Pages

பெருமைப் பேச்சு
வெளிநாட்டில் வசிப்பதில் உள்ள சிலபல சவுகரியங்களில் ஒன்று, சில கல்யாண வீடுகளைத் தவிர்க்க முடிவது. இந்நாட்களில் கல்யாண வீடுகளின் அலப்பரைகள் தாள முடியாமல் போய்க் கொண்டிருக்கின்றன. ஆடம்பரமும், உணவு வீணடிக்கப்படுவதும்  கண்டு வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடிவதில்லை. செலவு செய்து நேரில் போய், ஏதாவது பேசி வம்பை விலை கொடுத்து வாங்குவதைவிட, இங்கிருந்து ஃபோனில் ஒரு வாழ்த்தைச் சொல்லி விட்டால் சுபம்!!

சவுகரியங்களில் தலையாயது, அறிந்தவர்களின் மரணங்கள். அசவுகரியம் என்றாலும், மரண வீடுகளை சந்திக்க வேண்டியில்லாததும் ஒரு சவுகரியமே. அறியாதவர்களின் மரணச் செய்திகளே நடுக்கத்தைத் தரும்போது, மரணம் நிகழ்ந்த வீடுகளுக்குச் செல்வது ஒருவித பயமேற்படுத்தும்.

கடைசியாக, பல வருடங்கள் முன் ஊரில் இருந்தபோது ஒரு வயதான உறவினரின் மரணம் நிகழ்ந்தது. அவரின் மனைவி, ”என் அந்தஸ்து போச்சே” என்று அழுதது ஏன் எனப் புரியாமல் விசாரித்தபோது, ”பழுத்த சுமங்கலி” என்பதால் உறவுகளின் திருமணங்களில் “தாலி கட்ட” அவரையே எப்போதும் முன்னிறுத்தி வந்தது இனி நடக்காது என்பதுதான் காரணம் எனத் தெரிய வந்தது. ஒருவரின் மரணத்திற்கு அழுவது, பிரிவை நினைத்து மட்டும் அல்ல, மரணித்தவரால் நமக்கு என்ன நஷ்டங்கள் என்பதையும் நினைத்தே என்பது புரிந்தது.

உரிய சமயத்தில் போக முடியாவிட்டாலும், நாம் இந்தியா செல்லும் சமயத்தில் அன்பு-மரியாதை-உறவுகளின் நிமித்தம் அந்த வீடுகளுக்கு விசாரிப்பதற்குச் சென்றே ஆகவேண்டும். மரணம் நிகழ்ந்ததற்கும், நாம் செல்வதற்கும் நடுவில் உள்ள கால இடைவெளியில் அவர்களின் மனம் ஓரளவு ஆறுதல் அடைந்திருக்கும் என்பதால், இயல்பாகப் பேசிவிட்டு வரமுடியும். 

ல்யாண வீடுகளையும் அவ்வாறே பின்னர் சென்று விசாரித்தே ஆக வேண்டும்!! அவர்களும் இயல்பு(!!!) வாழ்க்கைக்குத் திரும்பியிருப்பார்கள் என்றாலும், கொஞ்சமேனும் பரபரப்பு இருக்கும். அதுவும் நாம் பெண்வீட்டைச் சேர்ந்தவர்கள் என்றால், மாப்பிள்ளை வீட்டில்தான் போய் பெண்ணைப் பார்க்க வேண்டியிருக்கும். நாம் முதன்முதலாக அவர்கள் வீடுகளுக்குச் செல்வதால் அதிகமாகவே தங்களது செல்வாக்கை விளம்புவார்கள். 

சென்ற முறை இந்தியா சென்றபோது, கல்யாணம் முடிந்த சில மாதங்கள் ஆகியிருந்த  ஒரு வீட்டிற்கு, வருவதாகத் தகவல் சொல்லிவிட்டுச்  சென்றிருந்தோம். பெண்ணின் மாமியார்தான் அவ்வீட்டின் அச்சாணி என்று போனதுமே புரிந்தது.  வந்தவர்களை முறையாகக் கவனிக்கும்படி மருமகளைப் பாசமாக, அதே சமயம் அதிகாரமாகவும் ஏவினார். எங்களோடு அமர்ந்து தங்கள் வீட்டுப் பெருமைகள், குடும்பப் பெருமைகள், பிள்ளைகள் பெருமைகள், குலப் பெருமைகள் என்று விலாவாரியாகப் பேசினார்... பேசினார்... பேசிக் கொண்டே இருந்தார்.

எங்களுக்கு அதையெல்லாம் கேட்க வேண்டாம் என்றாலும், கேட்டே ஆகவேண்டிய நிர்பந்தம்!! அங்கே வாழ்வது எங்கள் குடும்பத்துப் பெண்ணல்லவா... மரியாதைக் குறைவு ஆகிவிடக்கூடாதே.... கொட்டாவியைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு கேட்டோம். கேட்கிறோமா இல்லையா என்று செக் பண்ணுவதற்காகவோ என்னவோ, இடையிடையே “இன்னார் உங்களுக்கும் இன்ன வகையில் சொந்தம்தானே...” என்பது போன்றெல்லாம் கேள்விகள் கேட்டார்.

எனக்கு கல்யாணம் ஆனதிலிருந்தே வெளிநாட்டு வாழ்க்கை என்பதால் உள்ளூரில் யாரையும் தெரியாது என்று சொல்லி தப்பித்துவிட, தொடர்ந்த அடுத்தடுத்த கேள்விகள் என்னோடு வந்த இன்னொருவரிடமே கேட்கப்பட்டன!!  பாடம் நடத்தி முடித்ததும் டீச்சர்  கேட்பதுபோல,பேசி முடித்த பிறகு, அதிலிருந்து கேள்விகள்  கேட்டுவிடுவாரோ என்று வேறு பயமாயிருந்தது!! 

இருப்பினும் அவர் பேசுவது ரொம்பவே அதிகமாகப் பட்டது எனக்கு. இவ்வளவு பேச்சு தேவைதானா எனுமளவுக்கு இருந்தது. ’உங்கள் வீட்டுப் பெண் எப்பேர்ப்பட்ட குடும்பத்தில் வாக்கப்பட்டிருக்கிறாள் பார்த்துக் கொள்ளுங்க’ என்பதை நிறுவும் முயற்சிபோல என்று எண்ணிக் கொண்டேன். அல்லது வாங்கிய சீர்களுக்கான நியாயப்படுத்துதலோ என்னவோ... 

ருவழியாக சொற்பொழிவினூடே, “வாங்க வீட்டைச் சுற்றிப் பார்ப்போம்” என்று அழைத்தார். விருப்பமில்லை என்றாலும், அவர் பேச்சிலிருந்து தப்பித்தால் போதும் என்று கிளம்பினோம். வீட்டைக் கட்டிய வரலாறும் படமாக ஓடியது. ஒவ்வொரு அறையாகக் காட்டி, அதன் சிறப்புகளைச் சொன்னார். சமையலறைக்கு வந்தோம். மருமகள் எங்களுக்காக டீ போட்டுக் கொண்டிருந்தாள். 

கிச்சனின் ஒரு மூலையில் தாளிடப்பட்ட சிறிய கதவுகள் கொண்ட அறையை என்னோடு வந்தவர் ”இது ஸ்டோர் ரூமா” என்று இயல்பாகச் சொன்னவாறே திறக்க, அதைக்கண்ட மாமியாரும் மருமகளும் ஏனோ பதற..  அவர்களின் பதற்றத்தை உள்வாங்குமுன்பே இவர் கதவைத் திறந்துவிட, உள்ளிருந்து ஒரு இளம்பெண் பாய்ந்து வெளியே வர...  நாங்கள் இருவரும் அதிர்ந்து, வாய்வரை வந்த அலறலைக்  கஷ்டப்பட்டு அடக்கி நின்றோம்... 

ஒரு நிமிடம் அமானுஷ்ய அமைதி நிலவியது. வெளியே வந்த அந்தப் பெண்ணைப் பார்க்கும்போதே தெரிந்தது, அந்த மாமியாரின் மகள் என்பதும், மனவளர்ச்சி குன்றியவர் என்பதும். பதினாறு பதினேழு வயதுதானிருக்கும் அந்தப் பெண்ணிற்கு. அம்மாவின் அழகையும் சிவந்த நிறத்தையும் அப்படியே கொண்டிருந்தாள். முகத்தில் மனவளர்ச்சி குன்றியோருக்கே இருக்கும் சில அடையாளங்கள். 

இருட்டு அறையிலிருந்து சுதந்திரம் கிடைத்ததும் அந்தப் பெண்ணிற்கு அப்படியொரு ஆனந்தம். அந்த மகிழ்ச்சி குழறலான அவளது பேச்சில் தெரிந்தது. தன் செய்கைகளிலும் அதை வெளிப்படுத்தினாள். அவளைக் கட்டுப் படுத்த முடியாத இக்கட்டான நிலைமை. அந்த அம்மாள் சர்வமும் ஒடுங்கிப் போய் அமர்ந்தார். அவரது நிறுத்தாத, பெருமை பொங்கிய பேச்சிற்கான காரணம் புரிந்தது. இவ்வளவு நேரம் இருந்த எரிச்சல் அடங்கி, பரிதாபம் மிகுந்தது. அவரருகில் அமர்ந்து வலிய பேச்சுக் கொடுத்து, இயல்பாகப் பேசிவிட்டுக் கிளம்பினோம். 

Post Comment

3 comments:

ராமலக்ஷ்மி said...

இறுதிப் பத்தி மனதில் அமர்ந்து விட்டது, அந்த அம்மாளின் செய்கைக்குப் பதிலாக நீங்கள் செய்தது...

பாலராஜன்கீதா said...

திருக்குறள் 987 நினைவிற்கு வந்தது :-)

ஹுஸைனம்மா said...

ராமலஷ்மிக்கா, நன்றிக்கா.

@பாலராஜன் கீதா: அந்தளவுக்கெல்லாம் இல்லீங்க... அவங்க நிலைதான் பாவமாருந்துச்சு...
நன்றிங்க.