Pages

மரியாதையாப் பேசுங்க..





கிராமங்களில் சித்தப்பு, வா, போலாம்; யத்தே, எங்கிட்டுப் போற; தாத்தா, கஞ்சி குடிச்சிட்டியா என்று, வயசானவங்களையும் சின்னவங்க நீ, வா, போன்னு பேசறதைப் பாத்திருக்கோம். 

சிலர்,  தங்களிடம் பணிபுரியும் முதியவர்களை நீர் வாரும், இரும், பாரும் என்று பேசக் கேட்டிருக்கிறோம். எங்கள் வீட்டில் வேலைபார்த்த உழவர்களும் வீட்டினரை  இதேபோல, ”ஏயம்மா, இங்கன வாரும்; இதை எடுத்துத் தாரும்” என்றுதான் விளிப்பார்கள். எங்கள் ஊருக்கு மிகவும் அன்னியமான பேச்சு வழக்கு என்பதால் அதையெல்லாம் ரசித்துக் கேட்டதுண்டு.

சினிமாப் படங்கள் மட்டுமே ஒரே பொழுதுபோக்காக  மிகைத்துப் பேசப்பட்ட அந்த காலகட்டத்தில், வீட்டிற்கொரு ‘ஜிவாஜி’, ‘ரஜினி’, கமலாசன்’ அவதாரங்கள் உண்டு. ஆங்காங்கு திண்ணைகளில், வயதுபேதம் இல்லாமல் “ரஜினி என்னா மாதிரி ஃபைட்டு பண்ணான் தெரியுமா?” “கமலாசன் ஆடற மாதிரி எவனுக்குலே ஆட வரும். அவந்தாம்லே டாப்பு” என்ற பேச்சுகள் நடக்கும்.

நானும் கிராமத்தில் என் அம்மா வீட்டில், உறவினர்கள் சூழ சிறுவயதில் வளர்ந்தவள்;  மூத்தப் பேத்தி என்பதால் செல்லம் அதிகம். அம்மா தன் உடன்பிறப்புகளை எப்படி அழைப்பாரோ அதேபோலவே நானும் அழைத்து உரையாடுவேன். அம்மாவின் அண்ணன் எனக்கும் “காக்கா”தான்!! அம்மாவின் தம்பி, தங்கைகள் எல்லாரும் எனக்கும் அப்படியே என்பதுபோல, பெயர் சொல்லியே அழைத்து வந்தேன்.

நான் ஒரே பேத்தியாக, தனிக்காட்டு ராணியாக இருந்தவரை இது யாருக்கும் பெரிய தவறாகத் தெரியவில்லை. பெரிய சாச்சிகளுக்கும் பிள்ளைங்க பிறந்து, வளந்து, அந்த நண்டு-சிண்டுகளெல்லாம் அழகா மரியாதையா “சாச்சி”, “மாமா”ன்னு கூப்பிட ஆரம்பிச்சதும் என் மவுசு கொஞ்சமா குறைய ஆரம்பிச்சுது!! ”சின்னப் புள்ளையே சாச்சினு கூப்பிடுது, நீயென்ன பேர் சொல்லிக் கூப்பிடுறே”ன்னு எப்பவாவது யாராவது கேட்டாலும்,  அதையெல்லாம் பெரிசா எடுத்துக்கிறதில்ல. ஏன்னா, நான்தான் அப்பவே ஒரு காதுல ‘entry' போர்டும்,  இன்னொன்னுல 'exit' போர்டும் மாட்டி வச்சிருந்தேனே!!

மேலும்,  தாய்மாமா, சாச்சிகளில் என் வயதையொத்தவர்களும் இருந்ததால், எல்லாரையுமே ஒருமையில் அழைப்பதில் பெரிய தவறொண்ணும் இருக்கிறதாப் படலை எனக்கு. அவங்களும் யாரும் எதுவும் அப்ப சொல்லலை.

ன் அம்மாவும் கண்டிக்கலையான்னு கேப்பீங்க. கிராமங்களில் ஆண்களுடன் பேசும்போது “லே” என்கிற மரியாதையான விகுதி சேர்ப்பதுபோல, எங்க ஊரில், பெண்களுக்கு “ளா” என்கிற அதிவிசேஷ விகுதி உண்டு #சமத்துவம்!!  அதுல என்ன ஒரு வித்தியாசம்னா, (மகன், தம்பி போன்ற) தங்களைவிட இளையவயது ஆண்களுக்கு  மட்டுமே இந்த “லே” விகுதி பொருந்தி வரும். ஆனால், பெண்களுக்கோ, வயது வித்தியாசமே இல்லாமல் (“பெரிம்மா, இங்க வாயேம்ளா”) எல்லாருமே சர்வசாதாரணமாக “ளா” போட்டு அழைக்கப்படுவர். (மாமியார்கள் மட்டும் விதிவிலக்கு... க்ர்ர்ர்... ) நான் அந்தமாதிரி யாரையும் மரியாதைக் குறைவாகப்  பேசாமல் பழக்கியது என் அம்மாதான். அப்போ அதுவே பெரிய விஷயம்.

அப்புறம், மாமாக்களுக்கு கல்யாணம் ஆகி, மாமிகள் வந்தாங்க. இப்ப நானும் காலேஜ் ஸ்டூடண்டாகி, ‘ஒரு பொறுப்புள்ள குடிமகள்’ ரேஞ்சுக்கு வளந்து, பெண்ணுரிமைல்லாம் பேச ஆரம்பிச்சிட்டதால, மாமிகளை (மட்டுமாவது) மரியாதையா ”வாங்க-போங்க மாமி”ன்னு சொல்லியாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானேன். இல்லைன்னா, “படிச்ச புள்ளையளே இப்பிடித்தான்”னு ஒட்டுமொத்த பெண் படிப்பாளிகளோட மரியாதையும்  காத்துல பறந்துடுமே!!

என் சாச்சிகளும் ”ஏய், நாங்கல்லாம் இப்ப நாத்தனார் ஆகிட்டோம்.  இன்னுங்கொஞ்ச நாளில் மாமியார் ஆகப்போறோம். இனிமயும் பேர் சொல்லி கூப்பிட்டே...”னு என்னை மிரட்டவே ஆரம்பிச்சுட்டாங்க!! அப்பத்தான் சாச்சிகிட்டே சொன்னேன், “அஞ்சில வளையாதது இருவதில் வளையுமா? நான் சின்னப் புள்ளையா இருந்தப்பவே நீங்கல்லாம் என்னைக் கண்டிச்சிருக்கணும். அப்பம்லாம் பேசாம இருந்து செல்லம்கொடுத்துகிட்டு, இப்பம் குறை சொல்லி என்ன பிரயோஜனம்?”. சரிதானே?? இருந்தாலும், கொஞ்சமா என்னை மாத்திக்கிடவும் ஆரம்பிச்சேன்.

காலேஜ்ல, ஒரு நாள் என் நெருங்கிய தோழியிடம் ஏதோ ஒரு படத்தைப் பற்றிப் பேசிட்டிருந்தேன். ரொம்ப ஆர்வமா ஒன்றிப்போய் பேசிகிட்டிருந்தப்போ, “அப்ப சிவாஜி வந்தானா...”ன்னு சொல்ல, உடனே அவ, “வந்தார்” அப்படினு திருத்தினா. அந்தக் காலத் திரைப் படங்களில், அடிக்காமலேயே கன்னத்தில் ‘பளார்’, ’பளார்’னு அடி வுழுற மாதிரி தலையைச் சிலுப்புவாங்களே, அப்படி ஆகிப்போச்சு எனக்கு!! இதுதான் என் கதையின் க்ளைமாக்ஸ். இப்ப முழுசாவே திருந்த முடிவு பண்ணி, முக்கால்வாசி திருந்தியும் விட்டேன்!!

நாம படிக்காம விட்ட படிப்பையும், கத்துக்காம விட்ட கலைகளையும் நம் வாரிசுகளிடம் கடத்திவிடுவதைப்போல,  நாம செஞ்ச தவறுகளையும் அவர்கள் செய்யாமல் பார்த்துக்கணுமே!! என் மகன் பேச ஆரம்பித்தபோதே அவனுக்கு இதேபோல் அனுபவங்கள் ஏற்படாவண்ணம், எல்லாரையுமே மரியாதையாக அழைக்கப் பழக்கினேன் - அவன் பேச ஆரம்பித்த முதல் வார்த்தை, ’அம்மா’ இல்லை, “மாமா”தான்!!

இந்தியாவில், வீட்டில் வேலை பார்த்த ‘ராமு’ என்ற பெண்ணை என் 2 வயது மகன் ‘ராமு மாமி’ என்று அழைத்தபோது அவர் நெகிழ்ந்து சிரித்தது இன்னும் என் நினைவில்.  இங்கே அபுதாபியில் முதலில் வேலைக்கு வந்த ஸ்டெல்லாவை என் இரண்டரை வயது மகன் மாமி என்று அழைத்தபோது அவர், “என் பதினாறு வருட அமீரக வாழ்வில், இன்றுதான் என்னை முதல்முதலில் ஒரு குழந்தை மரியாதையோடு அழைக்கிறது. மலையாளி வீடுகளில்கூட பிள்ளைகள் என்னை ஸ்டெல்லா என்றுதான் கூப்பிடுவார்கள். ” என்று மகிழ்ந்தார்.

வளர்ந்தபிறகு, ‘விஜய் மாமா’, வடிவேலு மாமா’ என்றெல்லாம் சொல்லுவதைப் பார்த்து சில நண்பர்கள், உறவுகள் கிண்டல் செய்யத் தொடங்கியதால், ‘விஜய் நடிச்சிருக்கார்’, ‘வடிவேலு சொன்னார்’ என்ற அளவுக்கு நாசூக்காக தாமே  மாறிக் கொண்டார்கள்.


ல்லாம்சரி,  ஆனால், என்னை என் பிள்ளைகள் இன்றும் நீ,வா, போ என்றுதான் சொல்கிறார்கள். ஆரம்பத்தில் அதையும்  மாற்ற முயற்சி செய்தேன். என்னதான் நான் அவனிடம் என்னை “நீங்க”னு சொல்லு என்று வற்புறுத்திச் சொன்னாலும், அதை வழிமொழிவதற்கு வீட்டில் ஆளில்லை!! என்னை எல்லாருமே - என் தந்தை, என்னவர், உறவினர்கள் - எல்லாருமே ”நீ” என்று சொல்வதால், அவனுக்கும் அது முழுமையாக வரவில்லை. (மரியாதை தானா வரணும், கேட்டு வாங்கப்படாது).  இரண்டாவது, நானே என் அம்மாவை ‘நீ’ என்றுதான் சொல்கிறேன். நாளை அவன் வளர்ந்து, என்னைப் பார்த்து ”நீ(ங்க) மட்டும் உன்(ங்க) அம்மாவை நீ-ன்னு சொல்றீ(ங்களே)யே?” ன்னு கேட்டா என்ன செய்றதுங்கிற யோசனை வேறு!!  

அதனால, யோசிச்சுப்பாத்து, ”என்னை ’நீ’ன்னே சொல்லிக்கோ”ன்னு ஒரு தாய்க்கேயுரிய கருணையோட (நோ, நோ பேட் வேர்ட்ஸ்!!) அனுமதி கொடுத்துட்டேன்.

இது ஒரு சமாதானமாத் தெரிஞ்சாலும், இன்னிக்கும் சிலரை நாம உரிமையோடு ’நீ’யென்று சொல்வதே அவர்களை மனதுக்கு ரொம்ப  நெருக்கமானவங்களா இருக்கவைக்குதுன்னு சொல்லலாம். சிலர் தன் தந்தையைக் கூட “நீ”ன்னு ஒருமையில் சொல்லி, நண்பர்களைப் போல பழகுறதைப் பார்த்திருக்கேன்.

உலகத்துல உயர்ந்த சிறந்த மனிதர்களை நாம் மரியாதையுடன் அவங்க, இவங்கன்னு சொன்னாலும், அவர்களையும் படைத்த, அவர்களைவிட மேலான எல்லாம் வல்ல இறைவனை ‘அவன்’ என்றுதானே சொல்றோம். அதனால்தானே அவனோடு நம் நெருக்கம் அதிகமாக இருக்கு!!

இன்னும் ஆராஞ்சுப் பாத்தா, நம்ம இந்திய மொழிகளில் மட்டும்தான் நீ-நீங்க என்று ரெண்டு வகையான பதங்களும் இருக்குதுன்னு நினைக்கிறேன். எனக்குத் தெரிஞ்சு ஆங்கிலம் மற்றும் அரபி மொழியில் இப்படி இல்லை. ஆங்கிலத்தில் யாரானாலும் "You" மட்டும்தான். அரபியில் “இன்த” என்று சொல்வார்கள்.

இங்கு அலுவலகங்களில்,  ஆங்கிலேயர்களை "Hi James"  என்று அழைத்துப் பேசமுடிகிறது. அதுவே, இந்தியர்கள் என்றால், ”சார், சார்”!! நாம பேர் சொல்லி அழைச்சாலும் ஒண்ணும் சொல்லமாட்டாங்கதான், ஆனாலும் அந்தக் கலாச்சாரம் தெரிந்திருப்பதால் (அவமதிப்பாகக் கருதப்படுமோ என்று எண்ணி) அப்படிச் சொல்ல முடிவதில்லை.

ஆனால், ‘சார்’ என்று அழைப்பதால் ஒரு பயன் என்னன்னா, ஒரு  எல்லைக்கோடு வரைந்துகொள்ள வசதியாக இருக்கும்.  ஆங்கிலேயர்களிடம் “Mr.James என்பது இதற்கு உதவும். :-)


ன்று உறவுகளிலும் மரியாதை என்பதும் நிறைய மாற்றம் கண்டிருக்கிறது. ஒரு காலம்வரை ஒருவழிப்பாதையாக மட்டுமே இருந்துவந்த மரியாதை, இருவழிப்பாதையாக மாறியிருப்பது  “காலத்தின் கட்டாயம்”!!!

அத்தை-மாமா மட்டுமல்ல, மாமனார்-மாமியாரும்கூட,  அங்கிள்-ஆண்ட்டி என்று ஆகிப்போனது, அவர்களுக்கும் நமக்குமான நெருக்கத்தைக் குறைத்து விட்டதுபோலவே உணர்கிறேன். 

அதே சமயம், ஆண்பிள்ளையானாலும், தொடாமல் இரண்டடி தள்ளி நின்றே,
“அப்பா” என்றழைத்து, கண்டிப்புடன்கூடிய அன்பைத் தம் தந்தையிடம் அன்று பெற்றுக்கொண்ட ”இன்றைய” அப்பாக்களை, “Dad” என்றழைத்தவாறு இளம்பெண்கள்கூட தோள்மீது கைபோட்டுப் பேசும்போது இருவருக்குமிடையில் பாசம் கொஞ்சம் அதிகம்போலத்தான் தெரிகிறது.
 

’ப்ராணநாதா’, ‘ஸ்வாமி’ களில் பதிபக்தியோடு ஆரம்பித்து, அத்தான், மாமா, மச்சான் என்றெல்லாம் பாசமிகு சதி-பதியாகப் பயணித்தாலும், ‘என்னாங்க’, ‘இந்தாங்க’வையும் விட்டுவிடாது ‘ஏங்க’வும் வைத்து நட்புணர்வு பெருகச்செய்து,  பின்னர் 90-களில் பெண்கள், கணவரைப் பெயர் சொல்லி அழைப்பதில் அதிக நெருக்கத்தை உணர்ந்ததுபோல, இக்காலத்து மங்கையர் கணவனை “டேய்” என அழைப்பதில் அன்பு அதிகரிக்கக் காண்கிறார்கள்போல.

நம் தலைமுறையினர், கண்டபொழுதிலெல்லாம் “குட் மார்னிங் மிஸ்” என்று ஆசிரியர்கள்முன் கைகட்டி நின்றபோது, அங்கு மரியாதையைவிட பயமே அதிகம் இருந்தது. இன்றோ, ”ஹாய் மிஸ்” என்று அழைப்பதையும், நண்பர்கள்போல ஜோக் அடித்துப் பேசிக்கொள்வதையும் நாம் வாய்பிளந்து பார்த்தாலும், கூடவே பொறாமையும் வரத்தான் செய்கிறது.


மாறிவரும் உலகில், மரியாதை என்பதன் வரையறையும் மாறிவிட்டது.  சிலருக்கு அது ”மரியாதை மனசிலயாவது இருந்தாச் சரிதான்” என்று புலம்ப வைக்கும். சிலருக்கு “மரியாதை மனசில் மட்டும் இருந்தாப் போதும்” என்று சொல்ல வைக்கும்.

Post Comment

48 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒரு வரைமுறை அளவு இருந்தால் சரி... இப்போது அது மீறவும் செய்கிறது... இதை கலாச்சார மாற்றம் என்பதா...? கலாச்சார சீரழிவு என்பதா...? காலத்தின் கொடுமை என்பதா...?

எப்படியோ தனி மனித ஒழுக்கம் இருந்தால் (வளர்ந்தால்) சரி...

நன்றி...

அதிரை அபூபக்கர் said...

மரியாதையான விசயத்தை மரியாதையாக சொல்லியுள்ளீர்கள்,
அருமை சகோதரி....

ராமலக்ஷ்மி said...

அருமையான அலசல்.

// சிலருக்கு அது ”மரியாதை மனசிலயாவது இருந்தாச் சரிதான்” என்று புலம்ப வைக்கும். சிலருக்கு “மரியாதை மனசில் மட்டும் இருந்தாப் போதும்” என்று சொல்ல வைக்கும்.//

அழகாய் சொல்லி விட்டீர்கள்:)!

பால கணேஷ் said...

என்னாது.. கணவன்மார்களை இக்காலப் பெண்கள் டேய் என்கிறார்களா? ஐயோ பாவம் கணவர்கள்... மிக நெருக்கமான உறவுகளிடம். நட்புகளிடம் அவர்களுக்கு உறுத்தல் இல்லாத பட்சத்தில் நீ வா என்று அழைக்கலாம். அதுவும் மற்றவர்களிடம் அவர்களைப் பேசும்போது நீங்க வாங்க என்க வேண்டும். இதுவே நான் கடைப்பிடிப்பது. நீங்க சொல்லியிருக்கற விதம் அருமைங்க.

ப.கந்தசாமி said...

ரசித்தேன்.

அமுதா கிருஷ்ணா said...

மரியாதையா பேசுங்கன்னு சொல்லுதீக.சரி கேட்டுகிடுதோம்.

எங்க வீட்டில் அம்மாவை தலைமுறை தலைமுறையாக நீங்க வாங்க என்று தான் கூப்பிடுகிறோம். திநெவேலியில அதை அதிசயமா பார்த்தாங்க.

அமுதா கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
அமுதா கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
Thamiz Priyan said...

எங்க வீட்ல சாச்சா, மாமியை வா, போ ந்னு பேசிக்குவோம்.. அக்காவை பெயர் சொல்லி அழைப்போம் வித்தியாசமாய் தெரியல கல்யாணம் ஆகும் வரை.. அதுக்கு பின்னாடி மனைவி வந்து திட்டும் போதுதான் உறைக்குது ஆனா மாத்த முடியல.. ;)

Thamiz Priyan said...

எங்க வீட்ல சாச்சா, மாமியை எல்லாம் வா,போன்னு பேசிக்குவோம்.. மனைவி வந்து திட்டும் போது தான் உறைக்குது... ஆனா திருந்த மாட்டோம்ல.. ;-)
அரபுகளில் மனைவி கணவனை சாதாரணமாக பெயர் சொல்லி அழைப்பதைக் காண முடியும்... :)

Admin said...

மரியாதைமிக்க பதிவு சகோ.!

ஸ்ரீராம். said...

மரியாதை மனதில் இருந்தால் போதும் என்பது(ம்) சரி. தேவை இல்லாத இடங்களில் காட்டவேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ள மரியாதை போலித் தனத்தை வளர்க்க உதவலாம். உறவுகளில் குறிப்பாக நெருங்கிய உறவுகளில் மரியாதை நெருக்கத்தைக் குறைக்கலாம். நான் என் அப்பாவையும் என் மகன் என்னையும் நீ என்றே குறிப்பிடுகிறோம்!

கௌதமன் said...

//அதையெல்லாம் பெரிசா எடுத்துக்கிறதில்ல. ஏன்னா, நான்தான் அப்பவே ஒரு காதுல ‘entry' போர்டும், இன்னொன்னுல 'exit' போர்டும் மாட்டி வச்சிருந்தேனே!!//
நல்ல கொள்கை! வித்தியாசமாகச் சொல்லியிருக்கீங்க!

Prathap Kumar S. said...

ஹுசைனம்மாகும்பிடறனுங்கோ....ஒரு மருவாததான்...:)

சாந்தி மாரியப்பன் said...

//“அஞ்சில வளையாதது இருவதில் வளையுமா? நான் சின்னப் புள்ளையா இருந்தப்பவே நீங்கல்லாம் என்னைக் கண்டிச்சிருக்கணும். அப்பம்லாம் பேசாம இருந்து செல்லம்கொடுத்துகிட்டு, இப்பம் குறை சொல்லி என்ன பிரயோஜனம்?”. சரிதானே??//

அதச்சொல்லுங்க. 'நம்மைச்' சரியா வளக்கலைன்னா அது அவங்க தப்புதானே :-)))))))))

நல்லதொரு அலசல்.

இமா க்றிஸ் said...

என்னமோ மிரட்டல் பதிவு என்று நினைச்சேன் ஹுஸைனம்மா. ;)
முன்னாலயும் எங்கயோ இதே ரீதியில என்னவோ எழுதி இருந்தீங்களோ! !!! கொஞ்சமா ஞாபகம் வருது.

ஹுஸைனம்மாவின் ஸ்பெஷாலிடி, இப்படி படிக்க சுவையாகச் சொல்லுறது. ரசித்தேன்.

அருணா செல்வம் said...

நாம் மறியதைக் கொடுத்தால் தான் நமக்கு மறியாதை கிடைக்கும்.

நல்ல பதிவுங்க மாமி.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. சிறு வயதில் என்னையும் சகோதரிகளையும் மரியாதையோடு பேச பழக்கி இருந்தார்கள். பெரியவர்கள் அத்தனை பேரையும் மரியாதையோடு தான் அழைக்க வேண்டும்... தப்பித்தவறி மரியாதை இல்லாது அழைத்து விட்டால், அம்மா பார்க்கும் பார்வையிலேயே தவறு புரிந்து அடுத்த முறை ஒழுங்காய்ப் பேசுவோம்!

இப்போது என் குழந்தை என்னை நீ, வா என்று பேசுவது எனக்கென்னமோ தவறாய்ப் படவில்லை. ஆனாலும், மற்றவர்களிடம் பேசும்போது மரியாதையாகப் பேச பழக்கி இருக்கிறோம்!

தளிகா said...

எல்லாம் சஹிச்சுக்குவேன் ஆனால் சினிமா நடிகர் நடிகைகளை அவ இவனு சொல்றதை எனக்கு கேட்டாலே நெளிய ஆரம்பிச்சுடுவேன்.என் பிள்ளைகளும் சினிமாகாரங்களை அந்த ஆண்ட்டி இந்த அன்கில் என்று தான் சொல்றாங்க ஊருக்கு போனால் சிரிக்கதால் குழம்பி போய் இப்போ என் காதில வந்து சொல்லுவாங்க..அவரவர் சொந்த பந்தங்களை நெருக்கமா இஷ்டஹ்துக்கு கூப்பிட்டுக்கலாம் தப்பில்லை..ஆனால் நமக்கு துளியும் சம்மந்தமில்லாத பொதுநபர்களை நிச்சயம் மரியாதையோடு கூப்பிட பழக்க வேண்டும்..ஒருக்க ஒரு குட்டியூண்டு பைய்யன் டிவி பார்த்து சொன்னான் "வந்துட்டான்டா கருணாநிதி"என்று..

கிரி said...

நீங்கள் கூறுவது சரி தான் :-)

நான் கோவை பகுதி என்பதால் பெரும்பாலும் அனைவரையும் மரியாதையாக அழைப்பது தான் வழக்கம். என்னுடைய அக்காவை மட்டும் தான் வா போ என்று அழைப்பேன் மற்ற அனைவரையும் வாங்க போங்க என்று தான். பெரும்பாலான வயதான தாத்தாக்கள் கூட என்னை வாங்க போங்க என்று தான் அழைப்பார்கள்.

என்னுடைய மகனுக்கும் அதையே பழக்கி இருக்கிறேன். முதலில் மரியாதை இல்லாமல் பேசிக் கொண்டு இருந்தான் உடன் பழகும் குழந்தைகளால். பின் தொடர்ந்து அதை சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்ததால் தற்போது சுத்தமாக நின்று விட்டது. "ங்க" இல்லாமல் கூறினால் உடனடியாக பல முனை தாக்குதல் வரும்.. அன்பாக :-).

அரசியல்வாதிகளையும் சினிமா நடிகர்களையும் மரியாதைக்குறைவாக பேசுகிறேன். இதை தற்போது குறைத்து வருகிறேன் விரைவில் நிறுத்தி விடுவேன். ரஜினி கமல் போன்றோரை பிறருடன் பேசும் போது அவன் இவன் என்று வந்து விடுகிறது.. மாற்றிக்கொண்டு இருக்கிறேன் ஆனால் பாலச்சந்தர் நாகேஷ் சிவாஜி எம் ஜி ஆர் ரங்காராவ் போன்றோரைப் பற்றி பேசும் போது மரியாதை தானாக வந்து விடும். தலைமுறை இடைவெளி என்று நினைக்கிறேன்..

Nasar said...

என் மனைவியை மரியாதையாகத் தான் விளிப்பேன் சின்ன மகன் பெரியவனை
மரியாதை கொடுத்து விளிப்பான் .
புதிய நபர்களுக்கு முன்னால் மனைவியின் பெயர் சொல்லி அழைக்கமாட்டேன் ,
நெருங்கிய உறவு முறைகளுக்கு முன் மனைவியின் பெயர் சொல்லி அழைப்பேன் ,
என்னைப் பொறுத்தவரை நல்ல செயல்கள் நம் வீட்டிலேருந்தே ஆரம்பமாகவேண்டும்
என்று எண்ணுபவன் ..
நாகரீகம் மாறிக்கொன்டிருந்தால், மரியாதையும் மாற வேண்டுமா என்ன ..!!!!

வல்லிசிம்ஹன் said...

மரியாதை வரைமுறை இல்லாமல் விளையாடுவது ஒரு16,18 வரைதாம்.
மாமாக்களுக்குத் திருமணம் ஆகிவிட்டால் மாமிகளுக்கு மரியாதை கொடுப்பதுபோல் மாமாக்களும் வாங்கிக் கொள்ளுகிறார்கள்:)

RAMA RAVI (RAMVI) said...

நல்லதொரு அலசல்.

// சிலருக்கு அது ”மரியாதை மனசிலயாவது இருந்தாச் சரிதான்” என்று புலம்ப வைக்கும். சிலருக்கு “மரியாதை மனசில் மட்டும் இருந்தாப் போதும்” என்று சொல்ல வைக்கும்.//

மிக சிறப்பாக சொலியிருக்கீங்க.

நட்புடன் ஜமால் said...

எனது 4 வயது மகளார், என்னை எப்பொழுதும் "வாங்க-ள்" என்று தான் சொல்வாங்க திடீர்ன்னு "என்ன"ங்க"டா", வா"ங்க"டான்னும் சொல்வாங்க, இரண்டுமே மனதுக்கு இதம் தருகின்றது ...

துபாய் ராஜா said...

சரியாச் சொன்னீங்க...

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

//ஏன்னா, நான்தான் அப்பவே ஒரு காதுல ‘entry' போர்டும், இன்னொன்னுல 'exit' போர்டும் மாட்டி வச்சிருந்தேனே!!//

அவ்வளவு பெரிய போர்டு சைசுக்கு தோடு போட்டு இருந்தீங்கலாங்கங்க :)



//(மாமியார்கள் மட்டும் விதிவிலக்கு... க்ர்ர்ர்... )// மதர்ங்க ஆப் ஹஸ்பன்ட்ங்க ஆப் ஹுசைனம்மாங்க கவனிக்க :)



//இரண்டாவது, நானே என் அம்மாவை ‘நீ’ என்றுதான் சொல்கிறேன். நாளை அவன் வளர்ந்து, என்னைப் பார்த்து ”நீ(ங்க) மட்டும் உன்(ங்க) அம்மாவை நீ-ன்னு சொல்றீ(ங்களே)யே?” ன்னு கேட்டா என்ன செய்றதுங்கிற யோசனை வேறு!! //

நீங்கள்ங்க செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குரியது. - அல் குர்ஆண் 61:3



ஆங்கிலத்தில் யாரானாலும் "You" மட்டும்தான்.

கண்டிப்பா நீங்கங்க சகோ அண்ணுவுடைய (http://englishthrutamil.blogspot.com) ஸ்டுடன்ட் தானே :)



//இக்காலத்து மங்கையர் கணவனை “டேய்” என அழைப்பதில் அன்பு அதிகரிக்கக் காண்கிறார்கள்போல.// ஹஸ்பன்ட்ங்க ஆப் ஹுசைனம்மாங்க, ப்ளீஸ் டேக் ஆக்ஷன்ங்க இம்மிடியட்லிங்க :)

எக்ஸ்ட்ரா "ங்க" ஒரு மரியாதை தான்ங்க :)

GEETHA ACHAL said...

மீண்டும் ஒரு சூப்பரான பதிவு...இப்பொழுது எல்லாம் காலம் ரொம்ப மாறிவிட்டது ...நீங்க சொன்ன பிறகு தான் இப்பொழுது கணவனை டேய் என்று கூப்பிடுவது தெரிகின்றது...சரவணன் மீனாட்சி நாடகத்தில் பார்க்கும்பொழுதே கொடுமையாக இருக்கு...என்னத சொல்வது..கொடுமை தான்..

ADHI VENKAT said...

அருமையான பகிர்வுங்க....

இப்போது காலம் மாறி தான் போய் விட்டது....
இதுவரை கணவரை பெயர் சொல்லிக் கூட அழைத்ததில்லை.....ஆனா இப்போ வாடா, போடங்கறாங்க....என்னத்தை சொல்ல...:(

மனோ சாமிநாதன் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள் ஹுஸைனம்மா!!!

pudugaithendral said...

எனக்கு 5 வயசுதான் மூப்பு எங்க சின்ன மாம்ஸ். ஆரம்பத்திலேர்ந்து மாமான்னுதான் கூப்பிடணும்னு அம்மாமா கண்டீஷன். (நீ, வா,போன்னு தான் சொல்வேன்) 1 நாள் பெருசுன்னாலும் அந்த உறவைச் சொல்லிதான் அழைக்கணும்னு அம்மம்மா பழக்கிட்டாங்க.

அதே சின்ன மாம்ஸுக்கு கல்யாணம் ஆனிச்சு. அத்தை என்னைவிட 1 மாசம் சின்னவுக. ஆனாலும் அத்தைன்னுதான் கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன்.

மரியாதை மனசுல இருந்தா போதும்னு சொல்லிக்கிட்டாலும் ஆனா அந்த உறவு சொல்லி அழைக்கப்படும்பொழுதுதான் ஒரு அன்னியோன்யம் வருவதா படுது.

அயித்தான் வீட்டில் அவரைவிட 6 வயசு சின்னவரு அண்ணன் மகன். அவுகளை பேர் சொல்லி அழைப்பதும் என்னிய மட்டும் சித்தின்னு சொல்வதும் நடக்குது. ஆனா ஒரு வயசுக்குமேல அப்படி பேர் சொல்லி அழைக்கப்படும்போது கஷ்டமாத்தான் இருக்கு.(அயித்தானுக்கு)

ஆரம்பத்திலேயே பழக்கிடறது நல்லது என்பது என் கருத்து.

அப்பாதுரை said...

'டேய்' என்றழைப்பது எவ்வளவோ மேல் என்றாகிவிட்டது :-)

என் பள்ளி நாட்களில் க்ருஷ்ணா என்று ஒரு பெண் படித்தாள். அதுவே ஆச்சரியமாக இருந்தது. ராமு என்று ஒரு பெண்ணா?

enrenrum16 said...

நீங்க உங்க சாச்சி,மாமாக்களை ஒருமையில் அழைப்பதுபோல் உங்க குழந்தைகளும் அவர்கல் சாச்சி,மாமாக்களை ஒருமையில் அழைத்தால் ஒத்துக்கொள்வீர்களா?உங்க குழந்தைக "அம்மா.... நீ ஏன் உன் மாமா,சாச்சியை நீ,வா,போன்னு சொல்றன்னு" இன்னும் கேக்கலியா? ;))

அவர்களை (ok..அம்மாவைத் தவிர) மரியாதையோடு அழைத்தால் அவர்கள் மனம் சந்தோஷப்படும் அல்லவா?!

Sangeetha said...

ரொம்ப அழகா ஆராய்ந்து எழுதி இருக்கிறீர். எங்கள் பிராமின் பாஷையில் அதிகமாக எல்லாரையுமே நீ, வா, போ, என்றுதான் சொல்லுவோம்.

Vijiskitchencreations said...

Super pathfinder. Give respect take respect policy now a days. Not all the states. Very nice writing. Sorry Indonesia' t have Tamil font in work computer.

Jaleela Kamal said...

மரியாதை எங்க வாப்பா முதலில் இருந்தே மரியாதையாக பேச வைத்து பழகியதால் அவ இவ நீ , இதேல்லாம் போட்டு பேசுவதில்லை. எல்லாரையுமே நீங்க வாங்க போங்க தான்..

தொருவில் தள்ளி வண்டி கார் கீரை காரம்மா வந்தாலும்,..


ஆனால் சில பேர் அப்படி கூப்பிடுவதை பார்க்கும் போது என்ன்வோ போல் இருக்கும்,.


Vijayan Durai said...

அழகான ஆராய்ச்சி கட்டுரை...மரியாதை
Give Respect Take Respect என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.ஆங்கில மொழி,அரபி மொழி போன்றவற்றில் நீ,நீங்க போன்றவைகளுக்கு ஒரே சொல்லே புலக்கத்தில் இருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள்,மரியாதை என்பதை எல்லா மொழி பேசுபவர்களும் எதிர்பார்க்கிறார்கள் தான்,ஆனால் மரியாதையின் வரையறை மட்டும் மாறுகிறது.,அதன் வடிவமும் மாறுகிறது.
மரியாதை என்கிற வரையறை குறையும் போது நெருக்கம் அதிகரிக்கிறது ,கடவுளையே அவன் என்று தான் சொல்கிறோம் ...Good thought.

//என்னைப் பார்த்து ”நீ(ங்க) மட்டும் உன்(ங்க) அம்மாவை நீ-ன்னு சொல்றீ(ங்களே)யே?” ன்னு கேட்டா என்ன செய்றதுங்கிற யோசனை வேறு!! //
உங்கள் கட்டுரையில் இந்த இடத்தை ரசித்தேன்! Nice :)

ஹுஸைனம்மா said...

தனபாலன் - அதே, தனிமனித ஒழுக்கம் ஒருபோதும் குறையக் கூடாது. நன்றி.

அதிரை அபூபக்கர் - நன்றிங்க.

ராமலக்ஷ்மிக்கா - நன்றிக்கா.

பாலகணேஷ் சார் - இக்காலத்தில், உடன் படிக்கும் நண்பர்களையே மணம் செய்துகொள்வதால் வரும் நெருக்கத்தின் காரணமாகவும் “டேய்” ஆகியிருக்கலாம். எனினும், இடம்பொருள் ஏவல் அறிந்து நடந்துகொள்வதே எல்லா உறவுக்குமே நல்லது.

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார் - //தேவை இல்லாத இடங்களில் காட்டவேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ள மரியாதை போலித் தனத்தை வளர்க்க உதவலாம்.// மிகச்சரி.

கௌதமன் சார் - நன்றி சார்.

பிரதாப் - கும்பிடு இருக்கட்டும், அதுக்கு முன்னாடி அந்த துண்டை தோள்ல இருந்து எடுத்து, இடுப்பில் கட்டுனீங்களா? :-)))

அமைதிக்கா - அப்ப நீங்களும் என் கட்சியா? ரைட்டு!! :-)))

ஹுஸைனம்மா said...

கந்தசாமி ஐயா - நன்றிங்க.

அமுதா - தின்னேவேலியில் நிறைய தோழிகள், அம்மாவை ‘வாங்க-போங்க’ன்னு சொல்வதைப் பார்த்திருக்கிறேன். அதில், கிறிஸ்தவ தோழிகள் கட்டாயம் அம்மாவை நீங்க என்றுதான் அழைப்பார்கள். நீங்களும் அப்படியே என்பது மகிழ்ச்சி.

தமிழ்ப்பிரியன் - எனக்கும், என் கணவர் தன் உடம்பிறப்புகளை ‘அக்கா’, ‘அண்ணன்’ என்று அழைப்பது ஆரம்பத்தில் ஆச்சர்யமே. "எங்கம்மா வீட்டில், எனக்கும் கீழே 40 உருப்படிகள் (பேரக்குழந்தைகள்) இருக்கு. ஒண்ணாவது ‘அக்கா’ன்னு சொல்லுதா?" என்றுதான் சலித்துக் கொண்டேன்!! ஆனாலும், பெயர் சொல்லி, ஒருமையில் அழைப்பதில்தான் நெருக்கம் அதிகமென என் கருத்து. :-))))

அப்துல் பாஸித் - மரியாதைக்கார தம்பி!! :-))

ஹுஸைனம்மா said...

இமா - இமா, என் மிரட்டலெல்லாம் வீட்டோடு அதுக்குன்னே இருக்கும் மூன்று ஜீவன்களோடுதான்!! அதத் தாண்டி, மீ வெர்ரி வெர்ரி குட் கேர்ள்!! :-)))

அருணா செல்வம் - என்னது மாமியா??!! ஆட்டோகாரங்கதான் சட்டுனு மாமின்னு சொல்வாங்க!! :-)))

வெங்கட் - நன்றிங்க.

தளிகா - ம்ம்ம்.. இந்த சினிமாக்காரங்களும், அரசியல்வாதியும் நண்டுசிண்டுங்க வாயிலே விழுந்து அழிபடுறதைக் கண்டா வருத்தமாத்தான் இருக்குது. பெரியவங்களும் திருத்துறதில்லை.

ஹுஸைனம்மா said...

கிரி - நன்றிங்க. அரசியல்வாதிகளையும் சினிமா நடிகர்களையும் நானும் ஏக வசனத்தில்தான் பேசி வந்தேன். என் மகனுக்காகத்தான் மாற்றிக் கொண்டேன்!! பல விஷயங்களில் நான் என்னைத் திருத்திக் கொண்டது, மகன் பிறந்த பிறகே.

நாஸர் - வியப்பாக இருக்கிறது உங்கள் பழக்க வழக்கங்கள். வாழ்த்துகள். நல்ல ஆரம்பம்.

வல்லிமா - //மாமாக்களுக்குத் திருமணம் ஆகிவிட்டால் மாமிகளுக்கு மரியாதை கொடுப்பதுபோல் மாமாக்களும் வாங்கிக் கொள்ளுகிறார்கள்// என் வீட்டிலும் அதே!!

அப்போ, ஆண்கள் மற்றவர்களாலும் மதிக்கப்படுவது அவர்கள் மனைவியால்தான் என்று சொல்லுங்கள்!!

ஹுஸைனம்மா said...

ராம்விக்கா - எப்படிருக்கீங்க?

ஜமால் - குழந்தைகள் எப்படி அழைத்தாலும் அழகுதான். என் தங்கையின் மூன்றரை வய்து மகள், தன் வாப்பாவை “இங்க வாங்கங்க, உக்காருங்கங்க, சாப்பிடுங்கங்க” என்று சொல்வது சிரிப்பாக இருக்கும்.

துபாய் ராஜா - உங்க பேரை துபாயின் ஷேக் முஹம்மதுகிட்ட சொன்ன, என்ன மரியாதை கிடைக்குதுன்னு பார்க்கணும்!! :-)))

ஹுஸைனம்மா said...

அபுநிஹான் - //அவ்வளவு பெரிய போர்டு சைசுக்கு தோடு போட்டு //
அட, நல்ல ஐடியாவா இருக்கே!!

நீங்கள்ங்க செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குரியது. - அல் குர்ஆண் 61:3

உண்மைதான், திருத்துவதற்குமுன் நாம் திருந்திக்கொள்ள வேண்டுமே!!

//எக்ஸ்ட்ரா "ங்க" ஒரு மரியாதை தான்ங்க//
அப்படியே மெயிண்டெய்ன் பண்ணுங்க!! :-)))

ஹுஸைனம்மா said...

கீதா ஆச்சல் - நன்றிங்க.

கோவை2தில்லி - // கணவரை பெயர் சொல்லிக் கூட அழைத்ததில்லை.// அவ்ளோ நல்லவங்களா நீங்க??!! :-))))

மனோ அக்கா - நலமாக்கா? வாழ்த்துகளுக்கு நன்றிக்கா.

ஹுஸைனம்மா said...

புதுகைத் தென்றல் - என் ஆறு அத்தைகளில் ஐந்து பேரும், என் இரண்டு co-sistersம் என்னைவிட வயதில் குறைந்தவர்களே. ஆனாலும், வாங்க-போங்கதான்!! திருந்திட்டோம்ல!!

//ஆனா ஒரு வயசுக்குமேல அப்படி பேர் சொல்லி அழைக்கப்படும்போது கஷ்டமாத்தான் இருக்கு.(அயித்தானுக்கு)//
நிஜமாங்க. அதனால் நானே என் மாமாக்களை பெயர் சொல்லி அழைப்பதை மாற்றிக் கொண்டு வருகிறேன்.

ஹுஸைனம்மா said...

அப்பாதுரை - ஓ, அப்படி வர்றீங்களா நீங்க?!! :-)))

என்றென்றும் 16 - அவ்வ்வ்வ்... அதான் நானே மாறிகிட்டு வர்றேனே? அப்புறமும் ஏன் இப்படி.... விட்டா 100 தோப்புக்கரணம் போடுன்னு சொல்லுவீங்க போல!! :-))

சங்கீதா - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

தனபாலன் - தகவலுக்கு ரொம்ப நன்றிங்க. பிஸியா இருந்த சம்யத்தில், உங்க பின்னூட்டம் பார்த்துதான் தெரிஞ்சுகிட்டேன்.

விஜி - நன்றிங்க. இந்தோனேஷியாவிலா இப்ப? அல்லது விடுமுறையா?

ஜலீலாக்கா - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

விஜயன் - விரிவான கருத்துக்கு நன்றிங்க.
//மரியாதை என்பதை எல்லா மொழி பேசுபவர்களும் எதிர்பார்க்கிறார்கள் தான்,//
கண்டிப்பா. அரபியர்கள், உடன் பணிபுரியும் வயதில் மூத்தவர்களை, அவர்களின் மூத்த குழந்தையின் பெயர்சொல்லி-இன்னாரின் அப்பா என்று அழைப்பார்கள். அதாவது ஒருவரின் மகன் பெயர் “ஹமீத்” என்றால், அவரை “அபு ஹமீத்” என்றழைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள், பெயர் சொல்லி அழைத்தாலும், தனிநபர் தலையிடுதலை (அறிவுரைகளை) விரும்ப மாட்டார்கள்.

//உங்கள் கட்டுரையில் இந்த இடத்தை ரசித்தேன்! //
நீங்களும் அப்பா ஆகும்போது, இதையேதான் செய்வீங்க பாருங்க!! :-)))

நன்றி தம்பி.