Pages

பெண்ணிய பேலியோ!!




ழக்கமா, மட்டன் வாங்கிட்டு வரும்போதெல்லாம் எங்கூட்ல எனக்கும் எங்கூட்டுக்காரருக்கும் ஒரே வாக்குவாதமாத்தான் இருக்கும்.(வாங்காட்டியும் இருக்கத்தான் செய்யுங்கிறதைச் சொல்லணுமா என்ன.... காரணத்துக்கா பஞ்சம்?)

”கொழுப்பைக் கழிக்கிறேன்னு இம்புட்டு  கழிக்கிறே... கொஞ்சமாச்சும் கொழுப்பு இருந்தாத்தான் ருசி இருக்கும்...”

“அப்படியொண்ணும் ருசியாத் திங்க வேணாம்... ஏற்கனவே பிறப்பிலேயே இருக்கிறது காணாதுன்னு சாப்பாடுலயும் கொலஸ்ட்ரால் சேர்க்கணுமா...”

ருசியைச் சொன்னால் வழிக்கு வரமாட்டேன் என்று, உடனே பொருளாதாரம்  பேசுவார். விலையைச் சொன்னா, நகையைக் கூட வேண்டாம்னு சொல்றவ நான் என்ற தந்திரம் அறிந்தவர்!!

“மட்டன் என்ன விலை தெரியுமா? இப்படி ஒரு கிலோவுல கால்கிலோவை கொழுப்புனு கழிச்சா எவ்வளவு பணம் வேஸ்டாகுது?” 

“ம்ம்.. டாக்டருக்குக் கொடுக்கிற பணம் மிச்சமாகுதே... அதுக்கு இது சரியா வரும்... போங்க பேசாம...”
 
ப்படித்தான், ”Red Meat” வகைகள் உடலுக்கு நல்லதில்லை என்ற “ஆரோக்கியக் குறிப்பை” நம்பி மட்டன் வங்குவதே அரிதாகி வந்த நிலையில்... பேலியோவுக்கு வந்தபின், மட்டன் நிறைய உண்ணலாம் என்ற உண்மை தெரிந்ததும், அதுவும் கொழுப்போடு சேர்த்து உண்ண வேண்டும் என்று தெரிந்து கொண்டதும், அதற்கும் குற்ற உணர்ச்சி வந்தது!!
 
பேலியோவுக்குப் பின், கடைக்குப் போயிருந்த போது, மட்டன் செக்‌ஷனில் ஆர்டர் கொடுத்து விட்டு கடைக்காரர் கறியை வெட்டுவதைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தேன். நான் பேலியோவுக்கு வந்தபின் “திருந்திய” கதையெல்லாம் பக்கத்துல நின்ன என்  ட்டுக்காரருக்கு தெரியாது.

பரிதாபமா, “பாரு, இங்கயே எவ்ளோ கொழுப்பைக் கழிக்கிறாரு பாரு.. அதோடு சேந்து எவ்ளோ மட்டன் வேஸ்டாகுதுன்னு பாரு... அவர்கிட்ட சண்டை போட்டு கொழுப்பைக் கழிக்கச் சொல்லி வாங்கிட்டு வந்தா, சரியாவே வெட்டி வாங்கலைன்னு நீ என்கிட்ட சண்டை போடுற. அதுக்கு மேலே நீயும் கொழுப்பைக் கழிக்கிறேன்னு கழிச்சு, ஒரு கிலோ மட்டனை அரைகிலோவா ஆக்குறது மட்டுமில்லாம, டேஸ்டா இல்லாம ஆக்கிடுற...” என்றார்.
 
”மனம் திருந்திய மனைவி”யாக நான் என் மனதிற்குள், “இல்லங்க, இனிமே கொழுப்பை வெட்ட வேணாம்னு சொல்லுங்க.. கொழுப்பு நல்லதாம்..” என்று நினைத்துக் கொண்டாலும், சொல்ல நா எழவில்லை. தயங்கியே நின்றேன்... 
 
ந்த இடத்தில் ஒரு ஃப்ளாஷ்பேக்... 18 வருடங்கள் முன்பு....
 
கல்யாணமான புதிதில் என் மாமியார் ஒருமுறை என்னிடமும், என் மச்சினர் மனைவியிடமும் , “சாயாக்கு இஞ்சி போடும்போது, தோலைச் சுரண்டிட்டு போடுங்கோ.. தோல் நல்லதில்லை” என்றார். நாங்க ரெண்டு பேரும் பெரிசா கண்டுக்கலை. பின்னர் ஒரு நாள் வீட்டுக்கு வந்த என் பெரிய மைனி, “இஞ்சியோட தோல் விஷமாம். தோல் சேர்க்காமதான் டீயில போடணுமாம். அந்தப் பத்திரிகையில் போட்டிருந்தாங்க. வெளிநாட்டுல இன்ன ரிசர்ச் செண்டர்ல ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சிருக்காங்க” என்று ஆங்கிலப் பத்திரிகையில் வந்த செய்தியைப் புள்ளி விபரத்தோடு சொன்னார். 

அதிலிருந்து நாங்கள் ஒழுங்காக தோலைச் சீவிவிட்டுப் போட ஆரம்பித்தோம். அதைப் பார்த்த என் மாமியார், “படிக்காத கிழவி சொன்னா ஏத்துக்க முடியலை. படிச்சவ வந்து இங்லீஷ்ல சொன்னவுடனே கேட்டுகிடுறீங்க என்ன?” என்று கிண்டல் செய்தார்.
 
தேபோல, இப்போ அவர் சொல்லி கேட்க இந்த விஷயத்தை பேலியோ க்ரூப்ல பாத்து தெரிஞ்சுகிட்டேன்னு சொன்னா, ”புருஷன் சொல்லி பொண்டாட்டி கேட்டதா சரித்திரம் உண்டா”ன்னு கிண்டல் பண்ணக்கூடாதே.... அதனால வெளியே சொல்லிக்காம, திருந்துன விஷயத்தை உள்ளுக்குள்ளயே வச்சுகிட்டேன்.  

முன்னல்லாம் ஒரு கிலோ மட்டனை அக்குவேறா ஆணிவேறா பிரிச்சு சுத்தம் பண்ண எனக்கு குறைஞ்சது ஒரு மணி நேரம் ஆகும்!! இப்பலாம், கை துறுதுறுன்னு வந்தாலும் கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணி - 18 வருஷப் பழக்கத்தை திடீர்னு விட்டுட முடியுமா? - அரைமணி நேரத்துல க்ளீன் பண்ணி முடிச்சுடுறேன்.
 
டுத்து, அரிசி கோதுமை தவிர்ப்பதால், இட்லி, தோசை, சப்பாத்தி, நாண், இடியாப்பம், ரொட்டி, பாலாடைன்னு அதிக நேரம் எடுத்து செய்ய வேண்டியிருந்த வேலைகள் இப்போ இல்லை. ஏதாச்சும் ஒரு க்ரில், வறுவல், பொரியல்,குழம்புன்னு சமையல் இப்ப ரொம்ப ஈஸியா முடியுது!! (இது குடும்பத்தில் எல்லாருமே பேலியோவாக இருந்தால்தான் சாத்தியம்) இப்படியாக, பேலியோவுக்கு வந்ததன் முதற்பயனாக நேரமும், உழைப்பும்(!!!) மிச்சப்படுகிறது.
 
ன்னுமொரு முக்கியமான விஷயம், முந்தைய பதிவில் சொன்னதுபோல, பெண்களின் சரிவிகித உணவு. சாதாரணமா, பெண்கள் மட்டன் சிக்கன் போன்றவைகளை, வீட்டில் சமைச்சாலும் அதிகமா சாப்பிடமாட்டாங்க.  ஏன்னா, பிள்ளைங்களுக்கு, புருஷனுக்குன்னு எடத்வச்சுடுவாங்க. ஆனா இந்த டயட்ல இது மட்டுமே சாப்பிட்டாகணும் என்பதால், சத்துக்கள் முறையா கிடைக்கும். 

ப்படி எல்லா வகையிலும் சமைக்கும் பெண்களுக்கு முழு ஆதரவாக இருக்கும் பேலியோ டயட்டைக் கண்டுபிடித்தவர் கண்டிப்பாக ஒரு பெண்ணாக இருக்க முடியாது. ரசம் காய்ச்சி, பொறியல் வைக்கவே நேரம் சரியாக இருக்கும்போது, எங்கே ஆராய்ச்சி - அறிவியல் செய்ய... பெண்களுக்கு உதவும் மிக்ஸி, க்ரைண்டர், வாஷிங் மெஷின் போன்றவைகளைக் கண்டுபிடித்ததும் ஆண்கள்தான்.  தப்பித்தவறி, அந்த வேலையைச் செய்ய நேர்ந்ததுதான் காரணமாக இருக்கலாம்.

 என் தோழி, அவர் கணவரிடம் வெந்நீர் போட கெட்டில் வாங்கிக் கேட்டார், கிடைக்கவில்லை. சில மாதங்கள் கழித்து, அவருக்கு ஒருநாள் உடல்நலம் சரியில்லாதபோது, அவரது கணவர் டீ போட அடுக்களைக்குப் போனார். முதலில் அடுப்பில் வெந்நீர் வைத்தார். அது சூடாகுது, சூடாகுது, சூடாகிகிட்டே இருக்குது. கொதி வரதுக்குள்ளே வெறுத்துப் போ அவர் செய் முல் வேலை, உடனே ஒரு கெட்டில் வாங்கிக் கொடுத்ததுதான்!!

 அதே போல, இந்த டயட்டைக் கண்டுபிடித்ததும், ஒரு நாள் - ஒரே ஒரு நாள் - கரண்டியைக் கையில் பிடிக்க வேண்டிய நிர்பந்தம் வந்த ஒரு ஆணாகத்தான் இருக்குமோ???!!

Post Comment

6 comments:

Ranjani Narayanan said...

எழுத்துக்கள் சரியாக இல்லை. கொஞ்சம் சரி செய்யுங்கள். படிக்கக் கஷ்டமாக இருக்கிறது.

ஹுஸைனம்மா said...

ரஞ்சனி மேடம், நன்றி சுட்டியதற்கு. ஃபயர்ஃபாக்ஸில் சரியாக இருக்கிறது. க்ரோமில்தான் பிரச்னையாக இருந்தது. சரி செய்திருக்கிறேன். இப்போ தெளிவா இருக்கா மேடம்?

Geetha said...

நல்லாருக்கே ...டிரை பண்றேன் நானும்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//இப்படி எல்லா வகையிலும் சமைக்கும் பெண்களுக்கு முழு ஆதரவாக இருக்கும் பேலியோ டயட்டைக் கண்டுபிடித்தவர் கண்டிப்பாக ஒரு பெண்ணாக இருக்க முடியாது//


-நீங்க கண்டு பிடிச்சிட்டீங்க்களே, ஆராய்ச்சி பண்ணி?

.

.

shameeskitchen said...

வழக்கம் போல அசத்தலான கட்டுரை....ரசித்து படித்தேன்...

Ranjani Narayanan said...

இப்போது சரியாக இருக்கிறது, ஹூசைனம்மா. நானும் ஒரு பதிவு எழுதி வைத்திருக்கிறேன். நீங்கள் சொல்வதுபோல பெண்கள் அத்தனை சீக்கிரம் எடை இழப்பதில்லை என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. நீங்கள் சொல்லும் காரணங்கள் தான்! ஆனால் உடல் லேசாக இருக்கிறது. சோர்வில்லாமல் வேலை செய்ய முடிகிறது. வேறென்ன வேண்டும்? இன்னொரு பெரிய பயன்: உணவு சாப்பிடுவதில் ஒரு ஒழுங்குமுறை வந்தள்ளது. புதிதாகச் சமைத்து, சூடாகச் சாப்பிடுகிறேன். இத்தனை வருடங்கள் செய்யாதது இவை!
மூன்று வகை சமையல்கள் தினமும்! ஆனாலும் உற்சாகமாகச் செய்கிறேன். அடிக்கடி இப்படி எழுதுங்கள். நான் சரியான பாதையில் செல்லுகிறேனா என்று செக் செய்ய வசதியாக இருக்கிறது. ஆனால் ஒன்று: நான் முழுக்க சைவம்!