Pages

டிரங்குப் பொட்டி - 30




வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் “டீயா, காஃபியா?” என்று  கேட்பதுண்டு. இப்ப இத்தோடு இன்னொரு ஆப்ஷன் சேரும் போலருக்கு.  தேயிலைச் செடிகளின் இலையிலிருந்து தயாரிப்பது தேயிலைத் தூள்; காப்பி மரத்தின் கொட்டைகளிலிருந்து கிடைப்பது காப்பிப் பொடி. (நோ.. நோ.. சமையல் க்ளாஸ் எடுக்கலைங்க) இப்ப இன்னொன்ணு சொல்றாங்க, காப்பி மர இலைகளிலிருந்தும் தேநீர் (கா-நீர்??) தயாரிக்கலாமாம். இந்தத் தேநீர், வழக்கமான தேநீரை விட நல்லதாம், கசப்பு இருக்காதாம். ஏற்கனவே எத்தியோப்பியா, சூடான் நாடுகளில் புழக்கத்தில் உள்ளதாம் இந்த காஃபி-டீ!!

அப்ப தேயிலைச் செடியிலருந்தும் இனி காப்பி தயாரிக்கலாம்னு தேநீர்ப் பிரியர்கள் கண்டுபிடிப்பார்களோ?
 

                                                 -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-    
    
   சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
    வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்-நித்தம்
    நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
    கொடையும் பிறவிக் குணம்

இந்தப் பாட்டின் முதல்வரியான, ”சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்” என்கிற வரியை அடிக்கடி வாசித்திருப்போம். பயன்படுத்தியுமிருப்போம்.  இந்தப் பாட்டு (ஒருவிதத்தில்) தமிழ் மொழியைப் பெருமைப்படுத்துவது என்றே நான் நினைத்திருந்தேன். ஆனால், சமீபத்தில் (எங்கு, யார் எழுதியது என்று நினைவில்லை) வாசித்தது ஆச்சரியமாக இருந்தது. அதாவது, இந்தப் பாட்டின் பொருள்படி, தமிழ் ஒன்றும் அத்தனைக் கஷ்டமானது இல்லை; பேசிபேசிப் பழகிட்டா (செந்)தமிழும் வசப்படும். ஆனா, இரக்கக்குணமும் தயாள மனசும் பிறவியிலேயே இருந்தாத்தான் உண்டு, பயிற்சியில் வராததுன்னு சொல்வதன்மூலம், ஒப்பீட்டளவில் தமிழைச் சற்றுக் குறைவாகச் சொல்லிருக்காங்க நம்ம ஔவைப்பாட்டி!! 


                                                  -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-   
    

abcnews.com

www.swfwmd.state.fl.us
அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகாணத்தில் சென்ற வாரம் திடீரென்று ஏற்பட்ட ஆழ்குழியில் விழுந்து ஒருவர் காணாமல் போய்விட்டார்.  தன் வீட்டின் படுக்கை அறையில் அவர் தூங்கிக்கொண்டிருந்தபோது, அறையின் கீழுள்ள பூமி அப்படியே உள்வாங்கி பிரமாண்ட குழி ஒன்று ஏற்பட்டதில்,  அவரோடு சேர்ந்து அறையிலுள்ள பொருட்களையும் பிளந்த பூமி விழுங்கிவிட்டது!! ஃப்ளோரிடா மாகாணத்தில் இப்படி குழிகள் ஏற்படுவது புதிதல்ல. காரணம், அதன் பூமி பெரும்பாலும் நுண்துளைகள் நிறைந்த சுண்ணாம்புக்கற்களால் ஆனது.  நிலத்தடி நீர் அதிகமாகச் சேரும்போது, கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கற்கள் ஊறிப்போயிருக்கும். ஒருநாள் திடீரென கரைந்து பள்ளமாகிவிடும். தண்ணீரே இல்லையென்றாலும், காய்ந்துபோகும் சுண்ணாம்புக்கற்கள் நொறுங்கிப் போய் இப்படியாகுமாம்.

அங்கெல்லாம் வீடுகள் (பெரும்பாலும் மரவீடுகளே என்பதால்) கட்டும்போது ஃபவுண்டேஷன் பில்லர்கள் போடமாட்டார்களோ? அல்லது அவை இருந்தாலும் பயனில்லையா? என்பது தெரியவில்லை. 


                                                  -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-    
 
விநோதினி, வித்யா மரணத்தைத் தொடர்ந்து, அமில வீச்சு சாதாரணமாகி விடுமோ என்ற அச்சம் நிலவி வந்தது.  ஆஸிட் வீசினால் கடுந்தண்டனை வழங்க வேண்டும் என்பது சாத்தியமானதாகத் தெரியாத நிலைமையில் நீதி இருக்கிறது. ஒருவேளை சாத்தியமாகும் சாத்தியக்கூறுகள் தென்பட்டாலும், அது நிறைவேற நீண்டகாலமாகும் நிலைதான் இங்கு. இருக்கும் பிரச்னைகளோடு, இந்தப் பிரச்னைக்கும் தீர்வில்லாமல் போய்விடுமோ என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, அமில விற்பனை கட்டுப்பாடுக்குள் கொண்டுவரப்படும் என்று
முதல்வர் தெரிவித்துள்ளது வயிற்றில் பால்வார்க்கும் செய்தி. நன்றி முதல்வருக்கு. காலந்தாழ்த்தாமல் உடனே நடைமுறைப்படுத்தினால் நல்லது. 

                                                  -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-    

 பெரிய மகன் பத்தாவது படிக்கிறான். மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம். இப்போது பொதுத் தேர்வு நடந்துவருகிறது.  அவனது பள்ளியில், விஞ்ஞானப் பாடத்திற்குக் கொடுக்கப்பட்ட செய்முறைத் தேர்வு புத்தகம், (science practicals) புதிய பாடத்திட்டத்திற்கானது இல்லை; முந்தைய  சிலபஸைப் பின்பற்றும் பழைய புத்தகம் என்பது அவனுக்குச் சமீபத்தில்தான் தெரியவந்தது. சில மாணவர்கள் மட்டும் தனிப்பட்ட முறையில் (ஒருவேளை டியூஷன் டீச்சர் மூலம் அறிந்திருக்கலாம்) தாங்கள் வாங்கியிருந்த புதிய புத்தகத்தை, சென்ற மாதம் மாதிரித் தேர்வுகளின்போது கொண்டுவந்திருந்ததைப் பார்த்துத்தான் அவன் இதை அறிந்தான்.  இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்றால், புதிதாகச் சேர்க்கப்பட்ட பல பாடங்கள் பழைய புத்தகத்தில் இல்லை. உடனே அவன் சி.பி.எஸ்.இ. வலைத்தளத்தினைப் பார்த்து உறுதிசெய்துகொண்டு, பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்றான். அவர்களும் இதை உறுதிசெய்துகொண்டு, புதிய புத்தகத்தினைப் பிரதிகள் எடுத்து அனைத்து மாணவர்களுக்கும் பரிட்சைக்கு ஒரு வாரம் முன்பு கொடுத்தார்கள்.

பழைய சிலபஸ்/புத்தகம் மாறியது ஆசிரியர்களுக்குத் தெரியவில்லை என்பது ஒரு அதிர்ச்சி. அதைவிட,  அதை அறிந்த மாணவர்கள் அதைத் தன் சக வகுப்பினருக்குக்கூடத் தெரிவிக்காமல், தாங்கள் மட்டும் புதிய புத்தகத்தைப் படித்துக் கொண்டார்கள் என்பதுதான் எனக்குப் பெரிய அதிர்ச்சி!!

Post Comment

15 comments:

”தளிர் சுரேஷ்” said...

புதிய தகவல்கள்! சிலபஸ் மாறியதை அரசுப்பள்ளிகள் தான் தாமதமாக கண்டு கொள்ளும். தனியார் பள்ளிகளும் இப்படி ஆகிவிட்டதா? கொடுமை! ஒருவாரத்தில் எப்படி பரிட்சைக்கு தயார் ஆக முடியும்?

pudugaithendral said...

காநீர்- புதுசாத்தான் இருக்கு.

மாணவர்கள் அதைத் தன் சக வகுப்பினருக்குக்கூடத் தெரிவிக்காமல், தாங்கள் மட்டும் புதிய புத்தகத்தைப் படித்துக் கொண்டார்கள் என்பதுதான் எனக்குப் பெரிய அதிர்ச்சி!!//

எனக்கு தெரிஞ்ச பள்ளியில இன்னொரு மாணவன் நல்லா படிச்சு மார்க் வாங்கிடக்கூடாதுன்னு அவன் புத்தகப்பையையே எரிச்சாங்க. அதுவும் பரிட்சைக்கு 15 நாள் முன்னாடி!!! சின்ன மனசுலயும் வன்முறை, ஏய்ப்பு எல்லாம் பெருகிடிச்சு.

கோமதி அரசு said...

உடனே அவன் சி.பி.எஸ்.இ. வலைத்தளத்தினைப் பார்த்து உறுதிசெய்துகொண்டு, பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்றான். அவர்களும் இதை உறுதிசெய்துகொண்டு, புதிய புத்தகத்தினைப் பிரதிகள் எடுத்து அனைத்து மாணவர்களுக்கும் பரிட்சைக்கு ஒரு வாரம் முன்பு கொடுத்தார்கள்.//

உங்கள் மகன் செய்த செயல் மிக உன்னதமானது. நல்ல வளர்ப்பு உங்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

RAMA RAVI (RAMVI) said...

டிரங்குப் பொட்டி சுவாரசியமாக இருக்கு.

//அப்ப தேயிலைச் செடியிலருந்தும் இனி காப்பி தயாரிக்கலாம்னு தேநீர்ப் பிரியர்கள் கண்டுபிடிப்பார்களோ? //

ஒருவேளை அதுவும் நடக்கலாம்.

ஔவைப்பாட்டி அப்படி சொனதுக்கு ஏதாவது காரணம் இருக்குமோ??

புத்தக விஷயம் மிகவும் அதிர்ச்சிதான். ஒருவாரம் மட்டுமே அந்த பாடங்களைப் படிக்க போதுமா??

அப்பாதுரை said...

//.. இனி காப்பி தயாரிக்கலாம்னு தேநீர்ப் பிரியர்கள் கண்டுபிடிப்பார்களோ?
அதான் ஹூஸைனம்மா.

சிலபஸ் தெரியாமல் பாடம் நடத்துவது அதிர்ச்சியல்ல, அக்கிரமம்.

இரசிகை said...

nallaa irukkunga

vaazhthukal.......

திண்டுக்கல் தனபாலன் said...

ஃப்ளோரிடா மாகாண செய்தியை விட, முடிவு செய்தி அதிர்ச்சி அதிகம்...

ஸ்ரீராம். said...

அவ்வை அப்படி ஒன்றும் தமிழை தாழ்வாகச் சொன்னது போலத் தெரியவில்லை! :)

தூங்கும்போது குழிக்குள் காணாமல் போவது : சில சமயம் நான் இப்படி பயங்கரக் கற்பனை செய்து கொள்வேன்! நிஜமாக நடந்தது என்றால் பகீரென்கிறது.

பத்தாம் வகுப்பு என்றில்லாமல் எல்லா வகுப்புகளுக்கும் மெட்ரிகுலேஷன், சி பி எஸ் ஈ புத்தகங்கள் இணையத்திலிருந்து இறக்கம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

மன்சி (Munsi) said...

//அதை அறிந்த மாணவர்கள் அதைத் தன் சக வகுப்பினருக்குக்கூடத் தெரிவிக்காமல், தாங்கள் மட்டும் புதிய புத்தகத்தைப் படித்துக் கொண்டார்கள் என்பதுதான் எனக்குப் பெரிய அதிர்ச்சி!//

எந்த மாணவன் எதையுமே (படிப்பில்) மற்றவர்களுடன் share பண்ணமாட்டார்களோ, அல்லது ஒளித்து வைத்து படிப்பார்களோ அவர்கள் இந்திய மாணவர்கள் என்று சொல்லுவார்கள். உண்மை போல‌

சாந்தி மாரியப்பன் said...

//மாணவர்கள் அதைத் தன் சக வகுப்பினருக்குக் கூடத் தெரிவிக்காமல், தாங்கள் மட்டும் புதிய புத்தகத்தைப் படித்துக் கொண்டார்கள் என்பதுதான் எனக்குப் பெரிய அதிர்ச்சி!!//

நீங்க வேற.. என் பையரோட காலேஜ்ல ப்ரொஜெக்டுக்காக அமைச்ச குழுவில் பையர் க்ரூப் லீடரா தேர்ந்தெடுக்கப்பட்டார். க்ரூப்ல இருக்கற மத்தவங்க செஞ்ச அரைகுறை வேலையை எல்லாம் இவர்தான் ராத்திரி பகலா உக்காந்து அங்க இங்க போனைப்போட்டு அவங்களையும் முடிக்க வெச்சு, தப்பு தவறுகளைத் திருத்தி முழுசா முடிச்சும் வெச்சார். ரெண்டு மூணு நாளுக்கப்புறம் சப்மிட், வைவா டெஸ்ட்ன்னு நாளும் உறுதியானப்புறம் என்ன காரணத்தாலோ மேம் அதைத் தள்ளி வெச்சுட்டாங்க.

இதுக்கிடையில் உடல் நிலை சரியில்லாததால் பையரும் ரெண்டு நாளா காலேஜ் போகலை. மூணாம் நாள் போன் மூலமா ஒரு அதிர்ச்சித்தகவல் வந்தது. அதாவது லீடரை அம்போன்னு விட்டுட்டு மத்தவங்க ப்ரொஜெக்டை ப்ரசண்ட் செஞ்சுட்டாங்களாம். ஒரு தகவல் கொடுக்கணும்ன்னு கூட தோணலை பாருங்க.. என்னத்தை சொல்றது.

enrenrum16 said...

ஔவைப்பாட்டி சரியாத்தான் சொல்லியிருக்காங்க... இரக்கக்குணம் இல்லாட்டி இவ்வுலகம் ஏது?!

பொதுநலத்தோடு உங்கள் மகன் செய்த செயல் மிகவும் பாராட்டிற்குரியது.

ADHI VENKAT said...

காநீர் நல்லா இருக்கு...:) காப்பி இதுவரை குடித்தே இராத நான் காநீர் வந்தால் குடிப்பேனா! ...:))

குழியில் விழுந்து பயங்கரமா இருக்கே...:(

அடுத்தவருக்கு உதவும் எண்ணம் மக்களிடையே குறைந்து கொண்டே வருகிறது. தங்கள் மகன் தகவல் தந்தது மூலம் அனைவருக்கும் பயன்பட்டது நல்ல விஷயம். ஆனால் ஒருவாரம் போதுமா!

ராமலக்ஷ்மி said...

கா-நீர் சந்தைக்கு வரக் காத்திருப்போம்:).

ஃப்ளோரிடா சம்பவம் திகிலூட்டுகிறது.

சிலபஸை அப்டேட் செய்து கொள்ளாத பள்ளி நிர்வாகத்தை என்னவென்று சொல்வது:(. சில மாணவர் செய்கையும் வருத்தம் அளிக்கிறது.

மகனுக்குப் பாராட்டுகள். சிறப்பாக தேர்வு எழுத என் பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும்.

@ சாந்தி,

நீங்கள் சொல்லியிருப்பது இன்னும் அதிர்ச்சி.

இமா க்றிஸ் said...

ஃப்ளோரிடா செய்தி பயங்கரமா இருக்கு. ;( மீதி எல்லாம் சுவாரசியம் ஹுஸைனம்மா.

வல்லிசிம்ஹன் said...

அந்த ஊரில் கூட இப்படி நடக்கிறதா. மகன் எப்படிப் படித்தாரோ. நல்ல அம்மாவின் வளர்ப்பால் நல்ல காரியம் செய்திருக்கிறார்.
அமெரிக்காவை நினைத்தாலே திகிலாக இருக்கிறது.நன்றி ஹுசைனம்மா.