Pages

இட்லியும், நெய்ச்சோறும்




எங்க ஊரில்,  குடும்பத்துக்கொருவராவது வெளிநாடுகளில் இருப்பதால், செல்வச் செழிப்புடன் இருக்கும் இன்று போலல்லாது, அன்று, அன்றன்றைக்குச் சம்பாதித்து, அன்றைய உணவைத் தேடிக்கொள்ளும் குடும்பங்களே அதிகம்.  ஓரளவு வசதியானதாக சில குடும்பங்கள்  இருந்தாலும், கிராமத்தினருக்கே உரிய சிக்கன குணத்தாலும், “ஊரோடு ஒத்து வாழ்”கின்ற பெரிய மனதினாலும், வசதியான வீடுகளிலும்கூட உணவுகளில் அளவோடு இருந்த காலம்.

உழைத்தால்தான் உணவு என்ற காரணத்தால், பெரும்பாலான வீடுகளில் காலை உணவு என்பது பழைய சோறு அல்லது தெருவில் வரும் இட்லிக்காரம்மாவின் இட்லி அல்லது ஆப்பம்தான். வீட்டில் செய்தால், உழைக்க நேரம் இருக்காதே. அதுபோல, வசதியானவர்கள் எல்லாருமே பெரிய பெரிய கூட்டுக்குடும்பங்கள் என்பதால், சமைக்க அதிக நேரம் பிடிக்கும் இட்லி, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்தி, பூரி போன்றவையெல்லாம் செய்வது மிக மிக அரிது. சேமியா, உப்புமா, கொழுக்கட்டை, புட்டு (குழாப்புட்டு அல்ல) போன்ற “Mass food"தான் எல்லா வீட்டிலும் பெரும்பாலும். செய்வதும் எளிது.

காரணம், ஒவ்வொரு கூட்டுக் குடும்பத்திலும் குறைந்த பட்சம் 10-15 பேராவது இருப்பார்கள். அவ்வளவு பேருக்கும் இட்லியோ தோசையோ வார்த்து முடிவதற்குள் மதியமாகிவிடும். இப்பப் போல, டயட் என்ற பெயரில் 3-4 இட்லி சாப்பிடும் காலமா அது? அத்தோடு விறகு அடுப்பும், கெரசின் ஸ்டவ்வும்தான் உண்டு. அதனால்தான் “mass food"!!  செய்வதும் எளிது; சாப்பிடும் அளவு குறித்தும் கவலையில்லை!!

அதுபோல, பண்டிகை மற்றும் விசேஷ தினங்களில்தான் நெய்ச்சோறு, தேங்காய்ச் சோறு, பிரியாணி போன்ற உணவுகளும். அதுவும்கூட தனித்தனியே வீடுகளில் ஆக்குவது கிடையாது. ஊர்கூடி, ஒவ்வொரு தெருவுக்கும் சேர்த்து ஊர்ப் பெரியவர்கள் பொறுப்பெடுத்து, பணம் வசூலித்து மொத்தமாக ஆக்கி, பங்கிட்டுத் தருவார்கள். ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி பண்டிகை நாட்களில் எல்லோர் வீட்டிலும் ஒரே உணவு. பெரிய பெரிய சட்டிகளில் தெருவில் வைத்து சமைப்பதை வேடிக்கை பார்ப்பதுதான் எங்களுக்குப் பொழுதுபோக்கு. பண்டிகை வந்தால்தான் நெய்ச்சோறு என்பதால் அதற்கும் ஆவலாக காத்திருப்போம்!! எக்ஸ்ட்ரா சைட் டிஷ் மட்டும் அவரவர் வசதிப்படி வீடுகளில் செய்துகொள்வார்கள்.

அந்தக்காலக் கூட்டுக் குடும்பங்களில் இட்லி, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்தி, பூரி போன்றவையெல்லாம் செய்வது வருடத்தில் சில முறைகளாகத்தான் இருக்கும். அதற்கு முந்தைய தினமே அதற்கான தயாரிப்புகளில் இறங்கி,  வீடே பரபரப்பாக இருக்கும்!! வீட்டுத் தலைவியான பாட்டி, தன் மகள்களிடம் ”இட்லி செய்யப் போறோம்; பேரப்பிள்ளைகளை இங்கே அனுப்பிவிடு. மருமகனுக்கும், உன் மாமானாருக்கும் காலைல கொடுத்து விடுறேன்” என்று சேதி சொல்லி விடுவதும் உண்டு.

என் சின்ன வயதில், எங்கள் வீட்டில் இட்லி செய்தால், தாத்தாவுக்குக் கொடுத்து விடுவோம். அதேபோல, அங்கே செய்தால் இங்கே வரும்!! கைக்குழந்தைகள் இருக்கும் சாச்சி, மாமி வீடுகளுக்கும் இட்லி கொடுத்தனுப்பப்படும். இட்லிக்கு மட்டுமல்ல, தோசை, ஆப்பம், இடியாப்பம் போன்ற மற்றவைகளுக்கும் இதே கதைதான்!! அந்த இட்லியைச் சாப்பிடுவதும் தனி சுகம்தான். சாம்பார், பச்சை/ சிவப்புச் சட்னிகளோடு ரசித்து, ருசித்துச் சாப்பிடுவேன்.

கிரைண்டர் வந்தபின், 2-3 மாதத்திற்கு ஒரு நாளாவது இட்லி, தோசை, ஆப்பம் தரிசனங்கள் கிடைத்தது.

பிறகு, சில வீடுகளில் இட்லிக்கு மாவு அரைத்துத் தர ஆரம்பித்தார்கள். இப்ப அடிக்கடி இட்லி செய்ய முடிந்தது. அரிசியும், உளுந்தும் ஊற வைத்துக் கொடுத்துவிட்டால், அரைத்துத் தருவார்கள். அதைக் கொண்டு கொடுக்கும்போது, அம்மாக்கள் சொல்லி அனுப்பும் கண்டிஷன்கள் இருக்கே!! “வேற வீட்டு அரிசி, உளுந்தோட சேத்துப் போடக்கூடாது, தனியாத்தான் போட்டு அரைச்சுத் தரணும்ன்னு சொல்லு; கிரைண்டர் நல்லா கழுவி சுத்தமாருக்கான்னு எட்டிப் பாரு; போன தரம் மாவு ரொம்பக் குறைய இருந்துச்சுன்னு மறக்காமச் சொல்லு” என்று ஆயிரத்தெட்டு கண்டிஷன்கள்!!

பின்னர் வந்த டேபிள்-டாப்/ டில்டிங் கிரைண்டர்கள் மற்றும் ஃப்ரிட்ஜ் தயவாலும், தனிக்குடித்தனங்களாலும் இட்லி தினசரி உணவாகிப் போனது.

இட்லி ஆரோக்கியமான உணவு, செய்வதற்கு எளிதானதும்கூட (!!) என்று பிள்ளைகளுக்குக் காலை உணவாகத் தருகிறேன். அதனால் அவர்களுக்கு இட்லி பிடிப்பதில்லை இப்போது. அவர்களுக்குப் பிடிப்பதில்லை என்பதால், என் அம்மா, மாமியார், தங்கைகள், உறவினர்கள் யாரும் நாங்கள் செல்லும்போது இட்லி செய்வதேயில்லை. பிரியாணிக்காகப் பெருநாளுக்குக் காத்திருப்பதுமில்லை.
 
  
 

Post Comment

47 comments:

துளசி கோபால் said...

கொசுவத்தி அருமை.

நெய்ச்சோறு சாப்பிட்டு வருசம் பல ஆச்சு. என் தோழி நஜ்மா வீட்டுலே வெளுத்துக் கட்டி இருக்கேன்.

நெய்ச்சோறு செய்முறை போடுங்கப்பா.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வும்மா. முன்போல இப்பல்லாம் இல்லையே. எல்லா குழந்தைகளையும் வட்டமாய் உட்கார வைச்சு, கையில் சாப்பாடு போடுவாங்க. அந்த மாதிரி எல்லாம் இப்ப கிடைக்கலையே...

ஸாதிகா said...

//நெய்ச்சோறு செய்முறை போடுங்கப்பா.// ஹுசைனம்மா..பதில் ப்ளீஸ்

ஹுஸைனம்மா said...

துளசி டீச்சர் - நன்றி.

//நெய்ச்சோறு செய்முறை போடுங்கப்பா//

யாரைப் பாத்து என்ன கேள்வி கேட்டீங்க? என்னைப் பத்திச் சரியாத் தெரியல உங்களுக்கு!! என் பதிவுல சமையல் குறிப்பா? அவ்வ்வ்.... நானே தினமும் சமையலோட போராடிகிட்டிருக்கேன்... பாத்தீங்களா, இது தெரிஞ்ச ஸாதிகா அக்காவோட நக்கலை?

ஹுஸைனம்மா said...

//ஹுசைனம்மா..பதில் ப்ளீஸ்//

துளசி டீச்சர், நெய்ச்சோறுதான் இருக்கறதுலயே ஈஸி சமையல். பாத்திரத்தை அடுப்பில வச்சு, அதுல நெய், ஏலம், கிராம்பு, பட்டை, வெங்காயம், இஞ்சி-பூண்டு பேஸ்ட், கொதிநீர், அரிசி சேத்து, வெந்தா நெய்ச்சோறு ரெடி!! தக்காளி, மல்லி இலை, கேரட் - இதெல்லாம் உங்க சாய்ஸ்!!

ஸாதிகாக்கா, இந்தப் பதில் போதுமா, இன்னுங்கொஞ்சம் வேணுமா? :-)))))

ஆமினா said...

//10-15 பேராவது இருப்பார்கள். அவ்வளவு பேருக்கும் இட்லியோ தோசையோ வார்த்து முடிவதற்குள் மதியமாகிவிடும். //
சின்ன வயசுல ரம்ஜான் அன்னைக்கு தான் அம்மா இட்லி,தோசை செய்வாங்க. ஆனா காலம் எவ்வளவோ மாறிடுச்சுல :))

மாதேவி said...

இனிக்கும் பழைய காலத்து நினைவுகள்.

அஸ்மா said...

//என் சின்ன வயதில், எங்கள் வீட்டில் இட்லி செய்தால், தாத்தாவுக்குக் கொடுத்து விடுவோம்//

பரோட்டாவுக்குதான் அந்த காலத்துல(அதான் சின்ன வயதில்) இப்படி அபூர்வமா இருக்கும். அதுவும் மாதத்துல 2 முறையாவது செய்துவிடுவார்கள். இட்லி/தோசைக்குமா..?!

தெருக்கள்தோறும் மொத்தமாக சேர்ந்து சோறு ஆக்குவது, வருடத்தில் சில முறை மட்டுமே செய்யும் டிஃபன்க‌ள் போன்ற‌ கிராமத்து செய்திகள் புதுமையா இருந்தது! என்ன கிராமம் என்று பெயர் சொல்லவில்லையே?

Chitra said...

பணம் வசூலித்து மொத்தமாக ஆக்கி, பங்கிட்டுத் தருவார்கள். ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி பண்டிகை நாட்களில் எல்லோர் வீட்டிலும் ஒரே உணவு.


.......மலரும் நினைவுகளுடன், ஒரு உயர்ந்த எண்ணமும் சேர்ந்து இருப்பது கண்டு - சந்தோஷமாக இருக்கிறது. இந்த பதிவை ஏனோ இரண்டு முறை வாசித்தேன்..... ஊரு நினைவு - வீட்டு சொந்தங்கள் - அந்த அன்னியோன்யம் எல்லாம் நிறைந்து உள்ள பதிவுங்க.... அருமை.

அம்பிகா said...

உண்மைதான் ஹூசனம்மா. ஆச்சி வீட்ல இட்லி தோசை செய்வதைய, பலகாரத்துக்குப் போட்டிருக்கோம் என்பார்கள். இப்ப குழந்தைகளுக்கு அவையெல்லாம் பிடிப்பதே இல்லை. நல்ல பகிர்வு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கிடைக்கும் போது அருமை கிடையாது அதற்கு..
நல்ல நினைவுகள் பகிர்ந்திருக்கீங்க..சுவாரசியமா இருக்கு..

இங்க தில்லியில் குளிர் நாளில் இட்லி கொஞ்சம் வாரம் செய்ய விட்டுப்போச்சுன்னாத்தான் இட்லி அருமை தெரியும்..:)

Starjan (ஸ்டார்ஜன்) said...

சின்ன வயசு ஞாபகங்களை கிளறிவிட்டது உங்க இடுகை. எங்க வீட்டுலயும் இப்படித்தான். பெருநாள், விசேசம் அன்னக்கிதான் நெய்ச்சோறு சாப்பிடமுடியும்.

நல்ல பகிர்வு ஹூசைனம்மா.

எல் கே said...

சேலத்தில் என் வீட்டில் இப்பவும் அக்கம் பக்காத்தில் இருப்பவர்களுக்கு அரைத்து தருவோம். ஏனென்றால், எங்கள் வீட்டில் இருப்பது பெரிய கிரைண்டர் (கடைகளுக்கு மாவு அரைக்கப் பயன்படுத்துவது)

அப்பா ஹோட்டல் என்பதால், இட்லி,உப்மா,தோசை,பூரி போன்றவை எனக்கு சலித்து போன டிபன்.

Prathap Kumar S. said...

// போன தரம் மாவு ரொம்பக் குறைய இருந்துச்சுன்னு மறக்காமச் சொல்லு//

hahhaha.... இந்த மாவு அரைச்சுகொடுக்கறதே மாவை ஆட்டையப்போடத்தான் தெரியுமோ?
அதை பாக்கெட்டுல அடைச்சு விக்கறவங்களும் உண்டு....

காலம் மாறிப்போச்சு சாப்பாடும் மாறிப்போச்சு....

Prathap Kumar S. said...

////நெய்ச்சோறு செய்முறை போடுங்கப்பா////

துளசி டீச்சர் இடம்மாறி வந்துட்டிங்க...இவ்ளோ பெரிய ரிஸ்க்லாம் வாழ்க்கைல எடுக்ககூடாதுங்க...:))

ஜெயந்த் கிருஷ்ணா said...

நினைவுகள் அருமை...

CS. Mohan Kumar said...

//இட்லி ஆரோக்கியமான உணவு, செய்வதற்கு எளிதானதும்கூட (!!) என்று பிள்ளைகளுக்குக் காலை உணவாகத் தருகிறேன். அதனால் அவர்களுக்கு இட்லி பிடிப்பதில்லை// சேம் பிளட்

vanathy said...

இப்ப நினைச்ச உடனே இட்லி, தோசை செய்ய முடியுது. ஊரில் தோசை எப்பவாச்சும் மாசத்தில் ஒரு நாளைக்கு தான்.
சூப்பர் ரெசிப்பி. நல்லா, சூப்பரா வரும்ல்ல???!!!!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//அதுபோல, பண்டிகை மற்றும் விசேஷ தினங்களில்தான் நெய்ச்சோறு, தேங்காய்ச் சோறு, பிரியாணி போன்ற உணவுகளும். அதுவும்கூட தனித்தனியே வீடுகளில் ஆக்குவது கிடையாது. ஊர்கூடி, ஒவ்வொரு தெருவுக்கும் சேர்த்து ஊர்ப் பெரியவர்கள் பொறுப்பெடுத்து, பணம் வசூலித்து மொத்தமாக ஆக்கி, பங்கிட்டுத் தருவார்கள். ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி பண்டிகை நாட்களில் எல்லோர் வீட்டிலும் ஒரே உணவு. பெரிய பெரிய சட்டிகளில் தெருவில் வைத்து சமைப்பதை வேடிக்கை பார்ப்பதுதான் எங்களுக்குப் பொழுதுபோக்கு. பண்டிகை வந்தால்தான் நெய்ச்சோறு என்பதால் அதற்கும் ஆவலாக காத்திருப்போம்!! எக்ஸ்ட்ரா சைட் டிஷ் மட்டும் அவரவர் வசதிப்படி வீடுகளில் செய்துகொள்வார்கள்.//

இது புதுசா இருக்கு!

எங்க வீட்டுல இட்லி தான் மதியத்துக்கும் டிபன் பாக்ஸ்ல கொடுத்து விடுவாங்க.. அவ்வ்வ்வ்வ்..

கொஞ்ச நாளுக்கு மாஸ் சாப்பாடு கொடுத்து விடுங்க.. தானா பயலுவ இட்லிப் பக்கம் வந்துருவாங்க :)

கோமதி அரசு said...

//ஏழை,பணக்காரன் வித்தியசாமின்றி பண்டிகை நாட்களில் எல்லோர் வீட்டிலும் ஒரே உணவு.//

கேடகவே நல்லா இருக்கு.

நினைவலைகள் நல்லா இருக்கு ஹீஸைனம்மா.

pudugaithendral said...

சூப்பர் கொசுவத்தி அருமை.

இப்போ எல்லாம் சுளுவா கிடைப்பதாலேயே அதன் அருமை பெருமை தெரிவதில்லை. நாம் ஏங்கித் தவித்ததாலேயே சின்ன சின்ன சந்தோஷங்கள் நம் வாழ்வில் நினைவுப்பெட்டகமாய் நிறைய்ய இருக்கோன்னு நினைக்கிறேன்.

☀நான் ஆதவன்☀ said...

:))) சூப்பர் கொசுவத்தி.

எம் அப்துல் காதர் said...

// யாரைப் பாத்து என்ன கேள்வி கேட்டீங்க? என்னைப் பத்திச் சரியாத் தெரியல உங்களுக்கு!! என் பதிவுல சமையல் குறிப்பா? அவ்வ்வ்.... நானே தினமும் சமையலோட போராடிகிட்டிருக்கேன்... பாத்தீங்களா, இது தெரிஞ்ச ஸாதிகா அக்காவோட நக்கலை? //

அதானே!!

"உழவன்" "Uzhavan" said...

//ஊர்கூடி, ஒவ்வொரு தெருவுக்கும் சேர்த்து ஊர்ப் பெரியவர்கள் பொறுப்பெடுத்து, பணம் வசூலித்து மொத்தமாக ஆக்கி, பங்கிட்டுத் தருவார்கள்//
 
எனக்கு இது புதிய செய்தி. நல்ல மக்கள் :-)

RAZIN ABDUL RAHMAN said...

பழைய நினைவுகளை கிளரும் பதிவு.அருமை.எனது சிறுவயது கூட்டுக்குடும்ப வாழ்க்கையை நினைவு படுத்தும் சம்பவங்கள்...

அப்ரோ..இந்த,விழாக்காலங்களில் பணம் வசூலித்து ஊருக்கெல்லாம் ஒரே சாப்பாடு,அப்டீங்குரது,ரொம்ப நல்ல விசயம்.இப்பொதா கேள்விப்படுகிறேன்.

எங்கள் ஊர் கொஞ்சம் பெரியது என்பதாலோ என்னவோ,அப்படி ஒரு முறை இல்லை..

அன்புடன்
ரஜின்

தூயவனின் அடிமை said...

இட்லி ஒரு நல்ல சிறந்த உணவு. இந்த காலத்து பிள்ளைகளுக்கு ஏனோ பிடிக்க மாட்டேங்குது.

enrenrum16 said...

ஹுஸைனம்மா நல்லா இருக்கீங்களா...பார்த்து(பேசி) ரொம்ப நாளாச்சு... முன்னயெல்லாம் இட்லின்ற வார்த்தயைக் கேட்டாலே கடுப்பாயிருக்கும். இன்னிக்கு என்ன டின்னருன்னு அவிக கேட்டா இட்லி இல்லாட்டி தோசைன்னு சொல்லிடுவேன்...அதாவது இட்லி நல்லா வந்தா இட்லி..இல்லன்னா தோசைன்னு புரிஞ்சிப்பாங்க(ரெண்டுத்துக்கும் சாம்பார் மேட்ச் ஆகறதுனால நான் தப்பிச்சேன்;)... இப்பதான் கொஞ்ச நாளா இட்லி சும்மா மல்லிப்பூ மாதிரி வருது. அதுனால இட்லி செய்றது ரொம்ப கஷ்டமுன்னு இது மூலமா உங்க பசங்களுக்கு சொல்லிக்க ஆசைப்படறேன். convey பண்ணிடுங்க.

அப்புறம் இன்னொரு விஷயம்...புதுசா ப்ளாக் ஆரம்பிச்சிருக்கேன்... வந்து பார்த்துட்டு உங்க மேலான ஆலோசனைகள் சொன்னா நல்லாருக்கும்.

enrenrum16.blogspot.com

ஹுஸைனம்மா said...

துளசி டீச்சர் - வாங்க. நன்றி.

வெங்கட் நாகராஜ் - வாங்க. ஆமா, நிறைய மறந்துட்டோம்,

மாறிட்டோம்.

ஸாதிகாக்கா - வாங்க. கரெக்டா பாயிண்டைப் பிடிச்சுட்டு

வேற ஒண்ணுமே சொல்லாமப் போயிட்டீங்களே?

ஆமினா - ஆமாப்பா. நன்றி.

ஹுஸைனம்மா said...

மாதேவி - வாங்க. நினைத்தாலே இனிக்கும் நினைவுகள்.

அஸ்மாக்கா - பரோட்டாவெல்லாம் இப்பவும்

அப்படித்தான்! ஏன்னா எனக்குச் சரியா வராது. (வேற

எதான் வருது?) எங்க ஊர் திருநெல்வேலில இருக்குக்கா.

சித்ரா - சொந்த ஊர் நினைவுகள்னா, பதிவுகளைக் கூடப்

பிடித்து விடுகிறது. இல்லையா சித்ரா? நம்

பிள்ளைகளுக்குத்தான் இப்படிச் சொல்லிக்கொள்ள

இனிக்கும் நினைவுகள் இருக்குமோ என்னவோ!

ஹுஸைனம்மா said...

அம்பிகா - வாங்கப்பா. ஆமாப்பா, இட்லிக்குன்னு கல் அரிசி வச்சிருப்பாங்க. அதை உக்காந்து அரிச்சு, அரிச்சு கை கழண்டுடும். அதுக்குமேல, அந்த தோல்-உளுந்து!!

முத்தக்கா - இங்கயும் குளிர்ல இட்லி தகராறு பண்ணும். ஆனாலும் விடாம, புளிச்ச மாவு ஊத்தி, ஓவனுக்குள்ளே வச்சிடுவோம்ல!

ஸ்டார்ஜன் - வாங்க. ஆமா, கந்தூரி எப்ப வருதுன்னு பாத்திருப்பேன் நெய்ச்சோறு திங்க.

ஹுஸைனம்மா said...

எல்.கே. - அப்படியா, ஹோட்டல்காரங்களா நீங்க? ஆனாலும், தினம் சாப்பிட்டா அலுத்துத்தான் போகும்.

பிரதாப் - வாங்க. அப்ப பாக்கெட் மாவெல்லாம் கிடையாது.

Unknown said...

அம்மா பசிக்குது, நெய்ச் சோறு போடுஙக...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//தெருவில் வரும் இட்லிக்காரம்மாவின் இட்லி//
எங்க தெருவலையும் யாராச்சும் வித்தா நல்லாதான் இருக்கும்... ஹும்...

ஆஹா... இப்படி இட்லி இட்லி போஸ்ட் பூரா இட்லி பயம் ச்சே...இட்லி மயம்... ஹும்... தினமும் இட்லியா... நடத்துங்க நடத்துங்க... (வயறு வலிக்கும் யு சி...)

சிநேகிதன் அக்பர் said...

பழைய நினைவுகளை கிளறி விட்டீர்கள் :)

மோகன்ஜி said...

இனிமையான நினைவுகளை அசை போட்டிருக்கிறீர்கள்!

ஸ்ரீராம். said...

மலர்ந்த நினைவுகள் சுவாரஸ்யம். நெய்ச் சோறு விஷயங்கள் புதுசு எனக்கு.

Ahamed irshad said...

Good sharing Husainammaa..

Vijiskitchencreations said...

நெய்சோறு வாசனை மூக்கை துளைக்குது.
அதுவும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
என் தோழி வீட்டில் எங்களுக்கக ஒரு தனி சமையல் ஆளை போட்டு செய்து தந்தாங்க. அவ்வளவு டேஸ்டி.

கெதியா வந்து ஒரு பொடி நடை போட்டு ஒரு பெரிய ஹோம் வொர்க் ஒன்று காத்திருக்கு அதுவும் நிங்க ரிப்பன் கட் செய்து தொடங்கனும்.

நல்ல பிள்ளையாட்டம் வந்துடுங்க.

www.vijiscreations.blogspot.com

a said...

கொசுவத்தி அருமை.....

ஹுஸைனம்மா said...

வெறும்பய - நன்றி.

மோகன் குமார் - நன்றி. அங்கேயும் இதே கதைதானா?

வானதி - ஆமாப்பா, இங்க சமையல் ஈஸியாத்தான் இருக்கு.

எல் போர்ட் - ஆமா, ஸ்கூல்/காலேஜ் படிக்கும்போது சிலர் தினம் இட்லி கொண்டுவருவதைக் கண்டு வியந்திருக்கிறேன். (எங்க வீட்டில ஃப்ரிட்ஜ் இல்லை அப்போ) பெரும்பாலும் அவர்களின் அம்மாக்கள் வேலை செய்பவர்களாக இருப்பார்கள்.

அவ்வப்போது பசங்க்ளுக்கு ‘ஷாக் ட்ரீட்மெண்ட்’ கொடுத்து இட்லி பக்கம் திருப்புவேன்!!

ஹுஸைனம்மா said...

கோமதிக்கா - நன்றிக்கா.

புதுகைத் தென்றல் - ஆமாப்பா, எல்லாமே சீப்பா போச்சு இப்ப!

ஆதவன் - நன்றி!!

அப்துல் காதர் - இது நல்லால்ல!! நீங்களுமா?? :-(

ஹுஸைனம்மா said...

உழவன் - வாங்க. ஊர்கூடி உணவாக்குவதை நிறைய பேர் புதிதாகக் கேள்விப்படுகிறீர்கள் போல!! ஆனா, இப்ப ரொம்பவே குறைஞ்சுடுச்சு ஊர்ல!!

ரஜின் - வாங்க. எங்க ஊரும் பெரிய ஊர்தான். தெருவுக்குத் தெரு தனியாக சோறு ஆக்குவாங்க. ஆனா, இப்பல்லாம் ரொம்ப குறைஞ்சிடுச்சு!!

இளம் தூயவன் - வாங்க. ஆமாங்க, இப்பத்திய பிள்ளைகளுக்குப் பிடிக்க மாட்டேங்குது.

என்றென்றும் 16 -வாங்க, வாங்க. அரசியல்வாதி மாதிரி அப்பப்ப மட்டும் தலைகாட்டுறீங்க. இட்லி (அ) தோசை கதை இப்பவும் தொடருது எனக்கு!!

ஹுஸைனம்மா said...

பாரத்-பாரதி - ஆமா, இந்தக் காலத்துல நெய்ச்சோறு அவ்வளவு சீப்பாத்தான் போச்சு!!

அப்பாவி தங்க்ஸ் - எல்லாருக்குமே ஒரு ‘இட்லி’ கதை உண்டு வாழ்க்கையில, தெரியுமா?!! :-)))

அக்பர் - வாங்க. நன்றி.

மோகன்ஜி - வாங்க, நன்றி.

ஸ்ரீராம் - வாங்க, நன்றி.

இர்ஷாத் - நன்றி.

விஜி - ஆமாப்பா, செய்றது ஈஸிங்கிறதால நெய்ச்சோறு எனக்கும் பிடிக்கும். தொடர்தானே, எழுதிடலாம்.

யோகேஷ் - வாங்க, நன்றி.

Jaleela Kamal said...

நாங்க நினைவு தெரிந்த நாளில் இருந்து ஆட்டு உரல் தான் நான் ஆட்ட என் தஙகை தள்ளுவா.

அடுத்து 86 லிருந்து கிரைண்டர் தான்
சின்னதிலிருந்து அருமையான் ஹோட்டல் போல இட்லி சாம்பார் அம்மா கையாலா நல்ல சாப்பிட்டாச்சு
இடையில் இட்லி பிடிக்காமல் போய்

இப்ப நான் செய்ய ஆரம்பித்ததிலிருந்து ரொம்ப பிடிதத உண்வு,
இட்லி பொடி வைத்து , கால் சால்னா,
ம்ம்ம்ம்ம்
=======
ஆனால் என் மாமியார் வீட்டில் நீங்கள் சொல்லும் வசனம் எல்லாம் உண்டு
மாமியார் மாவட்ட கொடுத்து விட்டு

யார் வீட்டு அரிசியோடு கலந்துட்டாங்களான்னு பாரு, உலுந்த அபேஸ் பன்னிடாங்களாஅனு பாரு, இட்லி கல்லா போச்சு
கிட்டேயே நில்லு
அப்படின்னு என் சின்ன கொழுந்தனார போட்டு பாடா படுத்தி எடுப்பார்கள்
பிற்கு அங்கு அம்மா வளைகாப்பு சீதனமா கிரைண்டர் கொடுத்தாச்சு.
======
இப்ப எல்லாம் யாரும் ஆட்டு வதில்லை வெளியில் தெருவுக்கு தெரு 5 ருபா, 10 ருபாயிக்கு மாவு விற்கிறார்கள்.

மனோ சாமிநாதன் said...

தலைப்பே பிரமாதம்! உள்ளடக்க செய்திகள் நெய் சோறு மாதிரி கமகமக்கிறது!!

Meena said...

சுவையான வலைப்பதிவு ! ஆப்பத்தின் வாசம்
வலையிலிருந்து வருகிறது!

இட்லி சட்னி சுவையோ தனி
பாட்டி வீட்டு தோசையின் மணமோ தனி

இன்று 2010 இல் சமையல் ரகமோ தனி
அம்மா அப்பா இட்லி சாப்பிடுவார்கள்

எனக்குப் பிடித்ததோ பிஸ்ஸாவும் பாஸ்தாவும்
என்றே குழந்தைகள் சொல்கிறார்கள்

சுருக்கமாகச் சொன்னா 'இட்லி போய் பாஸ்தா வந்தது டும் டும் டும்'

அமுதா கிருஷ்ணா said...

அருமையான பதிவு. என் ஃப்ரெண்ட் பெங்களூரில் இருக்கிறாள்.அவர்கள் தெருவில் இருக்கும் முஸ்லீம்கள் எல்லோரும் சேர்ந்து பெருநாள் அன்று பிரியாணி, பாயாசம் என தெருவில் ஒன்றாய் சமைத்து அனைத்து வீடுகளுக்கும் கொடுத்ததை மூன்று நேரமும் அதையே சாப்பிட்டதை, மிக ருசியாய் இருந்ததை சொல்லிக் கொண்டே இருப்பாள்.