Pages

துரோகி???




ம்மைச் சுற்றி நடப்பவையே மனநிம்மதியைப் பாதிக்க வைக்கக்கூடியவையாக இருக்க, சிறை அனுபவங்களை – அதுவும் குவாண்டனாமோ அனுபவங்களைச் சொல்லும் புத்தகமாயிற்றே என்று தயங்கி தயங்கித்தான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால், இப்புத்தகத்தின் தலைப்பே, நமக்கு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி நம்மை சட்டென உள்ளே இழுத்துப் போட்டுக் கொள்கிறது!
ஆம். நாமும் “துரோகிகள்” அல்லவா நம் நாட்டில்! புத்தகமும் அதைப் பற்றித்தான் பேசுகிறது. உண்மையான தேசபக்தி கொண்டவர்களை, பொய்முகம் காட்டுபவர்கள் துரோகி என வகைப்படுத்துவதை விவரிக்கிறது.
ஆங்கிலத்தில் டெர்ரி ஹோல்ட்ப்ரூக்ஸ் எழுதிய “Traitor” என்ற புத்தகத்தின் தமிழாக்கமே, “துரோகி”.
தன் சொந்த நடையில், மொழியில் எதையுமே எழுதி விடுவது இலகு. ஆனால், இன்னொரு மொழியிலிருந்து மொழிபெயர்த்து எடுத்துக் கொடுப்பதென்பது அதிகச் சிரமமான பணி. வாக்கியங்களை மொழிபெயர்ப்பதல்ல இங்கு முக்கியம்.  எண்ணங்களை, உணர்ச்சிகளை, எதிர்பார்ப்புகளைக் கடத்த வேண்டும். அவ்வகையில் அதைச் சிறப்புற செய்திருக்கிறார் ஆசிரியர் எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்கள்.
ப்புத்தகத்தில் மூல ஆசிரியர், தன் வாழ்வில் நடந்த மிக முக்கிய நிகழ்வொன்றினையும், அது தொடர்பான சம்பவங்களையும் விவரிக்கிறார்.  அவற்றிலிருந்து, நாம் கற்றுக் கொள்பவை, புரிந்து கொண்டவை என்னென்ன என்ற பார்வையில் இப்புத்தகத்தின் ஆய்வுரையை பதிவு செய்கிறேன். புத்தகத்தின் சம்பவங்கள் பலவும் நமக்குப் பரிச்சயமானவையாகவே இருக்கும். ஏனெனில் நாமும் அதுபோல ஒரு ஃபாஸிஸத்தைக் கண்டு கொண்டிருப்பவர்கள்தானே!
சம்பவம் நடந்த குவாண்டனாமோ பகுதியை, சிறைச்சாலை அமைக்கத் தேர்ந்தெடுத்ததிலிருந்தே புரிகிறது அவர்களின் சாணக்கியத்தனம்.  “Arm pit of the Universe” என்று அழைக்கப்படும் அளவிற்கு (மன)அழுக்குகள் நிறைந்த இடம்; இராணுவ பாஷையில், வீரர்கள் பணிக்குச் செல்ல சற்றும் விரும்பாத இடம் என்று பொருள் இதற்கு. அந்தளவுக்கு கொடூரம் நிறைந்த சிறைச்சாலை அங்கிருந்தது.
அப்படி பணிக்குச் செல்லவே விரும்பாத ஓர் இடத்திற்கு, ”பயிற்சி” என்ற பெயரில் வீரர்களை மூளைச் சலவை செய்துதான் அழைத்துச் செல்வார்கள். குவாண்டனாமோ சிறைவாசிகள் அனைவரும் அதிபயங்கர கொடூரமானவர்கள்,  நம் நாடான அமெரிக்காவை அழிக்க வந்தவர்கள், இஸ்லாமைப் பின்பற்றுபவர்கள், முஸ்லிம்கள் என்பதால் கொல்லப்பட வேண்டியவர்கள் என்ற பரப்புரைகளே பயிற்சி என்ற பெயரில் அளிக்கப்படுவதோடு, இடிக்கப்பட்ட இரட்டை கோபுரத்தையும் அழைத்துச் சென்று காட்டி, ஏற்கனவே வீரர்கள் மனதில் எரிந்து கொண்டிருக்கும் வெறுப்பு நெருப்பில் எண்ணையை ஊற்றுகிறார்கள். மேலும், பணியின்போது  உணவுக்கூடங்களில்கூட தேசிய கீதத்தையும், திரைப்படங்களில் வரும் அமெரிக்க போர்க்காட்சிகளையும் தொடர்ந்து ஒளிபரப்பி வெறியேற்றுவது உங்களுக்கு எதை நினைவூட்டுகின்றது?
வெளியிலிருந்து வந்து யாரும் பார்வையிட முடியாத இடத்தில் சிறைச்சாலை அமைத்து விசாரணை என்ற பெயரில் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் புரியும் அவர்களேதான் அங்குள்ள மிருகங்களைக் காப்பாற்ற தனிக் கவனம் எடுக்கிறார்கள்! ஃபாஸிஸத்துக்கு உலகம் முழுதும் ஒரே பாணிதான் போல!
வீரர்களிடையே உயரதிகாரிகள் மீண்டும் மீண்டும் “நாம் இஸ்லாமுடன் போரில் உள்ளோம்” என்ற ஆவேசக் கூச்சல்களிட்டு, இஸ்லாம் குறித்த தவறான விளக்கங்களும் கொடுத்து, உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த எதிர்ப்பிரச்சாரம்தான் பலருக்கும் இஸ்லாமைப் பற்றி அறியும் ஆவலைத் தரும் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளவேயில்லை – அவர்களும், இவர்களும்…. எவர்களும்!
சிறைவாசிகளை இஸ்லாமைப் பின்பற்றுவதை விட்டுவிட்டால் சலுகைகள் தருவதாகச் சொல்லி ஆசை காட்டுமளவு நயவஞ்சகர்களாகவும், தொழுகை போன்ற இஸ்லாமியக் கடமைகளை நிறைவேற்றுவதைத் தடுக்கும் அளவுக்குச் செல்லும் கொடூரமானவர்களாகவும் மாறுமளவு அவர்களது இஸ்லாமிய வெறுப்பு தீவிரமாக இருக்கிறது!
அதேசமயம், இஸ்லாமைப் பின்பற்றுவதாலேயே, பலவிதவிதமான எண்ணிப் பார்க்கவும் முடியாத அளவு சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தாலும், பொறுமை மீறாமல், தொழுகை போன்ற கடமைகளை எள்ளளவும் தவற விடாமல் நிறைவேற்றுவதையும் பார்த்து அங்கு பணியமர்த்தப்பட்டிருக்கும் காவலர் டெர்ரி ஹோல்ட்ப்ரூக்ஸ் பேராச்சரியப்பட்டுப் போகிறார்!
இதுவே ஒரு சராசரி மனிதனென்றால், ‘கடவுளே! இத்தனை கொடுமைகளையும் பார்த்துக் கொண்டு சும்மாஇருக்கிறாயே?’ என்று கடவுளைப் பழிப்பவர்களாகவும், தொடர்ந்து கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகவாதியாகவும் மாறியிருப்பார்கள். ஆனால், அங்குள்ள முஸ்லிம்களின் பொறுமையும், ஒற்றுமையும், நிதானமும், காவலர்களுக்குக் கொடுக்கும் ஒத்துழைப்பும் அவரை மிகவும் கவர்கின்றன. கேள்விகள் எழுகின்றன.
பதில்களைத் தேடி அந்தச் சிறைவாசிகளுடன் பேசுகிறார். எது அவர்களை பொறுமை காக்க வைக்கிறது என்ற கேள்விக்கு, இஸ்லாமும், மறுமையும் என்று பதில் உரைக்கிறார்கள் கைதிகள். அது குறித்த மேலதிகத் தேடலில் இஸ்லாமைத் தானும் ஏற்றுக் கொண்டு முஸ்லிமாகிறார் ஹோல்ட்ப்ரூக்ஸ்!

ஸ்லாத்தை நோக்கிய பயணத்தில், எதிர்மறை இசை கேட்பதையும், வீடியோ கேம்கள் விளையாடுவது போன்ற தன் தவறுகளையும் திருத்தியவாறு நடந்து சென்றதை அவர் மிக அழகாக கூறுகிறார்:
“நான் இறைவனுக்காக ஒவ்வொரு கதவாக மூடிக் கோண்டிருந்தேன். அவனோ, எனக்காக அதிகமான கதவுகளைத் திறந்தான்.”
இந்த தஃவாவில் நமக்கும் பாடம் இருக்கிறது. ஹோல்ட்ப்ரூக்ஸ் இஸ்லாம் குறித்து கேள்விகள் கேட்கத் தொடங்கியதும், உடனே சிறைவாசிகள் பக்கம் பக்கமாக பயான் செய்யவில்லை. மாறாக, பதில் கேள்விகள் கேட்டு அவரது சிந்தனையைத் தூண்டி, அவர் உள்ளத்தைத் தயார்ப்படுத்துகிறார்கள். அழகான தஃவா!
அவருக்கு ஏற்கனவே பைபிள், தௌரா வேதம் நன்றாகத் தெரிவதோடு, பகவத் கீதை உள்ளிட்ட மற்ற தெய்வங்கள் குறித்த பல நூல்களையும் அறிந்திருக்கிறார். ஆகவே அவர் கையில் குர்ஆன் கிடைக்கும்போது மற்றவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்து எது சரியானது, சிறந்தது என்ற தெளிவான முடிவுக்கு வர முடிகிறது.
சிறைவாசிகளில், சிலர் உயர்படிப்பு படித்தவர்களாகவும், பதவி வகித்தவர்களாகவும் இருக்கின்றவர்கள். மற்றவர்கள் மனதளவில் சோர்ந்து விடாமல் இருக்க உதவுகின்றனர். கைதிகளாக இருந்தபோதும், தலைமையேற்று  வழிநடத்தும் பண்பும், தலைமைக்குக் கட்டுப்படும் பணிவும் கொண்டவர்களாக இருந்தனர் என்பது புரிகிறது.
இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம், கொடுஞ்சித்திரவதைகளை அனுபவிப்பதால் கைதிகளும்; தமக்கு ஒப்புதல் இல்லையென்றாலும் அதிகாரிகளின் கட்டளையை மீற முடியாமையின் காரணமாக, கைதிகளை அநியாயமான தண்டனைகளுக்கு உட்படுத்த நேரிடுவதால் காவலர்களும் என இரு தரப்புமே மன அழுத்தத்திற்கு ஆட்பட்டவர்களாகவே இருந்தனர். ஆனால் அதனால் ஏற்படும் மன இறுக்கத்தை காவலர்கள் மதுவைக் கொண்டு தணிக்க முற்படுகையில்,  கைதிகளோ இஸ்லாத்தின் காரணமாக தன்னிலை இழக்காமல் இருந்தனர்.
இராணுவத்தில் உள்ள பெண் பணியாளர்களை வைத்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்துமளவுக்குத் துணிந்தாலும், “பார்வையின் ஹிஜாபைப்” பேணிக் கொள்ளுமளவு இஸ்லாத்தில் உறுதியாக இருந்த கைதிகளிடம் நமக்குக் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் உண்டு!
நாட்டின் மீது கொண்ட பற்று காரணமாக, இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காகப் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சேர்ந்த ஹோல்ட்ப்ரூக்ஸ், குவாண்டனாமோவில் நடக்கும் அநியாயங்களைக் கண்டு கொதித்துப் போகிறார். தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த அமெரிக்காவை ஒப்பிட்டுப் பார்த்து, நான் காப்பாற்ற வந்த அமெரிக்கா இதுவல்ல என மனம் உடைகிறார். தனிப்பட்ட இலாபங்களுக்காக, சிறைவாசிகளை அநியாயமாகத் துன்புறுத்துவது, கொடூரமான சித்திரவதைகள் செய்வது எனத் தவறாகச் செயல்படும் உயர் அதிகாரிகளால், தன் நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுமோ என்ற அஞ்சுகிறார்.
ஆனால் அந்த அதிகாரிகளும், அவர் கைதிகளிடம் நல்ல முறையில் நடந்துகொள்வதைக் கண்ட சக காவலர்களும் அவரைக் கண்டித்தனர். தாய்நாடான அமெரிக்காவை அழிக்க முற்பட்டவர்களுடன் அனுதாபம் காட்டுவது தாய்நாட்டுக்குச் செய்யும் துரோகம் என்று வாதிட்டனர். தேசபக்தியே அவரை உண்மையைக் கண்டடைய வேண்டும் என்ற தேடலை ஏற்படுத்தியது. ஆனால், அவரோ, அறியா அப்பாவிகளுக்கு அநீதி இழைப்பது அமெரிக்காவுக்குத்தான் கெட்ட பெயர் வாங்கித் தரும் என்று திண்ணமாக நம்பினார். தன் நிலைப்பாடை மாற்றிக் கொள்ளாத அவரை, துரோகியெனவே அழைக்கத் தொடங்கி விட்டனர்.
நாட்டிற்கு நற்பெயர் ஏற்படுத்த முனைபவர் துரோகி, நாட்டின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துபவர்கள் தியாகிகள் என்ற நியதி எதை ஞாபகப்படுத்துகிறது உங்களுக்கு?
வாசிப்பு பல வாசல்களைத் திறந்து விடும் என்பார்கள். இப்புத்தகத்தின் தாக்கம் மிகப் பெரிது,  மீள முடியாதது. தொடர்ச்சியாக இதைக் குறித்த விஷயங்களைத் தேடித் தேடி வாசிக்கிறேன். கிடைக்கும் தகவல்களால் அதிர்ச்சியும் ஆற்றாமையும் பொங்குகின்றன.
2002-ம் வருடம் தொடங்கி கிட்டத்தட்ட 50 நாடுகளைச் சேர்ந்த 779 கைதிகளை  இங்கு கொண்டு வந்து குவித்த அமெரிக்க அரசு, அறுதிப் பெரும்பாலானோரை விடுவித்து விட்டது; ஒருசிலரை அவரவர் நாட்டுச் சிறைகளுக்கு அனுப்பி வைத்துவிட்டது. ஜனவரி 2017-ன் செய்திப்படி, 41 கைதிகள் மட்டுமே அங்கிருக்கின்றனர். அதில் 31 பேர் மீது இன்னமும் குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
விடுவிக்கப்பட்டவர்களும்  சரி, அங்கு வேலை பார்த்த வீரர்களும் சரி, இன்னமும் – 15 வருடங்கள் கழிந்த பின்னரும் – மனநல சிகிச்சை பெற்று வருகின்றனர். சில முன்னாள் சிறைவாசிகள், விடுதலையான பின்னும், தத்தம் நாட்டு காவல்துறையால் தொடர் கண்காணிப்பு என்ற பெயரில் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இன்னும் சிலர், Waterphobia போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ம் தமிழ்நாட்டில் சிறைகளில் விசாரணைக் கைதிகளாகவே காலவரையின்றி  வாடும் கைதிகளின் நிலையை இத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மனம் அதிக வேதனையடைகிறது. அவர்களின் அவதிகளைச் சொல்ல இவ்வாறு ஒருவர் முன்வருவார் என நாடு இருக்கும் சூழலில் கனவிலும் எதிர்பார்க்க முடியாது.
மாலேகான், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்ஹா, சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ஆகிய குண்டு வெடிப்புகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சுவாமி அஸீமானந்தா என்பவர்,  தன்னோடு ஒரே செல்லில் அடைக்கப்பட்டிருந்த அப்துல் கலீம் என்ற கைதியின் நற்குணத்தால் ஈர்க்கப்பட்டு, மனம் திருந்தி தன் அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டார். ஆனால், ஐந்தே மாதங்களில் தன் வாக்குமூலத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். இதுதான் இங்குள்ள சூழல்!
ங்கே சிலருக்கு முஸ்லிம்களின் பெயர்களைக் கேட்டாலே முதுகந்தண்டு சில்லிடுகிறதாம். அவர்கள், முஸ்லிம் பெயரைத் தாங்கியிருப்பதாலேயே பலர் அனுபவிக்கும் இக்கொடூர அனுபவங்களை வாசித்தறியட்டும். முழு உடலுமே சில்லிட்டு உணர்வற்று உறைந்து போகும்!
இவ்விமர்சனம்,  "தூதுஆன்லைன்"  இதழில்  அன்று வெளிவந்தது.


 துபாயில் நடந்த "துரோகி" புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றியபோது...

Ref: 
http://tinyurl.com/n3983d4


Post Comment

1 comments:

ஸ்ரீராம். said...

வாசிக்க வேண்டிய லிஸ்ட்டில் சேர்த்துக் கொண்டேன். முதல் முறை உங்கள் முகம் பார்க்கிறேன்.

குரலும்!

வாழ்த்துகள்.