Pages

ஸ்கைப் அம்மா






www.ithacalibrary.com

ஸ்கைப்பில் வந்தாள் அம்மா
ஸ்கைப்பினால் நன்மை பல
தினமும் அம்மாவைப்
பார்க்கலாம் பேசலாம்
சமையல் குறிப்பு
வீட்டு மருத்துவம்
கூடவே அன்பும்
இன்ஸ்டண்ட்டாய்க் கிடைக்கும்

எழுதப் படிக்கவும் அறியா
அம்மா இப்போ
கணினி ஆன்செய்து
ஸ்கைப்பில் தானே
லாகின் ஆகுமளவு
மேதை!!

பாட்டியைப் பார்த்து
பேத்தி ஓடிவந்தாள்
அரிசி காய்கறிகள்
சூப்பர்மார்க்கெட்டில்
விளைகிறது
பால் கொடுப்பது
பாக்கெட் ஃபாக்டரி
போலவே
தாத்தா பாட்டி
வசிப்பிடம்
கணினி நாட்டில்
ஸ்கைப் ஊரில்

சேமநலம் விசாரித்து
இன்றைய சமையல் கேட்டு
கூடுதல் டிப்ஸ் சொல்லி
உற்றார்கள் நலசேதி
கல்யாணம் விவாகரத்து விவரம்கூறி
பின் அம்மா கேட்டாள்

உன் ஓர்ப்படியா அப்பா
கீழே விழுந்து இப்போ
எல்லாம் படுக்கையிலயாமே
வயசுபோன காலத்துல
அவ அம்மாதான்
பாத்துக்கறாளாம்
ஒத்தாசைக்கு
ஒருத்தரும் இல்லையே

அங்க இருக்க
உன் ஓர்ப்படியாகிட்ட
ஒரு எட்டு வந்துபாத்துட்டுப்
போகச் சொல்லக்கூடாதா


பரீட்சைநேரம்
பள்ளிக்கூடம் போறப் பசங்களை
லீவும்போடச் சொல்ல முடியாது
விட்டுட்டும் வர முடியாது
வீட்டுக்காரரும் டூர் போவார்
அதான் வரமுடியல
நாளை எனக்கும் தேவைப்படுமோவென
காரணங்களைச் சேர்த்து
எங்கோபார்த்து நான் சொல்ல

நினைத்ததுபோல அம்மா
அதைச் சொல்லியேவிட்டாள்
என்னவோ போ
இப்படியெல்லாம் கிடையில
கிடக்காம கைகால் நல்லாருக்கும்போதே
நான் போய்ச் சேந்துடணும்
என்றவளை நிமிர்ந்துப் பார்க்கத்
தெம்பில்லாமல்
இந்தா உன் பேத்திகிட்ட பேசு
அவசரமாய் நகர்ந்தேன்


Post Comment

36 comments:

நட்புடன் ஜமால் said...

ஓர்படியா துவங்கும் வரை இரசித்து படித்து கொண்டிருந்தேன் ...

அயல் நாட்டு வாழ்வின் கசப்பான எதார்த்தம்

சிறு வயதில் தந்தைக்காக தட்டு ஒன்றும் தயார் செய்யும் சிறுவன் - இக்கதை ஏனோ ஞாபகம் வருகின்றது

ADHI VENKAT said...

இன்றைய காலகட்டத்தில் இப்படித் தான் ஸ்கைப்பில் உறவாட வேண்டியிருக்கிறது.

யதார்த்தமாக இருந்தது.

GEETHA ACHAL said...

உண்மை தான்...இந்த காலத்தில் ஸ்கைபினை பயன்படுத்தாவங்க யாருமே இல்லை..

அடிக்கடி கட் ஆகமல் வரும்..எங்க வீட்டிலும் ஸ்கைப் தான்..

கடைசியாக சொன்னீங்களே...அதனை நானுமே அனுபவித்து இருக்கின்றேன்...

கோமதி அரசு said...

//என்னவோ போ
இப்படியெல்லாம் கிடையில
கிடக்காம கைகால் நல்லாருக்கும்போதே
நான் போய்ச் சேந்துடணும்
என்றவளை நிமிர்ந்துப் பார்க்கத்
தெம்பில்லாமல்
இந்தா உன் பேத்திகிட்ட பேசு
அவசரமாய் நகர்ந்தேன்//

யதார்த்தமான உண்மை.

ஸ்கைப் அம்மா நல்லாஇருக்கு.
ஸ்கைப் இல்லையென்றால் அம்மாக்கள் எல்லாம் என்னவார்களோ!

கோமதி அரசு said...

//தாத்தா பாட்டி
வசிப்பிடம்
கணினி நாட்டில்
ஸ்கைப் ஊரில்//

ஆஹா ! அருமை.

RAMA RAVI (RAMVI) said...

//நினைத்ததுபோல அம்மா
அதைச் சொல்லியேவிட்டாள்
என்னவோ போ
இப்படியெல்லாம் கிடையில
கிடக்காம கைகால் நல்லாருக்கும்போதே
நான் போய்ச் சேந்துடணும்
என்றவளை நிமிர்ந்துப் பார்க்கத்
தெம்பில்லாமல்
இந்தா உன் பேத்திகிட்ட பேசு
அவசரமாய் நகர்ந்தேன்//

எல்லோரும் பயப்படும் விஷயம்தான்.
இந்தியாவில் அதுவும் வெறும் 4/30 மணி நேர பயண தூரத்தில் இருந்து கொண்டே என்னால் செல்ல முடியவில்லை. வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்பது புரிகிறது.
நல்ல பகிர்வு.

ஷர்புதீன் said...

//கிடையில
கிடக்காம கைகால் நல்லாருக்கும்போதே
நான் போய்ச் சேந்துடணும்//

சத்தியமாக நேற்றும், இன்றும் , இனிமேலும் அடியேன் கடவுளிடம் கேட்கும் ஒரே வேண்டுகோள் இதுமட்டுமே.,!

ஸாதிகா said...

அட்றா சக்கை

Chitra said...

நினைத்ததுபோல அம்மா
அதைச் சொல்லியேவிட்டாள்
என்னவோ போ
இப்படியெல்லாம் கிடையில
கிடக்காம கைகால் நல்லாருக்கும்போதே
நான் போய்ச் சேந்துடணும்
என்றவளை நிமிர்ந்துப் பார்க்கத்
தெம்பில்லாமல்
இந்தா உன் பேத்திகிட்ட பேசு
அவசரமாய் நகர்ந்தேன்


...... கசப்பான உண்மை.

Chitra said...

இந்தியாவில் அதுவும் வெறும் 4/30 மணி நேர பயண தூரத்தில் இருந்து கொண்டே என்னால் செல்ல முடியவில்லை. வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்பது புரிகிறது.


..... அம்மா வீட்டை விட்டு வெளியில் வந்த பின் , உள்நாடாக இருந்தால் என்ன? வெளிநாடாக இருந்தால் என்ன? வலி ஒன்றுதான் என்று புரிகிறது.

Prathap Kumar S. said...

இதை நீங்க என்டர் தட்டாமலே எழுதிருக்கலாமே...
அயல்நாட்டு வாழ்க்கையில் இழந்தது அதிகமா பெற்றது அதிகமான்னு 212121 தடவையா ஒரு பட்டிமன்றம் போடவேண்டியதுதான்...:)

வெங்கட் நாகராஜ் said...

கசப்பான உண்மை....

ஸ்கைப் அம்மா - பொருத்தமான தலைப்பு.... எத்தனை எத்தனை வீடுகளில் இது நடந்து கொண்டு இருக்கிறது....

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அருமையான நிதர்சன பதிவு... மறுக்க முடியவில்லை.. மறக்கவும் முடியவில்லை

சாந்தி மாரியப்பன் said...

யதார்த்தமான உண்மை..

ஆமினா said...

//இன்றைய காலகட்டத்தில் இப்படித் தான் ஸ்கைப்பில் உறவாட வேண்டியிருக்கிறது. //

ம்ம்

சாந்தி மாரியப்பன் said...

இந்தியாவுல இருந்துக்கிட்டே மொபைலை நம்பியிருக்கவேண்டியிருக்கு. இந்த நிலைமையில வெளிநாட்டு சொந்தங்களின் நிலை பாவம்தான்..

நாடோடி said...

வெளி நாடுகளில் இருப்பவர்களுக்கு கணினி தான் உலகம் என்றாகி போனது... ):

உறவுகள், திருவிழா, கொண்டாட்டம் எல்லாம் எட்டா கனியே......

ஸ்ரீராம். said...

ஸ்கைப்பின் லாபம் சொல்லி அம்மாவை, உறவுகளைப் பார்க்கும் சந்தோஷம் சொல்லி கடைசியில் இந்த மாதிரி இயல்பு வாழ்வியல் சோகத்தையும் சொல்லியிருக்கிறீர்கள். ராம்வி, சித்ரா கமெண்ட்ஸ் க்கும் வழிமொழிகிறேன்.

RAZIN ABDUL RAHMAN said...

உள்ளம் கனக்கச்செய்யும் வார்த்தைகள்..
நிதர்சனம்...
தலைமுறைதான் விளங்கனும்..
சொல்வதற்கு ஒன்றும் இல்லை..

அன்புடன்
ரஜின்

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும்

உண்மையை யதார்த்தமாக சொல்லி இருக்கீரகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஸ்கைப் இல்லாட்டி கஷ்டம் தான். ஸ்கைப் ஃபேமிலி..

vanathy said...

ஸ்கைப் கவிதை சூப்பர். நான் இது வரை பாவித்ததில்லை. எப்பவும் போன் தான். அமெரிக்கா, கனடா இரு இடங்களுக்கும் ஃப்ரீ யா பேசலாம் என்பதால் ஸ்கைப் பக்கம் போனதில்லை.

பீர் | Peer said...

ஸ்கைப்னா என்னாங்க? இந்த யாஹூ மெஸன்ஜர் மாதிரியா?

@நாஞ்சில் பிரதாப்™, பேருக்குப்பின்னால டிஎம் இருக்குன்னு நிரூபிக்கிறீங்களாக்கும்? ;)

தராசு said...

கடைசி வரி நச்..., மற்றும் கண் ஈரம்

கலக்குங்க.

இராஜராஜேஸ்வரி said...

தாத்தா பாட்டி
வசிப்பிடம்
கணினி நாட்டில்
ஸ்கைப் ஊரில்//

நிதர்சனமாய் கண்ணெதிரில் காணும் பகிர்வு.

A and A said...

மிகவும் அருமை. எங்கள் வீட்டிலும் ஸ்கைபில்தான் காலையிலும், மாலையிலும்.

வல்லிசிம்ஹன் said...

ஹுசைனம்மா ஸ்கைப் வந்துட்டதா உங்க ஊருக்கு.
அட!
உண்மைதான், எங்க ஆவலாதிய பொண்ணுகிட்டதானே சொல்ல முடியும்:)
அருமையா சொல்லிட்டீங்க. வெளியூர்ல இருந்தால் பார்க முடியவில்லை, நிஜம்தான். உள்ளூரிலிருந்தே பார்த்துக்க

உறவுகளும் இருக்காங்க. எங்களை மாதிரி முதுமையை நெருங்கிவிட்டவர்களுக்கு வேண்டுகோளே, கிடக்காமல் நல் வாழ்வும்,முடிவும் தான்..

ஹுஸைனம்மா said...

ஜமால் - நன்றி.

கோவை2தில்லி - நன்றிங்க.

கீதா - ம்ம்.. என்.ஆர்.ஐ.ஸ் எல்லாருக்குமே இது வாய்த்திருக்கிறது போல!!

கோமதிக்கா - நன்றிக்கா. ஸ்கைப் நமக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதம் மாதிரி ஆகிடுச்சு.

ஹுஸைனம்மா said...

ராம்வி - //இந்தியாவில் அதுவும் வெறும் 4/30 மணி நேர பயண தூரத்தில் இருந்து கொண்டே //
அபுதாபியிலிருந்தும் 4-30 மணிநேரம்தான் - விமானத்தில்!! இன்னும் சொல்லப் போனால், இந்தியாவிலிருந்து பயணப்படுவதைவிட வெளிநாட்டிலிருந்து சீக்கிரம் வந்து சேர்ந்துவிட முடியும். ஆனாலும், அப்படி அவசரப் பயணம் வாய்க்காமலிருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன் -யாருக்குமே. இன்ஷா அல்லாஹ்.

ஷர்ஃபுதீன் - //கடவுளிடம் கேட்கும் ஒரே வேண்டுகோள் // ம்ம்.. எல்லாருமே..
ஆனால், உடல்நலக் குறைவு ஏற்பட்டு, படுக்கையில் ஆகி, தம் முடிவை எதிர்பார்த்திருப்பவர்களுக்குத் தம் பாவங்களை மன்னிக்கப் பிரார்த்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்கீறதே. நோயாளிகளின் பிரார்த்தனைகளை மறுப்பதில்லை என்றும் இறைவன் கூறுகிறானே... அல்லாஹ் அறிந்தவன்.. போதுமானவன்..

ஸாதிகாக்கா - நன்றி.

ஹுஸைனம்மா said...

சித்ரா - //உள்நாடாக இருந்தால் என்ன? வெளிநாடாக இருந்தால் என்ன?// ஆமாப்பா.

பிரதாப் - //212121 தடவையா// அடேயப்பா, உக்காந்து ’எண்ணி’ இருக்கீங்க போல!! அவ்வளவு ஃப்ரீயா இருக்கீங்களா? :-))))

வெங்கட் - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

அப்பாவி தங்ஸ் - நன்றிப்பா.

அமைதிக்கா - ரெண்டு மாசம் முன்னே, பெற்றோர் ஒருவேலையா சென்னை வந்தப்போ, திருநெல்வேல்யில் எதிர்பாராமல் ஒரு துயரச் சம்பவம். ரெயில், ஃப்ளைட் எதுவும் கிடைக்காமல், காரில் வந்து சேருவதற்குள் ஒருவழியாகி விட்டார்கள். நினைக்க நினைக்க பயமாருக்கு.

ஆமினா - ம்ம்..

ஹுஸைனம்மா said...

நாடோடி - ஆமாங்க, கணினி உலகத்துலத்தான் வாழ வேண்டியிருக்கு.

ஸ்ரீராம் சார் - ஆமாம் சார், உலகம் சுருங்கிடுச்சுன்னு சந்தோஷப்பட முடியலை.

ரஜின் - வாங்க, நன்றி.

ஆயிஷாக்கா - வ அலைக்கும் ஸலாம். நன்றி.

ஹுஸைனம்மா said...

முத்தக்கா - ம், எல்லாருமே ஸ்கைப் ஃபேமிலியாகிட்டோம்..

வானதி - //அமெரிக்கா, கனடா இரு இடங்களுக்கும் ஃப்ரீ யா பேசலாம்// அப்படியா? பரவால்லையே..

பீர் - ஹலோ.. ஸ்கைப்னா என்னவா? உள்ளுர் பார்ட்டியோ நீங்க?
//@நாஞ்சில் பிரதாப்™, பேருக்குப்பின்னால டிஎம் இருக்கு//
ஆமா, அவர் தரக்கட்டுப்பாட்டு அதிகாரி மாதிரி. கவிதைய மட்டுமில்லை, மனுசங்களை, வழிகளை ’ஆராஞ்சு’ விமர்சிப்பார்!! ;-))))

ஹுஸைனம்மா said...

தராசு - நன்றிங்க.

ராஜேஸ்வரி மேடம் - நன்றிங்க.

A & A - காலை, மாலை காஃபி போல ஸ்கைப்பா? ;-))))

வல்லிம்மா - //எங்களை மாதிரி முதுமையை நெருங்கிவிட்டவர்களுக்கு வேண்டுகோளே, கிடக்காமல்// முதியவர்களுக்காவது முதுமையால் மட்டும்தான் இந்நிலைமை. இளையவர்களும் இப்ப நிறைய bed-ridden ஆகிடுறாங்க - விபத்து, வாதம், புதிய புதிய நோய்கள்... அதனால, இளையவர்களும் இதற்காகப் பிரார்த்திக்கிறோம்..

Jaleela Kamal said...

மிக உண்மை

Anisha Yunus said...

................!!!!

:(