Pages

ஒரு கோப்பை தேநீர்





blog.educaedu.com

முன்னொரு காலத்தில, அதாவது ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, நான் வேலைக்குப் போயிட்டிருந்தப்போ, மாலை வீட்டுக்கு வந்ததும்  டீ போடுவது  என் முதல் கடமையாக இருந்தது.  நாள் முழுசும் ஆஃபிஸுல டீ-பாய் போட்டு தந்த டீ குடிச்சுட்டு, வீட்டுக்கு வந்து நானே போட்டு குடிக்கணும்கிறது கொஞ்சமென்ன ரொம்பவே கடுப்பா இருக்கும்!!

அப்பத்தான் என்னவருக்கு வேற வேலை கிடைச்சு, என்னைவிட சீக்கிரமே வீட்டுக்கு வர ஆரம்பிச்சார். அப்ப என்ன பண்ணுவேன்னா, கரெக்டா ஆஃபிஸ்ல இருந்து கிளம்பும்போது, வீட்டுக்கு ஃபோன் பண்ணி, “ஒரே தலைவலிங்க”ன்னு பாவமாச் சொல்வேன்.  வீட்டுக்குப் போகும்போது டீ ரெடியா இருக்கும். இப்படியே டீ போடுற கடமைய நைஸா கை கழுவிட்டேன்.

அப்படியானதொரு நல்ல நாளில், வீட்டுக்கு வந்தபின், நானும் என் பெரியவனும் டீ அருந்திக் கொண்டிருக்கும்போது, அவன் “டீயில இனிப்பு குறைவா இருக்குல்ல?”ன்னு கேட்டான். “சும்மாருடா. வாப்பாவே கஷ்டப்பட்டு(!!) டீ போட்டிருக்காங்க. எந்த வீட்டிலயாவது வாப்பாவெல்லாம் இப்படி செஞ்சுத் தர்றாங்களா? அதப் போயி குறை சொல்லிகிட்டு..” ன்னு சொல்லி, ‘கல்லானாலும், புல்லானாலும்...’னு  நான் ஒரே ஃபீலிங்க்ஸாகி செண்டிமெண்டா கண்ல ஒத்திக்க தாலியைத் தேடினா, அது கழுத்தில இல்லை!! அதன் தற்போதைய இருப்பிடம் ஆணியா, லாக்கரா என்று சீரியஸாக யோசித்துக் கொண்டிருந்த வேளையில், “என்னது? திருப்பிச் சொல்லு?” என்று சத்தமாக என் மகன் கேட்டான்.

ஆஹா, இவன் வால்யூமைக் கூட்டினாலே விவகாரம் இருக்குன்னுல அர்த்தம்னு பயந்து,  “ஏண்டா?”னு பம்மினேன். அவன், ”டீ யாரு போட்டதுன்னு சொன்னே?”னு என்னைக் கேட்க, வில்லங்கம் இதில்தானெனப் புரிந்தது . அவன்தான் போட்டானாம். “முத ரெண்டு நாள் மட்டும்தான் வாப்பா போட்டது. அதுவும், எனக்கு போட்டுக் காமிக்கிறதுக்காக. அதுக்கப்புறம் நாந்தான் போடுறேன்”னான்.

அப்புறம், விசாரணையை முடுக்கிவிட்டு, கடுமையான எச்சரிக்கையும், தண்டனைகளும் வழங்கப்பட்டு, அடுப்பு பக்கம் பிள்ளைகள் போகக்கூடாது என்ற ஆணையை மீண்டும் உறுதியாக நடைமுறைப்படுத்தினேன்.

இப்ப சில மாதங்கள் முன்னாடி,  சாயங்காலம் இண்டரெஸ்டா பிளாக் படிச்சுகிட்டிருக்க நேரத்துல வந்து, “இன்னும் டீ போடலையா?”ன்னு பெரியவன் கேட்டான். என்னா  தைரியம்? அவன் வாப்பாவே  கேட்பதில்லை.  நானும் பதிவுகள் படிக்கும் ஆர்வத்தில், “ஏன், இன்னிக்கு நீ டீ போடேன்”ன்னதும், “அப்ப அன்னிக்கு..”  என்று ஆரம்பிக்கவும், உடனே நான் “அப்ப நீ சின்னப் பையன்; ஏழாங்கிளாஸ்தான். இப்ப  எட்டாஆஆஆங்கிளாஸ். தாராளமாப் போடலாம்”னு சொல்லவும் முணுமுணுத்துகிட்டே போ(ய்)ட்டான். இதை நீங்களும் தப்பாப் புரிஞ்சுருப்பீங்க, அவனை மாதிரியே. பசங்களுக்கு வீட்டு வேலைகளிலும் பங்கு இருந்தாத்தான் குடும்பம்.. சரி, சரி.

போன மாசம், என் வாப்பா வந்திருந்தப்போ, தாத்தாவும் பேரனும் ஒரே அறையில் தங்கிருந்தார்கள். பசங்களுக்கு முழுப் பரிட்சை லீவுங்கிறதால, காலையிலே எல்லாமே லேட்டாத்தான் நடக்கும்.  ஆனா, என் வாப்பாவுக்கு காலையிலே ஆறு மணிக்கு டீ குடிக்கணும்.  அது தெரிஞ்ச பெரியவன், காலையில சுப்ஹூ தொழுதுட்டு டீ போட்டு வச்சுட்டு படுத்துடுவான்.

அதுல ரொம்ப சந்தோஷமான வாப்பா, யார்கிட்ட பேசினாலும், பேரன் டீ போட்டுத் தருவதைப் பெருமையாச் சொல்லுவாங்க.  இதை நான் என் பங்குக்கு என்னவர்கிட்ட பகிர்ந்து பெருமைப்பட, அவரோ, “பேரனாவது பொறுப்போட இருக்கானேங்கிற சந்தோஷம் அவருக்கு” வழக்கம்போல..


Post Comment

33 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. சில சமயங்களில் தேநீர் தேவையாக இருந்தாலும், யாராவது போட்டுக் கொடுத்தால் நல்லாதான் இருக்கும்... நம்மளே போடணும்னா கொஞ்சம் கஷ்டம்தானே...

அமைதி அப்பா said...

//“பேரனாவது பொறுப்போட இருக்கானேங்கிற சந்தோஷம் அவருக்கு” //

ஹா ஹா ஹா ஹா...!

தமிழ் உதயம் said...

ஒரு கோப்பை தேனீர்-ஒரு இனிய பதிவாகி உள்ளது. தேனீரை போலவே பதிவும் சுவை.

Anonymous said...

ஹா ஹா ஹா ஹா =)) மாம்ஸ் ரொம்பவே விபரமாக இருக்காரே. எல்லாம் உங்க கூட இருக்கறதில் கிடைச்ச அனுபவம் போல. ஹா ஹா ஹா ஹா.

ADHI VENKAT said...

தேநீர் நல்லா இருந்தது. இஞ்சி மற்றும் ஏலக்காய் மணத்தோடு.

pudugaithendral said...

நேத்து கூட ஆஷிஷ் போட்டுக்கொடுத்த சாயா ருசிச்சு குடிச்சேன். சகோ வெங்கட் சொல்லியிருப்பது போல டீ யாராவது போட்டு கொடுத்து அதை நாம குடிக்கும் சுகமே சுகம்.

ராமலக்ஷ்மி said...

ஒரு கோப்பைத் தேநீரை ரசித்து ரசித்துப் பருகினேன்:)!

GEETHA ACHAL said...

பின்னே பாவம் உங்க பையன்...அவன் போட்ட டீயினை அவங்க அப்பா போட்டார் என்று சொன்னால் என்ன செய்வான்..


ரொம்ப smartஆக இருக்கான்...

//பேரனாவது பொறுப்போட இருக்கானேங்கிற சந்தோஷம் அவருக்கு//...சூப்பர்ப்...

ஸ்ரீராம். said...

எக்ஸ்க்யூஸ் மீ இன்னொரு கப் தேநீர் கிடைக்குமா?!!

CS. Mohan Kumar said...

சிரித்து படித்தேன். " என்னடா இந்தம்மா வீட்டில் மத்தவங்களை வேலை வாங்குது" என நினைக்கும் நம்ம ப்ளாகர்கள் "மாலை வேளையில் பதிவு படித்து கொண்டிருந்த போது.." என்ற வரிகள் வந்ததும் "அப்ப சரி" என்று சொல்லி விடுவார்கள் :))

CS. Mohan Kumar said...

நீங்க சொல்வதில் ஒரு விஷயம் தொடர்ந்து நம்ப முடியலை. எல்லா வீட்டிலும் மனைவி தான் கணவனுக்கு பல்பு தருவார். இது தான் உலக நியதி. ஆனா உங்க வீட்டில் நீங்க மாத்தி சொல்றீங்க.

சிநேகிதன் அக்பர் said...

இனிமே யாரும் உங்களை பார்க்க வந்தா முதல்லேயே டீ குடிச்சிட்டு வரணும் போல இருக்கு :)

பதிவு நல்ல சுவை.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

உழைத்து வாழ வேண்டும்.. பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே..

(நானா எதுவும் சொல்லல, எங்க வீட்டு ரேடியோ ல பாடிட்டு இருக்கு.. :)) )

கோமதி அரசு said...

தேநீர் சுவை அருமை.

குழந்தை தேநீர் போட்டு கொடுத்தால் சுவை கூடுமே!

தாத்தாவிற்கு பேரன் தேநீர் போட்டு கொடுத்தது மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

Avargal Unmaigal said...

நீங்களும் என்னைப் போலத்தானா? எனக்கு எனது மகள் (மூன்றாம் க்ரேடு படிக்கும் ) அருமையாக காப்பி கலந்து தருவாள்.அப்ப அப்ப அவளை ரொம்ப சமத்து பொண்ணு என்ற சொல்லி ப்ளாக் படிக்கும் போது காப்பி வாங்கி குடிக்கும் போது கிடைக்கும் சந்தோசத்திற்கு அளவே இல்லை. ஹீ...ஹீ

"உழவன்" "Uzhavan" said...

:-))

சாந்தி மாரியப்பன் said...

எங்கூட்ல பொண்ணாவது பொறுப்பா இருக்காளேங்கற சந்தோஷம் எனக்கு. தினசரி சாயந்திரம் அவ போட்ட டீயை குடிச்சாத்தான் எனக்கு திருப்தி.. பையர் கையால ஜூஸ் குடிக்கவும் பிடிக்கும் :-)))))

காற்றில் எந்தன் கீதம் said...

நல்லா பல்பு வாங்குறீங்க ஹுசைனம்மா..... உங்களுக்கு என் அன்னையர் தின வாழ்த்துக்கள்

Prathap Kumar S. said...

ஆனாலும் ஊர்லேருந்து வந்த அப்பாவுக்கு ஒரு கப் டீ கூட நீங்க போட்டு கொடுக்கலையே...உங்களை நம்பி உங்க வீட்டுக்கு மற்ற வர்ற விருந்தாளிகளை நினைச்சா பாவமா இருக்கு....:)

அமுதா கிருஷ்ணா said...

நைஸ் போஸ்ட்..ஆணியில் இருந்ததா இல்லை லாக்கரிலா?

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

//“பேரனாவது பொறுப்போட இருக்கானேங்கிற சந்தோஷம் அவருக்கு” //

பல்பு உங்களுக்கு:))

நாடோடி said...

பைய‌னுக்கு ச‌மைய‌ல் ப‌ற்றி எல்லாம் சொல்லிக்கொடுங்க‌... தெரிந்து வைத்துக்கொள்வ‌து ந‌ல்ல‌து தான்...

vanathy said...

எனக்கு வாரத்தில் ஒரு நாள் என் ஆ.காரரிடம் டீ வாங்கி குடிக்கவே தாவு தீர்ந்து போவுது. நீங்க அசத்துங்க அம்மிணி. உங்களைப் போல என் மகனுக்கு பழக்கணும். அதுக்கு இன்னும் 4 வருடங்களாவது பொறுத்துக்கணும்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

எல்லோரும் எல்லாம் கற்பது நல்ல விஷயம்தான்.

நிழற்குடை said...

இனி வீட்‌டில் டீ‍ போடும்போதெல்லாம் உங்கள் பையனின் நினைப்பு வரும்.

Jaleela Kamal said...

mmm, ஆபிஸில் ஹாயாமேசைக்கு டீ வந்துடும்,
ஆனால் வீட்டில் அப்ப தான் நுழிவேன், ம்முத்ல் வார்த்தை ,அவர் டீவிபார்த்து கொண்டே, முதல சூடா இஞ்சி டீ சூப்பரா போட்டுடேன் .
எப்பவாவது டீ பேக்கில் போட்டுப்பாங்க.

Abu Khadijah said...

ஹ்ஹாஹா, நான் சொல்ல நினைத்ததை நாஞ்சிலும் நாடோடியும் சொல்லி விட்டார்கள்....

பாவம் பையன்

Vijiskitchencreations said...

ம். நல்ல டீ போட்டு குடுக்க பழகிட்டிங்க. என் வீட்டில் இந்த மதர்ஸ் டேக்கு மம்மி நான் உனக்கு ப்ரேக்பாஸ்ட் செய்து தருவேன் என்று சொல்லி ரெசிப்பி எல்லாம் முன் தினமே எடுத்து வைத்து அப்பாவும் மகளும் சேர்ந்து பான் கேக் செய்து தந்தாங்க.
உண்மையிலே அது சுகம் தாங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)))
ஹுசைனம்மா.. என்ன சொல்லுங்க.. நாம் பேசற .. செய்யற விசயங்கள் எல்லாமே ஒரு நல்ல நோக்கத்தோடதான் அது யாருக்குப் புரியுது..விடுங்க விடுங்க..

suvanappiriyan said...

மனைவிக்கு தேவையான அனைத்து காரியங்களையும் செய்து கொடுப்பது கணவனின் கடமை என்று இஸ்லாம் சொல்கிறது. சமையல் செய்வது, துணி துவைப்பது, வீட்டை சுத்தமாக வைத்திருப்பது போன்ற வேலைகளை பெண் விரும்பினால் செய்யலாம். அதிலும் நீங்கள் மேலதிகமாக அலுவலத்துக்கும் சென்று குடும்ப வருமானத்தைப் பெருக்குகிறீர்கள். எனவே கணவர் டீ போட்டு கொடுப்பது ஒன்றும் பெரிய விஷமல்ல. சமைத்துப் போட்டாலும் தவறில்லை என்பேன். இதில் கணவர்களுக்கு சிரமமிருப்பின் வேலையாட்களை வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் சன் டிவியிலும், ஜெயா டிவியிலும் சீரியலைப் பார்த்து கண்ணீர் விட்டு மூக்கை சிந்திக் கொண்டிருக்கும் தாய்க் குலங்கலுக்கல்ல நான் சொல்வது. ஹீசைனம்மாவைப் போல் வேலைக்கும் சென்று ஓய்வு நேரத்தை பயனுள்ள பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கும் பெண்கள் தங்கள் குடும்பத்தவரை தாராளமாக சமையல் வேலைகளை செய்யச் சொல்லலாம்.

ஹுஸைனம்மா said...

//சுவனப்பிரியன் said...
மனைவிக்கு தேவையான அனைத்து காரியங்களையும் செய்து கொடுப்பது கணவனின் கடமை என்று இஸ்லாம் சொல்கிறது. சமையல் செய்வது, துணி துவைப்பது, வீட்டை சுத்தமாக வைத்திருப்பது போன்ற வேலைகளை பெண் விரும்பினால் செய்யலாம்.//

இஸ்லாம் ஒரு பெண்ணடிமை மதம் என்று கூறச்செய்யும் விதமாக நடந்துகொள்பவர்களிடையே, தங்களின் இந்தப் பதில் மகிழ்வைத் தருகிறது சுவனப்பிரியன். ஒரு முஸ்லிம் பெண் பதிவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார், “மனைவிக்கு உணவு, உடை, உறைவிடம் தருவது கணவனின் கடமை என்றுதான் இஸ்லாம் சொல்கிறது. அதாவது, உணவு என்றுதான் சொல்லப்பட்டிருக்கீறதே ஒழிய, உணவு செய்யப் பொருட்கள் என்று சொல்லப்படவில்லை” என்று சொன்னார். அசந்துபோனேன்!! உண்மைதானே? பெண்கள் இப்படியெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை லிட்டரலாக அர்த்தம் எடுத்துச் செயல்பட ஆரம்பித்தால் ஆணின் நிலை என்னவாகும்? இஸ்லாமிய ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும்!!

அதேபோல, சீரியல்கள் குறித்த உங்கள் கருத்தில் (சொன்ன விதத்தில்) எனக்கு உடன்பாடில்லை. பகலில் பெண்கள் அழுவாச்சி சீரியல்கள் பார்த்தால், ஆண்கள் மாலையில் மானாடவும், அசத்த/ஜெயிக்கப் போவது யாரு எல்லாம் பார்த்து வாய்பிளந்து இருக்கிறார்கள்!! இருதரப்புமே, தாம் செய்யும் தவறுக்காக (வீட்டில்) அடுத்த தரப்பைக் கண்டிக்காமல் இருக்கிறார்கள்!!

அப்புறம், நான் இப்போ(தைக்கு) வேலைக்குப் போகலை.

மீண்டும் நன்றி சுவனப்பிரியன்!!

ஹுஸைனம்மா said...

வருகை தந்து, கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஹுசைனம்மா

தேநீர் இனிக்கிறது.


-- வாப்பாவுக்கு



உங்கள் மகன் கொடுத்த தேநீரின் மகிமை அற்புதம்
. குழந்தைக்கு என் வாழ்த்துகள்.

.







--