தமிழ்நாட்டின் தென்கோடியில் இருக்கும் தின்னவேலிச் சீமைதான் எங்க ஊர். கடல் போல பெருக்கெடுத்து ஓடும் தாமிரவருணி ஆறு உள்ள ஊர். கடல் இல்லாததால், சுனாமி ஆபத்து இல்லைன்னு நிம்மதியா இருந்தோம்; பொறுக்க முடியாம, கூடங்குளம் அணு ஆலையை அந்தப் பக்கம் கொண்டு வந்து வச்சிட்டாய்ங்க!!
பக்கத்து ஊரான நாகர்கோவில் முதல் பக்கத்து மாநிலமான கேரளம் வரை எங்க ஊரைத் தேடிவர வைக்கும் ஆரெம்கேவி, போத்தீஸ் போல அரசன் ஐஸ்கிரீம்ஸும் திருநெல்வேலியின் அடையாளங்களில் ஒன்று!! நகரில் தனியார் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்களோடு போட்டி போடும், மருத்துவக் கல்லூரிகளோடு இணைந்த ஹைகிரவுண்ட் அரசு ஆஸ்பத்திரியும், அரசு சித்த மருத்துவமனையும் உண்டு.
இது பாரதிராஜா பட கிராமமில்லை; நெசமா எங்க ஊருதான்!!
திருநெல்வேலி ஜங்ஷன் மற்றும் டவுண் ஆகியவற்றிலிருந்து 5-6 கிமீ தூரத்தில் உள்ள எங்க ஊரில், தாமிரவருணியின் வாய்க்கால் ஒன்று ஓடுகிறது. வாய்க்காலின் ஒருகரையில் வரிசையான தெருக்களில் வரிசையாக அமைந்த வீடுகள், மறுகரையில் வயல்கள், மலைத் தொடர், அதையொட்டி ரயில் பாதை என்று அழகான ரம்மியமான பசுமைக் காட்சிகள் கொண்ட ஊர். அந்த வாய்க்கால்தான் விவசாய ஆதாரமாக மட்டுமின்றி, குளிக்க, குடிக்கவும் ஆகியிருந்தது - அப்போ!!
முற்காலங்களில் விவசாயம், நெசவு, பர்மா/சிலோன் வியாபாரங்கள் ஆகியவையே வருமான வழிகளாக இருந்து, பின்னர் அவற்றின் அழிவினால், பீடி சுற்றுதலில் வந்து நின்றாலும், வறுமை குறையவில்லை எங்க ஊரில். மக்கள் கல்வியின் சிறப்பை அறிந்திருக்கவில்லையாதலாலும், உடன் பசிதீர்க்கவேண்டிய அவலமிருந்ததாலும், பதின்மப் பருவத்திலேயே அரபு நாடுகளில் கீழ்நிலை வேலைகள் செய்யத் தொடங்கி, அதில் பல சிரமங்களை அனுபவித்தபின், கல்வியின் சிறப்பை உணர்ந்து, தற்போது எப்பாடு பட்டேனும், தம்மக்களை - ஆண்-பெண் பேதமில்லாமல் - ஒரு பட்டம் பெற வைத்துவிடுகிறார்கள்.
எங்கள் ஊரும் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான ஊர்களைப் போலவே, கல்வியிலும் சிறந்து விளங்க ஆரம்பித்துவிட்டது என்பதற்கு இவ்வருடம் 10ம் வகுப்புத் தேர்வில் மாநிலத்தில் இரண்டாம் இடமும், +2 தேர்வில் மாநிலத்தில் நான்காம் இடமும் பெற்றதே சாட்சி. இஞ்சினியர்கள், ஆசிரியர்கள், மென்பொருளாளர்கள், கடுபொருளாளர்கள் (ஹி.. ஹி.. hardware specialists!!), கணக்காளர்கள் என்று பல்வேறு துறையிலும் இளைய தலைமுறையினர் சிறந்து விளங்குகின்றனர். கவிஞர்கள், எழுத்தாளர்கள் அரிதாகத் தெரிந்தாலும், சிலர் இருக்கிறார்கள். அத்தோடு மருத்துவக் கல்லூரியில் சேர்பவர்களது எண்ணிக்கையும் வளர்ந்து வருகிறது. (கலெக்டர்தான் இன்னும் யாரும் ஆகலை :-(( ) ஊருக்குள்ளேயே பல பள்ளிகள், ஒரு பெண்கள் கல்லூரி, இஸ்லாமிய கல்லூரிகள் இருப்பதும் வளர்ச்சியின் அறிகுறிகள். இவையெல்லாவற்றோடு இஸ்லாமிய விழிப்புணர்வும் வளர்ந்து வருகிறது, புகழனைத்தும் இறைவனுக்கே.
இத்தோடு, வணிக முறையிலும், எங்கள் ஊர் மிகுந்த வளர்ச்சி கண்டிருக்கிறது. ஒரு பட்டிக்காடு பட்டணம் ஆனது என்று சொல்லுமளவு, முன்பெல்லாம் எதற்கெடுத்தாலும் திருநெல்வேலி ஜங்ஷன் அல்லது டவுண் செல்ல வேண்டிய நிலை மாறி, தற்போது எல்லாமே ஊருக்குள்ளேயே கிடைக்கிறது. முஸ்லிம்களே பெரும்பான்மையாக உள்ள ஊர் என்றாலும், எல்லா தரப்பினரும் வாணிபம் செய்கிறார்கள் எங்கள் ஊரில். உள்ளுர்லயே தரமான மருத்துவர்களும் உண்டு. எனினும், சில சிறப்பு தேவை/சேவைகளுக்கென்று நகருக்குச் செல்வோம்.
மற்றபடி, என் சொந்த ஊர் மிகவும் எளிமையான ஊர். நிறையப் பதிவர்கள் அவரவர் ஊரின் சிறப்பாகக் குறிப்பிட்டிருந்ததுபோல, விதவிதமான சாப்பாட்டு வகைகளென்று லிஸ்ட் போட்டு எழுதுமளவு இல்லையென்றாலும் மற்ற ஊர்களில் உள்ளதுபோல, மருந்துச் சோறு, சேமியா பிரியாணி, தக்கடி, மடக்குப் பணியாரம், ஓட்டுமாவு, எனச் சில உண்டு. இதையெல்லாம் தாண்டி, உணவைப் போலவே, எங்கள் ஊரின் பல எளிமையான நடைமுறைகள்தான் எங்கள் ஊரின் தனித்துவம் என்று நினைப்பதால், அவற்றைப் பகிர்கிறேன்.
#%# ஊருக்குள்ளேயேதான் கல்யாண சம்பந்தம் செய்துகொள்வார்கள். மிக மிக அரிதாகத்தான் வெளியூர் சம்பந்தம் செய்வது.
#%# எல்லாருமே உள்ளூர்க்காரர்கள் என்பதால், யார் வீட்டுக்குச் சென்றாலும், தேநீர்/ஹார்லிக்ஸ்/பூஸ்ட் மட்டுமே பரிமாறப்படும். நெருங்கிய உறவுகளாக இருந்தால், அல்வா, மிக்சர் போன்ற ஸ்நேக்ஸும் பரிமாறப்படும். விருந்துக்கென்று பிரத்யேகமாக அழைக்கப்பட்டாலொழிய உணவருந்துவதில்லை. (அதுவே வெளியூர்க்காரர்களாக இருந்தால், எந்நேரமானாலும் விருந்துடன் பலமான கவனிப்பு இருக்கும்).
#%# கல்யாணத்திற்கு அல்லது விசேஷங்களுக்கு அழைப்பதும் இன்னார்தான் போய் அழைக்க வேண்டும் என்ற வரைமுறையெல்லாம் இல்லை. பெரும்பாலும் வீட்டிலிருக்கும் பள்ளியிறுதி/கல்லூரி மாணவர்கள்தான் இதற்குப் பொறுப்பு. வீட்டுப் பெரியவர்கள் தெருவாரியாக லிஸ்ட் போட்டுக் கொடுக்க, இவர்கள், அழைக்கப் போவார்கள். குடும்ப வகையறாக்களை அடையாளம் சொல்ல, உடன் ஓரிரண்டு நடுத்தர வயதுப் பெண்களும் செல்வார்கள்.
#%# அழைக்கச் செல்லும் வீட்டில் யார் இருந்தாலும் பத்திரிகையைக் கொடுத்து விபரம் சொல்லிவிட்டு வந்துவிடலாம். பெரியவர்களை நேரில் பார்த்துத்தான் சொல்ல வேண்டும் என்றில்லை. “என்கிட்டே நேரில சொல்லல” அல்லது “எம்பொண்டாட்டிய அழைக்கலை” என்றெல்லாம் வீம்பு பிடிக்க வழியில்லை!!
#%# ஆனால், அழைக்கப்படும்போது முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, உங்களை கல்யாணத்திற்கு மட்டும் கூப்பிடுகிறார்களா அல்லது விருந்திற்கும் அழைக்கிறார்களா என்பதை!! ஆமாம், “இந்த நாள், இந்த நேரம் ஆண்-பெண் அனைவரும் சாப்பிட வாங்க” என்று அழைத்தால்தான் விருந்துண்ண செல்லவேண்டும்!! அதிலும், உறவின் நெருக்கத்தைப் பொறுத்து, ஆண்-பெண் அனைவரும், ஆண்கள் மட்டும் அல்லது குடும்பத் தலைவர் மட்டும் என்று விருந்து அழைப்புகள் அமையும். ரொம்பக் கவனமாக் கேக்கணும்!!
#%# வீட்டில் பெரியவர்கள் இல்லாத சமயம், சிறுவயதினர் மட்டும் இருந்தால், இதைக் கவனிக்கத் தவறிவிட்டால், பெரியவர்களிடம் திட்டு வாங்க வேண்டியிருக்கும்!! (நாங்களும் வாங்கிருக்கோம்ல!!) ஏனெனில், கூப்பிட்டும் விருந்துக்குப் போகவில்லையென்றால், நமது அதிருப்தியைத் தெரிவிப்பதாகக் கருதப்படும்.
#%# இது உங்களுக்கு வியப்பைத் தந்தாலும், மிகவும் வசதியான முறையாக எனக்குத் தெரிகிறது. முதலில், விருந்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை தெளிவாகத் தெரிந்துவிடுமாகையால், உணவு தயாரிக்கும் அளவை முடிவு செய்வது எளிது. வீணாகும் அளவு வெகுவாகக் குறையும். மேலும், விருந்துக்குச் செல்லவிலையென்றாலும், உறவின் நெருக்கத்தைப் பொருத்து, விருந்து முடிந்தபின், உணவை நம் வீட்டிற்கு அனுப்பிவைப்பார்கள். வரமுடியாத வயதானவர்கள், வர வசதிப்படாத நிலையில் உள்ளவர்கள் இருப்பது முன்பே தெரிந்தால், விருந்து தயாரானதும் உடன் அவர்களுக்கு வீட்டிற்கே கொடுத்துவிடுவார்கள்.
#%# வெளியூர்க்காரங்களுக்கு இந்த விதி பொருந்தாது. உங்களை எங்க வீட்டு கல்யாணத்துக்கு அழைச்சோம்னா, அது கல்யாணத்தன்று நடக்கும் விருந்துக்கும் சேர்ந்த அழைப்புதான்!! ஆனா, வராதவங்களுக்கு பார்ஸல் அனுப்பப்படமாட்டாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்!! ;-)))))
#%# எவ்வளவு பெரிய ஆளானாலும், கல்யாணம், விருந்து எல்லாம் வீட்டில்தான். நோ கல்யாண மண்டபம்!! ஒரு வீட்டில் விசேஷம் என்றால், விருந்து வைப்பதற்கு, வட்டாரத்தினர் (பக்கத்து வீடுகள்) தம் வீட்டின் முன்னறை/ஹாலைக் காலி செய்து தரவேண்டியது கட்டாயக்கடமை. சமையலும் நடுத்தெருவில் வைத்துதான் நடக்கும். சமையலுக்கு தயார்செய்வதிலும், கலத்தில் (பந்தியில்) பரிமாறுவதிலும் வட்டாரத்துக்காரர்கள் உதவவேண்டும்.
#%# கல்யாணம் முடிந்தபின், பெண் தினமும் மதியம் தன் தாய் வீட்டிற்கு வந்துவிட்டு, அந்தியில்தான் கணவன் வீட்டிற்குச் செல்வாள். கூட்டுக் குடும்பங்கள் என்பதாலும், முன்பு தனியறைகள் இல்லா மணமகன் வீட்டில் பெண்ணுக்கு ஓய்வு எடுக்க வசதியிருக்காது என்ற காரணத்தாலும் ஏற்படுத்தப்பட்ட பழக்கமாக இருக்கலாம். இப்போதும் தொடர்கிறது.
#%# திருமணமான புதிதில் முதல் ஒருவாரம் வரை மணமகன் வீட்டினர் வந்து மாலையிலும், அடுத்த நாள் மதியம் பெண்வீட்டினரும் வந்து பெண்ணை அழைத்துப் போவார்கள். ஏன்னா, புதுமணப்பெண்ணுக்கு மாப்பிள்ளை வீடு போய்வர வழிதெரியாதே? அதன்பிறகு பெண்களே சென்றுவருவார்கள். இப்போல்லாம், (பெரும்பாலும்) பைக் வைத்திருக்கும் சகோதரனிடமும், கணவரிடமும் இந்த ட்யூட்டி தரப்படுகிறது!!
#%# கல்யாணத்தில் பெண்ணுக்குப் போடப்படும் நகைகளின் அளவு என்பது மணமகள் வீட்டினரின் இஷ்டம்!! எந்த டிமாண்டும் வைக்கப்படமாட்டாது!! ஒரே டிமாண்டான வரதட்சணையையும் இப்போல்லாம் பெரும்பாலான இளைய தலைமுறை ஆண்கள் தடுத்துவிடுகிறார்கள்.
#%# மேலும் கல்யாணச் சீர் என்பது கட்டில்-மெத்தை தவிர்த்து, 11 பாத்திரங்கள் மட்டுமே!! இதில் கும்பா (சின்னக் கிண்ணம்) முதல் பெரிய கொப்பரை வரை அவரவர் வசதிப்படி எவர்சில்வர் மற்றும் வெண்கலத்தில் வாங்கிக் கொடுக்கலாம்.
#%# கல்யாண விருந்தும், இரு தரப்பும் தனித்தனியே தத்தம் உறவினர்களுக்கு வைத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும், இந்த விருந்து கல்யாணத்திற்கு முந்தைய தினம் “ஊர்ச்சாப்பாடு” என்ற பெயரில் நடத்தப் படும்.
#%# பொதுவிருந்து என்பதும் - வலியவரானாலும், எளியவரானாலும் - நெய்ச்சோறு, மட்டன் குழம்பு, தாளிச்சா என்ற எளிமையான ஒரே பொதுமெனுதான்!! அதிலும், மட்டன் குழம்பு மட்டும் ஒருமுறைதான் பறிமாறப்படும். “ரீ-ஃபில்” கிடையாது!!
இருந்தாலும், பல ஊர்களின் பழக்க வழக்கங்களைக் கேட்ட/பார்த்த பிறகு, எங்க ஊர் பழக்கங்கள்தான் எளிமையா தெரியுது!! எனினும், இதுவே அதிகபட்சச் சுமையாகத் தெரியுமளவுக்கு வறுமையும், அறியாமையும் இன்னும் இருக்கிறது ஊரில்.
தற்போது இளைஞர்கள் மத்தியில் இஸ்லாமிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், வரதட்சணையைத் தடுத்து வந்தாலும், மற்றவைகளைத் தடுக்க அதிக முயற்சி எடுப்பதில்லை. ஏனெனில் பலருக்கும் இத்தகைய பழக்கவழக்கங்கள் இருப்பதே தெரிவதில்லை என்பதோடு, இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம் என்பதாகக் கருதிவிடுவதாலும் கூட இருக்கலாம். அதேசமயம், சில செல்வந்தர்கள், தம் அந்தஸ்தை நிரூபிக்க எளிமையாக இருக்கும் நடைமுறைகளையும் மாற்றி வருவதால், உண்மையாகவே இவற்றைத் தடுக்க நினைப்பவர்களுக்கும், எளியவர்களுக்கும் தடைக்கல்லாக அமைகிறது.
எனினும், மாற்றங்கள் ஏற்படத்தான் செய்கின்றன, மனங்களிலாவது.
|
Tweet | |||
43 comments:
//அதுவே வெளியூர்க்காரர்களாக இருந்தால், எந்நேரமானாலும் விருந்துடன் பலமான கவனிப்பு இருக்கும்/
நீங்கள் இந்த பழக்கத்தை இன்னும் கடைபிடிகீறிர்களா? எனென்றால் நான் இந்தியாக்கு குடும்பத்தோடு வந்து விட்டு செல்லும் வழியில் துபாய்யில் இரண்டு நாட்கள் தங்கலாம் என்று ப்ளான் செய்துள்ளேன். வெளியூர்காரனான எனக்கு விருந்து தருவீர்களா?
பட்டிக்காடு பட்டணம் ஆகி வருவதை அருமையாக விவரித்துள்ளீர்கள், ஹுஸைனம்மா.உங்க ஊர் பக்கம் நடத்தப்படும் கல்யாண விருந்துகள் ப்ற்றியும் அழகாக குறிப்பிட்டுள்ளிர்கள்.நன்றி.
சலாம்!
தமிழ்மணம் வேலை செய்யாததால எழுதி வைத்துவிட்டு பதிவிடாம வச்சிருக்கேன், சகோ சாதிக்கா கூப்பிட்ட எல்லோரும் அநேகமாக பதிவிட்டுடீங்க., நாமளு தமிழ்மணத்த எதிர்பார்க்காம பதிவிட்டுவிடவேண்டியதுதான்!
ஏறக்குறைய உங்களின் பல வார்த்தைகளை எனது ஊரு குறித்த பதிவிலும் சேர்த்துகொள்ளலாம், எனது ஊரான காயல்பட்டினம் இஸ்லாமிய மனிதர்கள் மட்டுமே அடங்கிய ஊராச்சே, இன்சா அல்லாஹ் சீக்கிரமே பதிவிடுகிறேன்
:-)
for follow ups!
தின்னவேலியிலே பொறந்துருக்கலாம் என சுகாவின் மூங்கில் மூச்சு படிக்கும் போது நினைப்பதுண்டு. இப்பவும்...
i'll come back after my tamilfont is friendly. post is super.
சுகாவின் மூங்கில் மூச்சு விகடனில் படிக்கிறீர்களோ....உணவு வகைகளுக்கு தின்னவேலி எந்தெந்த வகைகளில் விசேஷம் என்று அந்த சுவாரஸ்யத் தொடரில் படித்திருக்கிறேன். படித்து வருகிறேன். திருமணம், விருந்து சம்பிரதாயங்கள் பற்றி படித்த போது, குறிப்பாக விருந்துக்கு என்று அழைத்தால்தான் சாப்பிடப் போக வேண்டும் என்பது, ஆச்சர்யமாக இருந்தது
சலாம் ஹுஸைனம்மா!
//திருநெல்வேலி ஜங்ஷன் மற்றும் டவுண் ஆகியவற்றிலிருந்து 5-6 கிமீ தூரத்தில் உள்ள எங்க ஊரில்//
அதுதான் எந்த ஊர்னு சொன்னா அடுத்த வகேஷன்ல நாங்களும் வருவோம்ல? :-)
திருநெல்வேலி ஜங்ஷன் வரை வந்திருக்கேன் ஹுஸைனம்மா. மற்றபடி திருநெல்வேலி பற்றி (அல்வாவைத் தவிர:)) இதற்கு முன் எதுவும் தெரியாது. கல்யாண சமாச்சாரங்கள் எளிமையாக இருந்தாலும் விருந்து என்ற பெயரில் பெண் வீட்டார்களைக் கசக்கிப் பிழிவதாக தெரிகிறது. விரைவில் மாற்றம் ஏற்பட இறைவன் அருள் புரிவானாக!
நானும் எங்க ஊரைப் பற்றி பாதி எழுதிட்டேன். மீதியையும் எழுதி சீக்கிரமா(?):) போட்டுவிடணும். உங்கள் பகிர்வுக்கு நன்றி ஹுஸைனம்மா.
உங்கள் ஊரைபற்றி நிறைய தெரிந்துக் கொண்டேன்,நன்றி ஹூசைனம்மா!!
அப்புறம் சுர்ரோஸ் எங்க வீட்ல செய்த உடனே காலியாகிடும்,மறுநாள் இருந்தாலும் நமுத்த மாதிரிதான் இருக்கும்.
உங்க ஊரு நடைமுறைகளை நல்லாவே தெரிஞ்சுக்கிட்டேன். பொதுவாவே, அந்தக்காலங்கள்ல கல்யாணம்ங்கறது ரெண்டு குடும்பங்களை இணைக்கிற பந்தமாத்தான் இருந்தது. ரெண்டு குடும்பங்களும் கலந்து பழகணும்கறதுக்காக ஏற்படுத்திய விருந்து நடைமுறைகள், இப்போ ஆடம்பரமா நடத்தணும்ன்னு கட்டாயப்படுத்தப்படும்போதுதான் வரதட்சணை அரக்கன் அங்கியும் தன்னோட வாலை நீட்டுறான்...
ஹூஸைனம்மா, ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.. ரொம்ப புதுமையான விசயமா இருக்கு உங்க கல்யாண பழக்கவழக்கம்.
திருமணத்துக்குப் பின் எத்தனை நாள் வரை இப்படி அம்மா வீட்டுக்கு போய் வர அனுமதி உண்டு?
உங்க வீட்ல நடந்த ஏதாவது கல்யாணத்தையே இப்படி பெண்வீட்டு, ஆண் வீட்டு பக்க பழக்க வழக்கத்தை விவரிச்சு எழுதலாமே? இன்னும் விவரமாவும் நல்லாவும் இருக்குமே?!
கிட்ட் கிட்ட எங்கள் ஊர் பாக்க வழக்கங்களைப்போல் இருக்கின்கின்றது ஹுசைனம்மா.உங்கள் ஊர் பேச்சு வழக்கையும் சேர்த்து புகுத்தியதில் சுவாரஸ்யம் அதிகம் சேர்ந்து விட்டது.
//தற்போது இளைஞர்கள் மத்தியில் இஸ்லாமிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், வரதட்சணையைத் தடுத்து வந்தாலும், மற்றவைகளைத் தடுக்க அதிக முயற்சி எடுப்பதில்லை// இது எல்லா ஊர்களிலும் உள்ளதுதான்.தெளிவாக எழுதி விட்டீர்கள் ஹுசைனம்மா.
மாற்றங்கள் ஏற்படத்தான் செய்கின்றன, மனங்களிலாவது. //
அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.
நல்ல பகிர்வுங்க. உங்க ஊரின் எளிமையான திருமண சடங்குகள் ஆச்சரியபடுத்துகின்றன.
Hussainamma,
arasan bakery bread maraka mudiyala.pooppola, kaiyila edutha keezhae pittu vizhum .Hmmmm....virunthu ,kalyana azhaipellam dhool.
நல்லா இருக்கு பதிவு.
கல்யாணம் பற்றிய வரிகள் படிக்க சுவையாக இருந்தன. இன்னும் வழக்கு மாறாமல் இருப்பது அதிசயம் தான்.
ஹலோ தின்னவேலியில் எந்த ஊருப்பா நீங்க..மேலப்பாளையமா? பேட்டையா?
ஏனுங்க இது மெய்யாலுமெ தின்னவேலி பற்றிய பதிவு தானா
உங்க பதிவுலையும் தேடிப்பார்த்தேன், யார்ன்னா கமெண்ட்ல தெரிவிச்சி இருப்பாங்கன்னு பார்த்தேன் எங்கையும் இல்லையே
நான் தான் தப்பா விளங்கிகொண்டேனா
தின்னவேலின்னாலே “ “ கொடுப்பதை தானே சொல்வாங்க ...
இங்கே காணோமே, எல்லோரும் சேர்ந்து கொடுத்துட்டீங்களா ......
அன்பு சகோதரி அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,
நல்லா சொல்லிருக்கீங்க...அல்ஹம்துலில்லாஹ்...
ஒரு சிறிய நெருடல். அதனை பகிர்ந்து கொள்ளவிரும்புகின்றேன்.
//மேலும் கல்யாணச் சீர் என்பது கட்டில்-மெத்தை தவிர்த்து, 11 பாத்திரங்கள் மட்டுமே!!//
'வரதட்சனை = சீர்' என்று தான் நினைத்திருக்கின்றேன்.
தாங்கள் கூறுவதை பார்த்தால், இவை இரண்டும் வெவ்வேறு பொருள்களில் கையாண்டிருப்பதாக தெரிகின்றது.
இஸ்லாமிய சீர்திருத்தம் பேசும் சகோதரர்கள் இந்த சீர் விஷயத்தை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்கின்றார்கள்?...எம்மாதிரியான பொருளில் புரிந்துக்கொள்கின்றார்கள்? என்று அறிய ஆவல்.
இஸ்லாத்தில் வரதட்சனை தடுக்கப்பட்டிருக்கின்றது என்று புரிந்துக்கொள்ளும் இளைஞர்களுக்கு இந்த சீர் விசயம் மட்டும் அனுமதிக்கப்பட்டதாக தோன்றுகின்றதா?
தவறாக நினைக்கவேண்டாம். மனத்தை உறுத்தியதால் கேட்கின்றேன். இஸ்லாம் வரதட்சனையை எதிர்க்கின்றது, பின்பு சீர் என்னும் வரதட்சனையை மட்டும் எப்படி அனுமதிக்கின்றது என்று மாற்று மத சகோதர சகோதரிகள் எண்ணிவிட கூடாது பாருங்கள்.அதனால்தான் இந்த பின்னூட்டம்.
//ஏனெனில் பலருக்கும் இத்தகைய பழக்கவழக்கங்கள் இருப்பதே தெரிவதில்லை என்பதோடு, இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம் என்பதாகக் கருதிவிடுவதாலும் கூட இருக்கலாம்//
உண்மை. சகோதரிகள் இதற்கு என்ன தீர்வு வைத்திருக்கின்றீர்கள் என்பதை அறிய ஆவல்...
அழகான பதிவிற்கு ஜஜாக்கல்லாஹு க்ஹைரன்...
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
அவர்கள் உண்மைகள் - அட, விருந்துக்கு வர்றீங்களா? வாங்க, வாங்க. என் பதிவுகளில் என் சமையல் பிரதாபங்களைப் படிச்ச பின்னும், வர்றேன்னு சொல்ற உங்க தைரியத்தைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை, போங்க!!
ராம்வி - நன்றிங்க.
ஷர்புதீன் - ஸலாம். தமிழ்மணத்தையெல்லாம் ஏன் எதிர்பார்த்துகிட்டு? அவ்வளவு பொறுமையெல்லாம் எனக்கில்ல பாஸ். நினைச்சா உடனே சொல்லிடணும் எனக்கு. காயல்பட்டிணத்தின் சில வழக்கங்களை கேள்விப்பட்டிருக்கிறேன். விவரமா உங்க பதிவுலதான் பாக்கணும். சீக்கிரம் எழுதுங்க!!
நானானி மேடம் - இதுவே சந்தோஷம்னாலும், உங்க விரிவான கருத்தைப் பார்க்க ஆவலா இருக்கேன்.
மோகன்குமார் - வக்கீல் சார்! இக்கரைக்கு அக்கரை பச்சை. உங்க தஞ்சாவூர்ல இல்லாத விசேஷங்களா? (ஆனா, சென்னைதான் உங்க ஊர்னா, அடிச்சுச் சொல்வேன், தின்னவேலிதான் தி பெஸ்ட்!!) ;-))))
ஸ்ரீராம் சார் - வாங்க. ஆமா, எங்க ஊர்ல ‘சாப்பாடு சொன்னாத்தான்’ சாப்பிடப் போகணும். பெரும்பாலும் எளியவர்களே முன்பு இருந்ததால், அவரவர் வசதிக்குத் தக்கபடி, விருந்துக்குச் செலவழிக்க நல்ல வழிமுறை இல்லியா?
அஸ்மாக்கா - ஊரைச் சொன்னாத்தான் வருவீங்களா? இந்தியா வந்திருக்கும்போது, நீங்க வரேன்னு சொல்லுங்க, நான் பாண்டிச்சேரிக்கே வந்து கூட்டிப் போறேன் அவ்வளவுதானே? (நாங்க பாண்டிச்சேரிக்கும் ஒவ்வொரு வெகேஷன்லயும் வருவோம்ல? முக்கியமானவங்க அங்க இருக்காங்க)
மேனகா - நன்றிப்பா.
அமைதிக்கா - ஆமாக்கா, ஒருசில வசதிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட வழக்கங்கள் இப்போ தம் செல்வப் பெருமையை விளம்பரம்செய்யும் வழிகளா ஆகிட்டுது. என்ன சொல்ல?
பொன்ஸ் - வாங்க, வாங்க. திருமணத்துக்கப்புறம் பெண் விரும்பும்வரை - பெரும்பாலும் தனிக்குடித்தனம் போகும்வரை - அதாவது குடும்பம் பெரிதாகும்வரை- போய்வருவாள். அனுமதியெல்லாம் யாரும் கொடுக்கிறதுமில்லை, தடுகிறதுமில்லை. அதுதான் ஊர்வழக்கம். ஆனா, பின்னாட்களில், பொறுப்புகள் கூடும்போது, பெண்ணே அசதியில் சென்றுவருவதைக் குறைத்துக் கொள்வதுண்டு.
எங்கள் வீட்டுக் கல்யாணங்களை விவரித்து எழுத இப்போ முடியாது. ஏன்னா, கடைசிக் கல்யாணம் நடந்தே நாலு வருஷம் ஆகிட்டுது. நிறைய மறந்துடுச்சு.
ஸாதிகாக்கா - இஸ்லாமிய ஊர்களில் பெரும்பாலும் பழக்கவழக்கங்கள் ஒரேமாதிரிதான். ஆனாலும், உங்க ஊரை அடிச்சுக்கவே முடியாதுக்கா!! ;-)))))))
ராஜேஸ்வரி மேடம் - நன்றிங்க.
கோவ2தில்லி - நன்றிங்க.
தேனிகாரி - ஆமாங்க, அரசன் பேக்கரி பொருடகள் நல்ல சுவையா இருக்கும். நாகர்கோவிலில் அதன் கிளை ஆரம்பிச்சிருக்காங்க. ஆனா, அதிலயே திருநெல்வேலி அரசனின் ருசி வருவதில்லை என்பது என் அபிப்ராயம்.
வானதி - இன்னும் எங்க ஊர்ல பேச்சு வழக்கு மாறலைங்க. படிச்ச நாங்கதான், ஸ்டைலாப் பேசுறோம்!! ;-))))
அமுதா - ஹை, நீங்களும் தின்னவேலில்ல? அதான் கண்டுபுடிச்சிட்டீங்க!!
ஜமால் - ஆக்சுவலி, தின்னாவேலிக்காரங்க ரொம்ம்ம்ம்ம்ப நல்லவங்க. அவங்களுக்கு ‘நிஜ’ அல்வாத்தான் கொடுக்கத் தெரியும். எங்க ஊர் பேரச் சொல்லி எல்லாரும் கொடுத்த்துகிறாய்ங்க. ஆனா, அது ஒரிஜினல் இல்லை!! நம்பி ஏமாற வேண்டாம்!! ;-)))))
ஆஷிக் - வ அலைக்கும் ஸலாம்.
//'வரதட்சனை = சீர்' என்று தான்//
தம்பி, ரொம்பச் சின்ன பிள்ளையா இருக்கீங்க!! :-)))))
இன்ஷா அல்லாஹ், உங்களின் மற்ற கேள்விகளுக்கு எனது இன்னொரு பதிவின் மூலம் பதில் தருகிறேன்.
சகோதரி ஹுசைன்னம்மா,
வ அலைக்கும் ஸலாம்...
//தம்பி, ரொம்பச் சின்ன பிள்ளையா இருக்கீங்க!! :-)))))//
இதுதான் உங்க பதிலா?
தயவுக்கூர்ந்து விளக்கம் தாருங்கள். சீருக்கும் வரதட்சணைக்கும் என்ன வித்தியாசம்??? வரதட்சணை வாங்கி கட்டில் மெத்தை சாமான்கள் வாங்குவதற்கும், சீராக இவை வருவதற்கும் என்ன வித்தியாசம்??
எங்கள் ஊர் பக்கம் சீர் என்று தான் கேள்விப்பட்டிருக்கேன். வரதட்சனை என்ற வார்த்தையை கேள்விப்பட்டதில்லை.
சீர்திருத்தம் பேசும் மணமகன்கள் தங்களுக்கு வரும் சீரை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்கின்றனர்??? இது மட்டும் இஸ்லாம் காட்டிக்கொடுத்த வழியாகுமா??
வரதட்சணை என்பது மணமகள் வீட்டாரை கஷ்டப்படுத்துவது...சீர் மட்டும் மணமகள் வீட்டாரை சந்தோசப்படுத்துமோ?? (ஆம் என்றால் அதே காரணத்தை வரதட்சணைக்கும் கூறலாமே)
நிச்சயமாக இது ஒரு முக்கிய பிரச்சனை. சீருக்கும் வரதட்சனைக்கும் உள்ள வித்தித்தியாசத்தை கூறுங்கள். இஸ்லாம் வரதட்சணை அனுமதிக்காமல் இருக்க இதனை மட்டும் அனுமதிப்பதாக இளைஞர்கள் எண்ணுகின்றார்களா???
தாங்கள் கூறி இருப்பது போல என்னுடைய மற்ற கேள்விகளுக்கு தனி பதிவாக பதில் சொல்லுங்கள், இன்ஷா அல்லாஹ்...
ஆனால் இந்த கேள்விக்கு இப்போது பதில் சொல்லுங்கள்..இன்ஷா அல்லாஹ்...சீருக்கும் வரதட்சனைக்கும் என்ன வித்தியாசம்??
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
http://pudugaithendral.blogspot.com/2011/07/blog-post_14.html
தொடர் பதிவுக்கு அழைச்சிருக்கேன் :)
ஆஷிக், உங்களின் கேள்விக்குப் பதில் இதோ:
வரதட்சணை என்பது கையில் ரொக்கமாகக் கொடுக்கப்படும் கேஷ். சில ஊர்களில், பெண்ணின் பங்காகக் கொடுக்கப்படும் சொத்துக்களும் (வீடு, நிலம்) போன்றவையும்தான். இது 'negotiations'-ஐப் பொறுத்துக் கூடும், குறையும்.
ஆனா, சீர்ங்கிறது, சில ஊர்கள்ல, சின்ன ஸ்பூன், கிண்ணம், டம்ளர்லருந்து, அண்டா, குண்டா, அடுப்பு, ஃபிரிட்ஜ், வாஷிங்மெசின், ஸோஃபா, டைனிங் டேபிள், அப்புறம், 500/1000 பணியாரம், முறுக்கு, அதிரசம், etc. கிலோக்கணக்கில் அல்வா போன்ற ஸ்வீட்டுகள், etc. இன்னும் என்னென்னவோ கொடுப்பாங்க. இது ஊருக்கு ஊர் வித்தியாசப்படும். ஆனா, ஒரு ஊருக்குன்னு உள்ள வழக்கப்படி கொடுத்தேயாகணும்!! கூடவோ, குறைக்கவோ கூடாது!! No negotiations!! ;-))))))
இதையெல்லாம் பாக்கும்போது, எங்க ஊரின் கட்டில்-மெத்தை தவிர்த்து, 11 பாத்திரங்கள், 11 குலை வாழைப்பழம் (பதிவில் விட்டுப்போச்சு) ரொம்பக் குறைச்சல்தானே? ஆனா, இதையும் இப்பச் சிலபேர் என்ன ஆக்கிடாங்கன்னா, பாத்திரங்களுக்குப் பதிலாவோ, அல்லது கூடுதலாவோ, ஃபிரிட்ஜ், வாஷிங்மெசின், ஸோஃபா, டைனிங் டேபிள், அப்புறம் லேப்டாப்பும் (அட, ஆமாங்க) கொடுக்கிறாங்க!!!!! தரையில் அமர்ந்து சாப்பிடும் வழக்கமுள்ள எங்க ஊரில், நிறைய வீடுகளில் டைனிங் டேபிள் வெறும் காட்சிப் பொருளாக அல்லது அழுக்குதுணி போடும் கொடியாக!!
//இளைஞர்களுக்கு இந்த சீர் விசயம் மட்டும் அனுமதிக்கப்பட்டதாக தோன்றுகின்றதா?//
நீங்க வேற!! அதுக்குத்தான் ஈஸியா அம்மாவைக் கைகாட்டி, ‘தாய் சொல் தட்டாத தனயன்’களாகிடறாங்களே!!
//இதற்கு என்ன தீர்வு//
தீர்வு.. உங்களைப் போன்ற இளைஞர்களிடம்தான் இருக்கிறது!!
இன்னும் விளக்கமாக என் பதிவில் சொல்லுகிறேன், இன்ஷா அல்லாஹ்.
தென்றல், தொடர் பதிவு - எழுதுறேன். ஆனா, வழக்கம்போல, லேட்டாகும்!! ;-)))))
சகோதரி ஹுசைன்னமா,
அஸ்ஸலாமு அலைக்கும்,
உங்களுடைய பதில் தீர்வாக இல்லாமல் மேலும் குழப்பங்களையே தருகின்றது.
உங்கள் பதிலில் இருந்து நான் புரிந்து கொண்டது,
வரதட்சனை என்றால் பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுப்பது...
சீர் என்றாலும் பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுப்பது...
so, வரதட்சனை = சீர்.
நீங்கள் வரதட்சனை, சீர் என்று தமிழில் வெவ்வேறு வார்த்தைகள் போட்டாலும் ஆங்கிலத்தில் இதற்கெல்லாம் ஒரே வார்த்தைதான், அதுக்கு பெயர் DOWRY... Encyclopedia at free dictionary பின்வருவதை கூறுகின்றது...
DOWRY: property—in the form of money, objects, real estate, or other assets—allotted to a bride by her parents or relatives upon her marriage. -
இதைத்தான் முன்பே நான் சொன்னேன்...இன்னும் வரதட்சனை என்பது வேறு, சீர் என்பது வேறு என்று சொல்லப்போகின்றீர்களா?? (இதனை நீங்கள் நிச்சயம் இங்கு உள்ள எல்லாருக்கும் தெளிவுப்படுத்த வேண்டும்)
வரதட்சனை என்ற பெயருக்கு சீர் என்ற முலாம் பூசப்படுகின்றது. அவ்வளவே...வரதட்சனை என்பதற்கு வேறு வார்த்தையை போட்டால் அது வரதட்சணை இல்லை என்றாகி விடாது.
எப்போது சீரை மணமகன்கள் ஒப்புக்கொள்கின்றார்களோ அப்போதே மறுபடியும் பிரச்சனை தொடங்கிவிடுகின்றது...முதலில் கொஞ்சமா என்பார்கள், பின்னர் அப்படியே காலம் போகப்போக மறுபடியும் பழைய நிலை திரும்பிவிடும். மீண்டும் சகோதரிகள் பாதிக்கப்படும் நிலை திரும்பிவிடும்.
ஆக, உண்மையான சீர்திருத்தம் என்பது வரதட்சனை/சீர் என்று எதுவும் இல்லாமல், நாயகம் (ஸல்) காட்டித்தந்த வழிமுறைப்படி திருமணம் செய்வதே ஆகும். இப்படி திருமணம் செய்த எண்ணற்ற சகோதர சகோதரிகளை என்னால் காட்ட முடியும்.
----
நீங்க வேற!! அதுக்குத்தான் ஈஸியா அம்மாவைக் கைகாட்டி, ‘தாய் சொல் தட்டாத தனயன்’களாகிடறாங்களே!!
----
ஒஹோ....
இப்ப யார் மீது நாம் குற்றம் சொல்லவேண்டும்??? வேண்டாமெனும் மகன் மீதா, அல்லது வேண்டும் எனும் தாய் மீதா?? மனதாலாவது நல்லது செய்ய விரும்பும் மகன் மீதா?? அல்லது மனத்தால் கூட நல்லது செய்ய விரும்பாத தாய் மீதா??
யாரை திருத்த வேண்டும்?? மகனையா அல்லது தாயையா? தாய் வரதட்சணை/சீர் கேட்காவிட்டால் தாயுடன் சண்டையுட மகனுக்கு வேலை இல்லாமல் போய்விடும் அல்லவா?? தாய் திருந்திவிட்டால் 'தாய் சொல் தட்டாத தனயன்' என்ற பிரச்சனை வராதல்லவா???
வரதட்சணை/சீர் விவகாரத்தில் வீட்டில் உள்ள ஆண்களுக்கு எந்த அளவு பங்குண்டோ அதே அளவு பங்கு தாய்/நாத்தனார் உள்ளிட்ட பெண்களுக்கும் உண்டு என்று சொல்கின்றேன் நான். இதனை நீங்கள் மறுப்பீர்களா?? பெண்களை திருத்த சகோதரிகள் என்ன தீர்வு வைத்திருக்கின்றீர்கள் என்று தான் மறைமுகமாக கேட்டேன். இப்போதும் கேட்கின்றேன். ஆண்களை நோக்கி கை காட்டுவதை விட்டு விட்டு பெண்கள் இந்த பிரச்சனைகளை களைய என்ன செய்யப்போகின்றீர்கள் என்பதை அறிய ஆவலுடன் இருக்கின்றேன்.
---
தீர்வு.. உங்களைப் போன்ற இளைஞர்களிடம்தான் இருக்கிறது!!
---
எப்படி???
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
அன்பு சகோதரி ஹுசைன்னமா,
அஸ்ஸலாமு அலைக்கும்,
இன்னொரு விசயம்...
எனக்கு நீண்ட நாட்களாக இந்த கேள்வி உண்டு...நீங்க கூட இப்படித்தான் சொல்லிருக்கீங்க..அதாவது //தாய் சொல் தட்டாத தனயன்//
ஏன் பலரும் //தந்தை சொல் தட்டாத தனயன்// என்று கூறுவதில்லை?
நான் இதுவரை, முஸ்லிம் சமூகத்தில், வரதட்சணை விஷயத்தில், தந்தை மீது பழி போட்ட எவரையும் பார்த்ததில்லை/கேட்டதில்லை.
அப்படியென்றால் இந்த பிரச்னைக்கு தாய் தான் (அதிக) காரணம், ஆணை விட தாய் என்னும் பெண்ணே இந்த விசயத்தில் அதிக முரண்டு பிடிப்பவர் என்று கூறாமல் கூறுகின்றார்களா??
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
//ஆங்கிலத்தில் இதற்கெல்லாம் ஒரே வார்த்தைதான், அதுக்கு பெயர் DOWRY... //
ஏன்னா, ஆங்கிலேயர்களின் வழக்கத்தில் இந்த வரதட்சணை, சீர், செனத்தி, சீதனம் எதுவும் கிடையாது. அதனால்தான்!! இன்னும் சொல்லப் போனால், இந்த வார்த்தையின் நேரடி அர்த்தம், மணமகளின் பங்காக வரும் சொத்துகள் என்பதுதான். இதன் மூலம் (origin), ஒரு விதவையின் பங்காக வரும் சொத்தைக் குறிக்கும் 'dower' என்ற வார்த்தை. ஆனால், இவ்வார்த்தைதான் இந்தியாவில் எல்லாவற்றையும் குறிக்க உதவுகிறது.
//யாரை திருத்த வேண்டும்?? மகனையா அல்லது தாயையா? //
//வரதட்சணை விஷயத்தில், தந்தை மீது பழி போட்ட எவரையும் பார்த்ததில்லை/கேட்டதில்லை.
... தாய் என்னும் பெண்ணே இந்த விசயத்தில் அதிக முரண்டு பிடிப்பவர் என்று கூறாமல் கூறுகின்றார்களா??//
அடேயப்பா!! பெண்கள்தான் முழுமுதற்காரணம்னு சொல்ல வர்றீங்க போல!! :-))))
வரதட்சணை, நகை, சொத்து எவ்வளவு என்று பேசி, கல்யாணம் முடிவு செய்யப்படுவது ஆண்கள் மட்டும் நிறைந்திருக்கும் சபையில்தான் என்பதையும்;
வரதட்சணை எனும் ரொக்கம் செல்வது தந்தையின் கைக்குதான்; மற்ற சொத்துப் பரிபாலனங்கள் செய்வதும் ஆண்களே என்பதையும் மறக்க வேண்டாம் ஆஷிக். ’சீர்’ என நான் குறிப்பிடுவற்றை - உணவு வகைகள், வீட்டுப் பொருட்களின் பரிமாற்றங்களில் மட்டும்தான் பெண்களின் பங்கு இருக்கிறது.
ஆஷிக், நீங்கள் சொல்வதைப் பார்த்தால், என்னவோ நான் இதையெல்லாம் ஆதரிப்பவள் என்ற தொனி வருகிறதோ என அஞ்சுகிறேன். நீங்கள் அப்படிச் சொல்பவரல்ல என்றாலும், இதையெல்லாம் நான் ஆதரிப்பவளில்லை என்பதுமட்டுமல்ல, முடிந்த வரை இவற்றை தவிர்க்கும்படியே (என் எல்லைக்குட்பட்டு) அறிவுறுத்தியும் வருகிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் அடுத்த பதிவு, இன்ஷா அல்லாஹ், இன்னும் விரிவாக, தெளிவாக (உங்களுக்கு இன்னும் அதிர்ச்சிகளோடு) இருக்கும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
உங்கள் கருத்துக்கு நன்றி
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
மண்ணின் மனத்தோடு அழகாக உங்கள் ஊரைப்பற்றி சொல்லி உள்ளீர்கள். திருநெல்வேலி என்றவுடன் அல்வாதான் எங்களுக்கெல்லாம் ஞாபகத்திற்கு வரும். இனி நீங்கள் கூறிய பெருமைகளும் நிச்சயமாக ஞாபகத்திற்கு வரும்.
I'm from TVL District too. Love our district. Though I have lot of Muslim friends didn't know much about the wedding stuffs. Thanks for sharing. You forgot to mention "Alva" for TVL speciality :) But personally, if you ask me "Tenkasi periya lala kadai alva is the best" :)
சுகாவோட அக்கா மாதிரி எழுதி கலக்கிட்டீங்க....எங்க ஊரும் திருநெல்வேலிதான் ...ஜங்ஷன்...
//இஞ்சினியர்கள், ஆசிரியர்கள், மென்பொருளாளர்கள், கடுபொருளாளர்கள் (ஹி.. ஹி.. hardware specialists!!)// hardware specialists ultimate dhadha
//இஞ்சினியர்கள், ஆசிரியர்கள், மென்பொருளாளர்கள், கடுபொருளாளர்கள் (ஹி.. ஹி.. hardware specialists!!),// hardware specialists ultimate dhadha
எல்லா விருந்துமுறைகளையும் சொல்லிய என் சகோதரி கல்யாணப் பெண்ணை அவள் வீட்டில் மாமியார் போய் பார்த்துட்டு வரும்போது சாப்பிட்ட 'மாமிப்பாலை' மட்டும் சொல்லவில்லை என்று எங்க வீட்டு புரட்சித் தலைவி சொல்லுகிறார்.(அதாங்க என் மனைவி)
//சாப்பிட்ட 'மாமிப்பாலை' மட்டும் சொல்லவில்லை என்று எங்க வீட்டு புரட்சித் தலைவி சொல்லுகிறார்//
அப்படியும் ஒண்ணு உண்டுன்னு நீங்க சொல்லித்தான் எனக்குத் தெரியுது. இதுபோக, சமீபத்திய வளர்ச்சிகளாக இதுபோல நிறைய “add-ons" இருக்கும் போல!! :-)))))
assalamu alaikum....
romba sandosama irukunga...nama oorkarangala...inikudan inda bloguku vanden...nenga soldradha patha melapalayamkaravangla...adha aen theliva sollala..sonna veliyur karavangaluku virundhu vaikanumna...ha ha...(tirunelveli kusumbu)...miha arumaiyana padhivuu...
திரும்பத் திரும்ப படிக்கத் தூண்டும் அருமையான பதிவு.உங்கள் கட்டுரைகளை புத்தகமாகப் பதிப்பிக்க வேண்டும்.விரைவில் மேலப்பாளையத்தில் அது நடக்க வேண்டும். வாழ்த்துக்கள்.
Post a Comment