மனோ அக்கா அழைத்திருந்த நட்புகள் குறித்த தொடர்பதிவு.
வழக்கமாக பெண்களுக்கு மட்டுமே அவர்களின் சிறுவயது/கல்விகால நட்புகள் திருமணத்திற்குப் பின் தொடர்வதில்லை என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், இன்றைய உலகில் இருபாலருமே, கல்வி, வேலை என்று பல ஊர்/நாடுகளுக்குப் பந்தாடப்படுவதில், எல்லா நட்புகளுமே தொடர்பு குறைந்து, வேலையிடத்தில் கிட்டும் நட்புகளே தொடர்கின்றன. ஆனாலும் பால்யகால பள்ளி/கல்லூரி நட்பில் உள்ள ஆத்மார்த்த அன்பு இதில் மிஸ்ஸிங் என்றுதான் தோன்றும் எனக்கு. வளர்ந்திருக்கும் இணையத் தொழில்நுட்பத்தால் சில சிறுவயது நட்புகளைத் தற்போது கண்டெடுத்துத் தொடர்ந்தாலும், அந்தக் கால களங்கமில்லா நட்புக்கு இணையவழித் தொடர்பு ஈடில்லை என்றே தோன்றுகிறது.
சென்ற வருடம், கல்லூரித் தோழி பூரணியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தன் வேலையிட நட்புகள் குறித்துச் அவள் இதையேச் சொன்னபோது, “படிக்கும் காலத்தில் பொறுப்புகளேதுமில்லாச் சுதந்திரம் இருந்தது. எதைக் குறித்தும் கவலைப்பட வேண்டியிருக்கவில்லை. அதனால் எதிர்பார்ப்புகளற்ற நட்பு கொள்ள முடிந்தது. அதனால்தான் நண்பர்கள் என்று வரும்போது நம் சிறுவயது நட்புகளையே நாம் அதிகம் நினைத்து ஏங்குகிறோமோ?” என்று நான் கேட்க அவளும் அதை ஆமோதித்தாள்.
”எதிர்பார்ப்பு இல்லாத” என்பதற்கு அவரவர் விருப்பப்படி அர்த்தங்கள் கொள்ளலாம். குடும்பம், வேலை, உறவுகள், சுற்றம் என்று பல வட்டங்களில் சுழன்று கொண்டிருக்கும் பெண்களுக்கு நட்பு என்பது ஒரு இளைப்பாறுதலாக இருக்க வேண்டும். பல கட்டங்களில், நட்பா, உறவா என்று வரும்போது, வாய்ப்பே கொடுக்கப்படாமல் உறவுதான் என்று தீர்மானிக்க வேண்டிய சூழ்நிலைகளில், அதைப் புரிந்துகொள்ளும் நட்புகள்தான் பெண்கள் எதிர்பார்ப்பது.
பார்க்கும், பழகும் பலரிடம் நட்போடிருந்தாலும், நமக்கென்று நெருக்கமாக ஓரிருவர்தான் இருக்க முடியும். அமீரகம் வந்த பின் நான் கண்டெடுத்த என் பள்ளித் தோழி பர்வீனும், அடிக்கடி பார்க்கவோ, தொலைபேசவோ இல்லை என்றாலும்கூட தற்போதும் மனதில் கல்லூரிக் காலத்திற்குச் சற்றும் குறைவில்லா நெருக்கத்தை உணரும் தோழி ஞானமும்தான் முதலில் நினைவுக்கு வருபவர்கள்.
துபாய்த் தோழி பர்வீன், பண வசதியில் மிகவும் உயர்ந்தவள் என்றாலும், அதைச் சற்றும் வெளிக்காட்டாத எளிமைதான் இவளோடான நட்பை இன்றும் தொடரவைக்கிறது. இன்னும் பல விஷயங்களில் எனக்கு நல்ல ஆலோசகர். நாங்களிருவருமே குடும்பத்துக்கு ‘மூத்த மகள்’ என்பதாலும் புலம்பிக்கொள்ள நிறைய உண்டு. எங்களிடையே. எங்களிருவர் எண்ணங்களும் அநேக சமயங்களில் ஒருபோல்ஒத்தே இருக்கும்.
நாங்களிருவரும் எப்படி ஒரே ‘நேர்க்கோட்டில்’ சிந்திக்கிறோம் என்பதற்கு ஒரு உதாரணம்:
ஒருமுறை துபாயில் நான் மட்டும் அவளுடன் காரில் சென்றுகொண்டிருந்தேன். காரை ஓட்டிவந்த அவளின் கணவர், அவர் வீட்டிற்குச் செல்லும் வழிகளை எனக்கு விளக்க முற்பட்டார். நான் அவரிடம், “இல்லை. நீங்க சிரமப்பட்டு வழி சொல்லித் தர வேண்டாம். அதுக்குன்னே பெர்மணண்டா ஒரு(டிரை)வரை வச்சிருக்கதுனால, இதெல்லாம் நான் ஞாபகம் வச்சிருக்கதில்லை”ன்னேன். அவர் கொஞ்சம் ’ஜெர்க்’ ஆகி, அப்புறம் தன் மனைவிகிட்டே சொன்னார், “இப்போத்தான் புரியுது, உங்க ரெண்டுபேருக்கும் எப்படி இவ்ளோ அண்டர்ஸ்டாண்டிங்”னு!!”
ஞானம் எனது கல்லூரி வகுப்புத் தோழி. இருவருக்கும் முதற்பெயர் “எம்”மில் ஆரம்பிப்பதால், அருகருகே அமர்ந்து, அப்படியே தொடர்ந்த எங்களின் நட்புக்குக் காரணமாய் பொதுவான ஒரு காரணமும் காணேன் நான். ஏனெனில், பார்ப்பதற்கு மட்டுமல்ல, குணத்திலும் நாங்கள் நேரெதிர்!! லாரல்-ஹார்டி போல, ஒல்லியாய் நெடுப்பமாய் நான்; பூசினாற்போல, என் தோளுக்கருகில் அவள். கலகலப்புக்குப் பஞ்சமில்லாத வாய்மூடா பேச்சுக்குச் சொந்தக்காரி அவள். நானோ ’எண்ணிப்’ பேசத் தெரியாததால், ‘எண்ணி எண்ணி’ பேசுபவள்!! (என்னா பில்டப்பு!!) இளகிய மனம் அவளுக்கு; ’வெட்டு ஒண்ணு; துண்டுகள் பல’ கேஸ் நான்!! இருந்தும், எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கப்படுவதைப் போல, இணைபிரியாத் தோழிகளானோம்.
மூன்று வயது மொட்டு முதல் முதியவர்கள் வரை யாரானாலும் தன் அன்புப்பேச்சினால் மணிக்கணக்கில் கட்டிப் போடும் திறமுடையவளின் திருமண வாழ்வு நாலே வருடங்களில் கலைந்தது எனக்குப் பேரதிர்ச்சி. ’எல்லாரையும் பிரிஞ்சு அமெரிக்கா போணுமா?’ என்று தயங்கியவளை, திருமணத்துக்குச் சம்மதிக்க வைக்க அவளின் பெற்றோர் முயற்சியோடு, நானும் நாலு அதட்டுப் போட்டேனே என்ற குற்ற உணர்ச்சி இன்றும் உள்ளது.
தற்போது அவள் அமெரிக்காவில். சென்ற வருடம் இந்தியா செல்லும் வழியில் அபுதாபி வந்திருந்தாள். பழைய நினைவுகளில் நீந்திக்கரைசேர முயன்று, முயன்று முழுகியேப் போனோம். கையில் ஒருமாதக் குழந்தையோடு அவளை வீட்டைவிட்டு வெளியே தள்ளிவிட்ட கதைகேட்டுக் கலங்கிப் போனேன். இன்னும் பலப்பல சோகங்கள். முத்தாய்ப்பாய் அவள் சொன்னது இன்னமும் காதில் ஒலிக்கிறது, “எல்லா சந்தோஷமும் அதோட முடிஞ்சு போகும்னு தெரிஞ்சுதான் கடவுள் எனக்கு காலேஜிலேயே நிறைய சந்தோஷத்தைத் தந்துட்டார்போல!!”. முன்னர் அமெரிக்கா போகத் தயங்கியவள், தற்போது அங்கிருந்து நிரந்தரமாக ஊர்திரும்பவும் தயங்குகிறாள்.
ஊரைப்போல, நாட்டைப்போல தினமும் பார்த்து, பேசி, சிரித்துமகிழவும், அழுகையைப் பகிரவும் நமக்கென்று ஒரு நட்பு அருகில் இல்லையே என்ற வருத்தம் எனக்குண்டு. முக்கியமா, ரங்ஸோடு சண்டை வரும்போது அவரைத் திட்டுறதையும், ரெண்டு நாள்லயே ‘இந்திரன்சந்திரன்’னு புகழ்றதையும் ’ஆமாஆமா’ன்னு கேட்டுக்கிட ஒரு ஆள் வேணும். (பீர்பாலின் ‘நான் கத்திரிக்காயிடமா பணிபுரிகிறேன்’ டயலாக் ஞாபகம் வருதா?)
எனினும் ஆழிசூழ்உலகில் பிரச்னைகளால் சூழப்பட்ட மனிதர்களே (நான் உட்பட) அதிகம் காணப்படுகையில், புதிதாக நட்புக் கரம் நீட்டவும் தயக்கமாக இருக்கிறது. ’செயற்கரிய யாவுள’வாக என் நட்புகொள்பவருக்கு, ‘ஒல்லும்வாய் ஊன்றும் நிலையாகவும்’ இருக்க வேண்டுமே!!
|
Tweet | |||
42 comments:
பழைய நட்புக்களை மனம்விடடுச் சொன்னீங்க.
பள்ளிக்கால நட்பு எதிர்பார்ப்பு இல்லாதது. அப்போது அமைந்த நட்புகள் போல அப்புறம் அமைவதில்லைதான். அப்போது நமக்கு நெருக்கமாக வாய்த்த நண்பர்கள் தவிர மற்றவர்களில் சிலரை இப்போது சந்தித்தாலும் கூட தூய நட்பு எதிர்பார்க்க முடியாது. விட்டேற்றியான மனோபாவம்தான் இருக்கும்! உங்கள் தோழி விஷயம் வருத்தமாக இருந்தது.
//மூன்று வயது மொட்டு முதல் முதியவர்கள் வரை யாரானாலும் தன் அன்புப்பேச்சினால் மணிக்கணக்கில் கட்டிப் போடும் திறமுடையவளின் திருமண வாழ்வு நாலே வருடங்களில் கலைந்தது//
நட்பில் ரசிக்கப் படும் விஷயம் உறவுகளில் ரசிக்கப் படுவதில்லை போலும்!
கரெக்டாக சொன்னீங்க...நம்முடைய நெறிங்கிய நட்பு நமக்கு பக்கத்தில் இருந்தால் ரொம்ப அருமையாக இருக்கும்...
தூரத்தில் இருந்தால் மிகவும் நெருக்கமாக இருந்த நட்பும் சிறிது சிறிதாக தொலைய ஆரம்பிக்கும்...
இதில ஆமா போட நிறைய மேட்டர் இருக்கு :-( உண்மை கசக்குமே :-)
சந்தோசம் தரும் நட்பே சில சமயம் சங்கடமாகி போவதும் உண்டு :-)
///அமெரிக்கா போகத் தயங்கியவள், தற்போது அங்கிருந்து நிரந்தரமாக ஊர்திரும்பவும் தயங்குகிறாள்///
இந்தியாவில் நம்ம சொந்த பிரச்சனைகளில் நம் அனுமதி இல்லாமல் தலையிடுபவர்கள் அதிகம். அதனால்தான் உங்கள் தோழி வர தயங்குகிறார். ஆனால் இங்கு நாம் சொந்த பிரச்சனையை பகிர்ந்து கொள்ளலாம் என்று கருதினாலும் அதை காது கொடுத்து கேட்க ஆள் கிடைக்க மாட்டார்கள் எல்லாம் சுயநல மனிதர்கள் இங்கு
///அமெரிக்கா போகத் தயங்கியவள், தற்போது அங்கிருந்து நிரந்தரமாக ஊர்திரும்பவும் தயங்குகிறாள்///
இது அவருக்கு மட்டுமல்ல இங்கு வந்த அனைவருக்கும்(என்னையும் சேர்த்து) ஏற்பட்ட சாபக்கேடு
இனிய பகிர்வு. நட்பூ மணத்துடன் இருக்கிறது. சிறு வயது நட்பு எதிர்பார்ப்பு இல்லாதது என்பது எவ்வளவு உண்மை...
//ரங்ஸோடு சண்டை வரும்போது அவரைத் திட்டுறதையும், ரெண்டு நாள்லயே ‘இந்திரன்சந்திரன்’னு புகழ்றதையும் ’ஆமாஆமா’ன்னு கேட்டுக்கிட ஒரு ஆள் வேணும். //
:)))
பெண்கள் பெண்களுடன் அதிக நாள் நட்பாய் இருப்பதில்லை (ரொம்ப சீக்கிரம் அவர்களுக்குள் சண்டை வந்து விடும்) என பல நாள் நினைத்திருந்தேன். இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் அந்த எண்ணம் ஓரளவு மாறி வருகிறது
எம்பூட்டு பகிர்ந்தாலும் அலுத்து போகாத விடயம் தான் இந்த நட்பூ
[[அதுக்குன்னே பெர்மணண்டா ஒரு(டிரை)வரை வச்சிருக்கதுனால,]] நீங்க ரொம்ப நல்லவங்கல்ல :P
முடிவில் சொல்லியிருப்பது சரியே ...
நட்பை பற்றிய உங்களுடைய நினைவுகள் அருமை.
நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல்,
“தினமும் பார்த்து, பேசி, சிரித்துமகிழவும், அழுகையைப் பகிரவும் நமக்கென்று ஒரு நட்பு”
இது எல்லோருக்கும் தேவை.
அழகிய பதிவு. பகிர்வுக்கு நன்றி.
//அதுக்குன்னே பெர்மணண்டா ஒரு(டிரை)வரை வச்சிருக்கதுனால, இதெல்லாம் நான் ஞாபகம் வச்சிருக்கதில்லை”//
ஜூப்பரப்பு :-))))))))
நல்ல பகிர்வு.
தோழியின் விஷயம் வருத்தமளிக்கிறது.:((((
நட்பு என்றுமே சிறந்தது.
நட்பூ
எனக்கு பழைய நினைவுகள அசை போட வைத்துட்டீங்க.
தேடி தேடி போய் பார்த்து கொண்டு இருந்தேன்,
ஆனால் இப்ப யாரையும் பார்க்க முடியாம போச்சு
இப்போதைக்கு வலை உலக நட்பூக்கள் அதிகம்
நட்பு - இதை சொல்லும் போதே வாய் மட்டும் அல்ல , மனதும் மணக்கிறது...
எதிர்பார்ப்பு என்பதை எல்லாம் தாண்டி இன்றும் சில நல்ல நட்புகள் இருக்கத் தான் செய்கின்றன ....
அஸ்ஸலாமு அலைக்கும்
நட்பின் நினைவுகளை அருமையா சொன்னீங்க
பகிர்வுக்கு நன்றி.
தமிழ் மனம் 3
நல்ல நண்பர்கள் அமைவதும் ஒரு வரம்தான். அந்த நட்பு நீடித்திருந்தால் அதைவிட மகிழ்வு தரும் விஷயம் வேறு ஏது? நட்பூ பற்றி நெகிழ்வா சொல்லியிருக்கீங்க. உங்கள் நட்பு என்றென்றும் இனிதே தொடரட்டும்.
////ரங்ஸோடு சண்டை வரும்போது அவரைத் திட்டுறதையும், ரெண்டு நாள்லயே ‘இந்திரன்சந்திரன்’னு புகழ்றதையும் ’ஆமாஆமா’ன்னு கேட்டுக்கிட ஒரு ஆள் வேணும். ////
ஹி..ஹி...ஹி...
//கமெண்ட் வழியா வைரஸும் அனுப்பித் தர்றாங்களாம் இலவசமா..அதனால உஷாராயிட்டம்ல..///
நேத்து எனக்கும் வந்துச்சு...... உஷாராயிட்டோம்ல ஹி...ஹி...ஹி...
ஊரைப்போல, நாட்டைப்போல தினமும் பார்த்து, பேசி, சிரித்துமகிழவும், அழுகையைப் பகிரவும் நமக்கென்று ஒரு நட்பு அருகில் இல்லையே என்ற வருத்தம் எனக்குண்டு. முக்கியமா, ரங்ஸோடு சண்டை வரும்போது அவரைத் திட்டுறதையும், ரெண்டு நாள்லயே ‘இந்திரன்சந்திரன்’னு புகழ்றதையும் ’ஆமாஆமா’ன்னு கேட்டுக்கிட ஒரு ஆள் வேணும். (பீர்பாலின் ‘நான் கத்திரிக்காயிடமா பணிபுரிகிறேன்’ டயலாக் ஞாபகம் வருதா?)
நட்பூ மலர்ந்ததையும்.. பிரிவதையும்.. ஏக்கத்தையும் நகைச்சுவையும் கலந்து சொன்ன விதம் ரசிக்க வைத்தது.
ஹுசைனம்மா அந்த நாள் ஞாபகம் அழகாக சுவை பட கூறி உள்ளீர்கள்.
//”எதிர்பார்ப்பு இல்லாத” என்பதற்கு அவரவர் விருப்பப்படி அர்த்தங்கள் கொள்ளலாம். குடும்பம், வேலை, உறவுகள், சுற்றம் என்று பல வட்டங்களில் சுழன்று கொண்டிருக்கும் பெண்களுக்கு நட்பு என்பது ஒரு இளைப்பாறுதலாக இருக்க வேண்டும். பல கட்டங்களில், நட்பா, உறவா என்று வரும்போது, வாய்ப்பே கொடுக்கப்படாமல் உறவுதான் என்று தீர்மானிக்க வேண்டிய சூழ்நிலைகளில், அதைப் புரிந்துகொள்ளும் நட்புகள்தான் பெண்கள் எதிர்பார்ப்பது.
// ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க ஹுசைனம்மா.
//ரங்ஸோடு சண்டை வரும்போது அவரைத் திட்டுறதையும், ரெண்டு நாள்லயே ‘இந்திரன்சந்திரன்’னு புகழ்றதையும் ’ஆமாஆமா’ன்னு கேட்டுக்கிட ஒரு ஆள் வேணும். // ;)))
உங்கள் தோழி நன்றாக இருப்பார்கள். என் பிரார்த்தனைகள்.
////ரங்ஸோடு சண்டை வரும்போது அவரைத் திட்டுறதையும், ரெண்டு நாள்லயே ‘இந்திரன்சந்திரன்’னு புகழ்றதையும் ’ஆமாஆமா’ன்னு கேட்டுக்கிட ஒரு ஆள் வேணும். ////
உங்களின் ரங்கஸ் அனைத்தும் அறிந்த அறிஞர், மேலே சொன்ன இரண்டையும் ஒன்றாகவே பார்ப்பார் போலும் (அல்லது அப்படி ஆக்கிவிட்டீர்களா?)
என் பள்ளி தோழியிடம் பல வருடங்கள் கழித்து சென்ற வாரம் பேசினேன். மகிழ்ச்சியை வார்த்தைகளில் வர்ணிக்க இயலவில்லை. அந்த நாளுக்கே சென்றது போல் இருந்தது. உங்கள் பகிர்வு இதை நினைவுபடுத்தியது
ம்ம்..நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் பழைய பள்ளித்தோழிகளை பார்த்து மறுபடியும் பள்ளிப்பருவத்தை அசை போட்டு இருக்கிரீர்கள்..
எனக்கு இது நாள் வரை இதனை போன்ற ஒரு வாய்ப்பு ஏனோ வாய்க்கவில்லை..நிறைய பெண்களைப்போலே நானும் ஏனோ என்னுடைய எந்த தோழியுடனும் நிரந்தர தொடர்பில் இல்லை :((
:(
நல்ல பகிர்வு சகோ.
//எனினும் ஆழிசூழ்உலகில் பிரச்னைகளால் சூழப்பட்ட மனிதர்களே (நான் உட்பட) அதிகம் காணப்படுகையில், புதிதாக நட்புக் கரம் நீட்டவும் தயக்கமாக இருக்கிறது. ’செயற்கரிய யாவுள’வாக என் நட்புகொள்பவருக்கு, ‘ஒல்லும்வாய் ஊன்றும் நிலையாகவும்’ இருக்க வேண்டுமே!! //
எனக்கு தமிழ் தான் தெரியும். யாரவது மேலே உள்ளதை தமிழில் மொழிபெயர்த்து தர முடியுமா? அப்படி தருவர்களுக்கு 100 திர்ஹம் மணியார்டரில் ஹுஸைனம்மாவால் அனுப்பி வைக்கப்படும்.
//“படிக்கும் காலத்தில் பொறுப்புகளேதுமில்லாச் சுதந்திரம் இருந்தது. எதைக் குறித்தும் கவலைப்பட வேண்டியிருக்கவில்லை. அதனால் எதிர்பார்ப்புகளற்ற நட்பு கொள்ள முடிந்தது. அதனால்தான் நண்பர்கள் என்று வரும்போது நம் சிறுவயது நட்புகளையே நாம் அதிகம் நினைத்து ஏங்குகிறோமோ?” //
மிகச் சரியான கருத்து ஹுஸைனம்மா! கவலைகள், வாழ்க்கையின் தாக்கங்கள் தெரியாத வயது என்பதால்தான் எல்லோரது மனதிலும் சின்ன வயது நட்பின் சந்தோஷமான தருணங்கள் அப்படியே பசுமையாக இருக்கிறது!
பாட்டே இருக்கிறதே. ' அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, இந்த நாள் அன்று போல இன்பமாய் இல்லையே!" என்று!!
நட்பைப்பற்றியும் நண்பர்கள்(தோழிகள்) பற்றியும் எழுதப்பட்டுள்ள மிக அழகான பதிவிற்கு 'நட்பூ' என்ற தலைப்பு மிக அருமை.
உங்கள் தோழியின் நிலையில் அதிர்ச்சி அடைய ஏதுமில்லை. பெண்கள் கலகலப்பானவர்களாக இருந்தால் இதுதான் கதி. ஒன்று வாழ்கையை காப்பாற்றிக்கொள்ள திருமணத்துக்கு பின் அமைதியாகி விடுவார்கள்.(அப்பப்பா! கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி பேசுவ, இப்ப எல்லாம் அப்படியே அடங்கிருச்சே!?, என்ற நட்பு மற்றும் உறவுகளின் வியப்புகள் வேறு) இல்லையென்றால் தன் சுயத்தை தக்கவைத்து கொண்டு வாழ்கையை இழந்து விடுகிறார்கள். ஆனால், கலகலப்பான பேர்வழிகள் நிச்சயம் எந்த சோகத்தில் இருந்தும் மீண்டு விடுவார்கள், மற்றவர்களையும் மீட்டெடுப்பார்கள்.
ஃபோட்டோவில் இரண்டு பேரும் எங்க போறாங்க? cute photo
/ஒருமாதக் குழந்தையோடு அவளை வீட்டைவிட்டு வெளியே தள்ளிவிட்ட கதைகேட்டுக் கலங்கிப் போனேன்./ நினச்சுப் பார்க்கவே ரொம்ப கஷ்டமாயிருக்கு :(( . a scene many have seen only in films.
/’செயற்கரிய யாவுள’வாக என் நட்புகொள்பவருக்கு, ‘ஒல்லும்வாய் ஊன்றும் நிலையாகவும்’ இருக்க வேண்டுமே!! / பழைய நட்பை பற்றி யோசிச்ச நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பழைய காலத்துக்கு போயிட்டிங்களோ?...வள்ளுவர் குறள் மாதிரி ஏதோ சொல்றீங்க... என்ன சொல்றீங்கன்னு தான் புரியல:(
சிறுவயது நட்புக்கள் தொடர்ந்தால் இதைவிட மகிழ்ச்சி வேறில்லை.
நிஜாம் பாய் - வாங்க, ரொம்ப நாளா ஆளக் காணோம்?
ஸ்ரீராம் சார் - //அப்போது நமக்கு நெருக்கமாக வாய்த்த நண்பர்கள் தவிர மற்றவர்களில் சிலரை இப்போது சந்தித்தாலும் கூட தூய நட்பு எதிர்பார்க்க முடியாது.//
ரொம்ப கரெக்டுங்க. நம் கவனம் நட்பைவிட்டு மற்றவைகளில்தான் இருக்கும்.
//நட்பில் ரசிக்கப் படும் விஷயம் உறவுகளில் ரசிக்கப் படுவதில்லை //
அதனால்தானே நட்பு அவசியமாகிறது, இல்லையா?
ஜெய்லானி - நன்றிங்க.
அவர்கள் உண்மைகள் - ஆமாங்க, ஊர்ல தலையீடு அதிகம், ஆனா, வெளிநாடுகளில் தலைகீழ். இருப்பினும், அங்கேயும் அவளை நட்புகள்தான் ஓரளவு தாங்கிப் பிடிக்கிறார்கள்.
வெங்கட் - நன்றிங்க.
மோகன் குமார் - //ரொம்ப சீக்கிரம் அவர்களுக்குள் சண்டை வந்து விடும்// வக்கீல் சார், இது ஓவர்!! எங்களுக்குத்தான் சண்டை போடன்னே ஒரு ஆத்மா இருக்கே!! :-)))))
ஜமால் - //நீங்க ரொம்ப நல்லவங்கல்ல// ஆமா, பின்னே? ஒருத்தருக்கு வாழ்க்கை கொடுத்திருக்கோமில்ல? :-)))
ராம்வி - நன்றிங்க.
அமைதிக்கா - ஹி.. ஹி.. நம்ம மூளையோட எனர்ஜியை ஏன் வேஸ்ட் பண்ணனும்னுதான்.. :-)))
கொவை2தில்லி - நன்றிங்க.
ஜலீலாக்கா - உங்க நட்பு நினைவுகளையும் எழுதுங்களேன்க்கா.
மம் - எதிர்பார்ப்புகள் இல்லாத நட்புகள் இருக்கும், நிச்சயமாக. ஆனால், கொஞ்சம் அரிதாக. நன்றிங்க உங்க கருத்துக்கு.
ஆயிஷாக்கா - வ அலைக்கும் ஸலாம். நன்றீக்கா.
கீதா - நண்றிங்க கருத்துரைக்கும், வாழ்த்துக்கும்.
ஆமினா - உங்க தளத்துலயா வைரஸ்? நீங்க இருக்கும்போதா?? :-)))) சரியாகிடுச்சா?
ரிஷபன் சார் - தொடர்ந்து வாசிப்பது மகிழ்ச்சி தருகிறது. நன்றி.
ஸாதிகாக்கா - ஆமாக்கா, இப்ப ஃப்ரண்ட்ஸுக்கு முன்னுரிமை கொடுக்க பல சம்யங்களில் முடிவதில்லை. சொன்னபோது நட்புகள் புரிந்துகொள்கிறார்கள், அவர்களுக்கு இந்த நிலை இருந்திருக்கும் அல்லவா?
இமா - பிரார்த்தனைக்கு நன்றிகள் இமா.
நாசர் மதுக்கூர் - ஆஹா, சந்தடி சாக்குல ஒரு திரியக் கொளுத்தி உடுறீங்களே!! :-)))))
அப். தங்க்ஸ் - நானும் நேத்து ஒரு பழைய தோழியை ஃபேஸ்புக் வழியாக் கண்டுபுடிச்சு, இங்கருந்து ஃபோன்ல பேசினேன் (ரங்ஸ் முறைப்பையும் பொருட்படுத்தாம!!). என்னா சந்தோஷமாருந்துது!!
முகுந்த் அம்மா- எனக்கும் ஒன்றிரண்டு பேர்தான் தொடர்பில் இருக்கிறார்கள் முகுந்த் அம்மா. தேடிப் பாருங்க கிடைப்பாங்க. இருந்தாலும், to be frank, இப்போதிருக்கும் வாழ்க்கை முறையில் நண்பர்களை ரொம்பக் கொண்டாட முடியதில்லை. அவ்வப்போது ஃபோனில் பேசிக் கொள்கிறோம், அவ்வளவே. நீங்க வருத்தப்படுமளவுக்கு இல்லைன்னு சொல்ல வர்றேன். வலை நட்புகள் கிடைத்திருக்குமே?
அன்னு - ம்ம்..
அபுநிஹான் - ஹி.. ஹி.. அதுவும் தமிழுதான். அப்பப்போ இப்படி எலக்கியத்துலருந்து எதாவது எடுத்துப் போட்டாத்தான் நம்மள நாலுபேர் இப்படி பெரீய்ய்ய ஆளுன்னு நினப்பாங்க.
என்னாது, 100 திர்ஹமா? நானா? அதுக்கு நானே அர்த்தம் சொல்லிடுறேன்!!
அது குறள்ங்க, ரெண்டு குறள்லருந்து பிச்சி எடுத்துப் போட்டது.
//’செயற்கரிய யாவுள’//
நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை.
//‘ஒல்லும்வாய் ஊன்றும் நிலையாகவும்’//
இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது.
இப்ப வாசிச்சிப் பாருங்க, புரியுதா? :-))))
மனோ அக்கா - ஆமாக்கா, நட்பு என்றதுமே, எதைவிடவும் முதலில் ஞாபகம் வருவது, சிலேட்டு, பலப்பம், தேன்மிட்டாய் காலம்தானே!!
வியபதி - நன்றிங்க.
தானைத் தலைவி - நீங்க சொல்றது ரொம்பக் கரெக்டுங்க. கல்யாணத்துக்கப்புறம் கிட்டத்தட்ட ஆப்போஸிட்டாத்தான் மாற வேண்டியதாருக்கு. சிலர் மகிழ்ச்சியுடன், சிலர் வேறு வழியில்லாமல். இவளும் கலகலப்பானவள் என்பதால், மீண்டுவிட்டாள். என்றாலும், எனக்கு, சாப்ளின் சொன்னதுதான் நினைவுக்கு வரும், “மழையில் நனைவது எனக்குப் பிடிக்கும். மழையில் நின்று அழுதால் யாருக்கும் தெரியாது!!” :-((((
என்றென்றும் 16 - //cute photo//
அது என் சின்னவனும், தங்கை மகளும், என் வீட்டு முன்னே. வெளியே செல்லலாம் என டாக்ஸி பிடிக்க நடந்தபோது, முன்னே சென்றவர்களைப் பார்க்க அழகாய் இருந்தது.
//வள்ளுவர் குறள் மாதிரி ஏதோ// - அதேதான். மேலே படிங்க.
மாதேவி - நன்றிங்க.
Post a Comment