Pages

ட்ரங்குப் பொட்டி - 8

பெட்ரோல் விலை ஒரு வாரம் முன்னே ஏறிடுச்சு!! இது எப்போன்னு யோசிக்காதீங்க. இந்தியாவில இல்லை, இங்கே அமீரகத்தில!! ஆமாங்க. நம்பமுடியலல்ல?? ஒரு லிட்டருக்கு 15 ஃபில்ஸ் (100 ஃபில்ஸ் = 1 திர்ஹம்) கூடியிருக்கு.  இனி ஒரு லிட்டர் 1.52 திர்ஹம்கள் விலை (கிட்டத்தட்ட 20 ரூபாய்)!! அடிக்க வராதீங்க மக்களே! இங்க இருக்கதுல இந்த பெட்ரோல் ஒண்ணுதான் சீப்பா கிடைச்சுகிட்டு இருந்துது. இனி அதுவும் அதிக விலைன்னா, கார் வைத்திருக்கும் மத்தியதரக் குடும்பங்களுக்கு பட்ஜெட்டில் வேட்டியே விழும்!! ஸ்கூல் பஸ் கட்டணங்களும் கூடும்.

அதிலயும், விசேஷம் என்னன்னா, இன்னும் கூட விலையேற்றம் இருக்கும், படிப்படியாக அதிகப்படுத்தப்படும்னு வேற அறிவிச்சுருக்காங்க!! இதுக்குக் கண்டனம் தெரிவிக்கும்முகமா, புதனன்று ஒருநாள் பெட்ரோல் பங்குகளைப் புறக்கணிக்கணும்னு எஸ்.எம்.எஸ்.கள் சுற்றி வருகிறதாம். எந்தளவுக்கு சாத்தியம்னு தெரியலை.

இதுவரை கேலன்களில் அளவிடப்பட்ட பெட்ரோலை, இப்பத்தான் சில நாட்கள் முன், லிட்டர்களில் அளவீடு செய்யப்படும்னு அரசாங்கம் அறிவிப்பு செய்து, செயல்படுத்தப்பட்டது. (1 gallon = 4 litres) இதுவும் ஒரு தந்திரம்னு ஒருவர் கருத்துத் தெரிவிச்சுருக்கார்; அதாவது 1 கேலனுக்கு, 60 ஃபில்ஸ் விலை கூடுதுன்னு சொன்னா அதிகமாத் தெரியும்; அதனால லிட்டர்ல மாத்தி, 15 ஃபில்ஸ்தானேன்னு தோணும்படியா செய்திருக்காங்க, அப்படின்னு புலம்பிருக்கார். அப்படியும் இருக்குமோ!!

நம்ம தலைவர், பஸ் கட்டணத்தை அதிகப்படுத்திட்டு, அந்த ஊர்ல இவ்வளவு, இந்த ஊர்ல இவ்வளவு, தமிழ்நாட்டுலதான் இன்னும் குறைவுன்னு சொல்றதுதான் ஞாபகத்துக்கு வருது!! ஒருவேளை அங்க ரிடையர்டான தலைமையகச் செயலாளர்கள் யாராவது இங்க வந்து அரண்மனையில வேலைக்குச் சேந்திருப்பாங்களோ??

&$&$&$&$&$&$&$&$&$&$&$&$&$&$&$

ங்க வீட்ல டி.வி.ல ஒன்லி டி.டி. சேனல்கள் மட்டும்தான் தெரியுதுன்னு சொன்னேனில்லையா? ஒருநாள் அதுல, யோகா பத்தி ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில யோகாவில் அதிகத் திறமை பெற்ற ஒருவரின் யோகா போஸ்களைக் காண்பிச்சுகிட்டிருந்தாங்க. “யோக வலிமையால் இவரால், கண்ணாடித்துகள்களை உண்ணவும், மூன்று இஞ்ச் நீளமுள்ள ஆணியைத் தன் கையில் ஏற்றிக் கொள்ளவும் முடியும்”னு அறிவிப்பாளர் சொல்ல, அச்சச்சோ, இதெல்லாம் காமிக்கப் போறாங்களா, ரிமோட் எங்க, சேனல் மாத்துன்னு சொல்லிகிட்டிருக்கும்போதே, “ஆனால் இவையெல்லாம் குரூரமான காட்சிகளாக இருக்கும் என்பதால் இவற்றைத் தவிர்க்கிறோம்.” அப்படின்னு சொன்னாங்களே பார்க்கணும்!! 

அதான் டி.டி.!! இதுதான் மற்ற தனியார் சேனல்களுக்கும் டி.டி.க்கும் உள்ள வித்தியாசம்!!

90-களில், நேயர் கடிதங்களை வாசிக்கும் “எதிரொலி” நிகழ்ச்சியில், ஒரு நேயரின் “தனியார் தொலைக்காட்சிகள் போல நீங்கள் சுவையான நிகழ்ச்சிகள் வழங்குவதில்லையே” என்ற கேள்விக்குப் பதிலளித்த ஒருவர் (நடராஜன் என்று நினைக்கிறேன்) “தனியார் தொலைக்காட்சிகள், உங்கள் நாவின் ருசியை மட்டுமே நிறைவு செய்யும் ஹோட்டல் போல;  எங்கள் நிகழ்ச்சிகளோ, உங்கள் வயிற்றைக் கெடுக்காத, முழு உடலுக்கும் தேவையான போஷாக்கான வீட்டு உணவு போல!!” என்றது நினைவுக்கு வந்தது.

&$&$&$&$&$&$&$&$&$&$&$&$&$&$&$


 துபாய்லருந்து கொச்சி போன எமிரேட்ஸ் விமானம், கொச்சி பக்கத்துல வந்தப்போ, பயங்கர டர்புலன்ஸ்ல (Turbulence - தமிழ் வார்த்தை என்ன?) அகப்பட்டதுல 20 பேர் வரை காயமடைஞ்சுருக்காங்க. டர்புலன்ஸ்னா, நாம் ஆட்டோல போகும்போது பள்ளத்துல போனா குலுக்குமே அந்த மாதிரி இருக்கும். இடி மழை இருக்கும் இடங்களில் அதிகமா இருக்கக்கூடுமாம். 35,000 அடி உயரத்துல பறந்துகிட்டிருந்த விமானம், இதற்குக் காரணமான, கீழ்நோக்கிச் செலுத்தும் காற்றுப் பொட்டலத்தில (air pockets) சிக்கியதில், 15,000 அடி தூரத்திற்குக் கட்டுப்பாடின்றி ஒரேயடியாகக் கீழிறங்கியிருக்கிறது.   இம்மாதிரிச் சூழ்நிலையில் காயம்படாம இருக்கணும்னா, எப்பவும் சீட் பெல்ட் போட்டுட்டே இருக்கணும். ஃபிளைட்ல போறவங்க இனி கவனமா இருங்க.
 
&$&$&$&$&$&$&$&$&$&$&$&$&$&$&$

பெட்ரோல் விலையேற்றம் பற்றி என் ரங்ஸ் ரொம்பக் கவலையாப் பேசிகிட்டிருந்தார். இனிமே ஒரு ஃபுல் டாங்க் பெட்ரோல் போடும்போது இவ்வளவு அதிகமாகும்; இன்னும் அதிகமாகிடுச்சுன்னா அவ்வளவு அப்படின்னு கணக்குப் போட்டுகிட்டிருந்தார். எனக்குப் புரிஞ்சுது இந்தப் பில்ட்-அப்பெல்லாம் எதுக்குன்னு. “ஆமாங்க, இனி துபாயில இருக்க உங்க அண்ணன் வீட்டுக்கும், அல்-அய்ன்ல இருக்க உங்க அக்கா வீட்டுக்கும் மாசம் ஒருமுறை போறதை இனிக் குறைச்சுக்கலாம். எவ்ளோஓஓஓ பெட்ரோல் ஆகும்!!” அப்புறம் சவுண்டைக் காணோம்!! யார்கிட்ட?

நல்லவேளை என் தங்கச்சிங்க அபுதாபிலயே இருக்காங்க!!


Post Comment

ஆறுமுகத்தாய் - 2

இதன் முந்தையப் பகுதி இதோ இங்கே!!

அவள் அன்று வரவில்லையென்றதும், எனக்கு மீண்டும் அழுகை, அழுகையாக வந்தது.  தோழிகளுக்கோ இது ஒரு பெரிய விஷயமாகவே தெரியவில்லை. பேனாதானே, நாளைக்கு வரும்போ தரப்போறா, இதுக்கேன் அலட்டிக்கிறே என்கிறமாதிரியே பேசினார்கள். நான் என் கையிலிருந்த சாதாரணப் பேனாவைக் கொடுக்காமல், ஹீரோ பேனாவை  ஏன்  கொடுத்தேன் என்று அப்போத்தான் நினைத்து நொந்துகொண்டேன்.

காலை இடைவேளையின்போது, ‘பி’ செக்‌ஷனில் அவளோடு வரும் இசக்கியம்மாளைத் தேடிப் போனேன். அவளுக்கும் அவள் வராததின் காரணம் தெரியவில்லை.  நான் அவளிடம், மதியம் சாப்பிடப்போகும்போது ஆறுமுகத்தாயைப் பார்த்து என் பேனாவை வாங்கி வரும்படிச் சொன்னேன். அவள் ”அதுக்குலாம் நேரமிருக்காது.  அவுங்கூடு வேற தெருவு. அந்நேரத்துக்கு எங்கூட்ல இருக்க ஒரு அஞ்சாறு வேலையள  செஞ்சுட்டு,  நாந்தின்னுட்டு ஓடியாரதுக்கே செரியாருக்கும்”னா. ”முடிஞ்சாப் பாரு, ப்ளீஸ், ப்ளீஸ்”ன்னு சொல்லிட்டு வந்தேன். சொன்னதுபோல, அவ வாங்கிட்டும் வரலை.  இன்றும் எப்படிச் சமாளிப்பது? மாமூட்டு வாப்பா திட்டமாட்டாங்கதான், ஆனாலும் வாங்கிய பொருளைப் பத்திரமாகத் திருப்பிக் கொடுக்கணுமே. அதுவும் ஹீரோ  பேனாவாச்சே??

மாலையில் பள்ளிவிட்டதும், இசக்கியம்மாளிடம் மிகக் கெஞ்சி, ஆறுமுகத்தாயின் வீட்டிலேயே போய்ப் பார்க்கலாமென்று.  அவளோடேக் கிளம்பினேன். பள்ளியிலிருந்து கிளம்பி, எதிரேயுள்ள ஆஸ்பத்திரி கேட் வழியே சென்று, நேரே பின்பக்கம் வழியே வெளியே வந்து  கொஞ்ச தூரம் போனால் அந்தக் குடிசைப் பகுதி வந்தது.  உள்ளே சிறிது தூரம் சென்ற பிறகு, இசக்கி, “அந்தா அந்தத் தெருவுல போய், கடசில உள்ள சந்துல போனா, முனையில இருக்கதுதான் அவ வூடு. என் வூட்டுக்கு இந்தால போவணும். வாரேன்” என்று சொல்லி போயே விட்டாள்!! 

 எனக்குத் திக்கென்றது. பாவி இவள் கூடவருவான்னு நினைச்சில்லியா வந்தேன்; இப்படிப் பாதில விட்டுட்டுப் போறாளே; இதுல எங்க சந்து, எங்க முனைன்னு தேடுவேன்? பார்க்கவே பயமாருக்கே? அப்போவெல்லாம் படங்களில் ஜம்பு  என்ற பெயருடைய ரவுடிகள் சேரியில்தான் அதிகம் இருப்பார்கள். அதெல்லாம் வேறே நினைவுக்கு வந்து தொலைந்தது. இதுபோன்ற குடிசைப் பகுதிகள் படங்களில்  நல்ல அபிப்ராயம் தரும் வகையில் அமைவது அரிதே. இங்கே தனியாக நடக்கவும் நடுக்கமாக இருந்தது.  ஆள் நடமாட்டமும் இல்லை.

யாரிடமாவது கேட்கலாம் என்றாலும், அவளின் பெயர்தான் தெரியுமே தவிர, அவள் வீட்டுப்பேரோ(?), பெற்றவர்கள் பெயரோ எதுவும் தெரியாது. என் ஊரில் என்னைத் தேடி வருபவர்களுக்கு என் பேரைச் சொன்னால் தெரியுமா? என் வீட்டுப் பெயர் சொன்னாத்தான் தெரியும் . அதிலும், வாப்பா வீட்டுப் பெயரைவிட,  மாமூட்டுவாப்பாவின் பெயர் சொன்னால் உடனே அட்ரஸ் சொல்லிவிடுவார்கள். அவ்வளவு ஃபேமஸ் மாமூட்டுவாப்பா. அதுபோல ஆறுமுகத்தாய்க்கு வீட்டுப் பெயரெல்லாம் இருக்குமா? என்னென்னவோ யோசித்துக் கொண்டே சந்து, முனையெல்லாம் தாண்டி, அங்கு வாசலில் தலைசீவிக்கொண்டு நின்றிருந்த ஒரு பெண்ணிடம் ”ஆறுமுகத்தாய் வீடு எது” என்று மெதுவாக இழுத்தேன். அவர் “இந்தா கடசி வூடு. நீ ஆரு, அவகூடப் படிக்கப் பிள்ளையா?” என்று கேட்க, ஆமாவென்று தலையாட்டிக் கொண்டே அவசரமாக அந்த கடசி வீட்டு வாசலுக்கு ஓடினேன்.

எப்படிக் கூப்பிடுவது? கதவைத் தட்டலாம் என்றால், அந்தச் சின்னக்கதவு திறந்தேதான் இருந்தது. வீடும், தெருவைப் போலவே அமைதியாய் இருந்தது. வாசலுக்கு நேராக, சுவற்றில் ஒரு அலமாரித் தட்டு மாட்டப்பட்டு, அதில் சாமி படங்கள் இரண்டு, மூன்று வைக்கப்பட்டிருந்தன. சில நோட்டுத்தாள்கள் அதில் இறைந்து கிடந்தன. மெதுவாய் அவளைக் கூப்பிட்டேன். சத்தமாய்க் கூப்பிட்டால் ஜம்புவோ, ஜக்குவோ வந்துவிடக்கூடாதே!!  அவளும், அவள் அம்மாவும் சேர்ந்தே வந்தார்கள். அப்பாடா என்றிருந்தது.

“ஏ ஆறுமுவம், உங்கூட்டாளிப் புள்ளயா இது?” அவள் பேசுமுன் அம்மாவே தொடர்ந்தார், “நீ  பேனா வாங்கிட்டு வந்தேன்னு சொன்னியே, அந்தப் புள்ளயா?” அவள் தலையாட்டவும் என்னிடம் திரும்பி, “ரெண்டு நாளா அதத்தான் சொல்லிச்சொல்லி  மாஞ்சுட்டிருக்கா ஆத்தா. பேனாவத் திருப்பி குடுக்கல, குடுக்கலன்னு ஒரே புலப்பம்தான். நீந்தான அவளுக்கு எப்பவும் நோட்டுலாம் கொடுப்பியாம். சொல்லுவா. அவ சமஞ்சுட்டா. ஒரு வாரமாவது வூட்டுல இருக்கணுல்ல. அத்தான் அவளுக்கு ஒரே வெசனம். ஆர்ட்டயாவது கொடுத்து வுடலான்னா, தீட்டுவூடு பாத்தியா, ஆரும் வரமாட்டாவ. என்ன செய்யன்னுட்டேயிருந்தா. நாந்தான் வரணுன்னு நெனச்சேன். நல்லவேள தாயி, நீயே வந்திட்ட.” என்றார்.

அப்போத்தான் அன்று அவள் ஏன் வரவில்லை, ஒருவேளை உடம்பு சரியில்லையோ, அல்லது வேறு ஏதேனும் பிரச்னையோ என்றெல்லாம் யோசிக்காதது என் நினைவுக்கு வந்தது. தலைகுனிந்து நின்றேன்.  என் பேனாவை மட்டுமே நினைத்துக் கவலைப்பட்டேனே!! அதுக்குள்ளே அவள், “உள்ர வா” என்று அழைக்க, நான் இன்னும் மருகி, “இல்லை, பரவால்லை; நேரமாச்சு” என்று மட்டும் சொல்லிவிட்டு, மேலே தொடரத் தெரியாமல் நின்றுகொண்டிருந்தேன்.

அதற்குள் அவளே, மாடத்திலிருந்த சாமி படத்தின் பின்னிருந்து பேனாவை எடுத்துத் தந்தாள். “அன்னிக்கு நான் தரதுக்குள்ள நீ போயிட்ட. மறுநா தரலான்னு நெனச்சிட்டிருந்தேன்” என்று என்னென்னவோ சொல்லிக் கொண்டிருக்க நான் அவசரமாக,  “போறேன்” என்று ஒற்றை வார்த்தையில் விடைபெற்று வந்தேன்.

ஹீரோ பேனாவை மட்டும் மதித்த நான் எங்கே, என்னை, நட்பை அதிகம் மதித்து சாமிப்படத்தின் பின் பத்திரமாக வைத்திருந்த அவள் எங்கே?
Post Comment

ஆறுமுகத்தாய் - 1
ங்க விட்டோம்?  ஆங்..  ஆறாம் வகுப்பு படிக்கும்போது, வாப்பாவின் உடல்நிலை காரணமாக, உம்மாவும் சவூதி சென்றுவிட, நானும் தங்கையும் மட்டும் உம்மாவின் வீட்டில். அதனால் ஏற்பட்ட பரிவினால், மாமூட்டுவாப்பாவின் ( தாத்தா)  ஹீரோ பேனாவால் ஹோம்வொர்க் மட்டும் எழுதும் சலுகை  எனக்கும் மட்டும் அவ்வப்போது கிட்டும்.

ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரி எதிரில் உள்ள நெல்லை காந்திமதி அம்பாள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அரசினர்ப் பள்ளி என்பதால், பெரும்பாலும் சுற்றியுள்ள கிராமங்களின் அடித்தட்டு மக்களின் பிள்ளைகள்தான் அதிகம்; அதோடு, பக்கத்தில் எம்.ஓ.ஸி. (Muslim Orphanage Committee)யிலிருந்து வரும் ஆதரவற்ற பிள்ளைகளும், அங்கேயே பணம் கொடுத்து தங்கியிருக்கும் சற்றே வசதியானவர்களின் வீட்டுப் பிள்ளைகள் என,  நகரத்தின் மற்ற பள்ளிகள் போலல்லாமல், எல்லாருமே எளிமையானவர்கள்தான். பகட்டு, பணக்காரத்தனம் என்பதையே பார்க்க முடியாது. இது தெரியாமல் வந்து சேர்ந்த சில எக்ஸப்ஷனல்களும், ஒரு மாததிற்குள்ளாகவே வேறு பள்ளிக்குப் போய்விடுவார்கள்.

பள்ளியில் நான், பானு, லாரா ஆகிய மூவரும்தான் செட். முதல் மூன்று ரேங்குகளும் எப்பொழுதும் எங்கள் வசமே. லாரா கிறிஸ்டியனோ என்று நினைத்தேன்,  அவள் அப்பா கம்யூனிஸ்ட்டென்பதனால் வச்சப் பேராம்.  ஆறுமுகத்தாய்தான் எப்பவும் நான்காவது ரேங்க்  எடுப்பாள். ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியின் பின்னால்  இருக்கும் சேரியில்தான் அவள் வீடு, இல்லையில்லை, குடிசை. நல்ல உயரம், ஒல்லி, களையான முகம், அதிர்ந்து பேசாத பேச்சு. பார்த்தாலே அவளுக்கு எல்லாரையும்விட வயது ஒன்றிரண்டு அதிகம் என்று தெரியும். யாரோடும் அதிகம் பேசமாட்டாள். ரொம்ப அமைதியாருப்பதைப் பாத்து எனக்கே ஆச்சர்யமாயிருக்கும். பாடத்தில் சந்தேகம் வந்தாலும் அல்லது வேறு என்னதென்றாலும்  என்னிடம்தான் கேட்பாள். அடிக்கடி லீவு போடுவதால், பாடங்கள் எழுத என் நோட்டுகளைத்தான் வாங்கிச் செல்வாள். ஏன் பானுவிடமோ, லாராவிடமோ கேட்பதில்லை என்று தோன்றியதில்லை அப்போ. அதற்காக என்னிடம் அவள் அதிகம் நெருங்கிப் பழகியதுமில்லை. நானும் ஒட்டாமலும், விலகாமலுமாக இருந்தேன். அவள் அங்குள்ளக் குடிசைப் பகுதியில் இருந்து வருகிறாள் என்பதைத் தவிர வேறு விவரங்கள் எதுவும் தெரியாது.

ரு நாள் காலை பள்ளி வந்தபோது, என் பென்ஸில் பாக்ஸில் தாத்தாவின் ஹீரோ பேனா இருப்பதைப் பார்த்து அதிர்ந்துப் போனேன்!! இரவு எழுத வாங்கியதைத் திருப்பிக் கொடுக்க மறந்துவிட்டேன் போல!! அய்யோ, மாமுட்டுவாப்பா என்ன நினைப்பார்கள், கோவப்படுவாங்களோ, வீட்டுக்குப் போனா திட்டு விழுமோ, என்கிட்ட பேனாவைக் கொடுத்திட்டா, எழுத பேனாவுக்கு என்ன செய்வாங்க என்றெல்லாம் எண்ணங்கள் என்னைக் குழப்பின.  அந்தக்காலக் குடும்பங்களில் தாத்தாக்கள்தானே  பவர்ஃபுல்!! முணுக்கென்றால் கோவம் வரும், எல்லாரும் நடுங்கித்தானே நிற்பார்கள். ஆனால், அந்தக் காலம், இந்தக் காலம் எல்லாத்துலயும் பேரப்பிள்ளைங்கன்னா ஒரு தனி பாசம்தானே தாத்தாக்களிடம்!! அதுவும் பெற்றோரைப் பிரிந்து நிற்பதால், என்னிடம் அதுவரை கோவப்பட்டதேயில்லை.

இருந்தாலும், ஹீரோ பேனாவின் அரிய மதிப்பினால், தெரியாமல் மறந்துபோய் பள்ளிக்குத் தங்க வளையலோடு போன மனநிலையில் இருந்தேன் நான். இதைப் பத்திரமாக வைத்திருந்து, வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டுமே என்பதோடு  திட்டும் வாங்கக் கூடாது என்ற கவலையும் இருந்தது. பத்திரமாக பாக்ஸை மூடி பையினுள் வைத்தேன். இன்று முழுவதும் வகுப்பைவிட்டு வெளியே போகக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன். கூரை வகுப்புக்கு கதவும் இல்லை. மனம் எதிலும் லயிக்கவில்லை.

ன்று மதியம் கடைசி பீரியட். அறிவியல் பாடம், தங்கப்பொண்ணு டீச்சர். விளையாட்டாகப் பேசுவதால் அவரை ரொம்பப் பிடிக்கும். அவர் கேள்வி-பதில் சொல்லச் சொல்ல, நாங்கள் எழுதிக் கொள்ளத் தொடங்கினோம். அப்பத்தான் ஆறுமுகத்தாய் எழுந்து, தன் பேனா எழுத மாட்டேங்குது என்று சொன்னாள். டீச்சர் வேறு யாரிடமாவது ரெண்டு பேனா இருந்தா கொடுங்க என்று சொன்னார். என்னிடம் தாத்தாவின் ஹீரோ பேனா இருப்பது ஞாபகம் வந்தாலும், வேறு யாராவது கொடுப்பார்கள் என்று நினைத்துப் பேசாமல் இருந்தேன். ஆனால் யாருமே கொடுக்கவில்லை. நான் அமைதியாக இருந்திருக்கலாம்; ஆனால், கேட்பது ஆறுமுகத்தாய் வேறு; எப்படி முடியாதென்று சொல்வது? பென்சில் டப்பாவைத் திறந்து ஹீரோ பேனாவை எடுத்து அவளிடம் கொடுத்தேன்.

அந்த வகுப்பு முடிந்து, பேருந்தைப் பிடிக்கும் அவசரத்தில் ஓடி வந்து, பாளையங்கோட்டை பஸ் ஸ்டாப்பில் இறங்கி, அடுத்த பஸ்ஸைப் பிடித்து ஏறிய பின்தான் ஞாபகம் வந்தது, ஹீரோ பேனா!!! ஆறுமுகத்தாயிடம் கொடுத்தது, பின் திருப்பி வாங்கவேயில்லை!! கண்ணெல்லாம் நிறைந்துவிட்டது எனக்கு. என்ன செய்வதென்றே தெரியவில்லை. இப்படியே இறங்கித் திரும்பிப் போலாமா, போனாலும் அவள் பள்ளியில் இருக்க மாட்டாளே, வீடும் தெரியாது. லேட்டானாலும் எனக்கும் வீட்டில் திட்டு விழும். எனக்குத்தான் மறந்துவிட்டது; இவளாவது கூப்பிட்டுத் தர வேண்டாமா என்று அவள்மேல் கோவம் கோவமாக வந்தது. என்ன செய்ய என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே ஊர் ஸ்டாப்பிங் வந்துவிட்டது. வேறுவழியில்லாமல் இறங்கினேன்.

ரி, இன்றையப் பொழுதை எப்படியாவது சமாளிப்போம்; நாளைக் காலை முதல் வேலையா அவளிடம் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தேன். தாத்தா, விவசாயம், வியாபாரம், தியேட்டர் ஆகியவற்றோடு கொஞ்சம் அரசியலும் செய்வதால், வீட்டிற்கு வரும்போகும் நேரங்கள் நிச்சயமில்லை. தெருவீட்டீல் (ஹாலில்) குழந்தைகள், சாச்சிகள், மாமாக்கள் என்று எல்லாரும் ஜமா நடத்திக் கொண்டிருந்ததால், மாமூட்டுவாப்பா தற்போது  வீட்டில் இல்லை என்பது தெரிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். மெதுவாக விசாரித்ததில், இப்பத்தான் காரில் கிளம்பிப் போனது தெரிந்தது. அப்பாடா, இப்பத்தான் போயிருக்காங்கன்னா, வர்றதுக்கு பத்து, பத்தரை ஆகும். இன்னிக்குச் சீக்கிரம் தூங்கிடணும், அப்பத்தான் லேட்டா வர்ற மாமூட்டுவாப்பா கண்ல படாம இருக்கலாம். காலையில் நான் சீக்கிரம் கிளம்பிவிடுவதால் அதிகம் கவலையில்லை.

யாரும் எதுவும் என்னிடம் கேட்காததிலிருந்து, தாத்தா யாரிடமும் எதுவும் சொல்லிவைக்கவில்லை என்பதும் ஊர்ஜிதமானது. நினைத்த மாதிரியே, இரவு சீக்கிரம் தூங்கி, காலை வழக்கத்தைவிடச் சற்று முன்னரே கிளம்பிவிட்டதால் தாத்தா கண்ணில் ஒருமுறை பட்டாலும், கேள்வி எதுவும் கேட்க நிற்காமல் ஓடி வந்துவிட முடிந்தது. பள்ளி வந்து, ஆறுமுகத்தாய் வரவை எதிர்பார்த்து வகுப்பு வாசலிலேயே நின்றேன். ஆனால், அவள் அன்று வரவில்லை!!

Post Comment

ஹீரோ பேனா
பள்ளியின் ஆரம்பகால வகுப்புகளில பலப்பக்குச்சி வச்சு எழுதப் படிச்சுகிட்டு, அப்புறம் பென்சில் வச்சு நோட்டுப் புத்தகத்துல எழுதும்போது  ரொம்ம்ம்ம்பப் பெருமையா இருக்கும். பென்சிலால எழுதும்போது, சிலேட்டு மாதிரி நாம எழுதுறது அழிஞ்சு போகாதுங்கிறதுதான் அதீத சந்தோஷமான விஷயமாயிருக்கும். அதுவுமில்லாம, நாம எழுதினதுல, கோணலா உள்ள எழுத்துக்களை மட்டும் அழிரப்பர் வச்சு அழிச்சுட்டு, திரும்பி அழகா எழுதிக்கலாம். இதுவே சிலேட்டு என்றால், ஒரு எழுத்தை அழிக்கும்போதோ அல்லது சும்மா இருக்கும்போதோ, கைபட்டு, அந்த ஏரியாவே அழிஞ்சுபோறது கடுப்பாருக்கும். அதுவும், பென்சிலை, கத்தி அல்லது கத்திரி வச்சு  ஊசியா சீவிட்டு எழுதினா, எழுத்தெல்லாம் பாக்க அச்சடிச்சா மாதிரி அழகா இருக்கும்.  எழுத்து நல்லா இல்லைன்னாலும் கூட நோட்டு ரொம்ப  நீட்டா இருக்கும்.
ஐந்தாம் வகுப்பில்தான் முதன்முதலில் பேனாவால் எழுதுவோம். பிரைமரி ஸ்கூலில் பேனாவால் எழுத ஆரம்பித்தவுடன் “சீனியர்” என்ற கெத்து வந்துவிடும்!! அப்பத்தான் கொஞ்சம் திருந்தி வர ஆரம்பித்திருக்கும் எழுத்தும், பேனாபிடித்து எழுத ஆரம்பித்த மிதப்பிலும், அனுபவமின்மையாலும் தந்தியடிக்க ஆரம்பிக்கும்.  அதுவும் ஃபௌண்டன் பேனாதான் உப்யோகிக்க வேண்டும். ஸ்கூலில், பால்பாயிண்டெல்லாம் கண்டாலே, கை முழியில் மரஸ்கேலை நட்டகுத்தர வைத்து அடி விழும்.  இங்க் தீர்ந்து போதல், ஒழுகுதல், நிப் பிளந்து போதல் என்று அவ்வப்போது பேனாவை ரிப்பேர் பார்க்கும் முயற்சியில் கையில், நோட்டில் இங்க் கறைகளுக்காக டீச்சரிடமும், உடைகளின் கறைக்காக அம்மாவிடமும் திட்டு வாங்க வேண்டியிருக்கும்.


எண்பதுகளின் ஆரம்பத்தில், ஹீரோ பேனா என்பது, பேனாபிடித்து எழுத ஆரம்பிக்கும் ஒவ்வொரு சிறாரின் கனவு!! இன்றைய இளைஞர்களின் கனவான பென்ஸ், லெக்ஸஸ், பி.எம்.டபிள்யூ. போல அன்று எங்களுக்கு!! இரண்டாம் முறையாக எழுதப் பழக ஆரம்பித்திருக்கும் எங்களுக்கு ஒரு ரூபாய் பேனா கிடைத்தாலே அதிகம். இதில் எங்கே ஹீரோ பேனாவுக்கு ஆசைப்படுவது? ஹீரோ பேனாவின் பெருமையே நுனி மட்டும் தெரியும் நிப்பும், கையில் படாமல் இங்க் ஊற்றும் வசதியும்தான். மற்ற லோக்கல் பேனாக்களில் மை அடைக்கக் கஷ்டப்படுவதுபோல இதில் படவேண்டாம்.இந்தியப் பேனாக்களில், அதன் கழுத்தைத் திருகித் திறந்து, அதன் வயிற்றுப் பகுதியில் பிரில் இங்க் பாட்டிலைக் கவனமாகக் கவிழ்த்து மையை ஊற்ற வேண்டும். எவ்வளவு கவனமாக ஊற்றினாலும், அது நிரம்பி வழிந்தோடத்தான் செய்யும் அல்லது அலங்கி கீழே சிந்தும். அதற்கென்று கிடைக்கும் இங்க் ஃபில்லர்களையும் பயன்படுத்தலாம். அப்படியே கவனமாக ஊற்றி விட்டாலும், அதன் கழுத்தை மூடித் திருக்கும்போது பேனாவைக் கவிழ்த்து, இங்க் பாட்டிலின் நேரே பிடித்தால்தான் நிப்பின் வழி விழும் சொட்டுக்கள் கீழே சிந்தாமல் இருக்கும். இதையெல்லாம் எவ்வளவு கவனமாகக் கணக்குப் போட்டுத் துல்லியமாகச் செய்தாலும், எங்கயாவது சிந்தி, நோட்டில் மட்டுமல்லாமல் கையிலும் ஈஷும். அதைத் தன்னிச்சையாக உடையில் துடைக்க, உடையிலும் முத்திரை விழும். வீட்டிலும் அடி நிச்சயப்படும்!!

இதுவே பள்ளியில் வைத்து பேனாவில் இங்க் தீர்ந்துபோனால், அதோ கதிதான்!! யாரிடமாவது கெஞ்சிக் கேட்டு (இன்னைக்கும் நானும் இங்க் ஊத்தலைப்பா!!), கருணைப் பார்வை அருள்பவருக்கு நன்றி கூறி, இருவரின் பேனாக்களையும் திறந்து,  சர்வ ஜாக்கிரதையுடன், பிரார்த்தனை செய்துகொண்டே, இந்தப் பேனாவிலிருந்து அந்தப் பேனாவுக்கு இங்க் டிரான்ஸ்ஃபர் செய்வோம். (இப்பவெல்லாம் டிரான்ஸ்ஃபர் என்றால் அக்கவுண்ட் ட்ரான்ஸ்ஃபர்தான் நினைவுக்கு வருகிறது!!).


என் வாப்பா சவூதியில் இருந்து வரும்போதெல்லாம் ஒரு பாக்ஸ் ஹீரோ பேனா (12 பேனாக்கள்) வாங்கி வந்தாலும், அவை அதன் அதீத மதிப்பு, அந்தஸ்து காரணமாக உறவினர்களுக்கும், நண்பர்களுக்குமே விநியோகிக்கப்பட்டன. கொடுத்ததுபோக மிச்சம்மீதி இருக்கும் ஒன்றிரண்டு பேனாக்களும் அம்மாவின் கஸ்டடியில் வந்துவிடும். அவை அடுத்த முறை வாப்பா வரும்போது ஒருவேளை பேனாக்களின் எண்ணிக்கை குறைந்தால், சப்ளை-டிமாண்ட் காம்பன்சேஷனுக்கு உதவும்!!.  எவ்வளவு கெஞ்சினாலும்  ”இந்த வயசுலயே..... “ என்று ஆரம்பித்து சில ஆசிகள்தான் எனக்கெல்லாம் கிடைத்தன.ஆசைக்கு வேண்டுமெனில் வாப்பா அல்லது மாமாவின் பேனா எடுத்து எழுதிப் பர்த்துக் கொள்ளலாம், அவ்வளவுதான்.

ஏழாம் வகுப்பு இறுதியில்தான் ஒரு செகண்ட் ஹாண்ட் ஹீரோ பேனா எனக்கே எனக்கென்று கிடைத்தது!!

 (ஹீரோ பேனாவுடன் எனக்கேற்பட்ட சிறுவயது அனுபவம் ஒன்றை எழுத ஆரம்பித்தப்பொழுது, “product introduction"-ஏ இவ்வளவு நீண்டுவிட்டதால், சம்பவம் அடுத்தடுத்த பதிவுகளில் - யெஸ்,  நீங்க தப்பிக்கவே முடியாது!!)

Post Comment

ஒரு ஐஸ் எரிமலையாகிறது!!


என்ன, “தென்றல் புயலாகிறது”, “பூ ஒன்று புயலானது” வரிசையில் சினிமாத் தலைப்புப் போல இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? இதுவும் அப்படித்தான், “பொறுத்தது போது பொங்கியெழு” என்று பூமி எரிமலையாகப் பொங்கிய கதைதான்!!

mapsofworld.com

ஐஸ்லாந்து நாடு - கிரீன்லாந்து பக்கத்தில், அட்லாண்டிக் கடலில் இத்தணூண்டு தீவு என்று ஏழு அல்லது எட்டங்கிளாஸில் புவியியலில் படித்திருப்போம். பேரிலிருந்தே தெரிகிறது, முழுதும் ஐஸால் மூடியிருக்கும். இவ்வளவுதான் அதிகப்டசத் தகவல் எனக்கும் தெரியும் ஐஸ்லாந்து குறித்து!! இந்தக் குட்டித் தீவுதான், இப்ப ஐரோப்பாக் கண்டத்தையே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது!!

நீரும், நெருப்பும்!!

ஐஸ்லாந்து, பொதுவாகப் பனிப் பிரதேசம் என்றாலும், சில எரிமலைகளையும் உள்ளடக்கியது!!  எல்லா எரிமலைகளையும்போல, இவையும் சில சமயம் குழம்பைக் கக்கினாலும், பெரிதும் அமைதியாகவே இருக்கும். இங்குள்ள ”ஐயாஃப்யாத்லாஜோகுத்ல்”  (Eyjafjallajokull) என்ற பனி ஆற்றின் (Glacier) அடிவாரத்தில் உள்ள எரிமலை சென்ற புதனன்று (14-ஏப்ரல்) குழம்பைக் கக்க ஆரம்பித்ததில் ஏற்பட்ட புகைமண்டலம் ஏற்படுத்தும் பாதிப்புத்தான் ஐரோப்பாவை ஸ்தம்பிக்க வைத்துள்ளது!!

bbcnewscom
இந்த எரிமலைக் குழம்பினால் ஏற்பட்ட புகைமண்டலம், ஐஸ்லாந்தில் தரைவழிப்போக்குவரத்தைத் தடை செய்ததோடல்லாமல், வான்வழிப் போக்குவரத்தையும் பாதித்துள்ளது. இது அப்படியே பரவி, பிரிட்டன், செர்மனி, ஃப்ரான்ஸ், டென்மார்க் என்று ஐரோப்பாவின் வளிமண்டலத்திலும் பரவ, ஐரோப்பா முழுவதும் வான்வழிப் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது!!  இப்போது இப்புகை ரஷ்யாவிலும் பரவத்தொடங்கியுள்ளதாகத் தகவல்!! இந்நாடுகளுக்கு உலக முழுவதுமிருந்தும் விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது!!

இன்றோடு மூன்றாவது நாளாக விமானங்கள் நிறுத்திவைக்கப் பட்டுள்ளதால், நாளொன்றுக்கு 200 மில்லியன் டாலர்கள் விமானத் துறைக்கு மட்டுமே நஷ்டமாகிறது என்றால், அதன் தொடர்புடைய தொழிற்துறைகளுக்கு நஷ்டம் எவ்வளவோ!!

cbsnews.com
ஏன் பறக்கக்கூடாது?

1. புகைமண்டலம், வான்வெளியை அடைத்திருப்பதால், தெளிவான காட்சி (visibility)  இருக்காது.
2.  புகையினால், வானில் பறக்கும் இரண்டாவது நிமிடமே, மூச்சுமுட்டல் ஏற்படலாம்.
3. எரிமலைக் குழம்பில் கண்ணாடி போன்ற கூரிய பனிக்கட்டித் துகள்களும், தூசி, மண், உலோகத் துகள்களும் கலந்திருப்பதால், அவை விமான இஞ்சினில் சென்று அவற்றைச் செயலிழக்கச் செய்யும். மேலும் விமானத்தின் கண்ணாடிகளையும் உடைக்கவோ, சேதப்படுத்தவோ செய்யலாம். (முன்பு சிறிய அளவில் நடந்திருக்கின்றன).

இன்னொரு முக்கியக் காரணம்,  இம்மாதிரிச் சம்பவம் வரலாற்றில் முன்நடந்திராததால், பாடம்படிக்க முன்அனுபவமும் இல்லை.1783ல் இதேபோல வேறொரு எரிமலையின் புகை 1784 வரை ஐரோப்பாவின்மீது பரவியிருந்ததாகவும், அதனால் தட்பவெப்ப மாறுதலால் பல ஆயிரம் உயிரிழப்பு நேர்ந்ததாகவும் தெரிந்தாலும், வான்வழியில் பாதிப்பு என்னவாக இருக்கும் என்பது அறுதியாக யூகிக்க முடியவில்லை.

ஏற்கனவே, பொருளாதாரத் தாழ்வால் ஆட்டம்கண்டிருக்கும் நிலையில், இன்னுமொரு ரிஸ்க் எடுக்க அவை தயாராக இல்லை என்பதே நிதர்சனம்.

என்ன செய்வது?

1. புகைமண்டலம் 20-30,00 அடிஉயரே மட்டும் இருப்பதால், தாழ்நிலையில் (3000 அடி) விமானங்கள் பறக்கலாம். ஆனால், பல நாடுகளும் தாழ்நிலையில் பறப்பதை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறுகாரணங்களுக்காகத் தடை செய்திருக்கின்றன!!

லூஃப்தான்ஸா, கே.எல்.எம். ஆகியவை இம்முறையில்  பரிசோதனை ஓட்டங்கள் செய்துவருகின்றன. அவசரத் தேவைகளுக்காக, இராணுவ விமானங்கள் அவ்வாறே தற்போது பறந்துகொண்டிருக்கின்றன. சுவிஸ் நாடு, 36,000 அடிக்கு மேலே பறக்க அனுமதியளித்துள்ளதாம்.

2. புகைமண்டலம் நீங்கும்வரை காத்திருப்பது. இதற்கு எத்தனை நாளாகும் என்று தெரியவில்லை. இந்த எரிமலை தொடர்ச்சியாக ஆறுமாதம் வரை குழம்பைக் கக்கக்கூடும் என்பதால், இதன் பாதிப்பு பெரிய அளவில் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

3. மாற்றுவழிகள் - சாலை, ரயில், கடல் வழிப் போக்குவரத்தை நாடுவது. ஆனால், பிரிட்டனிலிருந்து ஆஸ்திரேலியா போகவேண்டியவர் என்ன செய்வார்?

தொடர் விளைவுகள்:

இதுகுறித்து இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. 

1. எரிமலை வெடித்தது, பனிப்பிரதேசம் என்பதால், பனிப்பாறைகளை உருக்கி, வெள்ள அபாயம் ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், (முன் நடந்ததைப் போல) இது தொடரப்போகும் மற்ற எரிமலை வெடிப்புகளுக்கும், பூகம்பங்களுக்கும் அறிகுறி என்றும் சொல்கின்றனர். அதன் விளைவுகள் என்னென்னவோ?

2. எரிமலைக் குழம்பில் வெளிப்படும் ஸல்ஃபர்  வாயு, ஹைட்ரோசல்ஃபியூரிக் அமிலமாக மாறக்கூடும் என்றும், அதனால் வளிமண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பொதுவான விளைவு.

3. புகை கீழிறங்கி பூமியின் மேற்பரப்பில் வந்தால், சுவாசக் கோளாறுகள் ஏற்படலாம்.

4. ஆனால், இதே எரிமலைக் குழம்பின் அடர்ந்த புகை, வளிமண்டலத்தின் (atmosphere) Stratosphere என்ற மண்டலத்திற்குப் போகும்போது, பூமியைக் குளிரவைக்கும் என்றும், வெப்பமயமாக்குதலைத் தடுக்கும் என்றும் கூறப்பட்டாலும், அதன் (ஓஸோன் பாதிப்பு போன்ற) பின்விளைவுகள்  அதிகம் என்பதால், இவை விரும்பத்தக்கவையுமல்ல.


5. ஐஸ்லாந்தின் புவியியல் அமைப்பு, அமெரிக்கன் பூமித்தட்டு (American plate) மற்றும் யுரேஷியன் தட்டு (Eurasian Plate) ஆகியவற்றிற்கு மத்தியில் அமைந்ததால், அதன் ஒவ்வொரு நிகழ்வும் மிக உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. 

லகின் எங்கோ ஒரு மூலையில் நடந்த ஒரு சிறு நிகழ்வு, உலகத்தையே ஓரளவு ஸ்தம்பிக்க வைத்துள்ளது என்பது, “உலகம் சுருங்கிவிட்டது” என்ற சொல்லாடலின் அர்த்ததையே மாற்றியமைக்கிறது!!


Post Comment

பயாஸ்கோப்
மீண்டும் ஒரு தொடர்பதிவு!! நம்ம செந்தில்வேலன், பிடிச்ச 10 தமிழ்த் திரைப்படங்களை எழுதச் சொல்லி வேண்டி கேட்டுகிட்டார். அதனாலத்தான் எழுதுறேன்.

இதுவரை என் பதிவைப் படிக்கிறவங்க கவனிச்சிருப்பீங்க, நான் எவ்வளவோ நல்ல விஷயங்கள்( !! ) எழுதிருந்தாலும், பட விமரிசனமோ, சமையல் குறிப்போ ஏன் டிப்ஸ் கூட எழுதினதில்லைன்னு!! காரணம் பெரிசா ஒண்ணுமில்லை; எனக்கே தினம் சமையல் தரிகிடதோம்தான், அப்புறம் எங்க எழுத!! ஏதோ நல்ல வீட்டுக்காரர் வாய்க்கப் போய் தப்பிச்சேன்!! அவர்தான் சமையல்னு நான் சொல்றதா நீங்க கற்பனை பண்ணா, நான் பொறுப்பில்ல!!

எப்பேர்ப்பட்ட நல்ல படமாருந்தாலும், அது திரைக்கு வந்து, “உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக...” என்று ஏதாவதொரு சானலில் போட்டாலும் பார்க்காமல் (அந்த சேனல் தெரிஞ்சாத்தானே பாக்கிறதுக்கு?), அதுக்கப்புறம் டிவிடி கடையில “ஸ்டாக் கிளியரன்ஸ் சேல்”ல அந்தப் படத்த வாங்கிப் பாக்கிற நான், அதுவும் மூணுமணிநேரப் படமாருந்தாலும், ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் பண்ணி முப்பதே நிமிஷத்தில் பாத்து முடிக்கிற நான் எப்படி விமர்சனம் எழுதமுடியும்? அதான், நீங்க தப்பிச்சுகிட்டீங்க!!

ஆனாலும் இந்தத் தொடர் எழுதறதுக்காக நான் முன்காலத்துல பார்த்த, ரசித்த, மறக்கமுடியாத சில நல்ல படங்களை நினைவுக்குக் கொண்டுவந்து எழுதுறேன்!!


விதிகள்:  (உங்க தலைவிதியைச் சொல்லல, அதை மாத்த முடியாது!!)

1. தமிழ்ப் படங்கள் மட்டுமே பட்டியலில் வரவேண்டும்.

2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டி டிவிடியாவது வந்திருக்க வேண்டும்.

3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை.

1. நிறம் மாறாத பூக்கள்:

 ராதிகா, சுதாகர், விஜயன், ரதி நடிச்சது. ”ஆயிரம் மலர்களே”, ”இரு பறவைகள் மலை முழுவதும்” என்ற மெலடி சாங்ஸ் இருந்தாலும், ராதிகாவும், சுதாகரும் பாடின “முதல் முதலாகக் காதல் டூயட் பாட வந்தாயோ” என்ற காமெடிப் பாடல் மிகவும் ரசிக்கத்தக்கது. எண்பதுகளின் ஆரம்பத்தில் பார்த்தது. பிறகு நான் இந்தப் படம் பார்த்ததில்லையென்றாலும், பாடல்களின் மூலம் அந்தப் பாட்டின் காட்சிகளை நான் ரசித்துப் பார்த்தது நினைவுக்கு வரும்.

இங்கே  இப்படத்தின் பாடல்கள் இருக்கின்றன; கேட்டுப் பாருங்க!!

2. காதலிக்க நேரமில்லை:

இதுக்கு நான் விளக்கமே சொல்லத் தேவையில்லை; பலமுறை பார்த்து ரசித்த படம். அதுவும், அந்த ‘விஸ்வநாதன் வேலை வேணும்’, ‘பொன்னான கைகள் புண்படலாமா’வும் பார்த்துகிட்டேயிருக்கலாம்.

3. மை டியர் குட்டிச்சாத்தான்:

தமிழில் வந்த முதல் முப்பரிமாணப் படம். இதுவும் அப்பப் பாத்ததுதான், ஆனா அந்த முதல் பிரமிப்பு இன்னும் மனதை விட்டு அகலவில்லை.

4. விதி:

இந்தப் படம், வழக்காடு மன்றத்தில் நடக்கும் பரபரப்பான விவாதங்களுக்காகவே பார்க்கலாம். இதில் முக்கியமான விஷயம், கற்பழித்தவனைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்ற விதி மீறப்பட்டிருந்தது பிடித்திருந்தது. முதல்ல ரேடியோவில வசனங்கள் கேட்டுட்டு, அப்புறம் ரொம்ப நாள் கழிச்சுத்தான் படம் பாத்தேன்.

5. அச்சமில்லை அச்சமில்லை:

சரிதா, ராஜேஷ் நடிச்சது. ஒரு சாதாரண மனுஷன், அரசியலுக்கு வந்ததும் கெட்டுப்போகிற கதை. “ஓடுகிற தண்ணியில உரசி விட்டேன் சந்தனத்தை” பாட்டு கேட்டுகிட்டேயிருக்கலாம். ஒரு காட்சியில சரிதா ”இது மட்டும் நடந்துட்டா, உள்ளங்கையில சோறாக்குறேன்”னு சவால் விட்டு, அதுமாதிரியே, ஆக்கிக் காமிப்பாங்க, நடுங்கிட்டேன் அந்தக் காட்சியில்!!

6.  அன்னை ஓர் ஆலயம்:

அந்த குட்டி யானைக்காகவும் “அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே” பாட்டுக்காகவும் இன்னும் பார்க்கலாம்!! என் பிள்ளைங்களுக்கு நான் வாங்கிக் கொடுத்த சி.டி.களில் ஒன்று!! ஒருவகையில, மிருகங்களை அழிக்கக்கூடாதுன்னு அப்பவே சுற்றுச்சூழல் சேதி சொன்ன படம்!!

7.  அன்னை:

நடிகை பானுமதி ராமகிருஷ்ணா, எனக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர். அவரது ஆளுமைத்திறனுக்காகவே அவரைப் பிடிக்கும்.  ஒருமுறை ஒரு படப்பிடிப்பில், வில்லனிடமிருந்து பானுமதியைக் காப்பாற்றப் போடும் வாள்சண்டையில் எம்.ஜி.ஆர். திணறியதால், ”மிஸ்டர்.எம்.ஜி.ஆர், அந்த வாளைக் கொடுங்க இப்படி!! நானே சண்டை போட்டு என்னைக் காப்பாத்திக்றேன்” என்று சொன்னாராம்!!

அவர் நடித்த எத்தனையோ படங்கள் இருந்தாலும், இந்தப் படக்கதை, அவர் நடிப்பால் மேலும் சிறப்பாக இருக்கும். “பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று” என்ற இனிமையான பாட்டும், சந்திரபாபுவின், “புத்தி உள்ள மனிதரெல்லாம்” பாடலும் உண்டு.

8. வீடு:

அர்ச்சனா, பானுசந்தர் நடிச்ச படம். ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் வீடு கட்ட படுற சிரமங்களைச் சொல்ற படம். இப்பப் போல ஹெச்.டி.எஃப்.ஸி, பேங்குகள்,  ஹவுஸிங் லோன், இண்ஸ்டால்மெண்ட்ல ரெடிமேட் வீடு, அபார்ட்மெண்ட் பில்டர்ஸ் இதெல்லாம் இல்லாத காலம் அது!! அர்ச்சனாவின் நடிப்பை மிஞ்சும், அதில் நடித்த சொக்கலிங்க பாகவதரின் பாத்திரம்!!

9. ஆண்பாவம்:

இந்தக் கதையை இப்ப நினைச்சாலும் தன்னால சிரிப்பு வந்திடும்!! பாண்டியராஜனின் முதல் படம்; கொல்லங்குடி கருப்பாயிக்கு பேர் வாங்கிக் கொடுத்தப் படம்!! சிரிப்புப் படம்னாலும், தாயில்லாததால ஒரு குடும்பம் படுற கஷ்டமும் பிண்ணனியில் இருக்கும்.

10. சதிலீலாவதி:

இந்தப் படம் ரசிக்காதவங்க இருக்க முடியாது. கோவை சரளாவின் நடிப்புக்குப் புது பரிமாணம் கொடுத்த படம். பொண்டாட்டியைத் தள்ளிவச்சுட்டா, புள்ளை குட்டிகள், வயதான பெற்றோர், இன்னும் எல்லாப் பொறுப்பையும் அவதலைல கட்டிகிட்டு அடுத்தவளோட தனியா ஜாலியா இருக்கலாம்கிற டிபிகல் ஆம்பிளைங்க மெண்டாலிட்டிக்கு கல்பனா கொடுக்கிற ஷாக் டிரீட்மெண்ட்தான் எனக்கு இதில ரொம்ப ரொம்பப் பிடிச்சது!! அந்த அபார்ட்மெண்ட் வாசல்ல எருமையும், பாத் டப்ல பெரியவரும் - சிரிச்சுகிட்டே இருக்கலாம்!!

யோசிக்க யோசிக்க நிறைய படங்கள் நினைவுக்கு வருது!! நல்ல திரைப்படங்களை நினைவுகூற வாய்ப்பு கொடுத்த செந்திலுக்கு நன்றி!!

Post Comment

கதைசொல்லி
பொதுவா, சின்னப் பசங்களுக்கு தாத்தா, பாட்டிதான் கதைகள் சொல்வாங்க. என் அம்மா வீட்டில் நான் வளர்ந்த சமயம்,  தாத்தாவுடன் நல்லா கலகலப்பாகப் பேசி விளையாடுவோம் என்றாலும், கதைகள் எதுவும் சொன்னதில்லை; பிஸினஸ், அரசியல் என்று பிஸியாக இருந்ததால்தான் அப்படி என்று நினைக்கத் தோன்றவில்லை. என் அம்மாவுக்குப் பத்து வயதிருக்கும்போதே பாட்டியும் இறந்துவிட, அம்மாவின் சாச்சி, எங்களோடு சரிக்குச்சமமாகப் பேசுவதுண்டு என்றாலும் கதைகள் எதுவும் சொன்னதில்லை. இன்னும் சொல்லப்போனால், நானெல்லாம் பள்ளிவிட்டு வந்தால் வீட்டில் இருப்பதே அபூர்வம். தெருவில் பசங்களோடு ஐஸ்பால், கொக்கோ, பாண்டி, கோலி, இன்னபிற விளையாடுவதும், ஆற்றில் குளிப்பதும்,  பின் ஓடிவந்து வீட்டுப்பாடம் செய்து விட்டுத் தூங்கவுமே நேரம் இருந்தது; இதில் கதை கேட்கவில்லை என்பதே இப்போ இந்தத் தொடர்பதிவுக்காக யோசிக்கும்போதுதான் தெரிகிறது!! மற்ற நேரங்களில் சாச்சிகள், மாமாக்கள், அடுத்த, எதிர்வீடு உறவினர்களும் பேசும் குடும்பக் கதைகளைக் கேட்டு நேரம் போகும்!!

சிலகாலம், என் வாப்பும்மா, பெத்தாப்பாவோடு இருந்தபோது, நிறைய “கதைகள்” சொல்வார்கள் - தன் 13 பிள்ளைகளில் இப்போ இருக்கும் நால்வர் தவிர மீதி குழந்தைகள் இறந்த கதை, பெத்தாப்பா தன் சகோதரர்களால் (சொத்து குறித்து) ஏமாற்றப்பட்ட கதை, நண்பர்களால் வியாபாரத்தில் ஏமாற்றப்பட்ட கதை,  அவர்களிருவரும் ஊறுகாய், அப்பளம், வடகம் விற்றுப் பிழைத்த கதை, ராமேஸ்வரத்தில் வியாபாரம் செய்த கதை, என் வாப்பா ஸ்காலர்ஷிப் வாங்கி இஞ்சினியரிங் படித்தது, ஹாஸ்டல் ஃபீஸ்கூட கட்ட முடியாமல், வாப்பா பட்டினி கிடந்த கதை..  இப்படி எல்லாமே அவர்கள் வாழ்வியல் கதைகளாகவே இருந்தன!!

எனது எட்டு, ஒன்பது வயது வரை இந்தக் கதைகள் எல்லாம் எனக்கு மிகச் சுவாரஸ்யமாகவும், அவர்கள்மீது பரிதாபமும், மிகுந்த மரியாதையும் வரவைப்பதாகவும் இருந்தன; ஆனால், எப்போ அவர்கள் என் அம்மாவைக் குற்றம் சொல்வதைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தேனோ, அப்போதே அவர்களின் கதைகள் சுவைகுன்றத் துவங்கி அவர்களிடம் எதிர்வாதம் செய்யத் தொடங்கினேன். எனக்கும் அப்போது கதைகள் கேட்பதைவிட, படிப்பதில் ஆர்வம் தலைதூக்கத் தொடங்கியிருந்தது; இன்னப் பத்திரிக்கை, புத்தகம்தான் என்றில்லாமல்,  துவரம்பருப்புப் பொட்டலப் பேப்பர் உட்படக் கிடைத்ததை எல்லாம்,  வாசித்துக் கொண்டிருந்தேன்.

என் அம்மா வீட்டில் கதை சொல்வோர் யாருமில்லையென்றாலும், புத்தகங்கள் நிறையக் கிடைத்தன. அதனாலேயே வாசிக்கும் ஆர்வம் வளர்ந்தது. ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், என் வாப்பாவும், அவரின் இரு சகோதரிகளும் படித்தவர்கள். ஆனால், அவர்கள் வீட்டில் பாடப் புத்தகங்கள் தவிர வேறு புத்தகங்கள் கிடையாது. என் அம்மா வீட்டிலோ, தாத்தாவைத் தவிர அப்போது வேறு யாரும் பட்டப் படிப்பு படித்திரவில்லை; ஆனால் அங்கு ஓரளவு புத்தகங்களும், எல்லாவிதப் பத்திரிகைகளும் குவிந்து கிடக்கும். அம்மா உட்பட வீட்டுப் பெண்கள் எட்டுப் பேரும் அதிகபட்சம் ஐந்தாம் வகுப்புதான் படித்திருந்தனர். ஆனால் எல்லாருக்கும் வாசிக்கும் ஆர்வம் இருந்தது.

பின்காலங்களிலும், என் வாசிக்குமார்வத்திற்குத் தீனிபோட என் அம்மா புத்தகங்கள் (அம்புலிமாமா வகையறாக்கள்) வாங்கித் தருவார். மற்ற செலவுகளில் கறார் பேர்வழியான அம்மா இதற்குமட்டும் சற்று அதிகமாகச் செலவு செய்ததற்கு, அவரின் ஆர்வமும் காரணமாக இருக்க வேண்டும். பள்ளியிறுதி படிக்கும்போது, ரீடர்ஸ் டைஜஸ்ட்டுக்கு சந்தா கட்ட அனுமதி கேட்டபோது வழக்கமான கேள்விக்கணைகள் தொடுக்காமல், ஒன்றிரண்டோடு அனுமதி கிடைத்தது!! என் வாசிப்பார்வம் என் அம்மாவின் ஜீனிலிருந்துதான் அதிகம் வந்திருக்கவேண்டுமென்று நினைக்கத் தோன்றுகிறது. என் வாப்பாவும் நிறைய வாசிப்பதுண்டு, ஆனால் ஆங்கிலசெய்தி/ டெக்னிக்கல்/ பிஸினஸ் குறித்த விஷயங்களில்தான் ஆர்வம் அதிகம்.

தற்பொழுது என் பெரிய மகனிடம், என்னைப் போலவே, வாசிக்கும் ஆர்வத்தைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது; வாப்பா & தாத்தாவைப் போல, டெக்னிக்கல் புத்தகங்களும் பிடித்திருக்கிறது. சின்னவனுக்கு ஆரம்ப காலத்தில் கதைகள் சொன்னேன்; ரொம்ப கேள்விகள் கேட்டதால், அடிக்கடி  பதில் சொல்லத் தெரியாமல் முழிக்க நேர்ந்ததால், குறைத்து விட்டேன். புத்தகங்கள் வாசிக்க, தற்போதுதான் ஆர்வம் காட்டிவருகின்றான். இப்போ அவன் வாசித்து எனக்குக் கதை சொல்லுகிறான்!!

Post Comment

வலைக்காதல் வலை

google.com

சானியா என்றாலே சர்ச்சைதான் போல!! ஷோயப்பை திருமணம் செய்வதாக அறிவித்தார், தொடங்கிவிட்டன சர்ச்சைகள். இம்முறை அவரை விட்டுவிட்டு, ஷோயப் - ஆயிஷா சித்திக் குறித்த விவகாரங்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன.

அவர்களுக்குத் திருமணம் நடந்ததா,  இல்லையா என்ற ஆராய்ச்சிக்குள் நான் போக விரும்பவில்லை. திருமணம் நடந்த அத்தாட்சியாக நிக்காஹ் பத்திரம், பரிசளிக்கப்பட்ட  ‘மேன் ஆஃப் த மேட்ச்’ விருது, கையெழுத்திட்ட கிரிக்கெட் மட்டை, ஹைதை தாஜ் ஹோட்டலில் தங்கியதற்குச் சாட்சிகள் என்று ஆயிஷா தன் தரப்பை விளக்கி, காவல்துறையிடமும் வழக்குப் பதிந்ததில், காவல்துறை ஷோயபின் பாஸ்போர்ட்டைப் பறிமுதல் செய்யுமளவு நடந்துகொண்டிருக்கிறது. நல்ல முடிவுகள் வரட்டும். 

இந்தப் பிரச்னை தொடங்கியது எதை வைத்து? ஷோயப், ஆயிஷா இருவரும் நெட் வழி பழகி, படங்கள் பரிமாறி, பின் திருமணம் செய்தனர் என்று சொல்லுகின்றனர். ஷோயப் சொல்லும் குற்றச்சாட்டு, எனக்கு வேறு பெண்ணின் படத்தைக் காட்டி ஏமாற்றி விட்டனர் என்று. ஆயிஷாவோ, நான் குண்டாக இருப்பதால்தான் என்னை வெறுக்கிறார் என்கிறார். ஆக, அடிப்படை பிரச்னை, அழகுதான்!!

இந்தப் பிரச்னை சாமான்யர்களிலும் நிறைய பேருக்கு நடக்கிறதென்றாலும், இவர்கள் பிரபலமானவர்கள் என்பதால் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. நெட்டில் சாட்டிங் செய்வதும், புகைப்படங்கள் பரிமாறிக் கொள்வதும், பின் நேரே திருமணம். திருமண வாழ்வையும் நெட்டிலா பின்ன முடியும்? நேரிடையாகப் பிரச்னைகளைச் சந்திக்கும்போது கருத்துவேறுபாடுகள் வர, உடனே அதிரடித் திருமணம் போல அதிரடியாகப் பிரிவும்!!

மேலும், இக்காலத்தினர்களுக்கு, புற அழகுதான் அவசியமாக இருக்கிறது. வலையில் புகைப்படங்கள் பரிமாறி, இருவரும் அழகு என்றால்தான், நட்பு தொடர்கிறது. சிலர் அதற்கென்றே ஸ்பெஷலாக ஃபோட்டோ எடுத்து வைத்திருப்பார்கள். நேரில் பார்க்கும்போது ஏமாற்றம் வருமளவுக்கு!!

 நம் ஊர்களில் ஒரு கல்யாணம் என்றால் பெரியவர்கள் எவ்வளவு அலசுவார்கள், விசாரிப்பார்கள், வடிகட்டுவார்கள்? அதையெல்லாம் ஓல்ட் ஃபேஷன், இருமனம் இணைகையில் மற்றவர்கள் சம்மதமெதற்கு என்று புறந்தள்ளி அவசரகதியில் அள்ளித் தெளித்த கோலமாய்த் திருமணங்கள் நடக்கின்றன. (இப்பல்லாம் லிவிங் டுகெதர்தானாம்!!) 

அப்படியே பெரியவர்களிடம் பெண் பார்க்கும் பணியை ஒப்புவித்தாலும், இரண்டு நிபந்தனைகள் இட்டே பணிக்கின்றனர். பொண்ணு ”வெள்ளையா இருக்கணும், அழகா இருக்கணும்” என்று சாம்பிளுக்கு அப்போதைய  முண்ணனி நடிகையின் படத்தையும் கொடுத்துவிடுகின்றனர். (அந்நடிகையின் மேக்கப்பில்லாத படத்தை இவர்களிடம் கொடுக்கணும்!!)

இண்டர்நெட் வழி நட்பு கொண்டு, அந்நட்பை வளர்த்து, திருமணம் வரை வருவதெனும்போது, சில அடிப்படை விஷயங்களை மறந்துவிடுகின்றனர். நட்புறவு வேறு, திருமண வாழ்வு வேறு என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.  வலைவழி தூரத்தில் இருக்கும் இருவர் நட்பாக இருக்கும்போது வராத பிரச்னைகள், இருவர் இணைந்து வாழும்போது வரும். பிரச்னைகளைப் புரிந்து, மனம்விட்டுப் பேசித் தீர்க்கும் முதிர்ச்சி வேண்டும்.

அழகை மட்டும் அடிப்படையாக் கொண்டு நடக்கும் திருமணங்கள், கரடுமுரடாகவே இருக்கக் காணலாம் பல நேரங்களில். இங்கே ஆயிஷா புகைப்படம் மாற்றிக் கொடுத்தாரென்றும், இருவர் இருந்த புகைப்படம் என்பதால் அவருடன் இருந்தவரைத்தான் ஆயிஷா என்று நினைத்தேன் என்று ஷோயபும், இல்லை என்னை நேரில் பார்த்து என் எடையைக் குறைக்கும்படி அறிவுரை கூறினார் என்று ஆயிஷாவும் மாறிமாறி குற்றாம்சாட்டிக் கொள்கிறார்கள். இதுவே இருவருமே அழகைப் பெரிதாக எண்ணாமல், அன்பை, குணத்தைப் பெரிதாக நினைத்திருந்தால் ஷோயப் ஆயிஷாவின் எடையை குறைவாக நினைப்பாரா? அல்லது ஆயிஷாதான் வேறு படத்தைக் காண்பித்திருப்பாரா?

ஆயிஷாவும், 2002ல் நடந்த திருமணத்தை விட்டு விலகாமல் ஏன் எட்டு வருடங்கள் காத்திருந்தாரோ? சானியாவும் அழகாக இல்லையென்றால் ஷோயப் விரும்பியிருக்க மாட்டாரோ? என்னென்னவோ கேள்விகள் எழுகின்றன. பதிலைத் தேடிக்கொண்டிராமல் பாடங்கள் படித்துக் கொள்வதே நல்லது.

இன்னொரு விஷயம், பெற்றோரால் நிச்சயம் செய்யப்பட்டிருந்தாலும், திருமணம்வரை, சிலர் 24 மணிநேரமும் சாட்டிங், செல்ஃபோன், எஸ்.எம்.எஸ். என்றிருக்கின்றனர். மேற்சொன்ன வலைக்காதலுக்குச் சற்றும் குறைவில்லாத, சொல்லப்போனால் இன்னும் அதிக ஆபத்துகள் கொண்டது இது. நமக்கென்று நிச்சயிக்கப்பட்டவர்தானே என்ற சுதந்திரத்தால், இப்படிப் பேசிப்பேசியே, திருமணத்திற்கு முன்பே (தம்பதிகள் அளவில் மட்டுமல்ல, குடும்ப அளவிலும்) கருத்துவேறுபாடு ஏற்பட்டு தடையான திருமணங்களும் உண்டு. அல்லது, இவ்வாறான தொடர்பேச்சுக்களால், ஒரு பிம்பம் எழுப்பப்பட்டு, திருமணத்திற்குப் பின்னும் அதே ரசனையை எதிர்பார்த்து, பிம்பம் உடைபட்டு, பிரிவு வரை சென்று பிழைத்த திருமணங்களும் உண்டு!! 

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும்.... 

(என்னவோ, இதை எழுதும்போது, சில பதிவர்கள், தம் ப்ரொஃபைல் ஃபோட்டோவாக ஸ்கூல், காலேஜில் படிச்சப்போ எடுத்த படத்தை வச்சிருக்கிறதும்,  (நான் பதிவெழுத வந்தபின் நடந்த) முதல் பதிவர் சந்திப்பின்போது எடுத்த படங்களைப் பதிவுகளில் பார்த்து நான் அதிர்ச்சியானதும் ஞாபகத்துக்கு வருது).


Post Comment