Pages

கான மயிலாட...





நோன்புகால சிறப்பு இரவுத் தொழுகையான தராவீஹ் நடந்துகொண்டிருந்தது. தொழுகையை முன்னின்று நடத்தும் இமாம், குர் ஆன் வசனங்களை கிராஅத் முறையில் உள்ளம் நெகிழ்ந்து ஓதிக் கொண்டிருக்க, கேட்பவர்களும் உருகிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் கண்ணீரோடு. (கிராஅத் = தெளிவான உச்சரிப்போடு, அவசியமான ஏற்ற இறக்கங்களோடு ஓதுவது - கேட்டுப் பாருங்க)

அமீரகத்தில் பெண்களுக்கு அநேகமாக எல்லாப் பள்ளிவாசல்களிலும் தொழ இட வசதி இருக்கும். ஆண்களைப் போல, பெண்கள் பள்ளிக்கு வந்துதான் தொழவேண்டும் என்கிற கட்டாயமில்லை. எனினும், கூட்டுப் பிரார்த்தனையில் ஒரு மனநிறைவு கிட்டும். பள்ளிவாசல்களில் இருக்கும் ஏகாந்த அமைதி, பிரார்த்தனையில் அதிகம் ஒன்றச் செய்யும்.

தொழுகையில் அங்கேயிங்கே திரும்பவோ, பேசவோ கூடாது. பேச்சு, இறைவனோடு மட்டும்தான்!!  கூட்டுத் தொழுகையில், இடைவெளி ஏதுமில்லாமல் தோளோடு தோள் ஒட்டி வரிசைக்கிரமமாக நிற்பது மிக மிக முக்கியம்.  ஒருநாள் பின்வரிசையில் தொழ ஆரம்பித்திருந்த என்னை, சேட்டைக்காரப் பிள்ளையை ஹெட்மிஸ்ஸிடம் இழுத்துச் செல்லும் டீச்சரைப்போல ஒரு ‘இரும்புக்கை’ இழுத்து முன்வரிசையில் ஏற்பட்டிருந்த காலியிடத்தில் நிறுத்தியது!!

சின்ன வயதில், ஊரில், இந்த நோன்புகால சிறப்புத் தொழுகையை, சில பெண்கள் சேர்ந்து,  ஒருவரின் வீட்டில் கூட்டாகத் தொழுவார்கள். மொத்தம் 20 ரக் அத்துகள் (முறைகள்) கொண்ட தராவீஹ் தொழுகையை, ஒரே பெண்ணே மொத்தமாக முன்னின்று தொழுகை நடத்தாமல், ஈரிரண்டு ரக் அத்தாக, பத்து பெண்கள் முறைவைத்துத் தொழ வைப்பார்கள்.  அதற்கான (அப்போதைய) தகுதி, குர் ஆனை முழுதாக முறையாக ஓதப் பயின்றிருக்க வேண்டும், சீனியராகவும் இருக்க வேண்டும்.

என்னைப் போல, அம்மாக்களோடு அங்கு தொழ வரும் சிறுமிகள் ஐந்தாறு பேருக்கும் ஒரே இலக்கு, தொழுகை முடிந்ததும் விளம்பப்படும் டீ, நன்னாரி சர்பத் அல்லது ரோஸ்மில்க்!! (அதிலும் சப்ஜா விதைகள் போட்ட ரோஸ்மில்க் இருக்கே... ம்ம்ம்ம்... யம்மி!! )  பிறகு ‘ஆளும் வளர்ந்து, அறிவும் வளர்ந்ததில்’,  தொழுகையில் சீரியஸாகி, குர் ஆன் வாசிக்கவும் கற்க ஆரம்பித்தேன்.

நான் குர் ஆனை முழுமையாக ஓதியது, ஒரு முஸ்லிம் ஹாஸ்டலில் தங்கியிருந்தபோதுதான்.  அங்கே,  முதல் ரேங்க் வாங்கும் நானும், பாஸாவதற்கே சிரமப்படும் சல்மாவும் ஒரே வகுப்பு. சல்மாவின் சிறப்புத் தகுதி, குர் ஆனை கிரா அத் முறையில், கேட்கும் நம் மனமுருக ஓதுவது. அவளின் தாத்தாதான் இதைப் பயிற்றுவித்தாராம்.

அவளிடம் குர் ஆனின் ‘அர் ரஹ்மான்’ என்ற அத்தியாயத்தை அடிக்கடி ஓதச் சொல்லிக் கேட்பேன். "இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்யாக்குவீர்கள்" என்ற பொருள் பொதிந்த “ஃபபி அய்யி ஆலாயி ரப்பிக்குமா துகத்திபான்’ என்ற வரிகளை அவள் இழுத்து ராகமாக ஓதக் கேட்கும்போது, என்ன சொல்வது... அது ஒரு டிவைன் ஃபீலிங்!! அப்படிக் கேட்டுக்கேட்டு, ‘அர்ரஹ்மான்’ அத்தியாயம் என் மனதில் தனி இடம் பிடித்துக் கொண்டது.

ஒருமுறை அவள் என்னிடம், “பாரேன், எனக்கு அழகா ஓத வருது, ஆனா படிப்பு வரலை. ஆனா, உனக்கு படிப்பு நல்லா வருது; என்னைப் போல நல்லா ஓத வரலை” என்று சொல்ல, உடனே, “அதெல்லாம் நான் சாதாரணமா ஓதுறதே போதும். கிரா அத்தாத்தான் ஓதணும்னு ஒண்ணும் கட்டாயமில்லையே” படக்கென்று முறித்துச் சொன்னேன்.  பிறகு நாக்கைக் கடித்துக் கொண்டேன் என்றாலும் சொன்னதிலிருந்து பின்வாங்கவில்லை.

டுத்த வருடங்களில் தொழுகையை நடத்துவதற்குத் தகுதியாகும் வகையில் குர் ஆன் ஓதிமுடிக்கும்போது, ஒன்பதாம் வகுப்பே படிக்கும் சின்னப் பெண் என்பதால், ரெகுலராக இல்லையெனினும், யாரேனும் வராமல் போனால், சிலசமயம் என்னைத் தொழவைக்கச் சொல்வார்கள்.  (லீவ் வேகன்ஸி!!) அப்போ, முன்நின்று தொழவைக்கும்போது கிடைக்கும் ஆனந்தம் இருக்கே... 

ஒன்றிரண்டு வருடங்கள், இப்படி ‘டெம்ப்ரவரி போஸ்டில்” இருந்தேன். அடுத்த வருடம் பெர்மனண்ட் ஆக்கப்படலாம் என்றிருந்த நிலையில், தெருவுக்குள்ளே ஒரு பிரச்னையால் சண்டை வர, தெருவே ரெண்டு -  இல்லை மூன்றுபட்டு, சண்டை பெண்களையும் தொற்றி, பிரிந்து மூன்று இடங்களில் தொழ ஆரம்பித்துவிட்டார்கள்!! எங்கு செல்வது என்ற குழப்பத்தில் வீட்டிலேயே தனியே தொழுதுகொண்டேன். 

ள்ளிவாசல்களில் தொழுகை நடத்தும் இமாம் பொறுப்பு என்பது இலகுவானது அல்ல. அதற்கென இஸ்லாமியக் கல்வியும், பயிற்சியும் பெற்று, கடுமையான தேர்வுகளும் எதிர்கொள்ள வேண்டும்.

அன்றைய தராவீஹ் தொழுகையில், குர் ஆனின் “அர் ரஹ்மான்” என்ற அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தார் இமாம். இறைவன் நமக்களித்துள்ளவற்றைப் பட்டியலிட்டு, “இறைவனின் இந்த அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள் நீங்கள்?” என்று வரிக்கு வரி கேட்கும் அத்தியாயம். கிராஅத்தில் மெய்மறந்து, எனக்கு மட்டுமே கேட்குமளவு மெல்லிய ஒலியில் அவரோடு சேர்ந்து ஓதினேன்.

தொழுகை முடிந்ததும் என்னருகில் நின்ற பெண்மணி, இமாமின் அழகிய கிராஅத்தை அவர் மனமொன்றி கேட்பதை, நான் வாய்விட்டு ஓதியது தடை செய்ததாகக் குறைபட்டுக்கொண்டார்.  மயிலைப் பார்த்து வான்கோழி ஆடியது போல இருந்திருக்குமோ? சல்மா எங்கிருந்தோ என்னைப் பார்த்துச் சிரிக்கிறாள்.

Post Comment

32 comments:

கீதமஞ்சரி said...

சிந்தனையின் வீரியம் சிறப்பு. சலீமாவுக்கு இறைவன் அளித்த அருட்கொடை அது! அடுத்தவரை எள்ளுமுன் எள்ளளவேனும் எண்ணிப்பார்க்கச் சொல்லும் அருமையான அனுபவப் பகிர்வு. நன்று.

RAMA RAVI (RAMVI) said...

நோம்புகால தொழுகையை பற்றி அழகாக விளக்கி இருக்கீங்க ஹுஸைனம்மா. அன்பு ரம்ஸான் வாழ்த்துக்கள்..

Jaleela Kamal said...

இதில் பாதி என்னுடையது அபப்டியே

வீட்டில் தொழுகை கிரான்மா, கிராஅ\ன்மாவின் தங்கை மாமியார் அம்மா தொழவைப்பார்கள்

அதேசப்ஜா விதை போட்ட ரோஸ்மில்க் அம்மாதான் ஒரு குடம் நிறைய கரைபார்கள்


அர் ரஹ்மான் சூரா “ என் வப்பா ஓத கேட்டபிறகு அதில்ரொம்ப எனக்கு பிடிச்ச சூரா, என் வாப்பா ஓத கேட்டு தான் அழகான அந்த ராகமான ஓதல் என் காதில் ஒளித்து கொண்டு இருக்கு/

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

மிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். எந்த மதத்தைச் சார்ந்ததாக இருந்தாலும் வேதங்கள் உயர்ந்தவைதான். நல்லனவற்றைத்தான் சொல்கின்றன.

Nizam said...

மெய் சிலிரித்து விட்டேன்

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு. போட்டி ஒரு விதத்தில் நம் திறமையை வெளிப்படுத்தும்.

ரம்ஜான் தின வாழ்த்துக்கள்.

தராசு said...

ரமலான் வாழ்த்துக்கள்.

நீங்கள் சொல்வது இறைவனை துதித்துப் பாடுவதா ஹுஸைனம்மா???

VANJOOR said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

ஹுஸைனம்மா,

மனம் நெகிழச்செய்த பதிவு.

நான் மனனம் செய்து இருக்கும் பல சூராக்களில் "அர்ரஹ்மான்" அத்தியாயம் ஒன்று.

ரமதான் முபாரக்.

வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

ஹுஸைனம்மா said...

//தராசு said...
நீங்கள் சொல்வது இறைவனை துதித்துப் பாடுவதா ஹுஸைனம்மா???//

இவை குர் ஆன் வசனங்கள். தொழுகையில் குர் ஆன் வசனங்கள் மட்டுமே ஓதப்படவேண்டும். தொழுகையில் மட்டுமல்லாது, மற்ற நேரங்களிலும் குர் ஆனை ஓதலாம்.

Chitra said...

ரமலான் வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

இறை அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. தஞ்சாவூரில் இருந்த போது அங்கிருந்த மசூதிக்குள் சில மாலை வேளைகளில் சென்ற நினைவு வருகிறது. அங்கு பழக்கமான அப்துல் ஹக்கீம் என்ற நண்பர் (அப்போது எங்களுக்கு அவர் ஹக்கீம் அண்ணன்) நோன்புக் கஞ்சி தருவார்.

சாந்தி மாரியப்பன் said...

பல புதிய தகவல்கள் ஹுஸைனம்மா.

நீங்களும் மயில்தாங்க :-))

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ,

நீங்கள் இந்த பதிவை எப்படி எழுதி இருக்கிங்கன்னு தெரியல்..

எனக்கு உடன் பிறந்த சகோதரிகள் இல்லாததாலும் இந்த அருமையான அனுபவங்கள் கிடைக்கபெறவில்லை..

ஆனா இந்தப்பதிவின் நடுவிலே ஒரு நெகிழ்ச்சியான அனுபவம்..அர்ரஹ்மான் சூரா..குறித்தது,,

பெண்கள் பெரும்பாலும் ஆலிமா ஓதிவிடுவதால் அப்படி இமாமாக தகுதிகளை நிர்ணயித்து இருக்கலாம்...

நாங்க அப்டி இல்லை..

உங்களில் அதிகம் குரானை மனனம் செய்தவர் உங்களுக்கு இமாமாக இருக்கட்டும் என்பதுதானே கட்டளை..

ஆனா இதுதா பெண்களுக்கும் செக்..ஏன்னா உங்கல்ல கண்டிப்பா ஒருத்தர் ஆலிமாவாக ஆகி இருக்க..அவங்களுக்கு தான் முன்னுரிமையும்,,தானாக வந்துவிடுகிறது :)...

நல்ல அனுபவ பகிர்வு..

அன்புடன்
ரஜின்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நினைவுகளை அழகாக பகிர்ந்தீங்க..நல்லமுயற்சியுடைய சிறுமியா இருந்திருக்கீங்க..விளையாட்டுத்தனத்திலிருந்து பொறுப்புணர்வுக்கு வந்துகொண்டிருந்த நேரத்தில் அந்த தோழியிடம் நீங்கள் முறித்து சொன்னது ஒரு குழந்தைத்தன்மையோடு தானே..:)

Anisha Yunus said...

அக்கா....

உங்கள் பதிவுகளிலேயே மனதை தொட்ட பதிவு இது.... மாஷா அல்லாஹ்.... நிறை குடம் நீர் தளும்பல் இல்-- இப்பதான் பார்க்கிறேன்... உங்க அனுபவத்துக்கும், நீங்க உங்களைப் பற்றி சொல்லிக்கிறதுக்கும் பயங்கர இடைவெளி அக்கா.... அதே டெம்பரை போஸ்ட்டுகளில் நான் டிப்ளமா படிக்கும்போதும், காலேஜிலும் இருந்திருக்கிறேன்... அந்த நேரங்களில் கிடைத்த ஆனந்தத்திற்கும், நிம்மதிக்கும் சான்ஸே இல்லை.... அதே போல் அர்-ரஹமான் சூறா எனக்கும் மிக மிக பிடித்தமான ஒன்று. மரியமும், அர் ரஹ்மானும் அடிக்கடி ஓதிக் கொண்டிருக்கும் சூறாக்கள். அதிலும் ஜுஜ்ஜூவிற்கு உடல் நிலை சரியில்லை என்றால்... அர்-ரஹமானை அதிகமாக ஓதிக் கொண்டேயிருக்க சொல்லி அவனே சொல்வான்... எனக்கு அந்த சூறாவை மட்டும் ஷேக் மஹேர் அல் முஐக்லி (Maher al Muaiqly)யின் குரலில் கேட்க அதே ‘divine feeling'.... மாஷா அல்லாஹ்....

அல்லாஹும்ம தகப்பல் மின்கும்... :)) ஆமீன்.

Thamiz Priyan said...

Nice!

Unknown said...

உங்க பதிவை ரீடரில் படித்தேன். ஆனாலும், படித்து மனம் நெகிழ்ந்ததை உங்களிடம் சொல்லணும்னு இங்கே ஒரு கமெண்-டிக்கிறேன்.

ரமதான் முபாரக்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஹுசைனம்மா,அன்பும் பக்தியும் இருந்தாலே தொழுகை பளிச்சிடும்.
ஆனாலும் ஒழுங்கு முறை இருக்க வேண்டியது அவசியம் தான்.
வான் கோழியாக இருந்தாலும் பக்தியுள்ள வான் கோழிக்கு இறைவன் சரியாக
ஓதுவதையும் கொடுப்பார்.

ஹுஸைனம்மா said...

ரஜின்,
ஸலாம்.

நான் சொல்வது எண்பதுகளில். அப்பல்லாம், குர் ஆன் ஓதியிருக்கும் பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவ்வளவுதான் இஸ்லாமிய அறிவு. ஓரளவு வசதியுள்ளவர்கள்தான் தொழ, ஓதச் செய்வது என்றிருந்த காலம். பெண்கள் மதரஸா, பள்ளி என்பது எல்லாம் இருந்தில்லை.

அதனால்தான் தொழவைப்பதற்கு குர் ஆன் ஓதியிருப்பதே தகுதியாகக் கருதப்பட்டது. மேலும் இது வீட்டில் பெண்கள் தராவீஹ் தொழுவதற்கு மட்டுமே தவிர, பள்ளிகளில் அல்ல. அதற்கு மூறையான வகையில்தான் இமாம்கள் நியமிக்கப் பட்டிருப்பர்.

ஹுஸைனம்மா said...

அன்னு,
ஸலாம். உங்க கமெண்டைப் பாத்தா, நான் ஓவர் ஸீன் போட்டுட்டேனோன்னு ஒரு டவுட். நாங்க தராவீஹ்ல அப்ப ஓதுனதெல்லாம், 30ம் ஜுஸுவின் சின்னச்சின்ன ஸூராக்கள்தான். ’ஸப்பிஹிஸ்மா’ தான் பெரிய ஸூரா என்று நினைவு. என் டேர்னில், ‘இன்னா அன்ஸல்னா’ & ‘இதா ஸுல்ஸிலத்தில்’ தான் ஓதுவேன்.

இப்பத்திய காலத் தொழுகைகளுக்கு கம்பேர் பண்ணா, அதெல்லாம் சின்னப் பிள்ளைங்க சொப்பு விளையாட்டுபோலத் தோணும். எனினும், அல்ஹம்துலில்லாஹ், அதுவே பெரிய பாக்கியம் எனக்கு.

சிநேகிதன் அக்பர் said...

அழகான நினைவுத் தொகுப்பு.

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

மாஷா அல்லாஹ்...அருமை அருமை அருமை....

என்ன சொல்லுவதென்றே புரியவில்லை. அவ்வளவு அழகான பகிர்வு சகோதரி...

தாங்கள் மேலும் சிறப்பாக செயல்பட இறைவன் போதுமானவன்.

தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் அளவில்லா மகிழ்ச்சியையும், அமைதியையும் பெற்று வாழ இறைவனை பிரார்தித்தவனாய்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

வெங்கட் நாகராஜ் said...

ரமலான் வாழ்த்துகள்....

நம் மதத்தின் முக்கிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் தானே மகிழ்ச்சி...

எங்களுக்கும் அதைப் பற்றி தெரிவித்தமைக்கு நன்றி.

Muniappan Pakkangal said...

Nice sharing Hissainamma,I hv seen Muslim women offering prayers in Aarampannai village,near Vallanadu.Hope u knw Aarampannai,a Muslim village.I practiced Medicine there for 3 years.I had Nonbu Kanji there for all the 3years.

குறையொன்றுமில்லை. said...

நோம்பு கால தொழுகை பற்றி நன்னா
சொல்லி இருக்கீங்க. நன்றி
ரம்ஜான் வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

இந்த நேரத்திற்கான அழகான பகிர்வு... துபாயில் இருந்த நாட்களை மிஸ் செய்கிறேன் இந்த சமயத்தில்...

ஸ்ரீராம். said...

ரம்ஜான் வாழ்த்துகள்.

மாதேவி said...

பெருநாள் வாழ்த்துக்கள்.

Naazar - Madukkur said...

அஸ்ஸலாமு அலைக்கும்.




உங்களுடைய எழுத்தாளுமை மிக நன்றாக உள்ளது சகோ.



அன்புடன்



நாசர்

zumaras said...

அஸ்ஸ்லாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ் மனதைத் தொட்ட பதிவு

ஹுஸைனம்மா said...

எல்லாருக்குமே மிகுந்த நன்றி!! தாமதத்திற்கு மன்னிக்கணும். பெருநாள் பிஸியும், சோம்பேறித்தனமும்தான் காரணம்.

முதல் வருகை தந்திருக்கும் கீதா மற்றும் கெக்கெபிக்குணி (எழுதும்போதே சிரிப்பு வருது) இருவருக்கும் பிரத்யேக நன்றிகள். தொடர்ந்து வாங்க. நிஜாம், நாசர், ஸுமராஸ் - உங்களுக்கும்!!

முத்தக்கா - ஆமாக்கா, அப்ப சொன்னது ஒரு சிறுபிள்ளைத்தனத்தால்தான்னு நினைக்கிறேன். குறை சொல்றாளேங்கிற வருத்தத்தில் வந்திருக்குமாயிருக்கும்.

டாக்டர் சார் - உங்க பிஸி டைம்லயும் இங்க வந்து கமெண்ட் எழுதியதற்கு நன்றி. பள்ளிவாசலின் நோன்புக் கஞ்சி வித்தியாசமில்லாமல் எல்லாருமே விரும்புவது.

மனோ அக்கா -அறிமுகத்திற்கு நன்றிக்கா. உங்களின் முத்துக்களில் என் வலைப்பூவும் ஒன்றாக அமைந்தது என் பாக்கியம். நன்றிக்கா.

மறுபடியும் எல்லாருக்கும் நன்றி. தனித்தனியா பதில் கொடுக்க நினைத்து முடியாமற் போய்விட்டது.

pudugaithendral said...

அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்