Pages

ஒரு கொடுங்கோல் அதிபரின் கதை!!




(டிஸ்கி: நீங்களா இதை அவருடைய கதையோ, இவருடைய கதியோன்னுன்னு நினைச்சுகிட்டா, அதுக்கு அவருதான் பொறுப்பு. நான் இல்லை!!)

ஒரு நாட்டில் ஒரு அதிபர். (பின்னே, ரெண்டு அதிபரா இருப்பாங்கன்னு குறுக்க கேக்குறவங்களுக்கு “இவ்ளோ அறியாமையில இருக்கீங்களே” என்பதுதான் என் பதில்) ஓகே, இனி குறுக்க யாரும் பேசக் கூடாது.

அந்த நாட்டில் இருவேறு இனத்தைச் சார்ந்த மக்கள் இருந்தாங்க. (ஸ்... கீப் கொயட்!!) அதில் பெரும்பான்மையான ஒரு இனமே அரச பதவிகளில் அதிகமா இருந்தாங்க. அப்ப, சிறுபான்மையா இருந்த  இனத்தைச் சேந்த ஒருத்தரு தனது அறிவுத் திறமையால அரசுல முக்கியமான துறையில் அமைச்சரா ஆனாரு. ஆகி, எந்த வேறுபாடும் பார்க்காம, எல்லா மக்களோட துயர் தீர்க்கவும் மனசார உழைச்சாரு. அப்புறம், அவரோட இனத்தைச் சார்ந்தவங்களும் கடினமா உழைச்சு திறமையை வச்சு, உயர் பதவிகளை அடைஞ்சாங்க.

இப்படியே இவங்க சில தலைமுறைகளா உயர்ந்துவிட்டு வர்றதைப் பார்த்த மற்ற இனத்தினரில் சிலர், பொறாமை அடைஞ்சாங்க. இவங்களை இப்படியே விட்டா ஆட்சியையே பிடிச்சிடுவாங்க அப்படி இப்படின்னு மன்னர்கிட்ட வத்தி வச்சாங்க. தம் வேலை வாய்ப்புகள் இவங்களால பறி போவதா, தன் இன மக்களிடையேயும் பரப்பி விட்டாங்க. இவுங்களை அடக்கலன்னா, நாம சிறுபான்மை ஆகிடுவோம்னு பயமுறுத்துனாங்க. அதனால், மக்கள் மன்னன் இரண்டு தரப்புலயும் இவங்க மேலே வெறுப்பு வளந்துச்சு. இவங்க எவ்வளவோ புரிய வைக்கப் பாத்தாலும் அவங்க ஏத்துக்கலை. (நோ டாக்கிங்... உங்க யூகங்களை நீங்களே வச்சுக்கோங்க...)

ஒரு கட்டத்தில், அந்தச் சிறுபான்மை மக்களை அடிச்சு உதைச்சாங்க. ஆண்களைக் கொன்றார்கள். பெண்களை அடக்கியாண்டார்கள். இப்படி அவங்க உயிருக்கே போராட வேண்டிய நிலை வந்ததால், அவங்களோட வளர்ச்சியும் முன்னேற்றமும் குறைந்து, குறைந்து உயிருக்கும் உணவுக்கும் போராடி போராடி, ஒரு கட்டத்தில் அவங்க எல்லாருமே அடிமட்டத் தொழிலாளர்களாக, உடல் உழைப்பாளர்களாக ஆகிப் போனாங்க.  இந்த அடக்குமுறைக்கும், கொலைகளுக்கும் பெரும்பான்மை மக்களே ஆதரவு கொடுக்க ஆரம்பிச்சாங்க. அந்த அளவுக்கு அதிகார வர்க்கத்தினால் அவர்களிடையே வெறுப்பும் வன்மமும் விதைக்கப்பட்டது.

ஆனா, நாட்டுக்கு ஒரு நெருக்கடி வரும்போது மட்டும், உடனே அந்த அதிபர்,  சிறுபான்மையினரிடம் வந்து, “நீங்க அவ்ளோ நல்லவங்க.. இந்த நாடு உங்களை வச்சுத்தான் இருக்கு.... நீங்கதான் உதவணும்.. நெருக்கடி தீர்ந்ததும் உங்களுக்கு நீங்க கேட்குறதை நிறைவேத்துவேன்”அப்படி இப்படின்னு ஐஸ் வைப்பாரு.... அவங்களும் உதவி செய்வாங்க... கஷ்ட நிலை மாறியதும், மறுபடியும் கொடுமைகள் தொடரும்...

இப்படி இருக்க கதையில், கண்டிப்பா ஒரு எட்டப்பர் இருக்கணுமே... இருந்தாரு... சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அவரு பெரிய செல்வந்தர்... தன் செல்வத்தைக் காப்பாத்திக்க மன்னரோடு நெருக்கமானார். அதைக் கொண்டு தன் இன மக்களை மீட்க வழிவகை செய்யாமல், மன்னர் சொன்னபடிக்கு தன் இனத்து மக்கள் மீது நெருக்கடியை அதிகப்படுத்தினார். அவர்களிடமிருந்து வரி வசூலிக்கும் பொறுப்பு இவரிடம் கொடுக்கபப்ட்டது. அவரும் அதை கர்ம சிரத்தையா செஞ்சாரு...  😠  இப்பவும் உங்களுக்கு யாரையாவது நினைவுக்கு வந்தா, அகெய்ன், அதுக்கு அவரேதான் பொறுப்பு... நானில்லை, இல்லை!!!

அப்புறம் கதையில், அந்த பெரும்பான்மை இனத்தில் நல்லவர்களும் வரணுமே... வந்தாங்களே... “யப்பா.... இபப்டிலாம் செய்யாதப்பா... எல்லாரையும் இனபேதம் பாக்காம நீதியோட சமமா நடத்து”ன்னு சொன்னாங்களே.... சொன்னவங்களை என்ன செஞ்சாங்க இங்க... ஐ மீன், என்ன செய்வாங்க? அதேதான்... கொன்னுட்டானுங்க!! அதுவும் கொடுமையா சித்ரவதை செஞ்சு.... இரக்க குணம் கொண்ட தனது மனைவியைக் கூட விட்டு வைக்கலை அந்த அரக்க குணம் கொண்ட மன்னன்!! 😦 

தன்னை அறிவுஜீவி மாதிரி காண்பிச்சுக்க, அப்பப்ப அறிவாளிகளைக் கூப்பிட்டு, கூட்டம் போடுறதும், அவங்கள்ட்ட நெருக்கமாப் பேசி,  உனக்கு அந்தப் பதவி தர்றேன், இந்தப் பதவி தர்றேன்னு  வலைவீசவும் செய்வார்...

இப்படியே சிலபல தலைமுறைகளாப் போயிட்டிருந்தது.... அநீதியும், அதர்மமும் அப்படியே நிலைக்குமா என்ன? யாருமே எதிர்பார்க்காத இடத்துலருந்து அவர்களை மீட்க ஒருவர் வந்தார். எந்த இடம்? மன்னனின் அரண்மனையிலிருந்தே மன்னனுக்கு ஒரு எதிரி தோன்றினார்!!

நாட்டில் பிறக்கும் சிறுபான்மை இனத்து ஆண் குழந்தைகளைப் பிறந்ததும் கொன்று விட வேண்டும் என்ற ஆணை இருந்ததால், ஒரு தாய் தன் மகனைக் காப்பாற்ற எண்ணி, குழந்தையை ஒரு மரக்கூடையில் வைத்து ஆற்றில் விடுகிறாள்!! அக்குழந்தை போய்ச் சேருமிடம் அரண்மனை!! ஆம், அக்குழந்தை, குழந்தைப்பேறு இல்லாத மன்னனின் மனைவியிடம் வந்து சேருகிறது. கருணை மிகுந்த அவர், கணவனைத் தாஜா செய்து, அக்குழந்தையை வளர்க்கிறார்.

அந்தக் குழந்தை வளர்ந்து, மன்னனால் சித்ரவதைக்குள்ளாகி இருக்கும் தம் மக்களை ஒன்று சேர்த்து, பலப்படுத்தினார். மன்னரிடம் தங்கள் விடுதலையை கேட்கின்றனர். அது மறுக்கப்படுவதோடு, சித்ரவதைகளும் அதிகரிக்கப்பட்ட நிலையில், பொறுமையாகக் காத்திருக்கின்றனர்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, ஒரு நாள், அவர் அம்மக்களைத் திரட்டிக் கொண்டு நாட்டைவிட்டுச் செல்கிறார். இதனை அறிந்த மன்னன், தன் பெரும்படையோடு அவர்களை விரட்டி செல்கிறான்!! மன்னன் துரத்தி வருவதை அறிந்த அம்மக்கள், வேகமாகச் செல்கின்றனர். ஆனால், ஒரு இடத்தில் மேலும் முன்னேற முடியாமல் நின்று விடுகின்றனர்!! காரணம், அவர்கள் முன்னே பெருங்கடல்... கடல் போன்ற எதிரிப்படை அவர்களின் பின்னே... என்ன செய்வதென்று தெரியாமல், எந்தப் பக்கம் போனாலும் மரணம் என்ற நிலையில் அவர்கள் விக்கித்து நிற்கின்றனர்.... அந்தச் சிறுபான்மை மக்களில் ஒருவர் தம் தலைவனிடம் சொல்கிறார், “அந்தோ! அழிந்தோம் நாம்!” என்று. ஒரு தலைவனுக்கே உரிய தன்னம்பிக்கையுடன் அவர், “ஒருக்காலும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்” என்று கூறினார்.

ஆம், தம் பங்கு உழைப்பைச் செய்து, உறுதியாக நம்பிக்கை கொண்டோர் கைவிடப்படுவதில்லை!! இறைவனின் ஆணைப்படி கடல் இரண்டாகப் பிளந்தது!! மக்களும் வியப்பில் ஆவென வாய் பிளந்து நிற்காமல், விரைந்து மறுகரை சேர்ந்தனர். அடிமைகளாக இருந்த எதிரிக்கே வழிவிட்ட கடல், இராஜாதி ராஜனான எனக்கு வழிவிடாதா என்ற ஆணவத்தோடு தன் பெருமைக்குரிய தேரில்,  ரத,கஜ துரக பதாதிகளுடன் கடலில் இறங்கியவனை, மொத்தமாகக் கடல் மூழ்கடித்தது. ஆம், அஃறிணைப் படைப்புகள் ஒருபோதும் அநீதிக்குத் துணை போவதில்லை!!

நீரில் மூழ்கி, உயிர் பறிக்கப்படும் தருவாயில், உயிர் பிழைக்கும் ஆசையில் “இஸ்ராயீல்களின் இறைவனே!! உனையே நம்புகிறேன்” என்று அரற்றியவனை,

”இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய். எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” என்று அவனிடம் கூறப்பட்டது. இவ்வாறு இழிவடைந்தவனாக மரணித்தான் அந்தக் கொடுங்கோலன்!!


(”Pharoah - ஃபாரோ” ) “ஃபிர் அவுன்” அரச வம்சத்தில் வந்த ரமேஸஸ் II  என்ற அந்த இழிந்தவனின் உயிரற்ற உடல், அன்றும் இன்றும் என்றும் கொடுங்கோலர்களின் கதி என்னவாகும் என்பதற்கு உதாரணமாக, சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் சாட்சியாக இருந்து வருகிறது!!






மேலதிகத் தகவலுக்கு, பார்க்க: https://www.facebook.com/gnaniyar.zubair/posts/10211498651277431

Post Comment