Pages

Gகத்தாமா - 1
என் பெரியவனுக்கு இரண்டேமுக்கால் வயது ஆனதும், அதுவரை என்னுள் உறங்கிகொண்டிருந்த ’பட்டதாரி’ முழித்துக் கொள்ள, நான் இருக்கும் அபுதாபியிலேயே வேலை தேட ஆரம்பித்தேன். அதற்குரிய முன்னேற்பாடுகளாய், முதலில் மகனை ‘ப்ளே ஸ்கூலில்’ சேர்த்துவிட்டு,   மதியம் ஸ்கூல் விட்டு வந்த பின் அவனைக் கவனித்துக் கொள்ள வேலைக்கு ஒரு பெண்ணைத் தேட ஆரம்பித்தேன். தனியே மகனோடு வீட்டில் இருக்க வேண்டும் என்பதால், நம்பிக்கையான ஆள் வெண்டுமே!! அதனால், பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்காமல், தெரிந்தவர்கள் மூலம் தேடிக்கொள்ள நினைத்தோம்.  இந்தியாவில் இருந்தால் யாரிடமாவது பொறுப்பைப் பகிரலாம்.  இங்கே வெளிநாட்டில் அம்மா, மாமியார், அல்லது கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் என்று எல்லாருக்கும் பகரமாவது பணிப்பெண்தான்!!

தொடருமுன், அமீரக வீட்டுப்பணியாளர்கள் மார்க்கெட் நிலவரங்களைப் பார்ப்போம்.  அரபு நாடுகளில் பணிப்பெண்களை “Gகத்தாமா” என்பார்கள்.  இந்நாட்டு குடிமகன்களைப் போலவே, வெளிநாட்டினரும் தம் சொந்த ஸ்பான்ஸர்ஷிப்பில் வேலையாட்கள் வைத்துக் கொள்ளலாம். ஆனால், அதற்கான செலவுகளைத் தாக்குப் பிடிக்க முடிந்த பணக்கார expats மட்டுமே வைத்துக் கொள்வார்கள். அப்படியென்ன செலவு? Non-refundable deposit மற்றும் விஸா கட்டணங்கள், விஸாவுக்கான மருத்துவப் பரிசோதனைச் செலவு என்று வருடம் ஒன்றிற்கு - 7000 திர்ஹம்கள் வரை (ரூ. 1 லடசம்) ஆகும். பணிப்பெண் இந்தியர் என்றால், இந்திய தூதரகத்தில் 10,000 திர்ஹம்கள் refundable deposit. மேலும், ஸ்பான்ஸர் செலவில் உணவு, உறைவிடம், சிம்கார்டுடன் செல்ஃபோன் ஆகியவற்றுடன் இந்தியச் சட்டப்படி அவருக்கு 1100 திர்ஹம்கள் மாதச்சம்பளமும் தரப்பட வேண்டும்.

ஏன் இத்தனை காஸ்ட்லி என்றால், அதற்குக் காரணமும் நம்மவர்கள்தான்!! அறிந்தோர், தெரிந்தோரையெல்லாம் காசு வாங்கிகிட்டோ, வாங்காமலோ Maid விஸாவில் அமீரகம் அழைத்து வருவதனால் வந்த வினை. இவர்கள் செய்யும் தவறால், கஷ்டப்படுவது அவசியத்தில் இருப்பவர்களே. இத்தனைச் செலவுகளும் செய்வதற்கு ஒன்று அவர் அரபியாக இருக்கவேண்டும்; அல்லது மிகப் பெரியப் பொறுப்பில் இருப்பவராக இருக்க வேண்டும்.  குடும்பத் தேவைகள் கருதி அவசியத் தேவைகளைக் கூட மிச்சம் பிடித்து, “ஷேரிங்” முறையில் ஒரு வீட்டின் ஒரே அறையில் பிள்ளை, குட்டிகளுடன் குடித்தனம் நடத்தும் மிடில் க்ளாஸ் குடும்பங்களே இங்கே அதிகம். அவர்கள் இத்தனைச் செலவுக்கும் எங்கே போவார்கள்? அதனால், அவர்கள் தேடுவது, “ஃப்ரீ விஸா” பணிப்பெண்களை!! அதென்ன ஃப்ரீ விஸா?

மேற்சொன்ன அத்தனைச் செலவுகளையும் செய்து ஒருவரால் (இவர் ஸ்பான்ஸர் என்று அழைக்கப்படுவார்) அழைத்து வரப்பட்ட ஒரு பணிப்பெண், அழைத்து வரப்பட்ட அந்தக் குடும்பத்திற்கு வேலை செய்யாமல், வெளியாட்களுக்கு வேலை செய்வதுதான் ஃப்ரீ விஸா!! இது எப்படி சாத்தியம்?  ஒன்று, அந்தப் பணிப்பெண், தம் ஸ்பான்ஸருடன்  ஒரு வாய்மொழி ஒப்பந்தம் செய்து கொள்வார், ’விஸாவுக்கானச் செலவைத்  தந்துவிடுகிறேன். ஆனால், வெளியே தனிப்பட்ட முறையில் வேலை செய்துகொள்கிறேன்’ என்று.   

இரண்டாவது முறை: மேற்சொன்ன முறையில் ஸ்பான்ஸருக்குப் பணம் தரவேண்டுமே, அந்தச் செலவைத் தவிர்க்க இந்த முறை. அதாவது, கொஞ்ச நாள் ஸ்பான்ஸர் குடும்பத்தில் சிலகாலம் வேலை செய்யவேண்டியது. பிறகு, அவர்கள் அசந்த நேரத்தில், வெளியேயுள்ள தம் நண்பர்கள் உதவியோடு வீட்டை வெட்டு வெளியேறி, வெளியே தங்கிக்கொண்டு, வேலை தேடிக்கொள்ள வேண்டியது.

சரி, ஸ்பான்ஸரைத் தவிர இன்னொருவருக்கு வேலை செய்வது சட்டப்படி தவறில்லையா? குற்றம்தான். ஆனாலும், போலிசில் பிடிபட்டால், தண்டனையெல்லாம் பெரிதாக ஒன்றுமில்லை.  அவரது ஸ்பான்ஸரைத் தேடிக் கண்டுபிடித்து, அவரிடமிருந்தே, இப்பணிப்பெண்ணுக்கான டிக்கட் தொகையை வசூலிக்கும்வரை, அரசாங்கச் செலவில் ஜெயிலில் சிலநாட்கள் வைத்திருப்பார்கள். ஸ்பான்ஸர் செலவிலேயே விஸாவைக் கேன்ஸல் செய்துவிட்டு, டிக்கட்டும் வாங்கி, ராஜமரியாதையோடு - அதான் போலீஸ் காவலோடு - விமான நிலையம் கூட்டிவந்து, விமானத்தில் ஏற்றியும் விடுவார்கள்!! மேலும், இவர்களை (சட்டத்திற்குப் புறம்பாக) வேலைக்கு வைத்திருந்தார்களே அவர்களுக்கு 50,000 திர்ஹம் அபராதம்!! ஆக, அந்தப் பணிப்பெண்ணுக்கோ ஒரு செலவுமில்லை - விஸாவும் ஃப்ரீ, டிக்கட்டும் ஃப்ரீ, இடைப்பட்ட காலத்தில் சம்பாதித்த பணமும் கிடைச்ச மாதிரி ஆச்சு!! இங்கே வீட்டு வேலைக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஏன் மிக அதிகம் என்பதன் சூட்சுமம் இதுதான்.

முதல் முறையாக அரபுநாடுகளுக்கு வேலைக்கு வருபவர்களில், பெரும்பாலும் அதிகப் பணிச்சுமை, சம்பளம் தராதது போன்ற காரணங்கள் இருந்தால் மட்டுமே ஸ்பான்ஸர் வீட்டைவிட்டு வெளியேறுபவர். அப்படி வெளியேறினாலும், அதிர்ச்சியடைந்த நிலையில் இருக்கும் இவர்களது நோக்கம் எப்படியாவது ஊர் போய் சேர்ந்தால் போதும் என்பதாகத்தான் இருக்கும் என்பதால், பிறர் உதவியுடன் நேராகத் தம் நாட்டு தூதரகத்திற்கோ அல்லது காவல் நிலையத்திற்கோதான் செல்வார்கள். இப்படி வெளியே வேலைபார்க்க முன்வருவது மிக அரிது.

ஏற்கனவே ஒரு ஸ்பான்ஸர் குடும்பத்தில் பல வருடங்கள் வேலைபார்த்து அனுபவம் பெற்றவர்கள், தம் நண்பர்கள் மூலம் வெளிமார்க்கெட் நிலவரத்தைக் கண்டு, இங்கிருந்து வெளியேறினால் நிறையச் சம்பாதிக்கலாம் என்று மனப்பால் குடித்து, வெளியேறுவதே அதிகம் நடக்கிறது. பின்னர், அது வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த கதையாகி விடுகிறது. ஏனெனில்,  ஸ்பான்ஸரோடு இருந்த வரை, உணவு, உறைவிடம், உடை, அத்தியாவசியப் பொருட்கள், டிக்கெட், டாக்டர் செலவு எல்லாமே கிடைத்துவிடும்.  ஏன் ஃபோன் செலவுகூட பெரும்பாலும் அவர்களே தந்துவிடுவார்கள். வெளியே வந்தா, தனிக்குடித்தனம் வந்த கதையாக, வரவுக்கு மிஞ்சிய செலவு ஆகும்கிறதை பின்னர்தான் உணர்கிறார்கள்.  

சரி, இப்ப என் கதைக்கு வருவோம்.  அங்கேயிங்கே விசாரித்து, சில மாதங்களில் ஒரு (நண்பரின்) நண்பர் வீட்டில் வேலை செய்துவந்த இலங்கைத் தமிழரான ஸ்டெல்லா,  வேறு வேலை தேடிக்கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இவர் நான் சொன்ன முதலாம் வகை ஃப்ரீ விஸாவில் - அதாவது, ஸ்பான்ஸர் அனுமதியோடு - வெளியே வேலை செய்பவர். அவர் அமீரகம் வந்து (அப்போதே) 16 வருடங்கள் - அதுவும் ஒரே ஸ்பான்ஸரின் விஸாவில்தான் - ஆகிவிட்டது என்பது எனக்கு ஆச்சர்யத் தகவல்.

அப்படியே ஆறு வருடங்கள் என்னோடு இருந்தார். (வந்து செல்வார்).  பின்னர், என் கணவரின் பணி இட மாறுதல் காரணமாய் வேறு ஊர் சென்றபோது, என் வேலையையும் விட நேர்ந்தது. ஸ்டெல்லாவும் வேறு வேலை தேடிக்கொண்டார். பின்னர் மீண்டும் அபுதாபி வந்து, மீண்டும் வேலை+பணிப்பெண் தேடும் படலம் ஆரம்பித்தபோது, அவரைத்தான் முதலில் தொடர்பு கொண்டேன். என்னைவிட்டுப் போனதிலிருந்து, ஒரு மலையாளக் குடும்பத்தோடு இருப்பதாகவும், திடீரென அவர்களைவிட்டு வருவது முறையல்லவே என்றும் வருத்தம் தெரிவித்தார்.

பிறகு, நண்பர்களிடம் விசாரித்தும் ஆள் கிட்டாததால், பேப்பரில் விளம்பரம் கொடுத்து, (யப்பா... விளம்பரம் வெளிவந்த முணுநாளும் என் ஃபோனுக்கு ஓய்வில்லை!!) அதன்மூலம் ஒரே வருடத்தில் மூன்று பேர் அமைந்தும், மாறியும் விட்டார்கள்.மூவருமே ஃப்ரீ விஸாக்காரர்கள்தான்.

பிறகு என்ன செய்தேன்? நாளை தொடரும்....
Gகத்தாமா - 2

Post Comment

16 comments:

RAMVI said...

அரபு நாடுகளின் Gகத்தம்மா பற்றி சுவாரசியமான விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.தொடர்ந்து படிக்க காத்திருக்கிறேன்.

பாச மலர் / Paasa Malar said...

கதாம்மா என்ற மலையாளப் படம் ஒன்று வந்கது பார்த்தீர்களா? சவூதிப் பின்னணியில் ஒரு பணிப்பெண் படும் கஷ்டங்கள்...சவூதியில் நடைபெறுவது போலக் காட்டினார்கள்..ஆனல் களம் சவூதி இல்லை.வேறு எதோ வளைகுடா நாடு...

Free visa பணிப்பெண் கொண்டு வந்து, மாட்டிக்கொண்டு முழித்தவர்களும் ஏராளம்...உங்கள் பதிவைப் பார்த்ததும் இங்கே பலரும் சந்தித்த அனுபவங்கள் நினைவுக்கு வருகின்றன...

ஸ்ரீராம். said...

தெரியாத தகவல்கள். இதற்கு இத்தனை கஷ்டமா என்று மலைப்ப்பாயத்தான் இருக்கிறது. தொடருங்கள்.

மோகன் குமார் said...

//அரபு நாடுகளின் Gகத்தம்மா பற்றி சுவாரசியமான விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.//

Yes. I too wanted to tell the same thing.

கோவை2தில்லி said...

Gகத்தம்மாவை வேலைக்கு வைத்துக் கொள்வதற்கும் இவ்வளவு விஷயங்கள் இருக்கா!!!!

ஆச்சரியமா இருக்கு....

இந்த வார யூடான்ஸ் நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்.

மாதேவி said...

சுவாரஸ்யமான தகவல்கள். தொடருங்கள்....

வெங்கட் நாகராஜ் said...

தெரியாத விஷயங்கள்....

இத்தனை இருக்கிறதா இந்த Gகத்தம்மா-வில்....

தொடருங்கள்....

அமைதி அப்பா said...

அங்கு குடும்பம் நடத்துவது இவ்வளவு கஷ்டமா?

கீதமஞ்சரி said...

மிகத் தெளிவான விவரங்கள் தந்து விளக்குவது பலருக்கும் பயனுள்ளதாகவும் இருக்கும். தொடர்ந்து வரும் அனுபவப்பகிர்வுக்காகக் காத்திருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

மகன் வீட்டில் வேலைசெய்பவர் ஒரு அரபி ஸ்பான்சர் வழியாக துபாய் வந்தவர்.அங்கேயும் வேலை முடித்துவிட்டு இன்னும் மூன்று இடங்களில் வேலைபார்க்கும் ஸ்ரீலன்கன் பெண். 23 வருடங்களாக உழைக்கிறார்.
காலியில் ஜுமைரா விட்டுக் கிளம்பினால் இரவு பத்துமணிக்குத்தான் வீட்டுக்குச் செல்வார். :(

ஸாதிகா said...

அங்கு வேலைக்கு ஆள் வைக்க இத்தனை பார்மலிடீஸா?
என் உறவினர் குடும்பம் சிங்கப்பூரில் உள்ளது.அங்கு ஹவுஸ் மெயிட் வைத்துக்கொள்வதைப்பற்றி கதை கதையாக சொல்லி கேட்டு இருக்கின்றேன்.

ஹுஸைனம்மா said...

ராம்வி -நன்றி.

பாச மலர் - அந்தப் படம் நானும் பார்த்து, பரிதாபப்பட்டிருக்கீறேன். இந்தப் பிரச்னைக்கு இன்னொரு பக்கமும் உண்டு என்று சொல்லத்தான் இந்தப் பதிவு.
நன்றி அக்கா.

ஸ்ரீராம் - ஆமா, நிறைய பேருக்கு இங்குள்ள விஸா ஃபார்மாலிட்டீஸ் தெரிவதில்லை.

மோகன் - நன்றி.

ஹுஸைனம்மா said...

கோவை2தில்லி - ஆமாப்பா, இங்கே பணியாளர்கள் வச்சுக்கணும்னா - அது வீட்டு வேலையானாலும், அலுவலகமானாலும் நிறைய கடுமையான விதிமுறைகள் இருக்கு.
வாழ்த்துக்கும் நன்றி.

மாதேவி - நன்றி.

வெங்கட் - நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

ஹுஸைனம்மா said...

அமைதி அப்பா - இங்கு குடும்பம் நடத்துவதில் சிரமம் இல்லை. ஆனால், பெண்கள் வேலைக்குப் போகணும்னா சிரமங்கள் உண்டு.

கீத மஞ்சரி - நன்றிங்க.

வல்லிம்மா - 23 வருடங்களா? நல்ல சூழ்நிலையில் இருப்பதால்தானே இத்தனைக் காலங்கள் இங்கு இருக்கிறார், இல்லியா?

நானும் நிறைய பேர் இதுபோல் சொல்லக் கேட்டு இருக்கிறேன். பார்க், பீச்சுக்குப் போனால், அரபிகள் குடும்பத்துடன் வரும் பணிப்பெண்கள் தமிழ்காரர்கள் என்றால், பேச்சு கொடுப்பதுண்டு. எல்லாரும் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள், அறிந்தவரை.
நன்றிம்மா.

Jaleela Kamal said...

ஸ்பான்சர் செய்து வேலைக்காரிகளை அழைப்பது ரொம்ப சிரமம் தான், ஆனால் அவர்கள் வந்து கொஞ்ச நாளில்
அவர்கள் ரொம்ப தெரியமாக வெளியில் வேலை பார்க்க கிளம்பி விடுகீறாரக்ள்

வடுவூர் குமார் said...

நல்ல விபரங்கள். சில மாத காலம் மட்டுமே இருந்ததால் இந்த விதிமுறைகளை பற்றி அவ்வளவு அறிந்திருக்கவில்லை.