Pages

பயணங்கள்
சமீபத்தில் என் கல்லூரித் தோழியிடம் பேசிக்கொண்டிருந்தபோது,  பிள்ளைகளின் படிப்பு, பள்ளி பற்றிப் பேச்சு வந்தது. (இரண்டு பேர் சந்தித்தால், வால் ஸ்ட்ரீட், ஒபாமா, கன்கார்டியா, க்ரீஸ்& யூரோன்னு ‘வெட்டிப்பேச்சு’ பேசுறது ஆம்பளைங்கதான், பெண்கள் இல்லை,  தெரிஞ்சுக்கோங்க!!)

ம்.. என்ன சொல்லிட்டிருந்தேன், ஆங்.. பள்ளிக்கூடம் பத்தி பேசிகிட்டிருந்தப்போ, ஸ்கூல் வேன் டிரைவர்கிட்டருந்து எஸ்.எம்.எஸ். வந்துதுன்னு சொன்னா. வேன் இன்னிக்கு வராதுன்னு சொல்றதுக்கான்னு கேட்டேன். இல்லையாம், வேன் ஃபீஸ் 1000 ரூபாவை,இந்த மாசத்துலர்ந்து 1100 ரூவா ஆக்கியிருக்குன்னு மெஸேஜாம். ஃபோன் பண்ணாலோ, நேரில் சொன்னாலோ,  சண்டை போடுவோம்; பேரம் பேசுவோம். அதெல்லாம் எதுக்குன்னு, இப்ப எல்லாமே மெஸேஜ்லதான்! என்று சொன்னாள். 5 கிமீ தூரத்துல இருக்க ஸ்கூலுக்கு ஆயிரத்து நூறான்னு நான் திகைச்சு... ம்ம்.. உடனே உங்களுக்கும் கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சிருக்குமே - என்னைப் போல!!

திருநெல்வேலியில் கிராமத்துலருந்து பாளையங்கோட்டை பள்ளிக்கு கிட்டத்தட்ட 5 கி.மீ. தூரம்.  பஸ்ல போனா அஞ்சு நிமிஷந்தான். ஆனா, பஸ் ஸ்டாண்டுக்கு 15 நிமிஷம் நடக்கணும். அதனால, புள்ளை கஷ்டப்படக்கூடாதேன்னு, வாப்பா (சொன்னதால் என் உம்மா) வண்டி ஏற்பாடு பண்ணாங்க. என்னா வண்டி? “மாட்டு வண்டி”!! சிரிக்குமுன், அது ”லூனா மொபட்” காலம் என்பதை நினைவில் கொள்க. (இப்போ வெளிநாட்டு டூரிஸ்டுகளை மாட்டு வண்டியில ஊர்சுத்தி காமிக்கிறாங்களாம்!!)

http://arunachalagrace.blogspot.com

ஒரு எட்டு மணிக்குக் கிளம்பினா, ஆடி ஓடி ஒன்பது மணிக்கு ஸ்கூல் வாசல்ல இறங்கலாம். போகும்போதும், வரும்போதும் வண்டியின் பின்சீட்டில உக்காந்து காலைத் தொங்கப் போட்டுகிட்டு வர்றதுக்கு அடியே நடக்கும். அதில மூணுபேர்தான் உக்காரமுடியும். அதுவும் பெரிய பொண்ணுங்களுக்குத்தான் முன்னுரிமை. அஞ்சாங்கிளாஸ் வரை உள்ள சின்ன பிள்ளைகள் உள்ளுக்குதான் கூட்டத்தில் நசுங்கிக் கொண்டு இருக்கணும். அதுவும் உள்ளுக்கு உட்காரும்போது சம்மணம் போட்டெல்லாம் உக்கார முடியாது. வண்டி ஆடி ஆடி போகும்போதெல்லாம் தலை நங்கென்று பக்கவாட்டுக் கூரையில் உள்ள கம்பில் இடிக்கும். ரொம்ப வலிக்கும். இட நெருக்கடி வேறு. இப்ப ஆட்டோவில் அடைப்பதுபோல அப்போ மாட்டு வண்டியில்!!

முன்பக்கம் வண்டிக்காரர் பக்கத்தில் உக்கார ஆண்பிள்ளைகளுக்கு மட்டுமே அனுமதி. அந்த இருக்கைக்கு ஒரு பெயர் உண்டு, மறந்துவிட்டது.  சில சமயங்களில் சண்டை போட்டோ அல்லது யாராவது வராத அன்றோ எனக்கும் வாய்ப்பு கிடைக்கும். முன் பக்கம் உட்காருவது ரொம்பக் கவனமாக இருக்க வேண்டும். பித்தளையால் செய்யப்பட்ட இருக்கை என்பதால் வழுக்கும். மேலும், மாடு தன் வாலைச் சுழட்டி  வீசும்போது, நம் காலில் படும்.  அருவெறுப்பாக இருக்கும். ஆனாலும் உள்ளே உள்ள நெருக்குதலைக் காட்டிலும் இது சுகம்.  சில சமயம் வண்டிக்காரர் கையிலிருந்து சாட்டையை வாங்கி, ஓட்டி வருவதாய் பாவனை செய்வதும் உண்டு. சாட்டை மட்டும்தான் நம் கையில்; மாட்டோடு கம்யூனிகேஷன் & கண்ட்ரோல் அவர் கையில்தான்!

ஸ்கூல் ட்ரிப் அடிக்கும் மாட்டு வண்டிகளிடையே போட்டியும் சில சமயம் நடக்கும். பிள்ளைகள்  ’வண்டிக்காரரே, சீக்கிரம் போங்க’ என்று  கத்த, வண்டிக்காரர் மாட்டை விரட்ட... செம ஜாலி!! (இதுல ஒரு டிராபேக் என்னன்னா, வண்டி வேகமாப் போனா, உள்ளே இருக்கவங்களுக்குத் தலைல இன்னும் அதிகம் அடிபடும்!!) ஆனால், சில சமயம் வண்டிக்காரர் போட்டிக்கு ஒத்துக் கொள்ள மாட்டார். “சும்மாவே மாடு சுணங்கி சுணங்கிப் போவுது. இப்பம் வெரட்டுனா படுத்துக்கிடும். சும்மாருங்க பிள்ளையளா”ன்னு சொல்லிடுவார்.

ஏழாங்கிளாஸ் வரை அதில்தான். எட்டாங்கிளாஸ் வரும்போது, டீனேஜ் ஆகிவிட்டதால், மாட்டு வண்டியில் போவது கேவலமாகத் தெரிந்தது. ஆனால், மறுப்பெல்லாம் சொல்ல முடியாது. அதிர்ஷடவசமாக, அப்போது தந்தையின் நண்பர் ஒருவர் ஒரு வேன் வாங்கி, ஸ்கூல் டிரிப் அடிக்கப் போவதாகச் சொல்ல, மாட்டு வண்டியிலிருந்து வேனுக்குப் பிரமோஷன் கிடைத்தில் மனம் றெக்கை கட்டிப் பறந்தது.
கிட்டதட்ட இப்படித்தான் அந்த வேன் இருந்துச்சு!

ஆனால், அந்த வேனைப் பார்த்த முதல் நாள் அந்த சந்தோஷம் பொட்டென்று போய்விட்டது. இதுக்கு மாட்டு வண்டியே எவ்வளவோ பரவாயில்லை என்றிருந்தது. ஒரு சின்ன வேன். முன்பக்கம் மூடிய டிரைவர் கேபின்; பின்பக்கம் லக்கேஜ் சேம்பர்போல ஒரு பகுதி; அதில் இருபுறமும் சீட் போட்டிருந்தது. நல்லவேளையாய், பிறகு வாடகை கட்டுப் படியாகாமல் (ஆளே சேரலை) ரெண்டு மாசத்தில் அவரே நிறுத்திவிட, (எப்படியோ தைரியம் வந்து) மறுபடி மாட்டு வண்டியில் போக மறுத்ததால் ஆட்டோ பயணம் ஆரம்பித்தது. 


ஆட்டோவிலும் நெருக்கம், இடிபுடிதான்.  மேலும் மடியில் ஒரு வாண்டையும் உக்கார வச்சுக்கணும். அந்த வாண்டு நம்ம கால்ல உக்காந்துகிட்டுதான் யார்கிட்டயாவது ‘ரஜினி ஃபைட்’ போடும்!! கால் கிட்டதட்ட உடைஞ்சிடும்.  ஆனாலும், பள்ளிக்கு ஆட்டோவில் போய் இறங்குவது கொஞ்சம் ‘கௌரவமாக’ இருக்கும் என்பதால் அதையெல்லாம் தாங்கிக் கொண்டேன். அப்போதான் தமிழ்நாட்டில் ஆட்டோக்கள் பிரபலமாக ஆரம்பித்திருந்தது. அதனால், எங்கள் வீட்டிலேயே ஸ்கூல் ட்ரிப்புக்கு 4 டிக்கட்; மேலும், கடைகண்ணி போக வர, டாக்டரிடம் போக, உறவுகள் வீட்டுக்கு போக என்று ஆட்டோவுக்கு என்று தனி தொகை செலவாக ஆரம்பித்தது. (ஹி.. ஹி..  அப்பல்லாம் நாந்தான் எங்க வீட்டுக் கணக்கப்பிள்ளை!!)

இவ்ளோ தொகையை வெளியே ஏதோ ஒரு ஆட்டோக்காரனுக்குக் கொடுக்கிறதுக்கு, நாமே ஏன் சொந்தமா ஆட்டோ வாங்கக் கூடாதுன்னு “பிஸினஸ் ப்ளான்” போட்டு வீட்டில் சொந்தமா ஆட்டோ வாங்க, அதற்கு கணக்கு வழக்கெல்லாம் பார்ப்பதும் என் தலையில் விழுந்தது.

அப்ப நானும் காலேஜ் சேந்தாச்சு. மூணு தங்கச்சிக்கும் ஸ்கூலுக்கும் ஆட்டோ; எனக்கு காலேஜுக்கும் ஆட்டோதான். ரெண்டும் எதிரெதிர் திசையில்!! பள்ளியைப் போலவே, கல்லூரிக்கும் ஆட்டோவில் போவது கௌரவமாக இருக்கும் என்று நம்ம்ம்பி, கெத்தாகப் போன எனக்கு அதிர்ச்சி!! என் ஆட்டோ சீனியர்களிடையே மட்டுமல்லாமல், என் நண்பர்களிடமும் நகைச்சுவைப் பொருள் ஆனது. அன்போடு தந்த பட்டங்கள் என் இமேஜை “சொர்ணாக்கா” ரேஞ்சுக்கு “உயர்த்தியது”. (அப்பல்லாம் “ஆட்டோ அனுப்பிடுவாங்க” என்ற டயலாக் புழக்கத்தில் இல்லை என்று தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.)

ஆனாலும், இதுக்கெல்லாம் பயந்து, ஆட்டோவில் வருவதை விடவில்லை. மேலும், ஊரைவிட்டுத் தள்ளி இருக்கும் எங்க காலேஜிலிருந்து பஸ் வசதி மிகவும் குறைவு. ரெண்டு பஸ்ஸைப் பிடிச்சு வீடு போய் சேரணும்னா, ரெண்டு மணி நேரமாவது ஆகிடும். அதனால், என் ஆட்டோ, எனக்கு மட்டுமில்லாமல் தோழிகள் பலருக்கும் உதவியிருந்திருக்கு - முக்கியமா தேர்வுகள் சமயத்துல. 

இதுக்கிடையில, நம்ம ஆட்டோதானேன்னு,  எங்க வீட்ல சொந்த உபயோகத்துக்கு ஆட்டோவைப் பயன்படுத்துவதும் அதிகமாச்சு. அதோட, உறவுகளும் எங்க ஆட்டோவையேக் கூப்பிட ஆரம்பிச்சாங்க.  (ஆனா, சொந்தக்காரங்ககிட்ட கறாரா இருக்க முடியாதில்ல!) இப்படியே வாடகை ஓட்டத்தைவிட, ஓன் யூஸ் அதிகமானது.

அத்தோட, மத்த ஆட்டோவெல்லாம் ஜம்முனு இருக்கும்போது, எங்க ஆட்டோ மட்டும் அடிக்கடி வொர்க் ஷாப்ல நிக்கும்.  அப்படி, இப்படின்னு, கடைசியில் நஷ்டமே மிஞ்சியது. அப்புறம் எங்க ஆட்டோ டிரைவர் சொந்தமா ஆட்டோ வாங்கிட்டதால, எங்க ஆட்டோவை வித்துட்டு, அவர் ஆட்டோவிலயே வாடகைக்குப் போக ஆரம்பிச்சோம். இப்பவும் இந்தியாபோனா ஊர்சுத்துறது அந்த ஆட்டோவிலத்தான்.

தலைப்பை ”மாட்டு வண்டியிலிருந்து  A380வரை” ன்னு வச்சிருக்கலாமோ?

Post Comment

50 comments:

Abdul Basith said...

நல்லவேளை, எங்கள் வீட்டு பக்கத்திலேயே பள்ளிக்கூடம் இருந்ததால் செலவு மிச்சமாச்சு.

ஸ்ரீராம். said...

பள்ளி சென்ற கால நினைவுகளைத் தூண்டி விட்டு விட்டீர்கள்....நானெல்லாம் நடை பின்னர் சைக்கிள்....யூனிபார்ம்தான் சந்திரபாபு 'நீதி'யில் போலீஸ் டிரஸ் போட்டு வருவாரே அபபடி தொள தொள என்றிருக்கும். மாட்டு வண்டியில் முன்பாரத்தைச் சமாளிக்க முன்னே உட்காரச் சொல்வார்கள்...அதற்குப் பெயர் உண்டா என்ன?

RAMVI said...

நீங்க பரவாயில்லை மாட்டு வண்டில ஆரம்பிச்சு, ஆட்டோ வரைக்கும் வந்த்தீங்க.நான் பள்ளிக்கூடம் படிக்கும் காலத்தில நட ராஜா சர்வீஸ்தான். கல்லூரிக்கு போனப்புறம்,யூனிட் டிரெயின்,அப்பறமா நம்ம பல்லவன் பஸ்தான்.
உங்களோட இந்த பயணம் சுகமான அனுபவமாக இருந்தது.

Shahul Hameed said...

வாழ்த்துக்கள் for Udanz - Star of the week

By
MUSH

அரபுத்தமிழன் said...

//தலைப்பை ”மாட்டு வண்டியிலிருந்து A380வரை” ன்னு வச்சிருக்கலாமோ?//

மினி 'ஆட்டோ பயோகிராஃபி'ன்னும் வச்சுக்கலாம். 'மாடு ஓட்டிய மங்கை'
ன்னும் வச்சுக்கலாம். :)

கோவை2தில்லி said...

உங்க மாட்டுவண்டி, ஆட்டோ கொசுவத்திகள் ரொம்ப நல்லா இருந்ததுங்க....

என்னுடைய பள்ளிப் பருவமெல்லாம் நடராஜா சர்வீஸ் தான்...அது தான் எனக்கும் பிடிக்கும். மழையில் நனைந்ததெல்லாம் அப்போது தான்....20 நிமிட நடை....

கல்லூரிக்கு பேருந்து. ஆனாலும் அதற்கும் 20 நிமிடம் நடந்து வந்த பின் தான் பேருந்து கிடைக்கும். இல்லையென்றால் இரண்டு பேருந்துகள் மாற வேண்டும். அப்பா மாதம் முழுவதுக்கும் தரும் 100 ரூபாயில் இரண்டு பேருந்துகளுக்கு ஒத்து வராது....அதனால் ஒரு பேருந்தின் தூரம்....நடை தான்.

ரோஷ்ணிக்கு கடந்த ஆண்டு வரை 5 கிமீ தொலைவில் இருந்த பள்ளிக்கு வேன்க்கு 650 ரூபாய் கொடுத்து வந்தோம். இந்த ஆண்டு 3கிமீ தொலைவு உள்ள பள்ளிக்கு 500 ரூபாய் தருகிறோம்.

ராமலக்ஷ்மி said...

அருமை.

நாங்கள் காரில் சென்று வந்தோம் எனில் ரொம்ம்ம்ப பெரிய குடும்ம்ம்பம் ஆகையால் இதே அளவு நெரிசல்களுடன்தான் இருக்கும் பயணம். அதிலும் ஜங்கஷனிலிருந்து பாளைக்கு காலை மாலை 2,3 ட்ர்ப்களும் வேறு உண்டு. மதிய சாப்பாட்டுக்கு வீடு வந்து சென்றோம் குறிப்பிட்ட வகுப்பு வரை. அதையொட்டிய நினைவுகளைக் கிளப்பி விட்டது பதிவு.

மாட்டு வண்டிகள் இருபது முப்பது போல வரிசை பள்ளிக்கு செல்லும் காலம் இது. இன்னொரு விஷயம் கவனித்திருக்கிறீர்களா? குதிரை வண்டியில் வரும் பிள்ளைகள் ரொம்பப் பெருமையாக உணர்வார்கள்:)!

இப்போது ஊரில் தேடினாலும் தென்படவில்லை இந்த வண்டிகள்.

அப்பாதுரை said...

சுவாரசியமான நினைவுகள்.
ஆட்டோ படத்தைப் பார்த்தாலே நடுக்கமாக இருக்கிறது. உள்ளே எத்தனை பிள்ளைகள்!

அப்பாதுரை said...

சொந்த ஆட்டோ எப்படி நஷ்டமாகும்? புரியலியே கணக்கப்பிள்ளை?
சொந்த ஆட்டோன்னதும் சவாரி காசு குடுக்கறதை நிறுத்திட்டீங்களோ?

ஸாதிகா said...

ஸ்கூல் வேன் டிரைவர்கிட்டருந்து எஸ்.எம்.எஸ். ///இம்க்கே இப்போ எல்லாம் வீட்டு வேலை செய்கின்ற அம்மணிகளும் இதைத்தான் பின்பற்றுகின்றனர்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நமக்கெல்லாம் பள்ளிக்கூடம் பக்கத்துலயேதான். எட்டுவரைக்கும் அங்கே டேரா போட்டாச்சி.. அப்புறமா 9 12 வரைக்கும் வீட்டுலருந்து 2 கீ.மீ நடராஜா பஸ்தான். காலேஜ் போகும்போதான் பஸ்.

அப்போதெல்லாம் மாட்டுவண்டியில போனால் ரொம்ப ஜாலிதான். வண்டிக்கார சுப்பைய்யா மாமா. அப்புறம் முத்து....!. இப்போதும் அந்த பயணங்கள் இனிமையானவை. நினைத்து பார்க்க வைத்த இடுகை.

///(ஹி.. ஹி.. அப்பல்லாம் நாந்தான் எங்க வீட்டுக் கணக்கப்பிள்ளை!!)///

பெரிய ஆளுதான்!.. நாங்கெல்லாம் அப்பவே அப்படி! இப்போ கேக்கவா வேணும்!!!!.. அப்படித்தானே.. ஹிஹிஹிஹிஹி...

ஸாதிகா said...

ஜல் ஜல் என்ற சலங்கை ஒலி சப்த்ததுடன் மாட்டுவண்டியின் பக்கவாட்டு கம்பி தலை இடிக்க குலுங்கலுடன் சேய்யும் மாட்டுவண்டிப்பயணத்தை நினைத்தால் அந்த சவாரி மீண்டும் செய்யவேண்டும் போலுள்ளது.என்ன செய்வது ஊருக்கு போனாலும் மாட்டுவண்டியை காணோம்.

ஸாதிகா said...

சென்ற ஆண்டு எங்களூரில் நடந்த டிசமபர் திருமணத்தில் ஒரு பிரபலமான வீட்டு திருமணம் கனஜோராக அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் மாப்பிள்ளையை அழைத்து வந்து புதுமை செய்து அசத்தினார்கள்.

நட்புடன் ஜமால் said...

(ஹி.. ஹி.. அப்பல்லாம் நாந்தான் எங்க வீட்டுக் கணக்கப்பிள்ளை!!)

அதென்ன அப்ப!!!

அப்பத்திலேர்ந்துன்னு சொல்லனும் ...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

யுடான்ஸ் நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

எங்க ஊருக்கு டவுன் பஸ் வரும்போது நான் ஒன்பதாம் வகுப்பு வந்துவிட்டேன். அதுவரை நடராஜா சர்வீஸ்தான். அதுவும் ஜாலிதான்.:)
பஸ் வந்தால் அதில் பிரயாணம் செய்யும் ஆள் நான் ஒருத்தியாகத்தான் இருக்கும்.
அதைப் பார்த்து அப்பா பஸ் வேண்டாம் என்று நிறுத்திவிட்டார்:)
நல்லா இருக்குப்பா இந்த ஆட்டோ புராணம்.

யுவராணி தமிழரசன் said...

தங்களது வலைப்பக்கத்திற்கு முதல் முறையாக வருகிறேன்! அருமையான அனுபவம் தங்களது பதிவினில்!! அன்றைய உலகிற்கு திரும்பிப்போக ஆசைப்பட வைக்கிறது!

நாஞ்சில் பிரதாப்™ said...

//ஏழாங்கிளாஸ் வரை அதில்தான். எட்டாங்கிளாஸ் வரும்போது, டீனேஜ் ஆகிவிட்டதால், மாட்டு வண்டியில் போவது கேவலமாகத் தெரிந்தது.//

இதைப்படிக்கும்போது எனக்கும் அப்படித்தான் இருந்துச்சு :)))

விசயம் ஒரு "அம்பது" வருச பழசுனாலும், சுவாரஸ்யமாவே இருந்துச்சு :))

யுவராணி தமிழரசன் said...

தங்களது வலைப்பக்கத்திற்கு முதல் முறையாக வருகிறேன்! அருமையான அனுபவம் தங்களது பதிவினில்!! அன்றைய உலகிற்கு திரும்பிப்போக ஆசைப்பட வைக்கிறது!

வித்யா said...

டவுன் பஸ், அப்புறம் ஸ்கூல் பஸ் இதான் நம்ம ஜர்னி.

என் புள்ளைக்கு ஸ்கூல் ஃபீஸைவிட வேன் ஃபீஸ் அதிகமாருக்கு:((

A and A said...

ரொம்ப நல்லா இருக்கு. அப்பிடியே நம்ம ஊர் மணத்தோட இருந்தது. எங்க பக்கம் மாட்டு வண்டியிலே முன் பக்கம் உக்கறதுக்கு "கோஸ் பட்டி" என்று பெயர். ஊங்க ஊர்லயும் அதுதானா?

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

நான் நடந்தே போயிடுவேன். பிறகு சைக்கிள்... :)

நினைவுகளைத் தூண்டி விட்டீர்கள்... :)

ஹுஸைனம்மா said...

@A & A:
அதேதான், கோஸ் பெட்டி - கரெக்ட்!! இதுதான் பேர்!! ரொம்ப தேங்ஸ்ப்பா ஞாபகப்படுத்துனதுக்கு!!

ஹுஸைனம்மா said...

பாஸித் - எங்க வீட்டுக்கிட்டேயும் பள்ளிக்கூடங்கள் இருந்துது. ஆனா அதிலே 3-ங்கிளாஸ் வரைதான் படிப்பு. “மேற்படிப்பு”க்கு பாளையங்கோட்டை போயிட்டோம். :-))

ஸ்ரீராம் சார் - //.யூனிபார்ம்தான் // எங்கூர் பசங்களுக்கும் அப்ப டவுசர்தான் சீருடை என்பதால், ஊருக்குள் அணிய வெட்கப்பட்டுக் கொண்டு, மேலே கைலியை உடுத்திக்கொண்டு, ஊருக்கு வெளியே வந்ததும் கழட்டி பையில் வைத்துக் கொள்வார்கள். மா.வ.யில் போகும்போது தினப்படி காட்சி இது!!

//மாட்டு வண்டியில் முன்பாரத்தைச் சமாளிக்க முன்னே உட்காரச் சொல்வார்கள்...அதற்குப் பெயர் உண்டா என்ன?//
ஆமாம், ”கோஸ் பெட்டி” என்று பெயர் அதற்கு. (A & A சொன்னார்). முன்பக்கம் மட்டும் ஒரு சிறிய பெட்டி போல செய்துவைத்திருப்பார்கள் - வண்டிக்காரர் தன் அரிய பொக்கிஷங்களான புகையிலைப் பெட்டி (அ) பீடிக்கட்டு, மதிய உணவு போன்றவற்றை அதில்தான் வைத்திருப்பார். அதன்மேல்தான் டிரைவர் & கோ-பேஸஞ்சர்ஸ் சீட்டும்!! :-))))

ஹுஸைனம்மா said...

ராம்வி - நீங்களும் ‘நட’ராஜா சர்வீஸ்தானா? நிறைய பேர் இப்படித்தான் போயிருக்காங்க. நானும் காலேஜுக்கு பலநாள் பஸ்லதான் போவேன். நன்றிங்க.

@Shahul Hameed - நன்றிங்க, கரெக்டாக் கண்டுபிடிச்சுட்டீங்களே!!

அரபுத்தமிழன் - “ஆட்டோ” பயோகிராஃபி: பொருத்தமான பெயர், எனக்குத் தோணலை பாருங்க!!
//'மாடு ஓட்டிய மங்கை'// - இதுக்கு மங்கையை விரட்டிய மாடுன்னும் அர்த்தம் வருது; அதனால வேண்டாம். :-(

ஹுஸைனம்மா said...

கோவை2தில்லி - //அதனால் ஒரு பேருந்தின் தூரம்....நடை தான்.// ம்ம்... அப்பவெல்லாம் எப்படி சிக்கனம் பிடிக்கீறதுன்னு பழகினதுதான், இப்பவும் கைவருது, இல்லியா?

ராமலக்ஷ்மிக்கா - இந்தப் பதிவு நிறைய பேருக்குப் பழைய நினைவுகளைக் கிளறிவிட்டிருக்கு.
//குதிரை வண்டியில் வரும் பிள்ளைகள் ரொம்பப் பெருமையாக//
ஆமாம்க்கா. அதுவும் ஜமீந்தார் வீட்டில்தான் குதிரை வண்டிகள் இருக்கும்னு திரைப்படங்களில் வரும் காலம் என்பதால், அவர்களும் ஜமீன் வாரிசு போலத்தான் நமக்கும் கற்பனை வரும்!!

மாட்டு வண்டியிலேயே ஏற்றத் தாழ்வுகள்(!!) உண்டு - ஒற்றை மாட்டு வண்டி, இரட்டை மாட்டு வண்டி என்று. ரெட்டை மாட்டு வண்டிதான் ஒசத்தி & ஃபாஸ்ட்!! :-))))

ஹுஸைனம்மா said...

அப்பாத்துரை - இந்த ஆட்டோ படத்தில கொஞ்சம் குறைவாய்த்தான் இருக்கு. நேரில பாக்கணும், மும்பை மின்சார ரயில் தோத்துடும்!

//சொந்த ஆட்டோன்னதும் சவாரி காசு குடுக்கறதை நிறுத்திட்டீங்களோ//
ஆமா, வாடகை கொடுப்பதில்லை; ஆனா டிரைவர் சம்பளம் (கமிஷன்) எடுத்துப்பார். பெட்ரோல் செலவும் இருக்கு. அப்புறம், வொர்க்‌ஷாப் செலவும் அதிகமாகிடுச்சு. கூட்டிக்கழிச்சுப் பாத்தா, ஒண்ணும் மிஞ்சாட்டிப்போனாக்கூடப் பரவால்ல. கையிலருந்து அதிகமாப் போக ஆரம்பிச்சுது.

ஹுஸைனம்மா said...

ஸாதிகாக்கா - //வேலை செய்கின்ற அம்மணிகளும் // ஆமா, ஃப்ரெண்ட் அதையும் சொன்னாள். மாட்டு வண்டியைக் காணோம்னு வருத்தப்படுறீங்க போல, மாமல்லபுரம் போனா டூரிஸ்டுகளுக்கு மாட்டு வண்டி சவாரி இருக்காம்.

//அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் மாப்பிள்ளையை அழைத்து வந்து //
”பொண்ணு வந்தா பொட்டு வண்டியில
மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்டியில”ன்னு ஒரு பாட்டு கேட்ட ஞாபகம்!! :-)))

ஹுஸைனம்மா said...

ஸ்டார்ஜன் - நீங்களும் கொசுவத்தி ஏத்திகிட்டீங்களா!! //பயணங்கள் இனிமையானவை// ஆமாம், ஆடி அசைஞ்சு வண்டி மெதுவாப் போனாலும், கதை பேசிகிட்டு போன பசுமையான நினைவுகள்.

ஜமால் - //அப்பல்லாம் நாந்தான் எங்க வீட்டுக் கணக்கப்பிள்ளை!!)
அதென்ன அப்ப!!! அப்பத்திலேர்ந்துன்னு சொல்லனும் ..//

இல்லீங்க, அப்ப மட்டும்தான் நான் கணக்குப் பிள்ளை. அப்ப கணக்குப் பாத்துப் போரடிச்சுப் போய் இருந்ததால், எங்க ரங்க்ஸ் என்கிட்ட கல்யாணத்துக்கடுத்த வாரம் கணக்குவேலையை ஒப்படைச்சப்போ ஏத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டேன். ஆனா, அது எவ்வளவு நல்லதாப்போச்சு தெரியுமா - எனக்குத்தான். பட்ஜெட் கவலையே இல்லாம, என்ன வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் வாங்கிட்டுவரச் சொல்லி ஆர்டர் போடலாம்!! :-))))))

ஹுஸைனம்மா said...

வித்யா - இங்கயும் சில பள்ளிகளில் பஸ் சார்ஜும், ஸ்கூல் ஃபீஸும் அப்படித்தான் இருக்கும்!!

யுவராணி தமிழரசன் - முதல் வருகைக்கும், தொடரப் போகும் வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க.

வல்லிம்மா - ஆஹா, உங்களுக்குன்னு தனி பஸ் விட்டாங்களா!! :-)))
அப்பல்லாம் எவ்ளோ தூரம் நட்ந்திருக்கோம் இல்லியா? இப்ப இந்தா இங்க எட்டி நடக்கறதுக்கு உடம்பு வணாங்கமாட்டேங்குது. :-))))

ஹுஸைனம்மா said...

பிரதாப் - //விசயம் ஒரு "அம்பது" வருச பழசுனாலும்// ஆமாண்டா பேராண்டி!! நீ ஃப்ளைட்ல போய் படிச்சிருப்ப, இல்ல?? :-)))))

ஹுஸைனம்மா said...

ரத்னவேல் சார் - மிக்க நன்றி சார், வருகைக்கும், கருத்துக்கும். தொடர்ந்து வாருங்கள்.

வெங்கட் - அநேகமா எல்லாருமே நடைராஜாக்கள்தான் போல!! :-)))

A & A - ரொம்ப நன்றிங்க. அந்தப் பேரை, காலைலருந்து யோசிச்சு மண்டையை உடைச்சுகிட்டிருந்தேன்!!

சிநேகிதன் அக்பர் said...

//முன்பக்கம் வண்டிக்காரர் பக்கத்தில் உக்கார ஆண்பிள்ளைகளுக்கு மட்டுமே அனுமதி. அந்த இருக்கைக்கு ஒரு பெயர் உண்டு, மறந்துவிட்டது. //

அதுக்கு பேர் கோஸ் பெட்டின்னு நினைக்கிறேன்.

எழுத்தும் மாட்டுவண்டி பயணம் போல சுவாரஸ்யமாக இருந்தது.

சுவனப்பிரியன் said...

சிறந்த பகிர்வு!

ஒண்ணாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை குதிரை வண்டியில் தான் எனது பயனம. எனது அத்தா வயலுக்கு குதிரை வண்டியில் போகும் போது என்னையும் அழைத்து செல்வார். பிறகு பள்ளி பக்கமானதால் ஐந்திலிருந்து ஒன்பது வரை நடை ராஜாதான். ஒன்பதாம் வகுப்புக்கு பிறகுதான் சைக்கிளே வாங்கி கொடுத்தார்கள்.

உங்களின் இந்த பதிவு எனது பழைய ஞாபகங்களை கிளறி விட்டது.

ஹேமா said...

எத்தனை பேர் அடிச்சாலும் தாங்குற ஆட்கள்போல எத்தனை பேரை திணிச்சாலும் அடக்கிக்கொள்ளும் இந்த ஆட்டோக்கள் !

சங்கர் நாராயண் @ Cable Sankar said...

இண்ட்ரஸ்டிங்

மோகன் குமார் said...

//வாழ்த்துக்கள் for Udanz - Star of the வீக்//

அப்படியா? சொல்லவே இல்ல? வாழ்த்துகள் !வாழ்த்துகள் !

கல்லூரிக்கு சொந்த ஆட்டோவில் போனது ஆச்சரியமான விஷயம் தான். பொதுவா யாரும் அப்படி செய்வதில்லை.

பதிவு திடீர்னு முடிஞ்சிட்ட மாதிரி இருக்கு

! சிவகுமார் ! said...

//இரண்டு பேர் சந்தித்தால், வால் ஸ்ட்ரீட், ஒபாமா, கன்கார்டியா, க்ரீஸ்& யூரோன்னு ‘வெட்டிப்பேச்சு’ பேசுறது ஆம்பளைங்கதான், பெண்கள் இல்லை, தெரிஞ்சுக்கோங்க!!)//

எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டு பெண்மணி வந்தா பேசுவாங்க பாருங்க.. "எதுக்கு முருங்கக்கா சாம்பாரா வக்கிறீங்க. முள்ளங்கி சாம்பார் வைங்களேன். அப்பறம் நேத்து நல்லிக்கு போனேன். ஏதோ அமலா பால் டிசைனர் சாரியாம்ல.." ஒரு மணி நேரம் பேசறாங்க. இதுக்கு என்ன சொல்றீங்க :))))

தமிழ் உதயம் said...

உங்களுக்கு மாட்டு வண்டி பயணம் என்றால் எங்களுக்கு குதிரை வண்டி பயணம். இப்போது ஆட்டோ ஸ்டாண்ட் இருப்பது குதிரை வண்டிக்கென்று ஸ்டாண்ட் (லாயம்) இருக்கும். பழைய நினைவுகளை கிளறி விட்டீர்கள்.

அமைதிச்சாரல் said...

தாத்தா வீட்டு மாட்டு வண்டிப் பயணத்தை நினைவு படுத்திருச்சு உங்க சுவாரஸ்யமான நினைவுகள்.

எங்கப்பா பைக்ல கொண்டு போயி விடறதாச் சொன்னாலும் அடம் பிடிச்சு நடராஜா சர்வீஸ்லதான் போனேன். வழி நெடுக வாசல்லேயே நமக்காக காத்துட்டுருக்கும் ஒவ்வொரு ஃப்ரெண்ட்ஸையும் பிக்கப் செஞ்சுக்கிட்டு, கும்பலா லொடலொடன்னு அரட்டையடிச்சுட்டு போற சுகம் வேற எதுலங்க வரும்!! காலேஜ் மட்டும்தான் பஸ்ஸில்..

ஹுஸைனம்மா said...

அக்பர் - உங்களுக்கும் மாட்டுவண்டி அனுபவம் இருக்கா? நன்றிங்க.

சுவனப்பிரியன் - குதிரை வண்டியா, நீங்க பெரிய பணக்காரங்க போல!! எங்க ஊர்ல பணக்காரங்ககூட ரெட்டை மாட்டு வண்டிதான் வச்சிருப்பாங்க.

ஹேமா - ஆமாப்பா, இந்த ஆட்டோக்களைப் பாத்தாப் பதறும்!!

ஹுஸைனம்மா said...

சங்கர் நாராயண் - நன்றி.

மோகன்குமார் - //அப்படியா? சொல்லவே இல்ல?// வெளம்பரம் பிடிக்காது, அதான்!! :-))))

//பதிவு திடீர்னு முடிஞ்சிட்ட மாதிரி//
காலேஜ் படிப்பு முடிஞ்சதோட கதையை முடிச்சிகிட்டேன், அதனாலய இருக்குமோ?

ஹுஸைனம்மா said...

! சிவகுமார் ! - //ஒரு மணி நேரம் பேசறாங்க. இதுக்கு என்ன சொல்றீங்க//
நம்மளைச் சுத்தி நடக்கிற, நமக்கும் தேவைப்படக்கூடிய விஷயத்தைப் பத்திதானே பேசறாங்க? நல்லதுதானே, அக்கம்பக்கத்து செய்திகளும் தெரிந்துகொள்ளப்பட வேண்டியவைதானே? :-))))

தமிழ் உதயம் - ஆமாங்க, குதிரை வண்டி ஸ்டாண்ட் பாத்த ஞாபகம் இருக்கு. ஆனா, எங்கூர்ல மாட்டு வண்டிக்குன்னு ஸ்டாண்ட் பாத்த ஞாபகம் இல்லை. அவங்கவங்க வீட்டு முன்னாடிதான் நிறுத்திக்குவாங்க.

அமைதிக்கா - ஆமாக்கா, ஃப்ரெண்ட்ஸோட பேசிகிட்டுப் போறதுல இருக்க சந்தோஷம் தனிதான். அதனாலத்தான் மாட்டு வண்டி பயணமும் மறக்க முடியாதது.

Jaleela Kamal said...

ஸ்கூல் நடக்கும் தூரம் தான்
ஆகையால் எங்கும் எப்போதும் வண்டி பிரச்சனைகிடையாது

ஆனால் மற்ற இடங்களுக்கு முன்பு ஆட்டோவுக்கு பதில் ரிக்‌ஷா அதற்கு முன் குதிரை வண்டி
அதுவும் சூப்ப்ராக இருக்கும்

கோமதி அரசு said...

மாட்டு வண்டி மலரும் நினைவுகள் அருமை.

சித்திரவீதிக்காரன் said...

மாட்டுவண்டியில் பயணிக்கும் பாக்கியம் எனக்கு சிலமுறை கிடைத்திருக்கிறது. இப்பொழுதுள்ள குழந்தைகள் மாட்டுவண்டிப்பயணத்தை திரைப்படங்களில் பார்த்தால்தான் உண்டு. ஆட்டோவில் பிதுங்கிசெல்லும் இன்றைய தலைமுறையைப் பார்த்தால் பாவமாயிருக்கிறது. பகிர்விற்கு நன்றி.

shaik said...

Mattu vandiyil payanitha sugathai Air France il Paris iku payanitha pothu kidaika villai

shaik said...

mattu vandi yil payanitha sugathai Air France il Paris iku ponapothu kodukavillai

இமா said...

சின்ன வயதில் ஆசைப்பட்டிருக்கிறேன். ஸ்கூலுக்கு பிள்ளைகளி ஏற்றி வரும் வண்டி குதிரை வண்டி ரேஞ்ச்ல அழகா கலர்கலரா பெய்ன்ட் செய்து இருக்கும். என் கண்ணுக்கு அந்த மாடே குதிரையாகத் தெரியும். ;D

இன்றுவரை மாட்டுவண்டியில் ஏறக் கிடைக்கவேயில்லை. ;(
ஆனால்... உங்கள் கட்டுரை படித்தபின் ஏறிய திருப்தி கிடைச்சாச்சு.