Pages

டிரங்குப் பெட்டி - 28




கேரளாவில் சமீபத்தில் நடந்த விமான “ஹைஜாக்” நாடகம் குறித்த செய்திகள் படித்திருப்பீர்கள். ஏர் இந்தியாவின் தாழ்ந்துபோன சேவைத் தரத்திற்கு இன்னுமொரு சான்று.  மலையாளிகளைப் பற்றிப் பலரும் குறை கூறுவார்கள். ஆனால், அவர்களிடம் இருக்கும் ஒற்றுமை உணர்வு போற்றத்தக்கது. சம்பவம் நடந்தபொழுது, குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை மற்ற பயணிகள் விட்டுக்கொடுக்காதது அங்குமட்டுமே நடக்கக்கூடிய அதிசயம்.  கேரள முதல்வர், அமைச்சர்களும் அவர்களுக்கு ஆதரவாக உள்ளார்கள்.

ஏற்கனவே திட்டமிடப்பட்டு வரும் “ஏர் கேரளா” விமான சேவையும், இச்சம்பவத்தால் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மதுரை விமான நிலையம் சர்வதேச சேவைக்கான தரத்திற்கு மாற்றப்படுவதற்கு இன்னும் எத்தனை வருடமாகுமோ? அங்கே இத்தணூண்டு “நாட்டில்” மூணு சர்வதேச விமான நிலையங்கள்!!                                    
                                        -=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-

லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்”  - 1999 முதல் 2005 வரை ஏழு வருடங்கள் தொடர்ந்து “டூர் டி ஃப்ரான்ஸ்” (Tour De France) சைக்கிள் போட்டியில் வென்றவர். குறைந்தபட்சம் 3200 கி.மீ தூரத்தை, ஃபிரான்ஸ் மற்றும் சுற்றுப்புற நாடுகள் வழியே சைக்கிளில் 21 நாட்களில் கடக்க வேண்டும். இந்தப் பாதையில் இருக்கும் ஏற்றங்கள் அனைத்தும், மூன்று முறை இமயத்தில் ஏறுவதற்குச் சமம் என்று சொல்லப்படுமளவு கடினமான போட்டி.

சென்ற மாதம், அவர்மீது போதை மருந்து பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அவரது பட்டங்கள் திரும்பிப் பெறப்பட்டன. ஆயுட்காலத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைகள் தொடங்கியபோது, அவர்மீது குற்றம் இல்லாதவராகவும், அமெரிக்க போதைத் தடுப்பு நிறுவனம் USADA “ஓவர்-ரியாக்ட்” செய்வது போலவும்தான் சூழல் இருந்தது. ஆனால்,
தொடர்ந்து USADA வெளியிட்ட மருத்துவப் பரிசோதனை குறிப்புகள் மற்றும் சில ஆவணங்கள், பெரிய அளவில் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.

லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங் புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மீண்டவர் என்பதாலும், கேன்ஸர் ஃபவுண்டேஷன் ஒன்றை நிறுவி நடத்திவருவதாலும்,  விளையாட்டு தாண்டி அவர் செய்துவரும் பல நல்ல காரியங்களாலும் அவர்மீது பெரும் மதிப்பு இருந்துவந்தது. அதனாலேயே அவர்மீதான குற்றங்களை வெளிப்படுத்தி வரும் தகவல்கள் அதிர்ச்சியாகவும், நம்பமுடியாமலும் இருக்கின்றன.

                                             -=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-
 
இந்தியா வந்த ஆஸ்திரேலிய பிரதமர், திருமதி. ஜூலியா கில்லார்ட்,  காந்தி நினைவிடத்தின் புல்வெளியில் நடந்து வரும்போது கால் இடறிக் கீழே விழுந்தார். பின் சுதாரித்துக் கொண்டார். அவரது ஹை-ஹீல்ஸ் காலணி, புல்லில் மாட்டிக் கொண்டதால் விழ நேரிட்டதாகச் சொன்னார். அவரது காலணி, காலை வாரிவிடுவது, இது மூன்றாவது முறை. பின்னர் நடந்த சந்திப்பில் ஹை-ஹீல்ஸைத் தவிர்த்து, தட்டையான ஷூ அணியலாமே என்று ஒருவர் கூறியதற்கு, அவர், “ஸ்கர்ட்டுடன் flat shoe  அணிந்தால், ஆஸ்திரேலியாவினர் மத்தியில் தமது ஃபேஷன் குறித்த விமர்சனம் எழுப்பப்படும் என்பதால், அது சாத்தியமில்லை” என்று கூறியுள்ளார்!!!

அதற்கு முந்தைய வாரம், எதிர்க்கட்சித் தலைவரை “misogynist" என்று சொல்லி, பார்லிமெண்டில் வாங்கு வாங்கென்று வாங்கியதும் இவரேதான்!!



                                             -=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-
அபீர் ஹம்ஸா - ஏழு வில்
 தாலிபானால் சுடப்பட்ட பாகிஸ்தானின் மலாலா யூஸுஃப்ஸாயி,
பிரிட்டனில் சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறிவருகிறார். உலகம்

முழுவதும் பிரபலமாகிவிட்ட மலாலா எனக்கு “அபீர் ஹம்ஸா”வை  நினைவுபடுத்துகிறார். ஈராக்கைச் சேர்ந்த அபீர் ஹம்ஸாவும், மலாலாவைப் போல 14 வயதே நிரம்பிய சிறுமிதான் அப்போது. ஆனால், அவள் மலாலாவைப் போலப் பிழைத்துவிடவில்லை. அவளைத் திட்டமிட்டு வேட்டையாடிக் குதறிய ஐந்து அமெரிக்கப் படைவீரர்களும் அவளை உயிர்தப்ப விடவில்லை. குடும்பத்தோடு கொன்றொழித்தார்கள்.  அந்த வகையில், மலாலா கொஞ்சம் அதிர்ஷ்டக்காரிதான், உயிரை மட்டுமே குறிவைத்தார்கள்.                                           -=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-
இரத்த தானம் என்பதை ஒரு அரிய சேவையாகவே பார்த்துவருகிறோம்.  மற்ற சிறந்த சேவைகளைப் போல, இதற்கும் விழிப்புணர்வு ஊட்டி வரும் கட்டுரைகள் அதிகம். எனவேதான், இதன் மறு பக்கம் - மாற்றுப் பார்வை (?) குறித்த ”இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!” என்கிற இந்தக் கட்டுரையை வாசித்தபோது, திகைப்பாகவே இருந்தது. சில கேள்விகள் சரியாகவும், சில அபத்தமாகவும் தெரிந்தாலும், “யாருக்கேனும் தேவைப்படும்போது மட்டுமே இரத்த தானம் செய்வதே சரியான வழிமுறை” என்பது சரியெனவேப் படுகிறது. 

                                             -=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-
 விகடனில் ஒரு சிறுகதை படித்தபின்அநேகம் பேருக்கு, “பரீட்சைக் கனவு” வருகிறது என்று தெரிந்து, ரொம்ப மகிழ்ச்சியாயிருந்தது.  பின்னே, பரீட்சைன்னே தெரியாம வகுப்புக்குப் போய் பேயறைந்து நிற்பது, கனவில்தான் என்றாலும், அதுவும் பள்ளி-கல்லூரி எல்லாம் தலைமுழுகியபின், மிகக் கொடுமையான அனுபவம்.

இப்போதும் ஒரு பரீட்சைக் கனவு வந்தது.  வழக்கம்போலத்தான், தேர்வு என்று தெரியாமலே போய் நிற்கிறேன். எப்போதும் யாராவது புத்தகம் தருவார்கள் கடைசி நிமிட பிரஷ்-அப்புக்காக, இப்போ அட்வான்ஸ்ட் டெக்னாலாஜியாக ஒரு கை  “Kindle"-ஐ நீட்டுகிறது. ஆனால், அதிலும் சோதனை - நான் வாங்கியவுடன் அது ஹேங் ஆகிவிடுகிறது!!

                                             -=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-

Post Comment

24 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தெரிந்து கொள்ள, ரசிக்க வைத்த பல தகவல்கள்...

நன்றி...
tm2

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்ல தகவல்கள்.
பரீட்சை கனவு கொஞ்ச நாளைக்கு முன்பு வந்த கதை என்று நினைக்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

டிரங்குப் பெட்டி - பல விஷயங்களை அள்ளித் தந்தது பெட்டி....

தொடருங்கள்...

Vijayan Durai said...

ரத்த தானம் மேட்டர் பீதியை கிளாப்புகிறது.. :)

சாந்தி மாரியப்பன் said...

பல விஷயங்களை உள்ளடக்கிய ட்ரங்குப்பெட்டி அசத்தல்.

suvanappiriyan said...

பயனுள்ள பல தகவல்கள். ஆனால் ரத்த தானத்தில் சில மாற்றுக் கருத்துக்கள் உண்டு.

ஸ்ரீராம். said...

கவலை வேண்டாம்..... தமிழ்நாடும் சீக்கிரமே முன்னேறும்!

ஆர்ம்ஸ்டிராங் தகவல்கள் எனக்கும் அதே அளவு ஆச்சர்யம், அதிர்ச்சி. இந்த போதை மருந்து உட்கொள்ளுதலில் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் சிக்கலானவை.

மலாலாவை இன்னமும் கூட விடப் விடப் போவதில்லை என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

Anisha Yunus said...

//
இப்போதும் ஒரு பரீட்சைக் கனவு வந்தது. வழக்கம்போலத்தான், தேர்வு என்று தெரியாமலே போய் நிற்கிறேன். எப்போதும் யாராவது புத்தகம் தருவார்கள் கடைசி நிமிட பிரஷ்-அப்புக்காக, இப்போ அட்வான்ஸ்ட் டெக்னாலாஜியாக ஒரு கை “Kindle"-ஐ நீட்டுகிறது. ஆனால், அதிலும் சோதனை - நான் வாங்கியவுடன் அது ஹேங் ஆகிவிடுகிறது!!//

உங்களுக்காவது பரவாயில்லை.... எனக்கு எப்பவுமே கடைசி எக்ஸாமுக்கு முன்னாடி இவர் வலுக்கட்டாயமா டிரெயின் ஏத்திடறாரு... ஏன்னே தெரியலை.... அடுத்த தடவையாவது கேட்கனும்னு ஒவ்வொரு தடவையும் யோசிக்கறேன்... :))

இரத்ததானம்---- :((

மன்சி (Munsi) said...

What nonsense?

காயப்பட்டால் மட்டுமே இரத்தம் தேவை என்றில்லை. வேறு அறுவை சிகிச்சை நடக்கும் போதும், இரத்த புற்று நோயின் போதும் இரத்தம் தேவைப்படுகிறது.

அதைத் தவிர ஆராய்ச்சிக்கும் இரத்தம் தேவைப்படுகிறது.

இரத்தத்தை சும்மா எல்லோரிடமும் எடுக்க முடியாது. பாதிப்பேருக்கு இரத்தம் ஃபிட் இல்லை என்பது தான் உண்மை. உடல் நிறை மட்டுமே இரத்தம் கொடுக்கப் போதுமானதில்லை. சில தொற்றுக்கள் இருக்கின்றதா என்று டெஸ்ட் செய்ய கொஞ்சம் பணம் செலவாகும்.

அதை விட இரத்தம் கொடுத்த ஒரு வாரத்திலேயே இரத்தம் சுரந்துவிடும். இரத்தம் கொடுத்துவிட்டேன் என்று நாலு வேளையும் முட்டையும் பாலும் முழுங்கினால், உடல் தடித்துப் போவது நிச்சயம். இரத்தம் கொடுத்த மறு நாளே ஓட்டப் போட்டிக்குப் போனவர்களையும் எனக்குத் தெரியும். ஏன், நானே இரத்தம் கொடுத்த அரை மணி நேரத்தில் 3 கிலோ மீற்றர் சைக்கிள் ஓட்டி இருக்கிறேன்.

இரத்தம் எடுக்கும் அந்த கொஞ்சம் நேரம் தலை கிறு கிறுக்கும். சில மணி நேரம் கூட சிலருக்கு இருக்கும். அது சாதாரண விடயமே.

ஆண்களிடம் மட்டுமே 450 மில்லி எடுப்பார்கள். பெண்களிடம் 250 மில்லி தான் எடுப்பார்கள். ஆனாலும் நாங்கள் வாதாடி 450 கொடுத்திருக்கிறோம்.

பீரிசலில் இரத்தத்தை சேமிக்கலாம் என்றாலும், அவசர தேவைக்குப் பாவிக்க முடியாது. அதனால் பிரிஜ்ஜில் தான் வைப்பார்கள். அப்படி வைக்கும் இரத்தத்திற்கும் குறைந்த அளவு ஆயுட் காலமே 35 - 45 நாட்களே. பாவிக்காத இரத்தம் வீணாகப் போகும். வேறு வழி இல்லை.

இரத்தம் கொடுத்த பைலட் கிட்டத்தட்ட 2-3 நாட்கள் விமானத்தை ஓட்டமுடியாது. அதே போல் தான் மருத்துவர்களும், நர்சுகளும். அவர்கள் இரத்தம் கொடுத்தால் இரண்டு நாட்களுக்கு முக்கியமாக காயங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாது. எப்போது அவசர சிகிச்சை நடக்கும் என்று தெரியாத பட்சத்தில் மருத்துவமனை ஆட்களால் இரத்தம் கொடுக்க முடியாது. அவர்கள் இரத்தம் கொடுத்த அன்று பலத்த காயங்களுடன் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால், நோயாளியின் நிலை என்ன?

//இரத்ததானம் செய்தவர் மயக்கம் போட்டு விழுந்து கிடப்பதை, தண்ணியடித்து விட்டுதான் விழுந்து கிடக்கிறார். போதை தெளிந்ததும் எழுந்து விடுவார் என்ற தெளிந்த சிந்தனையில் மக்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்றால்//

குடித்துவிட்டு விழுந்து கிடப்பவர் அருகே போகும் போது வரும் நாற்றம் இரத்ததானம் செய்தவர் அருகே போகும் போது வருவதில்லை.

பால கணேஷ் said...

லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங் மேட்டரில் உங்கள் கருத்துடன் நானும் உடன்படுகிறேன். எனக்கு வரும் கனவுகள் எல்லாமே பயணிப்பதாகத்தான் வருகிறது. என்ன கோளாறோ என் பாடி சிஸ்டத்துல...? ரத்ததான விஷயம் கொஞ்சம் பகீர் தான் ஏற்படுத்திச்சுங்க. நண்பர் வெ.நா. சொன்ன மாதிரி நிறைய விஷயங்களை அள்ளித் தந்துடுச்சு டிரங்குப் பெட்டி.

CS. Mohan Kumar said...

கேரளா பற்றி எழுதிய முதல் செய்தி இப்போ தான் வாசிக்கிறேன். இது மாதிரி விஷயம் எனில் பேப்பர் லின்காவது தருவீங்க. இதற்கு தரலை

பரீட்சை கனவு தான் எனக்கு இன்னும்கூட அதிகம் வரும் ஒன்று !

ஹுஸைனம்மா said...

@மோகன்,

அமீரகத்தில் இது மிகவும் பரபரப்பான செய்தியாக இருந்தது. இந்திய ஆங்கிலப் பத்திரிகைகளிலும் முன்னிலைச் செய்தியே. தமிழகப் பத்திரிகைகள் இதைக் கண்டுகொள்ளாதது வியப்பு, அதிர்ச்சி!! எல்லாரும் அறிந்திருக்கக்கூடிய செய்திதானே என்றுதான் லிங்க் தரவில்லை.

இப்படி என்றால், தனிப்பதிவாகவே போட்டிருக்கலாமே!! வட போச்சே!! :-)))

இதோ லிங்க்!!
ஏர்-இந்தியா விமாணி ஹைஜாக் சிக்னல் அனுப்பியது ஏன்? விமான நிலையத்தில் நடந்தது என்ன?

The Hindu news:
http://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/air-india-passengers-stranded-on-board-for-13-hours/article4013479.ece

ராமலக்ஷ்மி said...

பல தகவல்கள் அறிய முடிந்தது. பள்ளிக்கனவு வந்ததுண்டு. கின்டில் ஹேங் ஆவது நல்ல திருப்பம்:)))!

pudugaithendral said...

மதுரை இப்போ சர்வதேச விமான நிலையம் ஹுசைனம்மா. கொழும்புக்கு விமான சேவை நடக்குதுல்ல. :))

ADHI VENKAT said...

இத்தனை செய்திகளை உள்ளடக்கிய ட்ரங்கு பெட்டி கிரேட் தான்....

ஹுஸைனம்மா said...

திண்டுக்கல் தனபாலன் - ரொம்ப நன்றிங்க.

முரளிதரன் - ஆமாங்க, பரீட்சைக் கனவு கத, ஆ.வி.யில் வந்து சில மாதங்கள் ஆச்சுன்னு நினைக்கிறேன். நன்றிங்க.

வெங்கட் - நன்றி.

ஹுஸைனம்மா said...

திண்டுக்கல் தனபாலன் - ரொம்ப நன்றிங்க.

முரளிதரன் - ஆமாங்க, பரீட்சைக் கனவு கத, ஆ.வி.யில் வந்து சில மாதங்கள் ஆச்சுன்னு நினைக்கிறேன். நன்றிங்க.

வெங்கட் - நன்றி.

ஹுஸைனம்மா said...

விஜயன் - ரத்த தானம் பற்றி எனக்கும் (ஏற்கனவே உள்ள) சில ஐயங்கள் கிளம்புவது உண்மை. நன்றி.

அமைதிக்கா - நன்றிக்கா.

சுவனப்பிரியன் - மாற்றுக் கருத்துகளைப் பதிந்திருந்தால் நாங்களும் தெரிந்துகொள்வோமே.

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார் - தமிழ்நாடு விமான நிலையங்கள்: நான் வெளிநாடு வந்துசெல்லும் இந்த 20 ஆண்டுகளில், ஆரம்பத்தில் சென்னை மட்டுமே சர்வதேச விமான நிலையம். பின்னர் சமீபத்தில்தான் திருச்சி விரிவாக்கப்பட்டது. இதோ இப்போது மதுரையும் தொடக்க நிலையில். ஆனால், முழு சேவை இன்னும் இல்லை. இன்றுவரை, தென்மாவட்டத்துக்காரர்கள் திருவனந்தபுரம் வழியேதான் வந்துசெல்கிறோம். ஒவ்வொரு முறையும் தமிழர்களை சேட்டன்கள் படுத்தும்பாடு!!

‘அவிட நாட்டில்’, மூன்றில் இரண்டு விமான நிலையங்கள் NRIக்களின் பொருள் பங்களிப்பும், மேற்பார்வையிலும் உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹுஸைனம்மா said...

அன்னு - பட்டம் வாங்கிடக்கூடாதுன்னு சதி நடக்குதோ??!! :-))))

பாலகணேஷ் சார் - நன்றிங்க.
ஆர்ம்ஸ்ட்ராங் மேட்டர் இன்னும் நம்பமுடியாமத்தான் இருக்கு. பயணிக்கும் கனவுகள் வந்தா நல்லதுதானே? செலவில்லாம நாலு இடங்களைப் பார்க்கலாமே?

மோகன் - நன்றி.

ஹுஸைனம்மா said...

ராமலக்ஷ்மிக்கா - நன்றிக்கா.

புதுகைத் தென்றல் - மதுரை இப்போதான் சர்வதேச சேவை தொடங்கிருக்காங்க. நல்ல சேவைத் தரம் இருந்தா, நல்லா வருமானம் (அரசுக்கும், சைடில் ஊழியர்களுக்கும் கூட) கண்டிப்பா வரும்.
முதலில், சவூதி-மதுரை சேவை, இலங்கை ஏர்லைன்ஸ் செய்யப்போவதாகக் கேள்வி.

கோவை2தில்லி- வாங்கப்பா. நன்றி.

ஹுஸைனம்மா said...

@மன்சி: இரத்த தானத்தை நான் முழுமையாக கேள்விக்குள்ளாக்கவில்லை. நானும் அதைப் போற்றுபவள்தான், அதனால்தான் இப்படியொரு கட்டுரையைப் பார்த்ததும், எனக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால், அதில் உள்ள சில (நியாயமானக்) கேள்விகளுக்கு (இரத்த வங்கி - பாதுகாப்பு போன்ற கேள்விகளுக்கு) விடை கிடைத்தால், நம்பிக்கை விட்டுப் போகாது.

S.டினேஷ்சாந்த் said...

லான்ஸ் ஆம்ஸ்ட்ரோங் பயன்படுத்தியது போதைமருந்து அல்ல ஊக்கமருந்து அன்றோ.
டிரங்குப் பெட்டி அருமை

ஹுஸைனம்மா said...

@தினேஷ்!!

//லான்ஸ் ஆம்ஸ்ட்ரோங் பயன்படுத்தியது போதைமருந்து அல்ல ஊக்கமருந்து அன்றோ//

சுட்டியமைக்கு நன்றி.

போதை மருந்து, ஊக்க மருந்து இரண்டுக்குமே ஆங்கிலத்தில் "doping" என்று சொல்லப்படும். அதாவது, தடை செய்யப்பட்டதை பயன்படுத்துதல். மேலும், சில ஊக்க மருந்துகளும், போதை மருந்துகளும் ஸ்டீராய்ட் வகையைச் சேர்ந்தவைதானே. (http://www.cqld.ca/livre/en/en/20-doping.htm)

அதனால் வந்த குழப்பத்தில், தமிழ்ப்படுத்தும்போது, போதை மருந்து என்று சொல்லிவிட்டேன்.