Pages

இந்தியாவின் ஜோன் ஆஃப் ஆர்க்






1857 - சிப்பாய்க் கலக வருடம். பரபரப்பான போர்க்களத்தில், போர் உடை தரித்து, தன் நாட்டு போர் வீரர்களுக்குத் தலைமையேற்று, கையில் வாளுடன் குதிரை மீதமர்ந்து தீரத்துடன் போரிட்டு, கிழக்கிந்திய கம்பெனியின் படையினர்களை வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தாள் அப்பெண்.  நீங்கள் நினைப்பது போல, ஜான்ஸி ராணி லக்ஷ்மிபாய் அல்ல அப்பெண்.

ரந்து விரிந்த முகலாய அரசுக்குக் கட்டுப்பட்டு கப்பம் கட்டி ஆட்சி நடத்தி வந்த சிற்றரசுகள் இந்தியாவில் ஏராளம் உண்டு. இம்மாதிரியான சிற்றரசுகளை, முகலாய அரசிடமிருந்து சுதந்திரம் பெற்றுத் தருகிறோம் என்று நயவஞ்சகம் பேசி,  தம் பக்கம் இணைத்துக் கொண்டது கிழக்கிந்திய கம்பெனி அரசு. இணைந்த பின்னர் அவர்கள் விதித்த கெடுபிடிகளைக் கண்டு, தாம் வஞ்சிக்கப்பட்டதை அறிந்து நொந்து போயிருந்தன அச்சிற்றரசுகள். விலகி வரமுடியாதபடிக்கு பிரிட்டிஷாரிடமிருந்து நவீன ஆயுதங்கள் வாங்கிய வகையில் கடன்சுமை அந்த அரசுகளின்மீது ஏற்றப்பட்டிருந்தது.உலக வங்கிடெக்னிக் அப்போதே ஆரம்பித்துவிட்டது!! கடனைத் திருப்பிக் கட்டமுடியாத சிற்றரசுகளை அதன் மன்னர்களிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கி பிரிட்டிஷ் இந்தியாவோடு இணைத்துக் கொண்டார்கள்.

த்தரப் பிரதேசத்தில் லக்னோவின் அருகில் இருந்தஔத்என்ற குறுநில அரசு, ”வஜீர் அலி ஷாஎன்ற குறுநில மன்னரால் ஆண்டுவரப்பட்டது.  ஆங்கில அரசின் வஞ்சக வலைக்குள் வீழ்ந்து,  பட்ட கடனைத் திருப்பிக் கட்ட முடியாததால், 1856-ல் கிழக்கிந்திய கம்பெனியின் நெருக்குதலைத் தாங்கமுடியாமல் அரசர் நாட்டை விட்டு வெளியேறினார்.
  
அரசர் வஜீர் அலி ஷாவின் மனைவிகளுள் ஒருவர்இஃப்திகருன் னிஸாஎன்ற இளம்பெண். வெளியேறத் துணிந்த கணவரை, கோழைபோல நாட்டைவிட்டுச் செல்வதை விட, வீரமாகப் போரிட்டு போர்க்களத்தில் மடிவதே மேல் என்று இவர் தடுத்துப் பார்த்தார். ஒரு சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அந்த பெண்ணுக்கிருந்த வீரதீரம், அரச குடும்பத்தில் பிறந்து போர்ப்பயிற்சிகள் பல பெற்று வளர்ந்த அரச குலத்தைச் சேர்ந்த அந்த ஆணிடம் இல்லை!!

அரசவையைச் சேர்ந்தவர்கள், அரச பொறுப்பை ஏற்று, ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட தமது மகன்களில் ஒருவருக்குப் பட்டம் சூட்டுமாறு அரண்மனையின் அனைத்து பட்டத்து அரசிகளிடமும் வேண்டுகோள் விடுக்க, அவர்களோ ஆங்கிலேயருக்கு அஞ்சி மறுத்தார்கள். இஃப்திகருன் னிஸாஒருவரே தைரியமாக முன்வந்தார்!!

கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தை எதிர்க்கும் பொறுப்பு தற்போது, பேகம் ஹஸ்ரத் மஹல் என்று பட்டம் சூட்டப்பெற்றஇஃப்திகருன் னிஸாவசம் வந்தது. இவர்  பிர்கிஸ் கத்ர்என்ற தனது 12 வயது மகனுக்கு ஔத் நாட்டு அரசனாகப் பட்டம் சூட்டினார். மகன் அறியாச் சிறுவன் என்பதால், மன்னரின் பிரதிநிதியாக (regent)  நாட்டை அவரே ஆட்சி செய்தார். அதே சமயம், கிழக்கிந்திய கம்பெனி ஔத்-தை பிரிட்டிஷ் இந்தியாவோடு இணைப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க சர் ஜேம்ஸ் ஔட்ராம் என்ற ஜெனரலை நியமித்தது. 

சர் ஔட்ராம், ஔத்-ன் படைகளை கிழக்கிந்திய படைகளோடு இணைத்து மற்ற சிற்றரசுகளை எதிர்த்துப் போரிட அனுப்பினால், ஔத் அரசுக்கு தன்னாட்சி அளிப்பதாக ஆசை காட்டினார். பேகம் ஹஸ்ரத் மஹல் அதற்குப் பணிய மறுத்துவிட்டார். தன் சக நாட்டினரைக் காட்டிக் கொடுக்க மறுத்துவிட்டார்.

இப்படிப் பலவிதங்களில் ஆசைகாட்டிப் பார்த்தும், மிரட்டிப் பார்த்தும் , ஔட்ராம் மற்றும் அவருக்குப் பின் அப்பணிக்கு நியமிக்கப்பட்ட ஜாக்ஸன் மற்றும் அதன்பின் வந்த சர் ஹென்றி லாரன்ஸ் ஆகியோரால், பேகம் ஹஸ்ரத் மஹலின் தீவிர எதிர்ப்பு காரணமாக, இணைப்புப் பணியை நிறைவேற்ற முடியவில்லை.

கிடைத்த இடைவெளியில், பேகம் ஹஸ்ரத் மஹல், கடைசி முகலாய மன்னரான பகதூர் ஷாவிடம் தன் விசுவாசத்தை உறுதிப்படுத்திக் கொண்டு, தன் மகனை ஔத்-ன் அதிகாரபூர்வ ஆட்சியாளராக அறிவிக்கச் செய்தார். தன் ஆட்சியில் இருந்த ஊழல் அதிகாரிகளைக் களையெடுத்தார். தன் படைகளைப் பலப்படுத்தினார். ‘ராஜா ஜெய் லால் சிங்என்பவரை படைத்தளபதி ஆக்கினார்.

ச்சமயம், 1857-ல் சிப்பாய்க் கலகம் தொடங்கியது.  படை வீரர்கள் வாயில் வைத்து கடித்து பயன்படுத்த வேண்டிய துப்பாக்கி ரவைகளில் பசு மற்றும் பன்றிகளின் கொழுப்பைத் தடவி வைத்தது இதன் முக்கியக் காரணமாக இருந்தது. டெல்லியில் தொடங்கிய பொறி, நாடெங்கும் பற்றிக் கொண்டது. போராட்டத்திலிருந்து உயிர்தப்பி, ஆங்கிலேய அதிகாரிகள் அங்கங்கு பதுங்கி இருந்தனர். லக்னோவில், 37-ஏக்கர் பரப்பில் ரெஸிடென்ஸிஎன்ற பிரிட்டிஷ் தூதரகம் ஒன்று இருந்தது. அதனுள் சுமார் 600 ஆங்கிலேயர்கள் அபயம் பெற்று இருந்தனர்.
 
பேகம் ஹஸ்ரத் மஹல், துணிச்சலாக, ”ரெஸிடென்ஸிதூதரகம் மீது தாக்குதல் நடத்தினார். ஜூலை 1857 முதல் செப்டம்பர் வரை 90 நாட்கள் தூதரகத்தின் மீதான முற்றுகை தொடர்ந்தது.  பல முக்கிய ஆங்கிலேயர்களின் உயிரைப் பறித்த இந்த முற்றுகை ஆங்கிலேயர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அன்றைய ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாய்ப் பரபரப்பு ஏற்படுத்தியது.

ஆங்கிலேயே அரசு ஒரு தனி படை அனுப்பி அந்த 90-நாட்கள் முற்றுகையை முறியடித்து, பேகம் ஹஸ்ரத் மஹலின் படையினரை லக்னோவைவிட்டு வெளியெற்றியது. ஒரு பெண் தலைமையிலான ஒரு சிற்றரசு, தனியே  நீண்ட நாட்கள் ஆங்கிலேயரை முற்றுகையிட்டது ஒரு பெரும் சாதனை ஆகும்.

ல வழிகளில் முயன்றும், இணைப்புக்கு வழிகிட்டாததால், மார்ச் 1858-ல் கிழக்கிந்திய கம்பெனி  படைகள், பேகம் ஹஸ்ரத் மஹலின் அரண்மனையைத் தாக்க பெரும்படை ஒன்றை அனுப்பியது. அப்போரில்,  9000 வீரர்களுக்குத் தலைமையேற்று தானே களத்திலிறங்கிப் போரிட்டார் பேகம் ஹஸ்ரத் மஹல். அந்தக் காட்சிதான் நாம் இக்கட்டுரையின் ஆரம்ப வரிகளில் கண்டது. “முஸாபக் யுத்தம்என்றழைக்கப்பட்ட இந்தப் போரில், அவருடைய படைவீரர்கள் சுமார் 5000 பேர் துரோகம் செய்துவிட்டனர். எனினும் கலங்காமல் நெஞ்சுரத்தோடு போரிட்ட அவர்,  தோல்வியடைந்த போதும் சரணடைய மறுத்தார்.

சிப்பாய்க் கலகத்தைத் தொடர்ந்து  இந்திய நாடு,  ராணி விக்டோரியாவின் நேரடி ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரப்பட்டது. அதையொட்டி விக்டோரியா மகாராணி, நவம்பர் 1858-ல் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, எதிர்-பிரகடனம் (Counter- Proclamation)ஒன்றை பேகம் ஹஸ்ரத் மகல் வெளியிட்டார்.  மகாராணியாரின் பிரகடனத்தையே எதிர்க்கத் துணித்த அவரின் இத்தைரியம் கண்டு பிரிட்டிஷாரே வியந்தனர்.  அந்தப் பிரகடனம் விளக்கமாக இந்த வலைப்பக்கத்தில் இருக்கிறது: http://oudh.tripod.com/bhm/bhmproc.htm. அதன் சாராம்சத்தைக் கண்டால் அவரது அறிவுக் கூர்மையும் தீரமும் விளங்கும்.

அதைத் தொடர்ந்து, நாய்க்கு எலும்புத் துண்டுகள் வீசுவதைப் போல, மானியங்கள் அளிப்போம் என்று ஆசை காட்டியோ அல்லது மிரட்டியோ அனைத்து சிற்றரசுகளும் வலுக்கட்டாயமாக பிரிட்டிஷ் இந்தியாவோடு இணைக்கப்பட்டன.  பிரிட்டிஷாரின் பல வாக்குறுதிகளுக்கும் மானியங்களுக்கும் மசியாமல், அவற்றின் பின்னிருந்த நயவஞ்சகத்தைக் கண்டுணர்ந்து, தாய்நாட்டுக்குச் சுதந்திரம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட பேகம், அவற்றை ஏற்க மறுத்தார்.

1859-ம் வருட இறுதி வரை அவர் ஔத்-ன் ராணியாகவே இருந்தார். அதன் பின் ஆங்கிலேயரின் எதிர்ப்புகள் கடுமையானதால், காடுகளில் மறைந்து தாக்குதல்கள் மேற்கொண்டார். மானியங்கள் பெற்று இராஜ அந்தஸ்தோடு அரண்மனையில் சேவகர்களோடு வசதியாக  வாழ வாய்ப்புகள் இருந்த போதும், அவற்றைத் தூக்கியெறிந்து விட்டு கம்பீரமாக அடங்க மறுத்த சுதந்திரப் பறவையாகவே நாட்டைவிட்டு வெளியேறினார்.

அண்டை நாடான நேபாளுக்குச் சென்று 20 ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். தன்னோடு கொண்டு சென்ற செல்வங்களை, தன்னுடன் அகதிகளாக நாடு விட்டு வந்தோருக்காகவே செலவழித்தார். வறுமையில் உழன்ற அச்சமயத்திலும், பிரிட்டிஷ் அரசின் கவர்னர் ஜெனரல், பேகம் திரும்பி வந்தால் பதினைந்து இலட்ச ரூபாய் ஒவ்வொரு மாதமும் மானியமாகத் தருவதாக ஆசைகாட்டியும் மறுத்து விட்டார். கடும் ஏழ்மை வாட்டிய போதும், தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல், மன்னிப்புக் கடிதங்கள் எழுதாமல், சுயமரியாதையோடு கடைசிவரை ஆங்கிலேயேரை எதிர்த்தவராகவே நாட்டுப் பற்றோடு வாழ்ந்து 1879-ல் மறைந்தார்.
  
க்னோவில் ஹஸ்ரத்கஞ்ச் என்ற இடத்தில், 1962-ஆம் ஆண்டு இவ்வீரப்பெண்மணியின் பெயரில்ஹஸ்ரத் பேகம் மஹல்என்ற பூங்கா அன்றைய காங்கிரஸ் அரசால் அமைக்கப்பட்டுள்ளது1992-ல் உத்ர்பிரேசத்ின் பாஜ.. ஆட்சியில் இப்பூங்காவின் பெயர்ஊர்மிளா பூங்காஎன்று மாற்றப்பட்டதாகவும், அதைக் கண்டித்து போராட்டங்களும்,  பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பும் எழுப்பப்பட்டது என்றாலும் ஆட்சி மாற்றத்திற்குப் பின்பே பின்னர் பெயர் மாற்றம் நீக்கப்பட்டதாகவும் செய்திகள் உண்டு.



இவரது நினைவாக 1984-ம் ஆண்டு இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டது. இவ்வம்சத்தைச் சேர்ந்த இளவரச் அஞ்சும் குதர் என்பவர், “தம் அரச வம்சத்தின் முகங்களில் வழிந்த கோழைத்தனத்தைத் துடைத்து எறிந்தவர்” என்று பேகத்தைப் புகழ்கிறார்.

கௌகப் கத்ர் என்ற வரலாற்றாசிரியர், “ஃப்ரான்ஸின் ஜோன் ஆஃப் ஆர்க்கைப் போல பிரிட்டிஷ் ஏகதிபத்தியத்தை எதிர்த்து நின்றார். அதன்மூலம் அவநம்பிக்கையில் முழுகிப் போயிருந்த உள்ளங்களில் நம்பிக்கை ஜோதியை ஏற்றினார்; எங்கிருந்தோ திடீரென்று வரும் விண்கல்லைப் போல வந்து ஔத் நாட்டின் ஒவ்வொரு அடியிலும் சுதந்திர வேள்வியை மூட்டினார்” என்று புகழ்கிறார்.

கார்ல் மார்க்ஸ், ரஸ்ஸல் உள்ளிட்ட இன்னும் பல வரலாற்றாசிரியர்களும் பேகம் ஹஸ்ரத் மஹலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதே இவரது தீரத்திற்கு எடுத்துக்காட்டு. 

(”டீக்கடை”  முகநூல் குழுமத்தில் நடத்தப்பட்ட “சுதந்திரப் போரில் முஸ்லிம்கள்” என்ற போட்டீக்காக எழுதியது)

Post Comment

உண்டி சுருங்குதல்...




ட்டை எடுத்துக் கொண்டு அம்மாவுக்காகக் காத்திருந்தேன். நான் காத்திருப்பதாலேயே உடனே சாப்பிட வந்தார். இல்லையென்றால் அம்மா சாப்பிட இன்னும் எத்தனை மணிநேரம் ஆகும் என்று தெரியாது. 


எனது தட்டில் கரண்டியை நிறைச்சு, சிந்தச் சிந்த மட்டன் வைத்த அம்மா, தனது தட்டில் அரை கரண்டியளவு கூட வைக்கவில்லை. ”என்ன இத்துணூண்டு வச்சிருக்கே” என்றவாறே நான் ஒரு கரண்டி எடுத்து வைத்ததும், உடனே பதறிப்போய், “இவ்வளவெல்லாம் என்னால சாப்பிட முடியாது” என்று வைத்ததை எடுத்து பாத்திரத்திலேயே போட்டார். 

ந்தக் காட்சி, இடம், ஆட்கள் மாறினாலும், வீட்டுக்கு வீடு நடப்பதுதான். அசைவம் என்றில்லை, சைவ உணவு என்றாலும் இதுதான் நிலை. சாப்பிட முடியாதது என்பதல்ல காரணம்.  பெண்கள் என்றால் எல்லாரும் உண்டபிறகு இருப்பதைக் கொண்டு குறைவாக உண்ண வேண்டும் என்ற எண்ணம் சிறுவயது முதல் ஊட்டப்பட்டதே காரணம்!! ”பெண்டிர்க்கழகு உண்டி சுருங்குதல்” என்று ஔவைப் பாட்டியே சொல்லியிருக்காங்களே.....

இந்தியக் கலாச்சாரத்தில், கணவர் உண்டபின், அதுவும் அவன் மீதம் வைத்தவற்றோடுதான் மனைவி உண்ண வேண்டும் என்பது பெண்களுக்கான வழிகாட்டல். அதிலும், மனைவி மீதான அன்பின்காரணமாக, மனைவிக்குப் பிடித்த உணவுகளைத் தன் இலையில் வேண்டுமென்றே மீதம் வைத்திருப்பராம். ஏனெனில் அனைவரும் உண்டு முடித்தபின், கடைசியில் மனைவி உண்ணுவதால் அவளுக்கு உணவு மிஞ்சாமல் போய்விடுமோ என்ற கரிசனமாம்!! 

அந்தக் கரிசனத்தை மனைவியை தன் உடன் வைத்து ஒன்றாக உண்ணவைத்து காட்ட  வேண்டியதுதானே... என்று கேட்கவும் முடியாது!! ஏனெனில், இன்றைய தனிக்குடித்தனக் காலத்தில்கூட உடன் இருந்து உண்ணுமாறு கணவன் அழைத்தால், “பிள்ளைகளுக்குக் கொடுத்துட்டு, மத்த வேலைகளை முடிச்சுட்டு நான் சாப்பிட்டுக்குவேன், நீங்க சாப்பிடுங்க” என்று மனைவியிடமிருந்து ஒரு அதட்டல் வரும்.  இதுவும்  வீட்டுக்கு வீடு நடப்பதுதான்!!!

தென்னவோ எல்லாரும் உண்டு முடித்தபின், மிச்சம் மீதி இருப்பவற்றை வழித்து பாத்திரங்களை ஒழித்துவிட்டு உண்டால்தான் பெண்களுக்கு ஒரு திருப்தி. பெரும்பாலும் கூட்டுக் குடும்பங்களில் கடைசியாக உண்ணும் பெண்களுக்கு காய், கறி வகைகள் கண்டும் காணாமல்தான் இருக்கும். தனிக்குடித்தனங்களில் அப்படி இல்லை என்றாலும், தனக்கென இருப்பதை “சின்னவனுக்கு பொறிச்ச கறி பிடிக்கும், இருந்தா ராத்திரிக்கு கொடுக்கலாம்” என்றோ; “இது இருந்தா நாளை டிஃபன் பாக்ஸுக்கு ஆச்சு” என்றோ மிச்சம் பிடிப்பதே வழக்கமாக இருக்கிறது. மற்றவர்களுக்குப் பிடிக்காததால் உண்ண மறுத்ததை வீணாக்கக்கூடாது என்று அவற்றையும் உண்டு எடையைக் கூட்டிக் கொள்வதும் ஒருபக்கம் நடக்கிறது.

பெண்கள் தாம் உண்ணும் உணவில் சமரசம் செய்வது என்பது தொன்று தொட்டு தொடங்கி, ”பெண் சமத்துவம்” கண்ட இன்றைய காலத்திலும் தொடரத்தான் செய்கிறது. கணவன் டூர் போனாலோ, அல்லது ஆஃபீஸ் பார்ட்டி என்றாலோ வீட்டில் சமைப்பதே இல்லை பல பெண்கள். சோம்பேறித்தனம் என்று காரணம் சொல்வார்கள். ஆனால் உண்மையில் தன்னைக் குறித்த அலட்சியமே காரணம்.

ஆண் எவ்வளவு செலவு செய்தாலும், அது அவன் சம்பாத்தியம் என்பதால், கண்டுகொள்ளப்படுவதில்லை. (பெண் சம்பாதித்தாலும் அது அவளது ஆணுக்குரியதே இங்கு).  பெண்கள் சிக்கனமாக இருப்பது அவர்களின் திறமைக்குச் சான்று என்ற சமூக எண்ணமும் காரணம்.  அதன் வெளிப்பாடுதான் சேர்த்த பணத்தைச் சிக்கனமா, செலவு பண்ண பக்குவமா, அம்மா கையில கொடுத்துப் போடு செல்லக்கண்ணு... அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு!’ என்பதும்!!

அந்த எண்ணம் பெண்களுக்கும் ஊறிப்போனதினாலோ என்னவோ, மற்றதைவிட தமது உணவில் அந்தச் சிக்கனத்தை அதிகமாகக் காட்டுகிறார்கள்போல.... சிலசமயங்களில் எனக்கும் அது அதீதமாகிப் போய், “மட்டனே இல்லாமல் மட்டன் குழம்பு” வைக்குமளவு ஆகிப் போயிருக்கிறது!! 

ப்படியான சூழலில், கடந்த சில வாரங்களாக “பேலியோ டயட்”டுக்கு மாறியிருக்கிறேன்.  இதில்,  அரிசி, கோதுமை போன்ற தானிய வகைகளை முற்றிலும் தவிர்த்து, அசைவ உணவு, காய்கறிகள் மற்றும் நெய்-வெண்ணெய், பனீர் உள்ளிட்ட பால் பொருட்கள் போன்றவைகளை அதிகமாக எடுக்க வேண்டும்.  பொதுவாக பெண்கள், குழம்பு-கறி-பொரியல் வகைகளைக் குறைவாக எடுத்துக் கொண்டு, அதை ஈடு செய்யுமளவு சோறு-இட்லி-சப்பாத்தி போன்றவைகளை உண்டுகொள்வார்கள்.  

ஆனால், இந்த டயட்டில் சோறு-இட்லி-சப்பாத்திக்கு இடமில்லை என்பதால், முன்பு தொடுகறியாகக் குறைவாக உண்டவற்றை இப்போது வயிறு நிறைய உண்ண வேண்டியுள்ளது. உண்மையில் இது மனதளவில் ஒரு  குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்பதுதான் அதிர்ச்சி!! அந்த மனத்தடையைத் தாண்டி வந்து, தேவையான அளவு உண்ணுவதற்கு மிகுந்த பிரயாசை எடுக்க வேண்டி இருக்கிறது. 

எனக்கு மட்டுமல்ல, இந்த டயட்டைப் பின்பற்றும் சில பெண்களிடம் பேசியபோதும் இதையே உணர்ந்தேன். அதற்கு இன்னுமொரு காரணம், அசைவ உணவுகளின் விலையும் ஒரு காரணம். காலங்காலமாக சிக்கனம் பெண்களின் பொறுப்பு என்ற எண்ணம் ஊறிவிட்டதால், ஆரோக்கியத்தைவிட செலவு பெரிதாகத் தெரிகிறது.  ஆகையால், இந்த டயட்டை ஆரம்பிக்கும் பெண்கள் பலரும், தேவையான அளவு எடை குறைந்தவுடன் விட்டுவிட்டு பழைய டயட்டுக்குத் திரும்பி விடுகிறார்கள்.  ஆண்கள் பொதுவாக ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், விலையைப் பொருட்படுத்துவதில்லை. மேலும், முறையான திட்டமிடல் இருந்தால் செலவு அதிகமாவதில்லை.

பெண்களுக்குப் பொதுவாக அதிகமாக இருக்கும் இரும்புச் சத்து குறைபாடு, கால்ஷியம் குறைபாடு ஆகியவற்றிற்குக் காரணம் அவர்கள் பால் பொருட்கள், அசைவம் மற்றும் காய்கறி வகைகளைக் குறைவாக உண்ணுவதே முக்கியமான காரணம்!! இக்குறைபாடுகளைத் தவிர்க்க மாத்திரைகளை நாடுமளவுக்குத்தான் இன்றும் பெரும்பாலான பெண்களின் நிலை உள்ளது. 

இந்த டயட்டைக் குறித்து நான் வாசித்தவரை, முறையாகப் பின்பற்றினால், மருந்து மாத்திரைகள் அல்லாமல், உண்ணும் உணவே இயற்கையாக உடலின் இரும்புச் சத்து, கால்ஷியம்தேவைகளைப் பூர்த்தி செய்யும்!! தேவையற்ற கொழுப்பிலிருந்து உடலைக் காக்கவும் செய்யும். இதற்காகவாவது பெண்கள் இவ்வுணவு முறையை பின்பற்ற வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், பெண்களால் - இந்தியப் பெண்களால்- முடியுமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!!

Post Comment

பெருமைப் பேச்சு




வெளிநாட்டில் வசிப்பதில் உள்ள சிலபல சவுகரியங்களில் ஒன்று, சில கல்யாண வீடுகளைத் தவிர்க்க முடிவது. இந்நாட்களில் கல்யாண வீடுகளின் அலப்பரைகள் தாள முடியாமல் போய்க் கொண்டிருக்கின்றன. ஆடம்பரமும், உணவு வீணடிக்கப்படுவதும்  கண்டு வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடிவதில்லை. செலவு செய்து நேரில் போய், ஏதாவது பேசி வம்பை விலை கொடுத்து வாங்குவதைவிட, இங்கிருந்து ஃபோனில் ஒரு வாழ்த்தைச் சொல்லி விட்டால் சுபம்!!

சவுகரியங்களில் தலையாயது, அறிந்தவர்களின் மரணங்கள். அசவுகரியம் என்றாலும், மரண வீடுகளை சந்திக்க வேண்டியில்லாததும் ஒரு சவுகரியமே. அறியாதவர்களின் மரணச் செய்திகளே நடுக்கத்தைத் தரும்போது, மரணம் நிகழ்ந்த வீடுகளுக்குச் செல்வது ஒருவித பயமேற்படுத்தும்.

கடைசியாக, பல வருடங்கள் முன் ஊரில் இருந்தபோது ஒரு வயதான உறவினரின் மரணம் நிகழ்ந்தது. அவரின் மனைவி, ”என் அந்தஸ்து போச்சே” என்று அழுதது ஏன் எனப் புரியாமல் விசாரித்தபோது, ”பழுத்த சுமங்கலி” என்பதால் உறவுகளின் திருமணங்களில் “தாலி கட்ட” அவரையே எப்போதும் முன்னிறுத்தி வந்தது இனி நடக்காது என்பதுதான் காரணம் எனத் தெரிய வந்தது. ஒருவரின் மரணத்திற்கு அழுவது, பிரிவை நினைத்து மட்டும் அல்ல, மரணித்தவரால் நமக்கு என்ன நஷ்டங்கள் என்பதையும் நினைத்தே என்பது புரிந்தது.

உரிய சமயத்தில் போக முடியாவிட்டாலும், நாம் இந்தியா செல்லும் சமயத்தில் அன்பு-மரியாதை-உறவுகளின் நிமித்தம் அந்த வீடுகளுக்கு விசாரிப்பதற்குச் சென்றே ஆகவேண்டும். மரணம் நிகழ்ந்ததற்கும், நாம் செல்வதற்கும் நடுவில் உள்ள கால இடைவெளியில் அவர்களின் மனம் ஓரளவு ஆறுதல் அடைந்திருக்கும் என்பதால், இயல்பாகப் பேசிவிட்டு வரமுடியும். 

ல்யாண வீடுகளையும் அவ்வாறே பின்னர் சென்று விசாரித்தே ஆக வேண்டும்!! அவர்களும் இயல்பு(!!!) வாழ்க்கைக்குத் திரும்பியிருப்பார்கள் என்றாலும், கொஞ்சமேனும் பரபரப்பு இருக்கும். அதுவும் நாம் பெண்வீட்டைச் சேர்ந்தவர்கள் என்றால், மாப்பிள்ளை வீட்டில்தான் போய் பெண்ணைப் பார்க்க வேண்டியிருக்கும். நாம் முதன்முதலாக அவர்கள் வீடுகளுக்குச் செல்வதால் அதிகமாகவே தங்களது செல்வாக்கை விளம்புவார்கள். 

சென்ற முறை இந்தியா சென்றபோது, கல்யாணம் முடிந்த சில மாதங்கள் ஆகியிருந்த  ஒரு வீட்டிற்கு, வருவதாகத் தகவல் சொல்லிவிட்டுச்  சென்றிருந்தோம். பெண்ணின் மாமியார்தான் அவ்வீட்டின் அச்சாணி என்று போனதுமே புரிந்தது.  வந்தவர்களை முறையாகக் கவனிக்கும்படி மருமகளைப் பாசமாக, அதே சமயம் அதிகாரமாகவும் ஏவினார். எங்களோடு அமர்ந்து தங்கள் வீட்டுப் பெருமைகள், குடும்பப் பெருமைகள், பிள்ளைகள் பெருமைகள், குலப் பெருமைகள் என்று விலாவாரியாகப் பேசினார்... பேசினார்... பேசிக் கொண்டே இருந்தார்.

எங்களுக்கு அதையெல்லாம் கேட்க வேண்டாம் என்றாலும், கேட்டே ஆகவேண்டிய நிர்பந்தம்!! அங்கே வாழ்வது எங்கள் குடும்பத்துப் பெண்ணல்லவா... மரியாதைக் குறைவு ஆகிவிடக்கூடாதே.... கொட்டாவியைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு கேட்டோம். கேட்கிறோமா இல்லையா என்று செக் பண்ணுவதற்காகவோ என்னவோ, இடையிடையே “இன்னார் உங்களுக்கும் இன்ன வகையில் சொந்தம்தானே...” என்பது போன்றெல்லாம் கேள்விகள் கேட்டார்.

எனக்கு கல்யாணம் ஆனதிலிருந்தே வெளிநாட்டு வாழ்க்கை என்பதால் உள்ளூரில் யாரையும் தெரியாது என்று சொல்லி தப்பித்துவிட, தொடர்ந்த அடுத்தடுத்த கேள்விகள் என்னோடு வந்த இன்னொருவரிடமே கேட்கப்பட்டன!!  பாடம் நடத்தி முடித்ததும் டீச்சர்  கேட்பதுபோல,பேசி முடித்த பிறகு, அதிலிருந்து கேள்விகள்  கேட்டுவிடுவாரோ என்று வேறு பயமாயிருந்தது!! 

இருப்பினும் அவர் பேசுவது ரொம்பவே அதிகமாகப் பட்டது எனக்கு. இவ்வளவு பேச்சு தேவைதானா எனுமளவுக்கு இருந்தது. ’உங்கள் வீட்டுப் பெண் எப்பேர்ப்பட்ட குடும்பத்தில் வாக்கப்பட்டிருக்கிறாள் பார்த்துக் கொள்ளுங்க’ என்பதை நிறுவும் முயற்சிபோல என்று எண்ணிக் கொண்டேன். அல்லது வாங்கிய சீர்களுக்கான நியாயப்படுத்துதலோ என்னவோ... 

ருவழியாக சொற்பொழிவினூடே, “வாங்க வீட்டைச் சுற்றிப் பார்ப்போம்” என்று அழைத்தார். விருப்பமில்லை என்றாலும், அவர் பேச்சிலிருந்து தப்பித்தால் போதும் என்று கிளம்பினோம். வீட்டைக் கட்டிய வரலாறும் படமாக ஓடியது. ஒவ்வொரு அறையாகக் காட்டி, அதன் சிறப்புகளைச் சொன்னார். சமையலறைக்கு வந்தோம். மருமகள் எங்களுக்காக டீ போட்டுக் கொண்டிருந்தாள். 

கிச்சனின் ஒரு மூலையில் தாளிடப்பட்ட சிறிய கதவுகள் கொண்ட அறையை என்னோடு வந்தவர் ”இது ஸ்டோர் ரூமா” என்று இயல்பாகச் சொன்னவாறே திறக்க, அதைக்கண்ட மாமியாரும் மருமகளும் ஏனோ பதற..  அவர்களின் பதற்றத்தை உள்வாங்குமுன்பே இவர் கதவைத் திறந்துவிட, உள்ளிருந்து ஒரு இளம்பெண் பாய்ந்து வெளியே வர...  நாங்கள் இருவரும் அதிர்ந்து, வாய்வரை வந்த அலறலைக்  கஷ்டப்பட்டு அடக்கி நின்றோம்... 

ஒரு நிமிடம் அமானுஷ்ய அமைதி நிலவியது. வெளியே வந்த அந்தப் பெண்ணைப் பார்க்கும்போதே தெரிந்தது, அந்த மாமியாரின் மகள் என்பதும், மனவளர்ச்சி குன்றியவர் என்பதும். பதினாறு பதினேழு வயதுதானிருக்கும் அந்தப் பெண்ணிற்கு. அம்மாவின் அழகையும் சிவந்த நிறத்தையும் அப்படியே கொண்டிருந்தாள். முகத்தில் மனவளர்ச்சி குன்றியோருக்கே இருக்கும் சில அடையாளங்கள். 

இருட்டு அறையிலிருந்து சுதந்திரம் கிடைத்ததும் அந்தப் பெண்ணிற்கு அப்படியொரு ஆனந்தம். அந்த மகிழ்ச்சி குழறலான அவளது பேச்சில் தெரிந்தது. தன் செய்கைகளிலும் அதை வெளிப்படுத்தினாள். அவளைக் கட்டுப் படுத்த முடியாத இக்கட்டான நிலைமை. அந்த அம்மாள் சர்வமும் ஒடுங்கிப் போய் அமர்ந்தார். அவரது நிறுத்தாத, பெருமை பொங்கிய பேச்சிற்கான காரணம் புரிந்தது. இவ்வளவு நேரம் இருந்த எரிச்சல் அடங்கி, பரிதாபம் மிகுந்தது. அவரருகில் அமர்ந்து வலிய பேச்சுக் கொடுத்து, இயல்பாகப் பேசிவிட்டுக் கிளம்பினோம். 

Post Comment