Pages

ஆடையில்லா மனிதன்...




பிரபல ஆயத்த ஆடையகம் அது. பண்டிகையோ, விடுமுறை தினமோ, முகூர்த்த தினமோ இல்லாத அந்த நாளன்றுகூட, ஒருவர் கால்மீது கால் மிதிபடுமளவு கூட்டம்!! விடுமுறை நாட்களில் வந்தால் கூட்டம் இருக்கும் என்று வேலை நாளை தேர்ந்தெடுத்து வந்த பின்பும் இவ்வளவு கூட்டமா என்று கவலையோடு பிரமித்து நின்றேன். ஒவ்வொரு விடுமுறையிலும், குடும்பத்தினருக்கான ஆடையை இந்தியா வரும்போதே வாங்கிச் செல்வது வழக்கம். அதற்காக வந்தபோதுதான் பிரமிப்பு .
 
முன்பெல்லாம், வருடத்திற்கு இரண்டு பெருநாட்களுக்கு மட்டும்தான் மக்கள் ஆடைகள் வாங்குவர். (இப்போதும் நான் அப்படித்தான்). ஆனால், சமீப வருடங்களாக ஆடைகள் வாங்குவதற்கு தனி சந்தர்ப்பங்கள் என்று தேவைப்படுவதில்லை மக்களுக்கு. “ஷாப்பிங்” என்பது ஒரு பொழுதுபோக்காக - hobby- ஆகிப் போகியிருக்கிறது. பணப்புழக்கம் அதிகரித்து விட்டதா அல்லது துணிகள் விலை குறைந்து விட்டனவா?
 
நாம் ஏன் ஆடை அணிகிறோம்? நம் மானம் மறைக்க, நம்மை அழகுபடுத்த, குறைகள் வெளியே தெரியாமலிருக்க, தட்பவெப்பங்களிலிருந்து பாதுகாக்க, நம்மைப் புற அசுத்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள என்று பல காரணங்கள்.
 
ஆனால்.... இன்றுள்ள ஆடைகள் இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனவா; அல்லது, இன்று அதிக எண்ணிக்கையில் ஆடைகள் வாங்கப்படுவது உண்மையிலேயே இந்தக் காரணங்களை முன்னிட்டுத்தானா?
 
குர் ஆனில் இறைவன், கணவன் - மனைவியை “ஒருவருக்கொருவர் ஆடையாக இருக்க வேண்டும்” என்கிறான். இது ஏதோ சும்மா ஒரு உதாரணத்துக்குச் சொன்னது என்று எண்ணத் தோன்றும். ஏன் ஆடையைச் சொல்ல வேண்டும்? எத்தனையோ நபிமார்கள் இருக்கின்றனர், அவர்களில் ஒரு தம்பதியைச் சொல்லி, இவர்களைப் போல வாழுங்கள் என்று சொல்லியிருக்கலாம். அல்லாமல், ஆடையைச் சொன்ன காரணம் என்ன?
 
2:187. .... அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்....
 
உலகத்தின் உயிரினங்களில், ஆறறிவு என்பது மனிதனுக்கு மட்டுமே உரியது. போலவே, ஆடையும் மனிதனுக்கு மட்டுமே உரியது. இதிலிருந்தே அதன் சிறப்பு புரியும். அதைத் தம்பதியருக்குப் பொருத்திப் பார்த்ததன் உயர்வு புரியும். வாழ்க்கைத்துணையைக் கூறும் இடத்தில் ஆடையும் ஆடையைக் கூறும் இடத்தில் வாழ்க்கைத்துணையும் எவ்வாறு பொருந்திப்போகின்றனர் பாருங்கள்.. சுப்ஹானல்லாஹ். அந்த ஒற்றை வசனத்தில் தான் அல்லாஹ் நமக்கு எத்தனை அழகிய பாடங்கள் வைத்திருக்கிறான்!!!
 
 
 
டையின்றி மனிதன் இல்லை. உணவு, உறைவிடம் இல்லாமல் இருந்துவிட முடியும்.  தமக்கென தனியே இல்லாவிடினும், உணவையும் உறைவிடத்தையும் மற்றவரோடு பகிர்ந்து கொள்ளலாம்.  ஆனால், ஆடை..?  எல்லாவற்றையும் விட அத்தியாவசியமானது ஆடை. வாழ்க்கைத் துணையும் அதைப் போன்ற அத்தியாவசியமானவர். நம் மானம் காக்க உதவுபவர். நம் குறைகள் வெளியே தெரியாமல் பாதுகாக்க வேண்டியவர்;
 
ஆடை அறியா இரகசியமுண்டா நம் உடலில்? கணவன் - மனைவியும் அதுபோல தமக்கென தனிப்பட்ட இரகசியம் இல்லாத புரிந்துணவுடன் வாழ வேண்டியவர்கள்.
 
உடலில் குறைகள் எத்தனை இருப்பினும், அதை மறைக்க வேண்டிய விதத்தில் மறைத்து, நம்மைக் கௌரவமாகத் தோன்றச் செய்வது ஆடை. வாழ்க்கைத் துணையும் அவ்விதமே இருக்க வேண்டியவர். ஒருவர் அடுத்தவரின் குணத்தில் உள்ள குறைகளை மறைத்து, வெளியாரிடம் பெருமைப்படச் செய்ய வேண்டியவர்.
 
கடும் வெயிலிலும் குளிரிலும் பனியிலும் நம்மைப் பாதுகாப்பது நம் உடை. தம்பதிகளும் அவ்விதமே ஒருவருக்கொருவரை, மற்றவர்களின் தீய எண்ணங்கள், இச்சைகள் போன்ற புற தீங்குகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வர். தம்மிலிருந்து மற்றவரை நோக்கித் தோன்றக்கூடிய தீய எண்ணங்கள், இச்சைகளை உரிய முறையில் தடுத்துக் கொள்ள கருவியாக இருக்க வேண்டியவர்கள்.
 
டைகளைப் பராமரிப்பது என்பது ஒரு கலைத்திறமைக்கு ஒப்பானது. ஆடைகளின் தன்மையைப் பொறுத்து அதைப்  பேணும் முறையும் அமைகிறது.  ஆடையை அணிந்தால் அழுக்காகத்தான் செய்யும். அழுக்காகி விட்டது என்பதற்காக அதை குப்பையில் வீசிவிடுவதில்லை. தகுந்த முறையில் சுத்தம் செய்து மீண்டும் அணிகிறோம்.
 
ஒருவேளை சிறு கிழிசல்கள் ஏற்பட்டுவிட்டாலும், அதைத் தூக்கியெறிந்து விடுவதில்லை. முறையாகச் செப்பனிட்டு, பயன்பாட்டைத் தொடர்கிறோம்.
 
விசேஷ சந்தர்ப்பங்களின்போது அணிந்த ஆடைகளைப் பாதுகாத்துப் பராமரித்து வருகிறோம். ஃபேஷன் மாறினாலும், அதைத் தூர எறிந்து விடாமல், காலத்துக்கேற்றவாறு “ஆல்டர்” செய்து  அணிந்து அழகுபார்க்கிறோம்.
 
தற்காக அளவு மாற்றமாகிப் போய் அணியவே முடியாதபடி ஆகிப்போன உடையையோ, இனி தைக்கவே முடியாதபடி கிழிசலாகிப் போன உடையையோ ‘செண்டிமெண்ட்’ என்ற பெயரில் வைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை!!
 
மானம் மறைத்து, அழகுபடுத்தி, குறைகள் வெளியே தெரியாமல், புற அசுத்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமளவு உறுதியாக இருப்பவையே சிறந்த ஆடைகள்.  மாறாக, குறைகளை வெளிச்சம் போட்டு காட்டும், அல்லது புற தீங்குகள் நம் உடலைத் தாக்க ஏதுவாக நம் உடலை வெளிப்படுத்தி துன்பத்தை வரவைப்பவை அல்ல!
 
முன்பெல்லாம் ஆடைகள் வாங்குவதென்பது ஒரு திருவிழாவுக்கு இணையான கொண்டாட்டமாக இருந்தது. இன்று ஆடைகள் வாங்குவது மிக சாதாரணமான செயலாகிவிட்டது. அன்று புத்தாடைகளுக்கு கிடைத்த மதிப்பும், பேணுதலும், இன்றைய புத்தாடைகளுக்குக் கிடைப்பதில்லை. காரணம், ஆடைகள் மிகுந்து போனதால் இருக்குமோ? நாள்தோறும் மாறும் நாகரீகத்திற்கேற்றவாறு அணிவதற்காக, பழைய ஆடைகளைத் தூக்கி எறிந்துவிட்டு, புதிய ஆடைகள் வாங்குவதென்பது மிக இலகுவாகிப் போனதாலா?
 
அன்று வாங்கும் ஆடைகள் காலத்துக்கும் நீடித்து உழைப்பவாய் இருந்தன. பாட்டியின் உடைகள் பல தலைமுறைக்கும் நீடித்து வருமளவு சிறந்தனவாய் இருந்தன. இன்று வாங்கும் உடைகளோ, பார்க்கப் பகட்டாய் இருந்தாலும், சில முறை அணிவதற்குள்ளேயே இத்துப் போய்விடுகின்றன. ஆடைகளின் தரம் குறைந்துவிட்டது காரணமா, பராமரிப்பு குறைவா?
 
றைவன் ஆதி மனிதன் ஆதம்(அலை) அவர்களைப் படைத்து சுவர்க்கத்தில் குடியேற்றியபோது, சுவர்க்கத்தில் இல்லாத வசதிகள் இல்லை. எனினும், மனிதனால் தனிமையில் இனிமை காண முடியாது என்பதை அறிந்ததால்தான், துணையைப் படைத்தான். எப்பேர்ப்பட்ட வசதிகள் இருந்தாலும், துணை இருந்தால்தான் வாழ்வு ருசிக்கும்.
 
”ஆடையில்லா மனிதன் அரைமனிதன்” என்பது பழமொழி. இதையே நபி(ஸல்) அவர்கள், “திருமணம் ஈமானில் பாதி” என்று உணர்த்தினார்கள்.
 
சுகந்தத்தின் மணம் காற்றில் கலந்துவிட்டால், பின்னர் அதைப் பிரிக்க இயலாது. திரு’மணம்’ என்ற நிகழ்வில் இணையும் இருமனங்களும் பிரிக்க இயலாதபடி கலந்துவிடுவதே மணவாழ்வை “மணக்கச்” செய்யும். 
 
இஸ்லாமிய பெண்மணி” வலைத்தளத்தில் 13-2-2016 அன்று வெளியான கட்டுரை.

Post Comment

4 comments:

அப்பாதுரை said...

ஆயத்த ஆடையகம்.. இன்னும் அதையே சுற்றி வருகிறது எண்ணம். (இந்த மாதிரி தமிழ்ல எய்துறாங்களா என்ன இன்னும்?)

கோமதி அரசு said...

அருமையான கட்டுரை.
வாழ்த்துக்கள்.

கமரி அப்துல் காதர் said...

அருமை

கமரி அப்துல் காதர் said...

அருமை