Pages

யரலவளழ





சில வருடங்களுக்கு முன்பு, நான் வேலை பார்த்த அலுவலகத்தில், ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட ஒரு மேலாளர் ஆங்கிலத்தில் எழுதும் அலுவலகக் கடிதங்களைப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கும். “சில்லி மிஸ்டேக்” எனப்படும் அற்பமான தவறுகள் இருக்கும். உதாரணமாக, I comes என்று எழுதுவார். 

சுதந்திரத்திற்கு முன், இந்தியர்கள் எழுதிய ஆங்கிலத்தை பார்த்து அலறித்தான், வெள்ளைக்காரர்கள் இந்தியாவை விட்டு ஓடிவிட்டார்கள் என்று பரிகாசம் செய்வதுண்டு. ஆனால், ஒருவர் தன் தாய்மொழியிலேயே தப்புந்தவறுமாய் எழுதுவது எனக்கு அப்போது ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருந்தது. பின்னர் வலையுலகிற்கு வந்தபிறகுதான்,  தமிழன்னையும் சில தமிழர்களிடம் இப்படித்தான் பாடாய்ப் படுகிறாள் எனத் தெரிய வந்தது.

நான் ஒன்றும் தமிழில் வித்தகி இல்லைதான். எழுதும்போது நானறியாமல் தவறுகள் நேர்ந்திருக்கலாம். ஆனாலும், வலைப்பக்கங்களிலோ, முகப்பதிவுகளிலோ சிலர் தமிழில் அதிகப் பிழையுடன் எழுதியிருப்பதைப் பார்க்கும்போது, தெரிந்தவர்களாக இருந்தால், சுட்டிக் காட்டுவதுண்டு.

ஆனால், வழக்கமாகவே பிழையுடன் எழுதப்படுவதைப் பார்க்கும்போது நமக்குக் கோபம் வருவது இயல்பு.

தமிழ் தெரிந்த நமக்கு, தமிழ் பிழையாகப் பேசப்படுவதைக் கேட்கும்போதும்  எரிச்சல் வரும். வட்டார வழக்குகள் வேறுபடலாம், அதில் தவறில்லை. ஆனால் எழுத்து உச்சரிப்புகள் மாறாதல்லவா?

வாழைப்பழம் என்பதை, ‘வாயப்பயம்’ என்று சொல்வதைக் கேட்கும்போது நாராசமாக இருக்கும்.  இதை கல்வியறிவில்லாதவர் சொன்னாலோ, ஏன் கற்றவரே ஆனாலும் தனிப்பட்ட உரையாடல்களின்போது இப்படி உச்சரித்தாலோ நாம் கண்டுகொள்வதில்லை. ஆனால், ஒரு மேடைப் பேச்சின்போது அல்லது முக்கியக் கலந்துரையாடலின்போது அல்லது உரையாற்றும்போதோ  இவ்வாறு பேசினால் எப்படி இருக்கும்??

செந்தமிழில்தான் பேச எழுத வேண்டுமென்று எதிர்பார்க்கவில்லை; ஆனால், கொடுந்தமிழ் ஆக்காமலிருக்க வேண்டுமல்லவா?


ழுதுவதை விடுங்கள், அதில் தவறுகள் நேர்வது ஒன்றும் உலக அதிசயமல்ல. இப்போதெல்லாம் கையால் எழுதுவதை விட, கணினியில் டைப் செய்வதே அதிகம். அதை எழுதும்போதே திருத்தித் தர செயலிகளும் உள்ளன. அதையும் மீறி தவறு இருந்தால், “மொபைல் டைப்பிங்” என்று சமாதானம் சொல்லிக்கலாம்.

ஆனால், ஆங்கிலமோ, தமிழோ - எழுதியிருப்பதைப் பார்த்து வாசிக்கும்போதும் தப்புந்தவறுமாக வாசித்தால், கேட்பவருக்கு எப்படியிருக்கும்?  ”மணிமேகலை”  எழுதிய சீத்தலைச் சாத்தனார், இம்மாதிரி பிழையான பாடல்களைக் கேட்டால், தம் தலையில் எழுத்தாணியால் குத்தி, தலையைப் புண்ணாக்கிக் கொள்வாராம் என்று ஒரு வதந்தி உண்டு. அதேபோல, நமக்கும் சுவற்றில் முட்டிக் கொள்ளலாமா என்றுதான் இருக்கும். (சீத்தலை = சீர்+தளை)

ஒரு படத்தில் விவேக் செய்தி வாசிப்பாளராக நேர்முகத் தேர்விற்குச் செல்லும் காட்சி நினைவுக்கு வருகிறது. அதில் அவர் சொல்லும், “தமிழ் மேலே புல்டோசர் விட்டு ஏற்றுவது” என்கிற வசனம்தான் இங்கு பொருந்தும்.



சுமார் 30 வருடங்களாக குர் ஆனை அரபு மொழியில் ஓதி வருகிறேன். பிறந்ததிலிருந்து பேசி, எழுதி, படித்து, சுவாசித்து வரும் தமிழிலேயே நான் புலமை பெறவில்லை எனும்போது, கேள்வியறிவைக் கொண்டு மட்டுமே வாசித்து வரும் அரபு மொழியில் புலமை இருக்குமா என்ன?  தமிழர்களாகிய நாம் ஆங்கிலம் அல்லது ஹிந்தி பேசும்போது, தமிழின் சாயல் வருவது தவிர்க்க முடியாது. அந்தந்த மொழிக்குறிய சிறப்பு எழுத்துகளை மிகச் சரியாக உச்சரிப்பதற்கு, அந்த மொழியைப் பேசுபவர்களுடன் பழகினால்தான் ஓரளவு திருத்தமாக உச்சரிக்க முடியும்.
 

அரபுக்கும் அதேதான். இணையம் வந்தபின்பு, வீடியோக்களில் சரியான உச்சரிப்புடன் குர் ஆன் ஓதப்படுவதைக் கேட்டு முடிந்தவரை திருத்திக் கொள்ள நினைப்பதுண்டு.  தனியாக நாமே ஓதிக்கொள்வதால், நம் உச்சரிப்பைச் சரி செய்துவிட்டதாகத்தான் நமக்கு தோன்றும்.  ஆனால்,  உரிய ஆசிரியர்களிடம் பயிற்சி எடுத்தால்தான் உரிய உச்சரிப்பு கைவரும் - ஐ மீன் - நாக்கில் வரும்.


ஏனெனில் அரபி மொழிக்கென பல சிறப்பு எழுத்துகள் உண்டு. தமிழுக்கு ல-ள-ழ போல. நமக்குப் பரிச்சயமான தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில்  அவற்றிற்குச் சமமான எழுத்துகள் இல்லை என்பதால், ஆரம்பத்திலேயே பழகாவிட்டால் பின்னர் சரியான உச்சரிப்பு கொண்டு வருவது மிகச் சிரமமானது.

சமீபத்தில், இதற்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்திருக்கிறேன். நான் ஓதுவதைப் பார்த்து - கேட்டு, ஆசிரியர் ஓடிவிடுவாரோ என எனக்கு அச்சமாக இருக்கிறது. அப்படியாக இருக்கிறது என் உச்சரிப்பு!!  என் உச்சரிப்பைத் திருத்த அவர் படும் பாட்டைப் பார்க்க எனக்கே பாவமாக இருக்கிறது. ஐந்தில் வளையாத நாக்கு, ஐம்பதென்ன, நாற்பதில்கூட வளைவது ‘மலையைப் புரட்டுவதை’விட கடினமானது.

ஒவ்வொரு முறை நான் ஓதிக் காட்டுவதும், அவர் திருத்துவதும்....  ‘இம்சை அரசன்’ படத்தின் “ஞானப் பால் - ஆனைப்பால்” காட்சி தான் ஞாபகம் வருகிறது. ஆனால், இங்கே “முடியல...” என்று அலுத்துக் கொள்வது நான்தானே தவிர, ஆசிரியை அல்ல. இந்தப் பணியில் பல வருடங்களாக இருக்கும் அவர் என்னைப் போல எத்தனைப் பேரைப் பார்த்திருப்பார்!!



முதல் வகுப்பிலேயே ஆசிரியை சொன்னார், பிறப்பால் அரபிகளாகிய அவர்களிலேயே அரபியைச் சரியாக உச்சரிப்பவர்கள் மிகக் குறைவு என்றும், ஆகையால் நாங்கள் மனந்தளர வேண்டாம் என்று. அதுவும், சமீபகால ஆங்கில மோகத்தால், இளைய தலைமுறை அரபி மொழி பேசுவது குறைந்து வருவதாகவும் வருத்தப்பட்டார். அட, நீங்களுமா!! என்று நினைத்துக் கொண்டேன்.

வகுப்பில் நாங்கள் ஓதிக்காட்டும்போது அவர் முகத்தில் என்னென்னவோ உணர்ச்சிகள் தோன்றும். சின்னப் பிள்ளைகளாக இருந்தாலாவது, தலையில் குட்டி அல்லது திட்டி திருத்தலாம். நாலு கழுதை வயசில் உள்ள என் போன்ற மாணவிகளை, திட்டவும் முடியாமல் கோபப்படவும் முடியாமல் அவர் தவிக்கிற தவிப்பு இருக்கே... அதுக்காகவாவது சீக்கிரம் திருத்திக்கணும்.   பேச்சு சரியா வராத சின்னக் குழந்தைகளுக்கு நாக்கில் வசம்பு தடவினா திருத்தமா பேச்சு வரும்னு சொல்லுவாங்க. இந்த வயசுக்கு அது வொர்க் அவுட் ஆகுமான்னு தெரியலையே!!

அதுலயும்,  சரியாக அவர் எனக்கு சொல்லித் தரும்போதுதான், நடிகர் விஜயகாந்தின் ஆங்கிலத்தை கிண்டல் செய்து வலையில் காணப்படும் போஸ்டர்கள் வேறு ஞாபகம் வந்துத் தொலைக்கிறது!! சரியாக உச்சரிக்கத் தெரியவில்லையே என்கிற அவமான உணர்ச்சி ஒருபக்கம்; இந்த ஜோக் விவகாரங்கள் வேறு நினைவுக்கு வந்து தொலைவதால் சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கவேண்டிய நிலை ஒருபக்கம்.



இந்த மாதிரி ஜோக்குகள் எழுதலைன்னாலும், அதைப் பார்த்து சிரிச்ச பாவத்துக்குத்தான் இப்படி படுறேன் போல.  நல்லவேளை அரேபியர்களுக்கு இந்த விஜயகாந்த் மேட்டர்லாம் தெரியாது. இல்லைன்னா, நம்மளை வச்சும் இந்த மாதிரி காமெடி போஸ்டர்கள் பண்ணிருப்பாங்க!!

Post Comment