆம்பளைங்கதான், பெண்கள் இல்லை, தெரிஞ்சுக்கோங்க!!)
ம்.. என்ன சொல்லிட்டிருந்தேன், ஆங்.. பள்ளிக்கூடம் பத்தி பேசிகிட்டிருந்தப்போ, ஸ்கூல் வேன் டிரைவர்கிட்டருந்து எஸ்.எம்.எஸ். வந்துதுன்னு சொன்னா. வேன் இன்னிக்கு வராதுன்னு சொல்றதுக்கான்னு கேட்டேன். இல்லையாம், வேன் ஃபீஸ் 1000 ரூபாவை,இந்த மாசத்துலர்ந்து 1100 ரூவா ஆக்கியிருக்குன்னு மெஸேஜாம். ஃபோன் பண்ணாலோ, நேரில் சொன்னாலோ, சண்டை போடுவோம்; பேரம் பேசுவோம். அதெல்லாம் எதுக்குன்னு, இப்ப எல்லாமே மெஸேஜ்லதான்! என்று சொன்னாள். 5 கிமீ தூரத்துல இருக்க ஸ்கூலுக்கு ஆயிரத்து நூறான்னு நான் திகைச்சு... ம்ம்.. உடனே உங்களுக்கும் கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சிருக்குமே - என்னைப் போல!!
திருநெல்வேலியில் கிராமத்துலருந்து பாளையங்கோட்டை பள்ளிக்கு கிட்டத்தட்ட 5 கி.மீ. தூரம். பஸ்ல போனா அஞ்சு நிமிஷந்தான். ஆனா, பஸ் ஸ்டாண்டுக்கு 15 நிமிஷம் நடக்கணும். அதனால, புள்ளை கஷ்டப்படக்கூடாதேன்னு, வாப்பா (சொன்னதால் என் உம்மா) வண்டி ஏற்பாடு பண்ணாங்க. என்னா வண்டி? “மாட்டு வண்டி”!! சிரிக்குமுன், அது ”லூனா மொபட்” காலம் என்பதை நினைவில் கொள்க. (இப்போ வெளிநாட்டு டூரிஸ்டுகளை மாட்டு வண்டியில ஊர்சுத்தி காமிக்கிறாங்களாம்!!)
![]() |
| http://arunachalagrace.blogspot.com |
ஒரு எட்டு மணிக்குக் கிளம்பினா, ஆடி ஓடி ஒன்பது மணிக்கு ஸ்கூல் வாசல்ல இறங்கலாம். போகும்போதும், வரும்போதும் வண்டியின் பின்சீட்டில உக்காந்து காலைத் தொங்கப் போட்டுகிட்டு வர்றதுக்கு அடியே நடக்கும். அதில மூணுபேர்தான் உக்காரமுடியும். அதுவும் பெரிய பொண்ணுங்களுக்குத்தான் முன்னுரிமை. அஞ்சாங்கிளாஸ் வரை உள்ள சின்ன பிள்ளைகள் உள்ளுக்குதான் கூட்டத்தில் நசுங்கிக் கொண்டு இருக்கணும். அதுவும் உள்ளுக்கு உட்காரும்போது சம்மணம் போட்டெல்லாம் உக்கார முடியாது. வண்டி ஆடி ஆடி போகும்போதெல்லாம் தலை நங்கென்று பக்கவாட்டுக் கூரையில் உள்ள கம்பில் இடிக்கும். ரொம்ப வலிக்கும். இட நெருக்கடி வேறு. இப்ப ஆட்டோவில் அடைப்பதுபோல அப்போ மாட்டு வண்டியில்!!
முன்பக்கம் வண்டிக்காரர் பக்கத்தில் உக்கார ஆண்பிள்ளைகளுக்கு மட்டுமே அனுமதி. அந்த இருக்கைக்கு ஒரு பெயர் உண்டு, மறந்துவிட்டது. சில சமயங்களில் சண்டை போட்டோ அல்லது யாராவது வராத அன்றோ எனக்கும் வாய்ப்பு கிடைக்கும். முன் பக்கம் உட்காருவது ரொம்பக் கவனமாக இருக்க வேண்டும். பித்தளையால் செய்யப்பட்ட இருக்கை என்பதால் வழுக்கும். மேலும், மாடு தன் வாலைச் சுழட்டி வீசும்போது, நம் காலில் படும். அருவெறுப்பாக இருக்கும். ஆனாலும் உள்ளே உள்ள நெருக்குதலைக் காட்டிலும் இது சுகம். சில சமயம் வண்டிக்காரர் கையிலிருந்து சாட்டையை வாங்கி, ஓட்டி வருவதாய் பாவனை செய்வதும் உண்டு. சாட்டை மட்டும்தான் நம் கையில்; மாட்டோடு கம்யூனிகேஷன் & கண்ட்ரோல் அவர் கையில்தான்!
ஸ்கூல் ட்ரிப் அடிக்கும் மாட்டு வண்டிகளிடையே போட்டியும் சில சமயம் நடக்கும். பிள்ளைகள் ’வண்டிக்காரரே, சீக்கிரம் போங்க’ என்று கத்த, வண்டிக்காரர் மாட்டை விரட்ட... செம ஜாலி!! (இதுல ஒரு டிராபேக் என்னன்னா, வண்டி வேகமாப் போனா, உள்ளே இருக்கவங்களுக்குத் தலைல இன்னும் அதிகம் அடிபடும்!!) ஆனால், சில சமயம் வண்டிக்காரர் போட்டிக்கு ஒத்துக் கொள்ள மாட்டார். “சும்மாவே மாடு சுணங்கி சுணங்கிப் போவுது. இப்பம் வெரட்டுனா படுத்துக்கிடும். சும்மாருங்க பிள்ளையளா”ன்னு சொல்லிடுவார்.
ஏழாங்கிளாஸ் வரை அதில்தான். எட்டாங்கிளாஸ் வரும்போது, டீனேஜ் ஆகிவிட்டதால், மாட்டு வண்டியில் போவது கேவலமாகத் தெரிந்தது. ஆனால், மறுப்பெல்லாம் சொல்ல முடியாது. அதிர்ஷடவசமாக, அப்போது தந்தையின் நண்பர் ஒருவர் ஒரு வேன் வாங்கி, ஸ்கூல் டிரிப் அடிக்கப் போவதாகச் சொல்ல, மாட்டு வண்டியிலிருந்து வேனுக்குப் பிரமோஷன் கிடைத்தில் மனம் றெக்கை கட்டிப் பறந்தது.
![]() |
| கிட்டதட்ட இப்படித்தான் அந்த வேன் இருந்துச்சு! |
ஆனால், அந்த வேனைப் பார்த்த முதல் நாள் அந்த சந்தோஷம் பொட்டென்று போய்விட்டது. இதுக்கு மாட்டு வண்டியே எவ்வளவோ பரவாயில்லை என்றிருந்தது. ஒரு சின்ன வேன். முன்பக்கம் மூடிய டிரைவர் கேபின்; பின்பக்கம் லக்கேஜ் சேம்பர்போல ஒரு பகுதி; அதில் இருபுறமும் சீட் போட்டிருந்தது. நல்லவேளையாய், பிறகு வாடகை கட்டுப் படியாகாமல் (ஆளே சேரலை) ரெண்டு மாசத்தில் அவரே நிறுத்திவிட, (எப்படியோ தைரியம் வந்து) மறுபடி மாட்டு வண்டியில் போக மறுத்ததால் ஆட்டோ பயணம் ஆரம்பித்தது.
ஆட்டோவிலும் நெருக்கம், இடிபுடிதான். மேலும் மடியில் ஒரு வாண்டையும் உக்கார வச்சுக்கணும். அந்த வாண்டு நம்ம கால்ல உக்காந்துகிட்டுதான் யார்கிட்டயாவது ‘ரஜினி ஃபைட்’ போடும்!! கால் கிட்டதட்ட உடைஞ்சிடும். ஆனாலும், பள்ளிக்கு ஆட்டோவில் போய் இறங்குவது கொஞ்சம் ‘கௌரவமாக’ இருக்கும் என்பதால் அதையெல்லாம் தாங்கிக் கொண்டேன். அப்போதான் தமிழ்நாட்டில் ஆட்டோக்கள் பிரபலமாக ஆரம்பித்திருந்தது. அதனால், எங்கள் வீட்டிலேயே ஸ்கூல் ட்ரிப்புக்கு 4 டிக்கட்; மேலும், கடைகண்ணி போக வர, டாக்டரிடம் போக, உறவுகள் வீட்டுக்கு போக என்று ஆட்டோவுக்கு என்று தனி தொகை செலவாக ஆரம்பித்தது. (ஹி.. ஹி.. அப்பல்லாம் நாந்தான் எங்க வீட்டுக் கணக்கப்பிள்ளை!!)
இவ்ளோ தொகையை வெளியே ஏதோ ஒரு ஆட்டோக்காரனுக்குக் கொடுக்கிறதுக்கு, நாமே ஏன் சொந்தமா ஆட்டோ வாங்கக் கூடாதுன்னு “பிஸினஸ் ப்ளான்” போட்டு வீட்டில் சொந்தமா ஆட்டோ வாங்க, அதற்கு கணக்கு வழக்கெல்லாம் பார்ப்பதும் என் தலையில் விழுந்தது.
அப்ப நானும் காலேஜ் சேந்தாச்சு. மூணு தங்கச்சிக்கும் ஸ்கூலுக்கும் ஆட்டோ; எனக்கு காலேஜுக்கும் ஆட்டோதான். ரெண்டும் எதிரெதிர் திசையில்!! பள்ளியைப் போலவே, கல்லூரிக்கும் ஆட்டோவில் போவது கௌரவமாக இருக்கும் என்று நம்ம்ம்பி, கெத்தாகப் போன எனக்கு அதிர்ச்சி!! என் ஆட்டோ சீனியர்களிடையே மட்டுமல்லாமல், என் நண்பர்களிடமும் நகைச்சுவைப் பொருள் ஆனது. அன்போடு தந்த பட்டங்கள் என் இமேஜை “சொர்ணாக்கா” ரேஞ்சுக்கு “உயர்த்தியது”. (அப்பல்லாம் “ஆட்டோ அனுப்பிடுவாங்க” என்ற டயலாக் புழக்கத்தில் இல்லை என்று தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.)
ஆனாலும், இதுக்கெல்லாம் பயந்து, ஆட்டோவில் வருவதை விடவில்லை. மேலும், ஊரைவிட்டுத் தள்ளி இருக்கும் எங்க காலேஜிலிருந்து பஸ் வசதி மிகவும் குறைவு. ரெண்டு பஸ்ஸைப் பிடிச்சு வீடு போய் சேரணும்னா, ரெண்டு மணி நேரமாவது ஆகிடும். அதனால், என் ஆட்டோ, எனக்கு மட்டுமில்லாமல் தோழிகள் பலருக்கும் உதவியிருந்திருக்கு - முக்கியமா தேர்வுகள் சமயத்துல.
இதுக்கிடையில, நம்ம ஆட்டோதானேன்னு, எங்க வீட்ல சொந்த உபயோகத்துக்கு ஆட்டோவைப் பயன்படுத்துவதும் அதிகமாச்சு. அதோட, உறவுகளும் எங்க ஆட்டோவையேக் கூப்பிட ஆரம்பிச்சாங்க. (ஆனா, சொந்தக்காரங்ககிட்ட கறாரா இருக்க முடியாதில்ல!) இப்படியே வாடகை ஓட்டத்தைவிட, ஓன் யூஸ் அதிகமானது.
அத்தோட, மத்த ஆட்டோவெல்லாம் ஜம்முனு இருக்கும்போது, எங்க ஆட்டோ மட்டும் அடிக்கடி வொர்க் ஷாப்ல நிக்கும். அப்படி, இப்படின்னு, கடைசியில் நஷ்டமே மிஞ்சியது. அப்புறம் எங்க ஆட்டோ டிரைவர் சொந்தமா ஆட்டோ வாங்கிட்டதால, எங்க ஆட்டோவை வித்துட்டு, அவர் ஆட்டோவிலயே வாடகைக்குப் போக ஆரம்பிச்சோம். இப்பவும் இந்தியாபோனா ஊர்சுத்துறது அந்த ஆட்டோவிலத்தான்.
தலைப்பை ”மாட்டு வண்டியிலிருந்து A380வரை” ன்னு வச்சிருக்கலாமோ?
|
|
Tweet | |||



