Pages

ஈயம் பித்தளை




அமீரகத் தமிழ் மன்றம், மகளிர் தினத்தையொட்டி சென்ற ஏப்ரல் மாதம் “பெண்ணியம் எனது பார்வையில்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரைப் போட்டி நடத்தியது. அதற்கென அனுப்பி வைத்த எனது கட்டுரை, மூன்றாம் பரிசைப் பெற்றது. 

அதற்காக வழங்கப்பட்ட ஷீல்ட் (பட்டயம்??): 

கட்டுரையைக் குறித்து, நடுவர்களில் ஒருவர் தெரிவித்திருந்த கருத்து: 

பெண்ணியம் பற்றிய ஆராய்வை தர முயற்சித்திருப்பது கொஞ்சம் திருப்தியாய் இருக்கிறது. ஆனாலும் பெண்ணியத்தை பரந்த அணுகுமுறையில் யாருமே பார்க்கவில்லை அதில் இந்த கட்டுரைக்குரியவரும் விதிவிலக்கல்ல. ஆனாலும் எழுத்தாக்கம் கொஞ்சம் சிறப்பானதாக இருக்கிறது மற்றைய கட்டுரைகளை விட என்பது எனது கருத்து. ஆகையால் 3வது இடம்.

இனி, கட்டுரை:  
பெண்ணியம் - எனது பார்வை

முன்னுரை:

பெண்ணியம் - இந்த வார்த்தையை வாசிக்கும்போதே சிலருக்குப் பரிகாசப் புன்னகை தோன்றும்; சிலருக்கு உணர்ச்சிகள் பொங்கும்; சிலரோ இதற்குரிய சரியான பொருளைத் தேடும் முயற்சியில் இறங்குவர். நானும் இறங்கினேன். கிட்டியவற்றைப் பகிர்கிறேன் உங்களோடு. 

இது “பெண்”ணியம் என்பதால், பெண்தான் இதைக் குறித்து ஆராயவேண்டும், பேசவேண்டும் என்ற எண்ணம் முதலில் மாற வேண்டும். ஆணும், பெண்ணும் இயைந்து வாழ்வதே சமூகம். ஆகவே, பெண்ணைக் குறித்து ஆணும், ஆணைக் குறித்துப் பெண்ணும் அறிந்து கொண்டால் மட்டுமே நல்லிணக்கம் கிட்டும். அதன் ஒரு வழியே ‘பெண்ணியம்’ பேசுதல்!! 

பெண்ணியம் - வரைமுறை: 
 
‘பெண்ணியம்’ (Feminism) என்றால் என்ன? ”ஆண்களுக்குச் சமமான, அரசியல், பொருளாதார, சமூக உரிமைகள் பெண்களுக்கு வழங்குவது” என்றும், ”பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்புகள் தருவது” என்றும், இதற்குப் பல வரைமுறைகள் தந்திருக்கும் விக்கிபீடியா, ”பெண்ணியத்தை வரையறுப்பதென்பதே கூட சிக்கலானதாக இருப்பதுண்டு” என்றும் சொல்கிறது. கட்டுரையின் போக்கில் இதன் சரியான வரைமுறையைப் பார்ப்போம். 

பெண்ணீயத்தின் வரலாறு: 

ஆதிகாலத்தில், ஆணும் பெண்ணும் ஒன்றாகச் சேர்ந்தே பிழைப்புக்கான வழிகளைத் தேடுவார்களாயிருந்திருக்கும். பிறகு, குழந்தைகள் வந்ததும், அவற்றை மிருகங்களிடமிருந்தும், இயற்கைப் பேராபத்துகளிடமிருந்தும் காத்துக் கொள்ளவென்று பெண் மட்டும் வேட்டையாடுதலைவிட்டு குகைக்குள் தங்கவேண்டி வர, அப்படியே காலப்போக்கில் சமையல், குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட ‘குடும்பப் பொறுப்புகள்’ அவள் தலையில் வீழ்ந்தன. 

உணவுக்காகவும், மற்ற தேவைகளுக்காகவும் வெளியே பல இடங்களுக்கும் சென்று வர வாய்ப்புகள் கிடைத்த ஆண், அனுபவங்கள் தந்த அறிவினாலும், உழைப்பு தந்த உடல் வலுவினாலும் பெண்ணைவிடச் சிறப்பானவனாகிவிட, அப்போதுதான் தொடங்கியிருக்க வேண்டும் பெண்ணின்மீதான ஆணின் ஆதிக்கமும், அதிகாரமும்!! உணவு இன்னபிற இன்றியமையாத தேவைகளுக்காக ஆணையே, பெண் சார்ந்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால், ஆணின் அடக்குமுறைகளுக்கு அவள் பணிந்தே ஆக வேண்டிய சூழல் இருந்தது. 

மேலும், பெண்களும், குழந்தைகளும் ஆணின் பராமரிப்பில் இருந்ததால், அவர்கள் ஆணின் உடமைகளாகவே பார்க்கப்பட்டனர். அவர்களுக்கு வரும் ஏற்றமும், தாழ்வும் சம்பந்தப்பட்ட ஆணின் பெருமைக்கு அணி சேர்ப்பதாகவோ, இழுக்காகவோதான் நோக்கப்பட்டன. 

அதனால் காலப்போக்கில், இரு ஆண்களுக்கிடையே சண்டை வந்தால், அவர்களின் எதிரியின் பொருட்களுக்கு மட்டுமின்றி, ’உடமை’களான பெண்களையும் சேதப்படுத்த முனைந்தனர். இந்த ‘சேதம்’ உரிமையான ஆணிற்குத் தோல்வியாகக் கருதப்பட்ட சமயத்தில்தான் ‘கற்பு’ என்ற கருத்து களமிறக்கப்பட்டிருக்க வேண்டும். 

இப்படியாக, பொருளாதாரப் பலமில்லாத பெண், ஆணுக்கு அடிமைப்பட்டவள் ஆகிப்போனாள். உலக அறிவோ, உடற்பலமோ இல்லாத நிலையில், இந்த அடிமைத் தளையிலிருந்து அவளால் மீள முடியவில்லை. இதற்குள் “குடும்பம்” என்ற அமைப்பும் ஏற்பட்டிருக்க, ”மீள வேண்டும்” என்று நினைத்தாலும் குடும்ப பந்தங்கள் என்ற நிர்பந்தத்தால் தளையிலேயே தொடரவேண்டியவளானாள். 

னினும், ஒரு கட்டத்தில் பெண்ணினத்தின்மீதான அடக்குமுறைகள் - வன்முறை, அடிமைத்தனம், பாலியல் சுரண்டல், பால்ய விவாகம், கல்விமறுப்பு, வாக்குரிமை மறுப்பு - என்று பல்வேறு அவதாரங்களெடுத்து அளவின்றி போனதால், பெண் தடைகள் உடைத்துப் பொங்கி எழுந்தாள். முதல்படியாக, பொருளாதாரத்தில் ஆண் உயர்ந்து இருப்பதால்தானே, அவன் கை ஓங்கியும், பெண்கள் கை தாழ்ந்தும் இருக்கிறது என்று எண்ணி, தானும் கல்வி கற்று, பொருளீட்டும் முயற்சிகளில் இறங்கினாள். இத்தருணங்களில்தான் பெண்ணுரிமை, பெண் விடுதலை, பெண்ணியம் ஆகியவை உருப்பெற்று விவாதக் களமாகின. 

இன்று அநேகமாக ஆணுக்குச் சமமாகவே பெண்களும் பொருளாதாரத்தில் மேன்மை பெற்று விளங்குகின்றனர். எனில், அப்பெண்கள் விடுதலை அடைந்துவிட்டனரா? என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி!! 

தற்காலப் பெண்ணியம்: 

ஒருமுறை, தொலைக்காட்சியில் ஒரு பிரபல கலந்துரையாடல் நிகழ்வில், பெண்களிடம் “ஏன் சிகரெட் புகைக்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு, “ஆண் மட்டும்தான் புகைக்கலாமா? எங்களாலும் முடியும் என்று காட்டவே புகைக்கிறோம்” என்று சில பெண்கள் சொன்னதைக் கேட்டபோது மூச்சடைத்தது!! இதிலே ஒரு பிரபல பெண் பத்திரிகையாளரும் உண்டு என்பது கூடுதல் அதிர்ச்சி. 

இதே தவறைத்தான் பல பெண்கள் இன்று செய்து வருகின்றனர். “அதென்ன ஆம்பளை மட்டும்தான் குடிப்பது, இரவுபகல் பாராமல் நண்பர்களோடு ஊர்சுற்றுவது? நாங்களும் செய்வோம்” என்று இளம்பெண்களும்; “ஆண் நேரங்காலம் பார்க்காமல் அலுவலகப் பணியில் ஈடுபடவில்லையா? எங்களாலும் முடியும்” என்று பால்குடி மாறா குழந்தையைப் புறக்கணிப்பது; இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இதுதான் பெண்ணியம் என்ற தவறான புரிதலைக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால், ஒன்று புரியவில்லை; ஆண்கள் உடலை வெளிக்காட்டும் விதமாக ஆடை அணிவதில்லை. பின் ஏன் எல்லாவற்றிலும் ஆண்களோடு போட்டி போடும் இந்தப் பெண்கள் மட்டும் இப்படி அணிகிறார்கள்? பெண்ணை வேடிக்கை, விளம்பரப் பொருளாக்கும் வியாபார உலகின் தந்திரங்களுக்கு இவர்கள் இரையாகிப் போனதுதான் இதற்குக் காரணம். வேதனையிலும் வேதனையான உண்மை!! உதாரணத்திற்கு, பெண்களுக்கான ’ஊசி உயர் குளம்பு’ (பென்சில் ஹைஹீல்ஸ்) செருப்பு வடிவமைப்பாளர் ஒருவர் கூறுகிறார்: ” ஹை ஹீல்ஸ் அணிவது பெண்ணுக்கு அதிகாரம் தருகிறது; அவளைப் பெண்ணாக உணர வைக்கிறது” என்று!! வெறுமே உயரத்தைக் கூட்டும் ஒரு செருப்பு என்ன அதிகாரத்தைத் தந்துவிடப் போகிறது? மருத்துவ உலகமோ ஹை ஹீல்ஸை முற்றிலும் தவிர்த்து உடல்நலம் காக்க அறிவுறுத்துகிறது. இதையும் மீறி, அவ்வியாபாரி போன்றவர்களின் லாப நோக்குகளைப் புரிந்துகொள்ளாமல் ஹைஹீல்ஸ் அணிந்து உடல் சீர்கேட்டை வருந்தி வரவழைத்துக் கொள்பவர்களைத்தான் அதிக எண்ணிக்கையில் பார்க்கிறோம். 

இங்ஙனமே, பெரும்பாலான பெண்கள், குடும்பத்திற்குக் கூடுதல் பொருட்தேவை இல்லாத பொழுதிலும், பொருளாதாரத்தில் ஆணைப் போலாகிவிடவேண்டுமென்ற போட்டி மனப்பான்மையுடனும், பொருளாதாரச் சுதந்திரமும் பெற்றிருப்பதே பெண்ணியம் என்ற தவறான கணிப்பினாலும் குழந்தைநலத்தையும், குடும்பநலனையும் பின்தள்ளிவிடுகிறார்கள். இந்தப் போட்டியில், தான் ஒரு பணம் சம்பாதிக்கும் இயந்திரமாகவும் ஆக்கப்பட்டிருப்பதை உணராமல், தன் நலனையும், ஏன் சுதந்திரத்தையும்கூட இழந்து, வாழ்வை ரசிக்க நேரமில்லாமல் அரக்கப்பரக்க ஓடிக்கொண்டேயிருக்கிறாள். 

ஒரு காலத்தில் அதீதமாய் அடக்கியாளப்பட்டிருந்த காரணத்தால், விடுதலை கிடைத்ததும் கரைகள் உடைத்த காட்டாற்று வெள்ளமாய்ப் பயணிக்க முனைகின்றனர் இவர்கள். தறிகெட்ட காட்டாற்று வெள்ளம் அழிவையேத் தரும் என்பதை உணராமல் போனதேனோ? 

ஒருபுறம், இப்படியானப் பெண்கள் என்றால், சமூகத்தின் இன்னொரு புறம் தன் உரிமைகள் என்னவென்றே தெரியாமல் அடிமைப்பட்டுக் கிடக்கும் சமூகத்தின் அடித்தட்டுப் பெண்கள்!! படிப்பறிவும், சுய அறிவும் இல்லாமல் தன் வீட்டு ஆணின் பங்கையும் சேர்த்துத் தானே உழைத்துப் பொருளீட்டி, அந்த ஆண் உட்பட குடும்பத்தின் மொத்தப் பாரத்தையும் மட்டுமல்லாமல், அந்த ஆணின் வன்முறையையும் அடக்குமுறையையும்கூட தன் மெல்லிய தோள்களில் தாங்கிக்கொண்டிருக்கும் இவர்களிடம் பெண்ணியம், பெண்ணுரிமை என்று பேசிப்பாருங்கள் – பேந்தப் பேந்த விழிப்பதைத் தவிர வேறொன்றும் தெரியாது அவர்களுக்கு!! 

நுனிநாக்கு ஆங்கிலமும், நாகரீக உடையும் அணிந்து கண்ணாடிச் சுவர்களால் சூழப்பட்ட அறைகளில் உயர் உத்தியோகம் பார்க்கும் பெண்களைப் பார்த்து, பெண் முன்னேற்றம் என்று பெருமைப்படும் நாம், நைந்த உடையும், பஞ்சடைத்த கண்களுமாய் மண்சட்டி சுமக்கும் அந்த அடித்தட்டுப் பெண்களைப் பார்த்து ஏன் பரிதாபப்படுகிறோம்? அவர்களும் உழைத்துப் பொருளீட்டுபவர்கள்தானே? 

பெண்ணியம் - எனது பார்வை: 

“யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே, கருடன் சொன்னது; இதில் அர்த்தம் உள்ளது” என்றார் கண்ணதாசன். அதேபோல, ஆணோ, பெண்ணோ அவரவர் பொறுப்பு, கடமை அறிந்து நடந்துகொள்ளவேண்டும். 

ஆணுக்கென்று கடமைகள் உண்டு; அவற்றில் அவன் வழுவாது இருத்தல் ஆண்மைக்குப் பலம் சேர்க்கும். அதேபோல பெண்ணிற்கான இயற்கையான கடமைகளை முதற்கண் பேணி நடத்தலே பெண்ணினத்தின் பெருமை. 

ஆணுக்குச் சமமான சமூக, அரசியல், பொருளாதார உரிமைகளைப் பெண்ணுக்கு வழங்குவதுதான் பெண்ணியம் என்பது சிலரின் கருத்து. இல்லவே இல்லை. பெண்ணுக்கு யாரும் எந்த உரிமையும் தரத் தேவையில்லை. ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதாக எந்த இனமானாலும், அதனதன் உரிமைகள் அவற்றுடன் உடன்பிறந்தவையே. பெண்ணினத்துக்கும் அதுபோல உரிமைகள் உண்டு. அந்த உரிமைகளை – சமூக, கல்வி, அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட எல்லா உரிமைகளையும் - அவளிடமிருந்து பறித்துப் பிடுங்காதிருப்பதே பெண்ணியம் என்பதே என் பார்வை. 

இதை ஒரு உதாரணத்துடன் விளக்கிச் சொன்னால் எளிதாகப் புரியும். சமீபத்தில் மேலைநாட்டு பள்ளி ஒன்றில், ஆண்-பெண் சமத்துவம் பேணுவதற்காக என்று ஒரு விநோத முயற்சியில் ஈடுபட்டுள்ளதைப் படிக்க நேர்ந்தது. குழந்தைகளை பிறப்புமுதல் அவர்களுக்கு ஆண்-பெண் என்ற பேதமே தெரியாதவாறு வளர்க்கிறார்களாம். எப்படியெனில், பெயர், ஆடை, பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட எல்லாவற்றிலும், இது ஆண்குழந்தை, இது பெண் குழந்தை என்று மற்றவர்களுக்கு மட்டுமல்ல, அக்குழந்தைகளுக்கே வித்தியாசம் தெரியாதவகையில் வளர்ப்பார்களாம்!! அதாவது, ஒரு பெண் குழந்தைக்குத் தான் பெண் என்ற அடிப்படை விஷயமே தெரியாது!! (போலவே ஆண் குழந்தைக்கும்) 

பெண் குழந்தையோ, ஆண் குழந்தையோ இயல்பாகவே பிறப்புமுதலே அவர்களுக்கென்று தனி ஆர்வங்கள் இருக்கும். அதைப் பறிக்கும் அதிகாரத்தை இவர்கள் கையிலெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். யாருமே சொல்லிக் கொடுக்காமலேயே (பெரும்பான்மையாக) ஒரு பெண்குழந்தைக்குப் பொம்மை பிடிக்கும்; ஆண்குழந்தைக்கு விளையாட்டுக் கார் பிடிக்கும். இவற்றை அவர்களிடமிருந்து பிடுங்கி, மாற்றிக் கொடுப்பதுதான் இவர்களின் ”சமத்துவ” வளர்ப்பியல்!! இந்த அதிகாரத்தை இவர்களுக்கு தந்தது யார்? 

இது தொடருமாயின், எதிர்காலத்தில் “பெண்ணைப் பெண்ணாக இருக்க விடுங்கள்” என்பது பெண்ணியத்தின் புதிய வரைமுறையாகலாம்!!

பெண்ணியம் பேணுதல்: 

ஏற்கனவே சொன்னதுபோல ஆண், பெண் என்ற தனி மனிதர்கள் சேர்ந்ததுதான் குடும்பம், சமூகம் எல்லாம். தனிமரங்கள் தோப்பானால்தான் பெருத்த அறுவடை!! அதுபோலத்தான், ஆண், பெண் என்ற தனிமனிதர்களைவிட, இவர்கள் இணைந்த குடும்பங்களே சமூகங்களுக்கு அதிகப் பயனளிக்கும். 

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் 'பெண்கள், ஆண்களைப் போலவே நடையுடை தோற்றத்தில் போலியாக நடிப்பதால் ஆண்களுடன் போட்டியிட முடியும்தான். ஆனால், ஆண்களைப் போல பாவனை காட்டுவதன் மூலம் அவள் தனக்குரிய உயரிய நிலையை எட்ட முடியாது. பெண்கள், ஆண்களோடு இணைந்து நிறைவு செய்பவர்களாகத்தான் இருக்கவேண்டுமேயொழிய ஆண்களாகவே மாறிவிடக்கூடாது' என்று கூறியுள்ளார். 

திருவள்ளுவரும், “இல்வாழ்க்கை” என்ற தலைப்பில் ஆணுக்கும், “வாழ்க்கைத் துணைநலம்” என்ற தலைப்பில் பெண்ணுக்கும் குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுரைகள் கூறியுள்ளார் என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டும். இருவரில், பெண்ணுக்கு மட்டுமோ அல்லது ஆணுக்கு மட்டுமோ என்றில்லாது, இருவருக்குமே தனித்தனி அதிகாரம் படைத்ததிலிருந்தே நல்ல இல்லறம் இருவரின் பொறுப்புமே என்பது அறியவரும். 

இதற்கு, முதலில் ஆண், பெண்ணின் மதிப்பையுணர வேண்டும். உடல்ரீதியாகச் சற்றுப் பலவீனமானவள் என்பதாலேயே அவள் தன்னைவிடத் தாழ்ந்தவளாகிவிடமாட்டாள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உள்ள ரீதியாகவும், அறிவுரீதியாகவும் அவள் ஆணுக்குச் சற்றும் சளைத்தவளல்ல என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவளுக்குரிய மரியாதையைக் கொடுத்தேயாக வேண்டும். 

இல்லறம் நல்லறமாவதற்கான அடிப்படைகள், திருமணத்திற்குப் பிறகல்லாது, அவ்விருவரின் வளர்பருவத்திலேயே ஊன்றப்படவேண்டும். அதாவது, இளையவராய் இருக்கும்பொழுதே, ஆணைப் பெண்ணும், பெண்ணை ஆணும் என ஒருவரையொருவர் மதிக்கக் கற்பித்தல் வேண்டும். பெண்ணைப் பற்றிக் குறைவாகப் பேசுதல் தவிர்த்தல் வேண்டும். சில பெற்றோர் தம் குழந்தைகளிடையேகூட, ஆண்குழந்தை, பெண்குழந்தை என்று பாரபட்சம் காட்டுவர். உதாரணமாக ”அவன் ஆம்பளப்புள்ளை, வீட்டு வேலைகளில் உதவிடத் தேவையில்லை” என்று சொன்னால், ஆணுக்கு “தான் வலியவன்; உயர்ந்தவன்” என்ற எண்ணம் மனதில் பதியும். இதுவே, அவன் வளர்ந்துவரும்போது பெண்களைக் குறைவாக மதிப்பிட்டு, அவமதிக்கும் எண்ணத்தைத் தரும். அதே சமயம் பெண்ணுக்கு, தாழ்வு மனப்பான்மையையும், ஆண்கள் மீதான வெறுப்பையும் தோற்றுவிக்கும். 

இரு பாலருக்கும் தத்தம் உரிமைகளையும், கடமைகளையும்கூட வளர்பருவத்திலேயே போதிக்கப்பட்டால், பசுமரத்தாணிபோலப் பதிந்து, தம் காலத்தில் தத்தம் கடமைகளைச் செவ்வனே செய்து, சுயமரியாதையும் பேணிக்கொள்வர். 

சுருங்கக்கூறின், பிள்ளைவளர்ப்பில் பெரிதும் ஈடுபடுவது பெண்களே என்பதால், வளரும் தலைமுறையினரிடையில் பெண்ணியம் போற்றப்படுவதும் அவர்கள் கைகளிலேதான்!! மேலும் தாம் சந்திக்க நேருகின்ற துன்புற்று கிடக்கும் கீழ்த்தட்டு பெண்களிடமும் பெண்ணியம் பரப்ப வேண்டியதும் பெண்களின் பொறுப்பே!! 

முடிவுரை: 

ஒரு நண்பர் நக்கலாகச் சொன்னார், “அதென்ன பெண் ஈயம், ஆண் பித்தளைன்னுகிட்டு...”. நான் பதில் சொன்னேன், “ஆண் எனும் பித்தளையோ, குடும்பம் எனும் செம்போ, சமூகம் எனும் வெண்கலமோ, எதுவானாலும், பெண் எனும் ஈயம் சரிவிகிதத்தில் பூசப்பட்டாலன்றி, இவையாவும் பயன்படுத்த லாயக்கற்றவைகளாகிவிடும்!”. 

Post Comment

29 comments:

அமுதா கிருஷ்ணா said...

முடிவுரை அடி தூள்...

Seeni said...

maasha allah!

nalla vilakkam !

3 idam kidaththamaikku vaazhthukkal....

Seeni said...

nalla pakirvu!

maasha allah!

3 idam kidaiththamaikku vaazhthukkal..

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான கட்டுரை... விளக்கம் அருமை...

முடிவுரை மேலும் பெருமை சேர்க்கும் வரிகள்... வாழ்த்துக்கள்...

tm3

ஸ்ரீராம். said...

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.

ஆதிகாலத்திலிருந்து தொடங்கி அழகாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள்.

அப்பாதுரை said...

நடை கோர்வையாக இருக்கிறது. எனினும்,குறுகிய நோக்கிலான கட்டுரை. உடை, உணவு, பேச்சு, நடத்தை - கலாசாரத்தை மட்டும் குறிவைத்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. (ஆமாம், நடுவர் பரந்த வீச்சு என்றால் என்னவென்று சொன்னாரா? இல்லை என்னை மாதிரி சும்மா கல்லெறிந்து விட்டுக் காணாமல் போனாரா?)

வெற்றிக்கும் பரிசுக்கும் பாராட்டுக்கள்.

Naazar - Madukkur said...

வாழ்த்துக்கள்

பெண்ணிய கருத்துக்களுக்கும், மூன்றாம் பரிசுக்கும்

enrenrum16 said...

பரிசு பெற்றதுக்கு வாழ்த்துக்கள் ஹுஸைனம்மா...

கட்டுரையும் அருமை. ஈயத்திற்கும் பெண்ணியத்திற்கும் சம்பந்தமேயில்லை. இருப்பினும் அதற்கும் ஒரு விளக்கம் கொடுத்து நண்பரின் வாயடைத்துவிட்டீர்களே!! nice.

வல்லிசிம்ஹன் said...

மிகக் கஷ்டமான வார்த்தை பெண்ணியம்.
அதைக் கையில் எடுத்துக் கொண்டு லாகவமாக் கையாண்டு இருக்கிறீர்கள்.
பெண்கள் சமுதாயமே நான்கு விதத்தில் யோசித்து நான்கு விதமாகச் செயல் படுகிறார்கள்.
அடிமை,ஆளுபவர்கள், அடக்குபவர்கள்,வேறு வழியில்லாமல் அடங்கிப் போகிறவர்கள் எல்லோருக்கும் சமமாகச் சிந்திக்கும் திறன் வந்தால் பெண்ணியம் சிறக்கும் என்றுதான் நினைக்கிறேன்.
வாழ்த்துகள் மா.

Jaleela Kamal said...

நானும் இந்த பதிவை எதிர் பார்த்து கொண்டே இருந்தேன்.

வாழ்த்துக்கள் சூப்பர் ஹுஸைன்னம்மா?

Sangeetha said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்

அருமையாக எழுதி இருக்கிறீர்.

முடிவுரை அருமை

மனோ சாமிநாதன் said...

மிக அருமையான, தெளிவான கருத்துக்கள் ஹுஸைனம்மா!
பரிசு பெற்ற‌மைக்கும் இனிய வாழ்த்துக்கள்!!

அன்புடன் மலிக்கா said...

பெண்ணியம்
பெண் ஈயமாய்
பொருப்பாய்
பெருமை சேர்க்கும்
வகையில் முடிவுரை.

ஹுசைன்னம்மா யார்கிட்டேயும் சொல்லாதீங்க ஒன்னே ஒன்னு கேட்கிறேன் பெண்ணியம் என்றால் என்ன?
எதற்க்கு இந்த பெண்ணியம் என்று வந்துச்சி..

கட்டுரைக்கும் பரிசுக்கும் எனது அன்பான வாழ்த்துகள்..

suvanappiriyan said...

வாழ்த்துக்கள்

Vijiskitchencreations said...

வாழ்த்துக்கள் ஹுஸைனம்மா.
முடிவுரை சூப்பரா எழுதி அசத்திட்டிங்க.

மாதேவி said...

வாழ்த்துகள்.

ஹுஸைனம்மா said...

அமுதா - நன்றிங்க.

சீனி - நன்றி.

தி. தனபாலன் - நன்றிங்க, கருத்துக்கும், வாக்குக்கும்.

ஸ்ரீராம் சார் - வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றி சார்.

ஹுஸைனம்மா said...

அப்பாதுரை -
//குறுகிய நோக்கிலான கட்டுரை//
//நடுவர் பரந்த வீச்சு என்றால் என்னவென்று சொன்னாரா? இல்லை என்னை மாதிரி சும்மா கல்லெறிந்து விட்டு//

அப்படியா? பரந்த வீச்சு - அப்படின்னா என்னன்னு நீங்களாவது சொல்லுங்க, தெரிஞ்சுக்கிறேன். இனி பயன்படுத்திக் கொள்கிறேன்.

நடுவர்கள் யாரென்று தெரியாது. நேரில் பார்த்திருந்தால் விளக்கம் கேட்டிருக்கலாம். அவர்களில் ஒருவர் சொன்ன கருத்தை, போட்டி நடத்திய குழுவில் உள்ளவர் எனக்கு தெரிவித்தார்.

ஹுஸைனம்மா said...

நாஸர் மதுக்கூர் - எங்கே ஆளையேக் காணோம்? நன்றிங்க.

என்றென்றும் 16 - ஈயத்துக்கும், பெண்ணியத்துக்கும் சம்பந்தமில்லைன்னு கேட்டவருக்குத் தெரியலையே, என்ன செய்ய? ஆனாலும், அதையும் லிங்க் பண்ணிட்டோம்ல... :-)

வல்லிமா - அழகாக விளக்கம் தந்திருக்கீங்க.

ஹுஸைனம்மா said...

ஜலீலாக்கா - நன்றிக்கா.

சங்கீதா - ரொம்ப நன்றிப்பா. நலமா?

மனோ அக்கா - ரொம்ப நன்றி அக்கா, பாராட்டுக்கும், வாழ்த்துக்கும்.

ஹுஸைனம்மா said...

மலிக்கா - //பெண்ணியம் என்றால் என்ன?
எதற்கு இந்த பெண்ணியம் என்று வந்துச்சி..//

அவ்வ்வ்வ்... விடிய விடிய ராமாயணம் கேட்டு... கதையாகிப் போச்சே!!!

இருக்கட்டும், காதைக் கிட்டே கொண்டுவாங்க விளக்கம் சொல்றேன். அது பெண்ணியம்னா என்னான்னா... அது.. வந்து... ”அந்தக் காலத்தில் பெண்கள்தான் செம்புப் பாத்திரங்களில் ஈயம் சரியாக இருக்கிறதா எனப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்வாள். அதனால் அந்தப் பெயர் வந்தது”. ஓக்கேவா... யார்கிட்டயும் சொல்லிடாதீங்க, அடிவாங்க நம்மால ஆகாது!!

ஹுஸைனம்மா said...

சுவனப்பிரியன் - நன்றி.

விஜி - ரொம்ப நன்றிப்பா.

ஹுஸைனம்மா said...

நன்றி மாதேவி.

Vijayan Durai said...

மூன்றாம் இடம் கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள் அக்கா.,உங்கள் கட்டுரை பரந்த நோக்கத்தில் தான் உள்ளது என்பது என் கருத்து.(அப்படி என்றால் சிறந்த கருத்து வீச்சு,தடையில்லா எண்ண ஓட்டம்,எடுத்து கொண்ட கருத்தை நன்றாக ஆராய்தல்).இந்த கட்டுரை படிக்கையில் ஆணியம் என்ற சொல் ஏன் இல்லை பெண்ணியம் என்ற சொல் மட்டும் ஏன் அதிகம் புலக்கத்தில் உள்ளது என்று யோசித்தேன்.,நல்ல கனமான(நீளமானதும் கூட) கட்டுரை.இருந்தும் சளிப்பில்லாமல் உங்கள் எழுத்து என்னை கட்டுரையில் அழைத்து சென்றதே தங்கள் கட்டுரையின் வெற்றி...
பெண்ணியம்... பெண்ணீயம் நல்ல ஹாஸ்யம்.

கோமதி அரசு said...

“யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே, கருடன் சொன்னது; இதில் அர்த்தம் உள்ளது” என்றார் கண்ணதாசன். அதேபோல, ஆணோ, பெண்ணோ அவரவர் பொறுப்பு, கடமை அறிந்து நடந்துகொள்ளவேண்டும்.

ஆணுக்கென்று கடமைகள் உண்டு; அவற்றில் அவன் வழுவாது இருத்தல் ஆண்மைக்குப் பலம் சேர்க்கும். அதேபோல பெண்ணிற்கான இயற்கையான கடமைகளை முதற்கண் பேணி நடத்தலே பெண்ணினத்தின் பெருமை. //

அருமையாக சொல்லிவிட்டீர்கள்.

மாதாஜி ஆனவுடம் சமூக பொறுப்பு நிறந்த கட்டுரைகள் அதிகமாய் உங்களிடமிருந்து வருகிறது.
மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

விஜயன் - நண்றி தம்பி கருத்துக்கும், பாராட்டுக்கும்.
//ஆணியம் என்ற சொல் ஏன் இல்லை//
நல்ல கேள்வி. அடக்கப்பட்டிந்தது பெண் இனம்தானே? ஆணாக இருந்திருந்தால், ‘ஆணியம்’ தோன்றியிருக்கலாமோ என்னவோ!! :-))))

தி. தனபாலன்: ரொம்ப நன்றிங்க தகவலுக்கு.

கோமதிக்கா: நலமா? பேரப்பிள்ளை ஃப்ளைட் ஏறிட்டாரா?

//மாதாஜி ஆனவுடம் சமூக பொறுப்பு நிறந்த கட்டுரைகள் அதிகமாய் உங்களிடமிருந்து வருகிறது.//
என் இன்றைய புதிய பதிவைப் பார்த்தப்புறம் இந்தக் கருத்தை வாபஸ் வாங்கிடுவீங்களோன்னு பயமா இருக்கு!! :-))))))

கோமதி அரசு said...

கோமதிக்கா: நலமா? பேரப்பிள்ளை ஃப்ளைட் ஏறிட்டாரா?//

நலம் ஹுஸைனம்மா, பேரபிள்ளை ஞாயிற்றுக் கிழமை நியூஜெர்சி சென்று சேர்ந்து பேசி விட்டார்.
குழந்தைக்கு உடம்பு சரியில்லை.
டாகடரிடம் அழைத்து சென்று வந்து இருக்கிறார்கள். ஜலதோஷம், இருமல்.
இன்றைய பதிவையும் படித்து விட்டேன். அம்மாவின் நியாமான பயத்தை எழுதி இருக்கிறீர்கள் . உண்மைதானே !
திருநெல்வேலி பாஷை மிக அற்புதம் நான் அந்த ஊர் தான் என்றாலும் அப்பாவுடன் ஊர் ஊராய் போய் ஒரு ஊர் பாஷையும் ஒழுங்காய் வரமாட்டேன் என்கிறது.

துபாய் ராஜா said...

முடிவுரை நச்சுன்னு இருக்கு. கட்டுரை படிக்க பொறுமை அவசியம்ங்கிறது என்னோட கருத்து. :))

இராஜராஜேஸ்வரி said...

வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.