Pages

வியப்பும் திகைப்பும்





தெருவில் நின்று விளையாடிக் கொண்டிருக்கும்போது தூரத்தில் அவன்(ர்) வருவது தெரிந்தது. உடனே திண்ணையில் ஏறி நின்று கொண்டேன். பயம் இல்லை... ஆனாலும் ஏனோ அவனைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு திடுக்கிடல் மற்றும் வேடிக்கை பார்க்கும் மனோபாவமும்கூட வரும்.

மெதுவாக அடிமேல் அடி எடுத்து வைத்து நடந்து வந்து கொண்டிருந்தான். அப்போதெல்லாம் ‘அடிப்பிரதட்சணம்’ என்றால் என்னவென்று தெரியாது. இப்போது புரிகிறது, அதுபோல்தான் அவன் மெதுவாக நடந்துவந்துகொண்டிருந்தான். யாரும் அவன் வழியில் குறுக்கிட மாட்டார்கள். தெரியாமல் வந்துவிட்டால் அவ்வளவுதான் வசைமாறிப் பொழியத் தொடங்குவான்!! அதற்குப் பயந்தே எல்லாரும் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளைக் கூட இழுத்து வைத்துக் கொள்வார்கள்.

பக்கத்து வீட்டுத் திண்ணையில் பீடி சுற்றிக்கொண்டிருக்கும் பெண்களிடையே  இப்போதே முணுமுணுப்பு தொடங்கிவிட்டது. ”எளா, ஜெய்லானி வர்றான். துட்டு வச்சிருக்கியா?” “போளா, துட்டுக்கு எங்கப் போவ? கொள்ளையில போவான் வாயில என்னத்தல்லாம் கேக்கணுமோ?”

ஜெய்லானி... வட்டிக்கு கடன் கொடுப்பவன். ஆள் பார்க்க ஒல்லியாக, குள்ளமாக, லேசாகத் தட்டினாலே ஒடிந்துவிடுபவன் போலத்தான் இருப்பான். அதற்கெல்லாம் சேர்த்து வாய் பெரிது. கண் பார்க்க நார்மலாக இருப்பது போலத் தெரிந்தாலும், பார்வை கிடையாது!! அதனால்தான், அடிமேல் அடி வைத்து நடப்பது - ஒருபடத்தில் மேஜர் சுந்தர்ராஜன் நடப்பாரே, அதுபோல. காது படுஷார்ப். எண்ணியெண்ணி நடந்தே, யார் வீடு எங்கு என்று துல்லியமாக அறிந்து, ஆளையும் இருக்கிறாரா இல்லையா என்றும் கண்டுபிடித்துவிடுவான்.

நான் மிகவும் ஆச்சர்யப்படுவது, கடன் வாங்கியவர் அங்கு இருந்துகொண்டே இல்லையென்று சொன்னாலும், அங்குதான் இருக்கிறார் என்று கண்டுபிடிப்பது எப்படி என்றுதான்!! அவரிடமிருந்து பணத்தை வாங்கிவிட்டு அல்லது வசவுகளை வாரிக் கொடுத்துவிட்டுத்தான் செல்வான். எங்க ஊர் கெட்டவார்த்தைகள் பலவற்றிற்கு எனக்கு இந்த ஜெய்லானிதான் அகராதி.

பணம் எண்ணித் தருவதிலும், கணக்குப் புத்தகமோ, சுவற்றில் கோடுகளோ எதுவும் இல்லாமல் கணக்கைச் சரியாகச் சொல்வதிலும் ... அது கால்குலேட்டர்கள் இல்லாக் காலம்தான் என்றாலும்,  எங்கேயும் எழுதியும் வைக்காமல் எப்படி இப்படி என்று அசந்துபோனதுண்டு.  ரூபாய் நோட்டுகளையும் கைகளால் தடவித்தடவியே சரியாகச் சொல்வதையும் விழிவிரிய வேடிக்கைப் பார்த்ததும்...

சொல்லவும் வேண்டுமா, பெரும்பாலும் பெண்கள்தான் இவனது ‘கஸ்டமர்கள்’!!  வசவுகளை அள்ளிப் பொழிவதில் ஆண்-பெண் சமத்துவம் பேணுபவன். யாருமே அவனைத் தட்டிக் கேட்டதில்லை. கேட்பவர் பரம்பரையும் வீதிக்கு வருமே!!

இவன்(ர்)தான் எனக்கு நேரில் அறிமுகமான முதல் பார்வையற்றவர். காது கேளாதவர்கள், நடக்க இயலாதவர்கள் என்று ஒன்றிரண்டு பேரை அறிந்திருந்தாலும், அவை பார்வையின்மையைப் போல அனுதாபப்பட வைத்ததில்லை. ஆனால், ஜெய்லானி மீது யாருக்குமே சொட்டுகூட அனுதாபம் இருந்ததில்லை.

பின்னர், ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பார்வையற்ற தோழிகள் நிறையப் பேர் கூடப்படித்தனர். அவர்கள் அனைவரும் ஒன்றாக ஒரு ஆதரவு இல்லத்தில் தங்கியிருப்பவர்கள். எந்தப் பாகுபாடுமில்லாமல் அனைவருமே அவர்களோடு நன்கு நட்புடன் பழகுவோம். பள்ளிப் புத்தகத்தின் பிரதி,  பிரெய்ல் புத்தகமாய் ஒன்றே ஒன்று மட்டுமே உண்டு என்பதால், ஷேர் செய்துதான் படிக்க வேண்டும். ஆகையால், பள்ளியில் இருக்கும்போது யாராவது ஒருவர் எல்லாருக்குமாய் வாசித்துக் காட்டுவோம்.

ஆசிரியர்களும் பாடத்தை நடத்தும்போது, அவர்கள் உள்வாங்கிகொள்ளவேண்டுமென்று நிதானமாகத்தான் நடத்துவார்கள். அதுவும், கணக்கு ஆசிரியை, ஒவ்வொரு ஸ்டெப்பையும் மறுபடி மறுபடி சொல்லி.. எப்படித்தான் பொறுமையாய் செய்தார்களோ என்று இன்று நினைக்கும்போது மலைப்பாய் இருக்கிறது. ஆனால், எவ்வளவு நன்றாகப் படித்தாலும் அவர்களால் கணக்குப் பாடத்தில் 100 மதிப்பெண் பெற முடியாது - ஜியோமெட்ரி வரைய முடியாதே!! அதிலிருந்து விலக்கும் கிடையாது. போலவே அறிவியலில் படங்கள் வரைவது, வரலாறு-புவியியலில் மேப்களுக்கான மதிப்பெண்களும் கிடைக்காது.

ஒருமுறை,  அவர்களின் பொறுப்பாசிரியர், இன்னொரு வகுப்பில் உள்ள பார்வையில்லாத மாணவியை அழைத்து வரச் சொல்லி என்னை அனுப்பினார். நான் அந்த வகுப்பில் இருந்த ஆசிரியையிடம், “அந்த ப்ளைண்ட் கேர்ள் மகாலக்ஷ்மியை டீச்சர்...” என்று ஆரம்பிக்க, அவர் உடனே, “அதான் மகாலக்ஷ்மின்னு பேர் இருக்கே,  ‘ப்ளைண்ட் கேர்ள்’னு அடைமொழி வேற ஏன்?” என்று கேட்க, என் தவறுணர்ந்தேன்.

பள்ளியில் பாடத்தைக் கவனித்ததைவிட, அவர்களைத்தான் அதிகம் கவனித்தேன். கண்ணில்லாத குறை, செவியில் நிறையாக இருக்கும். துல்லியமான கவனிக்கும் சக்தி - ஒருவரின் நடையை, வாசனைகளை வைத்தே அவர் யாரென்று அநாயாசமாகக் கண்டுபிடித்துவிடுவார்கள்!!  அவர்களிடம் எப்படிப் படிப்பார்கள், துவைப்பார்கள் என்று எப்போதும் கேள்விகளாய் கேட்டுக் கொண்டிருப்பேன். இப்போது யோசித்துப் பார்த்தால், நான் தான் அவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தேனே தவிர, அவர்கள் என்னிடம் இதுபோல் கேள்விகள் எழுப்பியதில்லை!!

பிறகு பள்ளி மாறியதில், அவர்களின் தொடர்பு விட்டுப் போயிற்று. பார்வையற்றவர்களுக்கான தற்காலத் தொழில்நுட்பங்களைக் கேள்விப்படும்போதெல்லாம் அவர்களின் ஞாபகம் வந்துபோகும்.  பின்னர் ரொம்ப நாள் கழித்துதான், ஹெலன் கெல்லர் பற்றி அறிந்தேன். கண் இல்லையென்றால், காது கண்ணுக்குக் கண்ணாகும். ஆனால் இவருக்கோ கண்ணோடு காதும் செயலிழந்தது என்றறிந்தபோது எப்படி வாழ்ந்தார் என்று அதிர்ச்சி. அவருக்கு ஒரு ஆசிரியை தொடுமொழி மூலம் பயிற்றுவித்தார் என்று மட்டும் அறிந்திருந்தேன்.

சென்ற வாரம், கீதமஞ்சரியின் பதிவில் ஹெலன் கெல்லரின் வரலாறும், அவரை அவரின் ஆசிரியர் பயிற்றுவித்ததைக் குறித்த திரைப்படமான Miracle worker-ஐயும் தந்திருந்தார். உடனே பார்த்தேன். Amazing!!

ஹெலன்  &  ஆன் சல்லிவன்
ஆன் சல்லிவன் என்ற அந்த ஆசிரியையின் திறமை அபாரம்!! செல்லக் குழந்தையாக, எந்தக் கட்டுப்பாடுமில்லாமல் வளர்க்கப் பட்டிருக்கும் ஹெலன் கெல்லரைப் பார்த்துவிட்டு, “அவளை ஒரு செல்லப் பிராணிபோல வளர்த்திருக்கிறீர்கள்” என்று தைரியமாக அவளின் பணக்காரப் பெற்றோரைச் சாடுவதும், பின் அவளைத் தன் முழு கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதும், ஹெலன் முதலில் அவரை எதிர்த்தாலும், பின் படிப்படியாகப் புதிய விஷயங்கள் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் ஆசிரியையோடு ஒன்றுவதும்... நீங்களே பாருங்கள். ஒரு ஆசிரியைக்கான அளவுகோல் அவரிடம்.

ஒரு காப்பகத்தில் வளர்ந்த ஆன் சல்லிவனின் மனதைரியமும், உறுதியும்தான், ஹெலனை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்று வைராக்கியம் கொள்ள வைக்கிறது. ஹெலனின் வளர்ச்சியில் ஆன் சல்லிவனின் பங்கு மிக மிகப் பெரிது. 49 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக இணைந்து இருந்திருக்கின்றார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். காது கேளாத ஹெலன் பேசவும் ”கற்றுக்கொண்டு”, பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்!! பல்கலைப் பட்டம் பெற்றுள்ளார், 39 நாடுகள் சுற்றியுள்ளார்.12 புத்தகங்கள் எழுதியுள்ளார்.

Documentary about Helen & Anne Sullivan - இதில் ஹெலன் எப்படிப் பேசப் படித்தார் என்று ஆன் சல்லிவன் விளக்குகிறார். ஹெலன் பேச்சையும் கேட்கலாம். கண்டிப்பாகப் பாருங்கள்.

சிலரைப் பார்த்து இறைவனின் படைப்பை வியப்பதுண்டு. சிலரைப் பார்த்து திகைப்பதுண்டு, எதற்கு இப்படியொரு சோதனை என்று. ஹெலன் கெல்லரையும் அப்படியே. ஆனால், அந்த அவரின் படைப்பினால்தான் அவர் எத்தனை பேருக்கு தன்னம்பிக்கை ஊற்றாக இரு(ந்திரு)க்கிறார்!! சாதாரண மனிதரால் அது சாத்தியமா? இதையேதான் 88 வயது வரை வாழ்ந்த ஹெலனும் கூறுகிறார்:

“இந்த இருண்ட அமைதியான என் வாழ்வை கடவுள் ஏதோவொரு திட்டத்தோடு தான் படைத்திருக்கின்றார். அதை என்றாவது ஒரு நாள் நான் உணர்வேன். அப்போது நான் அது குறித்து மகிழ்வேன்”
- ஹெலன் கெல்லர்
ஹெலனின் கையெழுத்து!!
 

Post Comment

19 comments:

ஜெய்லானி said...

ஏன்னுங்கோ... லேபில் அனுபவம்ன்னு வேற போட்டிருக்கு, எனக்கு இப்பவே ...அவ்வ்வ்வ் :-)

வெங்கட் நாகராஜ் said...

அருமையான பகிர்வு....

சிராஜ் said...

சகோ ஹுசைனம்மா,

வழக்கம் போல் அட்டகாசமான பதிவு. கண் பார்வை, காது கேட்காமல், வாய் பேசாமல் இருக்கும் வாழ்க்கையை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஆனால் உண்மையில் வாழும் அவர்கள்?????? நிச்சயம் அவர்கள் பட்ட கஷ்டங்களுக்கான பலன் அவர்கள் இறைவனிடத்தில் உள்ளது.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//சிலரைப் பார்த்து இறைவனின் படைப்பை வியப்பதுண்டு. சிலரைப் பார்த்து திகைப்பதுண்டு, எதற்கு இப்படியொரு சோதனை என்று. ஹெலன் கெல்லரையும் அப்படியே. ஆனால், அந்த அவரின் படைப்பினால்தான் அவர் எத்தனை பேருக்கு தன்னம்பிக்கை ஊற்றாக இரு(ந்திரு)க்கிறார்!!//
உண்மை!உண்மை!

சிராஜ் said...

நாத்திகர்கள் பலர் மிக நல்லவர்கள்... இது போன்று கண் தெரியாமல், காது கேளாமல் மற்றும் ஊனமுற்று இருக்கும் மனிதர்களை பார்த்து கோபம் கொண்டு, இது போன்றவர்களை படைக்கும் கடவுள் தேவை இல்லை என்ற முடிவிற்க்கு வந்துவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் சற்று யோசித்தால், இதே காரணத்திற்காக கடவுளை கடுமையாக நம்புவார்கள். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?? ஆம் சகோஸ்... கடவுள் இல்லை என்று கூறுகிறீர்களே, கடவுள் இருந்தால் இவர்கள் இங்கு படும் கஷ்டங்களுக்கு பிரதிபலனாக சொர்க்கம் கொடுப்பார். நீங்கள் கடவுள் இல்லை என்கிறீர்களே??? அப்படி என்றால் மறுமை வாழ்க்கை இல்லை. அப்படி என்றால் இவர்கள் பட்ட கஷ்டம் விழலுக்கு இறைத்த நீர் தானா??? அப்ப இந்த உலகில் ஊனமில்லாதவர்கள் அதிர்ஷடசாலிகள் போலும், ஊனமுற்றவர்கள் பாவிகள் போன்றும் அல்லவா எண்ணத் தோன்றுகிறது??? ஆகவே நாத்திக நண்பர்களே சற்றே இந்த கோணத்தில் சிந்தித்து பாருங்கள்..உண்மை உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கும். நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்த இறைவன் போதுமானவன்...

Mahi said...

நல்ல பதிவு ஹூஸைனம்மா! எனக்கும் வியப்பும் திகைப்புமாகத்தான் இருக்கு. ஒவ்வொரு உயிரின் படைப்பிலும் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.

Anisha Yunus said...

மாஷா அல்லாஹ் அக்கா,

அருமையான கருவை கையாண்டுள்ளீர்கள்.

//இப்போது யோசித்துப் பார்த்தால், நான் தான் அவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தேனே தவிர, அவர்கள் என்னிடம் இதுபோல் கேள்விகள் எழுப்பியதில்லை!!// இப்படிப்பட்டவர்களிடம் நான் கேள்விகள் கேட்டதில்லை என்றாலும், இதே முறையில் பலமுறை நான் சிந்தித்துள்ளேன், அவர்களுக்கு ஏன் இப்படி கேட்கத் தோணுவதில்லை, எப்படி சாதாரணமாக இந்த உலகையும் அதனுள் வாழ்வதையும் எடுத்துக் கொள்கிறார்கள் என. இன்னும் பிரமிப்புதான். இப்படி இருந்த ஒருவர் இஸ்லாத்திற்கு வந்த ஒரு நிகழ்வையும் பதிவாக்க வேண்டும் என்றெண்ணியுள்ளேன். ஆனால் இன்னும் அவரிடமிருந்து சில பதில்களுக்காக வெயிட்டிங்க் :(

ஹெலென் கெல்லரின் வாழ்வையும் அந்தப் படத்தையும் கட்டாயம் படிக்க வேண்டும், பார்க்க வேண்டும், செய்கிறேன் இன்ஷா அல்லாஹ். அதே போன்ற ஒரு கருவில்தான் "Black" திரைப்படமும் செய்திருந்தார்கள் (ஹிந்தி)....ஆனால் கமர்ஷியல் ரீதியாக செயல்பட வைக்க சில தேவையற்றவையும் சேர்த்து. எனினும் மிக வித்தியாசமான அந்தப் படம், அப்படி எடுக்கப்பட்டமைக்காகவே ஒரு படி மேலேதான்.

என்னவோ போங்க.... தலைப்பு, கட்டுரை எல்லாம் சூப்பர் என்றாலும் ஜெய்லானி பாய் மேல என்ன கோபம்னுதான் விளங்கல :)))))))))

ஸ்ரீராம். said...

நல்லதொரு பகிர்வு. ஆண் (!) சல்லிவனின் பாத்திரத்தில் அமிதாப் நடித்து ஒரு படம் வந்தது. கண் தெரியாத, காத்து கேட்காத, வாய் பேச முடியாத ரவீனாவைப் பழக்குவார் என்று ஞாபகம். பார்த்ததில்லை என்றால் முடிந்தால் பாருங்கள். படத்தின் பெயர்தான் ஞாபகம் வரமாட்டேன் என்கிறது!

ஸாதிகா said...

தலைப்புக்கேற்றபடி கட்டுரையை படித்ததும் அதுதான் ஏற்பட்டது.கூடவே ரெண்டாவது கமண்டை படித்ததும் சிரிப்பு சிரிப்பா வருது:(

சாந்தி மாரியப்பன் said...

ஆச்சரியப்படுத்தும் மனிதர்கள்..

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஹுசைனம்மா.
இந்தப் படத்தை நான் டிசிஎம் இல் பார்த்திருக்கிறேன்.
நீங்கள் சொல்வது போல் அமேஸிங்.
அதுவும் ஹெலன் படுத்தும் பாடும்
அதை சாமர்த்தியமாக ஆன் கையாள்வதும். இந்த மாதிரித் தியாகம் எங்கும் பார்க்க முடியாது. அருமையான பதிவு மா.

எல் கே said...

namma jailaniyaa ippadiyaa

ஹுஸைனம்மா said...

//எல் கே said...
namma jailaniyaa ippadiyaa//

அவ்வ்வ்வ்... உலகத்துல ஒரே ஒரு ஜெய்லானிதான் உண்டா எல்.கே.??

இது வேர்ற ஜெய்லானி... :-))))

ராமலக்ஷ்மி said...

Miracle Worker பார்க்க முயன்றிடுகிறேன். நல்ல பகிர்வு ஹுஸைனம்மா. ஜெய்லானியை அப்படியே கண்முன் கொண்டு வந்து விட்டது உங்கள் எழுத்து.

pudugaithendral said...

ஆஷிஷின் +1 வகுப்பில் இரண்ட்டு மாணவர்கள். ஒருவருக்கு வாய்பேசமுடியாது, காது கேளாது. மற்றொருவருக்கோ கண் தெரியாது. ஆனால் அவர்கள் கற்கும் வேகம், அவர்களின் திறமை பார்த்து வியப்பதாக இருக்கிறதாம்.

“ நமக்கெல்லாம் கண்பார்வை இருப்பதால நிறைய்ய பார்க்கிறோம். அதனால குழம்பறோம். ஆனா அவங்களுக்கு குழப்பம் இல்லாம தெளிவா இருக்காங்க” இது ஆஷிஷின் கமெண்ட்.

சசிகலா said...

இந்த இருண்ட அமைதியான என் வாழ்வை கடவுள் ஏதோவொரு திட்டத்தோடு தான் படைத்திருக்கின்றார். அதை என்றாவது ஒரு நாள் நான் உணர்வேன். அப்போது நான் அது குறித்து மகிழ்வேன்”//ஒவ்வொருவரும் உணர்ந்தால் நன்றாகத்தான் இருக்கும் . நல்ல பகிர்வுங்க .

கீதமஞ்சரி said...

ஹெலன் கெல்லர் படத்தைப் பார்த்தோடு, பார்வையற்றவர்களுடனான உங்கள் அனுபவங்களையும், எண்ண ஓட்டங்களையும் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி ஹூஸைனம்மா. வகுப்பில் அந்த ப்ளைண்ட் கேர்ள் என்று குறிப்பிட்டதைக் கண்டித்த ஆசிரியரின் மேலும், கணிதத்தைப் பலமுறை சொல்லிப் புரியவைத்த ஆசிரியரின் மேலும் மதிப்பு மிகுகிறது. ஜெய்லானி என்பவர் பற்றிய தகவல்கள் மனம் கனக்கச் செய்கின்றன. அவருடைய கடுமையான நடவடிக்கைகளின் பின்னணியில் நிச்சயமாய் ஒன்று அல்லது பல காரணங்கள், ஏமாற்றங்கள், துரோகங்கள் எவையேனும் இருக்கக்கூடும். மனந்தொட்ட பதிவு.

துபாய் ராஜா said...

அருமையான பகிர்வு.

vanathy said...

நானும் சின்ன வயதில் ஹெலன் ஹெல்லர் வாழ்க்கை வரலாறு படித்திருக்கிறேன். எப்படி இவ்வாறு இருந்தார்கள் என்று பிரமிப்பாக இருக்கு.
ஜெய்லானி சூப்பர் ஆளா இருக்கிறார்.
என்ன இருந்தாலும் எங்கள் தல ஜெய்லானியின் ஞாபகம் வருவதை தடுக்க முடியவில்லை.