Pages

விடைபெறுகிறேன் - 3





தலைப்பைக் கண்டு பதறவும் வேண்டாம்,  மனசுக்குள் ரகஸியமாகக் கொண்டாடவும் வேண்டாம். தலைப்பிற்கானக் காரணம் கீழே!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார் என்ற வழக்காடலில், இனி ‘வீட்டை மாற்றிப் பார்’ என்பதையும் சேத்துக்கணும்!! 

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

”ஏன் இப்படி லொட்டு லொசுக்கு சாமான்களையெல்லாம் சேத்து வச்சுருக்கீங்க? பெரிய்ய மெக்கானிக்னு நெனப்பு!! எந்த காலத்துல இதெல்லாம் தேவைப்பட்டுச்சு? இத்தோட தூக்கிப் போடுங்க. புதுவீட்டுக்கும் இதைத் தூக்கிட்டு வந்து இடத்தை அடைக்காதீங்க!!”

“நீயுந்தான் கிச்சன் சாமான்கள் எவ்ளோ சேத்து வச்சிருக்கே? !! ”போகாத போருக்கு இத்தனை ஆயுதம் தேவையா?”ன்னு நான் உன்னைக் கேட்டேனா?”

“!!!!!!!!!!!!?????.....”

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

”கிச்சன்ல இவ்வளவு இடம் இருக்குல்ல, அப்புறம் ஏன் மிக்ஸியை மூலையில கொண்டு வைக்கச் சொல்ற? அந்தப் பக்கமே வைக்கிறேன்.”

“சொல்றதைக் கேளுங்க. இத்தனை வருஷமா சமைக்கிறேன், எனக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரியும்?”

“ஏன், வாஸ்துப்படி ’மிக்ஸி மூலை’ அதுவா?”

 ”ஸ்ஸப்பா...  விடமாட்டீங்களே... ஓரமா வச்சாத்தான், மிக்ஸி அரைக்கும்போது தண்ணி அதிகமாகி வெளியே தெறிச்சாலும் இந்தக் கார்னரை மட்டும் சுத்தம் பண்ணாப் போதும். நட்ட நடுவுல வச்சா, எல்லாப் பக்கமும் தெறிச்சு, கழுவி விடுறது பெரிய வேலையாகிடும்”

‘இதான் உன் அனுபவ அறிவா?’ - இது அவர் மைண்ட் வாய்ஸ்!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

“இந்த அலமாரித் தட்டுகளைக் கொஞ்சம் ஈரத்துணியால் துடைச்சுத் தாங்களேன்”

“நீயே துடைச்சிடு. நான் தொடச்சா, சரியா தூசி போகலைன்னு சொல்லுவே.”

“சரி, பெரிய பெட்டியில் இருக்கற சாமான்களை இந்த ஷெல்ஃபில அடுக்கிடுங்க”

அலமாரியையும், பெட்டியையும் சில நொடிகள் ஆராய்ந்தவர், “இல்லே நீயே வச்சுடு. நான் வச்சா அப்புறம் அது சரியில்ல, இது இப்படி வைக்கணும்னு எதாவது சொல்லுவே...”

“க்ர்ர்ர்.... சரி, போய்ச் சாப்பிடுங்க..”

போனவர் உடனே திரும்பி வர... ”என்னாச்சு... சாப்பிடலையா?”

“இப்ப சாப்பிட்டா, என்னை வேலை செய்ய விட்டுட்டு, நீங்க மட்டும் சாப்பிட்டீங்களான்னு திட்டுவே. நீ வர்ற வரை நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன். அப்புறம் சாப்பிடுவோம்.”

“!!!!!!!!!!!!?????.....”

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 "நாந்தான் வருவேன்ல... அதுக்குள்ள நீ ஏன் பெட்டியெல்லாம் தூக்கி வச்சுகிட்டு இருக்க...”

“என்கிட்ட சொல்றதுதானே... நான் வந்து கிரைண்டர் தூக்கித் தந்திருப்பேனே....”

கரெக்டாகக் கடைசிப் பாத்திரம் கழுவும்போது ஓடிவந்து, “தள்ளு, தள்ளு.. .நான் கழுவித் தர்றேன்...”

”நான் இங்கதானே இருக்கேன். சொல்லிருந்தேன்னா ஃபோன் பேசும்போதே அப்படியே துணி காயப் போட்டிருப்பேன்ல...”

தமிழ் சினிமாவுல போலீஸ் வேஷத்துக்குப் படு பொருத்தமான ஆளு இவர்தான்!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஒருவழியா புதுவீட்டில் செட்டிலாகி,  ஆற அமரக் கையக் காலை நீட்டி உக்காரத்தான் ஆரம்பிச்சேன்... அதுக்குள்ளே ஊருக்குப் போய்ட்டு வரலாம்னு ஐடியா வந்துடுச்சு.... அடுத்த பரபரப்புகள் ஆரம்பம்.... வீடு மாத்துறதைவிட இவை மஹா டென்ஷன் தரக்கூடியவை.  தலைப்புக்குக் காரணம் இதுதான்!!

ஆமா, என்னவோ வாரம் ரெண்டு பதிவு எழுதுற மாதிரி ‘விடைபெறுகிறேன்’னு பந்தா வேறயான்னு நினைப்பீங்க. கல்யாணம் ஆன புதுசுல அம்மா வீட்டுக்கு அடிக்கடி போய்ட்டு வருவோம். அதுவே வருஷங்கள் பல கழிந்த பின், அரிதாகிவிடும். இருந்தாலும் அந்த அரிதான சந்திப்புதான் அருமையானதாக இருக்கும். அதுபோலத்தான், ஃபேஸ்புக்கில் என்னதான் எழுதினாலும், வலைப்பதிவில் எழுதியது போன்ற திருப்தி வருவதில்லை.

அப்புறம், அதென்ன தொடர்கதை மாதிரி 1,2ன்னு நம்பர்னு கேக்குறீங்களா? அதுக்குக் காரணம் இங்கே இருக்கு!!

இறைவனருளால், போய் வந்து சந்திப்போம்!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Post Comment

முகவரி






பேப்பர்காரருக்குச் சொல்லியாச்சு
ஃபோனுக்குச் சொல்லியாச்சு
இண்டர்நெட்டுக்கும் சொல்லியாச்சு
ஸ்கூல் பஸ்ஸுக்குச் சொல்லியாச்சு
தண்ணிகேனுக்குக்கூடச் சொல்லியாச்சு

வீட்டுக்கு வந்த உறவுகளுக்கும்
இதுவரை வராத, இனி வரப்போகும்
உறவுகளுக்கும் சொல்லியாச்சு
இனியும் வரும் எண்ணமில்லாத
அன்புள்ளங்களுக்கும் சொல்லியாச்சு

தினந்தினம் தவறாமல் வந்து
என் கையால் உண்டு
என்னோடு கதைபலப் பேசி
களித்துச் சிரித்து மகிழ்ந்த
என் அருமைச் செல்லங்களே

உங்களுக்கு எப்படிச் சொல்லிப்
புரியவைப்பேன்
என் புது வீட்டு முகவரியை..........



Post Comment

பசுமை நிறைந்த நினைவுகளே!!






தொடர்புடைய பதிவுகள்:

 இதற்குத்தானே ஆசைப்பட்டாய்.... 
பார்வைகள்

என் முதல் தோட்டத்தின் ஒரு பகுதி
 
 சுமார் 17 வருடங்களுக்கு முன் அமீரகம் வந்தபோது வசித்த முதல் வீட்டில்,  தோட்டவளத்துறையில் பணிபுரிந்த உறவினர் ஒருவர் பரிசளித்த செடிகள், கொடுத்த ஆலோசனைகளால், என் “முதல் தோட்டம்” உருவானது!!

வீடு முழுக்க செடிகளால் நிறைந்து பார்க்கவே மனதுக்கு இதமாகஇருக்கும்.  எல்லாரும்  அலங்காரப் பொருட்கள், நகை, புடவைன்னு ஷாப்பிங் போனா,  என் ஷாப்பிங்கோ, செடிகொடி, தொட்டி, மண் என்று இருக்கும். ‘விசித்திரமான பிறவி’ன்னு எங்கூட்டுக்கார் நினைச்சிருப்பார்.  ஆனாலும், செலவு குறைவா இருந்ததால ஆரம்பத்துல விட்டுட்டார்.

ஆனா, அந்தத் தொல்லை தொடர ஆரம்பிச்சு, ‘சிறுதுளி பெரு வெள்ளமா’ முழுக வைக்கும் லெவலில் போகத் தொடங்கவும்... வீட்டுக்குள்ள தொட்டி வாங்கிவச்சா சரிவராது, உனக்கு தோட்டம் இருக்கிற வீட்டுக்கே குடிவைக்கிறேன்னு சொல்லி அழைச்சுட்டுப் போனார். பாத்தா ஆளேயில்லாத ஒரு குக்கிராமத்துல பங்களா மாதிரி வீடு!!  தோட்டத்துக்காக அதையும் சகிச்சுகிட்டு இருந்ததுல அஞ்சு வருஷம் போனதே தெரியலை!!


கிராமத்துத் தோட்டம்.. நகரத்தில் பால்கனித் தோட்டம்...
அஞ்சு வருஷம் கழிச்சு, வீட்டைக் காலி பண்ண மாட்டேன்னு நானே சொல்லுமளவு தோட்டம், துரவு, வேம்பு, அகத்தி, கருவேப்பிலை, முருங்கை, வெண்டை, தக்காளி, லவ் பேர்ட்ஸ், முயல், ஊஞ்சல்னு ஒரு  மினி-ஜமீன்தாரிணியா வாழ்ந்த வசந்த காலம்!! பொறுக்குமா.... மறுபடி ஒரு ஃப்ளாட்டுக்குள்ள பிடிச்சுப் போட்டுட்டாங்க. அங்கயும் பால்கனில செடிகள் வச்சிருந்தேன், ஆனா, சுற்றுவட்டார கட்டுமானப் பணிகளால் செடிகள் எல்லாம் போயிடுச்சு!! :-(((

தோட்ட ஆசை மறுபடி தலைதூக்க... அடிச்சுப் பிடிச்சு இந்த வீட்டுக்கு வந்தோம்.  புறநகர்ப்பகுதியில் இருந்தாலும் விஸ்தாரமான வீடு, சுற்றி தோட்டம் வைக்க நிறைய இடம்,  முன்னாடி விளையாட இடம், ஊஞ்சல்... எல்லாத்தையும்விட  பார்க்கிங் பிரச்னை இல்லை!! என்னவரின் உதவியால், வெறும்தரையாக இருந்த தோட்டத்தில், மண் மாற்றி,  காய்கறிக் கழிவுகளைக் கொண்டு வளப்படுத்தி அப்படி இப்படின்னு,  மூணு வருஷத்துல இப்பத்தான் முருங்கை, வேப்பிலைனு நாங்க வெச்ச கன்றுகள் மரமாகி வருது... இப்ப மறுபடியும் ‘பெட்டியைக் கட்டு’ன்னுட்டார்!!!


வேப்பங்கொழுந்துக்கு பஞ்சமில்லை!
இதனருகில் காலையில் தேனீக்கள் கூட்டம் மொய்க்கும்!!
வலது ஓரத்தில் கற்பூரவல்லி...

முன்பு ஜமீந்தாரிணி என்றால், இம்முறை ‘பண்ணையாரம்மா’வாகக் கொடிகட்டிப் பறந்தேன். ’ஜன்னலைத் திறந்தால் வேப்பமரக்காற்று’ என்ற என் இலட்சியம் இந்த வீட்டில் நிறைவேறியது. சொந்த மண்ணில் சொந்தமாக ஒரு விளைநிலம் என்பது இதுவரை கனவாகவே இருப்பதால், கிடைத்த இந்த வாய்ப்பை  முழுதாக அனுபவித்தேன். இறைவனுக்கே எல்லாப் புகழும்.


Damas tree பிண்ணனியில்...
மரம் வளர்க்கும் ஆசையில், இங்கே சமீபகாலமாக அதிகம் வளர்க்கப்படும் ‘டமாஸ்’ என்ற மரக்கன்றுகளையும் வாங்கி நட்டுவைத்தோம். அசுர வேகத்தில் வளர்ந்த அவற்றை ஆச்சரியத்தோடு பார்த்தபோதுதான், செய்தி தெரிந்தது. இதுவும் சென்ற பதிவில் நாம் பார்த்த ‘யூகலிப்டஸ்’ மரம்போல, வேர்கள் ஆழமாகச் சென்று நீரை கபளீகரம் பண்ணுமாம். இருந்தாலும், வளர்ந்து நிழல் தரும் மரத்தை வெட்ட மனசில்லாமல் தவித்த நிலையில், வீட்டு ஓனர், காலி செய்யுமுன் அந்த மரங்களை வெட்டச் சொல்லி ஆணையிட்டார்!! அவர் கவலை நிலத்தடி நீரைக் குறித்தல்ல, அந்த மரம் அதிகமாக இலைகள் உதிர்க்கிறதாம்!! வெட்டிட்டோம்... :-(

இரண்டு தங்கைகளும், ஒரு கஸினும் இதே ஏரியாவில் இருப்பதால், அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பும் இருந்தது. இந்த வீட்டை விட்டுப் போவதால், இந்த வாய்ப்பும் குறையும் வருத்தமும்.
தொட்டிகளில் ‘சேமிப்பு’!!

இந்தச் செடி பூக்கும்னே தெரியாது; ஃப்ரீயா கிடைச்சதால், சும்மா அலங்காரத்துக்கு வச்சிருந்தோம். திடீர்னு போன வாரம் இதில் ஒரு அழகான பூ!! செடிக்கு பேரேல்லாம் தெரியாது. (ராமலக்ஷ்மிக்காவுக்குத் தெரிஞ்சுருக்கலாம்! :-) )

கரத்தினுள் குடியேறணும் என்ற அவசியத்தால் தோட்ட ஆசை மீண்டும் கனவாகும் நிலை. நகரமையத்தில் கிடைக்கும் வீட்டில் தோட்டத்தைவிட பார்க்கிங்கிற்கு இடம் இருந்தால் போதும் என்ற நிலையாகிவிட்டது!! என்றாலும்,  தொட்டிகளில் செடிகள் வைத்துக் கொள்ளலாம் என்பதால் முடிந்த வரை தொட்டிச் செடிகளைச் சேகரித்திருக்கிறேன்.  இப்போப் பார்த்திருப்பதும் நல்ல வீடுதான் என்றாலும், வீட்டு ஓனர் பக்கத்து வீட்டிலேயே குடியிருக்கிறார் என்பதுதான் கொஞ்சம் கிலியேற்படுத்துகிறது!! எந்த நாடானால் என்ன, ஹவுஸ்  ஓனர்கள் ஒரே மாதிரிதான்ப்பா இருக்காங்க!


ந்த பதினேழு வருட அமீரக வாசத்தில், எனக்கு அண்டைவீட்டுக்காரர்கள் என்ற ஒன்று வாய்த்ததே இல்லை. எப்போதும் பக்கத்து வீடுகளில் கம்பெனி அல்லது பேச்சிலர்ஸ்தான் இருப்பார்கள். பகல்முழுதும் தனிமை, அமைதிதான்!  இந்த வீடும் அப்படித்தான், ஆனாலும் பகல் நேரத்தில் தனியே இருக்கிறோம் என்ற நினைவே வரவிடாத அளவு பறவைகள் ஒலி இருந்துகொண்டே இருக்கும்! காலை எழுந்தது முதல் மாலை மங்கும் வரை  “கீச்.. மூச்... கிய்யா.. முய்யா...” என்று விதவிதமாகச் சத்தங்கள் கேட்டுக் கொண்டே இருக்கும். மரங்களைவிட இதைத்தான் நான் அதிகம் மிஸ் பண்ணுவேன்!!


Post Comment

தங்கத்தாவரம்







”பணங்காய்க்கும் மரம்”னு கேள்விப்பட்டிருப்போம். நிஜத்துல அப்படி பணம் மரத்துல காய்க்காதுன்னாலும், பணப்பயிர்களையோ, பணம் சம்பாதிக்கும் ஆட்களையோ இப்படிக் குறிப்பிடுவதுண்டு. “இங்க பணம் என்ன மரத்துலயா காய்க்குது?” என்பதும் பிரபல சொல்வழக்கு.

பணம் மரத்தில் காய்ப்பதில்லைதான்; ஆனா, தங்கம் மரத்தில் காய்க்குதாம்!! நிஜம்மாத்தான் சொல்றேங்க!!

ஸ்திரேலியாவில் ஆராய்ச்சிக்காக, விஞ்ஞானிகள் சில மரங்களைப் பரிசோதித்தபோது அவற்றின் இலைகளில் தங்கம் படிந்திருந்ததைக் கண்டறிந்தார்கள். மேலும் ஆராய்ந்தபோது, வறட்சி காலத்தில் தண்ணீரைத் தேடி  மரத்தின் வேர்கள் பூமியின் ஆழத்திற்கு நீண்டபோது, அங்கு இருந்த  கனிமங்களிலிலிருந்து தங்கத்தையும் நீரோடு சேர்த்து உறிஞ்சி, இலைகளுக்குக் கடத்தியுள்ளன. அத்தங்கத்தினால் மரத்திற்குப் பயன் இல்லை என்பதால், அதை இலை வழியாக வெளியேற்ற முயற்சித்ததில் அவை இலைகளில் படிந்துள்ளன.



http://www.nature.com/ncomms/2013/131022/ncomms3614/full/ncomms3614.html

அவ்வாறு ஒரு மரத்தில் படிந்துள்ள தங்கத்தின் அளவு, ஒரு மனித முடியில் ஐந்தில் ஒரு பங்குதான் இருக்குமாம்!!  குறைந்தது ஐநூறு மரங்களாவது இருந்தால்தான், ஒரு மோதிரத்திற்கான தங்கம் கிடைக்குமாம்.

டனே, அடுத்த அக்‌ஷய திரிதியைக்கு ”தங்க மரம்” வாங்குங்கன்னு நகைக்கடைகளுக்குப் போட்டியா ‘ஈமு ஃபார்ம்ஸ்’ பார்ட்டிகள் கடைபோட ஐடியா செய்வதற்குமுன் ஒரு தகவல்:  எல்லா மரங்களிலும் இப்படிக் கிடைக்காது. எங்கு பூமிக்கடியில் தங்கம் இருக்க வாய்ப்பிருக்கிறதோ, அங்குதான் - அதுவும் வேர் ஆழமாகச் செல்லக்கூடிய யூகலிப்டஸ் போன்ற மரங்கள் வைத்தால் மட்டுமே - இது சாத்தியம். 

மேலும் இது தங்கத்திற்கு மட்டுமல்ல, எல்லாவகையான கனிமங்களுக்கும் பொருந்தும். பொதுவாகவே ஒரு இடத்தில் கிடைக்கும் தண்ணீரும், காய்கனிகளும் பூமியின் தன்மையைத்தானே பிரதிபலிக்கும். இங்கு தங்கம் நிறைய இருந்ததால், தங்கம். 

ந்தக் கண்டுபிடிப்பு விஞ்ஞான உலகில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். ஏனெனில்,  Oil exploration, Mineral mining போன்ற துறைகளில்  அகழ்வாராய்தல்தான் பெருத்த செலவு பிடிக்கும் பணி.  அதனாலேயே பல ஆராய்ச்சிகளுக்கு ஸ்பான்ஸர் கிடைக்காமல், தடைபடுகின்றன. இனி, இம்மாதிரி மரங்களின்மூலம்,  அவற்றினடியில் உள்ள பூமியில் என்ன வகையான கனிமம் இருக்கின்றன என்று நிச்சயப்படுத்திக் கொள்வது சுலபமாகிவிடுகிறது.  செலவு கணிசமாகக் குறைந்துவிடும் என்பதால்,  பயனுள்ள ஆராய்ச்சிகள் அதிகமாகலாம். 

ன்னொரு விஷயம் பாத்தீங்கன்னா, இக்கண்டுபிடிப்பில் பங்காற்றியவை  யூகலிப்டஸ் மரங்கள். இவற்றின் வேர்கள், சுமார் 30 மீட்டர்கள் ஆழத்தையும் தாண்டி நீண்டு நெடிந்து செல்லும் தன்மை உடையவை என்பதால்தான் இது சாத்தியமானது.  தமிழகத்திலும் யூகலிப்டஸ் மரங்கள் ஊட்டி/கொடைக்கானல் பகுதிகளில் உண்டு.  பல வருடங்களுக்குமுன்பே, ஒரு பத்திரிகையில் (கல்கண்டு என்று ஞாபகம்) இவற்றின் வேர்களின் நீருறிஞ்சும் தன்மையின் அபாயத்தினால், நிலத்தடி நீர்மட்டம் குறையும் என்று எச்சரித்திருந்தது.

தற்போது இந்தக் கண்டுப்பிடிப்பின்மூலம் அது உண்மையென நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் சீமைக்கருவேல மரத்திற்கு இருக்கும் எதிர்ப்பில் சிறிதளவுகூட இதற்கு இல்லையென்பது ஆச்சரியமே.

தே ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள், இந்தக் கண்டுபிடிப்பை தம் ஆராய்ச்சி மையங்களின் பசுமைக் குடில்களில், இப்பரிசோதனையை யூகலிப்டஸ் மற்றும்
கருவேல வகை (Acacia aneura) மரங்களைக் கொண்டு மீண்டும் செய்துபார்த்து உறுதிபடுத்தியிருக்கிறார்கள்.  

இப்பரிசோதனையில் கருவேல வகை (
Acacia) மரத்தை ஏன் எடுத்துக் கொள்ளக் காரணம், பொதுவாகவே வறட்சி நிலத்தில் அதிகம் காணப்படும் இந்த Acacia வகை மரங்கள் நிலத்தடி நீரை ஆழமாகச் சென்று அதிகம் உறிஞ்சும் தன்மை கொண்டவை.  


சீமைக் கருவேல மரம்
கருவேல மரம்


ஒருவகைக் கருவேலமரமான  Acacia nilotica தமிழகத்தில் மிகுந்து காணப்படுகிறது!!   ஆனால், ஆஸ்திரேலியாவில், நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சியெடுத்து, சூழலியல் ஏற்றத்தாழ்வு (ecological imbalance)  மூலம் பல்லுயிர்ப்பெருக்கத்திற்கு அச்சுறுத்தல் உண்டாக்குவதால், இந்த கருவேல மரத்தை  “களைச்செடி” - Pest என்று அறிவித்து அவற்றை முழுமையாக அழிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார்கள்!!

(இந்த  கருவேல மரமும் Acacia nilotica,  சமீபகாலமாக தமிழகத்தில் பரவலாக எதிர்ப்பைக் கிளப்பியிருக்கும் “சீமைக்கருவேல மரம் - Prosopis juliflora, வேறுவேறு என்றாலும் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும்).

”என்னாச்சு உனக்கு? மரத்தில தங்கம்னு ஆரம்பிச்சு, சுத்தி வளைச்சு யூகலிப்டஸ், கருவேல மரம்னு வந்தாச்சு; இப்ப என்னதான் சொல்ல வர்றே”ன்னு ஏன் சலிச்சுக்கிறீங்க? ஒருவேளை உங்க கனவுல புதையல் காக்கும் பூதம் வந்து தங்கம் இருக்குதுன்னு சொன்னால்,  சத்தங்காட்டாம, அந்த நிலத்தை வளைச்சுப் போட்டு  இந்த மரங்களை வளர்க்க ஆரம்பிச்சிடுங்க!! யாருக்கும் பங்கு கொடுக்காம, எந்தச் சந்தேகமும் வராம நீங்க மட்டும் தங்கத்தை அனுபவிக்கலாம்னு சொல்ல வந்தேன்... ஹூம்... நல்லதுக்குக் காலமில்ல!!

Post Comment

சீசாவுக்குள் சுனாமி





மீபத்தில் ஒரு ஆங்கில வார இதழில், ஒரு எழுத்தாளர் விமானப் பயணங்களில் குழந்தைகள் இல்லாமலிருந்தால் எவ்வளவு நல்லாருக்கும் என்று எழுதிருந்தார். கொஞ்சம் நெருடலாக இருந்தாலும், அதற்குச் சில வாரங்கள் கழித்து, பிரிட்டனில் பொதுமக்களிடம் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் ‘குழந்தைகள் இல்லாத (child-free) விமானத்தில்’ பயணிப்பதற்காக அதிகக் கட்டணம் கொடுக்கவும் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தது அதிர்ச்சியளிக்கவில்லை.  நீண்ட தூர பிரயாணங்களில் அனுபவிச்சவங்களுக்குத் தெ/புரியும்.

என்னதான் ‘குழந்தையும் தெய்வமும் ஒன்று’, ‘குழலினிது யாழினிது என்பர் மழலை சொல் கேளாதோர்’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும்,  ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பது குழந்தைகளின் சேட்டைகளுக்கும் பொருந்தும்.

ரு பட்டிமன்ற நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். கலை நிகழ்ச்சிகள், வந்திருந்த பெரியவர்களின் பேச்சு எல்லாம் முடிஞ்சு, ‘இந்திய நேர ஒழுங்கின்படி’, பட்டிமன்றம் ஆரம்பிக்கிறதுக்கே இரவு 9 மணிபோல ஆகிடுச்சு!! நிறைய தம்பதிகள் தத்தம் கைக்குழந்தைகள் மற்றும் சிறுவர்களோடு வந்திருந்தார்கள். 

ஆரம்பத்தில கொஞ்ச நேரம் அலுங்காமல், நலுங்காமல் சமர்த்தாக இருந்த குழந்தைகள், கொஞ்சம் கொஞ்சமா கசமுசன்னு ஆரம்பிச்சு, ஓடியாடி, விழுந்து எந்திரிச்சு, அப்படியே சரியா பட்டிமன்றம் ஆரம்பிக்கும்போது அநேகமா எல்லாக் குழந்தைகளுமே சோர்வு, எரிச்சல், பசி ஆகியவற்றால் அழவும், சிலர் தரையில் உருண்டு அடம்பிடிக்கவும் ஆரம்பிக்க, பெரிய களேபரமா ஆகிடுச்சு!! சில பெற்றோர்கள் பட்டிமன்றத்தைச் சரியா கேட்க முடியாத எரிச்சலிலும், மற்றவர்களுக்கு இடையூறாக ஆகிவிட்ட கோபத்திலும் அங்கேயே குழந்தைகளை அடிக்கவும் செய்தார்கள்.



என் மனதில் எழுந்த கேள்வி இதுதான்: இந்த மாதிரி நிகழ்ச்சிகள் முடியுறதுக்கு குறைந்த பட்சம் மூணு மணிநேரம் ஆகும்னு எல்லாராலயும் சுலபமா ஊகிக்க முடியும். அத்தனை நேரம் நம் குழந்தைகள் அமைதியாக, பொறுமையாக இருப்பார்களா என்று பெற்றோருக்குத் தெரியாதா என்ன? அதிலும் குழந்தைகளுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத இடத்தில் எப்படி குழந்தைகள் அமைதி காப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும்? இப்போதைய பெற்றோர்கள் இந்த குறைந்த பட்ச அறிவு/அனுபவம்கூடவா இல்லாமல் இருக்கிறார்கள் என்று ஆச்சரியமாக உள்ளது.
          
ந்த மாதிரி நிகழ்ச்சிகளை விடுங்க - இவையாவது கொஞ்சம் காற்றோட்டமா, வெளிச்சமா இருக்கிற இடத்தில் நடக்கும். சினிமா தியேட்டர்கள்?? அங்கயும் கைக்குழந்தை முதல் எல்லா வயசு வரை பிள்ளைகளை அழைத்துச் செல்கிறார்கள். அழும் குழந்தைகளால் அவர்களுக்கும் கஷ்டம், மற்றவர்களும் ‘நாங்களும் காசு கொடுத்துத்தான் பார்க்க வந்திருக்கோம்’ என்று சண்டைக்கு வருவார்கள். முக்கால்வாசி நேரம், குழந்தையை வைத்துக் கொண்டு இருவரில் ஒருவர் - பெரும்பாலும் அப்பாதான் - வெளியே நிற்பார். இதுக்கு, பிள்ளைய வச்சுகிட்டு வீட்டிலேயே அவர் இருந்திருந்தால், டிக்கட் காசோடு நிம்மதியும் மிஞ்சியிருக்கும்.

இதைவிடக் கொடுமை, பயங்கர வன்முறைக் காட்சிகள் நிறைந்த படத்திற்கு சிறுவர்களையும் அழைத்து வருவது! எப்படி முடியுது இவங்களால?

ருசில பெற்றோர்களிடம் பேசியபோது அவர்கள் சொல்லும் காரணங்கள், ’நாங்க தனியா இருக்கோம், பிள்ளைகளை வீட்டில் பாத்துக்க ஆளில்லை’ என்பது.  சரி, குழந்தைகள் வளரும்வரை இந்த மாதிரி நிகழ்ச்சிகளெல்லாம் தவிர்க்கலாமே என்றால்,  ‘எங்களுக்கும் ஒரு பொழுதுபோக்கு, ரிலாக்ஸ் பண்ணிக்க வழி வேண்டாமா?’ என்று நம்மை முறைக்கிறார்கள். அட அப்பாம்மாக்களே, போற இடத்துல குழந்தைகள் இப்படி அழுது அழிச்சாட்டியம் பண்ணி வைக்கும்போது இருக்குற நிம்மதியும்ல போய்த் தொலையும்?

’அங்கெல்லாம் நாங்க போறதில்லை; பிரார்த்தனைக் கூடங்களுக்கு மட்டுமே போகிறோம். அங்கு எங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்வதன்மூலம் அவர்களைச் சிறுவயதிலேயே ஆன்மீகத்தில் பழக்குகிறோம்’ என்கிறீர்களா?  எந்த இடமானால் என்ன, குழந்தைகளுக்குச் சுவாரசியமான விஷயங்கள் இல்லாத இடம் என்றால், அரைமணி அமைதியாக இருந்தாலே அதிசயம்தான்!

அறியாப் பிள்ளைகளை அதிக நேரம் பிடிக்கும் பிரார்த்தனைகள், ஆன்மீகச் சொற்பொழிவு நடக்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்வதும் தவிர்க்க வேண்டியதே. உங்கள் குழந்தைகளின் “tolerance point" உங்களுக்கு நிச்சயம் தெரியும். அதைச் சோதனைக்குள்ளாக்கி, அமைதி நாடி அங்கு வந்திருக்கும் மற்றவர்களின் நிம்மதியையும் பொறுமையையும் சோதிக்காதீர்கள். சட்டப்படி இதற்குத் தடை இல்லை என்றாலும், நமக்கென்று சில சுய கட்டுப்பாடுகள் வேண்டும்.

மனக்கிலேசத்துடன் வருபவர்கள் எத்தனையோ பேர்.. அவர்களுக்கு மன அமைதி கிடைக்கக்கூடிய இடத்தில் நம்மால் பங்கம் நேரலாமா? நம்மை அவர்களின் இடத்தில் வைத்துப் பார்த்தால்தான் இது புரியும்.

னில், குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு இதற்கெல்லாம் உரிமை இல்லையா என்ற கேள்வி வரும். நமக்கு உரிமை இருக்கிறதென்பதற்காக, மற்றவர்களுக்கும் இருக்கும் உரிமைக்கு ஊறு விளைவிக்கக் கூடாது.   கைக்குழந்தைகள் இருக்கும்போது, நம் உணவுப் பழக்கங்களில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருக்கவில்லையா? அதுபோலத்தான் இதுவும் சில வருடங்களுக்கு.  ஏன், பல தாய்மார்களுக்கு மருத்துவர்கள் நோய்த் தடுப்பிற்காக ”பலர் கூடும் பொது இடங்களுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லாதீர்கள்” என்று அறிவுறுத்தினால்  தவறாமல் பின்பற்றத்தானே செய்கிறோம்!!

சரி, அப்படின்னா குழந்தை இருக்குதுங்கிறதுக்காக நாங்க எங்கயுமே போகக்கூடாதாவென்றால், அப்படியில்லை. குழந்தைகளுக்கும் பிரியமான இடங்களுக்கு - பூங்கா, விளையாட்டு மைதானங்கள், உறவுகளின்/பள்ளித் தோழர்களின் வீடுகள் - இப்படியான இடங்களுக்கு அதிகம் செல்லலாம் .  அழைத்துச் சென்றேயாக வேண்டிய இடங்களுக்கு, உரிய தயாரிப்போடு செல்லுங்கள்.  செல்லும்முன்பே சிறுவர்களுக்கு அறிவுறுத்தி அழைத்துச் செல்லலாம். அங்கே சென்றபின் அவர்கள் நேரம் செலவிடும்படியாக சிறு விளையாட்டுப் பொருட்களை உடன் எடுத்துச் செல்லலாம். நசநசவென ஆகிவிடாத உணவுப் பண்டங்கள் வைத்துக் கொள்ளலாம்.

 
                           
 
ந்த விஷயத்தைக் குழந்தைகளின் தரப்பிலிருந்து பெற்றோர்கள் பார்க்கத் தவறிவிடுகின்றனர். நம்ம வீட்டிலேயே ஒரு இடத்தில் அரைமணிக்குமேல் இருக்க முடியாத பிராயத்திலுள்ளவர்களை பொது நிகழ்ச்சிகள், சினிமாக்கள், ஆன்மீகச் சொற்பொழிவுகளில் அமைதியாக இருக்கவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? அட, எத்தனை பேருக்கு, தம் குழந்தைகளை ஒரு இடத்தில் அமரவைத்து சாப்பாடு கொடுக்கவோ, ஹோம்வொர்க் முழுதுவதையும் எழுத வைக்கவோ முடிகிறது?

இப்பேர்ப்பட்ட குழந்தைகளை, நமக்கு (மட்டும்) பிடித்தமான இடங்களுக்கு அழைத்துச் சென்று,  கட்டிப்போட்டதுபோல மணிக்கணக்கில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முறையா? குழந்தைகளை ஒரு அறைக்குள் அடைப்பதும், சுனாமியை சீசாவுக்குள் அடைப்பதும் ஒன்றுதான்.

Post Comment

மீளவியலாக் குழி





ப்போ ஒரு எம்.ஆர்.ஐ. எடுத்துப் பாத்துடுவோமா?” – டாக்டர்.
ஆயாசமாயிருந்தது எனக்கு. இதுதான் நடக்கும் என்று தெரிந்திருந்தாலும், ஏதாவது அதிசயம் நடந்து, இது நடந்துவிடாமல் இருக்கக்கூடாதா என்ற எதிர்பார்ப்பு-நப்பாசை எதிர்பார்த்ததுபோலவே பொய்த்தது.  “அது… வந்து… எம்.ஆர்.ஐ.யேதான் எடுக்கணுமா டாக்டர்?” என்ற என்னை, ‘பெட்ரோமாக்ஸேதான் வேண்டுமா’ என்று கேட்டதுபோல டாக்டர் முறைத்தார். நான் மௌனமாகத் தலைகுனிந்து, இன்ஷ்யூரன்ஸ் ஃபார்மை வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன்.

எம்.ஆர்.ஐ.யின் அதிகக் கட்டணத்திற்காகப் புலம்புகிறேன் என்று நினைத்தால், இல்லை, பணமல்ல பிரச்னை. பயம்!! எம்.ஆர்.ஐ. என்பது என்னவென்றே தெரிந்திராத அதிர்ஷ்டக்காரர்கள் நீங்கள், அதுதான் உங்கள் உதட்டில் எள்ளல் புன்னகை வருகிறது. விளக்கியபின் சிரிக்கிறீர்களா பார்ப்போம்.


 
 
வீராணம் குழாய் தெரியுமல்லவா?  அதில் ஒரு காலேகால்வாசி அளவில் விட்டமுள்ள ஒரு எட்டடி அடி நீளத்துண்டை வெட்டி எடுத்ததுபோல ஒரு குழாய் இருக்கும். ஒருபுறம் மட்டும் திறந்திருக்கும்; மறுபுறம் மூடியிருக்குமோ இல்லை சுவற்றை ஒட்டி இருப்பதால் மூடியதுபோலத் தோன்றுமோ என்னவோ. குழாய் மிகச்சிறிதாய், ஒரே ஒருவர் மட்டும் உள்ளே படுக்க முடியும் என்பதாகத்தான் இருக்கும். அந்த வளையத்தினுள் போய் வரும்படி ஒரு தானியங்கி படுக்கை இருக்கும். உடலில் ஸ்கேன் எடுக்க வேண்டிய பகுதி அந்த வளையப் பகுதியினுள் இருக்குமாறு நோயாளி படுக்க வைக்கப்படுவார். உடலின் உட்பகுதிகளைப் படம்பிடிக்க காந்த அலைகள் பயன்படுத்தப்படுவதால் சி.டி. ஸ்கேன், எக்ஸ்-ரே போல கதிர்வீச்சு அபாயம் சிறிதும் இல்லை.

அந்தப் படுக்கையில் படுக்க வைத்து, ஆளை ‘உள்ளே’ அனுப்பி விடுவார்கள். படம் பிடிக்கும்போது கடகடா, குடுகுடுவென்று ஏதோ ஹைதர்காலத்து மோட்டார் ஓடுவதுபோல நாராசமாய்ச் சத்தங்கள் கேட்கும். அதுவும் சுமார் 20 முதல் 40 நிமிடங்களுக்கு!! முடியும்வரை ஆடாமல், அசையாமல் படுத்திருக்க வேண்டும் – மூச்சுகூட மெதுவாத்தான் விடணும். அசைஞ்சா போச்!! மறுபடியும் ’முதல்லேர்ந்து’ ஆரம்பிக்கணும்.

ப்படியான எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துவரத்தான் நானும் இன்று வந்திருக்கிறேன். வழக்கம்போல முதலில் ஏஸியை ஆஃப் பண்ணச் சொல்லிவிட்டேன். சும்மாவே பயம். இதிலே ஏஸியும் சேர்ந்து, உள்ளே இருக்கும்போது, ஏதோ ‘ஃப்ரீஸர் பாக்ஸ்ல’ இருக்கிற எஃபெக்ட் தரும்!! வழக்கம்போலவே கம்பளிப் போர்வையையும் கேட்டுவாங்கி கழுத்துவரை போர்த்திக் கொண்டேன்.  மூஞ்சிமேலே  ப்ளாஸ்டிக்கில் கிளிக்கூண்டு மாதிரி ஒண்ணைப் போட்டுவிடுவாங்க. அதுதான் உடலின் படங்களைக் சேகரிப்பதால், அது இல்லாம முடியாதாம்.

                           

வழக்கம்போல, கையில் ஒரு பஸ்ஸரைத் தந்து, ஏதாவது பிரச்னைன்னா அழுத்தணும்னு சொன்னாங்க. இப்பவே அழுத்தி, நான் போமாட்டேன்னு சொல்லலாமான்னு இருந்துது. வழக்கம்போல “எவ்ரிதிங் ஓக்கே?”ன்னு அவங்களே கேள்வியும் கேட்டுகிட்டு, அவங்களே “ஓக்கே”ன்னு பதிலும் சொல்லிகிட்டு, கையாட்டி ‘உள்ளே’ அனுப்பிவச்சாங்க. நான் படுத்திருக்கும் படுக்கை உள்ளே செல்லச் செல்ல, ரேடியாலஜிஸ்ட்டும், நர்ஸும் தூரத்தில் சென்று, பின் போயே விட்டார்கள்.  இனி நான் மட்டுமே இங்கு.

மிஷின் ஓட ஆரம்பித்தது. ‘கடகடா, குடுகுடு’ டமாரம் போலச் சத்தம். இதுக்குத்தான் முதல்லயே காதில ஹெட்ஃபோன் மாட்டிக்கிறியான்னு கேட்டாங்க, நாந்தான் மாட்டேனுட்டேன். எப்பப் பாத்தாலும் காதுல செவிட்டு மிஷின் மாதிரி ஹெட்போன் மாட்டி பாட்டு கேக்கிறவங்களைப் பாத்தாலே பத்திகிட்டு வரும். ரோட்ல நடக்கும்போதுகூட காதுல பாட்டு அல்லது ஃபோன்!! சுற்றியுள்ள உலகமும், அதன் ஓசைகளும் இதைவிட சுவாரசியமானது என்பது ஏன் இவர்களுக்குப் புரியவில்லையோ?

அப்ப நீயும் இந்த ‘கடமுடா’ சவுண்டை ரசிக்கத்தான் ஹெட்ஃபோனை வேண்டாமுன்னு சொல்லிட்டியான்னு கேட்பீங்க. இல்லை, ‘உள்ளே’ இருக்கும்போது வெளியே என்ன நடக்குது என்பதற்கு ‘காது’ ஒன்றுதான் ஒரே தொடர்பு சாதனம்.  ஹெட்ஃபோன் மாட்டினால், வெளியே ஏதாவது நடந்துதுன்னா எனக்கு எப்படிச் சத்தம் கேட்கும்? ஒருவேளை கரண்ட் கட்டானால் என்ன செய்வார்கள்? ச்சே… இது என்ன தமிழ்நாடா? இங்கே துபாயிலெல்லாம் கரண்ட் கட்டே கிடையாது. அப்படியே டெக்னிக்கல் ஃபால்ட் என்றாலும், உடனே தானியங்கி ஜெனரேட்டர்கள் இயங்கத் தொடங்கும்.

ள்ளே’ பேச்சுத் துணைக்கு யாருமில்லை என்பதால், என் மனதோடே பேசிக்கொள்ள ஆரம்பித்தேன். கரண்ட் கட் கூடப் பிரச்னையில்லை. நான் படுத்திருக்கும் படுக்கையை, ஒருவேளை கையாலேயே இழுத்து என்னை ’வெளியே’ எடுத்துவிடுவார்கள் என நம்பலாம். ஒருவேளை பூகம்பம் வந்தால்? தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுவார்களா, என்னைப் பார்ப்பார்களா?  மனமே அடங்கு! மற்றவங்களை விடு, வெளியே கவலையோடு நிற்கும் என்னவர் மீது கூடவா நம்பிக்கையில்லை? அது.. அப்படியில்லை, இருந்தாலும்…

பேசாதே.. அமைதியாய் இறைவனை நினை.  ஆமாம்.. ஆமாம், அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை.  சின்னக் குழாய் என்றாலும், இந்தக் குழாய்க்குள் பளிச்சென வெளிச்சமாய் இருக்கிறது. இதேபோல மரணத்துக்குப்பின் அடக்கம் செய்வார்களே, அந்தக் குழியில்? கடும் இருட்டாக இருக்குமே? உடல் மரணித்திருந்தாலும், உயிர் – ஆத்மா, ’உயிர்ப்போடு’ இருக்குமே.  இப்போ துணைக்கு ஆள் வெளியே நிற்கும்போதே பதறுகிறேனே, அப்போ என்னைமட்டும் தன்னந்தனியா விட்டுட்டு எல்லாரும் – என்னவர் உட்பட- போய்விடுவார்களே, அப்போ என்ன செய்வேன்? நல்லவர்கள் என்றால், அந்தக் குழி விசாலமாய் இருக்குமாம். அதுவே கெட்டவர்கள் என்றால், குழி குறுகிப் போய் உடலை நெருக்குவதில் எலும்புகளே உடைந்துவிடுமாமே? நான் நல்லவளா, கெட்டவளா? செய்த தவறுகள் அத்தனையும் இப்போ நினைவுக்கு வருகிறதே… அய்யோ… துடிக்கும் துடிப்பில் இதயம் வெளியே தெறித்துவிடும் போல இருக்கிறதே!!

இறைவசனங்களைச் சொல்லிக் கொண்டேன். ’ஆல் இஸ் வெல்’லாக ஒரு ஆசுவாசம் கிட்டியது. கையில் இருக்கும் ‘பஸ்ஸரை’ அழுத்திவிடாதபடிக்கு ஒருமுறை இறுகப் பிடித்து, என் கையில் அது இருப்பதை உறுதி செய்துகொண்டேன். அது இருப்பது ஒரு தைரியம்.  பஸ்ஸர் அல்லது பெல் என்று பேர் வைத்திருந்தாலும், பார்ப்பதற்கு இரத்த அழுத்த மானியில், கைப்பட்டையில் காற்றடித்து ஏற்றுவதற்கு ஒரு பச்சை பல்பு போல இருக்குமே அதுபோலவே இருக்கும் ரப்பரால் செய்யப்பட்ட கையடக்கக் குமிழ். அதன் ஒரு முனையிலிருந்து நீண்ட ஒரு வயர் இணைக்கப்பட்டிருக்கும். அதுதான் மின் இணைப்பாக இருக்கும்போல.

தற்குமுன் பல முறை எம்.ஆர்.ஐ. எடுத்திருந்தாலும், இந்த முறை கொஞ்சம் அதிகமாகவேப் படபடவென்றிருக்கிறது. கடைசியாக எடுத்து ஐந்தாறு வருடங்கள் ஆகிவிட்டது என்பதால் ஏற்பட்ட நீண்ட இடைவெளிதான் காரணமோ என்னவோ.  கண்களை மட்டும்தான் அசைக்கலாம். அப்படிச் சுற்றிச் சுழற்றிப் பார்க்க அந்தக் குழாய்க்குள்  என்ன இருக்கிறது? முன்பு வழமையாக ஸ்கேன் எடுத்துவந்த ஸ்கேன் சென்டரின் எம்.ஆர்.ஐ. மெஷினுள், நோயாளியின் மேல்பக்கம் ஒரு கண்ணாடி இருக்கும். அதில் தெரியும் நோயாளியின் முகம், ஸ்கேன் மெஷினை இயக்குபவருக்கும் முன் திரையில் தெரியும். இதில் அப்படியொன்றையும் காணோம். அந்தக் கண்ணாடி இருந்தாலாவது அதில் நம் முகத்தையே முறைத்துப் பார்த்துக் கொள்ளலாம். அது இல்லாததும் ஒரு ஆசுவாசம்தான். இல்லைன்னா, என் முகத்தில் அப்பியிருக்கும் பயத்தை ரேடியாலஜிஸ்டும் பார்ப்பாரே!!

கொஞ்சம் அசைந்தாலும் எல்லாமே ”ரிப்பீட்டு” என்பதால் அப்போது யாரேனும் கிச்சுகிச்சு காட்டியிருந்தால்கூட அசைந்திருக்க மாட்டேன். முதல்முதலாய் எம்.ஆர்.ஐ. எடுக்கும்போது ஸ்கேனின் நடுவில் ‘கான்ட்ராஸ்ட்’ ஊசி போடும்போது, ரேடியாலஜிஸ்டிடம் ‘கொஞ்சம் எழுந்து உக்காந்துக்கிறேனே, வலி தாங்க முடியவில்லை’ என்று சொன்னபோது,  “இல்லைம்மா, இப்ப நீங்க அசைஞ்சா முதல்லருந்து மறுபடி ஆரம்பிக்கணும்’ அவர் சொன்னப்ப “அய்யோ, வேண்டாம்”ன்னு அலறினது ஞாபகம் வந்தது.

அசையாமல் இருப்பது என்றதும் சின்னம்மா சொன்னது நினைவு வந்தது.  உறவினர் ஒருவரின் திடீர் மரணம் குறித்துப் பேசியபோது, ’ஒருநாளும் படுக்கையில் கிடந்துவிடக்கூடாது. கடைசி வரை கைகால் சுகத்தோடே இருந்துட்டுப் போய்டணும்’ என்று நான் சொல்ல, சாச்சி அந்த எண்ணம் கூடாதென்றார். அதாவது ‘நேற்றிருந்தான் இன்றில்லை’ என்று போவதைவிட, உடல்நலமில்லாமலோ அல்லது மூப்படைந்தோ மரணத்தை எதிர்பார்த்திருந்து மரணிப்பதுதான் சிறந்ததாம். ஏனென்றால், இனி மரணம்தான் விடுதலை தரும் என்ற நிலையில் இருக்கும்போதுதான் மனிதனுக்கு அதுவரைத் தான்  வாழ்ந்த வாழ்வைத் திரும்பிப்பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. பரிட்சை எழுதிமுடித்ததும், மாணவன் தன் விடைத்தாளைச் சரிபார்ப்பது போல, தன் நல்லது கெட்டதுகளை உணர்ந்து, வருந்தி தவறிழைக்கப்பட்டவரிடமும், இறைவனிடமும் மன்னிப்பு கேட்க ஒரு வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வானாயின், மரணத்தைப் பயமின்றி எதிர்கொள்ள முடியலாம். இதுவே அகால மரணம் என்றால், அந்த மனிதனுக்குத் தன் தவறுகளை முழுமையாக உணரக் கிடைக்காமலே போய்விடுகிறது.

அது சரிதான், ஆனாலும்… என்று இழுத்தபோது சொன்னார். எது நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ அதுவே நடக்கும். ஒருவேளை படுக்கையில் இருக்கும் நிலை வாய்த்தால் அதிலும் நன்மையை எதிர்பார்த்து ஏற்றுக் கொள்ளவேண்டுமே தவிர, இப்படியாகிவிட்டதே என்று மருகக் கூடாது. ’இருந்தாலும், மத்தவங்களுக்குச் சிரமம்தானே…’ என்றதும் சின்னம்மா சொன்னார், ‘எப்படி இருந்தவர் இப்படிக் கிடந்துவிட்டார் என்று எண்ணிப் பார்த்து, இருப்பவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தனக்கும் இதுபோல எதுவும் நேர்ந்தால், தன்னை எப்படிக் கவனிக்க வேண்டும் என்று தன் குடும்பத்தினருக்குப் பாடம் எடுப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டும். அவருக்கானப் பணிவிடைகளின் சிரமங்களால், தாமும் இந்நிலை அடையாதிருக்க உணவு, வாழ்க்கைமுறைகளைக் கட்டுப்படுத்தி உடல்நிலை பேண வேண்டும் என்கிற அக்கறை வரும்’. தாத்தா இறந்ததும், அவர் உணவுண்ட அலுமினியத் தட்டை, பேரன் தன் தந்தைக்கெனப் பத்திரப்படுத்திய கதை ஞாபகம் வந்தது.

ண்ணவோட்டங்களில் முங்கிப் போயிருந்த ‘கடமுடா’ சத்தம், மீண்டும் காதுகளைத் துளைத்தது. கையில் இருந்த பஸ்ஸரை தடவிக் கொண்டேன்.  சமீப காலமாக யாரும் வீட்டில் வைத்து இறந்ததாகக் கேள்விப்பட்ட நினைவில்லை. அந்த ஆஸ்பத்திரி ஐஸியூவில், இந்த ஆஸ்பத்திரி ஆபரேஷன் தியேட்டரில்.. இப்படித்தான் கேள்விப்படுகிறேன். முன்காலங்களில், ஆஸ்பத்திரிகளில் ஒரு கட்டம் வரை சிகிச்சை செய்து முயன்றுபார்த்துவிட்டு, ‘இன்னும் ஒரு வாரம்தான் தாங்கும். வீட்டுக்குக் கொண்டுபோயிடுங்க’ என்று சொல்வார்கள். இப்போ எந்த மருத்துவமனையில் அப்படிச் சொல்கிறார்கள்?

முன்பெல்லாம், அப்படி இறுதி நிமிடங்களில் இருப்பவர்களே ‘என்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுங்க’ என்பார்களாம். சொல்லக் கேட்டிருக்கிறேன். அதேபோல வீட்டில் வைத்து, இறைவசனங்களைப் படித்துக் காட்டுவதும், புனித நீரை வாயில் ஊற்றுவதும் என அமைதியானச் சூழல் இருக்கும். இந்துமதத்தினர், இத்தருணத்தில் உறவினர்களைக் கொண்டு அவரது வாயில் பால் ஊற்றச் சொல்வார்களாம். கிறிஸ்தவர்களும் பைபிள் வசனங்களைப் படிப்பார்களாயிருக்கும். பள்ளியில் உடன் படித்த ரோஸி ஷரோன் தன் அண்ணன் விபத்தில் உயிரிழந்தபோது, இறுதிச் சடங்குகளின் ஃபோட்டோ ஆல்பம் என்று கொண்டுவந்து பள்ளியில் காண்பித்தபோது, இதையெல்லாமா படம்பிடிப்பார்கள் என்று அதிர்ச்சியாக இருந்தது.  பிறகு சில திரைப்படங்களிலும் அப்படியானக் காட்சிகளைப் பார்த்தபிறகு இது இறந்தவர்களின் நினைவாகப் பலரால் பின்பற்றப்படும் வழக்கம் என்று புரிந்தது.

மருத்துவ முன்னேற்றங்கள் மனிதர்களின் ஆயுளைக் கூட்டியிருந்தாலும்,  அவனின் இறுதி நிமிடங்களை அமைதியாகக் கடக்க உதவுகிறதா என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எப்படியாவது உயிர் பிழைக்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையை உறவினர்களுக்கு ஊட்டி, நோயாளியைப் பல பரிசோதனைகள், சிகிச்சைகள் என்று செய்வதைப் பார்க்கும்போது, ஏற்கனவே பரிதவித்துக் கொண்டிருக்கும் நோயாளியை மேலும்மேலும் துன்பங்களுக்கு உள்ளாக்குகின்றோமோ என்ற குற்ற உணர்வைத்தான் ஏற்படுத்துகிறது. அதேசமயம், மீண்டுவிடவும் வாய்ப்பிருப்பதால், இச்சிகிச்சைகளை வேண்டாமெனச் சொல்லவும் மனது துணிவதில்லை.  இருதலைக்கொள்ளி எறும்பாய் அலைபாயும் உறவுகள். மருத்துவரே வேண்டாமெனச் சொல்லிவிட்டால் நம் மனம் ஏற்கலாம். அப்படிச் சொல்லாவிட்டால், பணம் பிடுங்கும் உத்தி என்று அவருக்கும் பழிச்சொல். ஒருவேளைச் சொல்லிவிட்டாலோ, வேற நல்ல டாக்டராப் பாக்கலாம்பா என்று தூண்டிவிடவும் சிலர்.

எப்படியோ, பிறக்கும்போதும் போராடிப் பிறக்கும் மனிதன், இறக்கும்போது போராடித்தான் போகவேண்டியிருக்கிறது. அப்படிப் போனபிறகாவது உடனே அனுப்பி வைக்கிறார்களா? அதற்கும் இப்போது ஃப்ரீஸர் பாக்ஸ்!! அமெரிக்காவிலிருந்து மகன், லண்டனிலிருந்து மகள், துபாயிலிருந்து பேரன், ஆஸ்திரேலியாவிலிருந்து தம்பி என்று பிணமான பின்னும் ஒவ்வொருக்காய்க் காத்திருப்பு!!

சரி, நான் இந்த இடத்தில் இருந்தால் என்ன செய்வேன்? இறந்தவுடன் இறுதிச் சடங்குகள் செய்துவிடுங்கள், யாருக்காகவும் காத்திருக்க வேண்டாம் என்று முன்பே சொல்லிவிடுவேனா? இதைச் சொல்லிவிடலாம். ஆனால், இறுதி நிமிடங்களில் என்னைக் காப்பாற்றும் முயற்சிகள் வேண்டாம் என்று சொல்வேனா? வாழும் ஆசை அப்போதும் விட்டுவிடுமா என்னை? ப்ச்.. இதெல்லாம் இப்போ எதுக்குத் தேவையில்லாம யோசிச்சுகிட்டு… பேசாம இறைதியானத்தில் மனதைச் செலுத்து…

மீண்டும் ஒருமுறை கையிலிருக்கும் பஸ்ஸரைத் வருடிப் பார்த்துவிட்டு, அப்படியே அதன் இணைப்பு வயரையும் தொட… ஆ… வயரைக் காணோமே… எனில் வயர் அறுந்துவிட்டது போலவே??!! அப்படின்னா, நான் பஸ்ஸரை அழுத்தினாலும், அது ஒலியெழுப்பப்போவதில்லை!! அப்படியானால் எனக்கு ஏதாவது நேர்ந்தால், என்னை எப்படிக் காப்பாற்றுவார்கள்? எப்படி, என்ன செய்வேன் நான்… நாக்கு உலர்ந்து போனது…

பஸ்ஸர் ஒலிக்கவில்லையென்றால் என்ன இப்போ? நான் நல்லாத்தானே இருக்கேன். இதோ சற்று நேரத்தில் ஸ்கேன் முடிந்துவிடும். பின்னர் வெளியே வந்துவிடலாம் என்று அறிவு சொன்னாலும், மனம் அமைதியடையவில்லை. எப்படியேனும் இங்கிருந்து வெளியேறிவிடவேண்டும் என்பதாகவே எண்ணங்கள் அலைபாய்ந்தன. எப்படி, எப்படி என யோசித்து…. பதற்றத்தில், பயத்தில் என் முகம் மூடியிருந்த பிளாஸ்டிக் கூண்டைப் பிடுங்கி எறிய முயற்சித்தில், மெஷினின் அலாரம் அடிக்க… வெளியே இருப்பவர்கள் என்னவோ ஏதோ என்று பயந்து உள்ளே வந்து, என்னை வெளியே எடுத்து…

இந்தக் குழியிலிருந்து ஒருவழியாய் மீண்டுவிட்டேன்……



பண்புடன்” குழுமத்தின் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை.  

Post Comment

சதிபதி டெலிபதி




காலையில நல்லாத்தானே இருந்தது. எல்லாரையும் அனுப்பிவிட்டு, தனியே காஃபியுடன் பேப்பரை கையில் எடுத்ததிலிருந்து மீண்டும் அந்த எண்ணம் தலைதூக்கியது. இன்றில்லை, ரெண்டுமூணு நாளாகவே இந்த எண்ணம் - உணர்வு என்றுதான் சொல்லவேண்டும். அதுவும், கோபமா, எரிச்சலா, ஆதங்கமா என்று பிரித்தறிய முடியா ஒன்று, மனதில் உருண்டுகொண்டேயிருக்கிறது. ஏன் என்றும் சொல்லத்தெரியாமல், எதற்கு என்றும் புரியாமல்... என்னவொரு அவஸ்தையிது!!

இது புதிது என்றோ, முதல்முறை என்றோ சொல்ல முடியாதுதான். முன்பும் பலமுறை இப்படி இருந்திருக்கிறது, ஆனால் ஏதேனும் காரணத்தோடு. ஆனால், இப்போது ஏன், என்ன காரணம் என்றே தெரியவில்லை என்பதுதான் கூடுதல் தவிப்பு தருகிறது.

குழம்பாதீர்கள், விஷயம் இதுதான். ரெண்டு மூணு நாளாவே என்னவர் மேலே ஒரு.. ஒரு... இது.  அதான், கோவம் கோவமா வருது. எப்பவும் எதாவது எடக்கு மடக்காச் செஞ்சு வைப்பார். அப்ப கோவம் எரிச்சல் காண்டு எல்லாமே வர்றது வழக்கம்தான். ஆனா, இப்ப ஒண்ணும் விசேஷமா இல்லாதப்பவும் ஏன் இப்படின்னுதான் புரியலை.

எல்லா பெண்களுக்கும் வழக்கமா உள்ளதுதானேன்னு நினைப்பீங்க. சே.. சே.. நான் அப்படிலாம் இல்லீங்க. காரணமில்லாம கோவப்படவே மாட்டேன். அப்படி கோவப்பட்டுட்டாக்கூட, ஒரு காரணத்தைக் கண்டுபிடிச்சுக் கொண்டாந்துடுவேன். (அதுக்கு ரொம்பவெல்லாம் மெனக்கெடவும் வேண்டாம்).

வழக்கமா, குளிச்சுட்டு ஈரத்துண்டை படுக்கை மேல சுருட்டி வீசிவைப்பார். அதுகூட (அப்பப்ப) திருந்திட்டாரே, அப்புறம் ஏன் இந்தக் கோவம்னு தெரியலையே.

ஒருதரம், காய்கறி வாங்கக் கொடுத்துவிட்ட லிஸ்டில், ‘கத்தரி’ என்று எழுதிருப்பதைப் பாத்து, கத்திரிக்கோல் வாங்கிட்டு வந்தாரே, அந்த ’புத்திசாலித்தனத்தைக்’ கண்டுகூட இப்படி எரிச்சல் வரலையே? பசங்களோடு சேர்த்து ஓட்டத்தானே செஞ்சோம்.

ல்யாணத்துக்கு முன்னாடியே ரெண்டு பேர் பேரும் English alphabets-ல் இரண்டு எதிரெதிர் முனைகளில் உள்ள எழுத்துகளில் தொடங்குதுன்னு பாத்ததும், அப்பவே லைட்டா ஒரு கலக்கம் .... “சேச்சே... ’வேற்றுமையில் ஒற்றுமை’ காணப்போகிறோம் என்பதற்கான அடையாளம் இது”ன்னு மனசைச் சமாதானப்படுத்திகிட்டேன். ஆனா,  கல்யாணமான புதுசிலேயே,  எங்க ரெண்டு பேருக்கும் இருக்குற ‘ஒத்துமை’களைப் பாத்து கோவம்கோவமா வந்தப்பக்கூட, கலங்காமல் “அதெல்லாம் திருத்திடலாம்”னு நம்ம்ப்பியிருந்தேன். ஆனா, வித்தியாசம் எங்க ரெண்டு பேருக்கிடையில மட்டுமில்லை, ரெண்டு பேர் குடும்பத்துக்கே இருக்குன்னு தெரிஞ்சப்போதான்... கொஞ்சம் நடுங்கியது.

உதாரணத்துக்கு ஒண்னு சொல்றேன்: எங்க வீட்டுல தின்னவேலிலருந்து சென்னை போக ரெயிலைப் பிடிக்கணும்னா, வடிவேலு மாதிரி, வண்டியக் கிளம்ப விட்டுத்தான் ஏறுவோம். அவ்வளவு ஏன், அடுத்த ஸ்டேஷன்ல போயி ரயிலைத் துரத்திப் பிடிச்ச ”வீர வரலாறு” கூட உண்டு. ஆனா, அவங்க வீட்ல மாலையில் சென்னை போகணுன்னா, அன்னிக்குக் காலையில் சென்னைலருந்து தின்னவேலிக்கு வந்த
ரயிலை நெல்லை ஸ்டேஷன்ல  ஹால்ட் போடுவாங்க தெரியுமா, அப்பவே மூட்டை முடிச்சோட ஏறி உக்காந்துக்குவாங்க. மட்டுமில்ல,  டூட்டி முடிச்சு ஃப்ளாட்ஃபாரத்துல நடந்துபோற டி.டி.ஆர்.கிட்டயே “ஏன் இன்னும் வண்டி எடுக்க மாட்டுக்கான்?”ன்னு கேப்பாங்க!!

ப்படி கண்ணுக்கெட்டியவரை வறட்சியே தென்பட்டாலும், தின்னவேலிக்காரியால சமாளிக்கமுடியாததான்னு வீறாப்பா இருந்தேன். அதன் தொடர்ச்சியா, சதி-பதி எங்களுக்குள்ள அருமையான டெலிபதி வளர்ந்துச்சு. எப்படின்னா, ’குளிருதே, ஃபேனை ஆஃப் பண்ணுவோம்’ என் மனசுல லைட்டா எண்ணம் தொடங்கத்தான் செய்யும். உடனே, அங்கே பல்ப் எரியும். “ஸ்ஸப்பா... என்னாமா வேர்க்குது... அந்த ஏஸியப் போடு”ம்பார்!!

அந்த ‘டெலிபதி’ அப்படியே வளந்து வளந்து, இப்ப ஒருத்தருக்கு high BP; ஒருத்தருக்கு low BPங்கிற அளவுல வளந்திருக்குன்னா பாருங்களேன்!! ஆக,  ஒருத்தருக்கு உப்பு குறைக்கணும்; ஒருத்தருக்கு கூட்டணும். அதுவரை சாப்பாடுல உப்புல மட்டுந்தான் பொருத்தமிருந்துது!! இப்ப அதுலயும் ஏறுக்குமாறு!! என்ன ஒற்றுமை! என்ன பொருத்தம்!!

இவர் ’தண்ணி’ டிபார்ட்மெண்டில் (நோ, நோ, இது அசல் ஒரிஜினல் ‘தண்ணீர்’ - Water Distribution) வேலை பார்ப்பதால், ஒருமுறை, ஒரு குறிப்பிட்ட ஏரியாவுக்கு தண்ணீர் வழங்குவதுகுறித்து, இருவேறு கம்பெனிகளுக்கு நடுவில் பிரச்னை வர, அதைச் சுமுகமாகத் தீர்த்து வைத்ததைச் சொல்லிகிட்டிருந்தார். உடனே, எனக்கு மூளைக்குள் பல்பு எரிய, இவரை தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வாங்கித்தர கர்நாடகாவுக்கு அனுப்பலாமா, கேரளாவுக்கு அனுப்பிவைக்கவான்னு ஒரு யோசனை!! யோசிச்சுகிட்டிருக்கும்போதே சொன்னார், பிரச்னையைத் தீர்த்து வைத்ததும், கூட இருந்த ஒரு ஆப்பீசர் “Now you are suitable for that" அப்படின்னாராம்.

அட, என் யோசனை அந்த ஆப்பீசருக்கு எப்படித் தெரிஞ்சுது, அவரும் தமிழரா இருக்குமோன்னு ஆவலோடு, “for what?"னு கேட்டேன். “You are now suitable to marry four wives"ன்னாராம்!! அப்பக்கூட துளிக்கோவம் வரலையே?

”ம்க்கும்!..  ஏற்கனவே நான் உங்க மூணாவது பொண்டாட்டிதாங்கிற விவரத்தைச் சொல்றதுதானே அவர்கிட்ட? அதுலயும் அந்த மூத்தகுடியா படுத்துற பாடு... தெனோமும் காலையிலருந்து சாயங்காலம் வரை ’அங்கே’யே இருந்தாலும், வீட்டுக்கு வந்தப்புறமும் ஆயிரத்தெட்டு ஃபோன் பண்ணி தொந்தரவு பண்றது, ஓரோரு சமயம் நடுராத்திரின்னுகூடப் பாக்காம ‘இப்பவே வா’ன்னு மிரட்டுறதும்,
ஒடனே நீங்க ஓடுறதும்னு நடக்கிற எல்லாக் கொடுமையையும் சொல்றதுதானே?”ன்னுதானே கிண்டல் பண்ணேன்!!?? இப்ப ஏன் இப்படி....


ந்தக் கோவத்தை மாத்துறது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. அவரைப் பக்கத்துல உக்கார வச்சிட்டு, ஒரு காமெடி படம் பார்த்தா எல்லாம் சரியாகிடும். ஒவ்வொரு ஜோக்குக்கும் பக்கத்துல இருக்கவங்களை ஓங்கி “அடிச்சு அடிச்சு” சிரிக்கிறப்போ கிடைக்கிற நிம்மதி இருக்கே... அலாதியானது!! படம் பார்த்து முடிச்சதும் மனசு அப்படியே லேசாகிடும்.

ஆனா, முதல்ல காரணம் என்னன்னு தெரியலைன்னா மண்டையே வெடிச்சுடும்போல இருக்கே... வொய் திஸ்.. வொய் திஸ் எரிச்சல்...

”தர்மயுத்தம்” படத்துல ரஜினியை ஒவ்வொரு பௌர்ணமிக்கும் கட்டி வச்சிடுவாங்க. அன்னிக்கு அவருக்கு முத்திடுமாம். அதுமாதிரி இன்னிக்கு எதாவது இருக்குமோன்னு டவுட்டு வந்துது. அப்படிப் பாத்தா  ஒருநாள் ஸோலோ, ஒருநாள் டூயட், அப்பப்ப ஃபேமிலி சாங்னு நாம நெதமும் ஆடுற “ருத்ரதாண்டவத்துக்கு” நித்தமும்ல பௌர்ணமியா இருக்கணும். மனசு இப்படிச் சொன்னாலும், கண்ணு காலண்டர் பக்கம் போச்சு...

ஆ... நான் நெனச்சது சரியாப் போச்சு!! ஆமா... இன்னைக்கு... இன்னைக்கு... இன்னிக்குதான் எங்க கல்யாண நாள்!!

டிஸ்கி:  


மக்காஸ், உடனே வாழ்த்துகளை அள்ளிக் கொட்டிடாதீங்க. ”சம்பவம்” நடந்தது அக்னி நட்சத்திரம் கொளுத்திய ஒரு மே மாசத்தில. இன்னிக்கு இல்லை. எல்லாரும் எழுதுறாங்களே, நாமளும் எழுதுவோமேன்னு ஒரு ஆர்வக்கோளாறுல எழுதுனது. எழுத மனசு ஆசைப்பட்டபோதே, புத்தி எச்சரித்தது. அதெல்லாம் அங்கங்க ‘மானே, தேனே, பொன்மானே’ போட்டுச் சமாளிச்சடலாம்னு நினைச்சு ஆரம்பிச்சேன். ஹும்... என்ன மேக்கப் போட்டாலும் இப்பிடித்தான் வருது!!   மே மாசமே எழுதிட்டேன். சரி, சண்டையில்லாத ஒரு திருநாளாப் பாத்து பதிவு போட்டுடலாம்னு காத்திருந்து... காத்திருந்து...  ஜூலையே வந்துடுச்சு. சரி, கடல்ல அலை எப்போ ஓயுறது, நாம எப்ப குளிக்கிறதுன்னு... பதிவுல போட்டாச்சு.

Post Comment

டிரங்குப் பொட்டி - 31




சுமார் 14 வருடங்களுக்கு முன்....

கடைக்குச் சென்று அதை வாங்கி,  தன் கோட்டுப் பாக்கெட்டுக்குள் வைத்தார் அவர். பின் அதை மறந்தே விட்டார். பல இடங்களுக்கு மாறிய அந்த கோட்டை, 14 வருடங்களுக்குப்பின் தற்செயலாகத் திறந்து பார்த்த போது, அது இன்னும் அங்கே ‘பத்திரமாக’ இருந்ததைக் கண்டார். ஆனால், அவர் அதற்காக  மகிழ்ச்சியடையவில்லை; மாறாக பலத்த அதிர்ச்சியடைந்தார்!! ஆம்!!



ஒரு உணவகத்தில் உணவு வாங்கி, ஃப்ரிட்ஜில் வைக்காமல், இரண்டு நாள் கழிச்சு அதைத் திறந்து பாத்தா எப்படியிருக்கும்? நினைக்கவே குமட்டுகிறது அல்லவா? ஆனா, 14 வருடங்கள் கழிந்த பின்னும், அந்த உணவு கெட்டுப் போகாமல் இருந்தால்...???!!!! அந்த உணவு.... மெக் டொனால்டில் வாங்கப்பட்ட “பர்கர்”!!  14 வயது நிறைந்த அந்த பர்கரில், அழுகல் இல்லை, புழு இல்லை, ஏன் பூஞ்சை கூட பிடிக்கவில்லை.

ப்ரிசர்வேடிவ்களின் தாக்கத்தை அறிய இதைவிட சிறந்த வாய்ப்பு ஏது? நுண்ணுயிரிகளில் நல்லவையும் இருக்கின்றன, கெட்டவையும் இருக்கின்றன. நாம் உண்ணும் உணவு செரிக்க,  உடல் உறுப்புகளால் உறிஞ்சப்பட, சக்தியாக சேமிக்கப்பட என்று பல்வேறு வினைகளுக்கு இந்த நல்ல நுண்ணுயிரிகள் தேவை. ஆனால்,  ப்ரிசர்வேடிவ்கள் உணவை அண்டும் கெட்ட நுண்ணுயிரிகளோடு, நம் உடலில் இருக்கும் நல்ல நுண்ணுயிரிகளையும் அழித்துவிடுகின்றன.

 இம்போர்டட் ஆப்பிள் பலநாட்களானாலும் வாடாத அதிசயமும், அன்னம்மா பாட்டியிடம் வாங்கும் கீரை ஒரு நாளிலேயே வாடிப்போகும் ரகசியமும் இப்போ  புரிகிறதா!!


%%%%%%%%%%%%%%%%%%%%%


அரபு நாடுகளுக்குப் பெட்ரோலியம் போல, அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு இயற்கை எரிவாயுக்கள். பெட்ரோலைவிட, இயற்கை எரிவாயுக்கள் சுற்றுச்சூழல் மாசு உண்டாக்காதவை என்று நம்பப்படுவதாலும், பெட்ரோலிய இறக்குமதியைக் குறைப்பதற்காகவும், மேலை நாடுகள் அவற்றில் ஆர்வம் காட்டுகின்றன. ஒரு வகை இயற்கை எரிவாயுவான  “ஷேல் கேஸ்” (Shale Gas), பூமியின் அடிஆழத்தில் பாறைகளுக்கிடையில் காணப்படும்.

இதை எடுப்பதற்காக, ”Hydraulic Fracking"  என்ற முறையில் சுமார் 6000 முதல் 10000 அடிவரை ஆழ்துளையிட்டு,  கெமிக்கல்கள் கலந்த தண்ணீரை அதிக அழுத்தத்தில் பீய்ச்சினால், பாறைகளைத் துளையிட்டு அந்த வாயுவை வெளிக்கொணர முடியும்.

இதன்படி எடுக்கப்படும் இயற்கை எரிவாயுக்களால் எந்தக் கேடும் இல்லையென்றாலும், இவை எடுக்கப்படும் ”Hydraulic Fracking" முறையால், பூமிப்பாறைகள் தகர்க்கப்படுவதால் பூகம்பங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டென்று எதிர்ப்புக் குரல்கள் எழும்பின.  உடனே ஒரு ”ஆராய்ச்சி”  செய்து ”சுரங்கங்கள் தோண்டுவதையும்,  அணை நீர்த்தேக்கங்களையும் விட, இதனால் வரக்கூடிய  மெல்லிய அதிர்வுகள் அப்படியொன்றும் பெரிய அளவில் ஆபத்தானவையல்ல ” என்று சொல்லிவிட்டார்கள். பூகம்ப ஆபத்து அதிகம் இல்லையென்றாலும், ”Hydraulic Fracking"-ஆல் ஏற்படும் நிலத்தடி நீர் மாசு, ஒலி மாசு, காற்று மாசு ஆகியவற்றை மறுக்க முடியாதே!

ஒவ்வொரு பிரமாண்ட கட்டிடத்தையும் அண்ணாந்து பார்க்கையில், இதற்காக பூமிக்கடியில் எவ்வளவு பெரிய அஸ்திவாரம் போட்டிருப்பார்கள் என்ற எண்ணம் வருவதைத் தடுக்க முடியவில்லை!!  அதிக அளவில் பூகம்பம், வெள்ளம் வருவதில் வியப்பென்ன?

%%%%%%%%%%%%%%%%%%%%%

சமீபத்தில் பங்களாதேஷில் கார்மெண்ட் ஃபேக்டரி இடிந்து விழுந்ததில், 17 நாட்கள் கழித்து ஒரு பெண் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி பார்த்திருப்போம்.  ஹைட்டி நாட்டு பூகம்ப இடிபாடுகளிலிருந்து 27 நாட்கள் கழித்து ஒருவர் உயிருடன் கிடைத்ததே இதுவரை சாதனை. இது அதிசயிக்கத்தக்கது என்றாலும், மூச்சுவிட காற்று கிடைக்கும் பட்சத்தில் சாத்தியமே. ஆனால்,  கடலில் மூழ்கி இரண்டரை நாட்களுக்குப் பின்னர்  ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்பது நம்பமுடிகிறதா?

அவர் சென்ற படகு கவிழ்ந்ததில் உடனிருந்த 10 பேரும் மரணித்துவிட, இவர் மட்டும் பிழைத்திருக்கிறார். கவிழ்ந்த படகில், ஒரு இடத்தில் ஒரு “காற்றுக் குமிழி” (air bubble) ஏற்பட, அதைக் கொண்டு மூச்சுவிட்டுக் கொண்டிருந்தவரை, 60 மணிநேரத்திற்குப்  பின் மீட்டிருக்கிறார்கள்!! 

பல வருடங்கள்முன், ஜூனியர் விகடனில் அருவிகளில் விழுந்து இறப்பவர்களின் உடல்களை மீட்பவர்களைப் பற்றிய தொடர் வெளியானது. அதில், பாறைக்கிடையில் இதுபோல ஒரு நீர்க்குமிழியில் மாட்டிய ஒரு சிறுவன் பிழைத்ததைப் பற்றி எழுதியிருந்தார்கள். 

எனினும், இவ்வாறான குமிழிகளில், மூச்சுவிடும்போது வெளிவரும் கார்பன்-டை-ஆக்ஸைடின் அடர்த்தி அதிகமாகிவிடும் என்பதால், சில மணிநேரங்களில் மரணம் தவிர்க்க முடியாது என்பது அறிவியல் நியதி. அதையும் மீறி இவர் உயிர் பிழைத்ததே அதிசயம்.

%%%%%%%%%%%%%%%%%%%%%

பல உயிர்கொல்லி நோய்களுக்கும் தடுப்பு மருந்து இருந்தாலும், கொசுக்கடியினால் வரும்  நோய்களில் பலவற்றிற்கு தடுப்பூசியில்லை. குறிப்பாக, பெரிய அளவில் உயிரிழப்புக்குக் காரணமாகும் மலேரியாவுக்கும் தடுப்பு மருந்து உருவாக்குவது எளிதாக இல்லை. எனினும், ஆராய்ச்சியாளர்கள், ‘மாத்தி யோசி’த்து, கொசுவுக்கே தடுப்பூசி போட்டுவிடும் முறையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட பாக்டீரியா - Wolbachiaவை பெண் கொசுவுக்கு ஊசிமூலம்  செலுத்திவிட்டால், அது மலேரியா வைரஸைப் பரப்பும் திறனைக் குறைப்பதோடு, அதன் 34 தலைமுறைகளுக்கும் அதைச் செலுத்திவிடுகிறது. இந்த கொசுக்கள் கடித்தால், மலேரியா வராது!!

இது நடைமுறைக்கு வந்தா என்னல்லாம் நடக்கும்? ‘கொசுவிரட்டி’ சுருள்களுக்குப் பதிலாக, ’கொசு-வருத்தி’ சுருள்கள் விற்பனைக்கு வரும். முக்கியமா, எந்திரன் -2வில், ரஜினி  ரங்குஸ்கிக்குப் பதிலாக, Wolbachia இருக்கும் கொசுவைத் தேடிக் கொணர்ந்து ஐஸைக் கடிக்கச் சொல்வாரோ? (அப்பவும் ஐஸ்தான் ஜோடியா?)

Wolbachia-கொசுக்கள் நம்ம ஊருக்கு வரும்வரை, ‘ஏழைக்கேத்த எள்ளுருண்டையா’  சிம்பிள் டெக்னிக் ஒண்னு இருக்கு:  அழுக்கு சாக்ஸ்கள்  என்றால் மலேரியா கொசுக்களுக்கு ரொம்பப் பிடிக்குமாம். மூலையில் கழட்டி வீசி எறியப்பட்டு கிடக்கும் சாக்ஸ்களைப் பார்த்து குமுறும் (என்னைப் போன்ற) அம்மணிகள் ஆறுதல் பட்டுக்கொள்ளலாம்!!

%%%%%%%%%%%%%%%%%%%%%


Post Comment

நானும் இப்ப சீனியர் பதிவராக்கும்




ங்கிலத்தில் “Put yourself in their shoes” என்று சொல்வார்கள். நாம அம்மாவா ஆகும்போதுதான், நம்ம அம்மா நமக்கு சொன்ன அறிவுரையெல்லாம் புரியும். டீச்சராகும்போதுதான், நம்ம டீச்சரை படுத்துன பாடெல்லாம் புரியும்.

இந்த மாதிரி விளைவுகள் வரும்னு தெரிஞ்சாலும், அம்மாவாக, அப்பாவாக, டீச்சராக இருப்பதை மகிழ்ச்சியானதாகவே கொள்வோம்.  ஆனா,  ஒரு டவுட்டு: நான் வருங்காலத்தில் மாமியாராகப் போவதை நினைச்சா இப்பவேல்ல பயம்மா இருக்குது??!! 

மூணுமாசம் முன்னாடி, பிரசவித்திருந்த என் தங்கையைப் பார்க்க வந்த அவள் தோழி, என்னிடம், “உங்களைப் பத்தி இவ நிறைய சொல்லிருக்கா. நீங்க அவளுக்கு அக்காவேயில்லை; மாமியார்தான்!!!” என்று சொன்னாள். அவ்வ்வ்வ்வ்...!!!! தங்கச்சியே என்னை மாமியார் ரேஞ்சுக்கு ஆக்கிட்டா. நாளைக்கு மருமக என்ன சொல்வா(ங்க)ளோ!!

இத எதுக்குச் சொல்ல வந்தேன்.. ஆங்.. “in their shoes.."..  வலைப்பதிவு எழுத வந்த புதுசுல,  ஆர்வமா நிறைய கிறுக்கித் தள்ளுனதுண்டு. வாரத்துக்கு ரெண்டு, மூணு பதிவெல்லாம் போட்ட பொற்காலம் அது. (அப்ப நான் ஆபிஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லைன்னு தெரிவிச்சுக்கிறேன்) .

அந்த சமயத்துல, நிறைய சீனியர் பதிவர்கள், ஒண்ணுமே எழுதாமே ப்ளாக்கை,  சும்மா தரிசுநிலம் மாதிரி போட்டு வச்சிருப்பாங்க. எனக்கு ரொம்ப ஆச்சரியம் + கோவமா இருக்கும். “ச்சே, எழுதுறது எவ்வளவு இண்டெரெஸ்டிங்கா இருக்கு!! கருத்து சொல்ல விஷயத்துக்கா நாட்டுல பஞ்சம்?  மாற்றம் கொண்டு வரக்கூடிய எழுத்துத் தெறமையை இப்படி வீணாக்குறாங்களே”ன்னு நெனச்சிருக்கேன். அவங்க செய்யாதத, நாமளாவது செஞ்சுடணும்னு கீ-போர்ட் தேயுற அளவுக்கு எழுதித் தள்ளிருக்கேன். (சில ‘புரட்சிப்’ பதிவுகள் லிங்க் தரட்டுமா? சரி, சரி, இந்தப் பதிவை மட்டும் முழுசாப் படிச்சுடுங்க, ப்ளீஸ்!)

அப்புறம், அப்படியே கொஞ்ச நாள்ல, நானும் வாரம்-ஒரு-பதிவு ரேஞ்சுக்கு வந்துட்டேன். (இப்ப நான் வேலையை விட்டுட்டதுக்கும், இதுக்கும் சம்பந்தமில்லைன்னும் தெரிவிச்சுக்கிறேன்) . அப்புறம் அப்படியே கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதையாப் போனதுக்கப்புறம்தான் அந்த “சீனியர் பதிவர்களின்” நிலை புரிஞ்சுது.

எழுதறதுக்கு மேட்டர் கிடைக்கலேன்னும் சொல்லிக்கலாம். அல்லது, நானும் இப்ப சீனியர் பதிவராக்கும்; அதனால்,  ‘பாஞ்சு நாள்’ நாராயணசாமி மாதிரி அடிக்கடி அறிக்கை விடாம, பிரதமர் மாதிரி ஓன்லி அவசியமான விஷயத்துக்குத்தான் பதிவு எழுதுவேன்னும் பெரும்மையாச் சொல்லிக்கலாம்.


ந்த ரெண்டு மாசத்துல, என் “ரீடரில்” 1000 பதிவுகளுக்கு மேல் சேந்துருச்சு. அத்தனையும் படிச்சு (அல்லது டெலீட் செய்து) முடிக்கவே ஒரு மாசமாகிடுச்சு. கண்ணில் படும் நல்ல வலைப்பூக்களையெல்லாம் ரீடரில் போட்டு வைத்து, இப்போ அது தூக்கமுடியாத ‘ட்ரங்குப்போட்டி’ மாதிரி கனமாகிடுச்சு. அதனால், சென்ற இரண்டு மூன்று  வாரங்களாக வலைச்சரத்தில் நல்ல அறிமுகங்கள் இருந்தும் சேமிக்கவில்லை. இருக்கிறதைப் படிக்கவே நேரத்தைக் காணோம்.

அதுவும் இப்ப ரீடரை திறக்கும்போதெல்லாம் “ஜூலை ஒன்றாம் தேதி முதல் ரீடர் இருக்காது”ன்னு கூகிள் பயங்காட்டுது. ரீடர் இல்லைன்னா என்ன செய்வேன்னு தெரியலை!!! ஏன்னா,  தெரிஞ்ச எல்லா வலைப்பூ முகவரிகளையும் அதில்தான் சேமித்து வச்சிருக்கேன். ரீடர் போச்சுன்னா, அதெல்லாமும் போச்சு! ரீடரை எப்படி back-up எடுக்கிறதுன்னு இதுவரை எந்த டெக்கி பக்கியும்... ஐ மீன், டெக்னிக்கல் பதிவரும் பதிவு எழுதுன மாதிரியும் தெரியலை!! ரீடர் போனா, அதுக்கு மாற்றா என்ன வரும்னும் ஒரு தகவலும் இல்லை.

கொஞ்ச நாள் ஃபேஸ்புக் பக்கம் ஒதுங்கினேன். ப்ளாக் மாதிரி ’உக்காந்து யோசிச்சு’ பெரிசா பதிவு எழுதணும், ஃபார்மட்டிங் செய்யணும்,  படங்கள் தேடிப் போடணும்கிற அவசியம் இல்லாததால, அடிக்கடி எழுத வசதியா இருந்தாலும்,  சில விஷயங்களுக்கு ஃபேஸ்புக்தான் பொருந்தும் என்றாலும், எனக்கு ஏத்த இடம் வலைப்பதிவுதான் என்று புரிஞ்சு, ‘தாய்வீட்டுக்கு’ திரும்பி வந்தாச்சு!!

 

திரும்பி வந்துட்டேனே தவிர, எழுதணும்னு உக்காந்தாலே உடனே மைண்ட் ‘ப்ளாங்க்’ ஆகிடுது. கிச்சன்ல சமைக்கும்போது அதை எழுதணும், இதை எழுதணும்னு  சரசரன்னு நினைவுகள் ஓடுது. ஆனா, கம்ப்யூட்டர் முன்னாடி வந்து உக்காந்தா ஒண்ணும் ஓடமாட்டேங்குது.  இதத்தான் “Writer's block"னு சொல்வாங்களோ?

ஆனா என்ன, கிச்சன்ல நிக்கும்போது ப்ளாக் எழுதறதப் பத்தி நினைக்கிறதால, கடகடன்னு சமைச்சு முடிச்சுடுறேன். ஆனா,  கம்ப்யூட்டர் முன்னாடி இருக்கும்போது, ‘மதியத்துக்குச் சமைக்கணுமே’ன்னு ஒரு டென்ஷன் எப்பவுமே அடினமசுல இருக்குறதாலத்தான் எழுத வரமாட்டேங்குதோ என்னவோ? 




 




(பின்குறிப்பு: ரீடரில் டவுன்லோட் செய்ய, ரீடரின் ‘Help’ பக்கத்துக்குச் சென்று, அங்கிருந்து ”How can I download my Reader data?” க்ளிக் செய்யவும்).

Post Comment

பிடிப்போம், படிப்போம்: நியூட்ரினோக்கள்





மிழ்நாடு தேனி மாவட்டத்தில் கட்டப்படவுள்ள ஒரு அறிவியல் ஆய்வுக்கூடக் கட்டுமான செய்தி, கூடங்குளம் பரபரப்பினால் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டுள்ளது. சமீபத்தில், ‘ஹிக்ஸ் போசான்’என்கிற கடவுள் துகள் கண்டுபிடித்தார்களே, சுவிட்சர்லாந்தில் CERN என்ற ஆய்வுக்கூடத்தில்? அதுபோன்றதொரு ஆய்வு மையம், நம் தமிழகத்தில், மதுரை அருகில், மேற்குத் தொடர்ச்சி மலையைக் குடைந்து பூமிக்கடியில் அமைக்கப்படவுள்ளது.

சுமார் 1350 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள இந்த ஆய்வகம், இந்தியாவுக்கு உலக அரங்கில் மிகுந்த பெருமை சேர்க்கும். அறிவியல் ஆராய்ச்சிகளில் இந்தியாவுக்கும் ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தரும். ”இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம்” (Indian Neutrino Observatory)  என்கிற இந்த ஆய்வகத்தின் பணிகளில், இந்தியாவிலுள்ள 25 ஆய்வு மையங்கள், அனைத்து ஐ.ஐ.டி.க்கள், பல்வேறு பல்கலைக்கழகங்கள் இணைந்து பணியாற்றப் போகுமளவு முக்கியத்துவம் வாய்ந்த, இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆய்வகமாக இது அமையும்.

என்ன சிறப்பு இந்த நியூட்ரினோவில்?


யற்கையாகவே அண்டத்தில் காணப்படும் துகள்களே “நியூட்ரினோ” என்பவை. இவை சூரியக்கதிர்களிலும் காணப்படும்; தவிர நட்சத்திரங்களின் பிறப்பு-இறப்பு, விண்வெளியில் நடக்கும் சூப்பர்நோவா போன்ற நட்சத்திர வெடிப்புகள் போன்ற எல்லா அணுவெடிப்பு – அணுசேர்ப்பு (nuclear fission/ fusionநிகழ்வுகளிலும் நியூட்ரினோக்கள் உருவாகும். பூமியில் நடக்கும் அணு நிகழ்வுகளிலும் இவை உருவாகும். ஒரு நொடியில், பல கோடி நியூட்ரினோத் துகள்கள் பூமியை வந்தடைகின்றன. இவற்றைப் “பிடித்து” ஆராய்ச்சி செய்தால், பிரபஞ்ச உருவாக்கத்தைக் குறித்த பல ரகசியங்களையும் அறிந்துகொள்ளலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

அவை பிரபஞ்சம் உருவான காலந்தொட்டே இருக்கின்றன. அண்டத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டபொழுதிலும், நியூட்ரினோ துகள்களில் எந்த மாற்றமும் இதுவரை ஏற்பட்டதில்லை. நியூட்ரினோக்கள், எந்த ஆபத்தும் இல்லாதவை. எதையும் ஊடுறுவும் திறன் கொண்ட இவை, ஒளியின் வேகத்தில் செல்லும். ஒரு நொடியில், டிரில்லியன் கணக்கான நியூட்ரினோக்கள் நமது உடலையும் ஊடுருவிச் சென்று வருகின்றன. இவற்றிற்கு எடை கிடையாது; கதிர்வீச்சும் இல்லை; மின்னூட்டமும் (electric charge) கிடையாதென்பதால், பூமியின் மின்காந்த புலங்கள் உட்பட, எவற்றாலும் பாதிக்கப்படுவதில்லை. ஏன், மலைமுழுங்கி மகாதேவன்களாகிய ”கருந்துளைகள்”கூட (black holes), இவற்றை ஒன்றும் செய்வதில்லை!! ஆகையால் பூமியை வந்தடையும்போது எந்த மாற்றமும் இல்லாமல், தோன்றியது போலவே வந்தடையும். இப்படி ”என்றும் மார்க்கண்டேயனாக” இருக்கும் இந்தப் பண்பே, விஞ்ஞானிகளுக்கு இதனை ஆராயும் ஆவலைத் தூண்டுகிறது.

என்ன ஆய்வு மையம் அது?

லகில், கனடா,  ஜப்பான்,  அண்டார்டிக்கா, ஸ்விட்சர்லாந்து போன்ற மிகச்சில இடங்களில் மட்டுமே நியூட்ரினோ ஆய்வகங்கள் உள்ளன. தற்போது நம் நாட்டில் ஒன்று புதிதாகக் கட்டப்படவுள்ளது. நியூட்ரினோ ஆய்வுக்கூடங்கள் நமக்கொன்றும் புதிதல்ல. 1965-லேயே, கோலார் தங்கவயலின் சுரங்கத்தில் விஞ்ஞானி பாபா தலைமையில் ஆய்வுகள் நடந்தன. பின்னர் அது மூடப்பட்டுவிட்டது. தற்போது கொல்கத்தாவில் ஒரு சைக்ளோட்ரான் ஆய்வகத்தில் இதன் ஆராய்ச்சியும்  மிகச்சிறிய அளவில் நடைபெற்று வருகிறது.


இப்போதைய புதிய ஆய்வுக்கூடம், தமிழ்நாடு-கேரளா எல்லைக்கருகில், தேனி மாவட்டத்தில், பொட்டிப்புரம் என்ற ஊரில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைக்குக்கீழ் அமைக்கப்படவுள்ளது. மலைப்பாங்கான இடம் என்பதே இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம். அண்டக் கதிர்களில் (cosmic rays)  உள்ள நுண்ணிய நியூட்ரினோத் துகள்களை வடிகட்டிப் பிடிப்பதற்கு, அடர்த்தியான கற்களைக் கொண்ட மலைப்பிரதேசமாக இருத்தல் அவசியம். அதே சமயம், மழைப்பொழிவு இல்லாத இடமாகவும் இருக்க வேண்டும். பொட்டிப்புரத்தில் உள்ள பொட்டிதட்டி மலை என்கிற குன்று இதற்குத் தோதாக உள்ளதாக விஞ்ஞானிகள் தேர்வு செய்துள்ளனர்.

நியூட்ரினோக்கள் அண்டத்தில் அதிகமதிகம் காணப்படுபவை என்றாலும், எதனோடும் வினைபுரியாத அவற்றைப் பிடிப்பதுதான் மிகவும் சிரமமான செயல். அதற்காகத்தான் சிறப்புக் கருவிகளோடான ஆய்வுக்கூடங்கள் அவசியமாகின்றன. பூமிக்கடியிலும் தடையின்றி ஊடுருவிச் செல்லக்கூடிய நியூட்ரினோக்களை, 1 கி.மீ.க்கும் கூடுதலான ஆழத்தில் பிடிப்பது சற்றே இலகு என்பதாலேயே, இதற்கான ஆய்வுக்கூடங்கள் பெரும்பாலும் நிலத்தடியில் அமைக்கப்படுகின்றன.


Schematic view of the detector at INO
தேனியில் அமையப்படவுள்ள ஆய்வுமையமும், மலையைக் குடைந்து, சுமார் 2 கி.மீ. ஆழத்தில்தான் கட்டப்படவுள்ளது. ஆய்வகத்தை முக்கிய சாலையுடன் இணைப்பதற்கு, 2 கி.மீ. நீள சுரங்கப்பாதையும் அமைக்கப்படும். ஆய்வகத்தில் 50,000 டன் எடைகொண்ட காந்தம் பயன்படுத்தப்படும். ஸ்விட்சர்லாந்தில் உள்ள CERN ஆராய்ச்சிக்கூடத்தில் இருப்பதைவிட இது நான்கு மடங்கு பெரிது!! மட்டுமல்ல, உலகிலேயே பெரிய காந்தமும் இதுவே.
நியூட்ரினோ துகளைப் பிடித்தும் ஆராய்ச்சி செய்வது மட்டுமல்லாமல், பிற்காலத்தில் உலகிலுள்ள மற்ற ஆய்வுக்கூடங்களுடன் நியூட்ரினோ கற்றைகளை நிலத்தடிவழியே பரிமாற்றம் செய்து கொள்ளும் திட்டமும் உள்ளது.

சரி, இந்த ஆய்வுகளால் என்ன பயன்?

* முன்பே சொன்னதுபோல, பூமி பிறந்த காலம்தொட்டு மாற்றமேதுமின்றி, ‘அழியாமை’ கொண்ட நியூட்ரினோக்களை ஆராய்ந்தால் பிரபஞ்ச உருவாக்கம் குறித்த உண்மைகளை அறியலாம்.

*சூரியனிலிருந்து தோன்றும் நியூட்ரினோக்களை ஆய்வதன்மூலம், சூரியனின் மையம் (core) குறித்த தன்மைகளை அறியலாம்.

* சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் குறித்தும் முன்னறிவிப்புப் பெற இயலுமா என்ற முயற்சியும் இருக்கும்.

* மிக முக்கியமாக, நியூட்ரினோக்களை கதிர்வீச்சு உள்பட எதுவும் பாதிக்காது என்பதால், கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பு பெறும் வழிகள் கிடைக்கலாம்.

* ஆய்வுமையத்தால் தமிழ்நாடு – தேனி உலக அளவில் விஞ்ஞான முக்கியத்துவம் பெறும். வேலைவாய்ப்பு பெருகும். உலக அரங்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு சிறப்பு.

யன்கள் என்ன என்று கேட்கும்போதே, அப்போ தீமைகளும் உண்டோ என்ற சந்தேகம் எழுகிறதல்லவா?

முன்பே கூறியதுபோல, நியூட்ரினோக்கள் எந்த ஆபத்துமில்லாதவை. நேரிடையாக நியூட்ரினோக்களால் அசாதாரணங்கள் எதுவும் நிகழ வாய்ப்பில்லை என்றபோதும், பரிசோதனைக் கூடங்களாலும், முறைகளாலும் சுற்றுப்புறத்திற்கு மறைமுகமாக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

குறிப்பாக, ஆய்வுக்கூடக் கட்டுமானப் பணியின்போதுதான் சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிப்படைய வாய்ப்புள்ளது. ஆய்வுக்கூட பணிகள் ஆரம்பித்த பின்னர், கதிர்வீச்சு போன்ற ஆபத்துகள் இல்லை என்ற போதும், பலத்த அதிர்வுகள், அதிகத் தண்ணீர் பயன்பாடு, மின்சாரப் பயன்பாடு, தொடர் வாகனப் போக்குரத்து போன்றவற்றால் சூழல் பாதிக்கப்படக்கூடும்.  
 
1.  மலையுச்சியிலிருந்து சுமார் 2 கி.மீ. ஆழத்தில் அமையவிருக்கும் ஆய்வகத்திற்குச் சென்றுவர சுரங்கப்பாதையும் அமைக்கப்படும். இந்தப் பணிகளுக்காக, மலையைக் குடைந்து சுமார் இரண்டேகால் லட்சம் கனமீட்டர் கல் வெட்டி எடுக்கப்படும்போது, காற்றில் தூசி பரவும். இதைத் தடுக்க, சரியான தடுப்பு பணிகள் செய்யப்படாவிட்டால் தூசு மண்டலம் சூழ வாய்ப்புள்ளது.


வெட்டி எடுக்கப்பட்ட கற்களும் அவ்விடத்திலேயே சிறிதுகாலம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் என்பதும், அது காற்று அதிகம் வீசும் இடம் என்பதும், தூசு பரவுவதை அதிகரிக்கச் செய்யும்.  சிறிய அளவில் கற்கள் வெட்டி எடுக்கப்படும் குவாரிகளினால் ஏற்படும் தூசி பாதிப்பே சுற்றுப்புற மக்களைப் பெருமளவு பாதிக்கிறது. பெரிய மலையை வெட்டி எடுக்கும்போது வரும் பெரிய பாதிப்புகளைக் குறைக்க – முழுமையாகத் தடுக்க முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பது கேள்விக்குறியே.

 2.  இந்த இடத்திலிருந்து சுமார் 40கி.மீ. தொலைவில் இடுக்கி அணையும், 100 கி.மீ. தொலைவில் முல்லைப் பெரியாறு அணையும் இருக்கின்றன. மலையைக் குடையும்போதும், சுரங்கப்பாதைகள் அமைக்கும்போதும் ஏற்படும் அதிர்வுகள் அவற்றைப் பாதிக்கலாம் எனக் கூறப்படுகின்றது. கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், இதைச் சுட்டிக்காட்டி இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
3.  ஆய்வகம் அமையவிருப்பது மரங்கள் நிறைந்த ஒரு மலைப்பிரதேசம். கட்டுமான பணிகளுக்காகவும், சாலைகள் அமைப்பதற்காகவும், இங்கிருக்கும் மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டும். பசுமை அழியும். இதன் பின்விளைவுகளாய், ஏற்கனவே குறைந்த அளவே மழைப்பொழிவு கொண்ட தேனியில்  மேலும் மழை குறையும். வறட்சி ஏற்படும்.
 
4.  மரங்கள் வெட்டப்பட்டு, வாகனப் போக்குரத்தும், மனித நடமாட்டமும் அதிகரிக்கும்போது, இங்கு வாழும் பிராணிகள் தம் இருப்பிடத்தை இழக்க நேரிடும். தொடர்ச்சியாக அவற்றின் எண்ணிக்கை குறையும்; உயிர்ச்சூழலியல் பாதிக்கப்படும்.
 
5.  கட்டடப் பணிகளுக்கும், பின்னர் ஆய்வகப் பயன்பாட்டிற்கும், ஐம்பதாயிரம் டன் எடையுள்ள காந்தத்தைக் குளிர்விக்கவும், அதிகளவு தண்ணீர் தேவைப்படும். இந்த நீர் வெளியிலிருந்து டேங்கர்கள் மூலம் கொண்டுவரப்படும் என்று சொல்லப்பட்டாலும், அது எவ்வளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. அங்கிருந்தே நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டால், 
மரங்களும் வெட்டப்பட்ட சூழ்நிலையில் வறட்சி பெருகும்.
 
6.  மின்சாரத் தேவையும் அதிகளவில் இருக்கும். மின்சாரத் தட்டுப்பாட்டில் தவிக்கும் தமிழகத்தில், வழக்கம்போல மக்களை இருளில் மூழ்க விட்டு, பன்னாட்டு ஆலைகளும் ஆய்வகங்களும் மட்டும் ஒளிமயமாக இருக்கும்.
 
7.  வாகனப் போக்குவரத்துகள் அதிகரிப்பதனால் ஏற்படும் மாசு, இயற்கைப் பிரதேசத்தைப் பாதிக்கும். வனச்சூழல் அழிந்து, நகரமயமாக்குதல் நடக்கும். ஏற்கனவே காடுகளைப் பெருமளவு இழந்துவருகிறோம்.
 
8. கட்டுமானப் பணியின்போதும், ஆய்வகப் பணிகளின்போதும் ஒலி மாசும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும்.
 
9. கழிவு மேலாண்மை – ஆய்வகக் கழிவுகள், சுற்றுப்புறத்திற்குப் பாதிப்பின்றி உரிய முறையில் அப்புறப்படுத்தப்பட வேண்டியதும் அதிஅவசியம். நீர்மப்பொருட்கள், பேட்டரிகள், வேதிப்பொருட்கள், வேதிவாயுக்கள் எனப் பல்வேறு விதமான கழிவுகளோடு, மிகச் சிறிய அளவில் கதிர்வீச்சுக் கழிவுகளும் வெளியேற்றப்பட வாய்ப்புண்டு என்று CERN சுற்றுச்சூழல் வலைத்தளம் தெரிவிக்கிறது. இத்தாலியில் உள்ள க்ரான் ஸாஸ்ஸோ என்கிற நியூட்ரினோ ஆய்வகத்திலிருந்து ஒருமுறை தவறுதலாக pseudocumene என்கிற ஒரு வேதிப்பொருள் வெளியேறிய காரணத்தால், ஆய்வகம் சிலகாலம் மூடப்பட்டது.

றிவியலும் வாழ்க்கையும் பிரிக்க முடியாதவை. அறிவியலே இவ்வுலக வாழ்க்கையில் பெரும்பங்கு வகிக்கிறது. அறிவியல்சார் ஆராய்ச்சிகள்தான்,  இன்றைய பல நவீன முன்னேற்றங்களுக்கும் காரணம் என்பதை மறுக்கமுடியாது. எனினும், ஆராய்ய்சிகளால் தடுக்கவியலாப் பக்க விளைவுகள் உண்டு என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும்போது, ஆராய்ச்சிகளின் முடிவுகள் மட்டும் மக்களின் நலனுக்காக என்றில்லாமல், ஆராய்ச்சிகளின்போது வரும் விரும்பத்தகாத விளைவுகளையும் தடுத்து, மக்களைப் பாதுகாப்பதுதான் முழுமுதல் நோக்கமாக இருக்க வேண்டும்.

அதுவும் இந்தியா போன்ற நாடுகளில், மக்கள் நலன் என்பது இரண்டாம்பட்சமாகவே உள்ளது. மக்கள் நலன் முன்னிலைப்படுத்தப்படும் சூழ்நிலையை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாக இருக்க வேண்டியதுபோய், தம் குறைந்தபட்ச அடிப்படை உரிமைகளுக்காகவும்கூட மக்களே போராட வேண்டிய சூழல் உள்ள நம் இந்தியத் திருநாட்டில், தொடங்கவிருக்கும் நியூட்ரினோ ஆராய்ச்சிப் பணிகளிலும் நம் நலனை நாமே உறுதிசெய்துகொள்வோம்.

வெளிநாடுகளில் இதுபோன்ற ஆய்வகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றிலெல்லாம் சூழல் பாதிப்பு வரவா செய்கிறது என்று கேள்வி எழலாம். அங்கிருப்பதுபோல மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் அரசுவிதிகளும், கடுமையான தரக்கட்டுப்பாடு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு முறைகளும் இங்கு இல்லை என்பதுதான் பிரச்னையே. மேலும், “வெளிப்படைத்தன்மை” (transparency) என்பது துளியளவும் இங்கு இல்லை என்பது நாம் அறிவோம்.

சுவிட்சர்லாந்தின் CERN ஆய்வகத்தில் ஏற்படக்கூடிய மாசுகளைக் குறித்து தனி தளமே வைத்து விளக்கமளிக்கிறார்கள். இது போன்றதொரு வெளிப்படைத்தன்மையை இங்கு நாம் எதிர்பார்க்க முடியுமா?

இந்த ஆய்வகத்திற்காக, டார்ஜிலிங், நீலகிரி பகுதிகளை முதலில் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். நீலகிரியில் யானை உட்பட்ட வனவிலங்குகள் பாதிக்கப்படக்கூடும் என்கிற அபாயத்தால், கடும் எதிர்ப்புகள் எழுந்தமையால் அதைக் கைவிட்டு, இறுதியில் தேனிப் பகுதியைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.
ஆய்வகக் கட்டுமானப் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. திட்டப்படி, இந்த வருடமே ஒன்றிரண்டு மாதங்களில் துவங்கும் என்று சொல்லப்படுகிறது. கூடங்குளம் அணுநிலையத்தைப் போல, தலைக்குமேல் வெள்ளம்போய், நிலைமை கைமீறியபின் போராடாமல், வருமுன் காக்க இப்போதே விழித்துக் கொள்வோம்.




மேல்விபரங்களுக்கு:
http://www.facebook.com/ino.neutrino
http://uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=2412
http://siragu.com/?p=1733
http://www.sinthikkavum.net/2012/01/blog-post_19.html
http://www.poovulagu.net/2012/02/blog-post_21.html
http://www.ino.tifr.res.in/ino/faq.php
http://en.wikipedia.org/wiki/India-based_Neutrino_Observatory
http://www.newscientist.com/article/dn19620-indian-neutrino-lab-to-boast-worlds-biggest-magnet.html
http://www.imsc.res.in/~ino/OpenReports/minirep.pdf
http://www.thehindu.com/opinion/lead/a-controversy-we-can-do-without/article3975090.ece


பண்புடன்” இணைய இதழில் April 4, 2013 அன்று வெளிவந்த கட்டுரை.

Post Comment