Pages

பாதுகாப்புக்கு ஒரு வாரம் மட்டுமா?


சந்தனமுல்லை சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி எழுதிய இடுகையில் தொடர அழைத்திருந்தார். காதல் வாரம், அதிரடி வாரம் போல பாதுகாப்பு அந்த வாரத்தோடு முடிவதில்லையே, அதனால் எழுதுகிறேன்.


பத்து, பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்... என்னவர் தினமும் அபுதாபியிலிருந்து கிட்டத்தட்ட 180 கி.மீ. தூரத்தில் உள்ள இடத்தில் பணிபுரிந்து வந்தார். அநேகமாகத் தினமும் சென்று வருவார். கல்யாணமான முதலிரண்டு வருடங்கள் ஒரு புரிதலை எட்டுவதற்கான வழிமுறைகளாகக் கருத்து வேறுபாடுகள் நிறையவே வரும். அதுபோன்ற ஒருநாளில் வீடு திரும்பியவர், அதற்கான அறிகுறியே இல்லாமல் சகஜமாக இருந்தாலும் முகவாட்டமாக இருந்தார். என்ன என்றபோது, அன்று வரும்வழியில் வேகம் காரணமாக நடந்த ஒரு விபத்தை நேரில் பார்த்ததாகவும், அவ்விபத்தில் பாதிக்கப்பட்ட நபரை அப்போதுதான் காரில் இருந்து வெளியே எடுத்து ஸ்ட்ரெச்சரில் கிடத்தியிருந்ததைக் கண்டதாகவும் சொன்னார். வெள்ளைநிற அரேபிய நீள் அங்கி முழுதும் இரத்தத்தில் நனைந்திருக்க, உடல் துள்ளித் துள்ளி அடங்கியதைப் பார்த்ததையும் விவரித்தார். அவரின் மனநிலை எனக்கும் பற்றியது. சாலை விபத்துக்கள் இன்றளவு அதிகம் இல்லாத காலம் அது. அதனால் இருவருக்குமே அவ்விபத்து ஏற்படுத்திய தாக்கம்  அதிக நாள் நீடித்தது.


அதிகரித்துவிட்ட சாலைவிபத்துக்கள் உயிரின் மதிப்பை நன்றாகவே உணர்த்தியுள்ளதால்,  என்ன வருத்தமிருந்தாலும், காலை புறப்படும்  குடும்பத்தினரிடம் பத்திரமாப் போயிட்டு வாங்க என்று தவறாமல் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. ”தவக்கல்து அலல்லாஹ்” (இறைவனின் காவலுடன்)  என்று சொல்லாமல் வெளியே கிளம்பக்கூடாது என்று ஆணையே போட்டிருக்கிறேன் பிள்ளைகளிடமும்.  கணவரும், பிள்ளைகளும் கிளம்பி, சென்றடைய வேண்டிய இடத்தைச் சேர ஆகும் உத்தேச நேரம்வரை, அவசரமென்றால் அழைக்கக்கூடுமே என்று கைத்தொலைபேசியை எங்கேஜ்ட் ஆக்காமல் வைத்திருப்பதெல்லாம் கொஞ்சம் அதிகப்படி செண்டிமெண்டோ என்று தோன்றினாலும் செய்யாமல் இருக்க முடியவில்லை.
திடீர்திடீரென்று இருந்தாற்போல் ஞாபகம் வந்து, ஊரிலிருக்கும் வாப்பா, உம்மாவை அழைத்து ஒண்ணுமில்ல சும்மாதான் ஃபோன் பண்ணேன் என்று அவர்களின் நலத்தை உறுதி செய்வதும் இந்த பயத்தால்.


இப்படி அன்பை அதிகரித்து, உறவுகளைப் பலப்படுத்தி வைப்பதில் சாலைவிபத்துகளுக்கும் ஒரு முக்கிய பங்குண்டு.


நம்மில் அநேகர் செய்யும் தவறுகள் குறித்த என் ஆதங்கங்கள் ஒன்றிரண்டையும் உங்கள்முன் வைக்கிறேன்:


இங்கு (வெளிநாடுகளில்) சாலையின் இருபுறமும் “Hard Shoulder" எனப்படும் அவசர தேவைக்காக உபயோகிக்கும் ஒரு லேன் உள்ளது. அதாவது விபத்து சமயங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி போன்றவை செல்ல உபயோகிக்கும் லேன் (lane) அது. அதில் சென்றால் அபராதங்கள் உண்டு என்றாலும் அதையும்மீறி, சாலைகளில் டிராஃபிக் ஜாம் சமயங்களில் பலரும் எவ்விதக் குற்றவுணர்ச்சியுமின்றி அந்த லேன்களை பயன்படுத்துகிறார்கள். டிராஃபிக் ஜாம் ஏற்படுத்திய விபத்தில் உயிருக்குப் போராடுபவர்களைக் காக்க ஆம்புலன்ஸ் திக்கித்திணறி நிற்பதைப் பார்க்கும்போது நமக்குத்தான் பதறும். அதில் போகிறவர்கள் மனசாட்சியே இல்லாதவர்கள் போல!!


தயவுசெய்து எங்கேயும் எப்பொழுதும் ஆம்புலன்ஸுக்கு வழிவிடுங்கள். வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்.


அடுத்தது அதைவிடக் கொடுமையானது:  சிறுவர்களை பெல்ட் போடாமல் நாய்க்குட்டி போல கண்ணாடிகளின் அருகில் அல்லது சீட்களின் நடுவில்  விட்டிருப்பதும். (பெரியவர்களே போடுவதில்லை என்கிறீர்களா?)


ஆனை வாங்குனவன் அங்குசம் வாங்க யோசிப்பதுபோல, பெரிய பெரிய கார் வைத்திருப்பார்கள், ஆனால் குழந்தைகளுக்கு கார்சீட் வாங்க மாட்டார்கள். கேட்டால் குழந்தை அதில் வைத்தால் இருக்க மாட்டான்/ள், அழுவான்/ள்  என்பார்கள். அதெல்லாம் நாம் சொல்லிக்கொள்வதுதான். பழக்குவது நம் கடமை.  கைக்குழந்தைகளை மடியில் வைத்துக் கொள்வது, விபத்தில் “Live Air bag" பயன்படுத்துவதுபோல என்றும் அறிவுறுத்துகிறார்கள்.


முன்சீட்களுக்கு நடுவில் நிற்கும் குழந்தையும் சும்மாவா நிற்கும்? கியர், ரேடியோ அல்லது நம்மை என்று எதையாவது நோண்டும். அதில் ஓட்டுபவரின் கவனம் சிதறினால்? ஒருவேளை பிரேக் அடிக்க நேரிட்டால், விண்ட்ஷீல்டை உடைத்துக் கொண்டு பாய்வது உறுதி.


சில வருடங்களுக்கு முன், இதுபோல சீட்களுக்கு நடுவில் நின்ற இரண்டரை  வயது சிறுவன், ஹைவேயில் 140 கி.மீ. வேகத்தில் சென்றுகொண்டிருந்த காரில், (ஆட்டோமேடிக்) கியரை ரிவர்ஸ் போட, அது எங்கெங்கெல்லாமோ இடித்து, நண்பர் குடும்பம் பிழைத்தது பெரிய விஷயம்!!


குழந்தைகளுக்கும் உங்களைப் போலவே சீட் பெல்ட் போட்டுப் பழக்குங்கள். இவ்விஷயத்தில் தயவு தாட்சண்யம் பார்க்கக்கூடாது.


Happy & Safe Driving!!
Post Comment

36 comments:

malar said...

நல்ல பதிவு ....

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க. இங்கே (சௌதியில்) அதுவும் ஜித்தாவில் ட்ராஃபிக் ரூல்ஸே இல்லாத மாதிரிதான். யாருமே ஃபாலோ பன்றதில்லை. ஆஃபிஸ் போயிட்டு, திரும்ப வீட்டுக்கு போறதுக்குள்ள தினம் தினம் போராட்டம்தான்.

S.A. நவாஸுதீன் said...

////குழந்தைகளுக்கும் உங்களைப் போலவே சீட் பெல்ட் போட்டுப் பழக்குங்கள். இவ்விஷயத்தில் தயவு தாட்சண்யம் பார்க்கக்கூடாது.////

ரொம்ப சரி.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான விஷயங்களை சொல்லியிருக்கீங்க ஹுசைனம்மா

கவனமாக இருக்க வேண்டும் .

jailani said...

நல்ல பதிவு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல அறிவுரைகள் ஹுஸைனம்மா ..

\\கல்யாணமான முதலிரண்டு வருடங்கள் ஒரு புரிதலை எட்டுவதற்கான வழிமுறைகளாகக் கருத்து வேறுபாடுகள் நிறையவே வரும். // அழகா சொல்லி இருக்கீங்க.. ஆனா அப்பல்லாம் விட்டுபிடிக்கலாம்ன்னு இருந்துட்டு எங்க வீட்டிலெல்லாம் இப்பத்தான் புரிதலுக்காக கருத்து வேறுபாடு வருதுன்னு உல்டாவா இருக்கே.. :)

அ.மு.செய்யது$ said...

ஆக்கப்பூர்வமான பதிவு.

நம்ம தான் நமக்காக எதுவும் பண்றதில்லையே.ஹெல்மட்டும் சீட்பெல்ட்டும் டிராபிக் போலிஸ் பாக்கும் போது தான ?

( ஆமா உங்க பிளாக அ ஓபன் பண்ணும் போது ஒரு சவுண்டு மீஜிக் வருதே ?!!?! அது இன்னா ?? )

தாரணி பிரியா said...

Nice :)

நாஞ்சில் பிரதாப் said...

கொடுத்த TIPS உபயோகமானது. இவை நிறையபேர் செய்யும் தவறுகள்தான்.

சாலைவிதிகளை சரியாக பின்பற்றினாலே விபத்துக்கள் தவிர்க்கப்படும்,

Chitra said...

எல்லா விஷயங்களையும் கருத்தில் கொண்டு சரியா சொல்லி இருக்கிறீங்க. அருமையான பதிவு.

அபுஅஃப்ஸர் said...

சாலைவிதி என்பது காற்றில் பறக்கும் கொடிபோல் ஆடிக்கிட்டிருக்கு,

சரியா சொல்லிருக்கீங்க‌

//இப்படி அன்பை அதிகரித்து, உறவுகளைப் பலப்படுத்தி வைப்பதில் சாலைவிபத்துகளுக்கும் ஒரு முக்கிய பங்குண்டு. //

நிச்சயமா, ஒரு நொடியில் எதுவும் நடக்கலாம்

//இங்கு (வெளிநாடுகளில்) சாலையின் இருபுறமும் “Hard Shoulder" எனப்படும் அவசர தேவைக்காக உபயோகிக்கும் ஒரு லேன் உள்ளது.//

மஞ்சல் கோடு, இது அரண்மனை மதில்சுவர் என்றும் சொல்லுவார்கள் தாண்டினால் லைசன்ஸ் கூட பிலாக் பண்ணும் வாய்ப்பு உள்ளது

athira said...

ஹீசைனம்மா, இங்கு ஒரு தடவைதான் வந்தேன், மீண்டும் வர வழி தெரியவில்லை, இப்போ எப்படியோ கண்டுபிடித்து வந்தேன். முன்பு எங்கே பதிவு போட்டேன் என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.

நல்ல தகவல் சொல்லியிருக்கிறீங்கள். அழகாக இருக்கு எடுத்துச் சொன்ன விதம்.

புகழன் said...

//இங்கு (வெளிநாடுகளில்) சாலையின் இருபுறமும் “Hard Shoulder" எனப்படும் அவசர தேவைக்காக உபயோகிக்கும் ஒரு லேன் உள்ளது. அதாவது விபத்து சமயங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி போன்றவை செல்ல உபயோகிக்கும் லேன் (lane) அது. //

இதே போல இந்தியாவிலும் கொண்டு வர வேண்டும்.

(அது சரி இங்கதான் ரோட்டை அடைத்துக் கொண்டு பிளாட்பாரக் கடைகள் இருக்கின்றதே. அதை அகற்றக் கோரினால் அதிலும் ஆயிரம் வில்லங்கங்கள்.)

இமா said...

நல்ல கருத்து சொல்லி இருக்கிறீங்க ஹுசேன். எப்போதுமே நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விடயங்கள் இவை.

Muniappan Pakkangal said...

Nice post Hussainamma.

Anonymous said...

நல்லா சொல்லியிருக்கீங்க ஹுசைனம்மா. சாலைப்பாதுகாப்பு பத்தி எல்லாரோட பதிவும் படிச்சுக்கிட்டே வர்றேன். ஒவ்வொருத்தர் அனுபவமும் நமக்கு பாடமா இருக்கு.

பாத்திமா ஜொஹ்ரா said...

சரியா சொன்னீங்க அக்கா,
முதலில் ஒட்டகத்தை கட்டிவிட்டு,அடுத்து அதன் பாதுகாப்புக்கு அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிய வேண்டும் என்றார்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்.அதைப்போல நாம் சாலை விதிகளை கண்டிப்புடன் மதித்து நடக்க வேண்டும்,அல்லாஹ்விடம்,நம்முடைய மற்றும் எல்லாருடைய பாதுகாப்புக்கு துவா செய்யவேண்டும்.

புதுகைத் தென்றல் said...

சூப்பர் ஓட்டு போட்டுட்டேன்

thenammailakshmanan said...

கார் முன்சீட்டுல் இருக்கும் குழந்தை பத்தி கூட யோசிச்சு இருக்கிங்க ஹுசைனம்மா நல்ல பகிர்வு சாலை பாதுகாப்பு முக்கியம்

புதுகைத் தென்றல் said...

கார் முன் சீட்டில் அப்பாவுடனோ/ ட்ரைவருடனோ பிள்ளைகள் தான் அமருவதாக பிடிவாதம் பிடித்தாலும் சரி அவர்களை அமரவிடக்கூடாது. பிள்ளைகள் பின் சீட்டில்தான் அமர வேண்டும். பாதுகாப்பானது

SUFFIX said...

நல்ல கருத்துக்கள் ஹுசைனம்மா, நண்பர் நவாஸ் கூறியது போல, தினமும் அலுவலகம் போய் விட்டு வருவதென்பது ஒரு ரிஸ்க் தான், தினமும் ஒரு விபத்தாவ‌து காணுவதுண்டு. எனது அருமை தோழன் ஒருவனையும் இந்த விபத்தில் இழந்திருக்கின்றேன். கவனமாக பயணிப்போம்.

ஷாகுல் said...

//குழந்தைகளுக்கும் உங்களைப் போலவே சீட் பெல்ட் போட்டுப் பழக்குங்கள். இவ்விஷயத்தில் தயவு தாட்சண்யம் பார்க்கக்கூடாது//

ஆமாம்.

//ஹெல்மட்டும் சீட்பெல்ட்டும் டிராபிக் போலிஸ் பாக்கும் போது தான ?//

50 ரூபாய் இருந்தால் அதுவும் வேண்டாம்.

// ஹைவேயில் 140 கி.மீ. வேகத்தில் சென்றுகொண்டிருந்த காரில், (ஆட்டோமேடிக்) கியரை ரிவர்ஸ் போட, அது எங்கெங்கெல்லாமோ இடித்து//

குழந்தைகள் மட்டுமா? எங்கள் அலுவலகத்தில் புதிதாக ஒருவர் சேர்ந்தார். வண்டியில் போய் கொண்டிருக்கும் போது
அவ்ர் கீயரை நியூட்ரலில் போட்டு விட்டார்.

நல்ல வேலை நியூட்ரலில் போட்டார் அதிலிருந்து அவரை முன் பக்கம் ஏற்றுவதில்லை.

சந்தனமுல்லை said...

நல்லா நோட் பண்ணி எழுதியிருக்கீங்க ஹுசைனம்மா! :-) தொடர்ந்தமைக்கு நன்றி!

செ.சரவணக்குமார் said...

அருமையான இடுகை ஹுஸைனம்மா. பகிர்வுக்கு மிக்க நன்றி.

Jaleela said...

மிகச்சரியான பகிர்வு,

இது போல் நானும் சாலையில் நிறைய கார்களில் குழந்தைகள் நடுவில் நிற்பதை பார்த்துள்ளேன்.பார்க்கும் எனக்கு தான் பக்கு பக்கு என்று இருக்கும்.

நீங்கள் சொல்வது போல் நானும் தீடீர் திடீரென ஊருக்கு போ செய்து விசாரிப்பது.


ந‌ல்ல‌ அழ‌கான‌ முறையில் விள‌க்கி இருக்கீங்க‌.

நாஸியா said...

ஜஸகல்லஹ்!

சூப்பரா எழுதிருக்கீங்க.. நம்ம ஊர போலவே இங்கயும் சாலை விபத்துகள் நடப்பது ரொம்ப பயமா இருக்கு :(

கண்ணா.. said...

நல்ல பதிவு,

சாலை பாதுகாப்பு குறித்து சின்ன சின்ன விஷயங்களில் விழிப்புணர்வு அனைவருக்கும் தேவைதான்

:)

ராமலக்ஷ்மி said...

தலைப்பு ரொம்ப சரி. எப்போ வேணாலும் என்றில்லை அப்பப்போ எல்லோரும் சொல்லிபடியே இருக்கலாம். நல்ல பதிவு ஹுசைனம்மா.

//கேட்டால் குழந்தை அதில் வைத்தால் இருக்க மாட்டான்/ள், அழுவான்/ள் என்பார்கள். அதெல்லாம் நாம் சொல்லிக்கொள்வதுதான். பழக்குவது நம் கடமை. //

அப்படிச் சொல்லுங்க!

ஸாதிகா said...

அவசியமான பதிவு.யதார்த்தத்தை அப்படியே பதிவிட்டு இருக்கின்றீர்கள்.பிள்ளைகளை அடிக்கடி தொடர்பு கொண்டு திருப்தி பட்டுக்கொள்ள வேண்டும் என்பதாலேயே மனதில்லாமல் வாங்கிக்கொடுத்து இருக்கும் பொருள் செல் போன்.குடும்பத்தினர் வெளியே சென்று குறிப்பிட்ட நேரத்தில் வீடு திரும்பியதும் நிம்மதி பெருமூச்சுடன் 'இறைவா!இது போல் என்றென்ன்றும் காப்பாயாக'என்று பிரார்த்தித்துக்கொள்வதும் வாடிக்கையாகிவிட்டது.

சுந்தரா said...

போன வாரம்கூட, ஒரு வாகனம் இருபக்கச் சாலைகளுக்கும் மணல்பகுதியில் தடுப்பைத் தாண்டி நுழைந்து விளக்குக்கம்பத்தில் மோதிநின்றதைப் பார்த்தேன்.ஓட்டியவருக்கும் மற்றவர்களுக்கும் என்ன ஆனதோ என்ற கவலை ரொம்பநேரமாக மனசில் இருந்துகிட்டே இருந்தது.

வேகம் வேகம் எங்கே பார்த்தாலும் வேகம். கடைசியில வேகமாகவே வாழ்க்கையும் முடிவுக்குவந்துவிடுகிறது.

சமீபத்தில் நண்பரொருவர், தன்னுடைய டீனேஜ் மகனுக்கு அரைமணி நேரத்தில் 4 ஓவர் ஸ்பீட் ரேடார் ஃபைன் விழுந்ததாகச் சொல்லி வருத்தப்பட்டார்.என்ன வேகம் பாருங்க...

ஹுஸைனம்மா said...

மலர் - நன்றி.

நவாஸ் - ஜித்தா வந்தப்போ பாத்தேன். இந்தியா போலத்தான் இருந்துது. ஆனா ரோடெல்லாம் மோசமில்லை.

ஸ்டார்ஜன் - நன்றி.

ஜெய்லானி - நன்றி.

முத்தக்கா - நன்றி.
//அப்பல்லாம் விட்டுபிடிக்கலாம்ன்னு இருந்துட்டு எங்க வீட்டிலெல்லாம் இப்பத்தான் புரிதலுக்காக கருத்து வேறுபாடு வருதுன்னு உல்டாவா இருக்கே//

அக்கா, அது முத ரெண்டு வருஷம் வந்த சண்டைகளுக்கான விளக்க்ம் அது. அதுக்கப்புறம் உள்ளதுக்கெல்லாம் ஒவ்வொரு காரணம் சொல்லிகிட்டேயிருக்கலாம்!! ;-)

செய்யது - உங்களுக்காகப் பண்ணலைன்னாலும் குடும்பத்தினருக்காகப் பண்ணும்ங்க. (கால்கட்டு போட்டா சரியாயிடும்)

தாரணி - நன்றி.

பிரதாப் - நன்றி.

சித்ரா - நன்றி.

அபூஅஃப்ஸர் - ஃபைன் போடுவாங்கன்னு தெரிஞ்சாலும், அவசரம் மக்களுக்கு. நன்றி.

அதிரா - வழிதெரியாததாலத்தான் வரலையா? நீங்கதான் எனக்கு ஃபாலோயரா இருக்கீங்களே,அப்ப உங்க டேஷ் போர்ட் பாத்தா என் பதிவு தெரியுமே?

புகழன் - சரியாச் சொன்னீங்க. நன்றி.

இமா - நன்றி. வாங்க.

முனியப்பன் சார் - நன்றி.

சின்னம்மணி - ஆமாம்க்கா, ஒவ்வொருத்தர் பார்வையும் வித்தியாசமாத்தான் இருக்கு. பயனளிக்கவும் செய்யுது.நன்றி.

ஃபாத்திமா - சொன்னது மிகச்சரி. நன்றி.

தென்றல் - நன்றி. அப்ப இப்பத்தான் ஓட்டு போடறீங்களா? இதுக்கு முன்னாடி போடலையா? ;-)
ஆமா, முன்சீட்டில உக்கார விடக்கூடாது. சிலர் மடில வச்சுகிட்டே டிரைவ் பண்ணுவாங்க, கொடுமை!!

தேனக்கா - நன்றி.நமக்கு குழந்தைகள்தான் ரொம்ப முக்கிய்மா நினைப்போம் இல்லையா, அதான்!!

ஷஃபிக்ஸ் - நன்றி. ம்ம் பயமாத்தான் இருக்கு.

எல் போர்ட் said...

நல்ல பதிவு. இருந்தாலும் ஒரு கொஸ்டின்.. (எல் போர்ட் வித்தய காமிக்கனுமில்ல :)) கியர் போட ப்ரேக்கையும் கியர் கூட இருக்க பட்டனையும் அமுத்தனும் தானே? அந்தக் குட்டிப் பையன் எல்லாத்தையும் அவனே செஞ்சுட்டானா? :)

எனக்கும் இதப் பத்தி எழுத ஆசை.. பாப்போம்..

ஹுஸைனம்மா said...

ஷாஹுல்: அட, பெரியவர்க்கும் கை சும்மா இருக்குறதில்லையா? கவனமாத்தான் இருக்கணும் போலயே!! நன்றி.

முல்லை - நன்றி எழுதவைத்தமைக்கு.

சரவணக்குமார்: நன்றி. ரொம்ப நாளாக் காணோமே?

ஜலீலாக்கா: ஆமாக்கா, பதறத்தான் செய்யும். நன்றி.

நாஸியா: நன்றி.

கண்ணா: நன்றி.

ராமலக்‌ஷ்மி அக்கா: ஆமாக்கா, குழந்தைங்க விஷ்யத்தில செல்லம் கொடுக்கிறோம்னு நினைச்சுகிட்டு நிறைய பேர் செய்யும் தவறு இது.

ஸாதிகாக்கா: அதேதான்க்கா, வெளியே போனவங்க வீடு வந்து சேர்ற வரைக்கும் திக்திக்தான்.

சுந்தரா: சில வண்டிகளைப் பாத்தா பிழைச்சிருப்பாங்களான்னே சந்தேகமா இருக்கும்!! நன்றி.

எல் போர்ட்: அந்த பட்டனை அமுக்கறது ரொம்ப ஈஸிதானே, அதனால அவனே செஞ்சுட்டான். பின்ன, அவங்க அப்பாவா அமுக்கிக் கொடுத்து, ரிவர்ஸ் போடுப்பான்னு சொல்லுவாங்க? ;-)

Anbu Thozhan said...

அதெப்டிங்க நீங்க மட்டும் சின்ன பிள்ளைக்கு கத சொல்ற மாதிரியே, மேட்டரை கன கட்சிதமா சொல்றீங்க. உணர்வு பூர்வமான பதிவு, பல உறவுகளின் பொறுப்பாளியா பேசிருக்கீங்க..

எம்.எம்.அப்துல்லா said...

முத்து.

:)

Anbu Thozhan said...

"கல்யாணமான முதலிரண்டு வருடங்கள் ஒரு புரிதலை எட்டுவதற்கான வழிமுறைகளாகக் கருத்து வேறுபாடுகள் நிறையவே வரும்"

ஆஹா, இது வேறயா. திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே இதை அறிவுருத்தியமைக்கு மிக்க நன்றி.