ஆங்கிலம் மட்டுமல்ல,
தாய்மொழியும் அவசியம்தானாம்!!
பள்ளி, கல்லூரி இரண்டுமே ஆங்கில வழியில்தான் பயின்றேன். என்றாலும், +2 பொதுத் தேர்வு மதிப்பெண்களைப் பார்த்துவிட்டு, அழுதுகொண்டிருந்த(!!) என்னைப் பார்த்த க்ளாஸ் டீச்சர் கரிசனத்துடன் விசாரிக்க, தமிழில் மார்க் குறைந்ததற்காக அழுகிறேன் என்று தெரிந்ததும் டென்ஷனாகி, ”மேத்ஸ்ல செண்டம் வாங்கலைன்னு அழுறியோன்னு நினச்சு வந்தா... லூஸா பிள்ள நீயி?”ன்னு திட்டு வாங்குன அளவுக்கு தமிழ்ப்பாசம் உண்டு!! ஏன் இப்பவும் பாருங்களேன், பிளாக் எழுதலாம்னு முடிவு பண்ணதும், கிஞ்சித்தும் சந்தேகத்துக்கு இடமில்லாம, எழுதினா தமிழ்லதான் எழுதணும்னு முடிவுபண்ற அளவுக்கு தமிழ்ப் பற்று!! (ஹி..ஹி.. இங்லீபீஸ் புலமை பத்தியெல்லாம் இங்க பேசக்கூடாது!!)
இடையில் 9-ம் வகுப்பு மட்டும், தமிழ் மீடியத்தில் படிக்க நேர்ந்த போது, கணக்கு, வரலாறு, அவ்வளவு ஏன், புவியியல் பாடம்கூட தமிழில் படிக்க ரொம்பக் கஷ்டப்படலைங்க. இத்தனைக்கும், ஆங்கிலம் என்பது பள்ளியைத் தவிர வேறு எங்கும் மருந்துக்குக்கூட பயன்படாத காலம் அது. ஆனா, அந்த அறிவியல்.. அப்பப்பா, நான் பட்டபாடு இருக்கே.. இப்பவும் மறக்க முடியாது!! அதுவும் அப்போ இயற்பியல்ல முதல்பாடமே “முடுக்கம்” பற்றியது!! அப்படின்னா என்னன்னு சொல்லுங்க பாப்போம்... அவ்வ்வ்... "Acceleration”ங்க அது!! தமிழில் அறிவியல் புத்தகத்தை/பொருளாதாரப் புத்தகத்தை வாசிச்சா, ஏதோ அகத்தியர்காலத் தமிழில் பேசுவதுபோல உணரலாம்!!. அப்புறம், ஆங்கில வழி அறிவியல் புத்தகம் வாங்கி, அதுல வாசிச்சுப் புரிஞ்சுகிட்டு, பின் தமிழில் படிப்பேன். ஆங்கில essayக்களை தமிழ்ல ”transliterate" பண்ணிப் படிச்சவங்களுக்கு மத்தியில, இப்படி "tamil to english translation" செஞ்சுப் படிச்ச என்னை ஹாஸ்டல்ல ”பந்தா பார்ட்டி”ன்னே முடிவு பண்ணிட்டாங்க. :-((((
இப்பவும், ஐன்ஸ்டீன் - ஒளி வேகம் குறித்து ஆங்கிலச் செய்தித்தாளில் வாசித்த செய்தியை, முந்தைய டிரங்குப் பொட்டி பதிவில் எழுதலாம் என்று எழுத ஆரம்பித்து, அறிவியல் சொற்களின் தமிழ்ப் பதங்கள் என்னவென “முழி”பெயர்ந்து நிற்கையில், உதவியது www.tamilcube.com!!
இப்படியே படிச்சு முதலிடம் பெற்று சமாளிச்சிட்டாலும், அடுத்த வருஷம் வேற ஸ்கூல்ல இங்லீஷ் மீடியத்துல சேந்துட்டேன். அங்க, வகுப்புல முதல் நாள், "ASL" மாதிரி என்னைப் பத்தி டீடெய்ல் கேட்ட பொண்ணுகிட்ட பேச்சுவாக்குல, நான் தமிழ்மீடியத்துல..ன்னு சொல்லத்தான் ஆரம்பிச்சேன், அதுக்குள்ள பரமக்குடி கலவரத்துக்குக் காரணமான வதந்தீ மாதிரி பத்திகிச்சு க்ளாஸ்ல!! க்ளாஸ் டீச்சர் என்னைக் கூப்பிட்டு, தமிழ் மீடியத்துல படிச்ச நீ எப்படி இங்லீஷ் மீடியத்துல சேரப்போச்சுன்னு எகிற... அவ்வ்வ்... டீக்கடையில கிளாஸ் மாறிப் போன மாதிரில்ல இருக்கு?? எங்கே என்னை மறுபடி தமிழ்மீடியம் அனுப்பிடுவங்களோன்னு பயத்துல, அவசர அவசரமா, ஊர்விலக்கம் பண்ண மாதிரி ஒரேயொரு வருஷம் மட்டும் தமிழ் மீடியம் படிச்ச கதயச் சொன்னாலும், முழுசா என்னை நம்பலைன்னு அவங்க பார்வையே சொன்னது.
நீங்க என்ன சொன்னாலும் செய்றேன், என்னை வீட்டைவிட்டு மட்டும் அனுப்பிடாதீங்க அத்தான்னு கெஞ்சுற ஹீரோயின் மாதிரி (கெரகம்.. வர்ற உதாரணத்தப் பாரு..), கண்ணுல நீர் தளும்ப நின்ன என்கிட்ட, “முத மன்த்லி டெஸ்ட்ல நீ வாங்குற மார்க்கை வச்சுத்தான் நீ இங்க கண்டினியூ ஆகமுடியுமா இல்லியான்னு சொல்லமுடியும்”னு தீர்ப்பைச் சொல்லிட்டு, சொம்பை.. ச்சே.. ஹேண்ட் பேகை எடுத்துட்டுப் போயே போய்ட்டாங்க!!
இப்படிக் கஷ்டப்பட்டு ஆங்கில மீடியத்துல படிச்சாலும், யோசிப்பது, பேசுவது, பழகுவது எல்லாம் (வழக்குத்) தமிழில்தான். எங்கெங்கு காணினும் தமிழ்தான் என்பதால் தமிழ் அந்நியமாகிவிடவில்லை!! சொல்லப் போனால், ஆங்கிலவழியில் படிப்பதினாலேயே ஆங்கிலத்தில் புலிகளாகி விடுவதுமில்லை.
பள்ளி இறுதியாண்டு படிக்கும்போது, பரிட்சையில், ஆங்கிலத்தில் சில தலைப்புகள் கொடுத்து கட்டுரை எழுதும் பகுதி உண்டு. இதற்காக, எதிர்பார்க்கப்படும் பல தலைப்புகளில் கட்டுரைகள் படித்துக் கொள்வோம். ஒருமுறை, பரிட்சையில் "Adulteration" என்ற தலைப்பும் கொடுக்கப் பட்டிருந்தது. நாங்கள் அதுவரை படித்திராதது என்றாலும், கலப்படத்தைப் பற்றித்தானேன்னு ஈஸியா எழுதிவிட்டேன். பரிட்சை முடிந்து, சக தோழிகளிடம் பேசியபோது, இந்தக் கேள்வியை "Adult Education" என்று புரிந்துகொண்டு பதில் எழுதியவர்களில் சுதாவும் அடக்கம் என்பதறிந்து ஷாக்காகிவிட்டேன். ஏன்னா, அவங்க வீட்டில்தான் அம்மா உட்பட எல்லாருமே படித்தவர்கள்; கடினமான அறிவியல் பகுதிகளில் எனக்கு சந்தேகம் போக்குவாள். முக்கியமாக “ஹிந்து” பேப்பர் வாடிக்கையாக வாங்குகிறார்கள். அதனால் அவளை நான் வைத்திருந்த லெவலே வேறு என்பதால், பேரதிர்ச்சி எனக்கு. (என் வீட்டில் என் வாப்பா ஊருக்கு வரும் அந்த ஒரு மாதம் மட்டுமே ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் என “டபுள் பொனான்ஸா”. மற்ற நேரங்களில் தினந்தந்தி மட்டுமே.)
காலேஜ் வந்ததும், தலையணை சைஸ் டிக்ஷனரி வாங்கவேண்டியிருந்தாலும், ஆங்கிலவழிப் பள்ளிப்படிப்புதான் ஆரம்பகால திணறல்களிலிருந்து ரொம்பவே காப்பாற்றியது. ஆனாலும், அடுத்தடுத்த வருஷங்களில் “Material Science" என்ற பாடமும், அதை நடத்திய ராஜகோபால் சார் பேசின இங்லீஷ், பாடப் புத்தகம் எல்லாமே “looked greek to me!!" எனக்கு நினைவு தெரிஞ்சு என் வாழ்க்கையிலேயே முதலும், கடைசியுமா க்ளாஸ் டெஸ்டுக்குக் கட் அடிச்சது அப்பதான்!! அந்தப் பாடத்துல ஃபைனல் எக்ஸாம்ல எப்படி ஃபர்ஸ்ட் அட்டெம்ப்ட்லயே (ஜஸ்ட்)பாஸானேன்கிறது, இப்பவும் புரியாத புதிர் எனக்கு.
ஆங்கில மொழி புலமைக்கும், புரிதலுக்கும், அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை இன்னும் அழுத்தமாப் புரிய வச்சது Material Scienceதான். ஆனாலும், இப்ப(வும்) கல்வி கற்பது, ஆங்கிலத்துல புலமை பெறுவதற்குத்தான் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். ஆங்கிலத்தைச் சரளமாக, அலட்டலான உச்சரிப்புடன் பேசுவதுதான் கற்றவர்களுக்கு அடையாளம் என்பதாகக் கருதுபவர்களைப் பார்க்கும்போது என்ன சொல்லிப் புரிய வைக்க? ஒருமுறை, விகடனில் கமலஹாசன் உள்ளிட்ட சிலர், கல்வி அவசியம் என எச்சந்தர்ப்பங்களில் உணர்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “ஆங்கிலத்தில் உரையாட முடியாதபோது படிக்கவில்லையேவென மிக வருந்துகிறோம்” என்று சொல்லியிருந்தது குறித்து, "கண்டிப்பாக கல்வி கற்கத்தான் வேண்டுமா?" என்கிற என் முந்தைய ஒரு பதிவிலும் விசனத்துடன் சொல்லியிருக்கிறேன்.
கல்வி என்பது ஒருகாலத்தில் அறியாமையைப் போக்கும் ஒளியாகக் காணப்பட்டது. அதனால்தான் கற்றவர்களை மதிப்போடு நடத்தினார்கள். ஆனால், இன்றோ செல்வம் சேர்ப்பதற்காகவே கல்வி (கற்பிப்பவர்கள், கற்பவர்கள் இருதரப்பிற்குமே) என்றாகிவிட்டபின், பட்டங்கள் பல பெற்றவர்களை, அவர்கள் திறமைக்காக மட்டுமே முதலில் மதிக்கத் தோன்றுகிறது.
அன்றாட வாழ்வில், இருக்கும் நாட்டிற்கேற்ப, செய்யும் வேலைக்கேற்ப, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகள் தெரிந்திருப்பது மிக அவசியம். அதற்காக ஆங்கிலம் தெரிவதுதான் அறிவின் அடையாளம் என்று எண்ணுவதுதான் தவறு. வளைகுடா நாடுகளில் பள்ளிக்கல்வி கற்கும் மாணவர்கள், பேச்சு-ஆங்கிலத்தில் புலமை பெறுகிறார்கள். பின்னர் இந்தியா சென்று கல்வியைத் தொடரும்போது, (சில) ஆசிரியர்களின் குறைவான ஆங்கிலப் புலமையை வைத்து அவர்களைக் குறைவாக எடை போடுகிறார்கள். அதே சமயம், ஆங்கிலத்தில் பாடம் நடத்த வேண்டிய ஆசிரியர்களும், விளக்கம் தருமளவாவது ஆங்கிலப் புலமை பெற்றிருத்தலும் அவசியம்தானே?
90களின் பிற்பகுதியில் நான் அமீரகத்தில் ஒரு பள்ளியில் 11ம் வகுப்புக்கு கம்ப்யூட்டர் ஆசிரியையாகத் தற்காலிகமாகப் பணிபுரிந்தபோது, ”Machine language" என்பதைப் புரியவைக்க, “நாமெல்லாம் ஆங்கிலத்தில் படித்தாலும், புரிந்துகொள்வதும், சிந்திப்பதும் நம் தாய்மொழியில்தானே?” என்று சொல்ல, ஒரு சிறு சலசலப்பு... இல்லையாம், அவர்கள் சிந்திப்பதே ஆங்கிலத்தில்தானாம!! இடக்கெல்லாம் இல்லை, நிஜம்தானாம்!! நிறையவே திகைத்து நின்றது நினைவுக்கு வருகிறது. அந்தப் பாதிப்போ என்னவோ, என் பிள்ளைகள் தமிழ் தெரியாதவர்களாக இருக்கக்கூடாது என்று உறுதியாய் இருக்கிறேன்.
இங்கு வேலை பார்க்கத் தொடங்கிய சமயத்தில், ஆங்கிலத்தைத் தாய்மொழியாக கொண்டவர்கள், எனது ஆங்கிலத்தில் குறையைக் கண்டுவிடுவார்களோ என்று அஞ்சியிருக்கிறேன். ஆனால், அவர்களில் சிலர், கடிதங்கள் அனுப்பும்போது செய்யும் ‘சில்லி மிஸ்டேக்’குகளைப் பார்த்து சிரிப்பும், ஆனந்தமும், அதிர்ச்சியும் வரும்!! தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே சிலசமயம் தமிழில் எழுத்து/பொருட் பிழைகள் விடுவதுண்டல்லவா, அவர்களும் அப்படித்தான் போல. நாம் அவர்களை பிரமிப்பாய்ப் பார்க்க, அவர்களோ, தாய்மொழியோடு, கூட பல மொழிகள் சரளமாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்களே என்று நம்மைக் கண்டு பொறாமைப்பட.. அக்கரைப் பச்சைதான் போங்கள்!!
அதே சமயம், அரேபியர்/சீனர்/ஜப்பானியர் சிலர், தயக்கமே இல்லாமல் தில்லாக தப்புந்தவறுமாக ஆங்கிலத்தில் உரையாடக் கண்டு ஆரம்பத்தில் நகைத்தாலும், பின்னாளில்தான், சொல்லப்படும் விஷயம் புரிபட்டுவிடுகிறதல்லவா, அது போதுமே? என்ற ‘ஞானம்’ பிறந்தது. Conveying the message - இதற்குத்தானே மொழிகளெல்லாம்?
நேற்று சின்னவனுக்கு, கம்ப்யூட்டர் பாடத்தில், அதே மெஷின் லாங்வேஜ் வந்திருந்தது. புரியவில்லை என்று கேட்டான். (காலச்சக்கரம்!!) 11ங்கிளாஸ்ல அப்போ வந்தது இப்ப மூணாங்கிளாஸ்லயே வந்ததச் சொல்லவா; இல்லை அப்பவும், இப்பவும் இதே மெஷின் லாங்வேஜ், (நான் விட்டுட்டாலும்) என்னைய விடாமச் சுத்தி வர்றதச் சொல்லவா.. ஆனாலும் நான் மாறலையே.. வாக்கு சுத்தம்!! அதே கேள்வியத்தான் இப்பவும் கேட்டேன்.. ”நீ இங்லீஷ்ல படிக்கிற பாடங்களை, எப்படிப் புரிஞ்சு நினைவில வச்சுப்ப?” “தமிழ்ல”. வெரிகுட்!!
|
Tweet | |||
19 comments:
அருமையான பதிவு ஹுசைனம்மா.
உங்களோட தமிழ் பாசத்திற்கு பாராட்டுகள்.
மெஷின் லாங்க்வேஜ் க்கு உங்களுடைய விளக்கம் மிகச்சிறப்பாக ஏற்புடையதாக இருக்கு.
சரளமான சிந்தனை ஓட்டத்தில் பதிவு.
//...இல்லையாம், அவர்கள் சிந்திப்பதே ஆங்கிலத்தில்தானாம!!///
இந்த வரிகளைப் பற்றி 'எங்களு'க்குள் ரொம்பவே விவாதித்திருக்கிறோம். உண்மையில் சிநதனைக்கு மொழியே கிடையாது. ஒரு மாதிரி வேகமான காட்சி வடிவத்தில் யோசிக்கிறோம்.
ஸலாம் சகோ.ஹுசைனம்மா...
"இயந்திர மொழி" (!?!?!?) சிந்தனைப்பகிர்வு மிக அருமை.
மாஷால்லாஹ்.
எனக்கும் இதே போன்ற அனுபவங்கள்தான் உள்ளன சகோ.
ஏழாவது வரை தமிழ் வழிக்கல்வி பயின்று பின்னர் எட்டாவதில் இங்லீஷ் மீடியம் சேர்ந்த போது...
முதல் நாள்
முதல் பிரியட்
முதல் ஆசிரியர்
என்னைப்பற்றி விசாரித்தறிந்த பின்னர், அவர் கேட்ட கேள்வி...
You have joined English medium now after studying so far in Tamil, so... how will you pick-up..?
எனக்கு கேள்வி இலகுவாக புரிந்தது.
'என் தந்தை எனக்கு பாடங்களை சொல்லித்தந்து என்னை பிக்-அப் பண்ணிகொள்ள செய்து விடுவார்கள்' என்று தமிழில் யோசித்து,
அதை 'அப்படியே' ஆங்கிலத்தில் 'இப்படி' சொன்னேன்...
"My father will pick-up sir.."
"ஏய்.. நான் உன்னை கேட்டேன்.. உன் அப்பா பிக்-அப் பண்ணினா எனக்கென்ன, பன்னாட்டி எனக்கென்ன..!"
என்று தமிழில் அவர் சொல்ல... அவரும் வகுப்பில் அனைவரும் பலமாக சிரித்தனர்.
இந்த அவமானத்தை எல்லாம் தாண்டி, கடுமையாக போராடி அதே வகுப்பில்... அரை இறுதித்தேர்வில் ஆங்கிலத்திலேயே கிளாஸ் ஃபர்ஸ்ட் மார்க் (95) வாங்கியது...
வரலாறு..!
விளக்கம் விளாசல்... அருமை
ஆஹா தாய்மொழி பற்றிய அசத்தலான பதிவு..
//சொல்லப்படும் விஷயம் புரிபட்டுவிடுகிறதல்லவா, அது போதுமே//
இந்த குரூப்புத்தான் நாங்களும்,, ஆரம்பத்தில் ஆங்கிலத்தை சரளமாக பேச முடியவில்லையே என்ற ஏக்கமும் தாழ்வு மனப்பான்மையும் இருந்தாலும் இப்பொழுதெல்லாம் அது இல்லை,, காரணம் நாம் பேசுவதை அவர்கள் பிழையின்றி விளங்கிகொள்கிறார்கள்.. மொழி என்பது ஒரு பரிமாற்று ஊடகம்தானே.. அது ஒரு தகமை மட்டும்தான் அன்றி ஆங்கிலம் பேசத்தெரிந்தவர்களுக்கு அதிகளவு அறிவிருக்கிறதா அர்த்தம் கிடையாது..
ஆங்கிலத்தில் படித்தாலும் சிந்தனைகள் தாய்மொழியில்தான் இருக்கும் என்பது எனது கருத்து.. அறவே தாய்மொழி பழக்கப்படாத சந்தர்ப்பத்தில் இது மாறலாம்..
//”நீ இங்லீஷ்ல படிக்கிற பாடங்களை, எப்படிப் புரிஞ்சு நினைவில வச்சுப்ப?” “தமிழ்ல”. வெரிகுட்!!//
same blood :)
படிப்புக்கும் அறிவுக்கும் தொடர்பில்லை என்பார்கள். அதுபோலத்தான் ஆங்கில வழிக் கல்விக்கும், பேசும் ஆங்கிலத்துக்கும் தொடர்பில்லை என்று அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள். சிந்தனைகளைத் தடம் மாறாமலும், சுவையாகவும் சொல்லிச் செல்லும் பாங்கு உங்களுக்கு கைவந்த கலை. பாராட்டுக்கள் ஹுசைனம்மா.
//அவர்களோ, தாய்மொழியோடு, கூட பல மொழிகள் சரளமாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்களே என்று நம்மைக் கண்டு பொறாமைப்பட.. // இங்கேயும் அதே கதைதான். ;)
எத்தனை மொழிகள் தெரிந்து வைத்திருந்தாலும், சிந்தணை பிறப்பது தாய் மொழியில் தான் ...
நிறைய பேரை நிச்சியம் கொசு வத்தி சுத்த வச்சிருக்கும் இப்பதிவு ...
அருமையா எழுதி இருக்கீங்க ஹுஸைனம்மா.
என்னை பொருத்தவரை, எந்த மொழியில் படித்தாலும், அதனை மனதில் நிறுத்துவது தாய்மொழியில் தான். எந்த துறையாக இருந்தாலும் கற்பனை சக்தி முக்கியம், கற்பனை செய்வது தாய் மொழியில் தான் என்பது என் எண்ணம்.
'செம்புலப்பெயல் நீர்'ன்னு சொல்லுவாங்களே அது இந்த சிந்தனை மொழிக்கும் பொருந்தும் ஹுஸைனம்மா.. ஆரம்பத்துல எதுவானாலும் தமிழ்ல அர்த்தம் செஞ்சுக்கிட்டு, சிந்தனையும் செஞ்சுக்கிட்டு இருந்தாலும் நாளடைவில் அந்தப் பிராந்திய மொழியிலேயே சிந்திக்க ஆரம்பிச்சுடுறோம்..
ராம்வி - நன்றிங்க.
ஸ்ரீராம் சார் - நன்றி சார். ‘சிந்தனைக்கு மொழியே கிடையாது; காட்சி வடிவமே’ : சில சம்பவங்களை, வர்ணனைகளை வாசிக்கும்போது நம் மனதில் அப்படியே காட்சிகள் உருவெடுத்து ஓடும். ஆனா, சில எண்ணங்களை, கருத்தை நம் மனது மொழி வடிவில்தானே ‘சிந்திக்கிறது’? (இந்த இடத்தில் சில நாட்கள்முன் வாசித்த "Mind mapping technique" ஞாபகம் வருகீறது). :-))))
ஆஷிக் - ஸலாம். நன்றி.
மாய உலகம் - நன்றி.
ரியாஸ் - வாங்கப்பா. //அறவே தாய்மொழி பழக்கப்படாத சந்தர்ப்பத்தில் இது மாறலாம்// ஆமாங்க.
அன்னு - வாங்க. உங்களுக்கும் அதே ரத்த வகையா? :-)))
கீதா - நன்றிங்க.
இமா - //இங்கேயும் அதே கதைதான்// நாட்டுக்கு நாடு இமிக்ரேஷன்கள்!! (ஹி.. ஹி.. வீட்டுக்கு வீடு வாசப்படியை உல்டா செஞ்சது) :-)))
ஜமால் - நன்றி.
முகுந்த் அம்மா- ஆமாப்பா. நன்றி.
அமைதிச்சாரல்க்கா - //அந்தப் பிராந்திய மொழியிலேயே சிந்திக்க ஆரம்பிச்சு// எது நமக்கு வசதியாப் படுதோ, அது தாய் மொழியாகிடுது. தமிழ்நாட்டில் பிறந்து, வளரும் தெலுங்கு-உருது- துளு பேசுறவங்களுக்கும் அப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.
நேற்று சின்னவனுக்கு, கம்ப்யூட்டர் பாடத்தில், அதே மெஷின் லாங்வேஜ் வந்திருந்தது. புரியவில்லை என்று கேட்டான். (காலச்சக்கரம்!!) 11ங்கிளாஸ்ல அப்போ வந்தது இப்ப மூணாங்கிளாஸ்லயே வந்ததச் சொல்லவா; இல்லை அப்பவும், இப்பவும் இதே மெஷின் லாங்வேஜ், (நான் விட்டுட்டாலும்) என்னைய விடாமச் சுத்தி வர்றதச் சொல்லவா.. ஆனாலும் நான் மாறலையே.. வாக்கு சுத்தம்!! அதே கேள்வியத்தான் இப்பவும் கேட்டேன்.. ”நீ இங்லீஷ்ல படிக்கிற பாடங்களை, எப்படிப் புரிஞ்சு நினைவில வச்சுப்ப?” “தமிழ்ல”. வெரிகுட்!!//
உங்கள் சின்ன மகன் உங்களை பூரிப்பு அடைய செய்து விட்டார்
மிகுந்த மகிழ்ச்சி.
அருமையாக இருக்கிறது பதிவு ஹீஸைனம்மா.
ஹையோ ! சூப்பர்ங்க ! தமிழை போல் ஆங்கிலமும் ஒரு மொழி அவ்வளவு தானே. அதற்கு ஏன் அஞ்சி நடுங்க வேண்டும்.
மிசஸ் ஹுஸேன் யார் ப்லாகை விட்டாலும் உங்க ப்லாகை தொடருவேன் ..உங்கள் டிரங்கு பெட்டிக்கு நானும் ஒரு விசிறி..நீங்க எழுதும் எல்லாமே"ஆம அதே சரி தான் சரி தான் "என்று எழுந்து நிற்க வைக்கும்படியா இருப்பது தான் சிறப்பு.இதுவும் அப்படியே .இன்னைக்கு எனக்கு சர்ப்ரைஸ் போல நேற்று இரவு நான் சிந்தித்துக் கொண்டே தூங்கிப் போன சப்ஜெக்டை இன்று படிக்கையில் ஆச்சரியம்!!
மகளது பள்ளி ஓபென் ஹவுசுக்கு போனால் ஒரே தமாஷாக இருக்கும் ஆங்கில புலமையை காமிக்கவே சும்மா ஒவ்வொரு டம்ப் கேள்வியை அவுத்து விடுவார்கள் பாக்கணும்..ஒரே மண்டை காய்ச்சலாக இருக்கும்
வாழ்த்துக்கள் ஹுஸேன்
கோமதி அக்கா - மிக்க நன்றிக்கா.
தானைத் தலைவி - அதேதான், நன்றிப்பா.
தளிகா - நீண்ண்ண்ண்ண்ட நாள் கழிச்சுப் பாக்கிறேன் உங்களை. நலம்தானே? உங்க கமெண்ட் பாத்து ரொம்ப சந்தோஷம். சில விஷயங்கள் பத்தி எழுதும்போது, ரொம்ப யோசனையாயிருக்கும், நாம சொல்றது சரிதானான்னு. உங்க கமெண்ட்டும் நிம்மதியளிக்கிறது. ரொம்ப நன்றிப்பா.
Post a Comment